Monday, 12 August 2013

அறிவுச்சரம் -4 பயோ (BIO) - இயற்கை வேளாண்மைப் பொருட்கள்

அறிவுச்சரம் -4  

பயோ (BIO)  - இயற்கை வேளாண்மைப் பொருட்கள்
(கரிம வேளாண்மை எனவும் குறிப்பிடுகிறார்கள்)

BIO - பயோ என்றதற்கான கலைச் சொல்லாடலில் திணறத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் தோன்றிய இவ்வேளாண்மை உலக உற்பத்தி விநியோகத்தில் கடுகளவானதுதான். இருந்தாலும் கடுகின் காரத்தைப்போல் உறுதியாக உலகெங்கிலும் அதீத கவனத்துக்கு உள்ளாகிறது. இருபத்தொராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் புலம்பெயர் வாழ்வின் நீட்சியைத் தொடரும் எங்களில் பலரின் கண்களில் மின்னலாக தட்டுப்பட்டுகிறது. இந்த BIO - பயோ பொருட்கள் தொடர்பான முதற்கட்ட அறிமுகத்தைத் தரும் நோக்கில் இப்பதிவு அமைகிறது.

தற்போதைய சந்தைகளில் தனியானதொரு கவனத்தை எடுத்துள்ள பயோப் பொருட்கள் பூமியின் சூழல் மானிட நேசிப்பாளர்களின் அதிக அக்கறையைப் பெற்றிருக்கிறது. இன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நுகர்வுவோர் பெருங்கூட்டத்தைக் கொண்டுள்ள பல்பொருள் அங்காடிகளில் பசுமை நிறத்தில் 'AB' அடையளத்துடனான பொருட்கள் புன்முறுவலிடுவதை நம்மில் பலரும் கண்டிருக்கிறோம். எம்மில் சிலர் கொஞ்சம் அதிக விலைப் பட்டியுடன் காணப்படும் இப்பொருட்களில் சிலதைத் தொட்டுப் பார்த்திருக்கவும்கூடும். இன்னும் சிலர் இவற்றைப் பெறும் பயனாளர்களாகவும் இன்று இருக்கவும் கூடும். ஐரோப்பாவில் உணவுப் பொருட்களில் தொடங்கிய பயோ விநியோகம் தற்போது அழகு சாதனப்பொருட்கள் உடுப்புகள் என விரிவாகியுள்ளது.


பெரும் பிரமாண்ட விளம்பரங்களால் கவர்ந்திழுக்கப்படும் நுகர்வோர்களை அதிகமாகக் கொண்ட ஐரோப்பாவில் தொடரும் எமது புலம்பெயர் வாழ்வில் நாம் காணும் இவ்வகையானதொரு சத்தமில்லாத பொருட்களின் வரவும் இருப்பும் ஆச்சரியமானதொன்றுதான். இதுவே எம்மில் பலரது கவனத்தை ஈர்த்ததாயும் அமையலாம். தற்போது சில இடங்களில் தனியாகவே சிறப்பு பயோப் பொருட்களை விற்கும் சந்தைகளும் வாரந்தோறும் நடைபெறத் தொடங்கிவிட்டன.

பயோ வேளாண்மை என்றால் என்ன? என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பயோ வேளாண்மை எனப்படுவது பயிர் சுழற்சி, பச்சை எருக் கலப்பு உரமிடுதல், சூழல் உயிரினம் சார்ந்த பூச்சிக்கொல்லி பயன்படுத்தல், மண்ணின் உற்பத்தித் திறனை தொடர்ந்து பராமரித்தல் கொண்டதான அக்கறையானதொரு பயிற்செய்கையாகும். இந்த நோக்கில், குறுகியகாலத்தில் அதீத உற்பத்தியைக் கொண்டதென முடுக்கிவிடப்படும் இயந்திர முறையிலான விவசாயம் மற்றும் சூழலைப் பற்றிய கவலை கொள்ளாத செயற்கை உரங்களிடல், பூச்சிகளைக் கட்டுப்படுத்தவென பீச்சியடிக்கும் செயற்கை பூச்சிக் கொல்லிகளின் பயன்படுத்துகை, இயற்கையாகவே அமைந்த தாவர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகள், கால்நடைத் தீவன சேர்க்கைகள் மற்றும் மரபியல் ரீதியாக திருத்தம் செய்யப்பட்ட உயிரினங்கள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்கும் அல்லது மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தும் ஒரு விவசாய முறைமையாகும்.

இப்போது பயோ வேளாண்மை என விழிப்பதை இனி 'இயற்கை வேளாண்மை' என விழிப்பதே பொருத்தமாக இருக்கும் என வாசகர்கள் சொல்வது என் மனச் செவிகளுக்கு கேட்கவே செய்கிறது.  "அடடா!, நம் மூதாதையினர் இந்த பயோ உணவுகளயே உண்டு வாழ்ந்தனரே" எனவாக முதற் தலைமுறையாகப் புலம் பெயர்ந்தவர்கள் இப்போது யோசிக்கலாம்.

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (International federation for organic agriculture movement) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.

1. ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மையானது மண், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் நலத்தினை மொத்தமாக கணக்கில் கொண்டு அவற்றை நீடித்த நிலைத்த முறையில் மேம்படுத்தும் வகையில் செயல்படவேண்டும்.

2. உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு
காணப்படும் உயிர்ச்சூழல் நிலைகளின் முறைகள் மற்றும் சுழற்சிக்கேற்ப இயற்கை வேளாண்மை இயைந்து செயல்பட்டு, சுற்றுப்புறசூழலின் வாழ்வியலுக்கு உதவிட வேண்டும்

3. நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு
வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் அவற்றுடன் இயற்கை வேளாண்மை உறவுகளை ஏற்படுத்தி நடுநிலையாக செயல்படவேண்டும்.

4. பராமரிப்பு பற்றிய கோட்பாடு
தற்பொழுது வாழும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு இயற்கை வேளாண்மை கவனமான மற்றும் பொறுப்பான முறையில் செயல்படவேண்டும்.

பூமி என்பது பல்வேறு உயிரிகளின் சுழற்சியைக் கொண்டதான இயற்கையின் தொடர் அசைவு மண்டலம். இதில் வாழும் ஒரு உயர் நிலை உயிரிதான் இந்த மனித இனம். விஞ்ஞானம் என்பது உலக வாழ்வியலைப் புரிய வைக்கும் ஒரு துறைதான். இவ்வகைப் புரிதலால் கிடைக்கும் தெளிவான கண்ணோடங்கள்தான் மானுட வாழ்வின் பாதைகளை நிர்ணயிக்கின்றன.
இந்த பயோப் பொருட்களின் பாவனைகளால் கிடைத்த சில நன்மைகளைப் பதிவிடுகிறேன்.
1. விட்டமின் 'சி' அதிகமாகக் காணப்படுகின்றது.
2. பயோ பால் அருந்துபவர்களுக்கு தோல் நோய்கள் அதிமாக வருவதில்லை.
3.நைட்ரேட், மற்றும் பூச்சிக் கொல்லி எச்சங்கள் ஆகிய வேண்டாதவற்றைப் பொறுத்த வரையில் பயோப் பொருட்கள் தெளிவான நன்மையைக் கொண்டுள்ளன.
4. சுற்றுச் சூழல் பற்றிய அக்கறையானது பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டின் மீதே குவிமையப்படுத்தப்படுகிறது. காரணம், உலகின் மொத்த பூச்சிக் கொல்லிகளில் 16% பருத்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது
5. பயோ உணவானது தொடரப்படும் உணவை விட ஆரோக்கியமானது என்று பொது மக்களால் நம்பப்படுகிறது. பயோ உணவளிக்கப்பட்ட விலங்குகளில் ஆரோக்கியமும், இனவிருத்திச் செயல் திறனும் சற்றே மேம்பட்ட அளவில் காணப்பட்டன. ஆனால், இதையொத்த ஆய்வுகள் மனிதர்களில் நடைபெறவில்லை.

பயோ பொருட்கள் தொடர்பாக வாதங்களும் பிரதி வாதங்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இது தொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ள அபிப்பிராயம் : "அமெரிக்க மொத்த உணவு விற்பனையில் பயோ உணவு விற்பனை ஒரு சதவிகிதம்தான் என்ற போதிலும், மிகப் பெரும் அளவில் நிதியுதவி பெறும் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் (ஹட்ஸன் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டென்னிஸ் அவெரி), பயோ உணவின் மேல் தாக்குதல் நடத்துவது, தொடரப்படும் என்றதானது ‘தற்போதைய வேளாண்மை’ அதைக் குறித்து கவலையுறத் துவங்கி விட்டது என்பதைத்தான் காட்டுகிறது."


