Wednesday 2 July 2014

1980களின் ஆரம்பத்தில் பெர்லின் ஈழத் தமிழ் அகதி (அதிதி !) ஈழத் தமிழர் நலன்புரிக் கழகம் தொடக்கம்

சுவட்டுச்சரம்1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (20)

1980களின் ஆரம்பத்தில் பெர்லின் ஈழத் தமிழ் அகதி (அதிதி !)
ஈழத் தமிழர் நலன்புரிக் கழகம் தொடக்கம்
-குணன்
தோரணத்தில் தொடராகப் பதிவுறுகிறது நடந்துவந்த பாதையின் நினைவுச்சுவடு. இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் பெருமளவில் அகதிகளாக வெளியேறத் தொடங்கிய 80களின் ஆரம்பத்தில், இலண்டனும் ஆங்கிலமும் தவிர்ந்த ஏனைய நகரங்கள் - மொழிகள் பற்றி பெரிதும் அறிந்திராத ஈழத்தமிழர்கள் பரவலாக பூமிப் பந்தில் பரவிய குடிப்பரம்பலுக்கு அச்சாணியாகத் திகழ்ந்தது பேர்லின் நகர்தான். அப்போது கிழக்கு - மேற்கு எனப் பிளவுண்டிருந்த இந்த நகருக்கூடாகத்தான் ஐரோப்பாவின் அகதிகளாக ஈழத்தமிழரின் முதற்தலைமுறை தடம் பதித்தது. இந்த ஆரம்பகால நினைவுகளை மீட்டு சொட்டுச் சொட்டாக துளிரிடுகிறார் குணன். நினைவுத் துளிகளாகளாகச் சொட்டும் இத் தொடர் வாசகர்களின் கருத்துகளால் மெருகூட்டப்படுமென ஆவல்கொள்கிறார்.



ஈழத்தமிழன், புகலிடம் தேடி, எங்கெங்கு, ஓட முடிந்ததோ அங்கெல்லாம் சென்று  பாய் போட்டு மட்டும் உறங்கி விடவில்லை! பதிலுக்கு தன் இனம், மொழி, சமயம், ஏன் ஏதோ ஒன்றை நினைத்து வேறொன்றுக்காக மாய்ந்தான் என்றால் அதுவும் பொய்யில்லை! நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும், ஒருசிலரைத் தவிர, பலர் பட்ட பாடுகள் எண்ணைக்காக எள் தான் படிருக்குமோ என்பதை சென்ற இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஓரளவு தானும் முப்பதாண்டு கடந்து, அதுவும் முதுமையின் வாசல் படிகளை தாண்டும் வயதில் என்னால்  எண்ண  முடிகிற ஒன்று தான்! அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்மார், தம்பி, தங்கை, உறவு, நண்பர், அயலவர், பள்ளித் தோழர், தோழியர் என்றெல்லாம் நினைவை மீட்டுக்கொண்டதும், ஏக்கமும், கவலையும், மனதை கசக்கி பிழிந்த வேளையில்  காதுக்கு எட்டிய செய்திகளும், புலம் பெயர் ஈழத் தமிழனின், தீராத சோக கீதம்  தான்!
1980 ஆடியில், அகதிகள் வேலை  தடை நடைமுறையாகியது. குறிப்பாக, இரண்டு வருட காலமாக செயல்படுத்தப்பட்டது! எதனை கருதி நாம் எங்கு நுழைந்தோமோ, அந்த நோக்கத்தில் "மண்" விழுந்த நேரம் அது! இந்த நேரத்தில், 1980 தை 15 முதல், பிரான்ஸ் நாடு செல்வோருக்கான விசா நடை முறைக்கு வந்தது ! பிரான்ஸ் செல்ல, வந்தவர்கள் மோஸ்கோ - பாரிஸ் எக்ஸ்பிரஸ் வண்டி மூலம், ஜேர்மன் செல்லும்  வழி தடைப்பட்டதால் கிழக்கு பெர்லின் - ஊடா, மேற்கு பெர்லின் சென்று புகலிடம் கேட்கும் நிலை அறிமுகமாகியது!
இதன் வழியாக குறிப்பாக இளைஞர், குடும்பஸ்தர், பெண்கள் தினமும், பல்வேறு பயண விமானங்களில் வந்து ஜூலோஜிகால் கார்டன், (மத்திய) புகையிரத நிலையம், வீதிகள், புல்தரை வெளி, பூங்கா எனக் கரு முடி மனிதர்கள் நிறைந்து காணப்பட்டு, ஜேர்மன் ஊடகம், தொலை காட்சி, செஞ்சிலுவை  சங்கம், தங்கள் கவனத்தைத் திருப்பி மக்களை ஈர்த்த காரணத்தால், மனித நேய  அமைப்புகளும், மத நிறுவனங்களும், சிலருக்கு உணவு, தற்காலிக  தங்குமிடம், உடை போன்றவற்றை தாமாக உதவின!

