Monday, 30 June 2014

பிள்ளை யார் ? ‘பிள்ளையார்’

குஞ்சரம் 23

பிள்ளை யார் ? ‘பிள்ளையார்’


டென்மார்க் நாட்டில் குடியேறிய புலம்பெயர் தமிழ்க் குடும்பம் சாதரணமான வாழ்வைத் தொடர்ந்தது. 2000 தொடங்கும் காலப்பகுதியில் ஒருநாள். ஐரோப்பாவும் உலகமும் பெருங்கனவுகளுடன் புத்தாயிரத்தை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.
மகிழினி என்ற நான்கே வயதான ஒரு பெண் பிள்ளையுடைய பக்தி சிரத்தையுடைய சிறிய குடும்பம் அது. துருவ வலைய நாடுகளின் இயற்கையமைதலுக்கு அமைவாக பளீரிட்டது வாழ்வு. கத்தோலிக்கச் சூழல் நாடுகளில் குடியேறியிருந்தாலும் தமது பாரம்பரிய மத வழிபாடே நிறைவான ஆறுதலைக் கொடுப்பதாக இருந்தது. தாயார் வீட்டிலேயே தமது தெய்வங்களின் படங்களுடன் சிறியதான பிள்ளையார் உருவச் சிலையையும் வைத்திருந்து தேவாரம் பாடி மணியடித்துப் பூசை செய்து வழிபடுவதை வழக்கமாக்கியிருந்தார். தாயாருடன் இணைந்து மகளும் வணங்கி வருவதை வழக்கமாக்கியிருந்தாள். ஏனோ தெரியாது அவளுக்கு அந்தப் பிள்ளையார் சிலை ரொம்பவும் பிடித்திருந்தது.
சிறுபிள்ளைகளின் துறு துறுப்புக்கமைவாக உற்சாகத்துடன் வளர்ந்தாள் குழந்தை. எதையும் விசாரித்து அறியும் ஆவல் அவளுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. இந்த வேளையில் அடுத்த மகப் பேறுக்கான தாய்மையடைந்திருந்தார் தாயார். இதனால் போதிய ஓய்வு நேரம் கிடைக்க தாயும் மகளும் அதிகவளவில் உரையாடினர். அடுத்த பிள்ளை மகனாகக் கிடைக்க வேண்டும் என்பதே பெற்றோரது விருப்பமாக இருந்தது. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதிருந்தனர். இவ்விடையத்தில் அந்தச் சுட்டி மகளுக்கும் தனக்கு விளையாட தம்பிப் பாப்பாதான் விருப்பாக இருந்தது.
« அம்மா… எனக்கு தம்பிப் பாப்பாதான் வேண்டும் ! » செல்லமாக மகிழினி.
« நீ கும்பிடும்போது கடவுளிடம் வேண்டிக்க… கட்டாயம் கிடைக்கும் !! » தாயார்.
« அப்ப நீங்களும் அதையா வேண்டிக் கும்பிடுறீங்கள் ? » மழலையில் குழந்தை விசாரித்தாள்.
« நாங்கள் பெரியாட்கள் பலவற்றையும் வேண்டிக் கும்பிடுவோம் !! »
பிள்ளையும் புரிந்தது மாதிரி பேசாது விட்டிருந்தாள். ஆனால் அன்றிலிருந்து அவளும் சிரத்தையுடன் தன் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டு கும்பிடத் தொடங்கி விட்டிருந்தாள்.
பல்வேறு மருத்துவ சோதனைகளுடன் மகப்பேறுக்காகத் தாயார் தயாராகிக் கொண்டிருந்தார். சிறுமியும் தனது வகுப்பாசிரியை மற்றும் தோழர்களுடன் அளவளாவியவாறு புதிய வருகைக்காக்க் காத்திருந்தாள். 