2010இல் பாரீசில் மகாஜனா பழைய மாணவர் சங்கம் நடாத்திய நூற்றாண்டு விழாவில் முத்தாய்ப்பான ஒரு நிகழ்வு நடந்தது. ஓய்வின் பின்னரும் புலம் பெயர்ந்த பின்னரும் 'அதிபர்' என அன்பாக அழைக்கப்படும் தன்னியல் வாழ்வு இருப்பினைக் கொண்டவரான 'அதிபர் பொ. கனகசபாபதி' அவர்களுக்கு 75வது அகவை பாராட்டு நிகழ்வு நடந்தது. இதில் தமது அன்பு பரிசாக பயோ பழக்கூடை ஒன்றினை வழங்கினார்கள் பழைய மாணவர்கள். தங்களின் விஞ்ஞான ஆசிரியரும், அதிபருமாகிய பெருமகனுக்கு மகாஜனாவின் பழைய மாணவர்களால் பாரீசில் வைத்து வழங்கப்பட்ட இந்த 'பயோப் பழக்கூடை' நினைவுப் பரிசு ஒரு புதிய சமிக்ஞையைத் தருவதாகவே கட்டியம் கூறுகிறது. மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் நடதாத்தப்பட்ட 'பவள அகவை காணும் அதிபர்' பாராட்டு நிகழ்வானது தகுநல் முன்னுதாரணமாகவே என்னால் அவதானிக்க முடிந்தது.

புலம்பெயர் சூழலில் இப்பொது நிகழ்வரங்கில் வெளிப்பட்ட பயோ பொருட்கள் தொடர்பான மின்னல் கீற்றானது மண்டபத்தைத் தாண்டியதாக பதிவுகத்திலும் தொடர வழிகோலியுள்ளது. இந்த அலையின் அதிர்வுகள் மேலும் தேடல்களுக்கு வித்திடும்.

பிற்குறிப்பு:
இவ்வாக்கம் பாரீசில் வெளிவரும் ‘நிலா’ என்ற சஞ்சிகைக்காக 2010இல் எழுதப்பட்டது. இதன் ஒரு பகுதி இவ்விதழிலும் பிரசுரமாகியது.

1.)   Definition of Organic Agriculture
Organic agriculture is a production system that sustains the health of soils, ecosystems and people. It relies on ecological processes, biodiversity and cycles adapted to local conditions, rather than the use of inputs with adverse effects. Organic agriculture combines tradition, innovation and science to benefit the shared environment and promote fair relationships and a good quality of life for all involved

2.)   பருத்தி:
அயன் மற்றும் துணை அயனப் பகுதிகளில் மட்டுமே விளையும் இழைப் பயிராகும்.செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.
பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பல்கூறு (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பல்கூறுகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திகாய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும்.
நில நடுக்கோட்டுப் பகுதியில் பருத்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்லிய துணிகள், ஆடைகள் தயாரிக்கப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.எகிப்தியர்கள் கி.மு 12000 த்திலேயே பருத்தியை பயன் படுத்தியதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மெக்சிகோ நாட்டு குகைகளில் 7000 ஆண்டு (சுமார் கி.மு 5000) பழமையான பருத்தி துணிகள் காணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இந்தியாவிலும் மெக்சிகோவிலும் பல்வேறு வகை பருத்தி செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன. பருத்தி, சிந்துவெளிப் பகுதியில் கிமு 5 ஆம் ஆயிரவாண்டுக்கும் கிமு 4 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அங்கு வாழ்ந்தோரால் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. சிந்து வெளியின் பருத்தித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்து இருந்ததுடன், அக்காலத்துப் பருத்தித் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாக இன்றும் தற்கால இந்தியாவில் பருத்தி நூல் நூற்றலும், உற்பத்தியும் முன்னணியில் உள்ளது. கி.மு 1500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்திய பருத்தி பற்றி புகழ் பெற்ற கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் உள்ளது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் செய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106).
நன்றி 3.)   ஊர் பார்க்கப் போனவரின் எண்ணங்கள்
அண்மையில் புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தொலைவால் தொலையுறும் உறவுகளையும் சுற்றத்தாரையும் ஊரையும் பார்க்கச் சென்று திரும்பிய நண்பனின் துணைவி காவிவந்த தகவல் இன்றைய ‘மாற்றங்கள’ படம்பிடித்துக் காட்டியது. இப்போது யாழில் ‘முள்முருக்கு’ என்ற இனமே அழிந்து போய்விட்டது. தமிழர்களின் திருமணங்களில் ‘பந்தக்கால்’ஆக (மன்னர் அல்லது ஆட்சியரின் அங்கீகரிக்கப்பட்ட இருப்பின் குறியீடாக) இருந்தது இம் மரம். ஆடு மாடு போன்ற வீட்டு மிருகங்களுக்கு நிறைவான பால்தரும் இலைகளை வழங்கும் ஒரு மரம்.

