Friday 23 October 2009

சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (16)


சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத் துளிகள் (16)
-குணன்



மனிதன் தனது பட்டறிவுகளின் தாக்கங்கள் பற்றிய உணர்வு பற்றிய குறிப்பாக, தனது இளமைப் பருவங்களின் அனுபவங்கள்(துயரம், இழப்பு, கொடுமை, வறுமை, கோரத்தனம்) போன்ற பல்வேறுபட்ட தாக்கங்கள் பற்றிய மீட்புப் பார்வைகளை, தனது ஆழ் மனத்தேக்கத்தில் இருந்து, தனது உள்ளார்ந்த தேவைகளுக்கேற்ப, நினைவு வழி பின்னோக்கிய பயணத்தை அவ்வப்போது தொடங்குகிறான்! "அதுவும், தனது முதல், இரண்டு வயது தொடக்கமே அதிகம் கற்றுக்கொள்கிறான்" என்கிறார் மானிடவியலாளர் டார்வின். இன்று, எங்கள் எதிர்காலச் செல்வங்கள் -பச்சிளம் பிஞ்சுகள்- பேசும் பொற்சித்திரங்கள்- ஆயிரமாயிரவர் கொடூர யுத்தத்தாலும், நோய் நொடிகளால் நொடிந்தும், சத்துணவுக்கு வழியின்றியும், தக்க காப்பின்றியும், தாயின் மடியில் செத்துக்கொண்டிருப்பது பற்றிப் பல செய்திகள் அறிந்த பின்னரும், புலம்பெயர்ந்து வாழும் நாம், இதுவரை இதற்காக, உருப்படியாக எதனையும் செய்தோமாவெனில் இல்லை என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே சொல்வதற்கு இல்லை! தாம் பட்டவை, கண்டவை, தமது உற்றார்-பெற்றார் எனப் பலருக்கும் நடந்தேறியவை, பிஞ்சு மனங்களில் பதிவாகியவை- நிச்சயம் ஒரு நாள், அவர்களின் நினைவுகளில் மீண்டும் மீண்டும் மலரத்தான் செய்யும்- அன்று இன்று மறைக்கப்பட்டவை என நினைக்கப்படுபவை எல்லாமே பலரும் அறிந்ததாகத்தான் ஆகும்!

மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டாம்.................!

இன்று, இன்னலுக்குள்ளாகி, கண்ணீரும் கம்பலையும் வாழ்வாகித் தவிக்கின்ற மக்களுக்கு தொடர்சேவை அளிக்கும் தரம் வாய்ந்த நிரந்தர சைவ-இந்துக்கள் அமைப்பென புலம்பெயர் மக்களின் தாயகத்தில் நிறுவப்பட்டு மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டாக்கப்படவில்லை? 'தேவைக்குதவாதது எதுக்குதவும்?' எனும் நம் முதுமொழியை ஞாபகத்திலிட்டதைத் தவிர எதுதான் நடந்திருக்கிறது. இஸ்லாமியரின் "இளம் பிறை" ,கிறீஸ்தவர்களின்,"கரிதாஸ்" போன்ற பல அமைப்புக்கள் எல்லைகடந்த தொண்டமைப்புக்கள், ஒன்றாவது, இன்றுவரை பத்துக்கோடி தமிழர்கள், பரந்து வாழும் நாடுகளில் உருவாக்கிட, தனித்தோ(ஆண்டு தோறும் கோடி கோடியாக நிதி வருமானங்கொண்ட இந்து சமய நிர்வாகங்கள் உலகெங்கும், இந்து நிர்வாகிகள் கைகளில் இருந்தும்) சர்வோதயம் போன்று, நடாத்தும் வலுவிருந்தும், தோற்றம் ஏன் பெறவில்லை? தற்போதைய தமிழர் படும் அவலங்களுக்கு சிங்கை பௌத்தர் அமைப்பு உதவியவாறு உதவிட, ஓர் உலக சைவ -இந்து அமைப்பு ,இந்தியா, மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீஸியஸ், கனடா(40பதுக்கு, மேற்பட்ட ஆலயங்களின் கூட்டமைப்பு மூலம் வலுவான கூட்டமைப்பை உருவாக்கிட முடிந்தும்,) ஆங்காங்கு வாழும் புலம் பெயர் மக்களின் நிதியில், நடைபெறுகின்ற இவ்வாலயங்கள், மூலம், இதுவரை நடந்தேறிய தொண்டுகள், சேவைகள் என்னவென்று அறிய-அறிவிக்க, எந்தவொரு பொதுத் தொண்டமைப்பும் இனங்காண- காட்ட முடியவில்லை என்பதுதானே உண்மை.
இவ்வாறான, பொதுத் தொண்டாற்ற வலு- விருப்புக் கொள்ளாத, தனிமனித இலாப நோக்கோடு, வர்த்தக நலன்களை முன்வைத்து, மக்களை, வாடிக்கையாளர்கள் போலவும், பாவனைசெய்தால், நீண்ட காலம் நிலைகொள்ள முடியாது, நம்பகத் தன்மை இழந்து போகலாம்! உள்ளக, வெளியக, இடப் பெயர்வுகளால் துயருறும், நமது மக்கள், அனைவரும், உறவின் முறையினர், எம் இனத்தவர் என்பது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்!

