Tuesday 14 July 2009

கதைச் சரம் - 4 பட்டணம் பார்க்கப் போன நாய்!


செவிவழிக் கதை - 2

பட்டணம் பார்க்கப் போன நாய்!


'கெட்டும் பட்டணம் போ' இது நம்மவர் மத்தியில் புளங்கிய ஒரு முதுமொழி. அப்படியிருக்க நாம் வளர்த்த நாய்களுக்கும் இது இல்லாதிருக்குமா? இந்தக் கனவுடன் வாழ்ந்த நம்மூர் நாயின் கதைதான் இது.

முன்னொரு காலத்தில் ஒருநாள். அப்போதுதான் பட்டிதொட்டிக் கிராமங்களுக்குமையங்களாக நகரங்கள் புதுமைப் பொலிவுடன் தோன்றிக் கொண்டிருந்தன. என்றென்றும் திருவிழாக் கோலமாகக் காட்சிதரும் இந்நகரங்கள்கிராமவாசிகளின் புதிய ஒன்றுகூடல் மையங்களாகிக் கொண்டிருந்த காலமது. இது விரிவாகி நகரங்கள், மாநகரங்கள், பிரமாண்ட நகரங்கள் எனவாகவும்உருமாறிக் கொள்ளும் காலமது. அங்கே பல பேரூந்துகள் தரிக்கும் விசாலமானமையங்கள், பெரிய கடைத் தெருக்கள், புகையிரத நிலையங்கள், அழகானசினிமாக் கொட்டைகைகள், நிறைய வாகனங்கள், பெரிய உணவகங்கள், பிரமிக்கவைக்கும் கடடிடங்கள் என இங்கு போய்வருதல் பெரிய விடையமாகவும், அப்படிப் போய்வந்தவர்களின் விபரணங்களைக் கேட்டு கனவுலகில் மிதப்பதுஇதமான அனுபவம்தான். இந்த அனுபவங்களைப் பெற்று நம்முடன் பகிரவரும்வர்ணனையாளராக எல்லோராலும் வந்திட முடியாது..

வழமையாக ஊர் நாய்கள் ஒன்றுகூடும் இடம் அந்தக் கோயில் மடப்பள்ளியின்தெற்கே வெளிப்புறத்தில், தனியாக இருந்த வேப்ப மரத்தின் கீழேதான். இந்தவேப்பரம் பெரிதானதில்லை, ஆனால் வயதானது. நோஞ்சானாகத் தெரியும்இதனால் பெரிதாக நிழல் விழுவதில்லை. இந்த இடத்தில் ஆடு மாடுகள்வரவுதற்கு விரும்புவதில்லை. தனியாக இருந்த இம்மரத்தடியிலதான் கோயில்மிச்சங்கள் கொட்டப்படுவது வழமை. இப்படியான காரணங்களால் நம்ம ஊர்நாய்களுக்கு இந்த இடம் பொருத்தமானதாகவே இருந்தது. கல்லெடுத்தெறியும்கெட்ட மனிதர்களின் நடமாட்ங்களும் இல்லாது சுதந்திரக் காற்றை சுவாசித்தனபோலும். மாலை வேளையில் இவ்விடத்தில் அநேகமாக எல்லோரும்கூடிவிடுவார்கள். இதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு நாய்களும்இதில் அடங்கும். இதை தெருநாய் என்றுதான் அழைப்பார்கள். ஊர் நாய்கள் என்றுசொன்னாலும் அவற்றில் எத்தனை வகைகள்...... ஒல்லியாவை - கொழுத்தவை, உயரமானவை - கட்டையானவை, வயதானவை - இளமையானவை, தனிக்கறுப்பு, தனிச் சிவலை, வெள்ளை, மாநிறம், கலப்பு நிறம், புள்ளி போட்டவைஎனவாக ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் பிரித்தும் பார்க்கலாம். தவிரஇவற்றை வளர்க்கும் மனிதர்களின் விருப்புக்காக வால் வெட்டப்பட்டதாகவும், நலமெடுக்கப்பட்டதாகவும், நொண்டி காலுடையதாகவும் ஆன வகையிலும்வேறுபித்தும் பார்க்க முடியும்.

