Wednesday 27 January 2010

கதைச் சரம் 16 அங்கொடைக்குப் போன சனாதிபதி!


கதைச் சரம் 16
செவிவழிக் கதை-13

அங்கொடைக்குப் போன சனாதிபதி


தடல்புடலாக இலங்கையின் எந்தப் பாகத்திற்கும் திடீர் திடீரெனப் பயணித்து இந்த சனாதிபதி புகழ் பெற்றிருந்தார். இவரது இந்தப் பயணங்களால் அல்லோககல்லோப்பட்டது இவருடன் பணியாற்றிய அதிகார வர்க்கம்தான். இவரது அறிவிப்பு வந்ததுமே எதையும் செய்யக்கூடியவர்களைக் கொண்டதாக இக்குளாம் அமைக்கப்பட்டிருந்தது. 

இம்முறை சனாதிபதியிடம் இருந்து வந்த பயண அறிவிப்பால் இந்தக் குளாம் அரண்டு ஆச்சரியப்பட்டுத்தான் போயிற்று. அது வேறொன்றும் இல்லை. கொழுப்புக்குப் பக்கத்திலிருந்த 'அங்கொடை' ஆக இது இருந்ததுதான்! அங்கொடை இலங்கை முழுக்கப் பிரபல்யமாகியது அங்குள்ள வைத்தியசாலையால்தான். சென்னையில் 'கீழ்ப்பாக்கம்' மாதிரி என்றாலும் அதைவிட முக்கியமானதாக அதீத உச்சக்கட்ட மனவிகாரர்களுக்கு மருத்துவம் பார்க்கும் இடம் இது.
 

வடக்கின் மூலைமுடுக்கு வரை பயண ஒழுங்கைச் சிரமம் இல்லாது சீராகச் செய்த அதிகார வர்க்கம் இந்த முறை ஆடித்தான் போனது. இருப்பினும் ஒருவாறு சமாளித்து நிறைவேற்றிவிட்டது.

அன்றைய நாள் என்றுமில்லாத மிளிர்வுடன் அங்கொடை வைத்தியசாலையில் விடிந்தது. பணியாற்றிய அனைவருக்கும் போனசுடன் சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டன. நோயாளிகளுக்கும் சிறப்பு விருந்து கொடுக்கப்பட்டது. இந்த வளாகமே வழமையை மீறியதாக கலகலப்பாக இருந்தது.
 தனக்கான பெருமிதமுடைய உடுப்புடன் கம்பீரமாக வந்த சனாதிபதிக்கு மிகப் பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது. சனாதிபதியும் மிகவும் சுறுசுறப்பாக பார்வையிட்டார். எல்லோரும் கைகூப்பியும், காலடியில் விழுந்தும் வணக்கம் செலுத்தினர்.

ஆங்காங்கே குறைகளையும் கேட்டறிந்தார்(!) குறைகள் இருந்தால்தானே சொல்வதற்கு!! கடைசியில் தண்ணீர் தொட்டியின் பழைமையும் நீர் சீராக வராததுமே பிரச்சனை எனப் பதிவானபோது நம்ம சனாதிபதியின் முகம் கோபக் கனலாகி அதிகாரியை எரித்த காட்சியைப் பார்த்த முப்பது வருட அனுபவமுள்ள மருத்துவத் தாதி நெகிழ்ந்து போனார். பின்னர் தன் ஊரில் இதைச் சொல்லிச் சொல்லி இந்த சனாதிபதியின் கருணை பற்றி வியாபித்த கதையை வேறாகத்தான் பதிவிட வேண்டும்.
 

இவ்வளவு சிறப்பாக இந்நாள் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சனாதிபதி முகத்தில் ஒரு கவலை இருப்பதை கூடி இருந்த மூத்த அதிகாரி கண்டு பதறித்தான் போனார்.
 
"ஐயா, ஏதாவது சரியில்லை?"
 என்று சனாதிபதியின் காதுக்குள் பவ்வியமாக முணுமுணுத்துக் கேட்டுவிட்டார். 