"ஈழவர் குடிகள்" என்ற குறியீட்டுப் பெயர் தாங்கிய, ஈழமண்ணில் இருந்து(?), சென்று அன்றைய சேர நாடு, இன்றைய கேரள மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட நிலையில் வாழ்கின்றவர்கள் பற்றிய முழுமை வரலாறும் அறிய முடியாவிட்டாலும், அவர்கள் ஈழத்தில் இருந்து சென்றவர்களின் வழித் தோன்றல்கள் என்பது ஏற்புடையதாகும்!

இன்றைய ஈழவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழகத்திற்கும் (அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக) ஈழத்துக்கும் (குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும்) இடையில், கட்டுப்பாடற்ற வர்த்தகம் (யாழ்ப்பாணத்து, மலையாள வகை புகையிலை, பனை உற்பத்திப் பொருட்கள், பனை மரங்கள் உட்பட) ஏற்றுமதியாகின. அதே போல, இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும், வடக்கன் மாடுகள், ஓடு போன்ற பல்பொருட்கள், பெருமளவில் இறக்குமதியாகின! என்னைப் போன்று பலரும் இதனை நேரில் கண்டிருப்பார்கள். மலையாள நாட்டினரைப் போன்றே, இலங்கைத் தமிழரின் உணவு முறைகளும் அமைந்திருந்ததும் யாவரும் அறிந்ததே! யாழ்ப்பாணத்து மக்களைப் போன்று, சங்கப் பாடல்களில் (புறநானூறு 399 ) குறித்தவாறு, 'தொடிமாணுலக்கைப்பரூஉக் குற்றரிசி' என்று (உலக்கையால் குற்றப்பட்ட) கைக்குத்தல் அரிசி, புளிக்குழம்பு, வரால், சுறா மீன் கறி, வள்ளைக் கீரை, பாகல் ஆகிய அறுசுவை கலந்த, சோறும் கறியும், பாற் சொதி, இடியப்பம், பிட்டு என்பவை யாழ்ப்பாண, மலையாள மக்களின் விருப்புணவு வகையாக இன்றும் இருந்து வருகின்றன. கடந்து சென்ற தசாப்தங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற உணவகமாக விளங்கிய, "சுபாஸ் கபே" ஓர் மலையாளத்தவரின் உணவகம் என்பதும், அதன் தற்போதைய நிலையுங்கூட, தமிழரின் அவல நிலையாகி உள்ளதும் தெரிந்த ஒன்றே!

இன்றும், புகலிடத் தமிழர்கள் மத்தியில், கவனம் பெற்றிருக்கின்ற, "மலையாள வைத்தியம்- ஜோதிடம" என்றால் கவன ஈர்ப்பு அதிகம் என்பதற்கு, மேற்கு நாடுகளுக்கு, விளம்பரப் படுத்தப்படுகின்ற பெல்லி, சூனியம், வசையப் படுத்தல், பேய்-பிசாசு ஓட்டல் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள் பற்றிய விளம்பரங்கள் எடுத்துக் காட்டுகின்றன! இவ்வாறு காணப்படுபவர்கள் இன்றும் எங்குமே உள்ளனர் என்பதை மட்டும் மறுக்கமுடியாது!

உலகத்தின் முன் நாம் யார்?

இன்று, உலக நாடுகளில், புலம் பெயர்ந்து- புகலிட வாழ்வை மேற்கொண்டிருப்பவர்கள், பத்து இலட்சம் என்று கூறப் பட்டாலும், இவர்கள் எத்தகைய நிலையில் வாழ்பவர்களாயினும், அவர்கள் தமது ஊர், உறவு, இனம், மொழி, பண்பாடு, நோக்கம் எதிர்காலம் என வரும்போது,(தமக்குள் தானும்) ஏதாவது ஒன்றை அல்லது ஒன்றில் ஒருமித்து கருத்துடையவர்களாக தம்மை நிலைப்படுத்தி, சுயவிமர்சனத்துக்குள்ளாக்கி, தாம் சரியான அல்லது தவறான பாதையில் செல்கின்றோமா? சென்றோமா? என சிந்திக்க வேண்டிய பாரிய கடமை எல்லோருக்கும் முன்னே உள்ளது! புகலிடம் நாடிச் சென்று, இதுவரை அறியாத வசதிகள், உதவிகள், தகுதிகள் யாவுமே வழங்கப் பட்டு, அனுபவிப்பதால் மட்டும், நாம் யார்? நமது எதிர்காலம் ஒட்டுமொத்தமாக எங்கே இட்டுச் செல்லும்? என்பதையும் எல்லோருமே, சந்ததி சந்ததியாக, வாழையடி வாழையாக புகலிட முத்திரை பதித்தவர்களாக, புகலிடம் அன்றி, வேறில்லை என்ற நிலைமைக்குள் மூழ்கடிக்கப்படாமல், மாற்று வழி ஒன்றைப் பற்றிய தேடலுக்கு எத்தனைபேர் தயாராகவுள்ளோம்?

வாழும் நாடுகளில் வளரும் பொருளாதார, அரசியல், சமூகப் பிரச்சினைகளிலிருந்து தப்பிட வேண்டிய நெருக்கடி ஒன்று, எந்த நாட்டிலும், ஏற்படமாட்டாது என்று நம்பிடவோ, நம்பி வாழ்ந்து, ஏமாறவோ தேவையிராது எனக் கூறமுடியுமா? அந்நிய நாடுகளில், பொருள் நாட்டத்தினால் சென்று, அங்கு ஏற்பட்ட பல்வேறு காரணங்களினால், தமது தாய் நாட்டையும், வேர்களையும் தேட வேண்டிய தேவை ஏற்பட்ட வரலாற்று அனுபவங்கள், கடந்த காலத்தில் தமிழர்கள் சந்தித்திருக்கிறார்கள்! எந்த நாட்டில் நாம், எத்தனை காலங்கள் வாழ்ந்தாலும், வேண்டுமாயின் தனிப்பட்டவர்கள், தமது காலத்தை நிறைவு செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம்.

பதிலுக்கு,வருங்கால சந்ததியின் நிலை பற்றிய ஒளிமயம், மிக மிக இருண்டதொன்றாகவே பார்க்க வேண்டும்! ஆயினும், புகலிடத்தில் தடம் பதித்தித்துள்ள பலர், தமது சுயநல சிந்திப்புக்குள் சிக்கி, தமது பாரம்பரயமிக்க சுயஅடையாளங்களை கைநழுவிக்கொள்வதில், அதிக அக்கறை காட்டிவருவதை இங்கு சுட்டிக் காட்ட முடியும்! இந்நிலை தொடருமானால் மூன்று தலைமுறைகளின் பின்னரான நம்சந்ததியினரின் மூலத்தேடல் வினாவாக அமையப்போகும் 'நாம் யார்?' என்ற வினாவின் தேடலுக்காக இந்த புலம்பெயர் முதற்தலைமுறை விட்டுச் சென்றதுதான் என்ன?

உதாணமாக, "இனி அங்கு, சென்று எங்கள் சிறுசுகள் என்னதான் பண்ணமுடியும்?" இங்கு, பிறந்தவர்கள் அங்கு எப்படி ஒத்துப் போக முடியும்? ஐயோ, அங்கு அட்டை, இலையான், நுளம்பு, மயிர்க்கொட்டி, பாம்பு போன்றவற்றைக் கண்டு பயந்து ஏங்கிப் போனார்கள் மற்றது, பைப் தண்ணீர், ரொயிலட் வசதிகள், சரியாக ஊரில் இல்லை,!" என்றவாறு, பிறந்த மண்ணின் வண்ணங்கள் பற்றிய, இதுபோன்ற கருத்துக்கள் பலரின் காதுகளுக்கும் எட்டாமலிருக்காது! ஆனால், இது போன்ற கருத்துக்களை உதிர்ப்பவர்கள் பலரும், முதன் முதலில், புகலிட நுழைவுக்கு முன்னர் தாயகத்தில், "கொமட்" -ரொயிலட் ரிசியு(பேப்பர்) பாவித்திருந்திருப்பின், ஆரம்பத்தில் பெர்லின் அகதிக் கோரிக்கை கால விடுதி வாழ்க்கையின் போது, கொமட்டின் மீது குந்தலிட்டு, கழுவுவதற்காக தரைவிரிப்பின் மீது நீரை ஊற்றி விடுதி மேற்பார்வையாளரின் கண்டனத்துக்குள்ளாகியதை நினைத்துப் பார்க்கவேண்டும். மனிதனால், எந்த நிலையிலும் தகுந்த முயற்சியுடன் பழகின், படித்தறிய முடியும்! இதற்கு ஐரோப்பாவையோ ஐரோப்பிய மொழிகளையோ அறியாதவர்களாக வந்து குடியேறிய முதற் தலைமுறையாகிய நாமே சான்று.

இன்று, தம்மை நல்ல ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், ஜேர்மனியர், அமெரிக்கர், கனேடியர், ஆஸ்திரேலியர், சுவிடிஸ்காரர்கள் எனவாக நினப்புடன் வாழத்தலைப்பட்டுள்ள புகலிடத் தமிழர்கள், முதலில் தம் மூல அடையாளமாகிய தமிழர்களாக இருந்ததை மறக்கப்பார்க்கிறார்கள். 'மேலநாடுகளில் வசிப்பதால் ஊர்க்குருவி பருந்தாகும்' எண்ணங்கொண்டு தாயக தொப்புள்க் கொடி உறவையும், தாய் நாட்டையும் துண்டிப்பதன் மூலம், சந்ததி சந்ததியாக மீளா அடிமைத்தனத்துள் சிக்கிவிடக்கூடிய அபாயத்தை இலகுவில் மறுக்கமுடியாது. எதிர்காலத்தில் நிகழக்கூடியதான இந்நிலையிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய பாரிய கடமை, எம் எல்லோரின் முன்னே 'இந்த வானத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது!' இது நமக்காக, நாம் மட்டுமே செய்திடவேண்டிய கடமை. நடக்குமா? இன்றைய இளையோர் முன்னுள்ள சவால் இது.



