Monday, 29 June 2009

அறிவுச் சரம் -2 தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமுதமும் இல்லை


தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமுதமும் இல்லை

பொ. ஐங்கரநேசன்

எனது விருப்புக்குரிய இளைய நண்பனாக எண்பதுகளில் அறிமுகமாகிய பொ. ஐங்கரநேசன், உயிரி - இயற்கை - மானுட நேசிப்பாளானாக தனது வாழ்வை அர்ப்பணித்து, அளவுகடந்த மானிட நேசிப்பால் என்னை தன்வசமாக்கியர்களில் ஒருவர். உயிரி இயங்கியல் தொடர்பாக தமிழில் எழுதும் ஈழத்து தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென தனியான இடமெடுத்துள்ளவர். இயற்கை அறிவியல் தொடர்பான பூவுலக நேசிப்பாளானாக விளங்கும் இவர் மதிப்பிற்குரிய நண்பனாக என்னை ஈர்த்தவர்.


இவரது அண்மைய வெளியீடு 'ஏழாவது ஊழி'. இதனை சாளரம்(சென்னை) வெளியிட்டுள்ளது. தமிழில் சுற்றுச் சூழலில் தொடர்பான பல்வேறு ஆக்கங்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூல் மனிதன் வாழும் சூழல் அறிவில் தொடர்பாக தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான நூல்.

இன்று தோரணம் மகப்பேறினை வாடகைக்கு அமர்த்தும் புதிய சூழலைப் பதிவு செய்துள்ளது. குழைந்தைகளுக்கான பாலை விற்கும் வாழ்வை நேரில் காணும் நமது தலைமுறையினராகியாக நாம் குழந்தையை வாடகைத் தாயாரால் பெறுவிக்கப்படவுள்ள புதிய நிலையையும் காணவுள்ளோம்.

அன்று பெற்றால்தான் பிள்ளையா? என்ற கருத்துகள் அன்புடன் வளர்க்கபடும் தாதிகளான அம்மாக்களின் கரிசனையுடன் வெளிவந்தன. இன்று புதிய கருக்கட்டல் முளைவகையாக்கல் மூலம் நோகாமல் பிள்ளைப் பெறும் புதிய கவர்ச்சியும் அறிமுகமாகிவட்டது. இந்த பணத்திற்காகாக வாடகைக்குப் பிள்ளைப் பெறும் தாய்கள் (Surrogate) தனது வாழ்வில் பெறப்போகும் துன்பியல் பற்றி இப்போதுள்ள உலகு அக்கறையுள்ளதாகத் தெரியவில்லை.

இந்த வாடகைத்தாயார்கள் இயற்கையால் சுரக்கப்படும் பாலூட்டல் மற்றும் உயிரி உபாதைகள் தொடர்பாக உலகமயமாக்கல் வியாபார உலகு அக்கறைகொள்ளாது. இனி வரவிருக்கும் புதிய சூழல் எதை நோக்கிய பயணாமாகிறது? இதை மானிட - பூவுலக நேசிப்பாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள்?
கேள்வி பலமானது. அறிவியல் ஆக்கம் என்பது பூவுலக யதார்த்த சார்பியல் விதியில் தங்கியுள்ள அவசியத்தை பொ. ஐங்கரநேசன் ஆழமாகப் பதிவிடுகிறார்.

நூலிருந்து ஒரு கட்டுரை நன்றியுடன் பிரசுரமாகிறது.
000000000000000000000000000

தாயினதும் சேயினதும் நலம்பேண, தாய்ப்பாலூட்டல் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையை ஒரு சமூக இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. - பொ. ஐங்கரநேசன்

“வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா,
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்,
கலி அழிப்பது பெண்கள் அறமடா"
_ பாரதிமுதன்முதலில் உலகத்தை எட்டிப்பார்க்கும் குழந்தைக்குத் தாய்ப்பாலை அன்பளிப்பாகக் கொடுத்தே உலகம் வரவேற்புக் கூறுகிறது. இதைவிட அந்தக் குழந்தைக்குப் பிடித்தமான, பொருத்தமான, மிகவும் அவசியமான பரிசு உலகில் வேறொன்று இருக்க முடியாது.


மனிதனுக்கு மட்டுமல்ல, சின்னஞ்சிறிய மூன்றே மூன்று சென்டிமீட்ட.ர் நீளமான வெளவால் (Bumble bee bat) தொடக்கம் மிகப் பெரிய நீலத்திமிங்கிலம் வரைக்குமான உலகில் உள்ள அத்தனைவகைப் பாலூட்டி விலங்குகளுக்குமே அவற்றின் சிறப்பு அவை இளசுகளுக்கு ஊட்டிவிடும் தாய்ப்பாலில்தான் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு இனத்தினதும் தேவைக்கு ஏற்ப சத்துமுதல் சுத்தம் வரைக்கும் அத்தனையையும் கச்சிதமாகக் கணக்கிட்டு இயற்கை தாய்ப்பாலிடம் கையளித்துள்ளது. ஆனால் மனிதன் மட்டும் இந்த விடயத்திலும் இயற்கையுடன் முரண்படத் தவறவில்லை. அவனுக்கு மட்டுமே உரித்தான தனித்துவமான தாய்ப்பாலை பசுவினது பாலை ஆதாரமாகக் கொண்ட பாற்பொருட்களினால் பெருமளவில் மாற்றீடு செய்துவிட்டான். மற்றைய விலங்குகள் செய்ய விரும்பாத _ செய்ய முடியாத _ இந்தப் ‘பால் மாறாட்டம்' உலகம் பூராவும் இறந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் அரை வாசிப்பேரின் சாவுக்குக் காரணமான போசணைக் குறைபாட்டில் பெருமளவில் பங்கேற்கிறது.


குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்கக் கல்விமையம், நோயுள்ள குழந்தைகள் _ குறைமாதக் குழந்தைகள் உள்ளிட்ட ஒரு வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு தாய்ப்பால்தான் என அடித்துக் கூறியிருக்கிறது. வேண்டுமானால் குடிப்பவர் _ கொடுப்பவர் என்று இரண்டு தரப்பினரில் ஒருவர் களைப்படையும்வரை ஒரு வயதுக்கும் மேலாகக்கூட தாய்ப்பாலூட்டலைத் தொடரலாம் எனவும் சிபார்சு செய்திருக்கிறது. அந்த அளவுக்குத் தாய்ப்பாலினதும் தாய்ப்பாலூட்டலினதும் பெருமைகளைச் சொல்லி மாளாது.


தாய்ப்பால் _ தாய் தன் குழந்தைகளுக்கு ஊட்டி விடும் வெள்ளை இரத்தம்; குழந்தைகளின் உடல் வளர்ச்சியில், மூளைவிருத்தியில், நோய் எதிர்ப்பில், உளநலத்தில் நிகரில்லாப் பங்களிப்புகளைச் செய்துவரும் ஒரு திரவ நிறையுணவு. ஒரு குழந்தைக்கு வேறு எந்த உணவுப் பொருளும் ஆறுமாதங்கள் வரைக்கும் தேவைப்படாத அளவுக்கு, தேவையான போசணைகள் அனைத்தையும் அவற்றின் பண்பும் பரிமாணமும் குன்றாமல் தாய்ப்பால் வழங்குகிறது. தாய்ப்பாலின் 100 மில்லி இலீட்டர்களில் அண்ணளவாக லக்ரோஸ் எனப்படும் பால்வெல்லம் 7 கிராம்களும், கொழுப்பு 4 கிராம்களும், புரதம் 1.5 கிராம்களும் உள்ளன. லக்ரோஸ் வெல்லம் சக்தி மூலமாகப் பயன்படும் அதேவேளை, அதன் ஒருபகுதி குழந்தையின் உணவுக்குழாயில் குடியேறும் நட்பு பக்ரீறியங்களினால் லக்ரிக்கமிலமாக (Lactic acid) மாற்றவும் படுகின்றது. இந்தப் புளிப்புப்பால், உணவுக்குழாயில் இயற்கையாகவே விட்டமின்களைத் தொகுக்கும் பக்ரீறியங்களின் செயற்பாடுகளுக்கு அவசியமானது. காபோஅய்ரேட், கொழுப்பு, புரதம் தவிர விட்டமின்கள் ஏ, டி, இ போன்றவையும் கல்சியம், மகனீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம் போன்ற கனியுப்புகளும் காணப்படுகின்றன. தாய்ப்பாலில் உள்ள கூறுகளின் அளவுகள் குழந்தைகளுக்கு ஏற்படும் தேவைகளைப் பொறுத்துப் பெண்ணுக்குப் பெண், மார்புக்கு மார்பு, நாளுக்கு நாள் மாறிக் கொள்ளும் அதிசயம் இங்கு நிகழுகிறது. குளிரான நேரங்களில் சக்தியைப் பெறுவதற்காக அதிக அளவில் கொழுப்பையும், சூடான தருணங்களில் நீரிழப்பை ஈடுசெய்வதற்காக அதிக தண்ணீரையும் பாலில் சுரந்துவிடும், ‘தன்னெழுச்சியாக விழித்துக்கொள்ளும்' தாய்மையை உலகின் எந்தப் பால்மா நிறுவனங்களினால் வென்றெடுக்க முடியும்?


தாய்ப்பால் வெறுமனே ஒரு போசாக்கு உணவு மாத்திரம் அல்ல; அந்த உணவைச் செரிக்கச் செய்யும் ஏராளமான நொதியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றின் துணையோடு, தாய்ப்பாலிலுள்ள போசணைக் கூறுகள் குழந்தையின் பலம் பெறாத உணவுக்குழாய்க்கு அதிக சிரமம் தராது இலகுவில் சமிபாடு அடைந்து விடுகின்றன. இதனாலேயே தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அஜீரணக் கோளாறுகளால் அவதிப்படுவதில்லை. ஆனால் பசுவினது பால் குழந்தைகளுக்குத் தொந்தரவு தரக்கூடியது. இதன் 100 மில்லி இலீட்டர்களில் 3.5 கிராம்கள் புரதம் உள்ளது. கன்றுகள் விரைவிலேயே அதிக எடையை எய்துவதற்காகத் தேவைப்படும் இந்த அதிகப்படியான புரதங்களை மனிதக் குழந்தைகளினால் முழுமையாகச் சமிக்க முடிவதில்லை. கணிசமான அளவைக் கழிவுகளாகக் கழிந்து வைக்கின்றன.


தாய்ப்பாலில் 100 மில்லி இலீற்றர்களில் ஏறத்தாழ 250 மில்லி கிராம்கள் என்னும் விகிதத்தில் கனிப் பொருட்கூறுகள் காணப்படுகின்றன. ஆவின்பாலில் இதன் மூன்று மடங்குகளில் கனிப்பொருள்கள் உள்ளன. இதனால் தாய்ப்பால் அருந்தும் சிசுவின் சின்னஞ்சிறு சிறுநீரகங்கள் கனியுப்புகளை வடிகட்ட அதிக சுமையுடன் களைத்துப் போராட வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. மேலும், கனிப் பொருள் இவ்வாறு குறைவாக இருப்பதன் காரணமாக நீரிழப்பு, சூடான காலங்களில் அதிக வியர்வை என்பனவற்றில் இருந்தும் குழந்தை காப்பாற்றப் படுகின்றது.


மனிதனின் மூளை விருத்தி தாயின் வயிற்றிலேயே முழுமை பெற்றுவிடுகிறது என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதனைக் கூர்மைப்படுத்தும் செயற்பாடுகள் குழந்தை பிறந்த பின்பும் தொடருகின்றன. இதற்குத் தாய்ப்பாலின் பங்களிப்பு இன்றியமையாதது. மூளை விருத்திக்கு (Gonadotropin releasing hormone) என்னும் ஓமோன் தேவை. தாயின் கருவறையில் தொப்புள் கொடியூடாக வழங்கப்படும் இந்த உயிர்வேதி, குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பாலிலும் காணப்படுகிறது. இஸ்ரேலிலுள்ள உவீஸ்மன் விஞ்ஞான நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் யிற்சாக் கொச் (Dr. Yitzhak koch) தலைமையிலான குழுவினர் தாய்ப்பாலில் Gnrh எதற்கு என்பது குறித்து எலிகளை வைத்து ஆராய்ந்துள்ளனர். இதில், குழந்தையின் முதல் வருடத்தில் மூளையில் நிறையவே மாற்றங்கள் நிகழ்வதும், இதனைத் தாய்ப்பாலில் உள்ள ஓமோன்கள் நிகழ்த்துவிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதை மெய்ப்பிப்பது போல, சமீபத்தில் நியூசிலாந்தால் வெளியான ஆய்வு முடிவுகள் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள் புட்டிப்பால் குழந்தைகளை விட நுண்ணறிவு மிக்கவர்களாகவும், படிப்பில் அதிக சாதனைகளை நிகழ்த்துபவர்களாகவும் உள்ளனர் எனத் தெரிவிக்கின்றன.


பச்சிளம் பாலகர்களைப் பலி கொள்ளக் காத்திருக்கும் வயிற்றோட்டம், சுவாசநோய்கள் போன்றவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவனாகவும் தாய்ப்பால்தான் உதவிக்கு வருகிறது. குழந்தை தனக்கெனச் சொந்தமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை (நிர்ப்பீடனம் - Immunity) விருத்தி செய்வதற்குச் சில மாதங்கள் தேவை. அதுவரையில் தாய்ப்பால்தான் அதற்குக் காவலரண். தாய்ப்பால் கொண்டிருக்கும் வெண்கலங்கள், இம்மியூனோ குளோபியூலின் (Immuno globulin) என்னும் நோய் எதிர்ப்புப் புரதம், லக்ரோபெரின் (Lactoferin)) லைசோசைம் (Lysozyme) போன்ற வேதிகள் நுண்ணங்கிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை _ தாய்ப்பாலில் உள்ள கொழுப்புகள்கூட வைரஸ் கிருமிகளின் புரதச் சுவரை சின்னாபின்னப்படுத்தி அவற்றை அழித்து விடுகின்றன. இதனால்தான் கண்நோய்க்குக் கைகண்ட மருந்தாக இன்றளவும் கிராமப் புறங்களில் தாய்ப்பாலைக் கண்களில் இட்டு வருகின்றனர்.


தாயிடமிருந்து குழந்தை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்கு, புட்டியில் இருந்து உறிஞ்சுவதைவிட அதிகமான சக்தி தேவைப்படுகிறது. ஏறத்தாழ 60 மடங்குகள். இதுவே ஒரு உடற்பயிற்சி போலாகி தாடை எலும்புகளினதும் பற்களினதும் சீரான _ வலுவான வளர்ச்சிக்கு வித்திடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பின்நாளில் சொற்களின் தெளிவான உச்சரிப்புக்கும் இது உதவும். ஆனால், புட்டியில் பால் அருந்தும் குழந்தை, அதிகம் அவதிக்குள்ளாகிறது. அளவு கணக்கில்லாமல் ஒழுகும் பாலைக் கட்டுப்படுத்துவதற்காக, குழந்தை தன் நாவை அடிக்கடி வெளிநீட்டி செயற்கை முலைக்காம்பை அதிக விசையுடன் தள்ளும். நாளடைவில் நாவுக்கு இதுவே வாடிக்கையாகிப் போகும். பேசும் போது பாம்பு நாக்காக வெளிநீளும். வாய்ச்சுவாசம், உதடு கடித்தல் போன்ற விரும்பத் தகாத பழக்கங்களுக்கும் இது வழிகோலிவிடுகிறது.


தாய்ப்பாலூட்டலின்போது தாயின் அரவணைப்பில் சொக்கிக் கிடக்கும் குழந்தை அனுபவிக்கும் சுகத்துக்கு மேலான சுகம் எதுவும் இல்லை. இந்த அணைப்பும் அணைவும் வெறும் பௌதீகச் சொகுசுகள் அல்ல. பாலூட்டலின் போது தாயின் உடலில் ‘ஒக்சிரோசின்' (Oxytocin) என்னும் ஓமோன் அதிக அளவில் சுரப்பதற்குத் தூண்டப்படும். இவ்வோமோன், மகப்பேற்றுக்கால நடத்தைகளில் ஒன்றாக, தாய்க்கு மகவு மீதான பாசப் பிணைப்பை அதிகரிக்கச் செய்யும். இந்தப் பிணைப்பின் நெருக்கத்தில், தொடுகை உறவில் பாதுகாப்பாக இருப்பதாகக் குழந்தை உணர்ந்து கொள்வதாலேயே அதனால் கண் மூடிச் சுகம் காண முடிகிறது. ‘பாதுகாப்பாக இருக்கிறேன்" என்ற உணர்வு குழந்தையில் தன்னம்பிக்கை விதைகளை முளைவிடச் செய்யும் ஒரு உளவியல் ஊட்டம். தாயின் பாதுகாப்பு தனக்கு எப்போதுமே துணையாக வரும் எனக்கருதும் இத்தகைய குழந்தைகள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


குழந்தைகளுக்கு மாத்திரம் அல்ல, பாலூட்டுவதன் பலன்கள் அம்மாக்களையும் சென்றடைகின்றன. பாலூட்டுதல் ஒரு பெரும் உடற்பயிற்சி. தினமும், சராசரியாக 500 கலோரிகள் சக்தி மேலதிகமாக எரிக்கப்படுகிறது. இதனால் பாலூட்டும் பெண்கள் கர்ப்பகாலத்தில் பெற்ற அதிகப்படியான எடையை இழந்து விரைவிலேயே பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். ஆனால், குழந்தைகளின் வாயில் ‘சிலிக்கன்' முலைக்காம்பைத் திணித்துவிட்டுப் போய்விடுபவர்கள் பருத்த உடம்பைக் கரைப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு, நடைப்பயிற்சி என்று படாதபாடு படவேண்டியிருக்கும். குழந்தையைச் சுமப்பதால் 20 மடங்குகளாக விரிந்து போய் இருக்கும் கருப்பையும், பாலூட்டும்போது உடலில் தூண்டப்படும் ஓக்சிரோசின் ஓமோனின் தயவால் வெகுசீக்கிரத்தில் வழமைக்குச் சுருங்குகிறது. இதன்போது, முன்னர் குழந்தைக்கு போசணைகளை வழங்கிய குருதிக்குழாய்களின் வாசல்களும் சேர்ந்து சுருங்கி விடுவதால் இரத்தப்போக்கும் நின்றுபோய் விடுகிறது. இதனால்தான் பாலூட்டாத தாய்மார்கள் செயற்கை ‘ஒக்சிரோசின்' ஓமோனை ஏற்றிக் கொள்கிறார்கள். இவை மாத்திரமல்ல; பெண்களை அச்சுறுத்தும் மார்புப் புற்றுநோய்கூட பாலூட்டும் முலைகளைப் பெரும்பாலும் அணுகுவதில்லை.


மனிதனுக்கு இன்று கிடைக்கக் கூடிய உணவு வகைகள் எல்லாமே அவற்றின் உற்பத்தி முதல் நுகர்வு வரை சூழலில் ஆற்றொணாத வடுக்களைப் பதிக்கக் கூடியவை. இவற்றில் தாய்ப்பால் மாத்திரமே விதிவிலக்கு. இதன் தண்ணீர் கலக்கவோ, சூடாக்கவோ, பொதிசெய்யவோ, ஏற்றுமதி_இறக்குமதியென்று நெடுந்தொலைவு எடுத்துச் செல்லவோ தேவையில்லாத இயல்புகள் எவையும் சாதாரணமானவையல்ல. மிகுந்த சூழல் நட்புடையவை. இதனை, புட்டிப்பாலின் முகத்திரையைச் சற்று விலக்கினாலே புரிந்து கொள்ள முடியும். புட்டிப்பால் கரைப்பதற்கு ஒரு குழந்தைக்கு நாளன்றுக்கு ஒரு இலீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு குழந்தை பருகும் புட்டிப்பாலைச் சூடுபடுத்துவதற்கு வருடமொன்றுக்கு ஆகக் குறைந்தது 73 கிலோ விறகு அல்லது அதற்கு நிகரான எரிபொருள் செலவாகிறது. பால்மா நிறுவனங்கள் மழைக்காடுகளை அழித்தே பசுக்களின் மேய்ச்சல் புல்வெளிகளை அமைக்கின்றன. மெக்சிக்கோவில் ஒரு கிலோ பால்மாவை உற்பத்தி செய்வதற்கு ஏறத்தாழ 12 சதுர மீட்டர் பரப்பளவு காடுகளை விலையாகக் கொடுக்கிறார்கள். இப்படி ஒருபுறம் வளங்களின் விரயமெனில், இன்னொருபுறம் உயிர்மச் சிதைவுக்கு ஆளாகாத பாற்புட்டிகள், முலைக்காம்புகள், பால்மாவைப் பொதி செய்யப் பயன்படும் பொலித்தீன்_பிளாஸ்ரிக் பைகள் எல்லாம் மண்ணில் மக்கிப் போகாமல் சூழலுக்குப் பெரும் தலைவலியைத் தந்து கொண்டிருக்கின்றன. 1987ஆம் ஆண்டு தரவுகளின்படி அந்த வருடத்தில் பாகிஸ்தானில் மட்டுமே 4.5 மில்லியன் பால்புட்டிகள் விற்பனையாகியுள்ளன.


சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தலையானதாகக் கருதப்படும் பூமி வெப்பம் அடைவதிலும் (Global Warming)) புட்டிப்பாலின் கைங்கரியம் இருக்கிறது. வெளுத்த பாலுக்கு இப்படி ஒரு கறுப்புமுகம் இருக்கிறது என்பது பலருக்கு நம்ப முடியாத ஒன்றாகவே தோன்றினாலும் சுடுகின்ற உண்மை இது. பூமியின் வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான பச்சை வீட்டு வாயுக்களில் கரியமில வாயுவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் மீதேன் வாயு உள்ளது. வளிமண்டலத்துள் சேரும் மீதேனின் கணிசமான பங்கு மாடு, ஆடுகளின் இரைப்பையில் இருந்தே உருவாகிறது. ஒரு பசு நாளன்றில் வெளியிடும் மீதேன் 100 தொடங்கி 200 இலீற்றர்கள். இதிலிருந்து உலகம் பூராவுமுள்ள பசுக்கள் ஏப்பம் விடும் மீதேனின் கனபரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடியும்.


தாய்ப்பாலூட்டலின் அவசியத்தை வலியுறுத்துவதற்கு இப்படி ஏராளமான காரணங்கள் இருந்தபோதும் அவை பொதுப் புத்தியை எட்டுவதில் பால்மா நிறுவனங்கள் பெரும் தடையாக இருக்கின்றன. ‘லக்ரோஜன்', ‘கவ் அன்கேற்', ‘எஸ்.எம்.ஏ.', ‘பார்லீஸ்', ‘அமுல் ஸ்பிறே' என்று சந்தையில் இருக்கும் பலதரப்பட்ட பால்மா வகைகளில் எதனாலும் தாய்ப்பாலை நெருங்க முடியாது. ஆனாலும் பால்மா உற்பத்தி நிறுவனங்களின், ‘பிறந்ததில் இருந்தே பருகுவதற்கேற்றது' ‘புதிய ரக புரதச் சத்து அறிமுகம்', ‘சிறந்த குழந்தைப் பால்', ‘இலகுவில் சமிபாடு' போன்ற இன்னோரன்ன மூளைச்சலவை விளம்பரங்கள் அவற்றைச் சந்தையில் தாய்ப்பாலின் உயரத்துக்குத் தூக்கி வைத்துள்ளன. இல்லாததுகளைச் சொல்லிப் பொதுப் புத்தியைத் திசை திருப்பும் இவைபோன்ற விளம்பரங்களைத் தடைசெய்யும் பொருட்டு 1981இல் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து சர்வதேச சந்தைப் படுத்தல் விதிமுறைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளன. ஆனால், பால்மா நிறுவனங்கள் இவற்றைப் பொருட்படுத்துவதாக இல்லை. பிரசவ மருத்துவமனைகளுக்கே சென்று இலவசமாக தங்கள் பால்மா மாதிரிகளைத் தாய்மாருக்கு விநியோகிக்கும் உத்தியைக்கூட கையாண்டு பிள்ளைபிடித்து வருகின்றன.


