Monday, 2 September 2013

பரபரப்பின்றி 'காக்கைச் சிறகினிலே' இலக்கிய மாத இதழில் பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பகிரும் 'வேர்பிடித்த விளைநிலங்கள்’

பகிர்வுச் சரம் 2
சென்னையிலிருந்து பரபரப்பே இல்லாது ஒரு இலக்கிய மாதசஞ்சிகை
- காக்கைச் சிறகினிலே -


புவி எங்கிலும் உருவிக் குவிக்கும் உற்பத்திகளை விநியோக -விற்பனையாக்கும் நிறுவனர்களாகவும், கட்புலச் செவிப்புல நுண்மயக்கத் தூண்டலால் கட்டுண்டுள்ள நுகரும் மக்கள் கூட்டமாகவும் புதியதாய் பிளவுண்டுள்ள உலகமயமாக்கல் யுகத்தில் வாழும் 'வாசிக்கும்' கூட்டத்தினர்தானே நாம்.
'ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்!' என்ற முதுமொழியும் பழசாய்ப்போய், ஐரோப்பிய எல்லா நகரங்களிலும் மணிகாட்டும் உயரக் கோபுரங்களுடன் நிமிர்ந்து நின்ற கோவில்களும் பாரமரிக்க முடியாது நிலைசரிய, உலகின் எந்த நகரையும் தற்போது வசீகரிப்பது பளிங்கு- பளீரிடும் சூரியவொளிக் கண்ணாடிக் கட்டிடத் தொகுதியாக தனித்துவமாகத் திகழும் வங்கி மையங்கள்தான். வங்கிகளின் இருப்பின் மிடுக்கிலேயே அந்நகரின் மதிப்பு அளவிடப்படும் புதிய நடைமுறையும் வந்தாயிற்று.
‘வரம்புயர - நீருயர - நெல் உயர- குடி உயர- கோன் உயரும்’ எனவாக அறியப்பட்ட வாசகம் காலாவதியாகி, 'பணம் தள்ளும் வங்கி உயர- எல்லாமும் உயரும்!’ ‘வங்கி சரிய- அனைத்தும் சரியும்!!' என்பதாகிப் பரிதவிக்க வைக்கிறது.
கூர்ப்படைந்த மனிரை கடந்து செல்லும் 21-ம் நூற்றாண்டு பணத்தாலேயே சகலதையும் அளவிடத்துடிக்கும் இயந்திர மனித உயிரிகளாக்கி விட்டது. புவியெங்கும் காட்டாற்று வெள்ளமாகப் பிரவகிக்கும் இந்த உலகமயமாக்கலில், ஊடகங்களும் ஊதிப் பெருத்துவிட்டன.
எங்கும் கவர்ச்சி, எல்லாவற்றுக்கும் விளம்பரம், முதிர்ச்சி இல்லாத நுகர்ச்சி, சூழல் மாசு பற்றிய கவலையில்லாது வீசியெறியும் சாதாரண வாழ்வு, தான் பிறந்து வாழும் சூழலை அவதானிக்கத் தவறிய மனவெளியில் ஐதரசனால் நிரப்ப்பட்ட பாலூன்களாக மேலெழும் வேகம், நாளாந்த வாழ்வை பணத்தால் அளவிட்டுக் கொண்டு 'இலவசங்கள்" மேல் மொய்க்கும் மனிதவிட்டில் கூட்டம்.
இன்று புத்தகச் சந்தைகளும் வாசக நுகர்வோரைச் சுண்டி இழுத்து வசூலில் சாதனைகள் பொங்க வசீகரமாக வந்துகொண்டிருக்கின்றன.
ஈழத்தமிழர்களாய்ப் புலம்பெயர்ந்து- புலம்பெயர்ந்த தமிழர்களாய் நீட்சியுற்றுச் செல்லும் வாழ்வின் பயணவெளியில், நாம் யார்? என்றதான அடையாளத்தை நமது சந்ததியினருக்குத் தெளிவாக விட்டுச்செல்லும் கடமையின் சுமை பாரமாக அழுத்தத் தொடர்கிறது பயணம்.
இன்றைய இணையவழித் தொடர்பிலான குவியப்பட்ட தொடர்பாடல் வாய்ப்பு சிதறுண்டுள்ள எம்மை கோர்வைகளாக இணைக்கிறது. தொடர் தேடல்களுக்கும், மீள் பரிசீலனைகளுக்கும், மீள்ளாக்கத்திற்கும் உந்துவிசை தருகிறது. இவ்வகையிலானதொரு கருப்பொருள்தான் சங்க இலக்கிய காலம் தொட்டு இன்று வரை தொடரப்படும் 'பரதவர்’ எனச் சுட்டும் சொல்.
வளமான கடல் சார் தொழில்நுட்ப வாணிபத்தின் உன்னதமான பங்கை வகித்த 'பரதவர்’ பற்றிய தெளிவும், புரிதலும், மீள்ளாக்கமும் ஈழத்தில் கவனம்கொள்ள வேண்டியதொன்று. மன்னார்க் கரையோரப் பரதவர்கள் போர்த்துகேயர்களால் கத்தோலிக்கர்களாக மதம் மாற்றப்பட்டபோது யாழ் சங்கிலிய மன்னனின் படையணிகளால் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்டதாக வரலாறு வேதனையுடன் தெரிவிக்கிறது.
இந்து சமுத்திரத்தில் முத்துத்தீவு எனச் செல்லமாக அழைக்கப்பட்ட எமது தேசத்தின் மூதாதையினர் கடல் சார் வாழ்வில்(நெய்தல் நில வாழ்வில்) பெரும் அறிவுடையோராகத்தானே இருந்திருக்க முடியும்? இவர்களது துணைகளின்றி முன்னயை மன்னர்கள் கடாரம் மற்றும் தூர கிழக்கு, அரேபிய கடல் வாணிபத் தொடர்பை செய்திருப்பதற்கான வாய்ப்பே இருந்திருக்காது.
இந்தவகையில் புகழ்பெற்ற நெய்தல் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்  'வேர்பிடித்த விளைநிலங்கள்’ என்ற தொடரில் 'தன் பாட்டன் பூட்டன் வாழ்ந்து கழித்த பலநூறு கதை சொல்லும் சரித்திர பூமியான நெய்தல் நிலம்பற்றி இன்னும் வெளிவராத நினைவலைகளை, 'காக்கைச் சிறகினிலே’ இதழில் பகிரத் தொடங்கியுள்ளார். நாமும் பயன்பெறுவோம்!!
மாறுபட்டதாய் "காக்கைச் சிறகினிலே" தனக்கானதொரு இலக்கியத் தனித்துவத்தை வெளிப்படுத்தி  '21-ம் நூற்றாண்டில் இப்படியொரு முயற்சியா?' எனத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதை பதிவிடவே வேண்டும்.
இந்தத் தூண்டுதல் பிரான்சில் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுக் கொடுக்கும் உந்துவிசையை எனக்குள் பிறப்பித்தது.
நுகர்வோரிடமிருந்து மேலும் மேலும் கறந்திட விளையும் உலகில் 'காக்கை'யின் பயணம் வித்தியாசமாக இருக்கிறது. மனிதர்கள் காக்காக் கூட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது!
01.10.2011 தொடங்கிய இதழ் தனது மூன்றாவது ஆண்டுப் பயணத்துக்குத் தயாராகிவிட்டது. தொடரும் சிறப்பான பயணத்திற்கு வாழ்த்துகள் - நல்லவை எங்கு நடந்தாலும் மனமாரப் பாராட்ட வேண்டும்!!

