Friday, 30 August 2013

ஓடலியார் வாசித்த கடிதம்

கதைச் சரம் 21
செவிவழிக் கதை 18

ஓடலியார் வாசித்த கடிதம்


யாழ் மாவட்டத்தில் அமைந்ததொரு நகரம். சுற்றவர பதினைந்து கிராமங்களை இணைக்கும் உதவி அரசாங்க அதிபர் பணிமனையைக் கொண்டது இந்நகரின் சிறப்பு. இங்கு பிரதம அஞ்சல் பிரிக்கும் தாபால் மற்றும் தந்தி அலுவலகமும், மாவட்ட வைத்தியசாலையும், உதவி அத்தியட்சகர் கொண்டதான காவல் பணிமனையும், நீதி மன்றமும் அமைந்திருந்தது. உயர் கல்வி வழங்கும் கல்லூரி ஒன்றும் இங்கிருந்தது. இதனால் புதிய மக்களது நடமாட்டமும், புதியதாக மாற்றலாகி வந்து வாழும் அரச மற்றும் திணைக்கள அதிகாரிகளும் ஊழியர்களும் கொண்டதாகவே இந்நகர் விளங்கியது.
இந்த வைத்தியசாலை சுற்றுக் கிராமங்களுக்கெல்லாம் மிகவும் பிரசித்தமானது. தவிர இன்னொரு தனியார் மருத்துவ மனையும் இந்த ஊரில் இருந்தது. ஆனாலும் அரச வைத்திசாலையின் சீரான நிர்வாகத்தால் எந்நாளும் கூட்டம் அலைமோதியபடிதான் இருக்கும்.
புதிதாக மாற்றாலாகி வந்திருந்த மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியசாலையின் அருகாமையிலிருந்த அவருக்கான தனியான அரசவிடுதி வீட்டிலேயே தங்கியிருந்தார். கொஞ்சம் பருமனானவர். கோபப்படாமல் நகைச்சுவையாகப் பேசுவார். நல்ல இசை இரசிகன். அவருக்கு ஒரு பையன், துணைவி பதுமையானவர். இத்தகைய குணாதிசயங்களுடன் இருந்த குடும்பமாகையால் இலகுவில் அவ்வூர்க்காரர் சிலரது குடும்ப நட்பை விரைவாகவே பெற்றுவிட்டார். அந்த அம்மாவுக்கு வீட்டுத் தோட்டம் செய்ய மிகவும் பிடிக்கும். இந்த வைத்தியசாலை கடலுக்கு அருகாமையில் இருந்தமையால் வளவில் குறோட்டங்களுடனான பூ- இலைத்தோட்டம் மட்டுமே இருந்தது. இவர்களால் வீட்டுத் தோட்டத்தை உருவாக்க முடியவில்லை. இதனால் நட்பாகிய இராசையா குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாகிவிட்டிருந்தனர். இராசையா வீட்டிலிருந்துதான் இவர்களுக்கான மரக்கறிகள் கிரமமாக இவர்களுக்கு வரும்.
அக்கிராமத்தின் நடுப்பகுதியில், வண்டில் மாடுகள் சகிதம் பெரிய தோட்டத்துடனான வீடு இராசையாவுடையது. மனைவி நான்கு பிள்ளைகள் அவர்களின் மூத்த உறுப்பினர் -வேலையாட்களென இவர்களது வீடு என்றைக்குமே கலகலப்பாகவே இருக்கும். இராசையாவின் அம்மாவுக்கு அஸ்மாத் தொல்லை. இதனால் மாரி வந்துவிட்டாலே வைத்தியசாலையும் வீடும்தான்.
