Saturday 14 June 2014

செல்வம் கொழிக்கும் புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர்கள் !

குஞ்சரம் 21

செல்வம் கொழிக்கும் புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர்கள் !


அண்மையில் பாரீசில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வு நடந்து முடிந்திருந்தது. இதைப் பற்றிய குறிப்பை எழுத நான் விருப்பப்படவில்லைஆனால் இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தொலைபேசி உரையாடல் வழியாகக் கிடைத்த தகவல் ஒன்று என்னை உலுக்கித்தான் போட்டது. «  புத்தக வெளியீடுகளிலும் இப்படியெல்லாம் நடைபெறுகின்றனவா?  » எனக் கிளர்ந்த சிந்தனைகளுடன் தொடர்கிறேன். 

00000 00000

நான்காவது தசாப்தம் காணும் ஈழத் தமிழர்களது வெள்ளையர் தேசப் புலம் பெயர்வு வாழ்வு எத்தனையோ அனுபவங்களை அள்ளித் தந்த வண்ணமே கடந்து செல்கிறது . வெறும் கைகளுடன் நுழைந்த முதல் தலைமுறையினரின் முன்னாலேயே நிலை மாற்றங்களும் இதையொட்டிய பண்பாட்டு மாறுதல்களையும் நம் சமூகம் பெற்றவாறே கடக்கிறது . உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களுக்குள் எமது அடுத்த தலைமுறையினர் காலடி வைத்துவிட்டார்கள் .   
80 களின் பின்னாலான ஈழத்தமிழர்களது புலம்பெயர்வு வாழ்வில் இந்தியாவுக்குள் புகுந்தவர்களும் இலங்கையின் பிறபகுதிகளில் தஞ்சமானவர்களும்தான் பொருளாதார வாழ்வில் மிகவும் கேவலமான 'மனித உயிரிகளாக' தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்றுப் பதிவு தடித்த எழுத்துகளில் பொறித்தும் விட்டிருக்கிறது.

ஆங்கில மொழிப்புலம் அல்லாத வேறு மொழிப்புலம் கொண்ட நாடுகளிலும் அந்ததந்த நாட்டு மேல்த் தட்டு வர்க்கத்தினராக ஒரு பகுதியினர் வடிவம் கண்டும் அதியுயர் கல்வித் தகைமையடையோராக அடுத்த தலைமுறையினர் தலையெடுக்கத் தொடங்கியும் விட்டனர். இந்நிலை தொடர்பாக பல்வேறு புலம்பெயர் சமூகங்களுடன் ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளலும் நிகழ்கிறது.
00000 000000
புகழ்பெற்ற ஈழத்துப் படைப்பாளி ஒருவரது நூல் வெளியீடொன்று பரப்பரப்பான ஐரோப்பியச் செல்வந்த நாட்டின் தலைநகரில் நடாத்த ஏற்பாடாகிக் கொண்டிருந்தது . நூல் வெளியிடுவதையும் அவற்றை ஊக்குவிப்பதையும் தனது வாழ்வின் இலக்காக்கிய பயணத்தை புன்முறுவலுடன் தொடரும் தமிழ்பேசும் உலகறிந்த அந்தப் பெரியவர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் . நட்பு மற்றும் ஆர்வலர்களது யோசனைகளை உள்வாங்கி நிகழ்ச்சி நிரல் தயாரானது . அழைப்புகளும் கொடுக்கப்படன . சிறப்புப் பிரதிகள் பெறுவோர் தொடர்பாக பெரும் தனவந்தர்கள் தெரிவும் - அவர்களுடன் தொடர்பு கொண்டு சம்மதங்களும் பெறப்பட்டன . இந்நிகழ்வில் கலந்து கொள்ள இந்நகரத்தில் மேல் தட்டு பிரபுத்துவ வாழ்வை தொடரும் தமிழ்ப் பிரமுகர்கள் இருவர் முக்கியத்தும் பெற்றனர். இப்படியான வேளையில் சமூகப் பிரக்ஞையுடைய தாராளர்களையே கவனம் கொள்வது வழக்கம். அவர்களும் இப்படியான நிகழ்வுகளில் மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறந்த ஊக்குவிப்புத் தொகையையும் வழங்கிச் செல்வார்கள்.  

