Saturday, 20 June 2009

சலனச் சரம் -1 'பசங்க'



சிறார் உலகில் சஞ்சரிக்கும் தமிழ்ச் சினிமா

'பசங்க'

புலம்பெயர்ந்தபின்பும் அடுத்த தலைமுறையால், தமிழ் உறவாடும் மொழியாகத் தொடர நம்மவர்களின் குறுந்திரை நெடுந்திரை கணிசமான பங்கை வகிக்கிறது என்பது மறுக்கப்படமுடியாதது. நூற்றாண்டு கண்டு புதுமைப் பொலிவுறும் சகல தொழில்நுட்பங்களையும் உள்வாங்கிய கலைப்படைப்பாக மிளிரும் மானிடச் சலனத்தெறிப்பாகிய இக்கலை தலைமுறைகள் தாண்டியும், மொழிகள் கடந்தும் வசீகர ஆளுமை செலுத்துவது தனிச் சிறப்புதான்.
இதனால் சொல்லப்படும் தகவல் மிக இலகுவாக எல்லைகள் தாண்டிப் பரவலாகிவிடுகின்றன. இன்று வீடுகள் தோறும் குறுந்திரையிடல் அரங்கமென்பது வந்துவிட்டன. உயர் அடையHD) தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளும் வந்துவிட்டன. இதற்கேற்ற உயர் அடையக் காண்பிகளும்(HDMI) வந்துவிட்டன. ஆனால் தமிழில் 'சிவாஜி' மட்டும்தான் இவ்வகைத் தொழில் நுட்பத்தில் வெளிவந்துள்ள உயர் அடைய குடுந்தட்டுக்களாக(HDMI disque) வெளிவந்துள்ளது. அடுத்த தலைமுறையினரின் கவனிப்புக்குள் செல்வதென்றால் இவ்வகைத் தொழில்நுட்ப மேம்பாடுகள் நிச்சயமாகக் கவனங்கொள்ளப்படல் அவசியம். ஒரு படைப்பை முழுமையாக இரசனை கொள்வதற்கு அப்படைப்பிற்கு அண்மையில் செல்வதற்கு இத் தொழில் நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன.
உலக நுகர்வுச் சந்தை திறந்துள்ள இக்காலகட்டத்தில் மிகவும் பழைய தரத்திலான படப்பிரதிகளை வாங்கி படம் பார்க்கும் போது எம்முடன் கூடவே வாழும் அடுத்தலை முறையினரின் பரிதாபகரமான இரங்கல் பார்வையுடனேயே படைப்புகளுக்குள் நுழைய நேரிடுகிறது. தரமான படத்தகடுகளைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது நுகர்விற்கு நம் தமிழர்கள் பின்தங்கி இருப்பதாகவே நான் அறுதியிடுகிறேன்.
இதனை நாம் வாழும் பல்லின மக்களுடன் நேர்மையாக ஒப்பிட்டே உணர்ந்து கொள்கிறேன். இங்கு நகைச்சுவைத் தொடராக மாதாந்த வெளியீடைச் செய்யும் ஆபிரிக்க படக் குறுந்தட்டு ஒன்று 10 ஈரோக்களுக்கு விற்கப்படுகிறது. குறைந்த விலையில் அதிகத் தட்டுகள் வாங்கும் போக்கு அதாவது நிறையக் கதைகள் இருப்பது (ஒரு தட்டில் மூன்று படம் அல்லது 10 ஈரோக்களுக்கு மூன்று குறுந்தகடுப் படங்கள்) பெரிதும் கவனங் கொள்ளப்படுகிறது. இதன் தாக்கத்தால்தானோ என்னமோ ஒரு விடுமுறை நாளில் நம்மவர் தொலைக்காட்சிகள் மூன்று நான்கு படங்களைப் போட்டி போட்டுக் காண்பிக்கின்றன. அதிக அளவில் குறுந்திரைத் தொடர்கள் வெளிவருகின்றன. இது வாழ்வோட்டத்திற்கான நாளாந்த இரசனைப் போக்கை சீரற்றதாக்கிவிடுகிறது. அறிவைப் பரவலாக்கி தேடலை விருத்தி செய்ய வேண்டிய தொழிநுட்பத்தையுடைய தொலைக்காட்சிகள் விபரணப்படங்கள், இயற்கை புவிசார் மானிடவியல் வளர்ச்சி, பல தரப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியல்(இதில் சிறார் உலகும் அடங்கும்), விஞ்ஞானபூர்வமான எதிர்காலங்கள் பற்றிய எதிர்வுகூறல் எனப் பலவாறான விடையங்களில் கால்பதியப்படாதவாறு பயணிக்கின்றன. ஆனால் எதிர்காலத்தில் தமிழ் உறவாடும் மொழியாகத் திகழ வேண்டுமாயின் இவ்வகை படைப்புகளும் வெளிப்படத்துகைகளும் தமிழில் நிகழ்த்தப்படல் அவசியம்.

