Friday, 23 August 2013

தமிழில் அழகான எழுத்து

குஞ்சரம் 15
தமிழில் அழகான எழுத்து

பாரீசில் அண்மையில் நடந்த நண்பரின் மகளின் 'வாழ்க்கைத் துணை ஏற்புவிழா" நிகழ்வின் நிறைவரங்காக அமைந்தது ஆடல் - பாடல் கொண்ட்டாட்ட நிகழ்வு. அரங்கை அதிரவைக்கும்பேரொலி இரைச்சலுடன், வெண்ணொளி மங்கலாக  வர்ணக் கீலங்களாக அள்ளிக் கொட்டும் ஒளிக் கதிரலைகளுடன் ஆடும்- தள்ளாடும் மனிதர்களுமாக மிதந்து கொண்டிருந்தது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியின் வெளியாக பல்லினப் பங்கேற்றலுடனான இசை ஆடலாகவே இது இருந்தது. இதில் பெரும்பாலான நம்மவர்கள் வேடிக்கைப் பார்ப்பவர்களாகவே காணப்பட்டனர். ஆனால் வந்திருந்த அனைத்து வேற்றினத்தவர்களும் தங்களது ஆனந்தத்தை தங்களது ஆடலசைவால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இச்சூழலில்தான் பலரும் மனம் திறந்த உரையாடல் வெளியில் சுதந்திரமாகப் பயணிப்பார்கள். தெரியாதவர்களுடனும் கைகுலுக்குவார்கள், சினேகத்துடன் உறவாடுவார்கள், ஆடுவார்கள், பாடுவார்கள், தத்தமது வாழ்வுப் பயணக் கதைகளை மீட்டுச் சிலாகிப்பார்கள். நகைச்சுவைகளைக் கொட்டுவார்கள். இயந்திர வாழ்வோட்ட நதியில் அள்ளுண்டு செல்லும் வாழ்வில் இத்தகைய தருணங்களில் வெளிப்படும் மனித கருத்துத் தடாகத்தில் நீச்சலடிக்க நானும் விருப்பமுடையவன்.
புகைப் படக்கருவியுடன் இருந்த புதியவர் கைகுலுக்கி நேசபாவத்துடன் மகிழ்வைத் தெரிவித்தார். தமிழில் நடந்த 'வாழ்க்கைத் துணை ஏற்பு விழா"வை மனந்திறந்து பாராட்டினார். 'இந்த நிகழ்வைப் பார்த்தபோது 'பக்தி இலக்கிய காலத்திற்கு" முற்பட்ட தமிழரின் வாழ்வு நிலைத்தோற்றம் நினைவில் நிழலாடியது!" என்றார் முன்னவர். கையில் கமெராவுடன் இருந்த அவரிமிருந்து இப்படியானதொரு எண்ணத்தை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நேசபாவத்துடன் அவரை உற்றுப் பார்க்கிறேன். இவர் வேறொரு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்திருந்தார். அவருடன் உரையாட மனம் விரும்பியது. அங்கிருந்த பேரிரைச்சல் எம்மைக் கலந்துரையாடவிடவில்லை. 'உங்களைப் போன்றவர்களுடன் கதைக்க எனக்கு நிறையவே விருப்பம்!" சத்தமாக எனது கருத்தையும் சொல்லிவிட்டு அகன்றேன்.
குழுநிலைப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த வேளை, அவருடன் கூட வந்திருந்தவர் உரையாடலைத் தொடங்கினார். புகைப்படம் எடுக்கும்போது எல்லோரும் சிரிக்கவேண்டும் என்பதற்காக அடிக்கடி பகிடிவிட்டுக் கொண்டிருந்தவர் இவர்.
'உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"
'கேட்கலாமே!"
'தமிழில் அழகான எழுத்து எது?"
"தமிழுக்கு 'ழ"தானே என்றும் தனித்துவமான அழகு." என்றேன் ஏதுமே புரியாதவனாக
'இல்லை! 'ந"தான்!!" என்றார் சிரிப்புடன். எனக்கு ஏதுமே புரியவில்லை. எனது முகம் கோணலாகியதை அவர் கண்டிருக்க வேண்டும்.
'ந.. தான் அழகு! ஏன் தெரியுமா? நக்மா, நமீதா, நயன்தரா.... எனும் எம்மைக் கிறங்கடித்த அழகிகளுடன் இந்த "ந"னா தானே இருக்கு" என்றவாறு வெடிச் சிரிப்பை வெளிப்படுத்தினார்.
"இந்த அழகிகளுக்கு முன்னமே "ந"னா இருந்திருக்கே!" என்றேன் அமைதியாக. பகிடிவிட்ட நண்பரின் சிரிப்பு தானாகவே அடங்க, முன்னைய அன்பரின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.
000 000

நிகழ்வு மண்டபத்திலிருந்து வண்டியில் மௌனத்துடன் திரும்புகிறேன்.
ஏன்? எதற்கு? எப்படி?..... எனப் பலவாறான வினாக்களுடன் விரியவேண்டிய நம்மவர்களின் பொதுப்புத்தி நகைச்சுவை என்ற பெயரில் மழுங்கடிக்கப்படுகிறது. இப்படியான சில்லறைத் தனங்களை பல்கிப் பெருக்கிக் கொட்டுவது தமிழ்த் தொலைக் காட்சிகள்தான். தமக்கான உணவையே நிதானமாக சமைத்துச் சாப்பிட முடியாத இயந்திர ஓட்டத்தில் தள்ளாடும் மனிதவாசிகளுக்கு எல்லாமும் விரைவான 'தயார்- ஆயத்தத் தயாரிப்பு"களாகத்தான் கைகொடுக்கின்றன.
எல்லாவற்றையும் பணத்தால் அளவிட்டு, பணம் மட்டும் பெருமளவில் இருந்தால் போதும் என்றாகி, தேவைகளனைத்தும் விரைவாக, தயாராக(றெடிமேட்டாக), சுருக்கமாக, கவர்ச்சியாக, மலிவாக, இலவசங்களாக...... கிடைக்கும் ஏக்கத்துடன் மனிதவாசிகளை நிதானங்கொள்ளாது விரட்டும் வேகத்தை உலகமயமாக்கல் காப்பிரேட் நிறுவனங்களின் நுண் உந்துதல் செவ்வனே முடுக்க அசைக்கிறது உலகம்.
கிளறப்பட்ட எண்ணங்களை அடக்கமுடியுமா?
000 000
பின்னிணைப்பு :
புத்தியுள்ள மனிதர் எல்லாம் - Buthiyulla manithar ellam

-முகிலன்

பாரிசு 23.08.2013

No comments:

Post a Comment