இதன் பின்னரே பெர்லின் மாநில அரசு அதிகாரிகள், சில கல்லூரிக் கட்டிடங்களில் தமிழ் அகதிகள் குவிவதற்கு வசதி செய்து  வழங்கின. மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக செஞ்சிலுவை சங்க, அகதிகள்  நிலைய பொறுப்பாளர் ஹோப்மன் எனும் ஜெர்மன் நாட்டவர் (இஸ்லாமிய  மதத்தவர்) முன்வந்து  உதவியதுடன், அகதிகளுக்கு தமிழ் மொழிப்பாளர் ஒருவரை (இளைப்பாறிய  யாழ், தமிழ் அகதி கோரி வந்தவரை) அமர்த்தினார்! (இந்த மகானுபாவர் -தமிழர்  பலர் திரும்பி போக 100 மார்க் பணமும், இலவச பயண சீட்டும் கொடுக்க வழிகாட்டிய நேரத்தில் தான், ஈழத்தமிழ் மக்கள் அமைப்பான நலன்புரி சங்கம் சார்பில், நண்பர்களும், நானும் மனிதஉரிமை ஆதரவளர்களும், செயல்பட மதிப்புக்குரிய டாக்டர் ஹோப்மன் வழிகாட்டலில் அடுத்த 10 ஆண்டு கால  ஐரோபியப் புகலிட வாழ்வில் புத்தம்புதிய அத்தியாயம் ஒன்றை ஈழத்தமிழர்கள்  எழுதினார்கள்!

போலியைத் தோலுரித்தால் புலப்படுவது உண்மை அன்றோ !
இன்று எங்கும் எதிலும் மின்னிக்கொண்டு உண்மைக்கு திரை போட்டு, கண்ணை மறைத்து, ஏன் மனிதனின் காலை வாரி விடும் ஒன்று உள்ளதென்றால்  அது "போலித்தனம்" என்ற மாய வலை ஆகும்! சமூகத்தை ஏமாற்றி, திசை மாற்றி, குட்டிச் சுவராக்கி விடுவது, எங்கும் எதிலும் உண்டு. அரசியல், சமயம், வர்த்தகம், பண்பாடு, பொது சேவை, என அடுக்கிக்கொண்டு போகலாம்! போலிக்கு  ஆலவட்டம் பிடிக்கும் பொய்மை, சாமரம் வீசும் ஏமாற்று! இந்த கருத்தில், ஈழத்தமிழர் நலன்புரிகழகத்தின் மாத இதழ், ’யதார்த்தத்தில்’, வெளிவந்த  கவிதை  வரிகள், "உணவிலும் போலியுண்டு, பணத்திலும், அணிமணி, நகையிலும், எழுதும் தமிழ் கவியிலும் முதல், இடை  கடை என்ற இலக்கணப் போலி காணும்  புலவரும் போலியாவர்!" என்றவாறு போலியை தோலுரித்தால்(1) தோன்றிடும்  உண்மையன்றோ?


1982, செப்டம்பர்  139 அரசியல் தஞ்சம் கோரிவிண்ணப்பம் நிகாரிக்க முன்பே சுயவிருப்பத்தின் காரணமாக நாடு திரும்புவதாகக் கூறி தனி விமானத்தில் கொழும்பு சென்றவர்கள், கைதாகி, விசாரணைக்கு உள்ளானார்கள். இதனை அடுத்து, முன்னாள் சாவகச்சேரி பா. . வி .என். நவரத்தினம் பெர்லின் வருகை தந்து, ஈழத்தமிழர் நலன் புரிக்கழக நிர்வாகிகள் தமிழ் அகதிகள், பெர்லின் அரச செனடொர் குறிப்பாக அகதிகளுக்கு பொறுப்பான ஹென்றிக் லும்மர் ஆகியோரை சந்தித்து தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன் « தமிழர்கள், குடும்பம், உறவு என்று வாழ்பவர்கள் பணம் நாடி இங்கு வரவில்லை உயிர் காப்பு தேடியே வந்துள்ளார்கள் » என்று கூறி, ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வேண்டுகோள் விடுத்தார் ! பெர்லின் பல்கலைக் கழக மண்டபத்தில் ஈழத் தமிழர் நிலை பற்றி உரை நிகழ்த்தியதுடன் அரசியல் நிலைமை பற்றியும் விளக்கினார் ! இதனை அடுத்து, ஈழத்தமிழர் நலன்புரி கழக நிர்வாகத்தின் சார்பில், இராப்போசன விருந்தாக முதன் முதல் இடியப்பம், சொதி வழங்கியதை(2)ப் பாராட்டினார். இந்நிகழ்வின் பின்னணியில், டாக்டர் டெச ஹோப்ப்மன். பசுமைகட்சி, கிறீஸ்தவ அமைப்பு, மனித உரிமை அமைப்புகள் யாவும், ஈழத் தமிழர் நலன்புரிக் கழகதின் சார்பில் செயல் புரிந்தன .

