Friday 3 July 2009

செய்திச் சரம் - 2 பிரான்சில் சபையின் முன் தமிழால் உறுதிமொழி வழங்கி நடந்த ஒரு திருமணம்

பிரான்சில் சபையின் முன் தமிழால் திருக்குறள் ஏட்டில் உறுதிமொழி வழங்கி நடந்த ஒரு திருமணம்

புலம்பெயர் தேசமெங்கிலும், கோயில் திருவிழாவாகட்டும் இல்லச் சிறப்பு நிகழ்வுகளாகட்டும் இப்போது சாத்திரிமார் குறிப்பிடும் நல்ல நேரமமைவது சனி, ஞாயிறு நாட்களில் மட்டுமே. பாரீசின் புறநகர் கிராமமொன்றில் சென்ற ஞாயிறன்று இங்கு பிறந்து வளரும் அடுத்த தலைமுறை இளைஞரின் திருமணம் நடந்தது. என்கிராமத்து நிகழ்வாகையால் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். தமிழ்ச் சினிமாவுக்குப் போய்ச் சலிப்பேற்பட்டது மாதிரி இந்நிகழ்வுகளுக்குப் போய் ஒரு முழு விடுமுறை நாளைக் காவு கொடுத்தவர்கள் எத்தைனையோ பேர்.

இதில் ஐயரின் சடங்கு முடிந்ததும் வழமைக்குமாறாக 'உறுதிமொழி வழங்கும்' நிகழ்வு நடைபெற்றது. இதனால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவனானேன். மிகச் சுருக்கமாக நடைபெற்றிருந்த இந்நிகழ்வு வித்தியாசமானதாகவும், எல்லோரது ஈடுபாட்டையும் காட்டியதாகவும் அமைந்தது. மணமக்களின் பெற்றோர் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வு, எல்லோரும் எழுந்து நின்று 'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில்' தொடங்கியது. பின் மணமக்களின் பெரிய தந்தையர்களின் குடும்பத்தினர் ஏந்திய திருக்குறள் நூலில் தத்தமது வலதுகைகளை வைத்தவாறு பின்வரும் உறுதிமொழியினை வழங்கினர்.


மணமகன் உறுதிமொழி

.............................................. ஆகியோர் மகன் ...........................................................ஆகிய நான், அன்பும் அறனும் பெருக்கி,பண்பும் பயனும் அதுவென அறிந்து, என் வாழ்க்கைத் துணை நலமாக வாய்க்கப்பெறும் ................................................................................ ஆகியோர் மகள் ............................................................................. உடன் என்றும் பிரியாது, ஒருபோதும் பிழையாது, பெண்மையும் ஆண்மையும் சமநிறை என்னும் உண்மை வழியே உயர்வெனப் போற்றி, இணைந்து வாழ்ந்து இல்லறப் புகழினை உயர்த்துவேன் எனவும், புலம்பெயர் மண்ணில் வாழும் அடுத்த தமிழ்த் தலைமுறையாகிய நான், காலம் அரிதிடாது எம் மூலம் காக்கும் பணியையும் செய்வேன் எனவும் இச்சான்றோர் முன்னிலையில் உறுதியுரைக்கிறேன்..


மணமகள் உறுதிமொழி

................................................................................................ ஆகியோர் மகள் ...............................................................ஆகிய நான், அன்பும் அறனும் பெருக்கி, பண்பும் பயனும் அதுவென அறிந்து, என் வாழ்க்கைத் துணை நலமாக வாய்க்கப்பெறும் ................................................................ ஆகியோர் மகன் ................................................................. இணைந்து விருந்தோம்பி வாழும் தமிழ் நெறி ஒழுகி இன்பம் துன்பம் இரண்டிலும் அவருடன் கலந்து இனிய இல்லறப் பெருமை காப்பேன் எனவும் , புலம்பெயர் மண்ணில் வாழும் அடுத்த தமிழ்த் தலைமுறையாகிய நான், காலம் அரிதிடாது எம் மூலம் காக்கும் பணியையும் செய்வேன் எனவும் இச்சான்றோர் முன்னிலையில் உறுதியுரைக்கிறேன்..

அரங்கில் திருக்குறள் ஒலிக்க, மணமக்களது பெற்றோர் எடுத்துக்கொடுத்த மாலைகளை மாற்றி தமது இல்லற உறவை வெளிப்படுத்தியபோது அரங்கு கையொலி எழுப்பி வாழ்த்தியது. வருகை தந்த அனைவருக்குமான நன்றியறிதலை தமிழில் மணப் பெண்ணும் பிரஞ்சில் மணமகனும் சொல்லி மணமேடையில் அமர வருகை தந்தவர்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.