வேற்றூர்க்காரராக இருந்தாலும் இரு குடும்பத்தினரும் மிகவும் நெருங்கிப் பழகிவிட்டனர். நான்கு வருடங்களின் பின் வைத்திய அதிகாரிக்கு மாற்றல் அறிவிப்பு வந்தது. சும்மா சொல்லக்கூடாது ஊரே கதிகலங்கிய பிரியாவிடைதான் நிகழ்ந்தது.
பிறகென்ன, காலம் எல்லாவற்றையும் ஆற்றியவாறே பயணித்தது. அப்போதெல்லாம் தொலைபேசி, இணையவலைத் தொடர்புகளா இருந்தன? தொலைவிலிருந்தாலும் பேசி உறவாட! அப்போதெல்லாம் வைத்தியசாலைக்கும் அதனது ஊழியர்கள் தங்குமிடங்களுக்கும் மட்டும்தான் மினசாரம், ஊராருக்கு அரிக்கேன் விளக்குகளும் பெற்றோமெக்சுகளும்தான்.
நான்கைந்து மாதங்கள் போனதே தெரியவில்லை. மாரிகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இராசையாவுக்கு ஒரு அஞ்சல் கடிதம் வந்து ஊராரை அசரவைத்தது. வைத்தியர்தான் போட்டிருந்தார் என்பதை உறையின் முகவரி விபரத்திலிருந்து அறிந்த இராசையா வீட்டாருக்கு மகிழ்ச்சியென்றால் அப்படியொரு மகிழ்ச்சி.
ஆனாலும் கடிதத்தை அவர்களால் வாசிக்கவே முடியவில்லை. அதில் கனக்க எழுதப்படவே இல்லை. நீட்டுக் கோடுகளுடனான ஆங்கில வரிவடிவில் மூன்று நான்கு வரிகள்தான் இருந்தன. 
என்ன செய்வதென்று! யோசித்தார் இராசையா. « எதுக்கும் சின்னத்தம்பி அண்ணையிட்ட கொண்டு போய்க் காட்டுவம்! » என்ற முடிவோடு கிளம்பினார். அன்றைக்கெண்டு சின்னதம்பியாரும் வீட்டிலேயே இருந்தது நல்லாகப் போயிற்று.
« அண்ணை! இதை ஒருக்கா வாசித்துக் காட்டுங்கோவன் » மிகுந்த மகிழ்வும் குழைவும் குரலில் கலந்து வந்தது.
« யாராடா! உனக்கு கடிதமெல்லாம் போடுறது? உன்ர இன-சனமெல்லாம் இவ்வூரில்தானே இருக்கிறார்கள்! » சின்னத்தம்பியாருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.
ஆனால் பாவம் சின்னத்தம்பி! இவரால் ஒரு வரிதானும் வாசிக்க முடியவில்லை. 'என்ன செய்யலாம்?' அதிகமாகவே யோசித்தார்கள். அப்போது பக்கத்துவிட்டுக்காரர் ஐயம்பிள்ளை தனது அலுவலுக்காக அங்கு வருகிறார். கடிதம் அவரது கைக்கு மாறியது. ம்... ம்... அவராலும் முடியவில்லை.
ஆனால் ஐயம்பிள்ளை கெட்டிக்காரன், டக்கு டக்கென ஐடியாவைக் கொட்டக்கூடியவர். இதனால் ஐடியா ஐயம்பிள்ளையென்றும் இவருக்கு ஒரு பெயர். இதைச் சுருக்கி 'ஐய் ஐய்' என்றும் இவரில்லாதபோதில் இளவட்டங்கள் குறிப்பிடுவார்கள்.
« யாருடா இதைப்போட்டது? நம்ம டாக்குத்தர்தானே..... » ஐயம்பிள்ளையாருக்கு ஐடியா வந்துவிட்டதை அவரது கண்ணும் முகமும் அப்படியே வெளிப்படுத்தன.
