Friday, 12 June 2009

கதைச் சரம் -1 புத்தியுள்ள கொக்கு


அறிவியல் புனைகதை - சிறார் இலக்கியம்

முற்குறிப்பு:
புவிசார் வாழவில் சமைந்து போன மானிட இருப்பின் சொந்தக்காரர்தானே நாம். இந்த வாழ்வில் மீட்டுப்பார்க்கும் பல சுவையான சந்திப்புகள் தரும் ஆற்றுப்படுத்தலை வர்ணிக்க வார்த்தைகள்தான் ஏது!
கனெக்ஸ் என பலராலும் உரிமையுடன் அழைக்கப்படும் மகாஜனாக் கல்லூரி முன்னாள் அதிபர் ச. பொ. கனசபாபதி அவர்களின் சமூகப் பிரக்ஞையும், தான் காணும் சமூகத்தின தேவையை அறிவுபூர்வமாக அலசிப் பக்குவமாக வழிகாட்டும் பாங்கும், தன்னிடம் கிடக்கும் விஞ்ஞான அறிவை கல்லூரிச் சுவர்களைத் தாண்டியவாறு சொல்லிக்கொடுக்க முனையும் பேரவாவாலும் என்னைப் பெரிதும் கவர்ந்தவர். இதனால்தானோ என்னவோ எத்தனையோ அதிபர்களைக் காணுற்ற சமூகத்தில் ஓய்வுபெற்ற் பின்னரும் 'அதிபர்' என உரிமையுடன் சுட்டப்படுகிறார். புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர் புலம்பெயர் புதிய சூழலில் நம்மவர்கள் தமது வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள தகுநல் ஆலோசகராகவும், ஆசானாகவும் இருக்கிறார். கல்லூரியை விட்டு வெளியே வந்தபின்னர் சமூகத்தின அறிவுத் தேடலுக்கான பதிவுகளாக இவரது ஆக்கங்களை நோக்கலாம்.

எமது தமிழ் இலக்கியத்தில், அறிவியல் புனைவுகள் மற்றும் எதிர்காலக் எதிர்வுப் புனைவுகள் என்பன விருத்தியுறவேண்டும். உலகெங்கும் மொழிகடந்து - கண்டங்கடந்து விரவி வாழும் வாய்ப்புக் கிடைத்துள்ள ஈழத் தமிழனரின் எதிர்காலச் சந்ததியினரால் புதிய இலக்கியங்கள் வெளிப்படுமென்று நம்புபவர்களில் நானும் ஒருவன். இவற்றுக்கு தொடக்கத் தூண்டுதலாக அதிபரின் முயற்சிகள் அமையட்டும்!!


புத்தியுள்ள கொக்கு

-ச. பொ. கனகசபாபதி

அருச்சுனனும் ஆனந்தனும் சகோதரர்கள். வீட்டின் அருகேயுள்ள ஆரம்பப்பாடசாலையில் கல்வி கற்கிறார்கள். அவர்கள் வீடு பெரிய ஏரியொன்றின் கரைக்கு அண்மையில் உள்ளது. ஏரியில் வெள்ளை நிற அன்னங்கள் நீந்தகி கொண்டிருப்பதைப் பார்க்க மிக அழகாக இருக்கும். அவை பொன்னிறமான தமது கால்களைத் துக்கி வைத்து நிலத்திலே அழகாக நடப்பதை என்றுமே பார்த்துக் கொண்டிருக்கலாம். தமிழ்ப் புலவர்கள் அன்னத்தின் நடையினைப் பெண்கள் நடப்பதற்கு ஒப்பிடுவார்கள்.

அருச்சுனனும் ஆனந்தனும் பாடசாலை முடிந்ததும் வீட்டில் சிறது ஓய்வெடுத்த பின்னர் ஏரியின் கரையிலே விளையாடுவார்கள். அவர்களுக்கு அன்னங்களின் மேல் கொள்ளை ஆசை. ஆகவே ஒவ்வொரு நாளும் விளையாடு முன்னர் பாண் அல்லது விசுக்கோத்தினை வீட்டிலிருந்து கொண்டுவந்து ஏரிக் கரையிலே போடுவார்கள். அன்னங்கள் யாவும் ஓடி வந்து போட்டி போட்டு கொத்திச் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தப்படுவார்கள்.

அந்த ஏரியின் கரை ஓரமாகக் கொக்கு ஒன்று எப்பொழுதும் நிற்பதைக் காணலாம். நீண்ட கழுத்தின் முடிவிலே உள்ள சிறிய தலையிலே நீளமான கூரிய சொண்டு அதற்கு உண்டு. அச் சொண்டினைக் கீழே சாய்த்த வண்ணம் கருமை நிறமுடைய நீண்ட கால்களில் ஒன்றினை ஒன்றின் மேல் வைத்தபடி கொக்கு நிற்கும். அதனை முனிவர் ஒருவர் தவம் செய்வது போல உள்ளது என அவர்களது அம்மா கூறுவார்.

