Wednesday, 12 June 2013

மூடத்தனமாகவே வாழ்வைத் தொடர்வதென்பது சவாலானது !

மூடத்தனமாகவே வாழ்வைத் தொடர்வதென்பது சவாலானது !


நாட்காட்டியைத் திரும்பிப் பார்த்தபோது கண்ணில்பட்ட வாசகம் « யார் சொல்வது சரி, என்பதைவிட எது சரி என்பதே முக்கியம். »
இந்த வாசகம் சுட்டும் விடயம் மக்களின் நாளாந்த நடைமுறையில் பயன்பெறுகிறதா ? 

- மூடராக இருக்காதீர் !! என்றால் முறைக்கிறார்கள்.
- அறிவார்த்தமாக சிந்தியுங்கள் என்றால் நமட்டுச் சிரிப்புடன் நகர்கிறார்கள்.
- யோசித்துச் செய்யுங்கள் என்றால் « அட போடா நீயும் உன் யோசனையும் » எனவாக அகன்றே விடுகிறார்கள்.
- மனிதனாக வாழ் என்றால் « மனிதன் மனிதனாகத்தானே வாழ்வான் இதுக்கு என்ன சொல்ல வந்திட்டாய் ? போய் நாலு காசு சம்பாதிக்கும் வழியைப்பார் !! எனச் சிரிக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த வாழ்வின் நீட்சியில், மொழிப் பழக்கத்திலும் மேலாகப் பயன்பெறுவது சடங்கு சம்பிரதாயச் செயல்கள்தான். இவற்றைப் பயன்படுத்துவோர் மறந்தும் « ஏன் எதற்கு எப்படி » எனவாக கேள்விகளைக் கேட்பதே இல்லை. 
இங்கு அனேகமான கோயில்களின் தேர்த் திருவிழாக்களும், கல்யாணங்களும், ஏனைய சடங்குகளும், ஒன்றுகூடல்களும் சனி அல்லது ஞாயிறு நாட்களில்தான் நடைபெறும். இதனைத் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறுவது மரண நிகழ்வு மட்டும்தான்.
அண்மையில் நண்பரொருவர் திடீரென மரணமாகிவிட்டார். இவரது இறுதி நிகழ்வு எப்போது நடக்குமென அக்கறையுடன் காத்திருக்கிறோம். இந்நிகழ்வு இலண்டனில் நடைபெறவுள்ளதால் சனியன்று ஏற்பாடாகினால் வசதியாக இருக்கும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது. 
ஆனால் அன்னாரது இலண்டன் உறவினர்களும் நண்பர்களும் இதை அடியோடு மறுத்துவிட்டார்கள். ஏன் ? எனக் கேட்டதற்கு « சனியிலே போனது தனியாகப் போகாது ! » என்றதும் அசந்து போனேன். அன்னாரது குடும்பமும், நண்பர்களும் முற்போக்கான கருத்துடன் நடமாடியவர்கள்.
« அங்கு எல்லோருக்கும் அப்படியா ?» என மீண்டும் வினவினேன். 
« இல்லை ! வெள்ளி புனிதமான நாள் சனி கூடாத நாள் ஆக இந்த இரு நாட்களிலும் இங்குள்ள இந்துகளுக்கு மரணச் சடங்குகள் நடப்பதில்லை ! » என்றார் அமைதியாக. பிரான்சில் இறுதி நிகழ்வுகள் சனியன்று நடைபெறுவது சாதாரணமானது.
கவர்ச்சியான எதுகை மோனை வாசகங்கள் இருந்தால் அதனடிப்படையில் கண்ணை மூடியவாறு பின்தொடருமா இச்சமூகம்…
- « திங்களில் போனது தங்காமல் போகாது ! »
- « செவ்வாயில் போனது கவ்வாது போகாது ! »
- « புதனில் போனது தனத்துடனே போகும் ! »
- « கள்ள வியாளனில் போனது கொள்ளையில்தான் போகும்! »
- « வெள்ளியில் போனது தள்ளிப் போகாது ! »
- « சனியில் போனது தனியாகப் போகாது ! »
- « ஞாயிறில் போனது கயிறு போல நீளும் !! »

நிதானமாக யோசித்தபோது…. « ம் !! » என் கட்டுப்பாட்டை மீறியதாக பெருமூச்சு தானாகவே போகிறது… !

குஞ்சரம் : மூடத்தனமாகவே வாழ்வைத் தொடர்வதென்பது சவாலானது !
- முகிலன்
பாரீஸ் 12.07.2013

3 comments:

 1. எதுகை மோனை வாசகங்கள் இருந்தால் அதனடிப்படையில்
  தொடர வாழ்த்துக்கள்மூடியவாறு பின்தொடருமா இச்சமூகம்…//

  அருமையாகச் சொன்னீர்கள்
  கிழமைகளுக்கு நீங்கள் சொல்லிப்போகும்
  புதிய "மொழிகளை "ரசித்தேன்
  பயனுள்ள அருமையான பகிர்வு
  தொடர வாழ்த்துக்கள்


  ReplyDelete
 2. முகம் காணாத் தொலைவில் இருந்தாலும் இணையவழியில் கண்டதால் தங்களுக்கு ஏற்பட்ட மனத் தூண்டலை பொறுப்புடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. "வாழ்க வளமுடன்!" எனவாக நானும் இணையவழியில் தங்களுக்கு கரம் குலுக்குகிறேன்.

  பாரீசு இலண்டன் போன்ற பெரு நகரங்களில் வாழும் வாய்ப்புப் பெற்றவர்கள் பல்தேசிய உறவாடல்களை நாளாந்தம் பெறும் பாக்கியம் பெற்றவர்கள். எமது அடுத்த தலைமுறையினர் இவ்வகையில் உறவாடியவாறே புதியதொரு அனுபவ மானிடர்களாக உருவாகிவருகின்றனர்.

  ஆனால் புலம்பெயர்ந்த முதற்தலைமுறையினரால் பல்தேசிய விழுமியங்களைத் தழுவி நல்லவற்றை ஏற்று அல்லாதவையை நீக்கிச் செல்லும் நாதியில்லாதவர்களாகவே வாழ்வைத் தொடரமுடிகிறது.
  வருடமொன்றில் கிடைக்கும் 52அல்லது 53 வார இறுதிநாட்கள்(சனி -ஞாயிறு) பெரும் வருவாய்தருவனவாக ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குடும்ப - மதச் சடங்குகளுக்காக மதநிறுவனர்களால் ஒப்பந்தமாகிவிடுகின்றன.

  இதனால் திடீரென எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிகழும் மரணச் சடங்குகளை இந்த மத நிறுவனர்களால் வார இறுதி நாட்களில் நடாத்திட முடியாதிருக்கிறது. இவர்களின் வருவாய் நலனுக்கான எதுகை மோனை வாக்கியங்களை அவர்களே சந்தர்ப்பத்துக்கேற்றவாறு பயன்படுத்துகிறார்கள்.

  மேலே என்னால் பதியப்பட்டிருந்த பதிவில் இடம்பெற்ற நண்பர் 20.05.2013 அன்று திங்களில் மரணமாகியிருந்தார். அவரது இறுதிச்சடங்கு 17.06.2013 அன்றே இந்த மதநிறுவனர்களால் நடாத்த ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. எவ்வளவு முயன்றும் வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் அவர்களால் நேரம் ஒதுக்கமுடியவில்லை.

  ReplyDelete