Friday, 30 May 2014

நட்பு உறவாடல் - கஞ்சன் கதை

செவிவழிக்தை 21
கதைச்சரம் 24

நட்பு உறவாடல் - கஞ்சன் கதை

அந்த ஊரில் மிகவும் அறியப்பட்ட நீண்ட கால நண்பர்களாக அப்பையா சுப்பையா என இரண்டு கஞ்சர்கள் இருந்தார்கள். அந்தச் சுற்று வட்டாரத்தில் இவர்கள்தான் பெரும் பணக்காரர்கள். இருக்காதா பின்னே? கஞ்சராக இருந்து எதை மிச்சம் பிடிக்கிறார்களாம்?..... எனவாக உங்களுக்கு எழும் முனகல் கேள்வி புரியத்தான் செய்கிறது.
இவர்களது குடும்பங்களே நட்புடன் பழகி ஊராரை வியக்க வைத்ததன. அப்படியானதொரு நெருக்கம். பொதுவாக கஞ்சத்தனம் இருந்தாலே இலகுவில் ஆட்களோடு பழக மாட்டார்கள். இவர்களுக்கு 'நட்பு' என்ற சொல்லின் அர்த்தமே புரியாதெனக் கூறுவது வழக்கம். இதனால் ஆச்சரியப்பட்ட ஊரார் கூடுமிடத்தில் இவர்களது அந்நியோன்னியம் பற்றிக் குசுகுசுப்பதும் உண்டு. இவர்கள் எப்படியெல்லாம் பழகுவார்கள் என அறிய ஊராருக்குக் கொள்ளை ஆசை. இவர்களுடன் வியாபார நிமித்தம் பழகிய வெளியூர்காரனிடம் இருந்து வெளிப்பட்ட கதைசொல்லல் வடிவமே இங்கு பதிவாகிறது.
ஒரு முறை அப்பையா வெளியூர்ப் பயணம் போகவேண்டி வந்தது. இதனால் தனது பதிமவயது மூத்த மகனைக் கூப்பிட்டு "தம்பி நான் வரும்வரையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொள். ஒருபோதும் கடன் கொடுக்கவே கூடாது" என்றார் கட்டளைத் தொனியில். தொடர்ந்து கொஞ்சம் யோசித்தவராக "தம்பி....." எனவாக இழுத்தார்
"என்னப்பா!" மகனும் பௌவியமாகக் குழைந்தான்.
"நான் திரும்பி வர பத்து நாட்களாவது எடுக்கும். இரு முறையாவது நண்பன் சுப்பையா வீட்டுக்குப் போய் குசலம் விசாரித்துக்கொள்..... என்ன?" என்றார் கரிசனையுடன்.
"சரி அப்பா..... நான் நீங்கள் வளர்த்த பிள்ளை.... எல்லாம் கவனமாகச் செய்வேன்." என்றான் மகன்.
சில நாட்களின் பின் ஒரு மாலை நேரத்தில் அப்பையாவின் மகன் அவர்களது குடும்ப நண்பரான சுப்பையா வீட்டுக்குச் சென்றான். சுப்பையா குடும்பம் பெருந்தொகையில் விவசாய வாணிபம் செய்யும் வழமையாதலால் வெளியூர் வண்டிகளுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
வீட்டு வாசலில் நின்றவாறு "வணக்கம்!" என்றான் அப்பையா மகன்.
"அடெடே!..... வாங்க வாங்க......! அம்மா யார் வந்திருக்காங்க பாருங்க!" என்றாள் மிளகாய்ச் செத்தல்களை அள்ளிக் கொண்டிருந்த சுப்பையாவின் கடைக் குட்டிச் சிறுமியான செல்ல மகள். அங்கு வந்த சுப்பையா மனைவி குசலம் விசாரிக்கிறார். சுப்பையாவும் ஊரில் இல்லை. வந்த வேலை முடிந்துவிட்டதால் புறப்படத் தயாராகிறான் அப்பையாவின் மகன்.
"இங்கு கடுதாசியும் பென்சிலும் கிடைக்குமா?" என்கிறான். உடனே ஓடிச் சென்ற சுப்பையாவின் மகள் கொண்டு வந்து கொடுக்கிறாள்.
அந்தக் கடதாசியில் பட படவென  ஒரு சிங்கக் குட்டியை வரைந்து அவளுக்கு நீட்டியபடி "உங்களது வீட்டுக்கு குசலம் விசாரிக்க வந்துபோட்டு சும்மா போவது நல்லதில்லை.... அப்பா கோபிப்பார். இந்தச் சிங்கக் குட்டியை பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்!!" என்றவாறு எழுந்தான்.
"அடடா.... நீங்களும் எமது வீட்டுக்கு வந்துபோட்டு வெறுமையாகப் போகக் கூடாதுதானே!...." என்றவாறு தனது நீட்டிய கரங்களால் ஒன்றிணைந்த விரல்கள்கொண்ட உள்ளங்கைகளால் வட்டமிட்டு இரு தோடம்பழங்களை (ஆரஞ்சுப் பழம்) காற்றில் வெட்டி அவனுக்கு வழங்கினாள் சுப்பையாவின் செல்ல மகள். அவனும் மறுப்பேதும் சொல்லாது பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் விடை பெற்றான்.
இரு நாட்களின்பின் வீடு திரும்பிய சுப்பையாவிடம் நடந்ததைக் கூறினாள் மகள். அந்த கடதாசி ஓவியச் சிங்கத்தையும் கொடுத்தாள். சுப்பையா எதுவும் பேசாது கேட்டுக் கொணடிருந்தார்.
"நான் அவரிடம் பதிலுக்காக ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்தனுப்பினேன்!" என்று அச்சிறுமி விபரிக்கையிலேயே சுப்பையாவின் முகம் கடுமையானது "என்னது?" வார்த்தை கடும் தொனியில் வெளிப்பட்டது.
துவண்டு போனவளானாள் மகள். ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொணடவராக "சரி.... சரி!!.... என்னம்மா கொடுத்தாய்?" என்று மென்மையாக வினவினார்.
"நான் உங்களுடைய செல்ல மகள்தானே அப்பா..... " என இழுத்துச் சிணுங்கிய பின் தொடர்கிறாள் "இரண்டு தோடம்பழங்களை(ஆரஞ்சுப் பழம்) மட்டும் இப்படியாகக் கொடுத்தேன்." என்றவாறு தனது நீட்டிய நீட்டிய கரங்களால் ஒன்றிணைந்த விரல்கள்கொண்ட உள்ளங்கைகளால்  வட்டமிட்டு காற்றில் வெட்டிக் காண்பித்தாள் மகிழ்வுடன் மகள்.
"அய்யைய்யோ..... இந்தளவு பெரிதாகவா கொடுப்பது?" என நொந்து போனார் சுப்பையா "கொடுத்ததுதான் கொடுத்தாய்....... இப்படிச் சின்னதாகக் கொடுத்திருக்கலாமே!" என்றவாறு தனது நீட்டிய கரங்களின் சுட்டு விரல்களை மட்டுமே கொண்டு காற்றில் சின்னஞ்சிறு வட்டமிட்டுக் காண்பித்தார்.
அசந்து போனாள் மகள்!!