மருத்துவக் குறிப்புப் பதிவுகளின்படி அடுத்த வாரிசு ஆண் என்பது உறுதியானதில் பெற்றோர் மிக்க மகிழ்வடைந்தனர். இவர்களது மகிழ்ச்சி மகளையும் பற்றிக் கொண்டு படர்ந்தது.
ஒருநாள் « அம்மா… தம்பிதான் வரப்போகிறான் என்று டொக்டருக்கு எப்படியம்மா தெரியும் ? »
« ஓ அதுவா ?.... என்னுடைய வயிற்றுக்குள் என்ன இருக்கிறதென ஸ்கான்(scanne) செய்து பார்ப்பதாலும் பல்வேறு சோதனைகளாலும் அறிந்து கொள்கிறார். »
« அதென்னம்மா…. ஸ்கான்(scanne) ? » ஆர்வம் பொங்க மகிழினி.
« எலும்பு முறிவடைந்திருக்கா என்பதை எக்ஸ் றே(X-ray) செய்து பார்ப்பது போலத்தான். ஆனால் இது உள்ளுக்குள் இருக்கும் பல்வேறு பொருட்களைப் படமாக்க் காட்டும். »
« அதெப்படி அம்மா ? »
« நீ பெரிய ஆளானதும் நிறையப் படிப்பாய்தானே…. அப்போது இதெல்லாம் உனக்கு நன்றாக விளங்கும் ! » அம்மாவும் தன்னால் முடிந்த அளவுக்குச் சமாளித்தார். ஆனாலும் தன் மகளது ஆர்வத்தை கண்டு மகிழ்ந்தவாறு எப்படியாவது புரிய வைக்கவேண்டுமென நினைத்தார்.
உடனே ஏதோ நினைத்தவராகி « கொஞ்சம் பொறு…. இப்ப வாறேன் !! » என்று கூறயவாறு தனது அறைக்குள் சென்றார். அங்கிருந்த அலுமாரியில் வைத்திருந்த வைத்திய ஆவணக் கோப்பைத் தூக்கிக் கொண்டு சிரித்தவாறு மகளை அழைத்தார்.
« இங்கே பார்……. ஸ்கான்(scanne) படத்தை…. இங்கு தெரிகிறதா… உனது தம்பியை ? »
மகளும் ஆர்வத்தோடு பார்க்கிறாள். உருவம் தெரிவதை உணர அவளால் முடிந்தது. ஆனால் அது ஆணா பெண்ணா என்பதை அவளால் உணர முடியவில்லை. ஆனாலும் தாய் காட்டிய அனைத்துப் படங்களையும் உற்று நோக்கினாள். பலதையம் அலசிவிட்டு
« அம்மா…. ஆண்பிள்ளை – பெண்பிள்ளை என்பதை எப்படியம்மா டொக்டர் கண்டு பிடித்தார் ? »
« அது டொக்டராகப் படித்தவருக்குத்தான் தெரியும் ! »
« இப்படியாகப் பார்த்து என்ன செய்வாங்க ?... » மகிழினியும் விடுவதாகயில்லை.
« அவங்க பிறக்கிற குழந்தை நன்றாக இருக்கிறதா ? சரியாக வளர்கிறதா ? என்பதையெல்லாம் பார்ப்பார்கள். »
« சரியாக இல்லையென்றால்…… என்ன செய்வார் ? »
« பிறக்கப் போகும் பிள்ளை சரியாக இல்லை(காண்டிஹாப்) என்றால் அதைச் சரிசெய்ய முயல்வார்கள் அப்படியும் முடியாது போனால் பிறக்காது செய்துவிடுவார்கள். குறைபாடோடு பிள்ளை பிறந்தால் எல்லோருக்கம் சிரமம்தானே !! » தாயாரது விளக்கத்தை பொறுமையாகக் கேட்டாள் மகிழினி.
இதிலிருந்து பிறக்கப் போகும் குழந்தையைக் காண மிகுந்த ஆவலுடன் இருந்தாள் குழந்தை. இதன்பின்னர் அம்மாவிற்கு நடைபெற்ற அனைத்து ஸ்கான்(scanne) படங்களையும் அவள் பார்க்காது விட்டதே கிடையாது.
ஓருநாள் அவர்கள் எதிர்பார்த்தபடி அவளுக்கான தம்பிப் பாப்பா ‘குவாங்… குவாங்… ‘ ஓசையுடன் சுகமாக வருகை தந்தது. மகிழினிக்கு தம்பியைக் கண்டதும் நல்ல மகிழ்ச்சி. முதலிலேயே தீர்மானித்தபடி அவனுக்கு ‘இனியன்’ எனப் பெயரிட்டனர்.
ஒருநாள் தம்பியையும் அம்மாவிடமிருந்த ஸ்கான்(scanne) படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த மகிழினியைக் கண்ட பெற்றோர் அசந்து போயினர்.
« அம்மா….. வயிற்றுக்குள்ளே இருந்த தம்பியை நல்லாத்தான் படமெடுத்திருக்கிறார்கள் » என்ற மகிழினியின் குரலில் தெளிவிருந்தது.
தம்பியின் வளர்ச்சியிலும் அவனது சிரிப்பிலும் தாயுடன் மகிழினியும் அதிக பங்கெடுத்தவளாகினாள். நாட்கள் கடந்து செல்ல இனியன் தவழத் தொடங்கி தத்தித் தத்தி நடைபயின்று இப்போது துள்ளிக் குதிப்பவனாகி விட்டிருந்தான்.
ஒருநாள் வெள்ளிக் கிழமை தாயார் வழமையான தேவாரப் பாடலுடன் பக்தியாகப் பூசை செய்து கொண்டிருந்தார். தன்னுடன் சேர்ந்து தேவாரம் பாடும் மகிழினி இன்று ஒன்றும் பேசாததைக் கவனித்த தாயார் திரும்பிப் பார்க்கிறார். மகிழினி சிறியதான ‘பிள்ளையார்’ சிலையை உற்று நோக்கியவாறு நின்றிருந்தாள்.
Á        « என்னமா…. ? » அன்பொழுக தாயார் வினவுகிறார்.
Á        « ஏனம்மா… பிள்ளை யார் ? இப்படியான உருவம் இவருக்கு எப்படி வந்தது ? »
Á        தாயார் அசந்து போய்விட்டார். « என்ன மகிழ் இப்படிக் கேட்கிறாய் ? »
Á        « பிள்ளையாரை யாரம்மா பெற்றது ? » மகளது கேள்வியில் அறியும் ஆவல் அதிகமாகவே இருந்தது.
Á        « அவங்களுடைய அம்மாதான்…… இவங்கதான் அவருடைய அம்மா பார்வதி ! இவர்தான் அவருடைய அப்பா சிவன் ! » என்றவாறு எதிரிலிருந்த படத்தைச் சுட்டிக் காட்டினார்.
Á        « அம்மா…. பிள்ளையாருடைய அப்பாவும் அம்மாவும் நல்லாத்தானே இருக்கினம்…. அப்ப இவர்களுக்கு ஸ்கான்(scanne) செய்த டொக்டர் ஏனம்மா பிறக்கப் போகும் பிள்ளையை சரியாக இல்லை(காண்டிஹாப்) எனச் சொல்லவில்லை ? »
தாயாரது கண்கள் முழி பிதுங்க முகம் விறைத்துப் போனது. ஏதுமே பேசாதவராக மகளை அணைத்தவாறு அவளது வாயை இலேசாக மூடின அவரது கைகள்.
000000 000000