« ஓமோம்!!.. » இராசையாவினதும் சின்னத்தம்பியாரதும் குரல்கள் கோரசாக வெளிப்படது ஆச்சரியம்தான்.
« அடேய்!..... அப்ப இதை ஓடலியாரிட்டக் காட்டித்தானே வாசிக்க வேண்டும்!! » குரலிலும் நடைபாவனையிலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பைக் கண்ட விஞ்ஞானியின் பெருமிதம் அப்படியே வெளிப்பட்டது.
அசந்து போனார்கள் சின்னத்தம்பியாரும், இராசையாவும்! « அடடே.... இதெல்லாம் எனக்கு வரவேயில்லையே...! » எனவாக ஒரே சமயத்தில் எழுந்த தனித்தனிக்குரல்களுடன் தத்தமது தலைகளைத் தட்டியவாறு.
« தம்பியவை! நெடுகிலும் மண்வெட்டியைப் பிடிச்சுக் கொண்டிருக்கப்பிடாது.... கொஞ்சம் புத்தியையும் கிளற வேண்டுமப்பா... » ஐயம்பிள்ளையின் நளினம் குரலில் தவழ்ந்தது.
« அப்ப ஓடலியார் வீட்ட போவமே! » ஆர்வத்துடன் எழுந்தார் இராசையா. ஏதுமே பேசாது கூடவே எழுந்தார் சின்னத்தம்பி.
« அதுதான் நல்லது, இப்ப ஓடலி இருப்பான்!! நானும் வாரனடா...!! » ஐயம்பிள்ளையாரின் ஆர்வம் அவரது செயலில் அப்படமாக வெளிப்பட்டது. வெளியே முன்னிருட்டு காலம் ஆகையால் இருள் மென்மையாகக் கௌவத் தொடங்கியிருந்தது.
கொஞ்சம் தொலைவிலிருந்த ஓடலியாரின் வீட்டுக்கு அவரவர் சைக்கிள்களில் மிகவிரைவாகவே வந்தடைந்தனர். மூவரும் ஒன்றாக வந்ததில் ஓடலி குடும்பம் 'ஊரிலே யாருக்கோ ஆபத்தென்று' சிறிது பதைபதைத்தே விட்டது.
ஓடலியார் வீட்டுக்கு ஆசுவாசமாகப் பேச எவருமே வந்ததும் கிடையாது. இவரது வளவின் படலையும் சாமத்திலும், அதிகாலையிலுமாக எவ்வேளையிலும் ஒருவித கீச்சிடும் ஓசையுடன்தான் தனது பணியைச் செய்யும். இது பக்கத்து வீட்டு நாய்கே பரிச்சியமான விடயம். சின்னதான அசைவுக்கே ஊரை எழுப்பும் ஊர்நாய்க் கூட்டம், கீச்சிடும் ஓடலியாரின் படலைச் சத்தத்திற்கு முனகுவதுகூடக் கிடையாது.
« தம்பி ஓடலி!! இதையொருக்கா வாசித்துச் சொல்லு! » ஐயம்பிள்ளையார் உரிமையுடன் தொடங்கினார்.
« இது நம்ம பழைய டாக்குத்தருடையது தானே!! » ஓடலியார் ஆச்சரியத்துடன்.
வந்தவர்களுக்கு தென்பாகிவிட்டது. ஓடலியின் திறமையை மனதுக்குள் மெச்சிக் கொண்டனர். 'எவராலுமே எதுவுமே புரியாதிருந்த கோட்டு வரிகளை இந்தாள் எப்படித்தான் புரிகிறானோ!' சின்னத்தம்பியார் கொஞ்சம் ஆடித்தான் போனார். இராசையாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்சி.

