Friday 2 August 2013

'தெய்வ நிந்தனை செய்யும் நீ.... நாசமாய்ப் போவாய்!'

குஞ்சரம் 12

'தெய்வ நிந்தனை செய்யும் நீ.... நாசமாய்ப் போவாய்!'  எனவாக என்னை ஆசீர்வதித்த மதப் பற்றாளன்

'நண்பன் சிவநேசன் செர்மனி செல்ல இருப்பதால் அவனை வழியனுப்பிப் போட்டு வருவம் வாறியா..?' கேட்டது எனது நீண்டகால ஓருயிர் ஈருடல் நண்பன் இரத்தினா.
80களின் தொடக்கம்... அப்போதுதான் பல்கலையில் நானும் இரத்தினாவும் பட்டம் பெற்றிருந்தோம். சிவநேசன் எனது ஊரவன் ஆனால் இரத்தினாவின் பள்ளித் தோழன். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றவன்.
நான் பல்கலையில் நுழைந்தபோது உடன் வந்த அறிமுகத்துடன் ஒன்றாகப் பெற்ற 'பகிடி வதைகளால்" இணைந்தவர்கள்தான் நானும் இரத்தினாவும். அதன்பின் எனக்கு ஒரு தங்கும் அறை கிடைத்தால் அவ்வறை அவனுக்கும் உரியதென்பது எழுதப்படாததொரு நடைமுறை. யாருமே வாய் திறக்கவே முடியாது. அவனது நண்பர்களெல்லோரும் எனக்கும் நண்பர்களாகினார்கள். அவனது வீடும் எனது வீடானது. அவனது அம்மாவும் எனது 'அம்மா"தான். நானும் அவர்களது வீட்டில் பெற்றெடுக்கப்படாத பிள்ளைதான்! சென்ற முறை இலண்டன் சென்றபோது 'அம்மா"வைத் தொட்டு மனித சங்கமிப்புக்குள்ளானேன்;.
பிறகென்ன.... வழியனுப்பல் நிகழ்வு கொழும்பு சென்று கும்மாளத்துடன் அமைந்தது. அடுத்த நாள், நானும் இரத்தினாவும் யாழ்தேவியல் யாழ் திரும்பிக் கொண்டிருந்தோம். இந்த யாழ்தேவியில் கொழும்பு கோட்டையில் ஏறும்போது என்னுடன் சம்பத்திரிசியார் கல்லூரியல் படித்த ஜோன் தான் நினைவில் வருவார். இவர் ஓடும் இரயில் ஏறும்போது தவறி இரயிலுக்கும் பிளாட்பாரத்திற்குமிடையில் சிக்கி விழுந்து அசாத்தியமாக உயிர் தப்பியவர். இதற்காக அவர் வைத்திசாலையில் மிக நீணடதொரு சிகிட்சை பெற்றவர். இன்று இவர் பிள்ளை குட்டிகளுடன் இலண்டனில் வாழ்கிறார். கரம்பனில் என்ன நிகழ்ந்தாலும் அதனை மின்னஞ்சலாக பகிரும் செயலைத் தானாகவே செய்து வருகிறார்.
யாழ்தேவியில் கூட்டமோ கூட்டம். வெயில் கொழுத்தும் கோடை... புழுக்கமென்றால் அப்படியான புழுக்கம்!! எமக்குப் பக்கத்திலிருப்பவர்கள் ஒருவர்கூட அறிமுகமானவராகத் தெரியவில்லை. அக்கம் பக்கம் நோட்டமிட்டது எனது கண்கள். எமக்கு எதிரில் அமிர்ந்திருந்தவர் அன்றைய வீரகேசரியை விரித்து வாசித்தவாறு செய்தியில் மூழ்கியிருந்தார். அந்த வீரகேசரியின் முன்பக்கத் தலைப்புதான் என் கண்ணில்பட்டுத் தொலைத்தது. "மழை வேண்டி பி;க்குமார் பிரீத் ஓதி வேண்டுதல்" இந்த தலைப்பு இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