"என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர? அங்கே பாரும்..... அந்த மரத்தடியில் இருப்பவன் நான் வந்தது தொடக்கம் அங்கேதான் இருக்கிறான். நான் வந்துள்ளதையும் சட்டை செய்யாமல் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறான். அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?"
 

இதன்பின்தான் அந்த அதிகாரிக்கு அந்த அவனின் இருப்பு தெரிந்தது. 'மனுசன் எல்லாவற்றையும் என்னமாதிரிக் கவனிக்கிறார்! கழுகுக்கண்தான்' என மனதுக்குள் நினைத்தவாறு,
 
"ஐயா, நான் போய் அவனைக் கூட்டிவாறன்."

"இல்லை, இல்லையில்லை..... அவனை நான்தான் கவனிக்க வேண்டும்!" என்றார் அதிகார முனைப்புடன். 

"சரி ஐயா!...."
 அதிகாரி தலை குனிந்தவாறு விலகுகிறார். 

எழுந்தார் சனாதிபதி, தன்னோடு யாரும் வரக்கூடாது எனப் பார்வையாலேயே பணித்துவிட்டு மரத்தடி நோக்கி நடக்கத் தொடங்கினார்.

25 மீற்றர் தொலைவில் வட்டமாக அவரது குளாம் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம் சனாதிபதி கிட்டே வந்தும்கூட மரத்தடிக்காரன் அசையவேயில்லை.
 

சனாதிபதி செருமிப்பார்த்தார் .......ம்கூம்..... எந்தச் சலனத்தையும் காணமுடியவில்லை.
 'சனாதிபதியைக் கண்டாலே காலைத் தொட்டுக் கும்பிடும் மக்கள் கூட்டத்தில் இப்படியும் ஒருவனா?' தொலைவிலிருந்த அதிகாரிக்குக் கோவமேறிக்கொண்டிருந்தது. 

சனாதிபதி இன்னும் அவனுக்கு அருகாமையில் வந்து தோளில் தொட்டு
 "தம்பி......." என அன்பொழுக அழைக்கிறார். 

அவனது தலை திரும்பி சனாதிபதியை ஒரு முறை மேலும் கீழும் பார்த்துவிட்டு மீண்டும் வழமைக்குத் திரும்பிவிடுகிறது.
 இச்செய்கை சனாதிபதியை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துவிட்டது. 

"தம்பி, நான்.... இந்த நாட்டு சனாதிபதி வந்திருக்கிறேன்.... என்னைப்பார்! உனக்கு என்ன தேவை சொல்லு தம்பி....."
 என நெகிழ்ந்த குரலில் 

இம்முறை சடாரென திரும்பிய அவன், சனாதிபதியின் முகம் பார்த்து,
"ஐயா.... இங்கு வந்தீட்டிங்களல்ல.... கொஞ்சம் பொறுமையாக இருங்க.... எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும். இங்கு வந்த புதிசில உங்களை மாதிரித்தான் நானும் கதைச்சுக் கொண்டிருந்தனான். கவலைப் படாதேயுங்கோ....." என்றவாறு பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினான்.
0000 0000

பிற்குறிப்பு :

அங்கொடை :– இலங்கையிலுள்ள மிப்பெரிய மனநிலைப் பிறழ்வு வைத்தியசாலை – (சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைக் குறிப்பிடுவது போல்)

-முகிலன்
பாரீசு 27 ஜனவரி 2010
(- 1977 காலத்தில் நான் கேட்ட கதை)


4 comments:

  1. இம்முறை சடாரென திரும்பிய அவன், சனாதிபதியின் முகம் பார்த்து,
    "ஐயா.... இங்கு வந்தீட்டிங்களல்ல.... கொஞ்சம் பொறுமையாக இருங்க.... எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும். இங்கு வந்த புதிசில உங்களை மாதிரித்தான் நானும் கதைச்சுக் கொண்டிருந்தனான். கவலைப் படாதேயுங்கோ....." என்றவாறு பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினான்//


    என்ன அருமையான கற்பனை நண்பா. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கமல் அவர்களுக்குஇ வருகைக்கும் வாசிப்பிற்கும் நேரமொதுக்கி உற்சாகப்படுத்திய பதிவுக்கும் நன்றிகள்
    - முகிலன்

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete