Sunday 24 May 2009

சரம் - 5 அடிமைகள்

அடிமைகள்

அடிமைகள் என்ற சொல் கொடுக்கும் வேதனையை வார்தைகளால் இலகுவாக வர்ணிக்க முடியாது.
21-ம் நூற்றாண்டு புதிய கணனி யுகத்தில், உலகின் முன் கதறக்கதற நிகழ்ந்த மானிடக் கொலைக்களமாகப் பதிவாகிப்போனது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால். பாரிசில் நினைவுகூரப்பட்ட அவல நிகழ்வில் கலந்துவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்புகிறேன். கனத்த மனநிலையுடன் திரும்பிக்கொண்டிருந்த எமை நாம் வசிக்கும் கிராமத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அடிமைகள் நினைவு நாள் நிகழ்ச்சி ஈர்க்கிறது. காற்றில் கலந்துகொண்டிருந்த ராப்பிசையுடன் வெளிவந்த மானிடக் குரல் எமது சோகத்தையும் தாண்டியதாகி நிற்கவைக்கிறது. இன்றைய உலகில் அடிமைவழிவந்துள்ள வழித் தோன்றல்களின் உணர்வுகளை நூற்றாண்டுகள் கடந்தபின்பும் உமிழ்வதைப் பார்க்கிறேன். எதையும் சட்டைசெய்யாது சுழன்று கொண்டிருக்கிறது காலச்சக்கரம்.

இநத நினைவுகளுடன் தூக்கம் கலைந்தவனாகி இந்தப் பதிவையிடுகிறேன். பத்து வருடங்களின் முன் ஐரோப்பாவில் வளரும் தமிழ் சிறார்களின் தமிழ்மொழி கற்கைக்கான கருத்தரங்கம் ஜேர்மனியில் நிகழ்த்தப்படுகிறது. இதில் நானும் பங்கேற்றிருந்தேன். இந்நிகழ்வில் புதிய அரிய நட்புகளும் தொடர்புகளும் தகவல்களும் கிடைக்கப்பெற்றிருந்தன. இதில் நண்பராகிவருடனான மனந்திறந்த அளவளாவல் 'அடிமைகள்' தொடர்பானதாகவும் இருந்தது.
எண்பதுகளில் பட்டப்படிப்பு முடிந்ததும் ஆபிரிக்கக் கண்டத்தில் ஆசிரியப் பணிபெற்று ஈழத் தமிழர்களில் பலர் பயணிப்பதென்பது சாதாரணமான தொன்று. இந்தவகையில் நைஜீரியா சென்றிருந்தார் இந்த நண்பர். நைஜீரியர்களுடன் ஏற்பட்டிருந்த நடப்புடனான தொடர்பாடல்களில் பல் தரப்பட்ட விடையங்களும் அங்கும். அன்றாருநாள் 'அடிமைகள்' தொடர்பான அலசல் தொடங்கியது....

- 'ஆபிரிக்கர் எப்படியாகவெல்லாம் அடிமைகளாக விற்கப்பட்டார்கள் இந்நிலை எமக்கு(இந்திய இலங்கையர்கள்) வரவில்லை' என்றார் நண்பர்.
- 'என்ன நண்பா இப்படிச் சொல்கிறீர், எங்களை கலைத்துப்பிடித்து சங்கிலிகளால் கட்டி கப்பலில் ஏற்றினர் ஆனால் உங்களிடத்தில் கப்பலைக் கொண்டுவந்து துறைமுகத்தில் கட்டிவிட உங்களவர்கள் தாமாகவே கப்பலில் ஏறிச் சென்றிருந்தனரே!' முகத்தை கடுமையாக வைத்துப் பின் புன்முறுவலிடுகிறார் ஆபிரிக்க நண்பர்.
- வரலாற்றுப் பார்வை சுட்ட குற்ற உணர்ச்சியை எவ்வகையிலும் மறைக்கமுடியாது மெளனித்தார் நண்பர்.

சுமார் இருபது வருட இடைவெளியின்பின், நண்பரின் மறக்க முடியாத நினைவாக எம்முடன் பகிரப்பட்ட இத்தகவல் ஏனோ நினைவில் வந்திருந்தது.

1948இல் மலையகத் தமிழரின் வாக்குரிமை மறுக்கப்பட்ட வேளையில், 'இன்று மலையகத்தமிழர்களின் நாடற்றவரது நிலை தொடர்பாக நாம் அதிக சிரத்தை எடுக்காதுவிட்டால் என்றோ ஒருநாள் இலங்கைத் தமிழர்களும் நாடற்றவராகும் நிலை வரும்!' தந்தை செல்வா கூறிய வார்த்தைகள் இன்று நிசமாகிவிடுவதான அவலத்தில் தவிக்கும் வேளையில் அகதிகள், அடிமைகள், நடோடிகள், ஜித்தோன்கள் தொடர்பாக நிறையவே கற்க வேண்டிய நிலையில் நம் எதிர்காலச் சந்ததியினர் இருக்கின்றனர்.

சிந்தனையின் ஆழத்தால் பெருமூச்சு அமைதியாக வெளியேறுகிறது.


முகிலன் பிரான்சு. 23.05.2009

No comments:

Post a Comment