Saturday 9 May 2009

சரம் - 4 இதுதாண்டா தீர்வு!

1 இதுதாண்டா தீர்வு!

புதிய இதிகாசம்: சோனியாயணம்
தயாரிப்பு- வடிவமைப்பு- செயலாக்கம்- நெறியாழ்கை: இதிகாச மூலவர்கள் வாரிசுகள்
நடைபெறும் இடம்: ஈழம்
பாத்திரங்கள் தம் உயிரை வழங்கி கதையுடன் வாழ்கிறார்கள்.


என்னடா ராஜசேகர் சினிமாத் தலைப்பு மாதிரி இருக்கிறதே என எண்ணலாம். இது இந்தியச் சினிமாக்களில் வரும் காட்சிகள்போலத்தான் நடைபெறுவதாலும், தேவர்களாகச் சித்தரிக்கப்படும் மானுடர்(அரக்கர்)களாக இல்லாது மேலோகத்தில் வாழுவோரது கதைக்கருவாக இருப்பதாலும் இப்படியாகத் தலைப்பிடுவதே பொருத்தம்.

இலங்கைத் தமிழருக்கான தீர்வாகக் கருதப்படும் சகல காலரோக ராசீவு நிவாரணியைச் செலுத்துவதற்கு தயாராகி வருவதாகச் செய்திகள் கசியத் தொடங்கிய நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் இது அலசப்படுவது வழக்கமாகிவிட்டது. இலங்கையில் தோன்றியுள்ள பயங்கரவாத நோயைத் தடுப்பதற்கான ஒரேயொரு தடுப்பு மருந்தாகிய இந்த ராசீவு நிவாரணியை மீண்டுமொருமுறை கட்டிவைத்துச் செலுத்தப்போகிறார்களாம். இதில் நோய் குணமாகாதுவிட்டாலும் ஆள் தப்பாது என்பதால் சிங்களம் மீண்டுமொரு முறை நமட்டுச்சிரிப்புடன் வேடிக்கை பார்க்க ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறது.

இன்றைய உலகின் -தேசிய அரசு இறையாண்மை- என்ற கோட்பாடுகளால் எது நடந்தாலும் இலாபமடைவது இந்த சிறிலங்கா சிங்கள பௌத்த அதிகார பீடந்தானே! இதற்கு சுனாமியால் கடும் பாதிப்புக்குள்ளாகிய போது மகிழ்வுடன் காட்சி தந்த அரசுத் தலைவர் சந்திரிகா சிறந்ததொரு உதாரணம்! ஈழத்தமிழருக்குத் தீர்வு கிட்டுதோ இல்லையோ தமது நலனுக்கு ஏற்றதாக இலங்கை இருந்தால் போதும் என்பதுதானே இந்த ராசீவு நிவாரணத்தின் சாரம்.

சிங்களம் ஒருபோதும் சிறிய தீர்வைத்தானும் வழங்காது என்பது இந்தச் சிங்களக் கொள்கை வகுப்பாளருடன் நெருங்கிப் பழகிய பலராலும் கற்றிருந்த பட்டறிவு. இதை ஓங்கிச் சொல்லி உயிரைவிட்டவர் தராக்கி. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடாததியும் துரும்புதானும் கிடைக்காது நொந்துபோய் ‘தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ எனக்கூறி தனி ஈழம்தான் தீர்வென மக்களாணையைப் பெற்றவர் தந்தை செல்வா. இன்னும் ஏன் மூன்றாம் சாட்சியாக ஐரோப்பிய நாடொன்றை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட 2002 சர்வதேச ஒப்பந்தத்திற்கே என்ன நடந்தது? சிறிலங்காவின் இன ஒடுக்குதலுக்கு வாழ்வாதாரச் சாட்சியமாக உலகெங்கும் பரவி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இந்தத் தமிழ் உறவுகளே நிகழ்காலச் சாட்சியமாகக் கட்டியம் கூறுகையிலும் உலகம் கண்ணை மூடியவாறு மௌனித்து இருக்கும் அவலம் 21ம் நூற்றாண்டு மானுடவியல் பெருந்துயர்தான்.