நான் இரத்தினாவைச் சுரண்டி, 'அங்க பார்!.... மழைக்காக... பிக்குமார் பிரீத் ஓதப் போகிறாங்களாம்...ம்.....................!!!" என்றதான எனக்கேயுரியதான கிண்டலுடன்
'அட போடா.... அவங்களுக்கும் பொழுது போகத்தானே வேண்டும்.... " என்று வெண்பல் சிரிக்க பெரும் குரலில்.
'ஏன் தம்பி வேண்டுதல் செய்வதை பகிடி பண்ணுகிறீங்க....." பவ்வியமாக் கேட்டார் எமது பெஞ்சின் கடைசியில் அமர்ந்திருந்த பெரியவர்.
'இப்படியாகச் செய்து மழை பொழிந்துவிடுமா? பெரியவரே!" என்றவாறு இரத்தினா சிரித்தானே ஒரு சிரிப்பு!
'பயபக்தியுடன் வேண்டுதலை விடுத்தால் கிடைக்காமலா போய்விடும்?" விடாது தொடர்ந்தார் அந்தப் பெரியவர்.
'என்ன ஐயா! பயபக்தி.... மழைக்கும் பயபக்திக்கும் எங்கிருக்கிறது தொடர்பு? இப்படியாக நினைப்பதே முட்டாள் தனமானது. சும்மா ஏமாத்துறாங்கள்... இதையெல்லாம் செய்தியாகப் போட்டு மக்களைப் பேய்க்காட்டுறாங்கள்!!" எனது பதில் இளமைத் துடிப்புடன் பாய்ந்தது.
பக்கத்திலிருந்தவர்கள் எல்லோருமே நிமிர்ந்து எம்மை ஒரு முறை பார்த்தார்கள்.
'பிரீத் ஓதினால்... எமது  தேவைகளெல்லாம் தீருமென்றால்... பிறகென்னத்திற்கு பல்கலைக் கழகங்களும், கல்விக் கூடங்களும், மருத்துவ நிலையங்களும்.... இன்னுமேன்.. இந்த இரயில் கூடத் தேவையில்லைத்தானே!!" என்றான் அட்டகாசச் சிரிப்புடன் இரத்தினா.
பிரீத் ஓதலாகிய பௌத்த வழிபாட்டுச் செயல் நோக்கு தொடர்பாகத் தொடங்கிய விவாத அதிர்வு பெரும்பாலும் சைவ மற்றும் கத்தோக்கர்களாக யாழ் நோக்கிப் பயணித்த தமிழர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. நாம் கடவுளரைப் பற்றி கதைக்கவோ... நினைக்கவோ... இல்லவே இல்லை. ஒரு செயலைத்தான் விமர்சித்திருந்தோம். ஆனால் இவர்கள் வேற்று மதத்தவராக இருந்திருந்தாலும் அவரவரது மத உணர்வாகவே உள்வாங்கப்பட்டது.  அங்கு தெறித்த உரையாடல் 'கடவுள்" என்ற பருப்பொருள் விவாதமாக விரிவடைந்து, கடவுள் இருக்கா? இல்லையா? என்பதாகியது. ஒருவர் இருவரென வாதிடத் தொடங்கி அந்தக் காம்பார்ட்மென்டு தாண்டி பக்கத்து கம்பார்ட்மென்டுக்கும் பரவியது.
எம்மைச் சுற்றி கூட்டமோ கூட்டம். அதில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பதாக வாதிட்டவர்கள் நாம் இருவர் மட்டும்தான்.
'தம்பியள்.. 'கடவுள்" என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?" என்றார் சாந்தமான முகத்துடன் எமக்கு முன் இருந்த பெரியவர்.
'கடவுள் என்ற சொல்லே கற்பனைவாதக் கருத்துரு என்கிறோம். அதற்கு இதைவிட என்ன விளக்கம் வேண்டும்?"
'தம்பிகளே! உங்களது இளமை துடிப்பாகத்தான் இருக்கும். 'கடவுள்" என்றால் கடமை + உள் = கடவுள் என்பதாகும்! புரிந்து கொள்ளுங்கள்."