ஆரம்பத்தில் பாண் துண்டினைக் கொக்கு இருக்கும் பக்கமாக எறிவார். ஆனால் அது அதனைத் திரும்பியும் பார்ப்பதில்லை. எனவெ அவர் உணவு பொடுவதை விட்டுவிட்டார். ஆனால் சிறிது நாள்களின்பின்னர் இவர்களைக் கண்டதும் கொக்க நீரினை விட்டு வெளியே வந்து நிற்பதைக் காண முடிந்தது. கொக்கு அவர்கள் அன்னங்களுக்கு உணவு போடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கும். அன்று பாணின் ஒரு சிறு துண்டினைக் கிள்ளி கொக்கினை நோக்கி எறிந்தார். கொக்கு உடனே உணவினைக் கொத்தியது. ஆனால் பாணை விழுங்காமல் அவ்விடத்தைவிட்டுப் பறந்து சென்றது. அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் கொக்கு அப்படியேதான் உணவுடன் பறந்து சென்றது. ஆனந்தனுக்கும் அருச்சுனனுக்கும் அது பெரிய ஆச்சரியமாக இருந்தது. கொக்கு உணவினை உண்ணாமல் ஏன் உணவுடன் பறந்து செல்கிறது? என அவர்கள் சிந்த்தித்தார்கள். "அதற்கு குஞ்சுகள் இருக்கலாம். குங்சுகளுக்கு உணவூட்டுவதற்காகவே பாணினை எடுத்துச் சென்றிருக்கிறது" என அருச்சுனன் கூறினார். இது பற்றி அன்று இருவரும் தமது தாயாரிடம் கூறினார்கள். "கொக்கு மீனையே உண்ணும். ஆகவே குஞ்சுகளுக்கு பாணினை ஊட்டியிருக்க முடியாது, என்ன செய்கிறது என நீங்களே கண்டு பிடியுங்களேன்" என்றார். அன்று முழுவதும் இருவரும் யோசித்து ஒர தீர்மானத்திற்கு வந்தனர். "நாம் செய்யப் போவதை அம்மாவிடம் கூற வேண்டாம். வெற்றி பெற்றால் கூறுவோம்" என்றார் அருச்சுனன்.

மறுநாள் மாலை ஏற்கனவே தீர்மானித்தபடி அருச்சுனன் பாண் கொண்டு ஏரிக் கரைக்குச் சென்றார். ஆனந்தன் மறுபக்கமாக கொக்கு பற்ந்த திசையில் சென்று அங்கே ஒரு இடத்தில் நின்றார். அருச்சுனன் வழமைபோன்று அன்னப் பட்சிகளுக்குப் பாண் போட்டார். கொக்கு சிறிது சிறிதாக அவர் நிற்கும் இடம் நோக்கி வந்தது. அருச்சனன் அதனை நோக்கி ஒரு துண்டு பாணினை எறிந்தார். கொக்கு வேகமாக அப்பாண் துண்டினைக் கெளவிய பின் வழமை போன்று பறந்து சென்றது.அருச்சுனன் சிறிது நேரம் அங்கு நின்று அன்னப் பறவைகளைப் பார்த்த பின்னர், என்னதான் நடத்தது என்பதை அறியும் பொருட்டு ஆனந்தன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றார். அப்போது ஆனந்தன் சந்தோசமாக ஓடிவந்தார். "என்ன நடந்தது என்று தெரியுமா அண்ணா?" என்ற வினாவுடன் ஆரம்பித்து நடந்ததைக் கூறினார். பாணினைக் கெளவிக் கொண்டு வந்த கொக்கு அதனை அப்படியே நீரில் போட்டது. நீரிலே போட்டதும் பாணினை உண்ண வந்த மீன்களைச் சுலபமாகப் பிடித்து உண்டது. "எப்படி இருக்கிறது பார்த்தீர்களா கொக்கினது மூளை, புத்தியுள்ள கொக்கு" என்றார் ஆனந்தன். "வாருங்கள் அம்மாவிடம் கூறுவோம்" என்றார் அருச்சுனன். இருவரும் "வெற்றி வெற்றி" என ஆரவாரம் செய்தபடி ஓடினார்கள். வீட்டிலே அம்மாவிடம் நடந்ததைக் கூறி "எப்படி எமது கண்டு பிடிப்பு?" என்றார் ஆனந்தன். சந்தோசமாய் "இயூறேக்கா" என்றார் அம்மா. "அது என்னம்மா புதுச் சொல், இயூறேக்கா என்றால் என்ன அம்மா?" என்றார் அருச்சுனன். இயூறேக்கா என்றால் கண்டுபிடித்துவிட்டேன் என்று அர்த்தம். இப்பிடித்தான் ஆர்க்கமீடிஸ் எனும் விஞ்ஞானி குளிக்கும்போது ஆர்க்கமீடிஸ் தத்துவத்தைக் கண்டு பிடித்தாராம். உடனே நிர்வாணமாக "இயூறேக்காறு இயூறேக்கா" எனக் கூவியபடி தெருவிலே ஓடினாராம்" என்றார் அம்மா. ஆனந்தன் சிரித்தபடியே, "அது என்னம்மா ஆர்க்கமீடிஸ் தத்துவம்?" என்றார். "அதையும்தான் கண்டு பிடியுங்களேன்" என்றார் அம்மா. "அம்மா, நல்ல அம்மா" என இரு பிள்ளைகளும் அம்மாவைக் கட்டிப் பிடித்தனர்.


நன்றி:
மாறன் மணிக்கதைகள்-2 (தெல்லிப்பழை கலை இலக்கியக்கள வெளியீடு -இலங்கை)

***********

No comments:

Post a Comment