பெரும் வாணிபம் செய்யும் பிரமுகக் குடும்பத்தினராக ஒருவரும் அந்த நகரத்தில் மிகவும் செல்வச் செழிப்போடு வாழும் மருத்துவர் ஒருவரும் பிரதம அதிதிகளாகக் கௌரவத்துடன் நூலினைப் பெற்றார்கள் . இவர்களிருவரும் தங்களது அன்பளிப்பாக ( மொய் ) காகித உறையையும் பலத்த கரகோசத்துக்கு மத்தியில் கையளித்தனர். 
அறிவித்ததன்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . நூலின் விலையை பத்து ரூபா ( பணத்தைக் குறிப்பிட்டால் எந்த நாடெனத் தெரிந்துவிடும் என்பதால் தவிர்க்கிறேன் ) என அறிவித்து விநியோகம் நடைபெற்ற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
அடுத்த நாள் நூலினைப் பெற்ற புகழ்பெற்ற தனவந்தர் ஒருவர் இந்த வெளீட்டுக்கு உறுதுணைபுரியும் வரைகலைக் கலைஞரை அணுகி மிகுந்த வேதனையைத் தெரிவித்தார்.
" ஐயோ ! நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் ! நூலின் பெறுமதி 10 ரூபாய்தானே - நான் கொடுத்தது 20 ரூபாய் அப்படியிருக்க எனக்கு ஒரு புத்தகம் மட்டுமே தந்திருக்கிறார்கள். " என்றார் அழாக்குறையாக.
இதைக்கேட்ட வரைக் கலைக் கலைஞன் வாயடைத்தவராகிவிட்டார். இச் சம்பவம் அவருக்கு அதிசயமாக இருந்தது. தன்னைச் சுதாகரித்தவராகி " சரி! நடந்தது நடந்து போய்ச்சுது! கவலைப் படாதேங்கோ.... நான் என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கோ" என்றார் பொறுமையுடன்.
" இதிலென்ன சொல்லக்கிடக்கிறது. எனக்கு இன்னுமொரு நூலைத் தந்தால் போதும். நான் ஏமாற்றப்படக் கூடாதுதானே! " என்றார் மகிழ்வுடன் அந்தப் பெருமகன்.
கேட்வருக்கு 'அட இவ்வளவுதானா ? என்னிடம் இருக்கும் புத்தகத்தைக் கொடுத்து தொலைத்துவிடலாமே!' என்றெழுந்த மனவுந்துதலை காட்டிக் கொள்ளாதவராக சிரித்வாறு சமாளித்தார். அடுத்தநாளே உங்களுக்கு உரிய நூல் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி வழியனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் மிகவும் நிதானத்துடன் நடந்த விபரங்களை நூலின் மேல் காதல் கொண்ட அந்தப் பெரியவரிடம் பௌவியமாகத் தெரிவித்தார் வரைகலைக் கலைஞன். பெரியவர் ஏதுமே பேசாதவராக நூல் பிரதியொன்றை புன்முறுவலுடன் எடுத்துக் கொடுத்தார். 'பெரும் பணிகளில் மூழ்கியிருப்போர் மனிதர்களின் சிறுமைகள் கண்டு பரிதாபப்படுவார்களே அன்றி அவர்களைக் குறைகூறமாட்டார்கள்' எனும் கூற்று இன்னுமொரு முறை நிரூபணமாயிற்று.