'சரி அப்படியே இருந்துட்டுப் போகட்டும். இப்படியாகச் சொற்களுக்கு அர்த்தம் தேடும் நீங்கள், 'பூசணிக்காய்" என்பதற்கு அர்த்தம் சொல்லுங்க பார்க்கலாம்?"
'தம்பி! உங்கள் முன்னால் இருப்பவர் யார் தெரியுமா?" என்றார் வேறொருவர் கடுப்புடன்.
'அவர் யாராக இருந்தால் எமக்கென்ன... விவாதம் செய்ய முடியுமென்றால் செய்யுங்கள். இல்லையென்றால் பேசாமல் இருங்கள்...."
'தம்பிகளே! அவர் ஒரு டாக்டர்....." என்றார் இடையிட்டுப் பேசிய இன்னொருவர்.
'மனிதரையும் ஏனைய உயிரிகளையும் பற்றிய தேடுதலும் இயற்கையின் நுணுக்கங்களை கண்டறியும் ஆராய்தலும் தானே விஞ்ஞானம். அகண்ட அண்டைவெளி பற்றிய ஆராய்தலுக்கும் சென்றுவிட்டான் மனிதன். இங்கு நாமேன்ன செய்கிறோம்? அந்தக் கடவுள்தான் செய்கிறார் எனவாக நினைத்து நம்பிக்கொண்டு.... அறிவையும் தேடிக் கொண்டிருப்பதாவும் சொல்கிறோம். அப்ப அந்த கடவுளிடமிருந்தே அறிவைப் பெறவேண்டியதுதானே? கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் ஏன் போய் வீணடிக்கிறீர்கள்? இன்னுமேன் வைத்தியசாலைகளும், மருத்துவர்களும்தான் என்னத்திற்கு..?" சூடாகவே விவாதம் பறந்தது.
சற்று நேரம் யாருமே பேசவில்லை.
'முட்டாள்கள் எப்படியும் இருக்கலாம்தானே! இதற்கேன் பட்டங்களும் பதவிகளும் வேண்டியிருக்கு! இங்க எம்மைப் பற்றி நாமே தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். எங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கா இல்லையா?.... அப்படியில்லையாயின் ஏன்? என்ன செய்ய வேண்டும்? என்ற தொடர் தேடல்தான் அறிவைத் தரும்!" வெடிச் சிரிப்புடன் பதில் விழுந்தது.
'அப்படியென்றால், இந்த கொம்பார்ட்மென்டில் இருக்கும் அனைவரிடமும் கடவுள் இருக்கா - இல்லையா என வாக்கெடுத்து முடிவுக்கு வருவோமா?" என்றார் தொலைவில் நின்றிருந்த வாலிபர் ஒருவர். அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்வையிட்டது எனது கண்கள்.
'இங்கே பாருங்கோ.... எலிகள் கூட்டம் போட்டு பூனை வலியதா.. எலி வலியதா என வாக்கெடுப்பு நடத்தினால் என்ன முடிவு கிடைக்கும்? எலிகள் தான் வெல்லும்.... ஆனால் பூனை அங்கு வந்து 'மியாவ்.." என்றாலே போதும் ஒரு எலிகூட அங்கிருக்காது. இது போலத்தான் உங்கள் வாக்கெடுப்பும் இருக்கும்!" கேளிக்கைச் சிரிப்புடன் பதில்கள் கொட்டிச் சிதறின...!
இரயில் அனுராதபுரத்தை அண்டிக் கொண்டிருந்தது.
"இப்ப பாருங்கோ... வரப்போகும் புகையிரத நிலையமான அனுராதபுரத்தில் கலவரம் நடக்குமென வைத்துக் கொள்ளுங்கோ, எங்களை விடுங்கோ.... உங்களுக்கு இரண்டு வகையில் முடிவு கிடைக்கும். 1) இறந்துவிடுவீர்கள் 2) காயப்பட்டோ அல்லது முழுமையாகவோ தப்பிப் பிழைப்பீர்கள் இவ்வளவுதான் நடக்கும்.