இன்று தமிழ்ச்சினிமா என்று தலைநிமிர்ந்து சொல்லத் தக்கதான வெளியீடுகள் பட்டியலிடப்படுகின்றன. இதன் ஒரு படலமாக வேரும் விழுதுமாக பாலுமகேந்திரா - பாலா - அமீர் - சசிக்குமார் - பாண்டிராஜ் எனவான பாரம்பரியம் இந்தத் தமிழ்பேசும் சினிமா உலகில் முறையாகத் தடம் பதித்துள்ளது. இதில் கடைக்குட்டியாக இடம்பெற்றவரின் முதற்படமாக அமைந்த 'பசங்க' படத்தை அண்மையில் பார்த்ததும் கிறங்கிப்போனவர்களில் நானுமொருவனானேன். பாரீஸில் மலின விலையில் விற்கப்பட்ட படக் குறுந்தகடு(சுருதிலயம் கம்பனி 4 ஈரோக்கள்) மூலம் வீட்டிலிருந்த அனைவரும் ஆசுவாசமாகப் பார்த்த படமாகி குடும்பத்தவரை ஒருங்கிணைத்தது. இலகுவில் தமிழ்ப்படம் பார்க்க மாட்டாத எனது இளைய மகன் அழுதழுது பார்த்ததைக் கண்டு எனது துணைவி கலங்கிப்போனார்.

நல்லதைக் கண்டால் முதலில் பாராட்டவேண்டும். அதனால் மகிழ்வுறும் படைப்பாளியின் மகிழ்வில் நாமும் கலக்கலாம். பதிவர்களில் நான் தேடியபோது அனேமாக பதிவுகள் படக் கதையை சுருக்கமாக குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. கதை கேட்கும் சமூகத்தின் அவாவுக்கமைய அனைவரும் சமைந்தே போயுள்ளோம். கமெராவினால் கதை சொல்லல் என்பதும் படத்தொகுப்பு உத்தி மற்றும் பாத்திரங்களுடனான வெளிப்படுத்துகை, இசைக்கோர்வை, வெளிப்புறக்காட்சிகள், அழகியல் என சினிமாவை காணுறும் போது இரசனையை இலவாக வார்த்தைகளில் தட்டச்சிட முடியாது. சினிமா கட்புல செவிப்புல வழியால் மனதை வருடும் ஓர் அழகு மொழி.

புலம்பெயர்ந்து வாழும் முதற்தலைமுறையினராகிய நாம், 'பசங்க' படத்தைக் காணும்போது அதன் கதை படமாக்கிய வெளிப்புறக் காட்சிகளின் அழகியல் தாக்கத்துக்குள்ளாகிறோம். நாம் தவழ்ந்த ஊரின் அழ்மன நினைவுச் சபலங்கள் மீள்பாக்கமடைகின்றன. ஒரு பாட்டுக்காக உலகமெல்லாம் கமராவோடு சுழலும் இந்தச் சினிமாக் கூட்டத்தில் ஒரு ஊரை மட்டும் கதைக்களமாக்கி அதைக் குவியமிடும் கமெராக் காட்சிப்படுத்தலால் அசர வைப்பதென்பது எவ்வளவு பெரிய செயல். பசங்க நடமாடும் களமாக அமைந்த பள்ளி, குடும்பம், தெருக்கள், மைதானம் , ஊர், சாதாரணமாகச் சந்திக்கும் உற்றார் எனவான கதைக்களத்தில் 'பசங்க' தமிழில் பதியப்படும் முக்கிய படமாகிவிட்டது. மொத்தத்தில் 'பசங்க' திரைக் குழுமத்திற்கும் எமது பாராட்டுகள்.