·         ஐரோப்பியப் புலப்பெயர்வில் துருவ நாடுகளில் குடியேறிய நம்மவர்களது வாழ்வு தனித்துவமானதொரு தடத்தில் பயணிக்கிறது. இங்கு வாழத்தலைப்பட்டவர்களுடன் தொடரும் நம் வாரிசுகளும் அடுத்த தலைமுறையினரும் அதிகவளவான சுயசார்பு சிந்தனையுடன் தமக்கான கற்கை நெறியைப் பெற்று வாழத் தலைப்படுகின்றனர். இவர்கள் இலாடமடிக்கப்பட்ட சிந்தனைத்தளத்தில் பயணிக்கும் மூத்த தலைமுறையினருடன் பல்வேறு வாழ்வியல் கருத்துகளை விவாதித்து உரையாடும் தன்மையுடையவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்ட முடியும்.
·         புலம்பெயர்வ வாழ்வு புத்தம் புதியதான அனுபவங்களை வாரி வழங்கியவாறே நம்மைப் பயணிக்க வைக்கிறது. இதில் நம் கண்முன்னால் நம் வாரிசுகளாக -சின்னஞ்சிறு சிறார்களாக-க் காணப்படும் நம் பிள்ளைகள் வழங்கும் அனுபவங்கள் பல சமயங்களில் எமை சுயவிமர்சனம் செய்ய வைக்கின்றன. இவை சிலவேளைகளில் எமது உச்சந்தலைகளில் விழுந்து சுள்ளென உறைக்கும் குட்டுகளாகவும் அமைந்துவிடுகின்றன.
·         இங்கு பதிவேற்றப்படும் குறிப்புகள் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறுவதற்கானதல்ல. மத நம்பிக்கையாளர்களது மென்மையான ஆனால் 'திடமான மனது' பாதிப்படைய வைப்பதையும் நோக்காக் கொண்டதுமல்ல.

பிற்குறிப்பு :
பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி:கணேஷா), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் ஒருவர். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாளும் அறியப் பெறுகிறார்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றினைந்தது.
Ø  கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.
Ø  பிள்ளையார் - கணபதி - ஆனைமுகன் - கஜமுகன் -விக்னேஸ்வரன்.
Ø  சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டுவந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.
நன்றி : http://ta.wikipedia.org/s/1jry
Ø  பாடல் பெற்ற கோயில்களில், நாயன்மார் காலத்தில் விநாயகனை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகன் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம்பெற்றிருப்பதுபோல, விநாயகன் இடம்பெறவில்லை. விநாயகன் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத்தொண்ட நாயனார் சாளுக்கிய நாட்டுத் தலைநகரான வாதாபியைக் கைபற்றியபோது இப்புதிய கடவுளை அங்குக் கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்துவந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அதுமுதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பது தெரிகிறது. இக்கணபதீச்சுரமே சம்பந்தர் பாடல்களிலும் இடம்பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவு முறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகன் சிவபெருமானுக்கு முதல் திருமகனாகக் கருதப்பட்டான். இவ் விநாயகன், வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை வாதாபி கணபதி பஜேம் பஜேம் என்னும் ஸ்தோத்திரத்தாலும் நன்குணரலாம்.
(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய சைவ சமயம் என்ற நூலில், பக்கம் 62)
நன்றி : http://viduthalaidaily.blogspot.fr/2011/08/blog-post_1113.html

அறிவாளிகளாகத் திகழும் பட்டம்பெற்றவர்கள் பெரும்பாலும் பாமரர்களின் அறிவுத் தேடல்வெளியில் பயணிப்பதில்லை. பாமரர்களை வெறும் 'மனித உயிரியாக'ச் சிறுமைப்படுத்தும் பெரும்போக்கு மிதப்பு எண்ணங் கொண்டவர்களாகவே இந்த அறிவுலக மேதாவிகள் எம்மத்தியில் நிறையவே காணக்கிடைக்கின்றனர். இவர்களில் வேறுபட்டவராய் இந்தப் பாமரர்களின் அறிவுச் சிந்தனைவெளியில் அவர்களுடன் பயணித்தவாறே தனது இனிப்பான பேச்சாற்றலால் பலரையும் மணிக்கணக்கில் கேட்க வைத்து சிந்தனையைத் தூண்டியது இவரது குரல். இந்தக் களப்பணி இவரது தனித்துவமான சாதனை என்றுதான் பதிவாகும். பல்வேறு பெயர்களில் இவரது வாழ்வுத் தடம் மாறியிருந்தாலும் இறுதி வரையிலும் அதனிலும் பின்பும் நீடித்து நிலைபெற்றது 'பெரியார்தாசன்' என்னும் சுட்டுப் பெயர் மட்டும்தான். மனித சிந்தனையைத் தூண்டும் இவரது உரைகள் காலம் தாண்டியும் இணையவலைகளில் பயணத்தைத் தொடரும்.

 படம் நன்றி: கூகிள் இணைய வழங்கி மற்றும் யூரியூப்
- தொடர்படைய இடுகை : 

சரம் -2 தேவர்கள் - அரக்கர்கள் - அனுமான்

-          முகிலன்
-          பாரீசு 30.06.2014

No comments:

Post a Comment