Thursday 12 September 2013

பிரான்சில், தமிழால் உறுதிமொழி வழங்க நிகழ்வரங்கான 'வாழ்க்கைத் துணை ஏற்பு விழா!!'

செய்திச் சரம் 17
பிரான்சில்,  திருக்குறள் ஒலிக்க
மணக்கள் திருக்குறள் ஏட்டில் தமிழால் உறுதிமொழி வழங்க 
நிகழ்வரங்கான
'வாழ்க்கைத் துணை ஏற்பு விழா!!'

அவையோர் முன் தமிழால் திருக்குறள் ஏட்டில் உறுதிமொழி வழங்கி நடந்த திருமண நிகழ்வு சென்ற 17.08.2013 அன்று பிரான்சில் நிகழ்வரங்காகியது. பாரீசின் வடக்கிலமைந்த புறநகரான எப்பினே ~சூ~ செயின் (Epinay Sur Seine) நகர சபை வளாகத்தில் ஒன்றுகூடிய பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள், தமது பாரம்பரிய ஆடையணிகலங்களுடன் மகிழ்வாகக் காட்சியளித்ததால் சுற்றுவட்டாரத்தின் கவனத்தைப் பெற்றது.


அன்றைய நாள் நடைபெற இருக்கும் தமது இல்லத் திருமணத்திற்காக பெரியவர் - சிறியவர், ஆண் - பெண், மணமகன் - மணமகள் எனவாக பெரும்பாலானோர் தமிழர்களின் பாரம்பரிய ஆடையணிகளுடன் வந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 


பிரான்சில் புலம்பெயர் தமிழர்களின் இல்லத் திருமண வரலாற்றில், திருமணப் பதிவை மேற்கொள்ளும் நகர சபை மண்டபத்தில் 'மணமகன்-மணமகள்' தமது பாரம்பரிய ஆடை அணிகலங்களுடன் மாநகர சபை மேயர் முன்னிலையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்த ஏற்பை சிறப்பாக நிகழ்த்தியதென்பது இதுதான் முதலாவது நிகழ்வாகும். இதனை அங்கு கூடிய அனைவரும் மகிழ்வுடன் அந்தப் புதிய இளம் இல்ல இணையினருக்கும், அவர்களது பெற்றோருக்கும் தெரிவித்தனர்.









இவர்களால் அனுப்பப்பட்ட 'வாழ்க்கைத் துணை ஏற்பு விழா' அழைப்பிதழே இந்நிகழ்வின் தனித்துவத்தைக் கட்டியம் கூறியது. நகரசபை மண்டபத்தில் தொடங்கிய மகிழ்வு உற்சாகம் திருமண மண்டபத்திலும் தொடர்ந்தது.

புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியின் குறியீடாக மணமகளின் தோழிகளாக பல்தேசிய பல்லினத்தவர்கள் அழகிய சேலை அணிந்தவர்களாக கைகளில் குத்துவிளக்குடன் வரிசையாக மணமக்களை அழைத்துச் சென்றது புதியதொரு காட்சியாக இருந்தது.

திருக்குறள் ஒலிக்க மணமேடைக்கு வந்தனர் மணமக்கள். கூடவே இருவரது பெற்றோரும் வந்து வருகைபுரிந்த அவையோராகிய அழைப்பாளர்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று தங்களது குடும்ப நண்பரான முகுந்தன் குடும்பத்தினரை நிகழ்வை நடாத்தித் தருமாறு அழைத்தனர்.

இரு பெற்றோர்களும், குடும்ப உரித்துடையோரும், மணமக்களும் மங்கள விளக்கேற்ற, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வரங்கம் ஆரம்பமாகியது. மணமக்களின்  குடும்பப் பெரியவர்கள் ஏந்திய திருக்குறள் நூலில் தத்தமது வலதுகைகளை வைத்தவாறு  தமது உறுதிமொழியினை வழங்கினர்  மணமக்கள்.