« யாருக்கு அனுப்பினவர்? » ஓடலி அறியும் ஆவலுடன்....
« யாருக்கோ.... என்னத்தைக் கேட்கிறீர் தம்பி? » ஐயம்பிள்ளை ஒன்றும் புரியாதவராக இராசையாவைப் பார்த்து « அந்த என்பலப்பை ஒருக்கா எடும்! » என்றார். இராசையாவும் மரியாதையுடன் பொக்கற்றிலிருந்த என்பலப்பைக் கொடுக்கிறார். ஓடலியாரது முகத்தில் பிரகாசமோ பிரகாசம்...! அது அரிக்கன் லாம்பின் வெளிச்சத்தில் தங்கமாக மினுங்கியது.
« உங்கட மகனுக்கும் ஏதும் வருத்தமோ? » இராரசயாவைப் பார்த்து ஓடலி.
« அது பெரிசாய் ஒன்றுமில்லை.... கொஞ்சம் வயிற்றுக் குழப்பம்தான் நண்டுக்கறியை அதிகமாகச் சாப்பிட்டுப் போட்டான்! »
« உங்களது அருமை நட்பு டொக்டர் உங்கள் அம்மாவுக்கும் உங்கள் மகனுக்கும் மருந்து எழுதியிருக்கிறார். » என்று சொல்லிவிட்டு வீட்டு அறைக்குள் செல்கிறார். இராசையாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. « டொக்டர் தூரத்தில போனாலும் ஞாபகத்துடன் மருந்தை எழுதி அனுப்பி வைத்திருக்கிறாரே! » என்று நெகிழ்ந்து போனார்.
உள் அறையிலிருந்து வெளிவந்த ஓடலியார் இராசையாவிடம் « இந்த வெள்ளைக் குளிசையை அம்மாவுக்கு தினமும் ஒரு முறை குடுங்கோ, வழமைபோல இந்த சிவப்பு வெள்ளை நீளக் குளிசையை சளி கட்டியாக வரும்போது காலையிலும் மாலையிலும் ஐந்து நாள் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த நீலக் குளிசையை மகனுக்கு காலையும் மாலையும் இரண்டு நாள் மட்டும் குடுங்கோ சரியாகிவிடும். திங்கட்கிழமை வாங்கோ மிச்சத்தைத் தாறன்!! »
'அட இவன் இராசையாவுக்கு எப்படிப்பட்ட டொக்டர் நட்பாகி இருக்கிறார். நானும் அவரோட பழக நினைச்சனான்தான்.... ஆனால் என் வீட்டுக்காரி கண்ட கண்ட ஆக்களை எப்படி வீட்டுக்குள்ளால எடுக்கிறதெண்டு பிடிவாதமாக இருந்திட்டா..! ம்.....!!’ என்ற தனது மனவோட்டத்தை சின்னத்தம்பி யாருக்கும் வெளிப்படுத்தாமல் மௌனித்திருந்தார்.
தான் நினைத்தபடி நடந்துவிட்டதைக் கண்டு, ஐயம்பிள்ளையாருக்கு பெரிய சந்தோசம். முகமெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டிருந்தார். மொத்தத்தில் ஏதுமே பேசாதவர்களாக அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர்.
இராசையா வீட்டாருக்குப் பெரும் சந்தோசம். சாமம் என்றும் பார்க்காமல் படுக்கையிலிருந்த அம்மா எழுந்து உட்காந்துவிட்டார். இராசையாவை உட்கார வைத்து அன்பொழுக இரவு உணவைப் பரிமாறினார் துணைவி.
அடுத்த மாதத்தில் ஒரு நாள், தனது மகனின் கல்லூரிப் படிப்புக்காக யாழ் நகருக்குப் புறப்பட்டார் இராசையா. இப்படியாக எப்போதாவது ஒருநாள் தான் இவர் பயணப்படுவது வழக்கம். மனுசன் இப்படியான பயணம் மேற்கொண்டால் வடை தேத்தண்ணி தவிர வேறெதுவும் சாப்பிடவே மாட்டார். நெடு நேரமானாலும் திரும்பி வீடு வந்தபின்தான் கை நனைப்பார்.
யாழ் வந்திறங்கிய இராசையாவுக்கு மகிழ்வானதொரு அதிர்ச்சி, எதேச்சையாக அந்த டொக்டரை ராணித் தியேட்டருக்கு முன் சந்தித்துவிட்டார்.
« அடடா!! வணக்கம் மிஸ்டர் இராசையா? எப்படி இருக்குறீர்கள்? அம்மா எப்படி இருக்கிறார்? பிள்ளைகள் எப்படி? »
« நீங்கள் தந்த மருந்தினால் அம்மா சுகமாவே இருக்கிறார் டொக்டர். எல்லோரும் நல்லாயிருக்கிறோம் சேர்!! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மகன் எப்படி இருக்கிறார்? » ஆர்வம் பொங்க மகிழ்வுடன் குசலம் விசாரித்தார் இராசையா.
« அவன்தான் போனமாதம் இலண்டனுக்குப் பயணமாகிவிட்டானே! உங்களை வீட்டுக்குவரும்படி அழைத்திருந்தோமே!! ஆனால் நீங்கள் வரவேயில்லை. என் மனைவியும் மகனும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ம்.....போகட்டும்!.... » என்றவர் கொஞ்சம் நிதானித்துவிட்டுத் தொடர்ந்தார்.
« உங்களுக்கு என்ன சிரமம் இருந்திச்சோ எமக்கென்ன தெரியும்? எங்கட மகனை இனி எப்ப சந்திப்போமோ....? இப்ப நானும் அவளும்தான் தனியாக வீட்டில் இருக்கிறோம்!! » டொக்டர் பட படவென தன்னிலை விளக்கத்தைக் கொட்டினார்.
« எங்களுக்கு அழைப்பை எப்போது, எப்படி அனுப்பினீங்கள் டொக்டர்! » இராசையா மிகவும் குழம்பியவராக. « போன மாதம் ஒரு கடிதத்தில அனுப்பியிருந்தனானே!! » டொக்டருக்கும் ஆச்சரியமாக இருந்ததை அவரது முகம் காட்டியது.
« கடிதமா.............! » குரலில் அவலவொலி அதிகமாகவே வெளிப்பட இராசையா வாயடைத்தவரானார்.
இவரைப் பார்த்த டொக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை.