முதலாவது நடந்தால்... அதைப்பற்றிக் கதைக்க நீங்கள் இலலை. இரண்டாவது நிகழ்ந்தால்.. என்ன செய்வீர்கள்... நான் கும்பிட்ட கடவுள்தான் உங்களைக் காப்பாற்றியதாக நினைத்து விழுந்து விழுந்து வணங்கிக் கொண்டிருப்பீர்கள்.... இதுதான் தொடராக நடந்து கொண்டே இருக்கிறது. இறந்தவர்கள் பாவப்பட்டவர்களாகவும் தப்பிய நீங்களெல்லோரும் புண்ணியம் செய்தவர்களாகவும் புழங்காகிதமடைந்து வாழுவீர்கள். உங்களோடு பயணித்து இறந்தவர்களையும் மறந்துவிடுவீர்கள்..!!
ஆனால், நாம் இருவரும் என்ன செய்வோம்? நாமே எதிர்கொள்வோம்... எம்மை நாமே காப்பற்ற எம்;காலையும், கையையும் நம்பியே செயற்படுவோம். தப்பினாலும் தோற்றலாலும் எமக்கானதாகவே ஏற்றுக்கொள்வோம்!
இப்ப சொல்லுங்கோ யார் யதார்த்தமாகச் சிந்திக்கிறார்கள்?"
தொண்டை கட்டிய நிலையில் நடந்த விவாதம் அதன்பின் நீடிக்கவில்லை. அனுராதபுரமும் வந்தடைந்த இரெயில் அதன்பின் தனது பாட்டிலேயே ஓடிக் கொண்டிருந்தது.
000 000
சுமார் ஆறு மாதங்களின் பின் ஒருநாள், நான் நினைத்தேயிராத பெர்லின் நகரில் அகதியாக புகலிடம் தேடியிருந்தேன். முற்றிலும் புத்தம் புதியதான வாழ்வில் முன்னர் எப்போதுமே சந்தித்திராத நண்பர்களுடன் இணைந்தேன். இன்றும் மறக்கமுடியாத அந்த நினைவுகள்..... அதனோடு காணுற்ற காட்சிகள்.... 'ஒரு நாள் எப்படியாக இயற்கையால் சுழல்கிறது?' இங்கு இலகுவில் கிழக்கு - மேற்கு திசையை அறியவே முடியாது!! மாலை 9 மணியாக இருந்தபோதும் மறையாத சூரியன்... சின்னதாகக் குறுகிய இரவுகள். நாளொன்றை இப்படியாக முதன் முதலாகத் தரிசிக்கும் அதிசயக் காட்சியில் திக்குமுக்காடிப் போனேன். ஏன் இங்கு 13 மணி... 20 மணி... எனக் குறிப்பிடுகிறார்கள் என்பதன் முக்கியத்துவம் வெளிப்பட்டது. இரவு 12 மணிக்கே நாள் தொடங்கும் நிலையையும் அறிய முடிந்தது.
புதிய நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனது சிந்தனையும் பேச்சும் சிரிப்பும் பகிடிகளாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கலகலப்புக்காகவே நண்பர்கள் இணைந்தார்கள். சிலர் விலகியும் போனார்கள். இன்னும் சிலர் விலத்தியே போனார்கள்.
'ஐ சே... உம்மை எங்கோ.... பார்த்திருக்கிறேனே...." என்றார் எனக்குப் பார்ட்னராக இருந்த மெல்லிய திடகாத்திரமான உயரமான புதிய நண்பர். எனக்கோ அதிசயம்... அவரது ஊர் மீசாலை. எனது ஊர் கரம்பன்.... பல்கலையிலும் அவர் கற்கவில்லை... அப்படியானால், எங்கும் பார்த்திருக்க வாய்ப்பிருக்காதே... நானும் அப்படியாக இலகுவில் மறக்கக்கூடியவனும் இலலையே.... யோசனையுடனேயே சீட்டுக்களைப் போட்டுக் கொண்டிருந்தேன்.
'ஆ.....! ஓம் ஐசே... நாங்கள் யாழ்தேவியில் சந்தித்திருக்கிறோம். நீங்களும் உங்களது நண்பர் ஒருவரும் எம் பக்கத்திலேயே இருந்தனீங்கள்!" எனது நினைவு மீட்டல் தொடர்ந்து விளையாட அனுமதிக்காமல் மகிழ்வுடன் எழுந்து கைகுலுக்க வைத்தது.
'அடடடா.... ஓம் ஐசே.... காவ் எ நஸ் டே டுடே......!" எனவாக மகிழ்வுடன் கைகுலுக்கி அணைத்துக் கொண்டோம். எமது மகிழ்வு ஏனைய நண்பர்களுக்கும் பரவியது.
'மச்சான்.... நானும் இரயிலிலே எத்தனையோ தடவை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அந்த நாளை மறக்கவே முடியாது. என்னுடைய அப்பா ஸ்டேசன் மாஸ்டர். இவங்கள் இரண்டு பேர் மட்டும்தான்.... சுற்றவர எத்தனைபேர்... எண்பது தொண்ணூறு இருக்கும்.... எப்படியானதொரு அருமையான விவாதம்? ஆனால் கடைசி மட்டும் இவங்கள் சளைக்கவே இல்லை... அவ்வளவுபேரும்... பேசாமல்தான் போனவர்கள்...!" என்று அந்த இரயில் பயணத்தை விபரிக்கத் தொடங்கினார் அந்த புதிய நண்பர்.
அன்று இணைந்த நட்பு இன்றும் தொடரவே செய்கிறது. இவர் பெயர் நகுலன். இவரது பெயரின் கடைசி இரு எழுத்துகளையும் இணைத்துத்தான் எனது பெயராக நானே சூட்டிக்கொண்டது ‘முகிலன்’. இவர் இலங்கையில் பொலீஸாகக் கடமையாற்றியவர். இப்போது கனடாவில் வசிக்கிறார்.
தனது நினைவு மீட்டலைத் தொடர்கிறார் நகுலன்…..
இவங்களுடைய பேச்சைக் கேட்டு வீட்டுக்குப் போன நான் அம்மா கும்பிடுவதைப் பார்த்து, 'எணேய்... ஏன் இப்பிடியெல்லாம் மணியடிச்சுக் கம்பிடுகிறாய்? கடவுளும் இல்லை... ஒன்றுமில்லை..." எனச் சொல்ல அம்மா திகைத்துப் போனா...
'என்னடா மோனே நீ சொல்லுறது?.... இப்படியெல்லாம் கதைக்கக்கூடாது..." என்றார்.
நானும் விடவில்லை. "சும்மா போம்மா.... நீயும் உன்ர கும்பிடலும்.... அப்படியெல்லாம் இல்லை!" என்றேன்.
'யாராடா உன்னைக் குழப்பியது?" அம்மா தவிப்புடன்..
'யாருமே குழப்பேல்லை அம்மா.. நான் இப்பத்தான் தெளிஞ்சிருக்கன்... இன்றைக்கு இரயிலில இரண்டு பேர் வந்திருந்து கதைச்சாங்கள்.... அதை நீயும் கேட்டிருந்தால்... இப்ப மணி அடிக்கமாட்டாய்!"
'தம்பி! சாமி கும்பிடேக்க குழப்பக் கூடாது... இதைப் பிறகு கதைக்கலாம்தானே!" என்றார் பரிதாபகரமாக.
'சரி... நீ கும்பிடு!! என்னவோ.. அம்மா! எனக்கெண்டால் அவங்க கதைச்சதிலே விசயம் இருக்கற மாதிரித்தான்படுது!" என்றவாறு எழுந்து சென்றுவிட்டேன்.
அன்றிலிருந்து எம்மை அனைவரும் அதியமான இருவரது சந்திப்பாகவே இந்தப் புதிய இணைவைப் பார்த்தனர்.
000 00