பிரான்சில் வாழும் 75 அகவையை கடந்த ஈழத்தமிழ் வாழ்நாள் கலைஞன் ரகுநாதன் - சந்திராதேவி தம்பதியினர் தமிழில் உறுதியேற்பு நிகழ்வை முறையே மணமகனுக்கும் மணமகளுக்குமாக நடாத்த அது அவையோரது கரவொலியால் அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து பெற்றோரும் உற்றாரும் சுற்றாரும் வாழ்த்த மாலையை மாற்றிக் கொண்டனர். 
 
இவர்களது குடும்பத்தின் மூத்த 50 ஆண்டு திருமண வாழ்வு கண்ட பெரியவர்களான இராஜரட்ணம் - புவனேஸ்வரி அவர்கள் கணையாழி எடுத்துக் கொடுக்க மணமக்கள் அணிந்து கொண்டதுடன் அரங்கம் மகிழ்வடைந்தது

இதனைத் தொடர்ந்து, மணமக்களின் தாயார் இருவரும் 'பரம்பரை வரைபு ஆவணத்தை' புலம்பெயர்வு வாழ்வைத் தொடரும் மணமக்களுக்கு வழங்கியது சிறப்பானதாக அமைந்தது. தமது மூலத் தொடர் குடும்ப ஆவணமாக இதை அவர்கள் பெற்றதை சபையினர் கண்டு நெகிழ்ந்தனர்

திருமணத்தால் இணையும் குடும்பத் தொடரை ஆவணமாகக் கையளிக்கும் புத்தம்புதியதான நிகழ்வு பிரான்சில் முதல்முறையாக நடந்து அனைவரது கவனத்தையும் பெற்றது. தொடர்ந்து வாழ்த்துரைகளும், வாழ்த்துப்பாக்களும் வருகைதந்தோரால் நிகழ்த்தப்பட்டன.

அனைத்து வருகை தந்தோருக்கும் மணமக்கள் பிரஞ்சிலும் தமிழிலுமாக நன்றிகூறி அனைவரையும் இரவு விருந்துக்கு அழைத்தனர். இதன்பின் தொடர்ந்தது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக மாறிய மகிழ்வரங்கம்.

வித்தியாசமாக அமைந்த இந்நிகழ்வு சபையிலும் வெளியிலும் அதிர்வுகளைக் கொடுத்தது. இதிலிருந்து சொற்களாய் தெறித்தவை சில...

 
« மகிழ்வாக நடந்த இந்நிகழ்வால் இல்வாழ்வில் நுழையும் உணர்வு கிடைத்தது. ரொம்பவும் நன்றி » முகமலர்ச்சியுடன் மணப் பெண்.

 
« முதன்முதலாக இப்படியானதொரு திருமண நிகழ்வைப் பார்த்தேன். பின்புலத்தில் ஒலித்த திருக்குறள் இசைப்பாடலுடன் நீங்கள் வழிநடாத்திய நேர்த்தி மிகுந்த ஈடுபாட்டைத் தந்தது. எனது பிள்ளைக்கும் இப்படியாகவே செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். » நிகழ்வால் மகிழ்வுற்ற குடும்பத் தலைவன் ஒருவர்.

 
« எத்தனையோ திருமண நிகழ்வுகளைக் கண்டவன் நான், இன்றுதான் தமிழில் புலம்பெயர்வுக்குரியதான நிகழ்வாக இதைப் பார்த்து புளங்காகிதமடைந்தேன். இனிமேல் இவ்வகையலானதாக நிகழ்வுகளை நாம் தொடர வழிகண்டதான நிறைவு கிடைத்திருக்கிறது. » மகிழ்வுடன் கைகுலுக்கினார் எனது குடும்ப நண்பர் ஒருவர்.