சிறிது நேரம் சென்றதும் அந்தப் பெரியவர் " அப்படியானால் மற்றவரும் 20 ரூபாய்தானே தந்தவர். அவரும் இன்னொரு புத்தகம் கேட்பார்தானே ! " எனக் கூறிய வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தனவாகவே இருந்தன.
" சில வேளையில் அவர் இப்படி நடக்காமலும் இருக்கலாம்தானே ! " என இழுத்தார் வரைகலைக் கலைஞர்.
" இல்லை ... இல்லை ... தம்பி ! எதற்கும் இன்னுமொரு புத்தகத்தையும் தாறேன். கொண்டு போய் ஆய்த்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களையும் ஏன் வீணாக அலைக்களிக்க வேண்டும் ? "
அதுவும் சரிதான் என்ற உள்ளுணர்வுடன் நூல்களைப் பெற்றவாறு விடைபெற்றார் வரைகலைக் கலைஞன்.
சொல்லி வைத்ததுபோல் அடுத்த நாள் அந்த இரண்டாவது பிரபுத்துவப் பிரமுகரும் வரைகலைக் கலைஞனின் வீட்டுக்கு வருகை தருகிறார். ஆனால் இம்முறை வரைக் கலைஞன் ஆச்சரியப்படவேயில்லை. சிரித்த முகத்துடன் அவருக்கான பிரதியைக் கையளித்து மகிழ்வுடன் வழியனுப்பி வைத்தார்.
(Jaffna library - வரலாற்று வடுவாகப் பதிவுற்ற நூலகம்)
000000 0000000
தொலைபேசி வாயிலாகக் கேட்ட இததகவல் என்னைப் பாடாய்ப்படுத்தியது . எனது முகம் போன போக்கைப் பார்த்த எனது துணைவி " என்னப்பா ஆச்சு ? " என வினவினார்.
ஒருவாறு நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வையும் அந்த சிறப்பு அதிதிகளையும் குறிப்பிட்டு விபரித்தபோது எழுந்த குறும்புத்தனத்தால் " சரி ! இவர்கள் எவ்வளவு மொய் தந்திருப்பார்கள் ? ... சொல் பார்ப்போம் " என்றேன் மகிழ்வுடன்.
அந்த வசதிபடைத்த பிரமுகர்களை அறிந்தவர் ஆகையால் அவர் " என்னப்பா கேள்வி இது ... ஒரு ஆயிரம் ரூபாய் வைத்திருப்பார்கள் ! " என மிகச் சாதாரணமாகவே வெளிப்பட்ட பதிலைக் கேட்டு மூச்சுத் திணறியவன் போலாகிவிட்டேன் . இதன் மேல் என்னால் எதுவுமே பேச முடியவில்லை.
000000 000000
பாரீசில் வானொலி அறிவிப்பு தொடர்பான நீண்ட தொடரான வாழ்வில் பயணிக்கும் நண்பர் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். அப்போது பெரும் தனவந்தர்களான நம் முதலாளிகள் தொடர்பாக கதையாடல் நீண்டது.
" ஆளாளுக்கு சிறு உதவிகளை வழங்கினாலும் பென்னாம்பெரிய கலைப் பணிகளைச் செய்யலாமே ! " என்கிறேன் அப்பாவித் தனமாக.
" அடப் போங்க .... அப்படியெல்லாம் இங்கு ஆக்களே கிடையாது . " பதில் நறுக்கென வந்தது.
" ஒரு சிலரும் இல்லையா ? "..... எனது கேள்வி பரிதாபகரமாகவே வெளிப்பட்டது.
" ஏதாயினும் உதவி கேட்டால் தங்களிடம் ஏதுமே இல்லை என அழுவார்கள்! நல்ல புத்தகம் ஒன்றினை வெளியிட அழைத்தால் காசே இல்லை என்று சொல்லி விடுவார்கள் . எம்மிடம் வெறும் பத்து ஈரோக்கள்தான் இருக்கும் ஆனால் நாம் தயங்காது 7 ஈரோக்களைக் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கிவிடுவோம். ஆனால் அவர்கள் அசையவே மாட்டார்கள். "
" அப்படியானால் கோயில் திருவிழாக்கள் எப்படி நடக்கின்றன? " கேள்வி இயல்பாகவே என்னிடம் இருந்து கிளம்பியது .
" தங்களது கடைகளுக்கு முன்னால் மேளம் அடிப்பதற்கும் தேங்காய் உடைப்பதற்கும் நேரடியாகப் பணம் கொடுப்பார்களே அன்றி பொதுவாக ஏதும் செய்ய மாட்டார்கள்! இவர்களது எண்ணங்களும் செயல்களும் சுயமேம்பாடு - இலாபம் பற்றியனதான். தமக்கு இலாபம் கிடைக்காத எந்த செயலிலும் ஈடுபடமாட்டார்கள். பணத்தால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் எனும் அசைக்க முடியாத எண்ணமுடையவர்கள். இவர்களது பணத்தால் யாராரோவெல்லாம் புகழடையவோ -பயனடையவோ ஏதுமே செய்ய முடியாதுதானே! "
நான் ஏதுமே பேசவில்லை .
00000 000000


(பாரீசு மத்தியிலமைந்த நவீன ஆவணக் களஞ்சியம்- Centre-Pompidou à Paris)