இப்படத்தைத் தயாரித்த இயக்குனர் சசிகுமார் தனது படைப்பாள நேர்மையை மெளனமாக வெளிப்படுத்தியுள்ளார். கோடம்பாக்கச் சினிமாவில் தனக்கென இடம் பிடிப்பதென்பது சாதாரணமானதொன்றல்ல. அப்படி இடம் கிடைத்தால் அந்தப்பெயரைத் தக்கவைத்துக் கொண்டு பல்வேறு படையல்களை அள்ளிக் கொட்டுவதென்பதே வழமை. இந்தப் பெயராளர்களின் பேரின் பதாகைகளின் பின்னால் எத்னையோ இணை இயக்குனர்களின் படைப்புகள் படையலாகிப்போயிருக்கும். ஆனால் புதிய இயக்குனருக்கு வழிவிட்டு கைகொடுத்து ஊக்கமளித்த இயக்குனர் சசிகுமார் தரமான தயாரிப்பாளர் சசிக்குமாராகி படைப்புலக நேர்மையை கட்டியங்கூறியுள்ளார்.இதற்காகப் பாராட்டியேயாகவேண்டும்.

இப்படத்திற்கான மரியாதையாக தோரணம் பதிவிடும் முதற்பதிவாகிறது.
இதனை வித்தியாசமாகச் சொல்ல வேண்டுமென்பதற்காக பல் வேறு பதிவர்களின் தோட்டங்களில் பறித்த கருத்துப் பூக்களின் தொகுப்பாக்கி மஞ்சரியாக தோரணம் படைப்பாளிக்கு வழங்குகிறது. பறித்த கருத்துப் பூக்களுக்காக பதிவுத் தோட்டக்காரர்களுக்கு நட்புடன் நன்றி தெரிவிக்கிறது. இப்பதிவிடலூடாக மானசீகமாக தொடர்பு கொள்ளும் 'பசங்க' படக்குழுமத்துடன் இந்த மஞ்சரியைக் கையளித்து நட்புடன் கைகுலுக்கிறது தோரணம்.

புதிய சுற்றில் மண்மணம் கமிழ தமிழ்த் திரை உலகை உலகத்தரத்தில் நிமிரச் செய்யும் முயற்சியில் தொடரட்டும் தங்கள் முயற்சி!!
- நட்புடன் முகிலன்



0
இலவச டிவி தரும் அரசாங்கம் இப்படத்துக்கு இலவச டிக்கெட் தந்தாவது இப்படத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் வரிவிலக்கு அளிக்கவாவது பரிசீலிக்கலாம். குடும்பம் குடும்பமாக பார்த்து மக்கள் ஆராதிக்க வேண்டிய படமிது.

தமிழின் சிறந்த படங்களின் பட்டியலில் ’பசங்க’ளுக்கு கட்டாயம் ஒரு இடமுண்டு.
-யுவகிருஷ்ணா
http://www.luckylookonline.com/2009/05/blog-post_09.html

0
சரி படம் எப்படி இருந்தது னு தான கேக்கறீங்க?? படம் கலக்கல்.. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதாம இருப்பது அந்த படத்துக்கு நான் செய்யும் மரியாதை.. இயக்குனர் புதுவரவாம்.. நல்வரவு..
மொத்தத்தில் பசங்க – புள்ள குட்டியோட பாருங்க.
-Suttapalam's Weblog
http://suttapalam.wordpress.com/2009/05/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

0
என் அப்பா, அம்மா கூட நாங்க சின்ன வயசுல இருக்கும் போது இப்படி நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. அன்புக்கரசு அழுத மாதிரி நான் கூட அழுதிருக்கேன். அப்பறம் நான் பெருசாக பெருசாக சண்டை ஓரளவு குறைந்தது. இப்பக்கூட எப்பவாது சண்டைப் போட்டா ”ஆமாம் புது மணத் தம்பதிகள். சண்டை போடறீங்க. நிறுத்துங்க” அப்படினு நான் கிண்டல் பண்றதுல ரெண்டு பேரும் சண்டையை நிறுத்திடுவாங்க.
சும்மா கடைசியா ஒரு பஞ்ச் : “பசங்க” - பசங்களுக்கான படமல்ல. பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக
-வெட்டிப்பயல்
http://www.vettipayal.com/2009/06/blog-post_14.html