வழமையான தக்காளி இனங்களே இன்று அங்கு இல்லை. ஒரு புதுவிதமான தக்காளிதான் இப்போது பாவனையில் இருக்கிறது. தக்காளி பயிரிடலுக்கு மிக இசைவான வெட்பச் சூழலையுடைய மண்ணில் தக்காளி இல்லை. சுற்றவர கடலால் சூழ்ந்திருந்தும் யாழ்குடாவில் மீன் அண்ணளவாக ஐரோப்பியச் சந்தைகளில் கிடைக்கும் விலைகளுக்கே அங்கு சந்தைப்படுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமானது.

வன்னியில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கறவைப் பசுக்களை நவீனமயமாக்கும் நடைமுறை துரிதமாக்கப்பட்டிருக்கிறது. இது காலங்காலமாக எம்மோடு மண்ணில் வாழ்ந்த பசு இனங்கள் இல்லாதுபோகும் புதிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. புதிதாக உருவாக்கப்படும் அதிக பால்தரும் கால் நடைகளுக்கான பிரமாண்டமான புற்களின் பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்படுகிறது.

பருத்தி ஆடைகளை வாங்கப்போயிருந்தபோது « அக்காவுக்கு காட்டன் வேணுமாம்….. எடுத்துக்காட்டு ! » என நையாண்டியுடன் அக்கடையின் கீழ்நிலை விற்பனையாளனிடம் கையை நீட்டினார் கடைமுதலாளி. பூமத்திய கோட்டுக்குக்கு அண்மையில் இயற்கைக் கொடையால் கிடைக்கும் வளமுடைய நாடொன்றின் இன்றைய உலகமயமாதல் போக்கு பெருமூச்சுகளைத்தான் தோற்றுவிக்கிறது.
0000 0000


யாழ் குடாவில் ‘பருத்தி’த்துறை- தீவகத்தில் ‘பருத்தி’யடைப்பு எனச்சுட்டும் ஊர்களின் பெயர்கள் பருத்தியுடன் தொடர்புபட்ட பண்டைய தொன்மத்தைக் காவும் சான்றுகள். எமது வாழ்வில் பருத்தி பயிரிடலை நாம் எம் ஊர்களில் பார்த்ததேயில்லை. ஆனால் எமது வாழ்வின் தொடக்ககாலத்தில் விளைந்த குரக்கன் எள்ளு சணல் நெல் போன்ற பயிற்செய்கை நாம் வளர்ந்து பெரியவர்களாகியபோது விடுபட்டுப்போனது. ‘நைலோனி’ன் வருகையுடன் சணலின் இருப்பே இல்லாது போனது. கோதுமையின் நுழைவினால் மிகவும் தரமான தானியப் பயிரிடுகைகள் மருவிச் சென்றன. புதிய பணப்பயிராக புகையிலை மிளகாய் வெங்காயம் என்பவற்றைத்தான் நாம் காணுற்று வளர்ந்தவர்கள்.

கண்முன்னே கொட்டிக்கிடக்கும் புவிசார் வளங்களுடன் வாழ்ந்த மூதாதையினரின் தொடர்பை அறுத்துவிட்டு நுகர்வுக் கலாச்சார மோகத்தில் அள்ளுண்டு போய் ‘சுடலை ஞானம்’ பெற்றவர்களாக மீளவும் ‘சூழலுடன் இயைந்த இயற்கை வேளாண்மை’ தொடர்பான கரிசனை கொள்ளவேண்டிய காலம் தொலைவில் இருக்கப்போவதில்லை.-    க. முகுந்தன்

இடுகை : பாரீசு 12.08.2013

No comments:

Post a Comment