**********
- முகிலன்
பாரீசு 30.05.2014எனது பல்கலைக் கழக வாழ்வில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட நண்பன் பிகராடோ சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. காற்றில் தவழ்ந்து வந்து நுட்பமான அறிவைச் சுட்டும் செவிவழிக் கதைககள் கரைந்து போகாமல் இணையவைலையிலும் பரவிவிடுகிறேன். கதைசொல்லிகளாக விபரணித்ததை கண்டு கேட்டு இரசித்ததை வார்த்தைகளால் வரித்துத் தடமிடுதென்பது இலகுவானதில்லை!

நிகழ்த்திக் காட்டப்படும் இத்தகைய கதை சொல்லிகளது உடல் மொழிகளுடனான வெளிப்படுத்துகையை அவ்வப்போது நினைத்து மகிழ்வுறுவோம். அப்படியான ஓர் உந்துதலால் மனக்கிடங்கிலிருந்து மேலெழுந்ததொரு குமுழியாக வெளியானதுதான் இக்கதை.


பின்னிணைப்பு :
கஞ்சன், கருமி, உலோபி, உலுத்தன், பேராவற்காரன், சிடுசிடுப்புடையவன்- (niggard)- கசடுதல் - பணம்பிடுங்கி, கயவாரித்தனம் - இரக்கமின்மை - என்பன மனித வாழ்வில் நம் மனத்துடன் பின்னிப் பிணைந்தவை. விலங்கிற்கும் - மனிதனுக்குமான மனச் செயலாடலில் இதன் வகிபாகமும் முக்கியமானதாகும். (அதீத பொருள் சேகரிப்பும் - கிஞ்சித்தும் செலவிடும் பாவமும் அற்ற ஓர் இறுக்கமான மனநிலைச் செயல் கொண்டவர்கள்)
இதன் எதிர் சொல்லாக அமையும் ஈகை - (கொடை) - (நன்கொடை) - (அன்பளிப்பு) - அன்பிணக்கம், தாராள மனப்பான்மை, ஒப்பரவு, இன்னலம், பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தல், அருளிரக்கம், ஈகை, அறம், அற நிலையம் என்பதால் மானுட சமூகம் புவியெங்கணும் எழுந்து நிற்கிறது.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (குறள் 225)
நன்றி: அகராதி - தமிழ்க் களஞ்சியம் மற்றும் கூகிள் இணைய வழங்கி

No comments:

Post a Comment