பசித்து அழுகின்ற குழந்தையின் வாய்க்கு தாய்ப்பாலைத் தருவதில் பல சமூக பொருளாதாரக் காரணிகளும் தடைகளாக உள்ளன. இதில் ‘சீம்பால்' (colostrum) குறித்து சமூகத்தில் கட்டப்பட்டிருக்கும் புனைவு முதலில் குறிப்பிடத்தக்கது. பிரசவத்தைத் தொடர்ந்து தாயில் முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் மஞ்சள் நிறமான தடித்த பாகுத் தன்மையுடைய திரவம் _ சீம்பால். இதன்நிறம் காரணமாகப் பெரும்பாலானோரால் தீங்கானது எனக் கருதப்பட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. உண்மையில், இம்மஞ்சள் நிறப்பால் பின்னர் சுரக்கப்படும் வெள்ளை நிறப்பாலைவிடப் பெறுமதியானது. நோய் எதிர்ப்புப் புரதங்களையும், நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய உயிருள்ள வெண்கலங்களையும் பெருவாரியாகக் கொண்டிருக்கும் சீம்பால், இயற்கை குழந்தைக்குத் தருகின்ற முதல் தடுப்பு மருந்து ஆகும். மேலும், குழந்தையின் குடலில் தேங்கியிருக்கும் கரிய கசடுகளையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்து ‘காட்டுப்பீச்சல்’ ஆக வெளியனுப்பும் பேதி மருந்தாகவும் சீம்பால் செயற்படுகின்றது. ஆனால், தனது குழந்தைகளுக்குச் சீம்பாலை மறுப்பதோடு மாத்திரம் அல்லாமல், வீட்டில் கால்நடைகள் ஈனும்போதும் அவற்றின் சீம்பாலைக் குட்டிகள் குடிக்கவிடாது கறந்து கூரையில் ஊற்றுகின்ற அதி மேதாவித்தனத்தைப் படித்த குடும்பங்களிலே கூடப் பார்க்க முடியும்.


பருவத்துக்கு முந்திப் பிறக்கும் குழந்தைகளினால் சரிவரப் பாலை உறிஞ்ச முடியாது என்றும், அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த தாயில் குறைந்தளவு பாலே சுரக்கப்படுவதால் குழந்தைக்குப் போதுமானது அல்ல என்றும் சமூகத்தில் கருத்துகள் நிலவுகின்றன. இதனால் உடனடியாகவே குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்ட ஆரம்பிக்கப்படுகிறது. பொதுவாக கர்ப்ப காலம் 38 தொடங்கி 42 வாரங்கள். குழந்தை 37 வாரங்களுக்கு முன்னால் பிறக்க நேரும்போது, அதன் விருத்தியின் கடைசிப் பருவத்தில் தொப்புள் கொடியூடாகக் கிடைக்க வேண்டிய கல்சியம், இரும்பு, இம்மியூனோ குளோபியூலின் போன்ற அத்தியாவசிய வேதிகள் கிடைக்காது போய்விடுகின்றன. ஆனால், இயற்கை தனது எந்தப் படைப்பையும் அம்போ என்று கைவிட்டு விடுவதில்லையே! கருவறையில் வழங்க முடியாது போனவற்றைத் தாய்ப்பாலினூடாகக் கொடுத்து அனுப்புகிறது. குழந்தை சில வினாடிகள் உறிஞ்சினாலும் வேண்டியனவற்றைப் பெறுவதற்கு ஏற்றவகையில், குறைந்த அளவு பாலிலேயே கூடிய நோயெதிர்ப்பு _ போசணைப் பொருள்களை நிரப்பி விடுகிறது. இதனால்தான், அதிதீவிர சிகிச்சையில் இருக்கும் குறைமாதக் குழந்தைக்குக் கூட அதன் தாயினது பாலைப் பருக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.


பொருளாதாரக் காரணங்களினால் நடுத்தர மற்றும் அடித்தட்டு சமூகத்தில் பாலூட்டும் காலங்களிலும் வேலைக்கு போகப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இத்தகைய பெண்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தேவைக்கு ஏற்பப் பருகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முலைக்காம்பில் வேம்பின் எண்ணெய் போன்ற கசப்புகளைத் தடவி குழந்தைகளின் பால்குடிக்கும் இயல்பூக்கம் வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்படுகிறது. முலையூட்டிகளில் வேறு எந்தத்தாய்க்கும் _ இளந்தைகளுக்கும் நேராத கொடுமை இது. கர்ப்ப காலத்தில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் பிரசவத்தின் பின்னர் போதிய தாய்ப்பால் சுரக்க முடியாமல் திண்டாடும் தாய்மாரும் குழந்தைகளும் அதிகம். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) வளர்முக நாடுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 12 மில்லியன் குழந்தைகள் வருடந்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பரிதாபமான தகவலை வெளியிட்டுள்ளது. இதில் பாதிப்பேர் சரிவரத் தாய்ப்பால் கிடைக்காததால் ஏற்படும் போசணைக் குறைகளினாலேயே மரணத்தைத் தழுவுகின்றனர்.