புலம்பெயர்வு வாழ்வின் தொடக்கத்தில் தன்னியல்பாக ‘கழகம் தொடங்கியது
தனித்து வந்த தமிழர், போதிய அறிவுறுத்தல் இன்றி கைது செய்யப்பட்டதும்  பயத்தில் நாடு திரும்புவதாக காவல் துறையினரிடம் கையெழுத்து இடுவர். யாவற்றையும் பறிகொடுத்த நிலையில் கையில் எதுவும் இன்றி திருப்பி அனுப்புவர். இதனை அறிந்து போலீஸ் காவலில் இருப்பவரை மனித உரிமை  வழக்கறிஞர்  உதவியுடன் வெளியே எடுக்க முயல்வதும் அதில் வெற்றி - தோல்வி உண்டு ! எவ்வாறாயினும், சிலர் இணைந்து, தலைக்கு ஒரு  டிம், போட்டு சுமார் 50, 60 டிம்  வழிச் செலவுக்கு கொடுக்க, 147, பொட்ச்டமெர் வீதி, பெர்லின் நகரில் தமிழ் அகதி நண்பர்களாக முடிவு செய்தோம் ! இதற்கு என்னைத் தொடர்பாளராக (தலைவராக) தெரிவு செய்தார்கள்! தனித்தனியாக செய்வதிலும் பார்க்க ஒரு அமைப்பாகச் செய்வது சிறந்த வழி என்று  முதன் முதலாக, சிவ முத்துலிங்கம், பாலசுப்ரமணியம் அவர்கள் முன்வைத்த இருவரின் கருத்தை ஏற்று  -அமைப்பு முறையாக- உருவாகிய அமைப்பு « ஈழ தமிழர் நலன் புரிக்கழகம்! » இது 07.1981, அறிவிப்பின் படி 1.03.1981 இல், முகவரி : பெர்லின் நகரில் (அன்றைய மேற்கு பெர்லின்) 147, potsdamer வீதி. 304 எண் அறையில்  கூடி50 தமிழர்கள், தற்காலிகத் தலைவராக 47 வயது வெ. செ. குணரத்தினம் அவர்களைத் தெரிவாக்கி பின்னர், பொதுகூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு பதிவு செயப்பட்டது !

1983 ஆடிப்  படுகொலையும்  பெர்லின் தமிழர் எதிர்ப்பு ஊர்வலமும் !
1983 ஆடி, படுகொலை உலகில் பரந்து சென்று உறவுகளை பிரிந்து வாழ்ந்த  ஈழத்தமிழ் மக்களை  ஆழ்ந்த துயரக் கடலில் மூழ்க வைத்த ஒன்று ! 1981ல்  யாழ் நூல் நிலையம் தீ மூட்டபட்ட பின்னர், நடந்தேறிய பாரிய, துயரமாக  ஆடி கலவரம் நடந்தேறியது! இதனை அடுத்து பெர்லின் வாழ் தமிழ் அகதிகள்  அனைவரும் இணைந்து, எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க ஈழத்தமிழர் நலன்புரி கழகம் சார்பில் 22 விடுதிகளில் குடியமர்த்திய தமிழ் அகதிகள் 2000 பேர்  அனைவரையும் திரட்டி, அத்துடன், மனித உரிமை அமைப்புகள், பல்கலைக் கழக மாணவர்கள், இடதுசாரி ஆதரவாளர்கள், குறிப்பாக ஸ்பார்ட  ஆதரவாளர்கள், பசுமைகட்சியினர் ,அனைவரின் ஆதரவுடன் மாபெரும் ஊர்வலம் அன்றைய  தலைவர் வெ.செ. குணரத்தினம் ,தலைமையில்  வெற்றிகரமாக நடந்தேறியது !
இதற்கும் வழிகாட்டியாக, இருந்தவர் டாக்டர் டி .தெச ஹோப்ப்மன் அவர்கள்தான்! இலங்கை தமிழர்களின் அவலங்களை அவ்வவ்போது ஐரோபிய ,ஊடகங்களில் வெளியிட்டுபிரசாரம் செய்த காரனத்தால் அவருக்கு இலங்கை அரசு, விசா  மறுத்தது குறிப்பிடத்தக்கது ! அன்று, மனித உரிமை சட்டத்தரணி கந்தசாமி, அங்குள்ள நிலைமையை, ஹோப்ப்மன் அவர்களுக்கு, அனுப்பி வந்தார் !
அவரின் மறைவுக்கு, பின்னர்  வீரகேசரி பத்திரிகை தருவித்து, செய்திகளை  ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து கொடுக்க அவர், ஜேர்மன் மொழியில்  மாற்றம் செய்து அறிக்கை தயாரித்து அரசு, நீதிமன்று, ஊடகங்களுக்கும்  வழங்கிய காரணத்தால் மட்டுமே இன்றைய தமிழரின் புகலிடம் நிரந்தரமாகும் வாய்ப்பினை எய்தியது ! அவரின் தலைமையின் கீழ் இருந்த "ஒடுக்கப்பட்ட - மக்களுக்கு உதவும் உலக அமைப்பின்பெர்லின் கிளையும் அதனை சார்ந்த  திரு பீர்புசோல்ஸ், தினரிட்டர், ரோசி மெல்லி, வோர்ப்ரோட் (peerbuchholz Tinaritter , Melli , vorbreit) ஆகியோரின் தன்னலமற்ற சேவைகள் என்றுமே குறிப்பாக, பெர்லின் புகலிட தமிழர்கள், மற்றும் ஐரோபிய புகலிட தமிழர்களாலும் கூட மறக்க இயலாது !


தனி மனிதநலன்களை மனதில் கொண்டு பொதுநலன்களை நாம் இழந்துள்ளோம் என்பது அங்கும் இங்கும் வரலாற்றில் கண்டு கொண்டுள்ளோம்! கழகம், கட்சி, கோவில், தொழில், கொள்கை எல்லாவற்றிலும் இதனை காணலாம் - சுட்டிக்  காட்டலாம்! அன்று கை எழுத்து வடிவில் வெளியிட்ட, யதார்த்தம் வெளியீடு 1வது தழ் நவம்பர். 1982 தொடக்கம் மாதாந்தத் தொடராகவன்றி 29 இதழ்கள் வெளிவந்தன. நிர்வாக மாற்றங்களினால், தடைகளும், ஆர்வம் குன்றியும் காணப்பட்டது. கழக, நிர்வாகப் பொறுப்பு ஏற்காவிட்டாலும் இதழ் வெளியீடு உருவாக்கம், விற்பனை எனப்  பங்களிப்பை என்னால்  வழங்கத் தவறியதில்லை. இவ்விதழ் வெளியீட்டுச்  செலவாக டி.எம். 300/, ஒடுக்கப்பட்டவர் உரிமைக்கான பெர்லின் அமைப்பின், தலைவி டாக்டர் தீச ஹோப்ப்மன் பெற்று தந்ததுடன், வெளியிட்ட, இதழ்களை  பெர்லின் பல்கலைகழகச் சுவடி காப்பகத்தில் சேர்த்து வைக்கவும் ஒழுங்கு செய்வித்தார். இன்று கணனிப் பாவனை அதிகமாகியும், நம் இளந்த தலை முறையினர், தமிழ்மொழி அறிவு, ஆர்வம் குன்றிக் காணப்படுவதும், தாய்மொழி ஆர்வம், இன்றியும் இருப்பதும் காரணிகளாக காணப்படுவது போலத் தெரியமுடிகிறது !
விழாக்களில்  இளைய தலை முறையினர் எங்கு எந்த  மொழியை கற்று வந்தாலும் பெற்றோர்  விழிப்போடு தத்தம் பிள்ளைகள் தாய் மொழி கற்க வேண்டிய அவசியத்தை அடிப்படைக் காரணமாக புரிந்து கொண்டால் தாய் மொழியை கற்றுத் தேறுவது என்பது சிரமம் ஆகமாட்டாது. ஜேர்மன் மெயின்ஸ் (mainz) பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டீட்டர் வுண்டேர்லிச் 2003, தை 22 ம் நாள் ஆற்றிய உரையில் "தாய் மொழியை அறியாத ஒருவன் வேறென்ன தான் இழக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டிருப்பது தமிழருக்கும் சேர்த்து தான்! ஆனாலும் புலம் பெயர்ந்து வாழும் பல பெற்றோர் "எம் பிள்ளைகள் தமிழ் பேசத் தேவையே இல்லை அவர்கள் நல்ல அறிவாளியாக நன்கு உழைப்பவர்களாக இருந்தால் போதும். தமிழ் ஒரு கருத்து வெளிப்பாடுக்கான ஒரு மொழியே தவிர அதில் ஒன்றும் இல்லை!" என்று எண்ணுகிறார்கள், இப்படியானவர்கள் புலப்பெயர்வில் நிறைய உண்டு!
புலப்பெயர்வில் வாழும் தமிழர்களின் பொது மற்றும் குடும்ப உறவினர் நண்பர்கள் நிகழ்வுகளில் அண்மையில் அல்லது தூரத்தில் (வெவ்வேறு நாடுகளில்) இருந்து வந்து கலந்து கொள்ளும் குறிப்பாக இளைய தலைமுறை -வருங்கால தலைமுறை- புலப்பெயர்வில் எந்த மொழியை ஊடாடு மொழியாக்க நினைக்கின்றனர் ? இன்று நாம் தாங்கிப்பிடிக்கும் - தமிழ் -தமிழர் விழுமியங்கள் என்ற காரணிகளை  எம்மொழி மூலம் ஆளுமையாக்குவார்கள்? என்று இன்றுள்ள நாம் சிந்திக்க  வேண்டாமா?

பசுமதி யும் -பூசணியும் !
இன்று வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்களின் சமய, குடும்ப, பொது வைபவங்கள், எதுவாயினும் அங்கெல்லாம் சென்று பங்குபற்றும்  தமிழர்கள், விருந்தினர்கள் என அனைவருக்கும், இவ்விரண்டு பதார்த்தங்களின் சுவை அறியாமல் இருக்கமாடார்கள் என்று மட்டும்  நிச்சயம் கூறிவிடலாம்! சிலசமயங்களில் பசுமதி அரிசியும் பூசணி சாம்பார், (சில நேரங்களில் பருப்பு வகையும் கலந்து விழி பிதுக்கம்!) விருந்து  காத்திருக்கும்! அன்று, பஞ்ச காலத்தில் சீன சுண்ணாம்பு பச்சை, கண்ணாடி பச்சை என்று ஒருவகை அரிசியை ஆங்கில அரசு இலவசமாகத் தந்திருந்த காலத்தை ,நினைவூட்டுவதாக சிலருக்கு எண்ணம் வரலாம். குடும்ப விருந்துகளில் சுவையாகவும், வகையறாக்களும் நிறைய இருக்கும் மறுக்கவில்லை.
பொது - சமய வைபவங்களில், அன்னதானம் என்று கூறலாம் (?) என்றால் இங்கு அதனை யாருக்கு யார்  வழங்குவது ?’ என்பதும் இங்கு எழுப்பப்படும் வினாவாகும் ! தங்களுக்கும் வெண் தோலர் அறிமுகம், நட்பு உண்டு என்பதை வெளிக்காட்டும் பொருட்டு சிலரையும் அழைப்பதுண்டு ! அவ்வாறு அவர்களில் வேலை தரும் முதலாளி, நண்பர், பிள்ளைகளின் நண்பர்கள் என இனம் காட்டப்படும்.
அங்கு இடம் பெறும் நிகழ்வை உன்னிப்பாக கவனிக்கும் சிலர் (எசமானர் என்றால் ...!) எப்படி இவ்வாறு செலவு செய்ய so  and  சோவால் முடியும்?’ வேறு தவறான வழியில் பணம் பெறுகிறார்களா ? என்று கேள்வி எழுப்பியதும் உண்டு ! மேலும் தமிழர்கள் கடின உழைப்பாளர் சேமிப்பாளர் என்று அவர்களுக்குத் தெரிய நியாயம் இல்லை ! மேலும், கூலியாகப் பெறும் தொகையைக் குறைத்து காட்டி மிகுதி பெற்று கொள்ள வழி தெரிந்ததும் அவர்கள் அறிய மாட்டார்கள். இவ்வாறு பாதி கையிலும் பாதி கணக்கிலும் பெறுவதால் ஓய்வு பெற்றவர்கள், தமது ஓய்வு ஊதியம் குறைந்து  கடைசி வரை உதவி பெறவேண்டி கையேந்தவேண்டி உள்ளதும் இன்று காண முடிகிறது! உடல் உழைப்பு தந்து, உழைத்து பெறவேண்டிய பணத்தை  சீட்டு (வங்கியில் இட முடியாது !) கட்டியும் வட்டிக்கு (குட்டி போட கொடுத்தும்) வட்டியும் இல்லை, முதலுக்கும் நாசம் ஆகி, மனம் வெதும்பி உண்ணாமலும், அண்ணாமலையானுக்கு கொடுத்த கதையை போல பாயிலும் நோயிலும் வீழ்ந்தவர்கள் பலர் உண்டு, இன்றைய புலப்பெயர்வில் !
அண்மையில் ஆண்களுக்கு, பெண்கள் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதைப்போல , பெண்கள் மட்டும் குழுவாகி, சிறு சிறு ,குழுக்களாகி ஒவ்வொருவரும் 5 பேர்களை சேர்த்து தலைக்கு ஈரோக்கள் 1000/- கொடுத்து, 15 வது ஆள் சேர 10000/ வழங்கப்படும் என்ற விளம்பரத்தில் மயங்கி தமது குடும்பம், பிள்ளைகள்,  உறவினர், நண்பர் என பலரையும் குழுக்களாக்கி தாம் தாமே பணம் செலுத்தி ( இதனை பொறுப்பேற்று ,நடத்தியவர் தமிழ் மாது அல்லர்), ஈற்றில், பணத்தை பறிகொடுத்து ஏமாந்தவர் பலர் ! அகதி ,நிலை பெற்று உதவி, சிறு வேலை என தாம் உழைத்த பொருளை ஒழுங்காக சேமிக்கத் தெரியாது, தப்பான வழியில் பிறர் பணத்தை வட்டியாக தட்டிப்பறிப்பது இன்று குறிப்பாக இங்கிலாந்தில் கடும் குற்றமாகக் கருதப்பட்டு தண்டனை வழங்க  அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது! நாம் பணத்தை உழைத்து, சேமிப்பது, ஒன்றும் தவறில்லை, ஆயினும் உழைத்த பணத்தில் ஒரு பகுதியைத்  தானும் நமது சொந்தங்களின் நல்வாழ்வுக்கு கொடுப்பது கடன் ஆக கருதல் கடமை அன்று. விடுதிகளில் வேலை இன்றி சிறிய பணத்தில் சிறு துளியாக சேர்த்து பல ஆயிரம் DM வழங்கிய அனுபவம் எத்தகைய மேன்மை கொண்டதென்பதை கூறவேண்டும் !
அன்றுபோல் அனைவரும் எங்கும் எந்த ஒரு விடயத்திலும் ஒன்று போல இருக்கவில்லை இருக்க போவதும் இல்லை என்றாலும் புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் கூட தமது  சொந்த மக்கள் ,துன்பத்தில்  வாழ்வதைகண்டும் சிறிது உதவமுடியாது இருப்பது ஏன் ?
இன்றைய கால கட்டத்தில் உதவிட யாரும் வரமாட்டார்களா ? என ஏங்கித் தவிப்பவர்கள் ஆயிரம்  ஆயிரம் என்று கூறமுடியும் ! வசதி வேலை வீடு உதவி என குடும்பமாக  வாழ்கின்றவர்கள். பிறர் துன்பத்தில்  பங்குகொள்ள அதிகம் அக்கறை காட்டுவதில்லை. காரணம் தத்தமது வசதிகளையும் தேடல்களையும் பெருக்கும் நோக்கில் சுய நல போர்வைக்குள் தம்மை மூடிக்கொண்டு மற்றவர்களை மறந்து விடுவது தான் காரணம் ! இதற்கு பெர்லின் ஈழ த. ந. க. மே நல்ல உதாரணம் !
80களின் தொடக்கம் முதல் புலம் பெயர்ந்து வாழும் நிலை கேள்விக்குறியாக  தொடர்ந்த காலத்தில் வருமானம் இன்றி சிறிய, உதவி பெற்று வாழ்ந்து எதிர்கால  இருப்பு அறிய முடியாத நேரங்களில்  சிறு தொகை மூலம் பெற்று  குறிப்பிடக் கூடிய பொருள் திரட்டி உதவி வழங்க முடிந்தது ! அவ்வாறு யாழ் மறைமாவட்டம் -டிம் .5000/-, தமிழர் அகதிகள் புனர்வாழ்வு -டம் .5000/-, "ஈழ அகதிகள்  புனர்வாழ்வு (தமிழ் நாடு)-டிம் .5000/-, தமிழர் புனர் வாழ்வு (ஈழம் ) -5000/-, திருமலை இந்து இளைஞர் பேரவை டிம் 5000/-, போன்ற அமைப்புகளுக்கு வழங்க முடிந்தது !
ஆயினும் இன்று வீடு, தொழில், நிலையான வருமானங்கள் என புலம் பெயர் - வாழ்க்கை விரிந்து அணி மணி, ஆடம்பரம், உல்லாசப் பிரயாணம், மற்றும்  வசதிகளுடன் வாழும் எம்மை, நாம் சுய விமர்சனத்துக்குள் உட்படுத்தல்  தேவையாகும் ! பசிக்கும் வயிற்றுக்கு பால் வார்க்க வேண்டாம் கஞ்சி தானும்  குடிக்க வைக்க வேண்டும் அல்லவா?
இன்றைய தலைமுறைத் தமிழரின் புலப்பெயர் வாழ்வில், வரலாற்றில், முன்னொருபோதும் இல்லாத வகையில், தமிழ் (ஈழ ) புலம் பெயர்  வாழ்வில் தோற்றம் பெறுவது, உலக தாராள மயமாக்கலின் ஓர்  அங்கம் போல அனைவரிடமும் தாயாக மக்களை தாண்டிய, பணப் புரளல் என்று தயக்கமில்லாமல் கூறலாம் -கூறமுடியும் ! கட்டுப்பாடான  சட்டதிட்டங்களை பொதுமக்களுக்கு எதிரான சமூக விரோத வழிகள், அரச விரோத, எத்தனங்கள் என முடிந்த அனைத்து வழிகளை தேர்ந்தெடுத்து, திடீர் பணக்காரர்களாக தம்மை மாற்றிவிட முனைப்பு காட்டிய பலர் கடந்த  காலங்களில் எவ்வாறு தமது முடிவை கண்டார்கள். ஏன், வாழ்வையே இழந்து விட்டார்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான் ! "ஒழுக்கம், உயிரினும் ஓம்பபப்படவேண்டியது !" என்று எழுதிவைத்த வள்ளுவன் கூட .அதை, நமக்கா என்று  கூறுவதே வெட்கப்பட வைக்கும் ஒன்று !
"அதே போல அவ்வை பாட்டி பாடிவைத்த, "அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், வஞ்சம் கூறாதே !" என்றெல்லாம் எழுதிய பண்பாட்டு, நெறிமுறைகளை தூக்கித் தூர வீசி விட்டு, பணத்துக்காக  தூப தீபம் போடும் நிலைக்கு தள்ளப்பட்டு, "பணம் படைத்தவர்கள் நாம் ! " என்ற திமிர் கொண்டவர்களா? என்று கேட்க வேண்டி உள்ளது!
பிறந்த மண்ணை, பேசும்  மொழியை, அறிந்த நண்பரை, பாச உறவுகளை, நேசக்கரம் நீட்ட வேண்டிய நம்  தேசத்து சொந்த பந்தங்களை, புறந்தள்ளி விட்டு, தெரியாத ஊருக்கு, அறியாத வழி தேடி, அலைகின்ற மனிதனைப்போல அழிகின்றவர்களாகவா நாம் வாழப்போகின்றோம்?

"பணம் ,பணம் !" என்று மனம் எந்நேரமும் எண்ணி எண்ணி நொந்து போவதால்,   பயன் எதுவும் வரமாட்டாது. பதிலுக்கு மன விகாரம், சினம், பொறாமை, என  வெறுப்படைந்து வாழ்க்கை பாழாகி விடுவது காணக்கூடிய ஒன்று ! நேரிய  வழியில் பழி சேராது தனது முயற்சியை முதலாக்கி தேவைக்கு உகந்த பொருளை சேர்த்து வாழ்க்கை தேரை இழுப்பதே நல்லறம். பிறர் « தன்னைப் பற்றிப் பேச வேண்டும் மதிக்கவேண்டும் ! » என்ற பேராசையால் தவறான நோக்கில் பொருள், புகழ் பெற முயல்வது துன்பத்தில்தான் முடியும் ! புலம் பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியில் இன்று குறிப்பிட்ட வயது வரை தொழில் புரிவது கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று ! அத்துடன் அகதி நிலை தகுதி பெற முடியாது, போயின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பபடுவதும், சொந்த நாட்டின்  நிலை சீரடையும் போது சொந்த நாடு திரும்ப வேண்டியும் வரலாம் !
இந்த நிலையில் பெரும் பொருள் செலவில் பேருக்கு கட்டிடங்கள், சிலைகள்  அமைத்து  ஊருக்கு  ஒன்றுக்கு இரண்டு, மூன்று என மனம் போன போக்கில்  ஆலய அமைப்புகள் பெருக்குவது எத்துனை அவசியம் என்பது தெரியவில்லை !  இவற்றில் தனிமனித குறிக்கோள் எப்படி என்பதை ஒருவரால் நன்கு புரிய முடியும் !  இதன்  நோக்கங்களும், அதன் மூலம் பெறும் தாக்கங்களும் எப்படி என்பதை காலம்தான் பதில் கூறும்!
(நினைவுத் துளிகள் இன்னும் சொட்டும் !)
   படங்கள் நன்றி : கூகிள் இணைய வழங்கி குணம் அண்ணா
   அடிக்குறிப்பு :
1. "போலியை தோலுரிப்போம் ,!" என்ற கவிதை , எம்மால் எழுதியது! 1989 ம் ஆண்டு நவராத்திரி  விழாவில் (ஈழத்தமிழர் நலன்புரி கழக) - வாணி விழா கவிதை அரங்கில், எம் . கவுரிதாஸ் படித்தார் . பின்னர்  யதார்த்தத்தில்  வெளிவந்தது .
2. வி.என் .  நவரத்தினம் பா.உ .வருகையின் , போது ஈ. த .ந .க .சார்பில் முதன் முதல்  புலம்பெயர்வு வாழ்வின் பொது நிகழ்வில் 'இடியாப்பம் இரவு உணவு'  வழங்கிய படம் காண்க !
( யதார்த்தம் ,வெளியிட்ட கட்டுரை யாவும் ,கையெழுத்து வடிவம் ஆயினும் , காத்திரமான கருத்துக்கள் )
பிற்குறிப்பு :
1.       யதார்த்தம் இதழ்


1982 நவம்பர் 10-ம் நாளிலிருந்து வெளிவந்த 'யதார்த்தம்' இதழ் தொடர்ச்சியாக 29 இதழ்கள் (1982 – 1987)

முப்பது வருடங்களுக்கு முன்னர், ஈழத் தமிழர் புலம்பெயர்வில், பேர்லின் மாநகரில், கால்கோள் இட்டு, அன்றைய நாட்களில், உரிமைக்கும், உணர்வுகளுக்கும் தீனி போடவேண்டும் என்ற நோக்கில், சிந்தித்த சிலரின் எண்ணப்படி, முன்னர் பத்திரிகையாசிரியர்(தினபதி) தொழில் அனுபவமுடைய இரா.பாஸ்கரன் ஆசிரியராகவும், திருவாளர்கள் முகுந்தன், நகுலன், குகன், கண்ணன், குணன் (இவர்களில் ஒருவர் தவிர ஏனையவர்கள் இன்று பேர்லினில் இல்லை) மற்றும் பலரின் ஒன்றுபட்ட உழைப்பின் விளைவாக "யதார்த்தம்" உருப்பெற்றது. பேர்லின் ஈழத்தமிழர் நலன்புரிக் கழகத்தின் வழிகாட்டலுடன், 'ஆபத்துக்குள்ளானோருக்கு உதவும் அமைப்பு' (organisation for endangered people) வழங்கிய நிதியுதவியுடன் கையெழுத்துப் பதிவில், கனமான கருத்தாழமிக்க கட்டுரைகள், செய்திகள், கொள்கை விளக்கங்களுடன், புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர் நலன்கள் பேணும் கவசம் போல 1982 முதல் 1987 வரையான காலப் பரப்புள் 29 இதழ் வெளியிடப்பட்டன! இவ்வாறு வெளிவந்த இதழ்களுடன், ஒன்று விசேட வெளியீடாகவும், ஒன்று சிறப்பு இதழாகவும், மற்றொன்று பத்தாண்டுநிறைவு இதழாகவும், கடைசியாக நலன்புரிக் கழகந் தொடங்கி, கால்நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியபோது (1982 - 2007) வரலாற்று மலராக புலப்பெயர்வின் ஆவணக் கோவையாகவும் (அச்சுப் பதிவில்) வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது! இதனை வெளியிட எண்ணியவேளை, "யதார்த்தம்" என்ற பெயரை முன்மொழிந்தவர் நண்பர் குகன் ஆவார்! முதலாவது இதழில் சிறந்த சிந்தனைகள் நிறைந்த கட்டுரைகள் எழுதிய திருவாளர்கள் குணன், முகுந்தன், குகன், கணேசன், தங்கராசா மற்றும் ஆசிரியர் இரா.பாஸ்கரன், ஓவியம், பிரதி எழுதல், வடிவமைப்பு போன்றவற்றிலும், தொடர்ந்து அதன் வெளிக்கொணர்வில், பங்காற்றியவர்களில், கழக நிர்வாகங்களில் பதவியேற்ற பலரையும் 25 வது ஆண்டு நிறைவு மலரில் காணலாம்! இந்த இதழ்கள் வெளியீட்டு முயற்சியை இன்று மீட்டுப்பார்க்கையில் இனிக்கும் நிகழ்வாகி ஆறுதல் தருகிறது.இவ்வாறு நீண்டவரலாற்றுடன் வளர்ந்து வந்த இந்த இதழ், இன்றைய கணினி யுகத்தில் தொடரப்படாது, நின்றுவிட என்னதான் காரணமோ தெரிய முடியவில்லை!
பேர்லின் 'டாலம்டோவ்' பல்கலைக்கழகத்தின், வெளிநாட்டவர்க்கான சுவடிக் காப்பகத்தில் டாக்டர் கோவ்மன் அவர்களின் ஆதரவுடன் இவ்விதழ்கள் பேணப்பட்டிருப்பது ஓர் வரலாற்று பதிவேயாகும். இது புலப்பெயர்வின் செய்தி, சிற்றிதழ் முயற்சிக்கு தரப்பட்ட ஆவண அங்கீகாரமுமாகும்! 
2.   

