Thursday 15 October 2009

செய்திச் சரம் - 5 “ஈழத்தில் நாடகமும் நானும்" நூல் அறிமுக நிகழ்வு

செய்திச் சரம் 5
“ஈழத்தில் நாடகமும் நானும்" நூல் அறிமுக நிகழ்வு
கொழும்பில் செப்டெம்பர் 2009 நடைபெற்று ஈழத்தமிழர் பரவிவாழும் உலக நகரங்களிலும் நடைபெறவுள்ளது
TAMIL DRAMA IN CEYLON AND MY PART IN IT
By Kalai Arasu K.CHORNALINGAM



ஈழவர் திரைக்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் கலையரசு க. சொர்ணலிங்கம் எழுதிய "ஈழத்தில் நாடகமும் நானும்" எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் சென்ற 2009 செப்ரெம்பர் மாத நடுப்பகுதியில் நடைபெற்றது. கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் நாடகமாடத் தொடங்கிய கொழும்பு நகரிலேயே இந்த இரண்டாவது பதிப்பு நூலை வெளியிடுவதில் பேருவகை கொண்டதாகவும், தொடர்ச்சியாக இன்று பூமிப்பந்தெங்கிலும் விரவி வாழும் தமிழ் கலை ஆர்வலர்களிடத்திலும் இதைக் கொண்டு செல்ல இருப்பதாகவும் திரு யோசெப் அவர்கள் குறிப்பிட்டார்கள்.


இவ் வைபவத்தில் தலைமையுரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரனும் அறிமுக உரையை அந்தனி ஜீவாவும்இ கருத்துரையை பேராசிரியர் சபா ஜெயராசா மற்றும் கலைச் செல்வனும் ஏற்புரையை லண்டனிலிருந்து வருகை தந்திருந்த பரிஸ்டர் ஜோசப்பும் ஆற்றினர். இவ்வைபவம் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் நாடகக் கலைஞர்கள், இலக்கியவாதிகள், துறை சார்ந்தோர் நிறைந்து காணப்பட்டனர். நூலின் முதற் பிரதியை ஜே. பி. ஜெயராசா பெற்றுக்கொண்டார்.

ஈழத்தின் மூத்த கலைஞரின் நாடக அனுபவங்களை பதிவாக்கிய முதல் முயற்சியாகவும் 19-ம், 20-ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் கலைபயணத்தின் வரலாற்றைப் பதிவிட்ட ஆவணமாகவும் இதனைக்காணலாம். 30-03-1889 / 26-07-1982 வரை வாழ்ந்த ஒரு முக்கியமான கலைஞன் கலையரசு க. சொர்ணலிங்கம். தினகரனில் தொடராக வெளி வந்து 1968 இல் நூலாகி தற்போது இரண்டாவது பதிப்பாக 21-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் 2008 இல் பதிப்பிற்கப்பட்டுள்ளமை இந்நூல் பெற்ற சிறப்பாகும்.

இந்நூல் ஈழத்து நாடக மற்றும் கலை வளர்ச்சிப்போக்கினச் சொல்லும் ஒரு காலகட்ட வரலாற்று ஆவணமாக இத்துறையில் ஈடுபட்டவரின் எழுத்துப் பதிவாகவே இடம்பெற்றிருப்பது கவனம்கொள்ளத்தககதாகும். ஈழவர் திரைக்கலை மன்றத்தால் மீள் பதிப்பாகியுள்ள இந்நூல் அறிமுக நிகழ்வு உலகெங்கிலும் நிகழ்த்தப்பட உள்ளதாக இதன் செயற்பாட்டாளர் பரீஸ்டர் யோசெப் அவர்கள் தெரிவித்தார். நூலைப் பெற விரும்புவோர் ஈழவர் திரைக்கலைமன்ற உறுப்பினர்களுக்கூடாக மேலதிக விபரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அறிமுக நிகழ்வுகள் கனடாவில் நவம்பர் 2009 இலும், பிரான்சில் டிசெம்பர் 2009 இலும், அவுஸதிரேலியாவில் ஜனவரி 2010 இலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாகவும், முறையான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் யோசெப் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு :-
இங்கிலாந்து : பாரீஸ்டர் யோசெப்
கனடா : கே. எஸ் பாலச்சந்திரன்
அவுஸ்திரேலியா : கருணாகரன் மற்றும் ஈழன் இளங்கோ
நோர்வே : துருவன்
சுவிஸ் : ரமணன்
பிரான்சு : ஏ. ரகுநாதன் மற்றும் ஆனந்தன்
தமிழகத்தில் :
சாளரம்
2/1758 சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 600 091


பரிஸ்டர் ஜோசப் உரையாற்றுவதையும் கலைச் செல்வன், அந்தனி ஜீவா, சபா ஜெயராசா ஆகியோரையும் படத்தில் காணலாம்.