"வாழ்க! வளமுடன்!!"  என வாழ்த்துகளைப் பதிவிடுறேன்!

- ‘யான் பெற்ற வாசக இன்பம் பெறுக இவ்வையகம் !’ எனவாக இணையவலையில் பகிர்கிறேன் :


காக்கைச் சிறகினிலே (மாத இதழ்)
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை- 600005. இந்தியா
மின்னஞ்சல்:  kaakkaicirakinile@gmail.com

பிற்குறிப்பு:
1. பரதவர்:
தமிழ் நாட்டில் ஆதி வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பல்வேறு சமூகக் குழுக்களுள் ஒன்று வேளிர் என்ற குழு. இன்னொன்று பரதர் என்ற குழு.இக்குழுக்களைச் சார்ந்தோர் ஆதி வரலாற்றுக்க்காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்ததற்கான சான்றுகள் கல்வெட்டுச் சான்றுகளும் தொல்லியல் சான்றுகளும் உள்ளன என்பதை பேராசிரியர் செனிவரத்ன எடுத்துரைத்துள்ளார் ( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) மேலும் பரதர் என்ற குழுவினர் சங்கச் செய்யுள்களில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழக கரையோரப் பட்டினங்களில் இவர்கள் கடல்சார் தொழில் புரிவோராகவும் வணிகராகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் ( கா.இந்திரபாலா- இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களை சங்க இலக்கியங்கள் ‘பரதவர்' என்று அடையாளப்படுத்துகின்றன. ஐந்து வகை திணைகளாக வகுக்கப்பட்ட நிலங்களில் நெய்தல் நிலத்தின் திணைக்குரிய தலை மக்களாக ஆண்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சேர்ப்பன்- புலம்பன்- கொண்கன்- துறைவன்- ஆகியோரும் பெண்களாக பரத்தி- நுளைச்சி என்றும் குறிக்கின்றன.

2. ஜோ டி குரூஸ் (ஜோ டி க்ரூஸ்) Joe D Cruz

ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை இராயவரம் பகுதியைச் சேர்ந்த இவர் பொருளாதாரத்தில் முதுகலை- முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். கப்பல் போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். “புலம்பல்கள்” எனும் கவிதை நூல் 2003ல் வெளியாகியுள்ளது. இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜோ டி குரூஸ் கொற்கை என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். அவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. மேலும் 2013ல் வெளியாக உள்ள மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
நன்றி: விக்கிபீடியா
3. வரலாறும் அடையாளமும் - ஜோ டி குரூஸ் அவர்களது உரையடங்கிய காணொலி
History and Identity by Joe De Cruz - Part 1


History and Identity by Joe De Cruz - Part 2


நன்றி: யூ ரியூப் காணொலி இணைய வழங்கி

4. சங்கிலியன் மன்னனால் அழிக்கப்பட்டவர் நினைவாகக் கட்டப்பட்ட ‘வேத சாட்சிகள் தேவாலையம்’ மன்னார் தீவில் இன்றும் கத்தோலிக்கரின் வழிபாட்டுத் தலமாக இருக்கிறது.


5. தமிழின் சிறந்த புதினத்திற்கான இயல் விருது கனடாவில் செயற்பட்டுவரும் தமிழ் இலக்கிய தோட்டம் அமைப்பால் ‘ஆழி சூழ் உலகு’ படைப்பிற்காக ஜோ டி குரூஸ் அவர்களுக்கு 2006-ம் ஆண்டு வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

- முகிலன்

பாரீஸ் 02.09.2013

No comments:

Post a Comment