பெர்னிலில் வாழ்வுச் சக்கரம் சுழல அதனுடன் நாமும் சுழன்று கொண்டிருந்தோம். இந்த நண்பன் நகுலனின் அறையில் இன்னொரு ஓய்வு நாள், சீட்டும் பியருமாக கொண்டாடிக் கொண்டிருந்தோம். நகுலனின் அறைக்குப் பக்தத்தில் தீவிர கத்தோலிக்க மத ஈடுபாடுடைய பெரியவரும் அவரது நண்பரும் இருந்தார்கள். எனது கதையாடல்களால் அவர்கள் வெறுப்புற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த இளம் பிராயத்தில் இவற்றை நான் கிஞ்சித்தும் சட்டை செய்வதில்லை.
விடுமுறைநாள் ஞாயிறாகையால், அவரும் எமது அறையில் இருந்தார். எமது கும்மாளமோ.. வழமையான கிண்டல்களுடன் தொடர்ந்தது. நான் அந்தக் காலத்தில் கடவுள்களையும், பூசாரிகளாக வலம்வரும் போதகர்களையும், மத நிறுவன அமைப்புகளையும் இவர்களது பித்தலாட்டங்களையும் பகிடிசெய்து, விமர்சிக்கத் தயங்கியதே கிடையாது.
உள்சென்ற பியரின் தாக்கத்தாலும், என் கிண்டல் மொழியால் கடவுள்கள் படும்பாட்டைப் பொறுக்க முடியாதலாலும் கோபமுற்ற பக்கத்து அறைப் பெரியவர் கத்தியே விட்டார். ஏச்சென்றால் அப்படியொரு ஏச்சை இதற்கு முன்னால் நான் கேட்டதே இல்லை.
திரும்பி அவரது முகத்தைப் பார்த்த போது... கோப உச்சியில் முகம் வெப்பத்தைக் கொப்பளித்துக் கொண்டிருந்தது. எனக்குச் சிரிப்புதான் வந்தது. சிரிப்பை அடக்கப்பார்த்தேன். முடியவேயில்லை.... சிரித்தே விட்டேன்!
ஏச்சு வகைமாறியதாக திட்டலானது.... அதன் பினர் எல்லாவற்றிலும் உச்சமான சபித்தலாகியது. 'டேய்! இப்படியெல்லாம் கதைக்கிற நீ..... அழிந்துதான் போவாய்...! நாக்கு இருக்கிறதெண்டு... தெய்வநிந்தனை செய்யும் நீ... நாசமாகத்தான் போவாய்...!!" என்றாரே பார்க்கலாம்.
எனது நண்பர் குழாமுக்கு முறுக்கேறியதை காணுற்ற நான் அவரது முகத்தைச் சாந்தமாப் பார்த்து, 'ஐயா, உங்களைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கு!" என்றேன் எவ்வித சலனமும் இல்லாமல்.
அறையில் சிரிப்பொலி - ஒலிகளாகி விரவத் தொடங்கியது. பெரியவரின் நண்பர் அவரை அழைத்துக்கொண்டு தங்களது அறைக்குள் சென்றுவிட்டார். இதன்பின் அப்பெரியவர் என்னோடு கதைக்கவேயில்லை.