0
குழந்தைகளை வைத்து நம்மை போன்ற பெரியவர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை.
புதிய ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு அருமை.. கேமரா பசங்களோடே ஓடுகிறது, நடக்கிறது, நிற்கிறது, மூச்சிரைக்கிறைது, சைக்கிள் ஓட்டுகிறது ஒரே அட்டகாசம் செய்திருக்கிறார். பலே ப்ரேம்குமார்.
-கேபிள் சங்கர்
http://cablesankar.blogspot.com/2009/05/blog-post.html

0
"அக்க புக்கா அமரா வள்ளி பாம்பே போனா சிக்கா" .. "ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு ..." போன்ற சிறு வயது மந்திரங்களோடு துவங்குகிறது படம். ஒவ்வொரு காட்சியும் "அட நல்லாருக்கே"...என்றவாறே நகர்கிறது ...
எல்லா தலைமுறை ரசிகர்களும் ரசித்து சிரிக்க வைக்கும் படம். சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது. சிறுவர் உலகத்திற்கும், பெரியவர்கள் உலகத்திற்குமான புரிந்துகொள்ளப் படாத இடைவெளி இந்தப் படத்தில் வெளிச்சத்திற்கு வருகிறது.
”நாம சொல்றதை புரிஞ்சுக்குறதுக்கும், ஏத்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும், அந்த மனசு உங்ககிட்ட இருக்கு”
”ஒருத்தருக்கு ஒண்ணுக்கு வந்தா ஏண்டா எல்லாத்துக்கும் ஒண்ணுக்கு வந்துருது?”
"நம்ம குழந்தைகளுக்கு நாமதான சார் ரோல் மாடல்" ..
ஒரு முறை கூட நெளியாமல் பார்க்க முடிந்த இன்னொரு நல்ல சினிமா.
- புதிய இயக்குனர் எம்.பாண்டியராஜன் மற்றும் அவரது குழுவினருக்கு முதலில் பாராட்டுகளை தெரிவிப்போம்.-
-சிந்தனிடமிருந்து வலைவிடு தூது
http://www.sindhan.info/2009/06/blog-post.html

0
சுள்ளான்களின் சூடுபறக்கும் ஈகோ யுத்தமே ‘பசங்க’. இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் முதலில் ஒரு பூங்கொத்து. வெற்றிக்கான போரட்டமாக மட்டுமே இல்லாமல், மரியாதையான வெற்றிக்குப் போராடியிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவிற்கு நல்வரவு. குழந்தைகள் பட்டாளத்தை கட்டி மேய்த்ததோடு கௌரவமான வெற்றியையும் தேடிக்கொண்டிருக்கிறார். கதையின் களமும், பாத்திரங்களின் தேர்வும் இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது. வாழைப்பழத்தில் ஊசி இறங்குவது போல, பெற்றவர்கள் பிள்ளைகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று ‘பசங்க’ளை வைத்து மறைமுக பாடம் நடத்திய உத்திக்கு பெரிய சபாஷ்.
-தெனாலி
http://www.thenaali.com/thenaali.aspx?A=126


0
அவன் பிச்சைக்காரனா இருக்கானேன்னு நீ பாக்குற!

அவன் திருடனாகிடக் கூடாதுன்னு நான் பாக்குறேன்!

இது தப்பா???