தாய்ப்பால் கிடைக்காமல் அல்லாடும் குழந்தைகளுக்கு உதவுவதற்கென மனிதத் தாய்ப்பால் வங்கிகள் (Human Milk Banks) மேற்கு நாடுகளில் உருவாகத் தொடங்கியுள்ளன. தங்களது குழந்தைக்குத் தேவையானதைவிட மேலதிகமான பால்சுரப்பைக் கொண்டுள்ள தாய்மார்களிடமிருந்து பால் தானமாகப் பெறப்படுகிறது. பால்தானம் வழங்கும் பெண்கள் புகை பிடிக்காதவர்களாக இருப்பதோடு, எய்ட்ஸ், மஞ்சட்காமாலை போன்ற தொற்று நோய்கள் எதுவும் இல்லாது ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. பாச்சர் முறையில் சுத்தம் செய்து சேமிக்கப்படும் பாலுக்கு ஆகும் செலவை சரிக்கட்டுவதற்காக ஒரு அவுன்ஸ் பால் 2.5 அமெரிக்க டொலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வசதி படைத்த மேற்குலகத்தினருக்கு சாத்தியமாகலாம். ஆனால் நமக்கு?


தாய்ப்பாலூட்டல் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையிலும் மேற்கு நாடுகள் இன்று அதிக கவனம் செலுத்துகின்றன. இதற்குப் பிரபலமான பெண்மணிகளின் உதவி பெறப்படுகிறது. வெகுமக்கள் செல்வாக்குப் பெற்ற ‘பொப்' இசைப்பாடகிகள், திரைநட்சத்திரங்கள் போன்ற ‘மணி கட்டிய பசுக்களின் மூலம் பாலூட்டலின் இன்றியமையாமை குறித்துச் சமூகத்துக்குச் செய்திகள் சொல்லப்படுகின்றன. இவர்களில் பலர் பொது அரங்குகளில் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுகிறார்கள். இவர்கள் தாய்ப்பாலூட்டும் படங்கள் ஊடகங்களில் விளம்பரங்களாகின்றன. அமெரிக்கத் துணை அதிபர் அல்கோரியின் மகள் கரீனா, தந்தையின் தேர்தல் பரப்புரையில் மட்டும் பயன்படவில்லை. நெஸ்லே பால்மா நிறுவனம் தனது தயாரிப்புகளை மூன்றாம் உலக நாடுகளில் சந்தைப்படுத்துவதை எதிர்க்கும் அல்கோரிக்கு ஆதரவாக, தாய்ப்பாலூட்டலை வற்புறுத்தும் கருத்துருவாக்கப் பெண்மணிகளில் ஒருவராகவும் உள்ளார். ஆனால், துர்அதிர்ஷ்டவசமாகத் தமிழ்ச் சூழலில் இத்தகைய போக்கு இல்லை. மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டும், “உலக தாய்ப்பாலூட்டும் வாரத்தைச் சடங்குகளாகக் கொண்டாடுவதுடன் அடங்கி விடுகிறது. ‘பான்ரா', ‘மிறிண்டா' விளம்பரங்களில் தோன்றி அவற்றைத் தினம் தினம் குடி என்று சொல்லும் நமது திரைத்தாரகைகள் மறந்தும் தாய்ப்பால் குறித்துப் பேச முன்வரமாட்டார்கள். மாறாக, அழகை மார்பகங்களுடன் இணைத்துப் பார்க்கும் திரைப்படங்களின் மூலம் ‘வரம்பின்றிப் பாலூட்டுவது அழகுக்கு ஊறு செய்யும்' என்ற கற்பிதத்தையே சமூகத்தில் கட்டமைத்து வருகிறார்கள்.


தாய்ப்பால் அருந்தக் கேட்பது குழந்தையின் உரிமை. அதை வேண்டிய மட்டும் பருகத் தருவது தாயின் கடமை. உரிமைகளையும், கடமைகளையும் மறுக்கின்ற, மறக்கின்ற சமூகம் நலமாக இருப்பதில்லை. தாய்ப்பால் விடயத்தில் இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.நூல் : ஏழாவது ஊழி (சுற்றுச் சூழல் கட்டுரைகள்)
வெளியீடு : சாளரம் சென்னை - தமிழ்நாடு

No comments:

Post a Comment