0-   சுவடகம் : '80களின் ஆரம்பத்திலான புகலிட வாழ்வு நினைவுகள். பெர்லின்
    ஐரோப்பிய தேசங்களில் அகதிகளாய் கால் பதித்து நடமாடும் புத்தம் புதியதான சூழல் பல முதன்முதலான சம்பவங்களாக அனுபவித்து ஆழ்மனப் பெட்டகத்தில் பதிவாகிக் கிடக்கின்றன. இப்படியானவற்றில் ஒன்றுதான் நான் பார்த்த பெர்லின் நகரம் அதனோடு இணைந்த நட்புகள். ஆழ்ந்துறைந்து கிடக்கும் இவை மேலெழும் குமிழிகளாகி இணைய வானில் சங்கமிக்க முனைகின்றன.....


- முகிலன்

இடுகையிடப்பட்டது: பாரீசு 02.08.2013

5 comments:

  1. கடவுள் இருப்பும் மறுப்பும் பொதுவாக பல இடங்களில் விவாதங்களாய் தொடர்ந்து கொண்டே உள்ளது. கடவுள் மறுப்பை முழுமையாக ஏற்ற பின் என் குடும்பத்தில் துறந்து பேச முடிந்ததில்லை, எங்கே நம்மை ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சம் தான், இன்று பெரும்பான்மையானோரின் தரும சங்கடமும் அதுவே. நண்பர்களோடும், வெளியாரோடும் விவாதிக்க முடியும், குடும்பத்தாரிடம் மெல்ல மெல்லவே எடுத்துரைக்க இயலும் பல சமயங்களில் இயலாவே இயலாது. எங்கள் குடும்பத்தில் அது வெற்றியடைந்தது, வெறித்தனமான பக்திகளையும், வறட்டு சம்பிரதாயங்களையும் விட்டுவிட்டனர். இதில் எனக்கு ஒரு ஆசுவாசம், நாத்திகத்தை என்னால் முன்னெடுக்க முடியும், ஒதுக்கல்களும் நடைபெறாது. அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை அவரையோ, என்னையோ பாதிக்காதவரை எனக்கு ஒரு கவலையும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகையுடன் கருத்துரைப்புக்கும் நன்றிகள்.
      நீண்டு செல்லும் மானிட வாழ்வில் நாம் ஏற்றுக் கொண்ட த்ததுவக் கோட்பாடுகளுடன் வாழ்தல் - வாழ்ந்து காட்டுதல் என்பது மகிழ்வினைத் தரும். சிறுபான்மையிரான தோற்றமுடன் நாத்திகவாதிகள் இருந்தாலும் இவர்கள் மிகு தன்னம்பிக்கையுடனேயே வாழ்கிறார்கள்.

      Delete
  2. இந்தப்பதிவில் இடம்பெற்றிருந்த எனது நண்பனின் கடிதத்தை கீழே இணைக்கிறேன்.

    முகுத்தன் !
    உனது பேர்லின் நினைவுகள் படித்தேன். ஊரில் பழையசோறு சாப்பிட
    சுகம் உனது ஞாபகசக் திக்கு எனது பாராட்டுக்கள் மிகுதி விமர்சனம் தொலைபேசி மூலம்


    நண்பன் நகுலன்

    ReplyDelete
  3. நாத்திக வாதம் கேட்க நல்லா இருக்கும் .நம்மை மீறி ஒரு சக்தி இருக்கு அதன் மீது நம்பிக்கை வைத்து மனிதன் யாருக்கும் துன்பம் தரமால் வாழுவது இறை வழிபாடு ஆகும் இறை நம்பிக்கை ஆகும்

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்கும் விலங்காக மனித உயிரி வேறுபட்டதிலிருந்து தொடரான ஆழ்ந்த சிந்தனைகளை ஆராய்ந்து குவியப்படுத்தியவாறே மானுடப் பயணம் தொடர்கிறது. தனது வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தவாறே இப்பயணம் தொடர்கிறது.

      தான் சந்திக்கும் பிரச்சனைகளைக் கண்டு கலங்காது நிதானமாகப் பரிசீலித்து - அதற்கான காரணிகளை இனங்கண்டு - இதனூடான தீர்வுக்கான வழி கண்டு - தீர்க்கமுடன் விடாது முயற்சிக்கும் தொடரான வாழ்வுதான் புவியில் மனித வாழ்வின் வரலாறாகப் பதிவுற்றிருக்கிறது.
      எனது வலைத் தளத்தில் பதிவுகளை வாசித்து பொறுப்புடன் தங்களது கருத்தைப் பதிவிட்ட தங்களது அன்பையும் கரிசனையும் பெரிதும் மதிக்கிறேன். தங்களது பொறுப்புணர்வுக்கு எனது மனமார்ந்த நன்றி.
      வாழ்க! வளமுடன்!!
      திறந்த தொடர் வாசிப்பும் தேடலும் கொண்டதுதான் மானிட வாழ்வு.

      Delete