Saturday, 28 March 2015

நம்ம பிள்ளைகளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் பேசாதுகள்!! நீங்க கதையுங்கோ!!

குஞ்சரம் 24

நம்ம பிள்ளைகளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் பேசாதுகள்!! நீங்க கதையுங்கோ!!

அண்மையில் நடந்ததொரு குடும்ப நிகழ்வொன்றில் ஒன்றுகூடியிருந்தோம். பல்வேறு ஐரோப்பிய அமெரிக்கக் குடியேறிகளாகி நீட்சியுறும் வாழ்வில்; ஒரே குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எத்தனையோ மாற்றங்களைத் தரிசிக்கும் தருணங்கள் இவை. எமது முகவழியாகவே வெளிப்படும் ஆச்சரியங்கள் இதை நேரடியாகவே சுட்டிக் காட்டும்.
இப்படியாக, நமக்குள் பல பழைய நினைவோடைப் பயணங்கள், உரையாடலகளின் அசை மீட்டல்கள், வளர்ந்து செல்லும் அடுத்த தலைமுறையினரது செயல்கள், பசுமையாக நினைவிலி மனங்களில் இருக்கும் ஊர் ஞாபகங்கள், புதிய மதிப்பீடுகள்... எனவாக அவரவரைக் கிளறிடும் சிந்தனைகளுடன் பேசாதிருக்க வைக்கும். இன்னுமேன் வெளிப்படும் பெரு.. பெரு மூச்சுடன், எங்களுக்கும் வயதாகிவிட்டதை உணர்த்தி மயிரில்லாத தலைகளையோ அல்லது நரை மிஞ்சிய தலைகளையோ தடவிவிடும் கைகள் கொண்டவர்களாக்கித் தள்ளியும் விடும்.
இத்தகைய அதிஉணர்வுசார் வேளையாக அது இருந்ததால் அதிகமாய்ப் பேசாதிருந்தேன். "அடுத்த தலைமுறையினர் (தமது பிள்ளைகள்), நடைபெற்ற நிகழ்வு பற்றி என்ன எண்ணங்களைக்களைக் கொண்டிருக்கிறார்கள்?" என்பதாக ஒருவர் வினவவும், பல்வேறு உரையாடல்கள் ஒரு புள்ளியில் குவியமிட்டன. இதனால் ஈர்க்கப்பட்டவனாகி நடைபெறும் உரையாடல்களைச் செவிமடுக்கத் தொடங்கினேன்....
"தமிழிலோ அல்லது வேறு மொழியிலோ உங்கள் எண்ணங்களைக் கூறலாம்!" எனவாக ஊக்கமளித்தார் வினவியவர். சில பிள்ளைகள் சரளமாக தமிழில் உரையாடினார்கள். சிலர் பேசாது எழுந்து சென்றனர். சிலர் அவரவர் நாட்டு மொழிகளில் தத்தமது தாயாரிடம் கூறினர். இதன் தெறிப்பாகியது பெரியவர்களது உரையாடல். 'அடுத்த தலைமுறையினர் பெற்றோரிடம் தமிழில் எப்படியாகவெல்லாம் உரையாடுகிறார்கள்?' என்பதாக அமைந்தது பேசுபொருள். இது தத்தமது குடியேற்ற நாடுகளில் எவ்வகையில் அமைகிறதென... விரிவாகியது.
துருவ நாடுகளில் விவேகமான உரையாடல் இருப்பதை பலரும் தெரிவித்தனர். பிரஞ்சு, ஜேர்மன், சுவிசுப் புலங்களில் பரவாயில்லாதவாறு தொடர்வதை பலரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஆங்கிலப்புலம் பற்றி விசனமாகவே கருத்துக்கள் சொல்லப்பட்டபோது வியக்கவைத்தது.
ஆங்கிலப் புலப்பெயர்விலிருந்து வந்திருந்தவர் தனது உடல் மொழியால் இதை அழகாக விபரித்தார்.
'எங்களது பிள்ளைகளுக்கு தமிழில் கதைத்தால் விளங்கும். ஆனால் அவைகள் கதைக்க மாட்டார்கள்!"
'என்னது?, ஏன்?" எனவாகப் பல புருவங்கள் மேலெழுந்தன.
'இங்க பாருங்கோ, ஊரில நாங்களெல்லோரும் நாய் வளர்த்தனாங்கள்தானே!"
"ஓமோம்!.... அதுக்கென்ன!" பல குரல்கள் ஒருமித்தவாறு
'இந்த நம்மோட நாய்களுக்கு, இரு! இங்கே வா! வெளியே போ! ஓடு!... எனவாகத் தமிழில சொல்லும்போது நன்றாய் விளங்கிச் செய்ததுதானே....! அதுக்கு மேல அதாலே கதைக்க முடிஞ்சுதா...? அதுபோலத்தான் நாமும் வளர்க்கிறோம்!" என்றுகூறிவாறு நமட்டுசிரிப்புடன் பார்த்தாரே ஒரு பார்வை! அடக்கமாட்டாது பொங்கி வழிந்தன சிரிப்பொலிகள்.

0000

இந்த உரையாடல் கிளறித் தோண்டிய சிந்தனையுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். நான் மதிக்கும் மறைந்த மகாஜனா அதிபர் பொ. கனகசபாபதி அவர்களது 'மரம், மாந்தர் மிருகம்' நூல் வெளியீட்டரங்கில் பேச நினைத்து பேசாதிருந்த எண்ணமொன்று தானாகவே மேலெழுந்தது.