கொஞ்சம் வித்தியாசமாக அமைந்த இந்நிகழ்வு சபையில் அதிர்வுகளைக் கொடுத்தது. இதிலிருந்து சில...

* 'இதேமாதிரி ஏன் எனக்குச் செய்யவில்லை?' மூன்று மாதங்களின் முன் திருமணம் புரிந்திருந்த இளம் குடும்பப்பெண்.
* 'இதில் வாசிக்கப்பட்ட உறுதி மொழியைப் பிரதி எடுத்து சபைக்குள் விநியோகித்திருக்கலாமே?' ஆர்வத்துடன் ஒரு பெரியவர்.
* ' இங்கு வாழத் தலைப்பட்டுள்ள இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்ததில் எனக்கு பெருமிதமாக இருக்கு' மணமகளின் தந்தை.
* ' மணமக்களின் பெற்றோர் பெயர்களாக தந்தையினதும் தாயினதும் பெயர்களைச் சொன்னது நன்றாக இருந்தது.' ஆர்வத்துடன் ஒருவர்.
* 'மனதைத் தொட்டவாறு நடந்த இந்நிகழ்வால் இல்வாழ்வில் நுழையும் உணர்வுகிடைத்தது. ரொம்பவும் நன்றி' முகமலர்ச்சியுடன் மணப் பெண்.
* 'தம்பி நன்றாக இருந்ததையா... எனக்கு நல்ல திருப்தி!' மணமகனின் பேத்தியாரான வயதான மூதாட்டி.
* 'ஐயர் சொல்லும் வார்த்தைகளையும் புரியும் வண்ணம் செய்யலாம்தானே?' கலந்துகொண்ட இளைஞனொருவன்.
* 'நல்ல தொடக்கம், இனிமேல் இவ்வகை நிகழ்வுகள் விரிவடையும்' நம்பிக்கையுடன் ஒருவர்.
* 'வார்த்தைகளை மென்தமிழில் வடித்திருக்கலாமே?' 'ஆர்வத்துடன் கேட்ட இவரது கேள்வி உற்சாகப்படுத்துவதாகவும் மந்திரங்கள் உச்சரிகும்போது எழதாத அறிவுத்தேடல் மீளவும் சபையில் எழுவது ஆரோக்கியமானதாக அமையும்' என்றும் பதிலளித்தார் நிகழ்வை நடாத்தியவர்.



நேரில் காணுற்ற நிகழ்வின் பதிவு.
முகிலன் -( பாரீஸ் யூன் 2009)

3 comments:

  1. நல்ல/பயனுள்ள அனுபவப் பகிர்வு !!!!

    நன்றி.....

    உங்களுடைய இந்தப் பதிவின் வடிவமைப்பு விபரங்கள் பிரெஞ்சில் உள்ளதால், பின்னூட்டமிட சிறிது குழப்பமாக/சிரமமாக உள்ளது. தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கு மாற்றவும்...

    ReplyDelete
  2. வணக்கம் பதி அவரகளே!
    வருகைக்கும் பதிவிட்டதற்கும் நன்றி. தங்களது கருத்தின் படி தமிழ் அட்டைப்பலகை செயற்படும்.

    -வாழ்க வளமுடன்
    முகிலன்

    ReplyDelete
  3. இந்த விடையம் தொடர்பார்க ஒரு வீட்டில் சந்தித்த நண்பர்களுடன் உரையாட முடிந்தது. அதில் கலந்து கொண்ட இளைஞனொருவனின் கருத்து கவனங்கொள்ள வைத்தது.
    "புலம்பெயர்ந்த நாடுகளில் மாறுபட்ட நிகழ்வுகளைச் செய்வதற்கான நிறுவன அமைப்புகள் இல்லை. அதனால் கோயிலுக்குச் சென்று ஐயருடன் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கான முறைமையான மாற்று நிறுவன அமைப்புகள் உருவாக வேண்டும்.
    தமிழ்நாட்டில் கட்சிகள் வழிவந்துள்ள நிகழ்வு முறைமைகளை நாம் அப்படியே ஏற்க முடியுமா?
    பண்பாட்டு ரீதியில் மட்டும் அமைந்த தமிழருக்கானதான நிகழ்வுகளை நாடத்தும் உலகளாவிய நிறுவன அமைப்பு தேவை என்பதே என் கருத்து" என்றான்.
    'ஆமென' நானும் தலையாட்டினேன்.

    -அருந்தா

    ReplyDelete