Monday, 12 October 2009

சரம் 20 'நாளும் கோளும் நலிந்தோருக்கில்லை!'


'நாளும் கோளும் நலிந்தோருக்கில்லை!'
சரம் 20

சல சலவென அளவளாவிக்கொண்டிருந்த தமது இலைகள் உதிர்வதை தவிர்க்க முடியாத பரிதவிப்போடு எதிர்கொள்ளும் பாவனையில் மெளனிக்கும் மரங்கள் கட்டியங் கூறத் தொடங்கிவிட்டன. என்னதான் அறிவியல் தொழில்நுட்பம் அறியப்பட்ட ஐரோப்பிய சமூகமாக இருப்பினும் குளிர்காலம் நெருங்கத் தொடங்கியதும் ஒருவித தன்னடக்கமான செயல்கள் தானாகவே வெளிப்படத் தொடங்கிவிடும். நீண்டு செல்லும் அகதி வாழ்வில் எம்மையும் அறியாது நாமும் இயைந்தவர்களாய் இந்த ஐரோப்பிய சூழலில் இருப்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தக் குளிர்காலப் பயணங்களுக்கு நிலத்தடிப் பயணங்கள்தான் இதமான சூடாகவும் பரபரப்பாகவும் இருக்கும். எலிவளைகள் போன்ற தடமாற்றப் பாதைகளில் எத்தனையோ முகங்களின் தரிசனங்கள்! பாரீஸ் போன்ற மாநாகரங்களில் இந்தப் பொதுப் பாதைகளின் பரபரப்பான நடமாட்டம் இன்றைய வேக உலகின் போக்கை அப்படியே பளீரிடும். பாரீசுக்குள் வந்தவருக்கு இந்த நிலத்தடிப் பொதுப்பாதைகளின் கலை அழகூட்டலின் கரிசனைகளை அவதாக்கத் தவறமாட்டார்கள். ஒவ்வொரு தடமாகப் பயணிக்கும் மின்தொடரூந்துகளும் அவற்றுக்கான வெவ்வேறு தனித்துவமான அழகுடன் வடிவமைத்தே காணப்படும். தடமாற்ற நிலையங்களில் தனிக் கலைஞர்களின் வாத்திய இசையோ குரல் வழிப்பாடல்களோ இடம் பெற பொந்து வளைப் பாதைப் பயணங்களை வருடும்! பரபரப்பான பொது மனிதப் பயணங்களில் நாமும் ஒருவராகிச் செல்லும் இதமான சுகம் தனியனாகி மகிழ்வூர்தியில் செல்கையில் கிடைக்காது.

இப்படியாக ஒருநாள், எனது பெட்டியில் ஒரு தமிழ்க்குடும்பம் பரபரப்பாக ஏறி முன் இருக்கையில் அமர்கிறது. மூன்று சிறு பிள்ளைகளும் இளம் தாயாரும் இவர்களது இறுக்கமான உறவினராகக் காணப்படும் முதியவரான பெரிய அம்மாவாகவும் அக்குடும்பம் காணப்பட்டது. அந்த அம்மா நிமிர்ந்த நடையும், திடமான தோற்றத்துடனும் தனது செழிப்பைக் காட்டும் அணிகலங்களுடனும் இருந்த தோற்றம் இவர் வேறொரு நாட்டிலிருந்து இங்கு வந்துள்ளதை இலகுவில் வெளிப்படுத்தியது. இந்த எதிர்ப்பக்க இருக்கையில் தமிழ்ப் பத்திரிகையொன்றுடனும் தோளில் பையுடன் மிடுக்காக வந்த இன்னோரு ஒருவர் அமர்கிறார். வண்டி நகரத் தொடங்கியது. செவிப்புலனை முடுக்கிவிட்டு அமைதியாகப் பயணிக்கிறேன்.

பிள்ளைகளின் நலனைக் கரிசனையுடன் குசலம் விசாரிக்கிறார் பெரியம்மா. பிள்ளைகளின் பிறந்த நாள், நட்சத்திரம் பற்றியெல்லாம் அறிகிறார்.