இக்கூட்டத்தில் நல்ல சிவலை கொழு கொழுவென பார்த்தவுடன் கவரக்கூடியவசியமுடைய இளைய நாய் ஒன்று அதிகம் அலட்டிக் கொள்ளாது இருக்கும். இதனை வளர்ப்பவர் வீட்டில் இதற்கு அதீத செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். முறைப்படி மனிதர்களின் கூற்றைக் கேட்டு நடக்கும் பயிற்சியையும் இதுபெற்றிருந்தது. அக்கிராமத்தில் முறைப்படி கற்றிருந்த நாய் இதுதான்.

மெத்தப் படித்திருப்பதால் இது தன் இன ஆக்களுடன் அதிகம் சேராதிருப்பதாகஅந்தத் தெருநாய்கள் தங்களுக்குள் ஒருநாள் கதைத்துக் கொண்டன. இதைக்கிறுக்கன் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்தனர். இது தன்னோடுஒத்தவர்களுடனும் அதிகம் உறவு வைக்காதது ஊர் பெரிய நாய்களுக்கு மிகுந்தகவலையைக் கொடுத்தது. வெறும் இரண்டு பேருடன் மாத்திரம்தான் இதுகதைக்கும். மற்றவர்களைச் சட்டைசெய்வதே இல்லை.

'அப்படி என்னதான் நினைப்போடு இது இருக்கு?' என்ற கேண்வியால்அரித்தெடுக்கப்பட்ட ஊர் பெரிசு, தனது கேள்வியை சபையில் வைத்துவிட்டது. பலரும் பலவிதமான ஊகங்களைச் சொல்ல அந்த நாயின் நட்பைப் பெற்றிருந்தகறுப்பு வெள்ளை நாய்தான் தான் அறிந்தவற்றைச் சொல்லி ஊகங்களுக்குமுற்றுவைத்தது.
"அதுக்கு இந்த ஊர் பிடிக்க வில்லையாம். தனது எடுப்புக்கும் அறிவுக்கும்ஏற்றதாக இந்த ஊர் இல்லையாம். தான் படடினத்தில்தான் வாழக்கூடிதாகஇருக்கும்" என தன்னிடம் கூறியதாக அந்த நட்பு நாய் கூறியது.

"பட்டினத்தில் வாழ்வதாக இருந்தால் அதற்குரிய லைசென்ஸ் எடுக்கவேண்டுமே?" ஊர் பெரிசு சொல்ல
"அப்படியாக லைசென்சு இல்லாதிருந்தால் 'நாய் பிடிகாரர்கள்' பிடித்துக் கொண்டுபோய் நடுக் கடலில் மூழ்கடித்துவிடுவிவார்களென நானும்கேள்விப்பட்டிருக்கிறேன்!" என ஆமோதித்தது இன்னுமொரு நாய்.
"ஊருக்குள் தனியனாக நடமாடும் சிவலை நாயின் பிரச்சனையைக் களையாதுவிட்டால்... வால் நிமிர்ந்த நாயாகப் போய்விடும். பிறகென்ன நாய் வண்டில்கொண்டுவந்து பிடித்துச் சென்று விடுவார்களென" சிலர் பெளவியமாக எடுத்துச்சொன்னார்கள்.
"என்ன இருந்தாலும் நாய்ப் பஞ்சாயித்துக் கூடி இறுதி முடிவெடுப்பதுதான்நல்லது" என மூத்த நாய் கூறிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்த வெள்ளி மாலையில் பஞ்சாயத்து என முடிவானது. முறைப்படி அந்தஎடுப்பான சிவலைக்கு அழைப்பும் விடப்பட்டது.

மரத்தடியில் ஊர்நாய்களெல்லாம் குழுமியதைக்கண்ட கோயில் ஐயருக்கு 'நாய்சீசன் வந்துட்டாக்கும்!' எனத்தான் எண்ணத் தோன்றியது. இதுக்குள்நுழையக்கூடாதென்ற பட்டறிவால் அவர் பேசாதிருந்துவிட்டார்.

