Monday 23 September 2013

மனப் பிறழ்வு மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய நோயாளி!!

செவிவழிக்தை 20
கதைச்சரம் 23

மனப் பிறழ்வு மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய நோயாளி!!


அந்த ஊரின் அதிமான போக்குவரத்திற்கும், அங்குள்ள கடைகளின் நாளாந்த வருமானத்திற்கும் பெரும் பங்கு வகித்தது இந்த மனப் பிறழ்வு மருத்துவமனைதான். இந்த மாவட்டத்திலேயே பிரல்யமானதொரு வைத்தியசாலை. இந்த ஊரில் புகழ்பெற்ற இரண்டு பெரிய கல்லூரிகள் இருந்தாலும் பின்னர் வந்த இந்த வைத்திசாலையின் தேவை அந்த மாகாண மக்களுக்கு மிக அவசியமானதாக இருந்ததால், உருவானதுடன் மிகவும் பிரபல்யமாகிவிட்டிருந்தது. இதில் வெளிநோயாளிகள் பிரிவினரும், உள் நோயாளிகளைப் பராமரிக்கும் தனித்துவமான மூடப்பட்ட வளாகமும் இருந்தது.
இதில் தெளிவடைந்து பெரும் முன்னற்றமடைந்த நோயாளிகளுக்கான விசாலமான தொகுதி (ward) தனியாக வேறு பிரிக்கப்பட்டிருந்தது.  இத்தொகுதி மூடப்படடிருக்காது. இதிலுள்ள நோயாளிகள் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் இவர்களில் சிலரைப் பார்த்தால் வைத்தியசாலை சிப்பந்திகள் எனக் கருதுவதும் உண்டு. ஒரே வித்தியாசம் சிப்பந்திகள் பச்சை நிற மேலங்கியும் தொப்பியும் அணிந்திருப்பார்கள் இவர்களிடம் அது இருக்காது. ஆனாலும் இவர்களில் சிலர் வைத்திசாலையின் உதவியாளர்களாக சம்பளமில்லாத பணிகளைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
தேறிய நோயாளிகளின் பாராமரிப்பினால் உருவான காய் கறிகளுமான சிறிய தோட்டமும்,  அழகானதொரு பூந்தோட்டமொன்றும் இந்த வளாகத்திலிருந்ததால்  அந்தக் கட்டத் தொகுதிக்குள் தனித்துவமானதொரு அழகாகவே இருந்தது. இங்குள்ள நோயாளிகள் மற்றும் இவர்களது தொடர்பார்களாகப் பணியாற்றும் கண்காணிப்பாளர்களும்இ தாதிகளும்  எப்போதும் மலர்ச்சியுடன்தான் காணப்படுவார்கள்.
ஒருநாள் மாலை, வைத்தியசாலையின் உள்ளக நோயாளிப் பிரிவகத்தில் கவனமாக அடைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் ஒரு நோயாளி தவறி விழுந்துவிட்டார். அந்தக் கிணறு மிகவும் ஆழமானது. வைத்தியசாலை நிர்வாகம் அதிர்ந்து அல்லோலகல்லோப்பட்டது. அந்தக் காலத்தில் வைத்தியசாலைகளில் இப்படியாக ஏதும் நிகழ்ந்தால் அங்குள்ள சிப்பந்திகள்தான் உடனடியாக முதலுதவிகளை வழங்குவார்கள். விழுந்தது மனநோயாளி என்பதால் அவனைக் காப்பாற்ற சிப்பந்திகளிடம் ஒருவிதப் பயத்திலான தயக்கம் இருந்தது.
வைத்தியசாலையின் தலைமை மருத்துவர் திணறிக் கொண்டிருந்தார். அப்போது, « இங்கு என்னதான் நடக்குது?...... நீங்கள் எல்லாம் மனுசங்கள்தானா? » கோபத்துடன் வினவினான் தேறிய முன்னேற்றமடைந்துவரும் நோயாளி ஒருவன். அவனது கோபம் வார்த்தைகளில் மட்டுமல்ல அவனது அங்க அசைவுகளிலும் இருந்தது. எல்லோரும் அதிசயமாக அவனைப் பார்த்தனர்.
« ஒருத்தனுடைய உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கு வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? » அவனது கோபக்குரல் வைத்திய அதிகாரியின் முகத்திலடித்ததுபோல் இருந்தது. அவன் மற்றவர்களது கருத்துகளைக் கேட்பவனாக இருக்கவில்லை. உடனடியாகவே செயலில் இறங்கினான். எப்படியாக மேலாடையைக் கழற்றினான் எப்போது அந்த ஆழக் கிணற்றினுள் குதித்தான் என்பதை வார்த்தைகளால் குறிக்க முடியாது.
மின்னல் கீற்று வந்ததுபோல எல்லாமே நடந்து முடிந்தது. சிப்பந்திகளும் கயிறுகளுடன் உதவிபுரிய கிணற்றுள் பரிதவித்த நோயாளி காப்பாற்றப்ட்டான். எல்லாமே நல்லபடியாக முடிந்ததில் நிர்வாகத்திற்கு 'அப்பாடா' என்றிருந்திருக்க வேண்டும். தலைமை மருத்துவ அதிகாரி முன்னிலையில் எல்லாமே சுகமாக அமைந்ததால் அன்றைய நாள் நன்னாளாகியது. இந்த ஒரே சம்பவத்தால் அந்த மருத்துவமனையில் மனித நேயமிக்க நல்ல மனது கொண்டவனாகிப் பிரபல்யமானான். எல்லோரும் ஓருயிரைக் காப்பாற்றிய அந்த மனிதநேயனுக்கு கைகொடுத்துப் பாராட்டினர்.