தற்போதைய உலகமயமாக்கல் யுகம் உருவாக்கி காட்டாற்று வெள்ளமெனப் பாயும் நுகர்வுக் கலாச்சாரம்- இருந்த இடத்திலிருந்தவாறு வெறும் பார்வையாலும்  தொடுகை ஆணையாலும் நுகரும் கலாச்சாரம் - தொலைக் காட்சி மற்றும் கணினித் திரை வாயிலாக 'பளபளப்பு' மினுக்கி மின்னும் அழ(ழு)கியலை நம்மவர் மண்டைக்குள் புகுத்தி உந்தித்தள்ளுகிறது!
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல் . ( குறள் 1005)
( கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம் , கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை .)
புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் நம்மவர் நிகழ்வுகள் இயந்திர வாழ்வுச் சுழலில் அள்ளுண்டவையாகி 'சடங்கு' வடிவத்தை இயல்பாகவே பெற்றுவிடுகின்றன. இதில் இலக்கிய நிகழ்வுகளும் ஒன்றாகிப் போனது சோகம்தான். புதிய 'புத்தக வெளியீட்டு'ச் சடங்காகி பரதேசிகளது ஒன்றுகூடல்கள் போல் ஏளனப் பார்வைக்குட்பட்டதை பதியாது கடக்க முடியுமா?
0 புலம்பெயர் தேசங்களில் நூலகங்களும் ஆவணக்காப்பகங்களும் அருங்காட்சியகங்களும் மிடுக்கோடு நிமிர்ந்திருப்பதை காணுற்று மகிழ்ந்ததும் நம் கண் முன்னாலேயே யாழ் நூலகம் சாம்பல் மேடாகிய அவலத்தால் துவண்டு போனதும் நினைவிலாடியது.
0 கோயில்களையும் விழாக்களையும் பெருமித்த்தோடு தொய்வின்றி வளப்படுத்தும் நம்மவர்கள். குடியேறிய நாடுகளில் நமக்கான நூலகங்கள் - அருங்காட்சியகங்கள் கொண்ட சமூக மையங்களை உருவாக்கியிருகிறோமா?
0 புலம்பெயர் நாடுகளில் நம்மவர் வீடுகளில் நூல்களுக்கான ஒரு அலுமாரிதானும் வைத்திருப்போர் எத்தனை பேர்?
சிந்தனைக் குமிழிகள் வெளிப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

000000 0000000

பிற்குறிப்பு :

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு :

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000 - ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது . வரலாற்றுக்கு முந்திய காலம் , சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி , அரசியல் , மொழி , தமிழர்களை ஆண்டோர் , இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு . கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும் , வெற்றிகளையும் தோல்விகளையும் , ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது .


விரிந்து பரவிய புலம்பெயர் இனம் :

விலியத்தின் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் தான் இந்த வார்த்தை முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது . "Es ² diaspora en pasais basileias t ² sg ² s " என்கிற ஹீப்ரூ வாசகத்தின் மொழிபெயர்ப்பு " புவியின் அனைத்து சாம்ராஜ்யங்களிலும் சிதறிக் கிடப்பாய் " என்பதாகும் . ஹீப்ரூ விவிலியம் கிரீக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட போது இந்த உண்மையான அர்த்தத்தில் தான் வளர்ச்சியடையத் துவங்கியது ; அதன் பின் கிமு 607 ஆம் ஆண்டில் பாபிலோனியர்களால் இஸ்ரேலில் இருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்களைக் குறிப்பதற்கும் கிபி 70 ஆம் ஆண்டில் ரோம சாம்ராஜ்யத்தால் ஜுடியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட யூதர் களைக் குறிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படத் துவங்கியது . அதன்பின் இந்த இரண்டு பிரயோகங்களுக்கும் இடையே மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வார்த்தை இஸ்ரேல் இன மக்கள் விடயத்திற்கான தனித்துவமான வார்த்தையாக ஆனது . அவர்களது வரலாற்று இடம்பெயர்வுகள் , அந்த மக்களின் கலாச்சார வளர்ச்சி மற்றும் அந்த மக்களைக் குறிப்பிடுவதற்கான வார்த்தையாகவும் அது ஆனது . ஆங்கிலத்தில் டயஸ்போரா என்கிற வார்த்தையில் பொதுவாக தலைப்பெழுத்து பெரிய எழுத்தில் இடம்பெற்று வார்த்தை சேர்க்கை இல்லாமல் இருந்தால் (Diaspora) இந்த வார்த்தை யூத புலம் பெயர் இனத்தை [4] மட்டும் குறிப்பதாகவும் , சாதாரணமாக அந்த வார்த்தை (« diaspora ») மற்ற இன அகதிகளைக் குறிப்பிடுவதற்கும் பயன்படத் துவங்கியது . தாங்கள் வெற்றி பெற்ற பகுதியின் மக்கள் வருங்காலத்தில் அப்பிராந்தியத்திற்கு உரிமை கோருவதை மறுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அசிரியன் கொள்கையில் இந்த வார்த்தையின் விரிவான பயன்பாடு தோன்றியது . புராதன கிரீஸ் நாட்டில் இந்த வார்த்தை " சிதறிக் கிடக்கும் மக்கள் " என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது . காலனிகளில் குடியேற்றப்படும் வெற்றிபெற்ற அரசின் மக்களைக் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்பட்டது .


