Friday, 19 June 2009

சரம் - 8 "வாடகை அம்மா"

"ஆசைப்பட்ட எல்லாத்தையும் ...
காசிருந்தால் வாங்கலாம்.
அம்மாவை வாங்க முடியுமா?..
ம்ம்.."
  ஈனக் குரலில் கவிஞன்.

2009 தொடங்கியபோது, 21-ம் நூற்றாண்டு பதிவு செய்த கெஞ்சலுடன் அழிவுற்ற தமிழ் ஓலங்களின் பேரிரைச்சலுடன் காலம் கடந்ததே தெரியாது போய்விட்டது..
முடிந்தவை முடிந்ததுதானே! வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் பலரில் நாமும் அடங்கலாகி பாரீஸ் கோடையில் சாதாரண சட்டைகளுடன் நடமாடுகிறோம். நாளாந்தம் சுமார் 16 மணித்தியாலங்கள் பயணிக்கும் கோடைச் சூரியன் பாரீஸ் போன்ற கட்டிடக்காட்டில் தகிக்கும் தாக்கத்தை அனுபவித்தால்தான் தெரியும். இங்கு புலம் பெயர்ந்து வந்த புதிதில் இந்த அகண்ட பகலை நிசமாகக் காணுற்றதால் ஏற்பட்ட பிரமிப்பை என்னால் மறக்கவே முடியாது. இயந்திர வாழ்வுச் சுழற்சியில் போகப் போக வாழ்வில் இயைந்து போனவர்களாகி, இரசனை தொலைத்ததைக்கூட மறந்தாயிற்று.
மாற்றமொன்றுதானே நிரந்தரமானது! அதற்காக வாயால் உண்ணுவதையே தலை கீழாக மாற்றமுடியுமா? நினைப்பே சிரிப்பைப் பொத்திக் கொண்டு வருகிறது.
தொடரும் புலம்பெயர் வாழ்வில் வீட்டு உணவு முறையிலேயே வேறுபட்ட முத்தலைமுறை இடைவெளிகளின் கூட்டுக்குடிதனம். வேலைத்தளங்களில் உறவாடும் பல் தள வேறுபாடுடைய சிந்தனைகளின் சங்கமம். இவ்வாழ்வின் நீட்சி அனுபவக்குவிலாகி கவனிபாரற்றுக்கிடக்கிறது.

மாலைவேளை கடும் வெயிலைப் பொருட்படுத்தாதவாறு பணியில் ஈடுபடும்போது, வேர்க்க விறுவிறுக்க வருகிறார் எனது பணித்தோழன் சந்துரு. "என்ன?" எனது புருவம் உயர்ந்திருக்க வேண்டும்.
"நேற்றைக்கு எம்6 தொலைக்காட்சி பார்த்தனான். என்னாலே நம்மவே முடியல்ல... என்னடா இந்த வாழ்க்கை என்றாகிவிட்டது.!"
"ஆ.... " எனக்குள் பல்வேறு கேள்விகள்..... மனந்திறக்கும் பணித்தோழனின் உரையாடலைக் தடுமாற வைக்கக்கூடாது. என்னை நம்பி ஏதோ சொல்ல வருகிறார். கல்யாணமாகிய இளம் குடும்பத்தலைவன். சரளமாகப் பிரெஞ்சு மொழி பேசும் அடுத்த தலைமுறை வாலிபன். குடும்பமென்றால் ஆயிரம் இருக்கத்தானே செய்யும். என்னிடமிருந்து வார்த்தைகள் வராதது ஏமாற்றமானதோ என்னவோ....
"அண்ணே!!..."
முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன். "என்ன சொல்லுங்கோ"
"இதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை..... இந்தியாவிலே வெள்ளைக்காரர் போய்ப் பிள்ளை பெற்றெடுக்கிறார்கள்."
"இப்ப மலிவான பிரசவம் அங்கிருப்பதால் அப்படித்தானே செய்வார்கள். இதிலென்ன இருக்கு"
மனதுக்குள் அப்பாடா என்றிருக்கு குடும்பப் பிரச்சினையில்லை. முகத்தை ஏறிட்டுப்பார்க்கிறேன்.
"நேற்றைய தொலைக்காட்சியில் வெள்ளைக்காரருக்காக இந்தியக் குடும்ப்ப பெண்கள் பிள்ளை பெற்றுக் கொடுப்பதைக் காட்டினார்கள். அதுதான்.."
"ஆ அப்படியா..... " எனக்குள் ஆச்சரியம் அடுத்த தலைமுறையினராலேயே ஜீரணிக்க முடியாத பிரசவங்கள் வெளிப்படத் தொடங்கிவிட்டனபோலும்.
"அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்ற வெள்ளைக்கார குடும்பத்துக்காக இந்திய நடுத்தரக் குடும்பத் தலைவி (இரண்டு பிள்ளைகளின் தாய்) வயிற்றில் பிள்ளை சுமக்கிறார். அதாவது வாடகைத் தாய். இவர் பிளையைப் பெற்றுக் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு பிள்ளைகளுக்கான அமெரிக்க பிரஜா உரிமையுடனான கடவுச் சீட்டுகளுடன் அமெரிக்கா செல்கிறது அமெரிக்கர் குடும்பம். இதனால் வந்த வருமானத்துடன் வீட்டைக் கட்டி முடித்து பிள்ளைகளை(தனது கணவனுடன் உறவாடிப் பிறந்த பிள்ளைகள்) நல்ல பள்ளியில் படிப்பிக்கப் போகிறார் வாடகை தாயாகப் பணி புரியும் இந்த இந்திய அம்மா. இவர்களுடனான பேட்டி என விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா? எனக்குத் தூக்கமே வரவில்லை. என்ர மனுசி அரைவாசியிலேயே பார்க்காமல் போய்ப்படுத்துட்டா"
"ஆக நோகாமல் பெற்ற பிள்ளைகளுடன் வெள்ளையர் தம்பதி நாடு திரும்பிவிட்டது!"
எனது கிண்டலும் ஆச்சரியமின்மையும் கண்டு திகைப்புற்றவராகி, "என்ன அண்ணே இப்படி அலட்சியப்டுத்துறீங்க.... வாடகைக் கார், வாடகை வீடு, வாடகைத் தொலைபேசி, வாடகைப் பெண், என்றாகி வாடகை அம்மாவும் வந்தாயிற்று... இனி மனித வாழ்விலே என்னதான் இருக்கப் போகிறது?"
கேள்வி உறைக்க.... தலையைக் கவிழ்க்கிறேன்.
"..... காசிருந்தால் வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா.. ம்ம்.." பாவம் அப்பாவிக் கலைஞர்கள்.... என்னையும் அறியாது வெளிப்பட்ட பெருமூச்சுடன் விலகிச் செல்கிறேன்.

புத்தாயிரமாகிக் கடக்கும் உலகில் உலகமயமாக்கல் சுனாமி ஒரு முடிவைக் காணுற்றபின்தான் நிறைவுறுமாக்கும்!


-அனாமிகன் (பாரீஸ் யூன் 2009)

1 comment: