Saturday, 28 June 2014

மனப்பிறழ்வு மருத்துவ மனைக்குள் முதற் தடவையாக நுழைந்த தபாற்காரன் கதை

செவிவழிக்தை 23
கதைச்சரம் 26
மனப் பிறழ்வு மருத்துவமனைக் கதைகள்

மனப்பிறழ்வு மருத்துவ மனைக்குள் முதற் தடவையாக  நுழைந்த தபாற்காரன் கதை


அவனால் அந்த நாளை மறக்கவே முடியாது. முதற் தடவையாக வேலையில் இணைந்தநாள் அது.  தபாற்காரன் வேலை என்றாலும் அரச பணியாகையால் மகிழ்வுடன் இணைந்திருந்தான். முதல் நாளாகத் தொடங்கிய அவனது பணி எல்லைக்குள் அந்த புகழ் பெற்ற மனப் பிறழ்வு மருத்துவமனையும் இருந்தது. அந்த மருத்துவ மனைக்குள் இவன் ஒருபோதும் சென்றதே கிடையாது. ‘மனப்பிறழ்வு’ என்றால் என்ன என்று எதுவுமே புரியாத வாலிப வயது.

« பச்சை உடுப்பு அணிந்திருப்பார்கள்…. »
« எதை நினைத்திருந்தார்களோ அதைத்தான் செய்வார்கள் ! »
« ஒழுங்காகத் தூங்கவே மாட்டார்கள். இதனால் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ! »
« சிலரை அறைக்குள்ளாகவே அடைத்து வைத்திருப்பார்கள் !  சிலரை நடமாடவிட்டிருப்பார்கள் !  இப்படி நடமாடுபவர்களை ஒருக்காலும் நம்பிவிடக் கூடாது 
« மருந்துகள்  - மின்சார உயர் அழுத்த வைத்தியம் எல்லாமே அங்கு நடைபெறும். சாதாரணப் பார்வையால் இவர்களை எடைபோட முடியாது !  அகையால் யாருடனும் தேவையில்லாமல் கதைக்கக்கூடாது.»
« பொதுவில யார் நோயாளி ? – யார் விடுதிக் காப்பாளர் ? என்பதையே இனங் காணமுடியாது ! »

நண்பர்கள் கதை கதையாகச் சொல்லிக் கிலியூட்டியிருந்தனர். அவர்களது ஒவ்வொரு வாக்கியங்களும் ஊர்ந்து வந்து படங்காட்டி அவன் வேலைக்குப் போக இருக்கும் நாளுக்கு முதல் நாள் இரவின் தூக்கத்தைக் கெடுத்தன.

‘இப்படியான ஞாபக சக்தி அப்ப பள்ளிப் பரீட்சை எழுதிய காலத்தில் இருந்திருந்தால்…’. என தன்னை நினைத்த அந்தக் கணத்தில் பெருமூச்சொன்று நிதானத்துடன் வெளியேறியதை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
00000 000000


‘அழுதழுதும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும் !’ என்ற பழமொழி பெண்களுக்கானதென்று மகிழ்ந்தவாறு கடந்து வந்தவன் அவன். ஆனால் இன்று அந்தப் பழமொழி அவனது ஞாபகத் தடத்தில் வந்து நின்று புதிய அர்த்தத்துடன் வாழ்வைக் காட்டியது. ‘கிடைத்த வேலையையும் விடமுடியாது ! எனவே வருவது வரட்டுமென’ முடிவெடுத்தவனாகத் தனக்கான கடிதக் கட்டுகளுடன் இறங்கினான்.

வெளியிடங்களின் விநியோகம் விரைவாகவே நடந்தது. அப்படியே அந்த வைத்தியசாலை பெருங்கதவு வழியாக உள்நுழைகின்றன அவனது கால்கள். என்னதான் மனதுக்குத் தென்பு கொடுத்திருந்தாலும் அவனது கண்கள் தானாகவே அங்குமிங்குமான பார்வைத் துளாவலை நிகழ்த்துகின்றன.

‘அப்பாடா… ! வில்லங்கமாக யாருமே தென்படவில்லை… ! இவனது நுழைவை யாருமே கவனித்த்தாகவும் தெரியவில்லை.
ஆனாலும் பட்டென்று உச்சந்தலையில் குட்டு விழுந்ததுபோல் ஒரு நினைவு குறுக்கிட்டது. முற்றத்துப் புல்வெளியில் இரண்டு பச்சைச்  சட்டையணிகளுடன் இருவர் வேலை செய்தவாறு இருந்த காட்சி அது.

‘பச்சை அணி’ யாரைக் குறிக்கும் ? இவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் ?’ திரும்பவும் மனம் குழம்ப மெல்லத் திருப்பிப் பார்க்கிறான்.

சொல்லி வைத்தது போல் அவர்களும் இவனையே பார்த்தவாறு கைகளில் புல்வெட்டும் வீச்சுத் தகடுகளுடன் நிற்கிறார்கள். நெஞ்சு படப்படவென அடிக்கத் தொடங்கியது. சட்டென முகத்தைத் திருப்பியவன் கொஞ்சம் விறுவிறுப்பாக அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். ‘வேலைக்கு வந்தவங்களென்றால்…. வேலைசெய்யாது என்னை ஏன் பார்க்க வேண்டும் ? அப்படியென்றாரல் இவர்கள் அந்த நோயாளிகள்தான்…. !’ என அவனது மனம் கணக்குப் போட்டது.
இப்படியாக மனக் கணக்கு போட்டபடி மிகவும் நாசுக்காக ஒரு திருப்பத்தில் அவனது முகம் அவர்களை நோட்டமிடத் திரும்பியது. ‘என்னது ஆக்களைக் காணோம் ?’ புற்தரையில் அப்போது அவர்களைக் காணாததால்  திகைத்துப் போனவனாகி முழுமையாகத் திருப்பிப் பார்க்கிறான்.

ஐயோ !! ஐயையோ….. கைகளில் புல் வெட்டும் வீச்சுத் தகடுகளுடன் அவர்களும் அவனைப் பார்த்தவாறு வந்து கொண்டிருந்தனர். ‘அப்படியானால்…. இவர்கள் இங்குள்ள நோயாளிகள்தான் ! என்னை ஏன் பார்த்தவாறு வருகிறார்கள் ?..... அல்லது வேலை முடிந்து செல்கிறார்களோ ?... அதனையும் ஒருக்கால் உறுதிப்படுத்தி விடுவம் !’ இப்படியான தருணங்களில் மனக் கணக்குகள் தெளிவாக விடைகளைத் தந்துவிடும். அவனது கைகள் தோற்பையை இறுக்கிப் பிடிக்க கால்கள் இப்போது எட்டி நடையாக வீச்சமெடுத்தன. அடுத்த திருப்பத்தில் லேசாகத் திரும்பிப் பார்க்கிறான்.

அவர்களும் வீறு கொண்டவர்களாகத் தொடர்வது உறுதியானது. பிறகென்ன…. அவனது மூளை கட்டளை பிறப்பிக்கும் முன்னதாகவே கால்கள் ஓடத் தொடங்கிவிட்டன. ஐயோ பரிதாபம்… அவர்களும் அவனைத் துரத்தியவாறு ஓடத் தொடங்கினர். ஏதுமே புரியாத வைத்தியசாலை வளாகத்தில் கண்முன் தெரியாதவனாக அவன் ஓட்டமெடுத்தான்.
அந்தோ பரிதாபம்….. அடுத்த திருப்பத்திலிருந்த சிறு மேடு இவனைத் தடுக்கிவிட்டது. அப்படியே « ஐயோ… அம்மா… ! » என முனகியவாறு கண்களை மூடியவாறு அப்படியே குப்புற விழுந்தது மட்டும்தான் தெரியும்.

கீழே கிடந்தவனுக்கு துரத்தி வந்தவர்களது காலடிச் சத்தம் தெளிவாகவே கேட்டது. முதற்காலடிச் சத்தம் அண்மித்துக் கொண்டு பேரோசையாகி உருப்பெருத்துக் கொண்டிருந்தது.

‘வாறாங்கள்…. வாறாங்கள்…. வந்துட்டாங்கள்… நான் தொலைந்தேன்!’ அவனது மனம் இறுகிப் போனது.

வாளால் வெட்டப்படும் பயத்தில் கிடந்தவனது முதுகில் ஒரு கை வந்து இலேசாகத் தொட்டு விலகியது.

« நான்தான் முதலில் தொட்டேன்…. எனக்குத்தான் வெற்றி !!! » என்று கூறியவாறு கையை எடுத்தவாறு துள்ளிக் குதிக்கத் தொடங்கினான் முதலாவதாக வந்தவன். அப்படியே இரண்டாவதும் தொட்டுவிட்டுத் துள்ளிக் குதித்தவாறு « நான்தான் இரண்டாவது !! » எனச் சிரிக்கத் தொடங்கினான்.

நம்ம தபாற்காரனுக்கு ஏதுமே புரியவில்லை. நைசாக ஓரக்கண்களால் பார்க்கிறான். அவர்கள் இப்போது இவனைப் பார்ப்பதாகவே தெரியவில்லை. வாயடைத்தவனாகி மெல்ல எழும்பி தூசு புழுதிகளைத் தட்டியவாறு நடக்கத் தொடங்குகிறான்.

முழங் கையொன்றிலும் முழங்கால் ஒன்றிலும் இலேசாக எரிச்சலெடுத்தது. ஆனால் வலிக்கவில்லை. இப்போது அவனிடம் ‘பயம்’ கொஞ்சமேனும் இருக்கவில்லை.
00000 000000

பிற்குறிப்பு: 

நெறிபிறழ்வு[தொகு]

நெறிபிறழ் உளவியல் அத்தகைய நடத்தை பற்றிய ஆய்வினைக் குறிக்கும். நெறிபிறழ் நடத்தை வகைகள் அவைகளை விளக்குதல், ஊகித்தறிதல், விவரம் அளித்தல், அதன்செயல் முறையை மாற்றுதல் யாவும் உள்ளடங்கும். இத்துறை நடத்தும் ஆய்வில் மனோநோய் தீர்க்கும் முறை அதன் காரணங்கள் அது பற்றிய ஞானம் அதை எப்படி மருத்துவப் பயிற்சியில் பயன்படுத்த இயலும் அதனால் உளவியல் கோளாறுள்ளவர்களின் எப்படி குணப்படுத்த முடியும் என்பதெல்லாம் அடங்கியுள்ளன.
இயல்பான நடத்தை, நெறிபிறழ் நடத்தை இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம் காண கோடு போடுவது கடினமான பணியாகும்.பொதுவாக நெறிபிறழ் நடத்தைகள் சூழ்நிலைக் குகந்தனவா இல்லை தனிப்பட்ட அசௌகிரியம் காரணமாக மருத்துவ நலன் மற்றும் சிகிச்சை பெறும்படி உள்ளனவா என்றெல்லாம் கண்டறியப்படல் வேண்டும். டிஎஸ்எம்-ஐவி-டிஆர் படி, நடத்தைகள் பிறழ்ந்த இயல்புகொண்டதாகக் கருதப்பட உரிய காரணங்களாவன: செயல்புரிய இயலாமை, தனிப்பட்ட மனஇறுக்கம், சமூக நெறிமுறைகளை மீறிய நிலை, அல்லது செயல்முறை மீறல் ஆகியனவாகும்
நன்றி: விக்கிபீடியா http://ta.wikipedia.org/s/b6k

எனது புலப் பெயர்வு வாழ்விலும் எமது ஈழத்துக் கலைஞனாக சுமார் 50 வருடங்களுக்கு மேலான கலையுலகப் பயணத்தைத் தொடரும் ஏ ரகுநாதன் ஐயா அவர்கள் ‘அங்கொடை வைத்தியசாலை’ (கீழ்ப்பாக்கம் வைத்தியசாலை எனச் சொல்வது போன்றது) தொடர்பாகக் கூறிய கதை இது. காற்றில் தவழ்ந்து வந்து நுட்பமான அறிவைச் சுட்டும் செவிவழிக் கதைககள் கரைந்து போகாமல் இணைய வலையிலும் பரவிவிடுகிறேன். கதைசொல்லிகளாக விபரணித்ததை -கண்டு கேட்டு இரசித்ததை- வார்த்தைகளால் வரித்துத் தடமிடுதலென்பது இலகுவானதில்லை.

நம் வாழ்வில் நமக்கான தனித்துவமான கதைசொல்லிகளைக் நேரடியாகத் தரிசித்தவர்கள் நாம். இன்று நம் வாரிசுகள் தொலைக்காட்சிச் சட்டக வாயிலாகவே அதிக பிம்பங்களைத் தரிசிக்கிறார்கள்.

நீண்டு செல்லும் புலம்பெயர்வு வாழ்வு எம்மை நாளாந்தம் நாம் தவழ்ந்த மண்ணினதும் விட்டுவந்திருந்த உற்றார்களதும் சுற்றார்களதும் தகவல்களைத் தேடும் இணையத் துளாவலாளர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது.  இத்தகைய உந்துதலால் மனக்கிடங்கிலிருந்து மேலெழுந்ததொரு குமுழியாக வெளியானதுதான் இக்கதை.
 .

(நன்றி: படங்கள் கூகிள் இணைய வழங்கி)
-    முகிலன்

-    பாரீசு 28.06.2014

No comments:

Post a Comment