* 
« இந்நிகழ்வின் சிறப்பிற்கு இரு வீட்டாரும் மனமுவந்தளித்த ஒத்துழைப்புதான் காரணம். உண்மையில் துணிச்சலுடன் தமது பிள்ளைகளின் மணவாழ்வில் நல்லதொரு முன்மாதிரியாகச் செயற்பட்டவர்கள் அவர்கள்தான். அத்தோடு இளமைத் துடிப்போடு இத்தகைய நிகழ்வை நடாத்திய மணமக்கள் என்றென்றும் பாராட்டப்படவேண்டியவர்கள்! » என்றேன் நான்.

 
« தமிழர்கள் தாம் நடாத்தும் திருமண நிகழ்வுக்காக, இருவீட்டாரும் இணைந்து கூடிப்பேசி பொது முடிவுகளை சனநாயக ரீதியில் எடுத்து, தமக்கான கூட்டு உழைப்பைக் குழுக்களாக இணைந்து செய்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்நிகழ்வின் சிறப்புக்கு இத்தகைய முற்செயற்பாடுகள்தான் வழிசமைத்தன. நல்லதொரு செயல். » என்றார் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்கலையில் கற்கும் இளைஞன் ஒருவர்.

 
« இந்நிகழ்வைப் பார்த்த போது பக்தி இலக்கிய காலத்தின் முன் வாழ்ந்த தமிழர்களின் தொன்மத்தின் நீட்சியானதமிழ் இல்லற இணைவு விழாபோல எனக்குத் தோன்றியது! இப்படியாக நடக்குமென நான் கனவுகூடக் காணவில்லை!! » என்றார் நெகிழ்வுடன் நோர்வேயிலிருந்து வருகை தந்திருந்த புகைப்படக்காரர் ஒருவர்.

 
« என்னுடன் இத்திருமண நிகழ்வுக்கு வராததையிட்டு கவலை கொள்வதாக, கனடாவிலிருக்கும் என் கணவர் தெரிவித்தார். அவர் இப்படி சிறப்பானதொரு தமிழ்த் திருமணமாக இருக்கும் என நினைக்காதபடியால்தான் இங்கு வரவில்லையாம். புகைப்படங்களைப் பார்த்துவிட்டு இப்போது கவலைப்படுகிறார்!! » என்றார் குதூகலத்துடன் கனடாவிலிருந்து வருகைதந்த உறவுக்கார இளம் குடும்பப் பெண்.

 
« நகரசபை மண்டபத்தில் மணமகன் நமது பாரம்பரிய வேட்டி சட்டையுடன் வந்ததை முதன் முதலாக் கண்டேன். இது சிறப்பானதொரு நிகழ்வு!! எமக்கும் இப்படியாவே செய்யவேண்டும்! » என்றார் பல்கலையில் பயிலும் இளைஞி ஒருவர்.

 
« மண்டபத்திலிருந்த அனைவரும் பார்க்கக் கூடியதாக மேடை அமையாதது சங்கடமாக இருந்தது » என்றார் இளம் குடும்பத்தவர்.

* 
« ஓரிருவர் மட்டும் இப்படியான நிகழ்வுகளைச் செய்து எதைச் சாதிக்கப் போகிறார்கள் ? எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை… » என்றார் நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர்.

* 
« கிளி தனது திருமணத்தில் என்ன நிலைப்பாட்டிலிருந்தானோ அதே வகையில் தனது மகளின் திருணத்திலும் செய்திருக்கிறான். நல்ல பிள்ளைகளுடனான குடும்பத் தலைவனாக இருக்கிறான்! நிகழ்வு சிறப்பாக திருப்தியாக இருந்தது» என்று பெருமிதப்பட்டார் மணமகளின் பெற்றோரை இலங்கையில் 27 ஆண்டுகளுக்கு முன் இணைத்து வைத்த இவர்களது உறவினரான மகேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்ற மூதாட்டி. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவர் கனடாவிலிருந்து வந்திருந்தார்.