Centre national d'art et de culture Georges-Pompidou



நன்றி  : கூகிள் இணைய வழங்கி

-     முகிலன்
-     பாரீசு 14/06/2014 


8 comments:

  1. வாழ்க்கை என்பது எவ்வளவு அற்புதமானது. இந்த வாழ்க்கைக்குள் நாம் எவ்வளவோ விடயங்களை அனுபவிக்கலாம். எதிர்பார்ப்புக்கள் என்பது இயல்பானதுதான். ஆனால் நாம் எதிர்பார்க்கும் வகையில் எதுவும் நடந்து விடுவதில்லை.ஏமாற்றம் இல்லாமல் வாழ்க்கை அமைவது வரப்பிரசாதம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் எண்ணப் பகிர்வுக்கும் நன்றிகள் S.K. Rajen !!

      Delete
  2. "தமக்கு இலாபம் கிடைக்காத எந்த செயலிலும் ஈடுபடமாட்டார்கள். பணத்தால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் எனும் அசைக்க முடியாத எண்ணமுடையவர்கள்"

    இது முற்றிலும் உண்மை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கருணைரூபன்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்.
      வள்ளுவனார் கூற்றின் படி வாழ்தல் என்பது வளமான வாழ்வை நிர்ணயிக்கும். சமுக வாழ்வை 'ஒப்புரவறிதல்' அதிகாரத்தில் சிறப்பாகவே பதிவு செய்துள்ளார்.
      கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
      என்ஆற்றுங் கொல்லோ உலகு. (குறள் 211)
      -
      கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

      Delete
  3. // கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
    எருதாய் முழப்புடவை யாகித் – திரிதிரியாய்த்
    தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே
    கோரைக்கால் ஆழ்வான் கொடை.//
    நமது செல்வந்தர்களைப் பற்றி வாசிக்க இப்பாடல் நினைவில் வந்து தொலைந்தது.
    ஆனாலும் 10 ரூபா ...நான் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையிலும் ஏன் ? இவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.
    ஒரு புத்தகத்தையுமே படிக்காத இச் செல்வந்தர் ஏன் 2ம் புத்தகம் வாங்கினார். புரியவில்லை.
    இப்படியான நிகழ்ச்சிகளுக்கு பாரிசில் வருந்தியழைத்துக் கூட்டிச் செல்லப்படுபவர் ஒருவர் எனக்கு நண்பர், அவர் வாங்கும் புத்தகங்களை
    அவர் படிப்பதேயில்லை. ஆனால் ஒரு நல்ல பழக்கம் யாராவது படிப்பவர்களுக்குக் கொடுப்பார்.
    பாரிசில் வாரவிறுதியில் இப்படியான நிகழ்வுகளுக்குச் சென்று தம்மை இலக்கியப் புரவலராக நிலைநிறுத்த சிறுபணம் செலவு செய்யும் பலர் உள்ளார்கள்.
    நம் வர்த்தகப் பெருங்குடிகளுக்கும் புத்தகத்துக்குமுள்ள தொடர்பு, நாயும் போற்தேங்காயுமே!
    இங்கே தவறு புத்தகம் வெளியிடுபடர்களே!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி யோகன் - "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" எனப் பாடிய பாடல்களும் எமைக் கடந்துதான் சென்று கொண்டிருக்கின்றன.
      ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
      செத்தாருள் வைக்கப் படும். (குறள் 214 )
      அதிகாரம் : ஒப்புரவறிதல்
      ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

      Delete
  4. இதுதான் நான் என்னுடைய எந்தநூலின் வெளியீட்டுக்கும் எந்தப்பணக்கார ஆசாமியையும் முதற்பிரதியை வாங்க அழைப்பதில்லை. இலக்கிய ஆர்வமுள்ள ஒரு தோழன், ஒரு சுவைஞன் போதும்.

    ReplyDelete
  5. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் காருண்யன்!
    அனுபவங்கள் தங்களைப் புடம்போட்டுவிட்டன.

    ReplyDelete