"இவன் மகர ராசிக்காரன்.... நல்ல சுட்டியாகவும் அம்மாவுக்கு ஒத்தாசையாகவும் இருப்பான். ஆனால் இளம் வயதில் நோய்நொடி வராது கவனமாகப் பார்க்க வேண்டும்!" என மூத்த மகனைக் காட்டிச் சொன்னார் அந்தப் பெரியம்மா. அந்த இளந்தாயின் முகத்தில் பல்வேறு மாற்றங்கள் வந்து செல்கின்றன. முகத்தில் பொன்முறுவலையும் தந்து செல்கிறது!

"இவன் இருக்கிறானே உனது இரண்டாவது தனுராசிக்காரன்! உன்னைப் பாடாய்படுத்தப் போகிறான்..... ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். எல்லாமே அந்த ஆண்டவன் விட்டவழியில்தான் நடக்கும்!" என தாயின் அருகில் ஒன்றுமே அறியாததாக இரண்டு வயது பாலகனாக இருந்தவனைப் பற்றியதாக இருந்தது.

இதைக் கேட்ட எனக்கே மலைப்பாக இருந்தபோது அந்த இளந்தாய்க்கு எப்படியிருந்திருக்கும். அவரின் முகத்தைப் பார்க்க அஞ்சியவாறு ஒரு கணம் கடைக்கண்ணால் பார்க்கிறேன். 'அடடா....... அந்த இளந்தாயின் முகத்தில் தோன்றிய இருள்....' என்னைச் சங்கடப்படுத்தத் தொடங்கியது. 'எழுந்து சென்று விடுவோமா..." என்று என்று தோன்றியது.

அடுத்ததாக தாயின் நெஞ்சில் ஏணைப் பட்டியாகக் கட்டப்பட்டு தொங்கியவாறு தூங்கிக் கொண்டிருந்த கடைக்குட்டியான பெண் பற்றிய பலன்கள் சொல்லப்பட்ட வண்ணம் நீண்ட உரையாடலில் எனது மனம் செல்லாமல் தவிர்த்துக் கொண்டு இறுகியது.

திடீரென எமது இருக்கையின் எதிராக அமர்ந்திருந்த அந்த பத்திரிகை மனிதர் எழுந்து வந்து வணக்கம் சொல்கிறார். ஆச்சரியமாகத் திரும்பியவனாகப் பார்க்கிறேன். எல்லோரும் வணக்கம் சொல்கிறார்கள்.

"அம்மா! நீங்கள் வயதில் பெரியவர்.. எல்லோருக்கும் மூத்தவர்...... நான் என் கருத்தைச் சொல்லலாமா?" என அந்தப் பெரியம்மாவைப் பார்த்து இதமாக வினவினார்.

"ஓம் தம்பி!.... தாராளமாகச் சொல்லுங்கோ!" என்றார் மகிழ்வுடன்.

"அம்மா நான் யாரையும் குறை சொல்லும் நோக்கத்துடன் கதைப்பவனில்லை. நான் கதைப்பதை குறையாக நினைக்கவே கூடாது!" என்ற பீடிகையுடன் அந்தப் பெரியம்மாவைப் பார்க்கிறார் அவர். அவரது கண்களில் காணப்பட்ட தீர்க்கமானதொரு ஒளி என்னை ஈர்க்கிறது.

"தம்பி! நீங்கள் தாராளமாகவே கதைக்கலாம்!" என்றார் அந்த பெரியம்மா திறந்த மனதுடன்.

"நீங்கள் கதைத்து வந்த உரையாடல்களை நானும் கேட்டுக் கொண்டு வந்ததால்தான் இதில் கதைக்கிறேன். நீங்கள் சொன்ன பலன்களால் அந்த இளந்தாயின் முகத்தில் தோன்றிய மாற்றங்களால் துணுக்குற்றதால் உந்தப்பட்டே நான் கதைக்கிறேன். நம்ம நாட்டார் பழமொழி ஒன்று இருக்கு 'நாளும் கோளும் நலிவுற்றோருக்கில்லை!' தெரியுமா?....... நாடுவிட்டு நாடுவந்து குடும்ப உறவுகளை விட்டு தொலைவில் தன்னந்தனியாக பிள்ளைகளைப் பெற்று சிரமங்களுடன் இருக்கும் இந்த இளந்தாயார்களும் நலிவுற்றார்கள்தானே!"

அந்தப் பத்திரிகையுடன் வந்த அந்த மனிதரை வாஞ்சையுடன் பார்க்கிறேன். மனதில் மின்மினிப் பூச்சிகள் பறக்கின்றன.

வண்டியைவிட்டு இறங்கி நடக்கையில் இந்த உரையாடல் நினைவுகள் மீளவும் வந்து செல்ல எப்போதோ ஒருநாள் "வாஸ்து பார்க்குறாங்களாம்...... வாஸ்துசாத்திரமாம்... கக்கூசு கட்டுறதுக்கும் வாஸ்து.. இது என்டாது.. வெளிக்குப் போகக்கிலை... சுப்பிரமணி உனக்குவரலே....! கோவிந்தசாமி உனக்குவரலே....! என்னடாகிது வெளிப்போறதுக்கும் சாஸ்திரமா?..... " எனும் பெரியார்தாசனின் நையாண்டிப் பேச்சு நினைவில் தோன்ற முன்முறுவலிடுகிறேன்.

- முகிலன்
பாரீஸ் - ஒக்டோபர் 2009

3 comments:

 1. புலம்பெயர்ந்த நிலையில் இன்று நமது வளர்ச்சியின்(பணத்தாலான பெறுமானத்தின்) தன்மையைக் காட்டவேண்டியிருக்கும் போது எப்படித்தான் நடப்பது?
  நலிவுற்றோராக வெளிப்படுத்த முடியாதே?
  அதற்கு முன்னர் சோமாலியாவையும் இப்போது வன்னியையும் எப்போதும் தலித் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோரையும்தானே குறிப்பிட முடியும்.

  புலம்பெயர்ந்திருக்கும் நமமவர்களின் எண்ண மிதப்பை சாதாரணமாக மதிப்பிட முடியாது.
  நான் அண்மையில் ஒரு கல்யாண விடையமாக நண்பர் ஒருவரின் மகளைக் கேட்ட போது, இது தொடர்பாக நண்பரின் மகளின் சாதகத்தை ஐயரிடம் காட்டியுள்ளார்களாம் 'தற்போது அப்பெண்ணுக்கு திருமணம் பேசும் காலம்தானா?' என்பதை அறிவதற்காக என்று மிகவும் பக்தி சிரத்தையுடன் பதில் வந்தது.
  "அடபோங்கடா....." என்று விட்டுவிட்டேன். கைப்புண்ணைக் காண சாதகம் பார்த்து அறிக்கையிட்டு பெருமிதம் கொள்ள வேண்டுமல்லவா!... இல்லாவிட்டால் பெருமிதம் கொள்ள என்னதான் இருக்கு!!

  அந்தக்காலத்தில் நம் யாழ் தீபகற்பத்தில் சீமாட்டிகளாக இருந்தவர்களின் தலையிடிக்காக கார் பிடித்து 'டொக்டர் ஏபிரகாமிடம்' காட்டிவந்திருந்த கதையெல்லாவற்றையும் மறந்தே போய்விட்டோமாக்கும்!
  எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

  ReplyDelete
 2. நல்லா சொல்லீருக்கீங்க.

  நாளும் கோளும் நலிந்தோருக்கில்லை.. கண்டிப்பா இல்லைதான்

  ReplyDelete
 3. mmastanoli அவர்களே தங்களது வருகைக்கும் பதிவிடலுக்கும் நன்றி.

  ReplyDelete