இவ்வளவு சீரியசான டயலாக்கை கையாண்டிருந்த விதம்தான் ‘பசங்க’ படத்தை பார்க்க தூண்டியது முதலில். அதிலும் டயலாக்கை கதாநாயகி சொன்னவுடன் பிண்ணனியில் ‘தெண்பாண்டிச் சீமையிலே’ பாட்டுக்கான பிண்ணனி இசை வேண்டுமென்றே போடும் போது ஏற்படுத்துகின்ற சிரிப்பு கொஞ்ச நஞ்சமல்ல!
முதலில் சசிக்குமாரைத்தான் பாராட்ட வேண்டும். சுப்பிரமணியபுரம் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், அடுத்து உடனே படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதும், அதுவும் முழுக்க முழுக்க சிறுவர்களை மட்டும் மையமாகக் கொண்டு, எந்த ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் ஒரு படத்தை தயாரித்த தைரியத்தையும் பாராட்டவேண்டும். படத்தின் இயக்குநர் முதல் நடிகர்கள் வரை யாரையும் கேள்விப்பட்டது கூட கிடையாது! எனக்கு இந்த படத்தில் தெரிந்த இரண்டே இரண்டு பெயர்கள் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தயாரிப்பாளர் சசிக்குமார் மட்டுமே.
என்னளவில் இது மிகச் சிறந்த மட்டுமின்றி, வித்தியாசமான படமாகவும் பார்க்கிறேன்,காரணம், காதலை மெயின் ட்ராக்கில் விட்டு, அதைச்சுற்றி, நகைச்சுவையையும், ஆக்‌ஷனையும், மசாலாவையும் பின்னும் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு மத்தியில் சிறுவர்களை பிரதானப்படுத்தியும், காதலை சைட் ட்ராக்கில் மட்டும் ஓடவிட்டு, அதையே நகைச்சுவையாகவும் கையாண்டிருக்கும் விதமும், மிடில் கிளாஸ் தகப்பனின் பாசத்தை வெளிப்பட்டிருக்கும் விதமும், எல்லவற்றிற்கும் மேலாக படத்தில் எல்லாருமே நடித்திருப்பதும் இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம்.
-தேடல்
http://nareshin.wordpress.com/2009/05/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/

0
பசங்க படம் என்று மேம்போக்காக செயல்படாமல் துடைத்து வைத்தது போன்ற பளிச் காட்சியமைப்புகள் (ஜூலை, அக்டோபர், ஏப்ரல்... என வெயில், மழைக்காலம் முதலிய பருவகாலங்களையும், அதன் நிறச்சேர்க்கையும்) , அற்புதமான கேமிரா கோணங்கள், ஸ்லோ மோஷன் காட்சிகள், நறுக்கான படத்தொகுப்பு, ஜேம்ஸ் வசந்தனின் இசை மற்றும் ரொம்ப நாளுக்கு கழித்து பாலமுரளிகிருஷ்ணாவை பாடவைத்திருப்பது என்று டெக்னிக்கலாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறனர் இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழு.
ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் வந்துள்ள உண்மையான பசங்க படம்.. தமிழில் ராமநாராயனன் இயக்கத்தில் பாம்பு, மாடு, யானைகளோடு ஷாம்லி நடித்த படங்களை தவிர்த்துவிட்டு கடைசியாக எப்பொழுது ஒரு mainstream குழந்தைகள் படம் வந்தது என்று யோசித்தால் நினைவுக்கு வருவது மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ தான். அதில் கூட குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய நடவடிக்கைளோடு கொஞ்சம் கூடுதலாகவே கடுப்படித்து இருந்தனர். சமீபத்தில் எந்த வித முகாந்திரமும் அல்லது பரபரப்பும் இல்லாமல் இறங்கிய ‘பசங்க’ தமிழின் நல்ல பசங்க திரைப்படத்தில் ஒன்றாக காலத்துக்கும் பெயர் பெற்று நிற்கும்.
படம் முழுக்க எளிமையும், நல்ல செய்திகளும் பரவிக்கிடக்கின்றன. ஆனால் அவை ‘போதனை’ என்கிற ரீதியில் சொல்லப்படாமல், வெகு இயல்பாக அந்த செய்திகள் படம் பார்ப்பவர்களை எட்டியிருப்பது அழகு. ஜீவாவின் பெற்றோர்களின் சண்டை எப்படி குழந்தைகளின் படிப்பை, பள்ளி வாழ்க்கையை பாதிக்கிறது என்பதையும், குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்கள் கெட்ட பழக்க பழக்கங்களை விடவேண்டும் என்பதை ஆசிரியர் சிகரட்டை விடுவது என அழகான செய்திகள் நம் மனதை தொடுகிறது.
‘பசங்க’ படம் எல்லாரும் பார்ப்பது தமிழ் சினிமாவை நல்ல பாதைக்கு இட்டுச்செல்வதை வழிவகுக்கும். சுப்ரமணியபுரத்துக்கு அப்புறம் மிக துணிச்சலாக தயாரித்த இயக்குநர் சசிக்குமாருக்கும், வித்தியாசமாக யோசித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும் பெரிய பாராட்டுக்கள். இந்த படத்தை பார்த்தப்புறம் பேசாமல் மீண்டும் ஏதாவது சிறிய ஊருக்கு போய் செட்டில் ஆகி, மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம் என்ற யோசனை தீவிரமாக வருகிறது.
-படித்ததில் பிடித்தது
http://valaiyulagam.blogspot.com/2009/06/blog-post.html

0
குழந்தைகளைப் பெரியவர்களைப் போல் நடிக்க வைப்பதே ஒரு வன்கொடுமை என்றால், அவர்களைத் தெய்வங்களாக நடிக்க வைப்பது அதைவிடக் கொடுமை.
இப்படியெல்லாம் குழந்தைகளை வதைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா சூழலின் பின்னணியில்தான் ’பசங்க’ என்ற குழந்தைகள் படம் வெளியாகியுள்ளது.
பசங்க: தமிழில் குழந்தைகள் சினிமாவுக்கான முதல் முயற்சி
-Maraicoir
http://www.maraicoir.com/2009/06/blog-post_6684.html

0
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காக வந்துள்ள ஒரே படம் என்று அஞ்சலியை பலகாலமாக வேறுவழியின்றிக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அஞ்சலி குழந்தைகளுக்கான படமா என்ன?

இனி நாமும் துண்டை, கௌரவமாகத் தோளில் போட்டுக் கொள்ளலாம். பசங்க வந்துவிட்டது. குழந்தைகளுக்கான முதல் தமிழ் சினிமா வந்தேவிட்டது. இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரைப் பார்த்து கேட்கத் தோன்றும் கேள்வி, இத்தனை நாளா எங்க சார் இருந்தீங்க?
கோடை விடுமுறை என்பதால் படத்தில் நடித்த பசங்க, தியேட்டர் தியேட்டராக சென்று மக்களின் வரவேற்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம், நம் வீட்டுப் பசங்களோடு தியேட்டருக்குச் சென்று அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம் இது.
இயக்குநருடன் போனில் பேசும் வாய்ப்பு அமைந்தது. ‘அடுத்த படத்துல நீங்களும் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள்ள சிக்கிக்காதீங்க’ என்றேன். ‘கண்டிப்பாக மாட்டேன்’ என்றார் அழுத்தமாக.
-அகம் - புறம் - அந்தப்புரம்
http://www.writermugil.com/?tag=%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95

0
தமிழ் நடிகனுவவெல்லாம் உண்மையில் சின்னப்பசங்களை விடக் கேவலமா நடிக்கிறானுவன்னு நக்கலடிக்கும் படம் தான் பசங்க…

காசு கொடுத்து படமியக்கச் சொன்ன தயாரிப்பாளரின் படத்தையே நக்கலடித்த இயக்குனரின் அசாத்திய திறமைக்கு ஒரு சொட்டு.

ஒளிப்பதிவு, பாடல்காட்சி என்றெல்லாம் பார்க்காமல் படு ஜாலியாக பார்த்து ரசிக்கக்கூடிய படம் தான் பசங்க. இது அழகியைப் போன்று கடந்து போன மாணவ வாழ்க்கையை சொல்லவில்லை. இது வித்தியாசமான ஒன்று.
-அனாதி என்ற குடிகாரன்
http://velichathil.wordpress.com/2009/05/22/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/

0
முதல் ரேங்க் வாங்கி கற்றுக்கொள்ளாததை கடைசி ரேங்க் வாங்கி கற்றுக்கொண்டேன், வாழ்க்கையை அதன் போக்கை எல்லாவற்றையும் அந்த கடைசி பத்து ரேங்க் மட்டுமே கற்றுக்கொடுத்தது.

என்னைப்பொறுத்தவரை நான் படிப்பில் முதல்பத்து இடத்திலும் கடைசி பத்து இடத்திலும் இருந்து இருக்கிறேன், கண்டிப்பாக முதல் பத்து இடம் என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே, வெறும் உலகம் தெரியாதவனாக உலகத்தை நடத்தும் மிகப்பெரிய கூடத்தில் முறையை புரியாமல் இருக்க மட்டுமே லாயக்கு, கடைசி பத்து என்பது உலகத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, எப்போதும் ஒரு வித போட்டியும், தயாரிப்பும் தேவைப்படும் இடங்கள். உன்னை எப்போதும் ஒரு விதமான தகுதிக்கு தயார் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் அந்த இடத்தில் அதனால் நீ அடையும்பயன் பின்னாளில் உனக்கு தெரியும்.

தமிழ் வழியில் படித்த அனைவருக்கும் பசங்க படத்தை பார்த்தவுடன் அவர்கள் பள்ளி நியாபகம் வருவது தவிர்க்க முடியாதது
-விளைச்சல்
http://dhans4all.blogspot.com/2009/05/blog-post_08.html

0
பாருங்கள்..எதார்த்தம்..எதார்த்தம்னு..ரொம்ப பார்த்தாச்சு.எதார்த்தமே இல்லாமல்....அட உண்மையிலயே இது எதார்த்தமான படங்க..பசங்க..படம் பார்க்கும் அந்த இரண்டரை மணி நேரம், கிட்டத்தட்ட நானும்..என்னைபோல் மற்ற ரசிகர்களும்..குழந்தைகளாக மாறிப்போனோம்..இன்னும் அந்த மனநிலை மாறாமல் இருக்கிறேன்...அண்ணே பாண்டிராஜ்னே ..கலக்கிட்டீங்க..கை குடுங்க.பெரிய பெரிய பாராட்டெல்லாம்..பெரிய ஆளுங்க உங்களுக்கு சொல்வாங்க..நான் சராசரி தமிழ் சினிமா ரசிகன்..உங்களுக்கே தெரியும்..உண்மையில் பாராட்டுபவர்கள் எதுவும் சொல்லாமல் தான் பாராட்டுவார்கள்.மீண்டும் ஒரு முறை கை குடுங்க...அண்ணே சசிகுமார் மேல..நம்பிக்கை அதிகம் இருந்துச்சு..காப்பாத்திட்டீங்க ..குறிப்பா ஒளிப்பதிவாளர் பிரேம் குமார பாராட்டாம மனசு கேக்காது...அந்த மழை பாட்டுல உண்மயேலயே நனஞ்சேங்க..
சபாஷ்..நண்பர்களே..உங்கள மாதிரி படைப்பாளிகள ஆதரிக்க நாங்க இருக்கோம்..
மண்ணையும் ,மனிதர்களையும்...பதிவு செய்யுங்கள்...தலகளையும்..தளபதிகளையும் உணர வையுங்கள்,
-பதிவு
http://theepandham.blogspot.com/2009/05/blog-post_05.html

0
இப்படிப்பட்ட ஒரு படத்தை தயாரித்ததற்காக - முதலில் சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே கதை நாயகர்களாக கொண்டு படம் எதுவும் சமீபத்தில் வந்ததாக நினைவில்லை. பொதுவாக தமிழ் சினிமாவின் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுபவர்களாக, இயல்பு நிலைக்கு மாறாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். அதை உடைத்து, முதல் முறையாக குழந்தைகளின் அக உலகுக்கு வெகு நெருக்கத்தில் இருக்கும் ஒரு படமாக இருக்கிறது.."பசங்க..". படம் பார்க்கும் மக்களுக்கு மீண்டும் தங்கள் பள்ளிப் பிராயத்து நினைவுகளை கண்டிப்பாக இந்தப் படம் மீட்டு தரும்.
-பொன்னியின் செல்வன்
http://ponniyinselvan-mkp.blogspot.com/2009_05_01_archive.html

1 comment:

  1. நான் சிறுவனாக இருந்தபோது எனது அம்மா அடிக்கொரு தடவை சொல்லும் முதுமொழி "யோசனை மஞ்சுடு வாடிய வண்டி சகட தப்பட" இது தமிழல்ல என எனக்குத்தெரிந்திருந்தது. ஆனால் இந்தச் சொல்லாடல் இப்படத்தில் வந்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
    நான் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். தீவுப்பகுதிக் கிராமமான கரம்பனில் வாழ்வைத் தொடங்கியவன்.
    நாட்டார் வழக்கியல் தொடர்பான பல சொல்லாடல்களை இப்படம் கவனமெடுத்துள்ளது. பாராட்டப்படவேண்டியதுதான்!
    -அருந்தா

    ReplyDelete