 
« இவ்வளவு சிறப்பாகச் செய்யப்பட்ட நிகழ்வில் கேக் வெட்டியதை காணச் சகிக்க முடியவில்லை. இதைத் தவிர்த்திருக்கலாம். அல்லது வேறுவகையில் செய்திருக்கலாம். » என்றார் குடும்பப் பெண் ஒருவர். « எல்லாவற்றையும் உடனடியாக மாறுதலடையச் செய்ய முடியாதுதானே! படிமுறை மாற்றங்களாகத்தானே செய்யலாம். உணவுக்குப்பின் நடந்த கேளிக்கையாக அதை நான் பார்த்தேன்!! » என்றார் திருப்தியுடன் அவரது கணவன்.

 
« இந்நிகழ்வு நான் பிரான்சில் பார்க்கும் மூன்றாவது நிகழ்வு. முன்னையதிலும் முற்றிலும் வேறுபட்டது. சேலைகள் அணிந்த பல்லினத் தோழிகளால் நிகழ்ந்த வரவேற்பும், நகரசபையில் மணமக்கள் பாரம்பரிய ஆடைகளுடன் திருமண ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதும் புதுமையாக நன்றாக இருந்தது. மண்டபத்தில் நிகழ்ந்த தமிழாலான நிகழ்வரங்க உறுதியேற்பு மிடுக்காகவே இருந்தது. நல்லவற்றை யார் செய்தாலும் மனமாரப் பாராட்டவேண்டும். வாழ்க மணமக்கள்! » என்றார் நிகழ்வில் கலந்துகொண்டவர் ஒருவர்.

 
இப்படியாதொரு 'தமிழாலான வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வு' நடந்ததென்பதைக் கேள்விப்பட்ட புகலிட ஈழத்திரைத்துறை ஆர்வலரான குணா, பாரீசில் தான் நடாத்திய 'ஈழத் தமிழ் திரைவிழா' நிகழ்வுக்கு இலவச நுழைவுச் சீட்டை மணமக்களுக்கு அளித்தார்.

பிற்குறிப்பு:

1. ஒளிப்படங்கள் கிடைக்கத் தாமதமாகியதால் இப்பதிவேற்றம் உடனடியாகச் செய்ய முடியவில்லை. (
ஒளிப்படங்கள் : கிறிஸ்ரி பாஸ்கரன் மற்றும் நோர்வே சேகர்)

2. அழைப்பு பிரதி

3. உறுதிமொழி நகல் :

4. பரம்பரை வரைபு ஆவணம்


5. மேலதிக படங்கள்

6. தொடர்புபட்ட வேறொரு பதிவு :

செய்திச் சரம் - 2 பிரான்சில் சபையின் முன் தமிழால் உறுதிமொழி வழங்கி நடந்த ஒரு திருமணம்


- முகுந்தன்
பாரீஸ் 08.09.2013

2 comments:

  1. மணமக்களுக்கும் நிகழ்ச்சி நடத்தியோருக்கும் வாழ்த்துகள். தமிழ் மணம் தரணி எங்கும் பரவட்டும்! அனவைரும் அன்பும் பண்பும் பொருளும் அருளும்சீரும் சிறப்பும் உயர்வும் புகழும் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    ReplyDelete
  2. திருவள்ளுவன் இலக்குவனார் ஆகிய தங்களது இனியதான வாழ்த்துகளுக்கு நன்றி! தங்களைப் போன்ற பலரது தமிழ் மீதான செயல்சார் பற்றுதலால் தமிழ் தொடர்ந்தும் தடைகள் பலவற்றைக் கடந்து தனது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் தனது அசைவியக்கத்தைப் பதிவு செய்யும்.
    தங்களது வாழ்த்துகள் அனைவருக்கும் பகிரப்படுகிறது. வாழ்க! வளமுடன்!!

    ReplyDelete