அடுத்த நாள் பொழுது புலர்ந்தது, அந்தோ பரிதாபம்! காப்பாற்றப்பட்ட நோயாளி அந்த வளாகத்திலிருந்த உயரமான மரக்கிளையில் தூக்குப் போட்டு இறந்து கிடந்தான். அழுகைக் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகிப் பரவலாக வைத்திசாலை வளாகம் சோகமயமாகியது. தலைமை மருத்துவர் பதறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். ஆகவேண்டிய காரியங்களை முறைப்படி செய்ய நிர்வாகம் தயாரானது.
« இங்க பாருங்க டொக்டர்! கிணற்றில் விழுந்து சாக இருந்தவனை நேற்றுக் காப்பாற்றிவிட, இன்று தூக்கிலே தொங்குகிறான். எல்லாம் விதிதான்!! » சலிப்புற்ற கண்காணிப்பாளர் ஒருவர் கலங்கியவாறு.
சுற்று முற்றும் பார்த்த தலைமை மருத்துவர், « எங்கே அந்த அசகாயசூரனான எங்கள் மனிதநேயன்? » என அவர் விழித்தபோதுதான் மற்றவர்களுக்கும் பொறிதட்டியது.
« காலையிலிருந்து இங்கு அவன் வரவே இல்லை. » என்றது ஒரு குரல்.
« நேற்றைய களைப்பில் சிலவேளையில் அசந்து தூங்கிக்கொண்டிருக்கலாம்! » என்றது இன்னொரு குரல்.
« அவனை இங்கு கூட்டிவரவேண்டாம். இதைக் கண்டால் அவன் துவண்டுபோனாலும் போயிடுவான்!! » என்றார் இன்னொரு கண்காணிப்பாளர்.
« விதி யாரைத்தான் விட்டது..... எல்லாம் தலையெழுத்து!! » எனப் பொருமியவாறு ஆகவேண்டியவற்றை செய்யத் தொடங்கினர் மருத்துவமனைப் பணியாளர்கள்.
தலைமை மருத்துவருக்கு என்னசொல்லியும் இருப்புக் கொள்ளவில்லை. தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். செய்தியை மேலிடத்திற்கு முறைப்பட அறியத் தந்ததை அவரது உதவியாளர் வந்து தெரிவித்துச் சென்றார். திடீரென என்ன நினைத்தாரோ என்னவோ விறுவிறுவென அந்த தனி வளாகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அந்த மனிதநேயனது அறைவாசலை அடைந்தபின்தான் தலைமை மருத்துவரது கால்கள் நின்றன. மெல்ல எட்டிப் பார்த்தார். அவன் தூங்கவில்லை. எழுந்திருந்து ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். மருத்துவருக்கோ ஆச்சரியமோ ஆச்சரியம்!! 'என்டா இது வைத்தியசாலை அல்லோல கல்லோலப்படுகிறது.... இவனோ சாதாரணமாக இருக்கிறான்! எப்படி?' மனம் கேள்விகளால் குடைய, மெல்லமாக அவனருகே சென்று செருமிக் கொண்டார்.
அவன் டொக்டரை திரும்பிப் பார்த்துவிட்டு திரும்பவும் வாசிக்கத் தொடங்கினான். அவன் கோபத்துடன் இருப்பதை வைத்தியரால் புரிய முடிந்தது.
« வணக்கம்!! » என்றார் பரிவுடன் வைத்தியர். அவனிடமிருந்து "ம்....!" என்று மட்டும்தான் பதில் வந்தது.
« என்ன செய்வது தம்பி!! உன்னால் காப்பாற்றபட்டிருந்தும் அவன் இன்று மரத்திலே தொங்குகிறான். அவனை நினைக்க வேதனையாகவே இருக்கு!! » என்றார் பெருமூச்சை விட்டவாறு.
அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததைக் கண்ட வைத்தியர், « உனக்கென்ன கவலையாக இருக்கிறதா....? கவலைப்படாதே.... நடக்கவேண்டியது நடந்துதானே ஆகும்!! » என்றவாறு பரிவுடன் அனது தோளைப் பற்றினார்.
தனது தோளைப் பற்றிய வைத்தியரின் கையை விலக்கியவாறு, « என்னோடு யாரும் பேசத் தேவையில்வை! » உறைப்பான வார்த்தைகள் கொட்டின.
« என்ன தம்பி! நீ காப்பாறிய ஆள் இன்று மரத்தில தொங்குகிறான்.... தம்பி;? » வைத்தியர் பரிதாபமாக வினவினார்.
« அது எனக்குத் தெரியும்!! உங்களால முடியாதெண்டுதான் சொல்லிப்போட்டு பிறகெதற்கு என்னிடம் வந்து நிற்கிறீர்கள்? » பதிலுடன் முறைப்பும் கனதியாக இருந்தது.
« ஆ!!!! என்ன சொல்கிறீர்? » வைத்தியர் ஆச்சரியத்தோடு.
« அதுதான்.... கிணற்றில விழுந்தவனைக் காப்பாற்ற முடியாதென்று கைவிரிச்சவர்கள்தானே நீங்கள் எல்லோரும்!! »
« அவனைத்தான் நீர் காப்பாற்றி விட்டீர்தானே!! நாமெல்லோரும் உம்மைப் பாராட்டினோம்தானே! » வைத்தியருக்கு குழப்பமோ குழப்பம்.
« ஓமோம் நான்தான் அவனைக் காப்பாற்றினேன். நான்தான் பொறுப்பேற்றேன். அவன் ஈரமாக இருக்கிறானென நான்தான் அவனைக் காயப்போட்டேன். அதுக்கென்ன இப்ப!! » என்ற அவன் வைத்தியரைப் பார்த்து முறைத்தானே ஒரு முறைப்பு.
‘அப்பப்பா... ப்ப்பா.... !!’ வைத்தியருக்கு மூச்சுப் போகுதாவென்றே தெரியவில்லை.
 000 000


