Thursday 4 June 2009

சரம் - 7 சலோ சலோ ஏக் தோ தீன்.....

சலோ சலோ ஏக் தோ தீன்..... ஜிந்தாபாத்!!


'இலங்கையில் பயங்கரவாதம் முடிந்து பிரச்சனையெல்லாம் தீர்ந்துவிட்டதென கொழும்பு அல்லோல கல்லோலப்படுகிறது. சிறிலங்காவும் சகல சிறிலங்கனும் நாடு திரும்பி இனி நிம்மதியாக வாழலாம் என அழைப்பும் விடுக்கும்.
இந்தச் சிறிலங்காவின் இறைமையைக் கட்டடிகாக்கும் இறைமையுள்ள தேசங்களெல்லாம் இனி நம்மவர்களைத் திருப்பி அனுப்பும் நடைமுறைகளைச் செய்யத்தானே போகின்றன!' எனவாக எழும் எண்ண அலையுடன் நான் கேட்கும் வினாக்களை யாருமே சட்டை செய்யாதது என்மீதே எனக்குக் கோபத்தை தந்தது.
'ஒரு வேளை என் மனுசி சொல்லுமாப்போல நான் லூசுத் தனமாகத்தான் சிந்திக்கிறேனோ?' எண்ணங்களின் ஊசலாட்டத்துடனனாக காலம் நகர்கிறது.
மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள்? என் வற்புறுத்தலால் சிலர் மட்டும் வாய்திறந்தனர்.

'விசா கிடைக்காத ஆட்களை சுவிசில் திருப்பி அனுப்புறானாம்!' ஒருவர் கூறினார்.
'இம்முறை ஐரோப்பா ஒன்றும் செய்யாது. இங்குதான் கன பேர் வரப்போகினம்.' கொஞ்சம் நிம்மதியுடன் எனது நண்பர்.
'எப்பிடியாவது நம்மட ஆட்களை இங்கு இழுத்துவிட்டிட வேண்டும்' என்று பரபரப்பாகினார் இன்னுமொரு நண்பர்.
'முதலில் இந்தியாவிலிருந்துதான் திருப்பி அனுப்புவார்கள். கொஞ்சக் காலத்திற்குப் பின்தான், மேற்குலகம் சிரத்தையெடுக்கும். இது இப்போது உடனடிப் பிரச்சனையல்ல. அங்கே அகதிமுகாங்களில் உள்ளவர்கள் பிரச்சனைதான் முதன்மைப் பிரச்சனை' என்றார் இன்னுமொரு நண்பர்.

1987 ஒப்பந்தம் வந்தபோது கொழும்பில் நீண்ட இடைவெளியின்பின் என் அண்ணாவை சந்தித்திருந்தேன். அவர் கையில் 'முப்பது நாட்களில் ஹிந்தி படிக்கலாம்' புத்தகத்தைக் கண்டு பிரமித்துப் போனேன். "ஏன்? இப்ப...." என நான் முழிக்க அவர் சிரித்தபடி சொன்னார் "இனி இது படிச்சிருந்தாத்தான் நிம்மதியாக வாழலாம். முன்னேற்பாடாக நடப்பது நல்லதுதானே!" என்றிருந்தார். அன்றைக்கு முழிச்ச எனது நிலை மறக்கமுடியாததொன்றுதான். அழியாததாக ஆழ்மனதில் பதிந்துவிட்ட இந்தக்காட்சி இன்று நினைவுத் திரையில் மீளவும் அசைகிறது.

'சலோ சலோ ஏக் தோ தீன்..... நஹி நஹி... அண்ணா இல்லாத வேளையிலும் நான் முணுமுணுக்கிறேன்.


- இதிகாச மூலவர்கள் நமட்டுச்சிரிப்புடன் முறுவலிக்க, சுக்கிரீவர் முடிசூடி இன்புற கொழுப்புவில் கொடியேற்றி விழாக்காணும் நிகழ்வுகளெல்லாம் சொல்லி வைத்தால்போல் ஒன்றாகவே நடக்க..... சொல்ல முடியாத துயரத்துடன் உலகெங்கும் நடைமுண்டங்களாக மனிதம்! -


அருந்தா
03.06.2009


00000000000

அன்று 2002 இல்

சமாதானம் ? இல்லை திருப்பி அனுப்பப்படுதல் !


இங்கு வயதானவர்கள் தமக்குப் பொருத்தமான தொழிலைத் தேட உதவும் பாடசாலையில் அகதிகளுக்கான அடிப்படை பிரஞ்சு மொழி கற்கும் வகுப்பு. இம்முறை அமைக்கப்பட்ட குழுவில் என்னவோ தெரியவில்லை அத்தனை பேரும் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கைத் தமிழர்கள். இந்தக் குழுவில் மொத்தம் 15 பேர்- இதில் புதியதாக வந்த ஒருவர் மட்டும்தான் ஆண், மற்றெல்லோரும் மணமான பெண்கள். சுதந்திரத்திற்குப் பஞ்சமிலை. தமிழ்தான் பேச்சு மொழியாக இருக்கும். இங்கு பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் கூட பல் தேசிய இனத்தவர்கள்தான்.

ரணில் - பிரபா போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய வேளை, இது இன்றைய பேசுபொருளாகியது.
- இனி ஒரு அகதி விண்ணப்பத்தையும் ஏற்க மாட்டார்கள்!
- பிரஜாவுரிமை எடுத்துள்ளவர்கள் தவிர்ந்த மற்றெல்லோரையும்(அகதி அந்தஸ்து பெற்றவர்கள் கூட) திருப்பி அனுப்பி விடுவார்களாம்!
- விரைவாக பிரஜாவுரிமைப் பெற்றுப் போடவேண்டும்!
- உம்முடைய பிள்ளைகள் இங்கேதானே பிறந்தவர்கள் ஏன் இன்னும் அவர்களுக்கேனும் பிரஜாவுரிமையைப் பெறாமல் இருக்கிறீர்?
- பிள்ளைகளின் கல்வியை நினைக்கத்தான் கவலை அங்கேபோய் என்ன செய்ய முடியும்?
- றேடியோக்களிலும் இதுதான் ஒரே பேச்சாக இருக்கு, சில நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பத் தொடங்கி விட்டாங்களாம்!
வன்னி மக்களது மனநிலைபற்றி யாருமே வாய்திறக்கவில்லை, அதற்கேது நேரம்? அவரவர் பிரச்சனைகள் அவரவரதுதானே!
ஆக இன்றைய பேசுபொருள்..... சமாதானம் ? இல்லை திருப்பி அனுப்பப்படுதல் !
ஒரு நீண்ட பெருமூச்சுடன் மௌனித்தேன்.


-பாரிஸ் - அருந்தா பெப்2002

No comments:

Post a Comment