நூலின் தெறிப்புகள்:
நாடகமே என் நினைவு நாடகமே என் இன்பம் நாடகமே என் கவலை நாடகக் கலையே ... - கலையரசு சொர்ணலிங்கம்

* இவரது நடிக்கும் திறமையின் முக்கிய குணம் என்னவென்றால் வெவ்வேறு விதமான பலவிதமான பாத்திரங்களை நடித்ததேயாம். இதுவுமன்றி தான் எந்த வேடம் பூண்டாலும் தானே ம்றறொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிகவும் நிபுணர்.
- பம்பல் சம்பந்த முதலியார் (நான் கண்ட நாடகக் கலைஞர்கள் நூலில்)

* 'கலையரசு' என்று சொன்னாலே போதும் அது ஈழநாட்டில் திரு சொர்ணலிங்கம் ஒருவரைத்தான் குறிக்கும்.
- அவ்வை டி கே ஷண்முகம்

* 'கூனியின் வாய்ச்சப்பல், சிரிப்பு, பேச்சு அத்தனையும் பல கிழவிகளிடமிருந்து தான் கற்றதாக அவர் கூறியுள்ளார். நடிப்பில் அவர் எவ்வளவு தூரம் கவனமும், முயற்சியும் எடுத்தார் என்பது இதனால் விளங்குகிறது'.
- திரு பொ. செல்வரத்தினம் (அக்காலகட்ட கலை ஆர்வலர், யாழ் வீரசிங்க மண்டபத்தை உருவாக்கியவர்)

*. தாய் மொழிப் பற்றும், சமயப் பற்றும், கலைப் பற்றும் அற்று, ஆங்கில மோகத்தில் மூழ்கி ஆங்கில நாடகங்களையே சுவைத்து வந்த காலத்திலே, தமிழ் நாடக மேடையிலே தோன்றியவர்களை கூத்தாடிகள் என்று ஏளனம் செய்து ஒதுக்கிய காலத்திலே, நாடகம் படிக்காதவர் கைகளில் அகப்பட்டுத் தத்தளித்துச் சீரழிந்த காலத்திலே, துணிந்து மேடையிலே தோன்றிப் படித்தவர் நாடகத்தில் நடிப்பதன் மூலம் அக்கலையைத் தூய ஒரு கலையாக வளர்த்து மதிப்பிற்குரியதாக்கலாம் என்பதைச் செயலிற் காட்டினார் கலையரசு சொர்ணலிங்கம் என்றால், அவர் தொண்டின் பெருமைதான் எள்னே?
- கலாநிதி சு வித்தியானந்தன்

* அந்தக்காலத்தில் "நீ நடித்தால் மட்டும் போதுமா? உனக்குப் பின்னும் உன்னைப் போல நடிக்கக்கூடியவர்களை பழக்கி வைத்தால் என்ன?" என்று என்னைச் சந்திப்போரில் பலர் கேட்பது வழக்கம். நானும் " நாடகக் கலையைப் படிக்கவேண்டும் என்று விருப்பங்கொண்டவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என் செலவிலேயே போய்ச் சொல்லிக் கொடுக்கிறேன்" என்று சொல்லி வந்தேன்.
- கலையரசு சொர்ணலிங்கம் (ஈழத்தில் நாடகமும் நானும் என்ற அவரது நூலில்) .

தகவல்: பரீஸ்டர் யோசெப்
தொகுப்பு முகிலன்
பாரீஸ் ஒக்டோபர் 2009

2 comments:

  1. ஈழத்தின் பெரும் கலைஞர் கலையரசு அவர்களின் நூல் குறித்த அறிமுகப்பதிவு சிறப்பாக இருக்கின்றது நன்றி.

    ReplyDelete
  2. நன்றி பிரபா இந்நூல் கலையார்வம்மிக்க இளந்தலைமுறையினரின் பரவலான வாசிப்புத் தளத்திற்குச்சென்றால் மிகுந்த பயனைக் கொடுக்கும்.

    ReplyDelete