-அநாமிகன்
பாரீஸ் 30.08.2013

பின்னிணைப்பு:

0 வட்டாரச் சொல் விளக்கம்

பெற்றோமெக்சு :– வெண்ணொளி பரப்பும் மண்ணெய் விளக்கு
ஓடலி :– அலோபதி மருத்துவமனையில் மருந்து கொடுப்பவர்
டாக்குத்தர் - டொக்டர் :– அலோபதி மருத்துவர்
சின்னத்தம்பி –இராசையா – ஐயம்பிள்ளை :- ஈழத்தமிழ் ஆண்களுக்கான பெயர்கள்
என்பலப் :- கடித உறை
குளிசை :- மாத்திரை
தேத்தண்ணி :- தேநீர்

0 தொடர்பான இணைப்பு: நுழைய அழுத்துக

ஓடலியார் - 'ஓடலி" யார்?மொழி புரியாத புலம்பெயர் வாழ்வில் நாம் சந்தித்த- சந்திக்கும் 'ஓடலிமார்' ஏராளம்
'வாழ்வைப் பதிவு செய்யும்போது நாம் சிறுவயதில் அறிந்துகொள்ளப் பயன்பட்ட தடங்கள் எமையறியாது மனப்புலத்திலிருந்து உதவும். அவ்வகையில் ஒன்றானதுதான் 'செவிவழிக் கதை' இதைப் 'பாட்டி சொன்ன கதை' என்றும் சொல்வார்கள்.
புலப்பெயர்வின் ஆரம்பத்தில் கடித உறையையும் - அது பதிவுத்தபாலாக வந்ததா? அல்லது சாதாரணமாக வந்ததா? என்பதையும் யாருக்கு வந்தது? அவரது நிலை என்ன? என்பதையும் அறிந்திருந்த சிலர் நம்மவர்களின் கடிதங்களை வாசித்துச் சொன்னதை நினைக்க இப்போதும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
'ஓடலி' என்பவர் தொழில் முறையில் அந்தக்கால வைத்தியசாலையில் மருந்து கலக்கிக் கொடுப்பவர். டாக்டர் எழுதிக் கொடுக்கும் சீட்டுகளைத் தெளிவாக அறிந்துகொண்டு மருந்து கொடுப்பதாக ஊராரால் அதிசயமாகப் பார்க்கப்படுபவர். மேலதிகமாக அறிவிருப்பமாயின் மேலே உள்ள இணைப்பின் வழியாகச் செல்க!
இக்கதை ஈழத்து தமிழ் நாட்டார் வழக்கிலான உரையாடல் மொழியில் எழுதப்பட்டுள்ளது இச் செவிவழிக்கதை, 
இது சுவிஸ் நிகழ்கலை ஈடுபாட்டு நண்பன் ரமணன் தொலைபேசி வாயிலாகக் கூறிய நகைச்சுவைக் கதையின் எழுத்துரு வடிவம்.No comments:

Post a Comment