தமிழே, உயிரே! தாயே வணக்கம்!!

படிச்சவர்கள் "அடிசுமக்கும் படிச்சு வர்கள்" என்று பாடிய பாரதிதாசன், அன்று ஆங்கிலம் படித்தவர்கள், தமிழைப் புறந்தள்ளி, தமிழ் படித்தவர்களை, மதிக்காது ஆங்கிலம் கற்றவர்களே அறிவுடையவர்கள் என்ற, நச்சுக் கொடியை படரவிட்டவர்கள் என்பதை, தனது கவிதைச் சாட்டையினால் உறைக்க விளாசித் தோலுரித்துச் சென்ற பின்னரும், தமிழரின் அந்நிய -ஆங்கில மோகம் இன்றும் எங்குமே தீர்ந்த பாடில்லை!

பல நாடுகளிலும்- பல்வேறு காலங்களிலும், பன்மொழிப் புலமை கொண்ட மொழியறிஞர்கள், தாம் அறிந்த மொழிகளுள், தமிழ் மொழி ஓர் இனிய, எளிய, அரிய உயர் மொழி என்றும், அது பாரம்பரியமுடைய இலக்கண, இலக்கியங்கள் உடையது என்றும் தாம் அறிந்து, தெளிவாக எடுத்தியம்பியுள்ளனர்! இதன் மொழி அமைப்பு பற்றி, முதன் முதல் ஆய்ந்து கூறியவர் மட்டுமன்றி தமிழ் தனித்துவமான, திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்தது என்றும், வடமொழிபோல, வடமொழித் தொடர்பில்லாது தனித்து இயங்கும் தகைமை கொண்டது தமிழ் மொழி என்றும் கூறியவர் டாக்டர் கார்ல்வெல்ட் ஆவார். இவரின், "திராவிட ஒப்பிலக்கணத்தில்", அதனை விரிவாக அறியலாம். இந்த ஆய்வின் பின்னர் இந்திய மொழிக் குடும்பம் தொடர்பான ஆய்வுக் கண்ணோட்டங்களும், இந்திய மக்களது பரவல் தொடர்பான வரலாற்றுக் கண்ணோட்டங்களும் வேறு தளத்திற்கே சென்றுவிட்டன. தற்போது இந்தியத் தொன்மக் குடிமக்கள் தொடர்பாக விஞ்ஞான ஆய்வுகள் தரும் புதிய தகவல்கள் ஆச்சரியமாகவே ஒத்துப்போகின்றன.

ஈழத்தமிழறிஞர்களுள், பன்மொழியறிஞராகிய நல்லூர் ஞானப்பிரகாசகர், இவரின் மாணவராக விளங்கிய உலகின் 90 மொழிகளில் புலமை கொண்டவரும், யாழ் நூலகம் தீப்பற்றிக்கொண்ட செய்தியைக் கேட்டவுடன் தன் உயிரைப்பிரிந்தவருமாகிய (அந்நேரத்திலும் உருசிய மொழியைக் கற்றுக் கொண்டிருந்தவர்) வண. பிதா டாக்டர் டேவிட் அடிகளார் தமிழ் இலக்கணம் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரைப் போலவே கணேஸ் அய்யர் தமிழ் இலக்கண நூலுக்கு, சிறந்த உரை எழுதி வெளியிட்டுள்ளார்! தமிழ் இலக்கண, இலக்கிய, புராண, நீதி நூல்களையும் சரி பார்த்தும், புதிய சிறந்த தமிழ் வசன நடைக்கு தந்தை என்றவாறு, "வசன நடை கைவந்த வல்லாளர்" என தமிழறிஞர்களால் அன்று அழைக்கப்பட்டவர் நல்லைநகர் ஆறுமுகநாவலர்.

"தமிழும் சைவமும்" என்ற கூற்றை, நாவலர் மறுத்து, தமிழ் வேறு சைவம் வேறு என்று விளக்கியிருந்தார்! நாவலர் வழியில், தமிழ் மொழியை பரவிட தொண்டாற்றிய பலருள் சி.வை. தாமோரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, மட்டுவில் ம. கதிரவேற்பிள்ளை, தென் கோவை சபாபதி நாவலர், நீர்வை சிவசங்கர பண்டிதர் போன்ற பலர் நாவலரிடம் பாடங்கேட்டவர்கள் எனபர். இவர்களுக்குப் பின்னர், ஈழத்தில் நாவலர் காட்டிய வழியில், தமிழை வளர்த்த பலருள் மட்டுநகர் விபுலாநந்தடிகளார், திருமலை கனகசுந்தரம் பிள்ளை, பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளை, பேரா.டாக்டர் தனிநாயக அடிகளர் அடிகள், பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்ற அரிய தமிழ்ப் பெரியார்கள் தமிழை தங்கள் உயிர் போல கருதி, வளரத் தொண்டாற்றியவர்கள் எனப் பதிந்து கொண்டு செல்லலாம். தாயகம் கடந்தவர்களாகி வளரும் நம் எதிர்காலத்தினர், குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் பிறந்த புதிய, இளைய தமிழர்கள், அறிந்து கொள்ளவேண்டியவையும் பன்முக மொழிச் சூழலில் வாழும் பேறுபெற்றுள்ள இவர்கள் மேற்கொள்ளும் ஒப்பீட்டு மொழியில் ஆய்வுகளும் படைப்புகளும் 'எட்டுத்திங்கெங்கிலும் சென்று கலைச் செல்வம் கொணர்ந்திடுவீர்' என்ற பாரதி கண்ட கனவை நனவாக்கிடுமே. செய்வார்களா?!

உலககெலாம் தமிழ் மொழி பரவச் செய்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார்

எனது மாணவப் பருவந்தொட்டு, யாழ் தந்த தமிழறிஞர் பலருள் தனிநாயகம் அடிகளார் மீதும், வித்துவான் க.ந.வேலன், வித்துவான் வேந்தனார் ஆகியோர் மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்தேன். வண.பிதா. தனிநாயகம் அடிகளார் பின்னைய இருவரையும் விட முற்றிலும் வேறு பட்ட ஒருவராக இருந்தவர். வித்துவான்கள் இருவரும், சிறந்த தமிழ் இலக்கியங்களிலும், சைவத்திலும் ஆழ்ந்த நேசிப்புக் கொண்டவர்கள்! அதனாற்போலும், அன்றைய அரசியல் மேடைகளிலும், சிறந்த கவிதை, இலக்கியம் கலந்த நடையில் சொற்பொழிவாற்றினார்கள்! இவ்வாறு சோமசுந்தரப்புலவரின் புதல்வர் சோ.இளமுருனார், இன்றைய தமிழ் படைப்பிலக்கியக் கர்த்தாக்களில் ஒருவராகத் திகழும் செங்கை ஆழியானின் உடன்பிறப்பு புதுமைலோலன் போன்றோரும் தங்கள் பேச்சுத் திறமையால் தமிழை மக்களிடம் பரப்பியவர்கள்! யாழ்ப்பாணத்தின் தீவகங்களில், இருந்தே பெரும் எண்ணிக்கையில், முதலில் தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து, ஏனைய பகுதிகளில் இருந்தும் பலர் வெளியேறி, கடந்த மூன்று தசாப்தங்களாக, ஓர் முழமையான புதிய இளைய தலைமுறையினரின் தோற்றம் ஏற்பட்டுள்ளது! இந்த புதிய தலைமுறை, தனது,வேர்களை தெரிந்து, அதன் அறிவார்ந்த விழுமியங்களையும், நம் முன்னோர்கள் அளித்துச் சென்ற அருஞ்செல்வங்களையும் அறிந்து, அவற்றுள் பாரதி பாடியதைப்போல, "புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" (மண்டிகிடக்கும் என்பதற்கு, ஆழ்ந்த பொருள் உண்மென்பார், தனிநாயகம் அடிகளார்!) என்றவாறு, உலகில், வாழும் நாடுகளில், தமது தாய்த் தமிழில் (பொருள் மண்டிக் கிடக்கும்) தொல்காப்பியத்தின் (எழுத்து , சொல், பொருள்) யாவற்றையும், கற்று, அவற்றை, பிறர் மொழிகளில், வெளியிட, முதலில் தமது தாய் மொழியில் முயன்று, தேர்ச்சி கண்டு பாரதி, தனிநாயகம் அடிகளார், கண்ட கனவும், பங்களிப்புக்களும் சங்கமமாகிட "உலக மெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தல் வேண்டுமன்றோ? -ஒரு சொல் கேளீர்!" என்ற பாரதிக் கவிஞரின் வேண்டுகோள் 125 ஆண்டுகள் தாண்டியும், செயலாக்கம் பெற புலம் பெயர் இளந்தமிழர் முன்வருவார்கள் -முயன்று தமிழ் முழக்கம் செய்வார்கள்- செய்யவேண்டும்!