'காரண- காரியப் பெயர்வைக்கும் சமூகத்தொடர் வழமையுடைய நம்மவர்கள், ஏன் இப்படியாகவெல்லாம் தமது பிள்ளைகளுக்குப் பெயரிடுகிறார்கள்?' 
இங்கு பிறக்கும் அடுத்த தலைமுறையினரது பெயர்கள் பற்றிய பரிசீலனைகளில் எமை அரித்தெடுக்கும் முக்கியமான வினாக்களில் ஒன்று இது. 'இப்படியான பெயர்களை நம் வீட்டு பூனை, நாய்களுக்குத்தானே முன்னர் வைத்திருக்கிறோம்! இது எப்படியாக தமது பிள்ளைகளைச் சுட்டும் பெயர்களாகின?"
தாம் சொல்வதைக் கேட்டு பேசாது நடக்க வேண்டுமென்பதற்குதானோ என்னவோ இப்படியான பெயரிடலைச் செய்திருக்கிறார்கள் போலும்.... 'அட இது எமக்குப் புரியாது போய்விட்டதே....! சும்மா செல்லக்கூடாது நம்மட ஆக்கள், பேய்க் கில்லாடிகள்...... பென்னாம்பெரிய விண்ணானர்கள்!!' என்னையும் அறியாது வாய்விட்டு சிரித்துவிட்டேன்.
"உமக்கு என்னப்பா ஆச்சு! பேசாம றோட்டைப் பார்த்து காரை ஓட்டும்!" என முறைப்பான கட்டளை... 'வயசு போகப் போகப் தனக்குத்தானே சிரிக்கவும் தொடங்கிவிட்டார்..!' என முணுமுணுத்தவாறு வெளிப்பட்டது துணைவியிடமிருந்து.
00000

Ø  ஐரோப்பியப் புலப்பெயர்வில் துருவ நாடுகளில் குடியேறிய நம்மவர்களது வாழ்வு தனித்துவமானதொரு தடத்தில் பயணிக்கிறது. இங்கு வாழத்தலைப்பட்டவர்களுடன் தொடரும் நம் வாரிசுகளும் அடுத்த தலைமுறையினரும் அதிகவளவான சுயசார்பு சிந்தனையுடன் தமக்கான கற்கை நெறியைப் பெற்று வாழத் தலைப்படுகின்றனர். இவர்கள் இலாடமடிக்கப்பட்ட சிந்தனைத்தளத்தில் பயணிக்கும் மூத்த தலைமுறையினருடன் பல்வேறு வாழ்வியல் கருத்துகளை விவாதித்து உரையாடும் தன்மையுடையவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்ட முடியும்.
Ø  புலம்பெயர்வு வாழ்வு புத்தம் புதியதான அனுபவங்களை வாரி வழங்கியவாறே நம்மைப் பயணிக்க வைக்கிறது. இதில் நம் கண்முன்னால் நம் வாரிசுகளாக -சின்னஞ்சிறு சிறார்களாகக் காணப்படும் நம் பிள்ளைகள் வழங்கும் அனுபவங்கள் பல சமயங்களில் எமை சுயவிமர்சனம் செய்ய வைக்கின்றன. இவை சிலவேளைகளில் எமது உச்சந்தலைகளில் விழுந்து சுள்ளென உறைக்கும் குட்டுகளாகவும் அமைந்துவிடுகின்றன.
Ø  இங்கு பதிவேற்றப்படும் குறிப்புகள் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறுவதற்கானதல்ல. மத நம்பிக்கையாளர்களது மென்மையான ஆனால் 'திடமான மனது' பாதிப்படைய வைப்பதையும் நோக்காக் கொண்டதுமல்ல.

- முகிலன்

பாரீசு 28.03.2015

2 comments:

 1. அய்யா வணக்கம்.
  நீங்கள் புலம் பெயர்ந்த தமிழகக் குழந்தைகளின் தாய்மொழிப் பயில்வு பயிற்சி குறித்து நியாயமாகக் கவலைப் படுகிறீ்ரகள்.
  வடவேங்கடம் தென்குமரியாயிடை இல்லாமற் சுருங்கிக் கிடக்கின்ற தமிழ் கூறும் நல்லுலகத்திலேயே இந்நிலமை சென்னை போன்ற பெருநகரங்களில் பரவிக்கிடக்கிறது.
  சொந்த மைந்தராலேயே இழிசன மொழி என்று அழைக்கப்படும் கொடுமை தமிழுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது.

  நாகரிகத் தொட்டில்களில் தம் தலைமுறைகளை வளர்த்தெடுக்க விரும்பும் அதிநாகரிகத் தமிழ் குடிகள் மனப்பாங்கே இது.
  உங்கள் பதிவைப் படிக்கப் பகிரத் தோன்றியது.
  அவ்வளவே...!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சீழ்த்தலைச் சாத்தனார்கள் வாழ்ந்த வரலாற்றைப் பதிவாகப் பெற்றவர்கள் நாம். உறுதியான மனம்கொண்ட எதிர்காலச் சந்ததியனரைக் கட்டமைக்கும் தார்மீக்கப் பொறுப்புடையவர்கள்.
   சொல்லிச் செய்யும் செயல்கள் கொண்டவர்களாக வாழ்வோம்!
   எமக்கும் நம் வருங்காலத்தினருக்கும் தேவை சுய சிந்தனை - சுயாதீனமான சிந்தனை!! - சிந்தித்து வாழ்வோம்!!
   வெற்று உணர்ச்சிசார் உணர்வுகளுக்கு உட்படாது அறிவுசார் சிந்தனைகளுடன் பரிசீலித்து வாழ்வோம்!! நம்மை நாமே அறிவதும் தொடர்வதும்தானே கல்வியும் தொடர்ச்சியும்... நீட்சியும்..!
   காலம் கசடுகள் களைந்து பயணிக்கும். மீட்டுவாக்கும்!!

   Delete