விரிவாகப் பஞ்சாயத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.
"என்னுடைய மிடுக்குக்கும் திறமைக்கு நான் இந்தக் கிராமத்தில் இருக்கமுடியாது. இங்கு எனக்கேற்ற ஒரு சோடிகூட கிடைக்கமாட்டுது. நான்பட்டணத்தில்தான் வாழ வேண்டும்."
"தம்பி... பட்டணம் நம்ம ஊர் போல வராது. அங்கு யாரையும் மதிக்கவும்மாட்டார்கள், கவனமெடுக்கவும் மாட்டார்கள்!" ஒருவர் உறுதியாகச் சொன்னார்.
"எனக்கு யாரது அரவணைப்பும் தேவையில்லை. என்னால் தனித்தே வாழ்ந்துகாட்ட முடியும்... நான் அங்குதானே நாய் பயிற்சிக் கல்லூரியில படிச்சனான். என்ர திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கு!" சிவலை விடுவதாக இல்லை.
"தம்பி இந்த மனுசர்களுக்கு எப்ப எப்ப என்ன எண்ணம் வரும் என்று சொல்லமுடியாது! பட்டணத்தில இது பயங்கரமான முடிவாகிவிடலாம்..." கால் கொஞ்சம்ஊனமான நாய் சொன்னது.
"என்ர வசீகரத்தால் இந்த மனுசக்கூட்டம் மயங்கிவிடும். நான் இங்கு எப்படிப்பட்டசெல்லமாக இருக்கிறன் என்று தெரியும்தானே!"

'அடடா.... இவ்வளவு நாளும் பேசாதிருந்த இந்தச் சிவலைக்குள் எந்தப் பெரியகனவு இருந்திருக்கு. இந்தக் கனவைக் கலைக்க்கூடாது' எனவாறாக யோசித்துக்கொண்ட ஊர் பெரிய நாய்,
"சரி, உன் விருப்பப்படி பட்டணத்திற்கு அனுப்பி வைக்கிறம். ஆனால்வருடத்திற்கு ஒருமுறையாவது இங்கு வந்து செல்ல வேண்டும்." என்றது.
இதைக் கேட்ட சிவலை மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. ஆனால் சிவலையின்நண்பர்களான இரண்டு நாய்களின் முகத்தில் அவர்களையும் அறியாது கண்ணீர்வழிய ஆரம்பித்துவிட்டன. சிவலையின் உற்றாரான நாய்களுக்கு திக்கென்றுஇருந்திருக்க வேண்டும்.
"இங்கு இளவரசராட்டம் செல்லமாக வளர்ந்திட்டான். அங்குபோய் என்ன செய்யப்போறானோ...." என்றது ஒரு நாய் கவலையுடன்.

"இது பஞ்சாயத்து, யாரையும் பொத்தி வைத்துப் பராமரிக்க முடியாது. நடப்பதெல்லாம் நடக்கட்டும். அவனுடைய விருப்பப்படி விடுவதுதான் நல்லது. நாளைக்கே அவன் பட்டணத்திற்குப் போக ஏற்பாடாகட்டும்" என்றுஎல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளியிட்டது தலைமை நாய்.

சனி அதிகாலை சாமான் கொண்டு போகும் வண்டியில் பிரியா விடைகொடுத்துஅனுப்பின ஊர் நாய்கள்.

கனவுக் கோட்டையில் கால் பதித்த அந்தக் கணத்தை சிவலையால் மறக்கவேமுடியாது. 'ஆகா என்ன அழகு! பெரிய பேரூந்து தரிப்பிடத்தில் ஒரே மாதிரியானபேரூந்துகள், பென்னாம் பெரிய புகையிரத நிலையம், பெரிய அடுக்குமாடிக்கடடிடங்கள், நீணட கடைத் தெருக்கள், சினிமாக் கொட்டகைகள், பத்திப் பத்திஎரியும் முகப்பு மின் விளக்குகளைக் கொண்ட பெரிய அடுக்குமாடி விடுதிகள், பெரிய பெரிய கல்லூரிகள், பல்வேறு பூக்களைத் தரும் செடிகளைக் கொண்டபூங்காக்கள், அகண்ட வீதிகளின் சந்திகளில் சிலைகள், பார்க்குமிடமெல்லாம்பரபரப்பாக அங்கும் இங்குமென நடமாடும் மனிதர்கள்.....' எனவாகப் பார்த்துக்கொண்டு புளங்காகிதமடைந்தவாறு நகர் வலம் வருகிறது சிவலை.