உலகம் பரவிய தமிழ்

"நாமுமது தமிழரென வாழவேண்டின், உலகமெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!" என அன்று, பாரதி ஒலித்தவாறு, பாரதியாரின் மறைவுக்கு முன்னரே, 2-8-1913 ல் யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த, கென்றி ஸ்தனிஸ்லாஸ் நாகநாதன், செசில் இராசம்மா வஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் தலைமகனாக, ஓர் ஆண் குழந்தை கரம்பனில் பிறந்தது. தங்கள் பிள்ளைக்கு சேவியர் ஸ்தனிஸ்லாஸ் எனப் பெயரிட்டு அழைத்தனர். கல்வியில் சிறந்து விளங்கிய சேவியர் இறைப் பணி செய்ய விரும்பி வாழ்வைத் துறந்து, கத்தோலிக்க குருவாகினார். கத்தோலிக்க மதபீடமாக விளங்கிய உரோமில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பை மேற்கொண்டார். தமிழில் அதிகம் கவனம் செலுத்தாது, ஆங்கிலத்தில் புலமை பெற்றார்! ஆனாலும், வாழ்க்கையைத் துறந்தவரான சேவியர் ஸ்தனிஸ்லாஸ், அங்கு தம்மோடு பயின்ற சக தமிழ் நண்பாகளுடன், இத்தாலிய தமிழறிஞர் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் பெயரில் தமிழ்ச்சங்கம் அமைத்தது முதல் தமிழ்த் தொண்டினை ஏற்று, பின்னாட்களில் தம் வாழ்நாள் முழுவதும் தமிழை உலகெங்கும் பரவிடவும், தமிழ்-தமிழரின், பண்பாடு வரலாறு பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்தார்.

அதன் காரணமாக, வெளிநாடுகளில் பல வேற்று மொழி அறிஞர்கள் பலரும், பல்கலைக்கழகங்களில் இருந்து மொழியியல் மாணவர்களும் தமிழ்மொழியை அறிந்து கொண்டு ஆய்வுகளைச் செய்தார்கள். அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்து, எசமானர்களின் முதுசொறிந்து, தன்மானம் மறந்தவர்கள் பற்றி, தோலுரித்துக் காட்டிய முதல் தமிழ்ப் பாவலன், "பாட்டுக் கொரு புலவன் பாரதி!" என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, "அவன் பாடிய பாடல்களைப் பாடக்கேட்டு, கிறு கிறுத்துப் போனேனேயடா….!" என்று பாடியவாறு, "தமிழ் ஏன்?" என்று கேட்கும் பதர்கள் இன்றும், ஆங்காங்கு நிறையவே உள்ளார்கள்! அத்தகையவர்கள் தாய் தந்தையர்கள் ஏன் என்று கேட்கவும் துணிய மாட்டார்கள் என எப்படி எதிர்பார்க்கமுடியும்?" தமிழரின் நாகரிகம், தத்துவம், பண்பாடு, இலக்கணம், இலக்கியம் என அனைத்தையும் கற்றுணர்ந்து, தெரிந்து, தெளிந்து உலகிற்கு முதலில் வெளிக்கொணர்ந்தவர்கள் மேலை நாடுகளில் இருந்து மதத்தொண்டாற்ற வந்த கிறீஸ்தவ குருமார்கள் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்!

இவ்வாறு 17, 18, 19ம் நூற்றாண்டுகளில், தமிழ் நாடு வந்தவர்களுள், ஜேர்மானியர்களான சீகன்பால், சோமரஸ், சுல்ட்ஸ், பெத்தையன், இத்தாலியரான ஜோஸ்ப் கொன்ஸ்தான்தஸ் பெஸ்கி என்ற (தைரியசாமிக்கு) வீரமாமுனிவர் என்ற சிறப்பு பெயர் கொண்ட தன்னிகரில்லா தமிழறிஞர் ஆவார்! இவர் 1680 ல், பிறந்து, 1710ல் தமிழகம் சென்று, தைரியசாமி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்! தமிழ் மொழி மீது அளவு கடந்த பற்றுக் கொண்டு, அதனை முழமையாக கற்றுக்கொண்டார்! இலக்கண, இலக்கிய, அகராதி, மொழி பெயர்ப்பு முதல், அனைத்திலும் தனது ஆக்கங்களை படைத்தார். இவரைப் போல, தமிழராகப் பிறந்த ஒருவர் தானும், இத்தனை தொண்டாற்றியிருப்பரோ எனின், விடை காண்பதென்பது மிக அரிதே!

வீரமாமுனிவர் பற்றி அறிந்து கொண்ட சேவியர் அவர் வழியில் தனிநாயகம் அடிககளார் ஆகினார். தமிழ்த் தொண்டாற்ற தீர்மானித்து, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்த் தூதராக, உலகின் வரலாற்றுச் சிறப்பும், புராதன நாகரிகமும் கொண்ட மலேயா, சீனா, சப்பான், வியட்நாம், தாய்லாந்து,அமெரிக்கா, ஐரோப்பா உட்பட அறுபதுக்கு மேற்பட்ட ஆசிய, இலத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மொழியியல் பீட மாணவர்களுக்கு, தமிழ்மொழி, தமிழர் நாகரிகம், சமயம், தத்துவம் போன்ற தலைப்பின் கீழ் அரிய உரைகள், விளக்கங்களை வழங்கியதுடன், ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தவர் தனிநாயகம் என்ற தமிழுக்காகன 'தமிழ்நாயகம்' போன்ற தமிழ்த் தூதர்!

இவரது அரிய முயற்சியால் உலகப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ்துறை தொடங்கப்பட்டு மாணவர்கள் தமிழாய்வு மேற்கொண்டிருந்தனர். 'தமிழர் பண்பாடு'(Tamil Culture) என்ற காலண்டு இதழை, யாழ்ப்பாணத்தில் தொடங்கி, அதன் ஆசிரியராக கலைப்புலவர் நவரத்தினம் இருந்தார். தனிநாயகம் அடிகளார் தனது கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். அதன் மூலம் செய்திகள், உலகின் பலகலைக் கழகங்களுக்கும் சென்றடைந்தன! 1952 ல் தொடங்கிய இச் சஞ்சிகை பின்னர் தமிழறிஞர் குழுவினால், சென்னையிலிருந்து வெளி வந்தது. இதில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் யாவும் துறைசார்ந்த ஆய்வாளர்கள் -அறிஞர்- போன்றோரால் எழுதப்பட்டன. இப்போது, இச் சஞ்சிகைகளின் சென்ற கால இதழ்கள் தொகுத்து வெளிவந்தன. தமிழறிஞர்களாக விளங்கிய மேற்கு நாடுகளைச் சார்ந்த பேராசிரியர்கள் ஜே.பிலியோச (பிரான்சு), டிபர்ரோ (இங்கிலாந்து), எம்.பி. எமனோ (அமெரிக்கா), எவ்.பி.ஜே.கியுபர் (ஒல்லாந்து), கமில் சுவலபில்(செக்கோசலவாகியா) ஆகியோருடன் அடிகளாரும் இணைந்து தொடக்கி, யுனஸ்கோவின் ஆதரவுடன், உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் தொடக்கப் பட்டு, "உலகத் தமிழாராய்ச்சி மாநாடு", முதல் மாநாடு மலேசிய பல்கலைக்கழகத்தில், மலேசிய அரசின் அனுசரணையுடன் 1966, சித்திரை 16-23 வரை இடம் பெற்றது. அப்போதைய தமிழ்த் துறைத் தலைவராக பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் விளங்கினார்! இதனைத் தொடர்நது, 1968ல் சென்னையில் முதல்வராக அறிஞர் அண்ணா தலைமையிலும், (தமிழ் அறிஞர்கள் சிலை வைப்பில், தமிழ் வசன நடையின் தந்தை நல்லூர் ஆறுமுக நாவலருக்கு சிலை வைக்கு மாறு கேட்டும் தவிர்க்கப்பட்டதால் ஈழத் தமிழர்கள் தாழாத் துயரமடைந்து, பின்னர் நல்லூரில் சிலை வைத்தார்கள்!) மூன்றாம் மாநாடு 1970 ல் பாரிசிலும், நான்காம் மாநாடு 1974ல் யாழ்ப்பாணத்திலும் (இதில் ஈடேறிய வன்செயல்களில் பத்து உயிர்கள் பலி எடுக்கப்பட்டதும்), அதனைத் தொடர்ந்து ஏழாண்டுகள் தாண்டி, 1981ல் எம்.ஜி.ஆர். தலைமையில் மதுரையிலும், பின்னர் ஒழுங்கற்று 1987ல் மலேசியாவிலும், 1989ல் மொறிசியசிலும், இறுதியாக எட்டாவது மாநாடு 1995 ல் தஞ்சாவூரில் (இதில் பங்கேற்கச் சென்றி தமிழ் ஆய்வறிஞர் பேரர் சிவத்தம்பி அவர்களை நுழையவிடாது தடுத்தும்) செல்வி ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து நடாத்தியதுடன் உலகத் தமிழாராயச்சிக் கழக மாநாடு தடைப்பட்டது!

உலகம் பரவி வாழும் தமிழர்களது சிந்தனையும், செயல்களும், பகுப்பாய்வு வீச்சுகளும் பூர்வீக இருப்பிடங்களில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழருக்குமிடையிலான இயல்பாகவே மாறுபட்டிருப்பதான பரிமாணத்தை நடந்து முடிந்த தமிழாராட்சி மாநாடுகள் தெளிவாகப் பிரதிபலித்துள்ளன. தமிழ் ஆய்வாள்களிடமிருந்த செயற்பாடு உணர்ச்சிமயமாக மட்டும் பயன்படுத்தும் வசதிபடைத்த தமிழ் அரசியலாளர்களின் ஆளுகைக்குள் மாட்டப்பட்டு திணறுவதை தற்போது நிகழும் புதிய ஆரவார அறிவிப்புகள் தெளிவுபடுத்திவிட்டன. இது மிகவும் கவலை அளிக்கும் செயலாகவே உலகத்தமிழ் ஆர்வலர்களால் பார்க்கப்படுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

தனிநாயகம் அடிகளாரால் தொடங்கப்பட்ட இந்நிகழ்வை சரியானதொரு பாதையில் செல்ல வழிவகை காண்பதுதான் நம் எதிர்கால இளையோர் அடிகளாருக்குச் செய்யும் சரியானதொரு நினைவுகூறலாக அமையும். குறுகிய அரசியலுக்கு அப்பாலான தமிழ் பண்பாட்டு ஆய்வுத் தளத்தில் விரியவேண்டிய இப்பணியை உரிய முறையில் நெறிப்படுத்தும் புதியதொரு ஒழுங்கை மேற்கொள்வதுதான் இன்று பூமிப் பந்தெங்கிலும் பரவி வாழத் தலைப்பட்டு உலகத் தமிழராக அடையாளமிடப்பட்டுள்ள தமிழர்களின் எதிர்காலப்பணியாக இருக்கமுடியும்.