இந்தச் சூழலில் நம்மவர் வீடுகளில் அடிக்கொரு தடவை பேசப்படும் விடையமாகிவிட்டது. பொதுப் பார்வையில் புலம்பெயர்ந்த வாழ்வின் எதிர்காலம் பொங்கிப் பிரவாகமடிப்பதாகத்தான் தோன்றும். ஆனால் மூலத்திற்கான நாடொன்றில்லாத சந்ததியினரை விட்டுச் செல்லும் வரலாற்றுப் பழியை நம்மால் சுமக்க முடியுமா? இக்கேள்வி புலம் பெயர்ந்த மூத்த தலைமுறையினரை வாட்டிவதைக்கிறது. சென்ற நூற்றாண்டில் நாடொன்றில்லாது செல்வச் செழிப்புடன் பரவலாக வாழ்ந்து கொண்டிருந்த யூத இனத்திற்கு ஐரோப்பாவிலேயே என்ன நடந்தது? எதிகாலத்தில் எமது சந்ததி ஜித்தானாவதா??

புலிகளுக்கு எதிரானவர்களை இனம் காணுவதும் அவர்களிடம் ஆட்சியைக் கொடுப்பதுமான 87 அரங்கம் இன்னுமொரு தடவை 2009இல் அரங்கேற்றபடபோகிறது. தகவல் தொழில்நுட்ப விரிவாக்க உலகின் இன்றைய சூழலை மறந்தவர்களாகிச் செயற்படும் தயாரிப்பாளரும் நெறியாளரும்
படாதபாடுபடுகிறார்கள். இந்த நிகழ்அரங்கிற்கான பாத்திரங்களுக்குத் தோதானவர்களை வலைவீசித் தேடுகிறார்கள். இவர்களின் தெரிவுக்குள்ளாவோரை நினைத்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. ஆக முழுக்க நகைச்சுவை அரங்காகத்தான் இருக்கப்போகிறது. இதைப்பற்றி உரையாடும்போது என் துணைவி கேட்டார்
“இந்தத் தெரிவுக்குள்ளானவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாது தன்னந்தனியாக இவர்களால் நடாத்தப்படும் அகதி முகாங்களுக்குள்ளாகச் சென்று வரட்டும் பார்க்கலாம்?”

வினவல் மிகுந்த தாக்கத்துடனானதென்பது அனைவராலும் உணரக்கூடியதுதானே!
மக்கள் மத்தியில் சாதாரணமாக நடமாட முடியாதவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கி என்னதைச் சாதிக்கப்போகிறார்கள்? . எமக்கான அண்டை நாட்டாரை நினைக்க வேதனையாகத்தான் இருக்கு! வன்னியில்கிளம்பியுள்ள
பிண வாடை பெருமணமாகி காற்றில் கலந்து உலகின் முகச் சுழிப்புள்ளாகியுள்ளதானது சும்மா விடுமா?
- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! - இது சின்னப்பிள்ளையாக இருந்தபோது மண்டையில் ஏற்றப்பட்ட முதுமொழி.

- மகேந்திரா 08. 05. 2009கனடா -

0000000

2வீட்டில் இருந்ததபடியே தொலைபேசி கதைக்கலாம்!

‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடுற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்!’ என்ற முதுமொழியின் செறிவை நாளாந்தம் அனுபவக்கும் வேலை நமக்கு. ஆம் தொலைத்தொடர்புக் கடை ஒன்றில்தான் வேலை. நாளாந்தம் பன்முகச் சமூகத்துடனும், பல்வேறு முகங்களுடனும் உரையாடும் வாய்ப்பைத் தரும் பணி. வாயாற தொலைபேசிவிட்டு வரும் வாடிக்கையாளரிடமிருந்து பணத்தைப் பெறுவதென்பது இலுகுவான காரியமில்லை. இதற்காக நாசுக்காக நாமும் பல்வேறு விடையங்கள் தொடர்பாக உரையாடிட வேண்டும், வாடிக்கையாளரை மகிழ்வூட்டி கிறங்கடிக்கச் செய்யவும் வேண்டும்.

இப்படியான வாடிக்கைளார்களில் ஒருத்திதான் கறிமா. சுறுசுறுப்பானவள், குஸ்புவை நினைவூட்டும் உடல்வாகு. முன் கடையில் தற்காலிக வேலை பார்க்க வந்த மொகமட், வியாபாரத்தன்மைக் கேற்ப காசை அளந்து செலவிடும் கட்டுப்பாடானவன். இவனிடமிருந்து தாள்க் காசு இலகுவில் வெளியே வராது. அப்படி நிலை வந்தால் கடன் சொல்லியே செல்வான்.

கறிமா தொலைபேசிவிட்டு வருகிறாள், கட்டணம் 7 ஈரோக்கள் 30 காசு. வழமையான மகிழ்வூட்டு வசனங்களை உரையாடியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவளிடம் 2 ஈரோக்கள் 50 காசுதான் இருக்கு. அப்ப தற்செயலாக வந்தான் மொகமட். ‘ஏய், மொகமட் 5 ஈரோ இருந்தாக் குடுவன்’ என்றாள் செல்லமாக. மொகமட்டின் பரிதவிப்பைப் பார்க்கப் பாவமாக இருந்தது. முதற்தடவையாக ஒரு பணத்தாளை எடுத்துத் தந்தான். எங்களுக்கு பணப்பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்ததில் கிடைத்த மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தோம்.
அடுத்த நாள் மாலை, கறிமா வருகிறாள். எனது கூட்டாளி வரவேற்கிறார். ‘எப்படிச் சுகம் கறிமா? எங்கே உனது வாழ்வுத் துணைவன்?’
‘எனக்கு வாழ்வுத் துணைவனா? யாரது?’ மிகுந்த ஆச்சரியத்துடன் திகைப்பை முகத்தில் வெளிப்படுத்தியவாறு... கறிமா.
‘அவர்தான் நேற்றுக் காசு கொடுத்தாரில்லையா?’ நமட்டுச் சிரிப்புடன் கூட்டாளி.
‘ ஏய்! அந்த முகமட்! போங்கடா... நானாவது அவனைக் கட்டுவதாவது!!’ குரலில் தெளிவு இருந்தது.
‘ நான் மக்கிறபனைக் கட்டமாட்டன்’
‘ ஏன்?’ வினாவில் திகைப்பு மேலோங்கியிருந்தது.
‘ நான் இந்துவைத்தான்(நம்மவரை இவர்கள் இந்து என்றும் இந்தியர்களென்றுமே விழிப்பது வழக்கம்) கட்டுவன். ஏனென்றால், அப்பத்தான் வீட்டிலிருந்தபடியே தொபேசியில் கதைக்கலாம்!’ நிதானமான பதிலுடன் சிரித்துக் கொண்டே தொலைபேசிடச் செல்கிறாள் கறிமா.
பதில் கொடுத்த தாக்கம் புருவத்தைத் தூக்க மௌனித்தவர்களாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஆனாலும் இந்த அரபு மற்றும் ஆபிரிக்கப் பெண்களை நினைக்க மலைப்பாகத்தான் இருக்கு! கதைப்பதற்காக இவர்கள் செய்யும் செலவுகளை நம்மவர்களுடன் ஒப்பிட்டால்..... நம்பெண்கள் சிக்கனமானவர்கள்தானே!
என்ன இருந்தாலும் மானுட வாழ்வின் இன்றைய துடிப்பு இந்தக் கதையாடல்களில்தான் எஞ்சித் தொங்குகிறது.

- சந்திரன்
பாரீஸ் -யூன் 2007

1 comment:

  1. சென்னையில் தெளிவாக சீமாட்டி சோனியா கூறிச் சென்றுவிட்டார். இலங்கைத் தமிழர்கள் அவர்களால் வளர்க்கப்படும் மிருகங்களாகத்தான் இந்திக் கொள்கை வகுப்பார் கருதுவதேன்பது தெட்டத் தெளிவாக அம்பலமாகியுள்ளது. இது 21-ம் நூற்றாண்டில் நடப்பதானது மிகப்பெரும் சோகம்தான்!

    ReplyDelete