ஞாபகம் : நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை. ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார்.
நூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கிறது http://ta.wikipedia.org/s/udr
மறதி : (Amnesia) என்பது ஒரு வகையான நினைவுகளை இழக்கும் நிலை ஆகும். மயக்க நிலையில் நிகழ்ந்தவற்றை முற்றிலும் நினைவுபடுத்த இயலாமை. பிற விளைவுகளை உருவாக்கும் ஹிப்போகேம்பஸ், அமிக்டலா, ப்ரீஃப்ராண்டல் கார்டெக்ஸ் ஆகியவை செயலிழத்தல். நுழைக  : http://ta.wikipedia.org/s/11wh
வரலாறு (History) : என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது.
வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன. http://ta.wikipedia.org/s/a8d


‘புலம்பெயர் தமிழர்’ என்ற புதிய அடையாளத்துடன் பூமிப்பரப்பெங்கிலும் எம் தலைமுறையினர் வாழத் தலைப்பட்டுவிட்டனர். இக்காலத்தில் முதற் தலைமுறையினராகிய நாமும் பிணைந்துள்ள அற்புதமான கடைசித் தருணத்தில் சங்கமிக்கிறோம்.
காலம் கரைந்து கடக்கிறது. கடந்துவந்த பாதைகள் தொடர்பாக எம்மிடம் போதிய ஆவணங்கள் இருக்கின்றனவா ?  இதை யார் செய்வது ? ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்துவமானதொரு வாழ்வுத் தடமிருக்கிறதே ! இதை ஆவணப்படுத்திட வேண்டாமோ ?
எமது சங்கிலித் தொடரான வாழ்வுத் தொடர் ஆவணங்களை குடும்பங்களாக – தத்தமது கிராமங்களாக – குடியேறிய நாடுகளாக – நமது நினைவு மீட்கும் சங்கங்களாகப் பதிய வேண்டாமா ?  இத்தகைய வினாவில் உருவான பதிலின் நீட்சியிலான பதிவுதான் இத்தொடர்.
தம் நீண்ட பல்லாயிரக் கணக்கணக்கான நம் முன்னோர்கள் வரலாறு ஏடுகளாக இருந்தவை பேரழிவாகிப் போக செவிவழிக் கதைகளாக மட்டும் எஞ்சிய எமது வரலாற்றை பரவிவிட்டுச் சென்றதன் கோரத்தை நேரடியாகவே அனுபவித்த தலைமுறையினர் அல்லவா  நாம் ?
ஐரோப்பிய - அமெரிக்க வரவின் பின்னராவது இங்கு உன்னதமாகப் பேணப்படும் பதிவு செய்யும் முறைமையை உய்த்துணர வேண்டாமா ?
ஆவணங்கள் இல்லையேல் எதிர்காலத் தலைமுறையினர் முகமற்றவர்களாகவே கணிக்கப்படுவர். முடிந்ததைச் செய்யும் முயற்சிகளில் இதுவும் ஒன்று – 35 வருடங்களாக பெர்லின் நகரில் வாழும் மதிப்புக்குரிய குணன் அவர்களது பதிவு இது!


தொடர்பான பதிவுகள்

பெர்லின் ஈழத் தமிழ் அகதி(அதிதி !) வாழ்வின் தொடக்கம்

நினைவுத்துளிகள் (19)



  இணைத்தவர் : முகிலன்
   நான் பெரிதும் மதிக்கும் குணன் அவர்களால் எழுதப்படும் தொடர் பதிவு இது. 'பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்' நினைவுத்துளிகள் (20)
பாரீசு 02. 07. 2014 : சுவட்டுச்சரம்1


2 comments:

  1. காலத்தின் பதிவாகவும் வித்தியாசமான எழுத்து நடையாகவும் இருக்கிறது. வயதான காலத்திலும் நல்ல ஞாபக சக்தியுடன் தாங்கள் மேற்கொள்ளும் பதிவு முயற்சிக்கு எமது நன்றிகள். தொடருங்கள்.

    தெங்களது முதல் பத்து வருடங்களின் அனுபவத்தில் -அந்தக் காலத்தில்- பேர்லின் ஊடாக வருகை தந்தவர்களில் தங்களைப் பாதித்த அனுபவங்கள் சிலவற்றையும் பதிவு செய்யலாம்தானே.

    ReplyDelete
  2. வருகை தந்து வெறுமனே கடந்து செல்லாது தங்களது எண்ணங்களைப் பதிவு செய்த அருந்தா அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றிகள்!!

    ReplyDelete