தனிநாயகம் அடிகளார் மறைந்து 29 ஆண்டுகள் கரைந்துவிட்டன. இவரது வாழ்வும் ஆராய்ச்சிப் பணிகளும் தொடர்பான முழுமையான தொகுப்பு நூல் வெளிடப்படவேண்டும். தமிழர், தமிழர் பண்பாடு தொடர்பாக உலக அரங்கில் அறிமுகமாகத் தொடங்கப்பட்ட அவரது முயற்சி உலகின் பல்வேறு மொழிகளூடாகத் தொடர வழி செய்தல் வேண்டும்.

**********

பின்னிணைப்பு:

தனிநாயகம் அடிகளார் (2.08.1913 - 01.09.1980)
தமிழையும் தமிழர் பண்பாட்டையும் முறைசார் முறைமையில் ஒருமுகப்படுத்தும் உலகளாவிய ஆய்வரங்கத்தை நிறுவியவர்
- உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த ஒரு செயல் வீரன் !


Rev.Father Xavier S.Thani Nayagam, was born in Kayts, Tamil Eelam on 2 August 1913. His primary education was at St.Anthony's College Kayts (1920-1922) and his secondary education was at St.Patrick's College, Jaffna (1923-1930). His undergraduate education was at St.Bernard's Seminary, Colombo (1931 - 1934) where he obtained a B.A. in Philosophy. He obtained his post graduate degrees (M.A. and M.Litt) at Annamalai University in Tamil Nadu. Father Thaninayagam researched at Annamalai University. His academic qualifications included D.D. (Rome), M.A. M.Litt (Annamalai) and Ph.D. (London).

Rev.Father Xavier S.Thani Nayagam was one of the founder members of the International Association for Tamil Research whose first conference was held in Kuala Lumpur in 1966. He served at the University of Malaya as Professor of Indian Studies (1961 - 1969) and was Founder and Chief Editor of Tamil Culture (1951-1959). He died in Jaffna, Tamil Eelam on 1 September 1980.

ஒரு மொழிக்காக உலகளாவிய மாநாடு நடத்தும் முதல் முயற்சிக்குச் சொந்தக்காரர் தவத்திரு தனிநாயகம் அடிகள்தான். உலகிலேயே தமிழ் மொழிக்கு உலகளாவிய மாநாடு நடத்தப்பட்டதற்குப் பிறகுதான் சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாநாடுகள் நடந்தன.

"தமிழ்க் கலாசாரம்" என்னும் முத்திங்கள் ஏடு தமிழர்களுடைய கலை, இலக்கியம், பண்பாடு என்பவற்றை பறைசாற்றி வ்ந்துள்ளது. இந்த ஏடு ஆற்றிவந்த அரும் பெரும் பணி மிகவும் மகத்தானது. இவ்வேடு உலகை வலம் வரச் செய்த பெருமை பிதா தனிநாய்கம் அடிகளாரையே சாரும். கத்தொலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் காலப்போக்கில் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும் பரப்பும் தூதராகவும் தமிழ்க் கலாசாரம் ஏட்டின் ஆசிரியராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.

தமிழ் மொழி இந்துக்களுக்கு(சைவர்கள்) மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதனால் சமய சமரசம் நிலவியது. உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும், வைஷ்ணவரின் சரணாகதிக் கோட்பாடும் தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன என்றால் மிகையொன்றும் இல்லை.

தமிழாரய்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் விருத்தியடைந்ததென்பது தப்பான கருத்தென்பதும் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன என்பதும் அடிகளாரின் துணிந்த கருத்தாகும். இந்நூலை எழுதிய அடிகளார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் நிகழ்த்திய இரு விரிவுரைகளே நூலாகி தமிழிலக்கியத்திற்கு அவர் கொடுத்த இறுதிச் சொத்தாகவுள்ளதை இந்நூலைப் படிப்போர் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். ஆதிகாலம், இடைக்காலம், நவீன் காலம் என்ற முக்காலங்களிலும் தமிழாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டிருகின்றதென்பதை அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று அடிகளார் குறிப்பிடும் புறனானூறு அடிகளும் இங்கும் இடம் பெறுகின்றன. மிகத் தொன்மையான தமிழ் நாகரீகம் சிந்து வெளியில் ஆரம்பமாகி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற ஆராய்ச்சிக் கருத்தை முன் வைத்தும் ஆதரித்தும் அதற்கான எடுத்துக்காட்டுக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.



நினைவுத்துளிகள் சொட்டும்.....

No comments:

Post a Comment