எனது பல்கலைக் கழக வாழ்வில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட நண்பன் பிகராடோ சொன்ன கதை இது. காற்றில் தவழ்ந்து வந்து நுட்பமான அறிவைச் சுட்டும் செவிவழிக் கதைககள் கரைந்து போகாமல் இணையவைலையிலும் பரவிவிடுகிறேன். கதைசொல்லிகளாக விபரணித்ததை கண்டு கேட்டு இரசித்ததை வார்த்தைகளால் வரித்துத் தடமிடுதென்பது இலகுவானதில்லை.

நம் வாழ்வில் நமக்கான தனித்துவமான கதைசொல்லிகளைக் நேரடியாகத் தரிசித்தவர்கள் நாம். இன்று நம் வாரிசுகள் தொலைக்காட்சிச் சட்டக வாயிலாகவே அதிக பிம்பங்களைத் தரிசிக்கிறார்கள்.
நீண்டு செல்லும் புலம்பெயர்வு வாழ்வு எம்மை நாளாந்தம் நாம் தவழ்ந்த மண்ணினதும் விட்டுவந்திருந்த உற்றார்களதும் சுற்றார்களதும் தகவல்களைத் தேடும் இணையத் துளாவலாளர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது. இத்தகைய தேடலில் முதன்மையானது மரண அறிவித்தல் பகுதி. இந்தப் பட்டியலில் எமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களாக எனவாகத் தேடாது செல்வோர் அரிது. இதில் அதிக கவனம் கொள்ள வைப்பது அகால மரணங்கள். இதிலும் பேரழிவுபட்ட பின்பும் தொடரும் தூக்கில் தொங்கும் தற்கொலை மரணங்கள் எமைத் துணுக்குறச் செய்து பெருமூச்சுடனேயே கடக்க வைக்கின்றன.  இத்தகைய உந்துதலால் மனக்கிடங்கிலிருந்து மேலெழுந்ததொரு குமுழியாக வெளியானதுதான் இக்கதை. .


-முகிலன்

பாரீஸ் 22.09.2013

No comments:

Post a Comment