தன்னந்தனியாக இவ்வளவு நேரமும் நகரை வலம் வந்த சிவலைக்குமாலையானதே தெரியவில்லை. இப்பத்தான் கொஞசம் பசியெடுக்கத்தொடங்கியது. 'சரி எங்காவது சென்று சாப்பிடுவம்' என்ற எண்ணத்தோடு அந்தப்பெரிய கோயிலின் கிழக்கில் அமைந்திருந்த அன்னதானமடத்தின் ஓரமாகவந்தது. அங்கே எச்சில் இலைகள் போடப்பட்டிருந்த இடத்தின் கிட்டேபோனபோதுதான் தன்னைப் போன்றவர்களை நகரத்தில் கண்டது. தான்கிராமத்தில் பார்த்தமாதியான தோற்றங்களுடனானதாகவே இவையும் இருந்தன. நகர நாய்கள் என்பதால் முற்போக்கானவையாக இருக்கும் என எண்ணியவாறுசினேகபாவத்துடன் தனது நட்பை வெளியிட்டது. என்ன ஆச்சரியம் 'ம் ம் ம்.... உர்ர்ர்ர்................. உர்......' படுத்திருந்தவாறு தன்னைப் பார்த்து முறைக்கும் அந்தப்பெரிய நாயின் உறுமல் சிவலையைப் பயங்கொள்ள வைத்துவிட்டது.

கிராமத்தில் செல்லப்பிள்ளையாக விரும்பியதெல்லாம் சாப்பிட்டுவந்தசிவலைக்கு இந்த முறைப்பு புதுசாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.. தான்கிராமத்தில் இருந்து இங்கு வந்துள்ளது பற்றியும் உங்களுடன் சேர்ந்து வாழவேஆசைப்பட்டு வந்தது பற்றியும் விளக்கிக் கூறமுற்பட்டது. ஆனால் இதன்கதையை யாரும் கேட்கத் தயாராக இருக்கவில்லை. முறைத்துக்கொண்டிருக்கும் அந்தத் தடியனான நாய் சிவலையை உள்ளே செல்லவும்விடவில்லை. நேரம் செல்லச் செல்ல பசி கொஞ்சம் வாட்டியெடுக்கத்தொடங்கியது. மற்ற நாய்கள் சாப்பிடுவதைப் பார்க்க எச்சில் ஊறி வழிந்துகொண்டிருந்தது.

சரி வருவதுவரட்டுமென உள்ளே செல்ல காலடியெடுத்து வைத்ததுதான் தெரியும்எப்படி வெளியே வந்து விழுந்ததென்றே ஞாபகமில்லாது போயிற்று. அந்தத்தடியன் மாதிரி மூன்று நாய்கள் 'வாவ்....' எனப் பாய்ந்து கடித்து எறிந்துவிட்டன. இங்கு மெம்பர்சிப் இல்லாத எவருமே நுழைய முடியாதாம். அவமானம் தாங்கமுடியாததாக அங்குமிங்கம் பார்த்தது சிவலை. பசியும் விடுவதாக இல்லை.

ஒருவாறு தன்னைத் தேற்றியவாறு ஒரு உணவகத்தை நோக்கிச் சென்றது. இப்பஇருள் கவிந்துவிட்டிருந்ததால் மின்னொளியில் நகரம் பிரகாசமாக இருந்தது. இரு விளக்குகள் மிளிர வாகனங்கள் சர் சர் என ஓடும் காட்சிமயிர்க்கூச்செறிந்தது. முன்னே வெள்ளொளியும் பின்னே சிகப்பொளியுமாகநகர்ந்து கொண்டிருந்தன. 'ஆகா ஆகா..... இந்த மனிதர்கள் ஏதாயினும் ஒன்றைச்செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்'

ஒருவாறு நகரின் மையத்திலமைந்த அந்த பிரபல்யமான உணவகத்தின் எச்சில்இலை போடுமிடத்திற்கு வந்துவிட்டிருந்தது. இங்கேயும் பல நாய்கள்உணவருந்தியவாறு இருந்தன. 'சரி தானும் போய்ச் சாப்பிடுவம்' எனஎண்ணியவாறு ஒரு இலையை நோக்கி ஓடியது.. தன் மேல் முதுகில்இப்படியொரு கடியை இதுவரையில் சிவலை பெற்றிருந்ததே இல்லை. அப்படியொரு கடியால் தூக்கி எறியப்பட்டிருந்து.
"நானும் உங்களைப் போன்றவன்தானே! எனக்குச் சரியாப் பசிக்குது.... " என்றதுகெஞ்சல் குரலில்
"உர்........... உர்........." முறைப்பு பலமாகவும் பல்வேறு குரல்களிலுமாகவெளிவந்தன.
'இங்கு வருவதானால் முதலிலேயே முன்பதிவு செய்ய வேண்டும். தெரியுதா? என்ன காட்டான் மாதிரி நுழைகிறாய்!' என்றது இன்னொரு நாய்.
தனது கதையைச் சொல்லத் தொடங்கியது சிவலை. ஐயோ பாவம் இதன்கதையைக் கேட்க இங்கு யாரும் தயாரில்லை. முதுகிலிருந்து வடிந்த இரத்தம்கால்களால் கீழிறங்குவதைக் கண்டு கலங்கிப் போனது சிவலை. காதிலும்எரிச்சலாக இருந்தது. இதன் பரிதாபத்தைக் கண்டு உரு நாய் கிட்டே வந்தது.
"தம்பிக்கு எந்த ஊர்? வீட்டிலை கோவிச்சுக் கொண்டு வந்தனியா?"
தன் கதையை சிவலை சொல்லத் தொடங்கியது. அரைவாசியைக் கேட்டதும்,
"இங்கபார் தம்பி இங்கு வந்துள்ள எல்லாருக்கும் உன்னைமாதிரிக் கதையிருக்கு. இதெல்லாம் பயன்படாது. பேசாம ஊர் திரும்புற வழியைப் பார்!" என்று சொல்லிச்சென்றுவிட்டது. மெளனித்து போன சிவலைக்கு மின்னொளியில் பிரகாசித்தநகரத்தில் ஏதுமே தெரியவில்லை.

சாமம் கடந்திருந்தது. சரியான இருட்டு ஆனால் எல்லாமே தெரிகின்றனசிவலைக்கு. கோயிலின் தெற்குப்பக்கமாக மெதுவாகப் போகிறது. படுத்திருந்ததெருநாய்களுக்கு ஆச்சரியம். இந்த நேரங்கெட்ட நேரத்தில் நொண்டியவாறுஎமது ஊருக்குள் யார் நுழைவார்?
'வவ்... வவ்...' முதற்குரையல் கட்டியமிட தொடர்ந்தன குரையல்கள்.
மிகவிரைவாகவே நாய்கள் கூடிவிட்டன.
மெதுவாக நடந்துவரும் அந்த இருட்டு நாயை எதிர்கொள்ள ஊர்ப் பெரிசுமுன்செல்கிறது.
வந்த நாய் படுத்தவாறு முனகிறது. கிடடே வந்த ஊர்ப்பெரிசு, "என்ர ராசாசிவலை! என்னடா மோன நடந்தது....." என்று தன்னையும் அறியாதுகலங்கியதுதான் தருணம் அவ்வளவு நாய்களும் விரைந்து செயற்பட்டன.

சிவலைக்கு தண்ணீர், சாப்பாடு கொடுக்கப்பட்டன. கடிபட்ட இடங்கள் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தின. சிவலையைத் தொந்தவு செய்ய வேண்டாம் என்றுசொல்லிச் சென்றது ஊர்ப் பெரிசு.

அடுத்த நாள் நிம்மதியாக பொழுது புலர்ந்தது. தெரு நாய்களுடன் படுத்துறங்கியசிவலை உடம்பை முறித்தவாறு எழுந்தது. ஆங்காங்கே வலிகள் இருந்தாலும்மனதில் ஏதோ நிம்மதியிருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.

"எப்படியப்பா சிவலை! நகரம் எப்படியிருக்கு?" என்றது தெருநாய்களில் ஒன்று.

"நகரம் நல்லாத்தான் இருக்கு. நம்மாக்கள்தான் சரியில்லை!" என்றதுஅமைதியாக சிவலை.


-முகிலன்
(பாரீஸ் 1993)
இக்கதையின் வேறொரு வடிவம் பாரீசில் வெளிவந்த 'ஓசை' இதழில் இடம் பெற்றிருந்தது. )

4 comments:

  1. நன்றாகவுள்ளது பாராட்டுகள்
    -அருந்தா

    ReplyDelete
  2. thanks your visite and comments

    ReplyDelete
  3. "இங்க பார் தம்பி. இங்க வந்த எல்லாருக்கும் உன்னைமாதிரிக் கத இருக்கு. இதெல்லாம் பயன் படாது. பேசாம ஊர் திரும்பிற வேலையைப்பார்."

    இந்த வசனம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் நாய்க்கு நாய் வேறுபமடும். நாய்களின் தரத்திற்கேற்ப.

    அமலாக்கா

    ReplyDelete