Tuesday, 1 December 2015

நாங்கள் ஏன் இங்கு(பிரான்சிற்கு) வந்தோம்?

குஞ்சரம் 25

நாங்கள் ஏன் இங்கு(பிரான்சிற்கு) வந்தோம்?

பிரான்சில் ‘பறை’ இசை பழக பேரார்வத்துடன் முன்வந்தவர்களாக எமது அடுத்த தலைமுறை மற்றும் இரண்டாவது தலைமுறையினராகிய 15 சிறார்கள் வந்திருந்துமை மிகுந்த உற்சாகத்தை அளித்திருந்தது. ஆண் பெண் வேறுபாடில்லாது ஆர்வமுடன் இவர்கள் பங்கேற்ற பட்டறை பற்றி சென்ற வாரம் நண்பர்கள் சொன்ன போது கிடைத்த உள்ள மகிழ்வை வார்த்தைகளால் இலகுவில் கோர்க்க முடியாது.

இந்த உளத் தூண்டலால் சென்ற ஞாயிறு பயிற்சிப்பட்டறை நிகழ்விற்கு என்னோடு என் துணையாளும் வந்திருந்தார். ஆர்வத்துடன் பறை இசைக் கருவிகளைத் தோள்களில் சுமந்து அணைத்தவாறு சிறார்கள் தமது கை விரல்களில் பிடித்திருந்த குச்சிகளால் தட்டிப் பயின்று கொண்டிருந்தனர். இதுதான் முதல் தடவை என்று கூற முடியாதவாறு அவர்களால் தகுந்த தாளக்கட்டுடன் கூட்டாக இசைக்க முடிவதை ஆனந்தத்தோடு நோக்கினோம்.

இச்சிறார்களில் சிலர் இலங்கையில் பிறந்து இங்கு தம் பெற்றோருடன் குடிபெயர்ந்திருந்தார்கள். சிலர் இங்கு பிறந்த இரண்டாவது தலை முறையினராக இருந்தனர் எல்லோரும் ஒன்பதிற்கும் பதினைந்திற்கும் இடைப்பட்ட வயதினராக இருந்தனர். ஒருவரைத் தவிர மற்றையோர் தமிழ் கற்பவர்களாக இருந்தனர்.

சற்று இளைப்பாறும் நேரம் வந்தபோது சிறார்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வேளையில் அவர்களுக்கு ‘பறை’ இசைக் கருவியின் தோற்றம் இது உருவாகிய வரலாற்றுப் பின்னணி இக்கருவி இசையைத் தொடரும் எமது வாழ்வு பற்றிய உரையாடலாக அமைந்தது. இதில் ‘பாரம்பரியம்’ – எமக்கான ‘முதுசங்கள்’ – எமது ‘தொன்மம்’ ‘மூதாதையினர்’ எனவாக புதிய கலைச் சொற்கள் பற்றிய விபரணம் தேவைப்பட்டது.

இச்சொற்களை விபரணை செய்யும் போது « நாங்கள் யார் ? »
« ஏன் இந்நாட்டிலிருக்கிறோம் ? » எனவான வினாக்களையும் எழுப்ப வேண்டியதாயிற்று.
முதற் கேள்விக்கு தம்மைப் பற்றிக் கூறியவாறு தொடர்ந்த உரையாடலில் ‘தமிழர்’ எனவும் கூட்டாகச் சொன்னார்கள்.

அடுத்த கேள்விக்கான பதில் கூறாது கொஞ்சம் யோசித்தவர்களாக தாமதித்தனர். பதிலைப் பெற ஊக்கமளித்வாறு அளவளாவினோம்.

« தெரியாது ! » என்றாள் ஒரு சிறுமி.

« அங்கு (இலங்கையில்) இருக்க இடமில்லை என்றதால் இங்கு வந்தோம் ! » என்றான் ஒருவன்

« இல்லையில்லை… அங்கு ஆர்மிக்கும் இயக்கதிற்கும் சண்டை நடந்தது அதனால் இங்கு வந்தோம். » என்றான் இன்னுமொருவன்.

மற்றையோர் சொல்லத் தெரியாது முகம் பார்த்தவாறிருந்தனர்.

எமையறியாது உயர்ந்தன எமது புருவங்கள் ! « சரி அப்பா அம்மாவோடு நீங்கள் இது பற்றிக் கதைப்பதில்லையா ? »

« அப்பா கதைக்க மாட்டார் ! சத்தமா ரிவி போட்டு படம் பார்ப்பார் ! » என்றான் முதலாவதாக இருந்தவன்.
« அம்மா கொஞ்சம் பிரெஞ்சு கதைப்பா… ஆனால் இது பற்றியெல்லாம் கதைக்கமாட்டா ! » இன்னொரு குரல்.
« சாப்பிட்டியா ? எத்தனை மணிக்கு வருவாய் ? படி ! விளையாடிக் கொண்டிருக்காதே !! பள்ளிப் பரீட்சையில் குறைந்த மார்க்கு வந்தால் தெரியும் !! படுக்கப் போ.. ! என்ன வேணும் ?..... இப்படியாகச் சிலதான் நாம் வீட்டிலே கதைப்போம். »
« நாங்கள் (சகோதரங்கள்) எங்களுக்குள்ளாகத்தான் பிரெஞ்சில் கதைத்துக் கொள்வோம் ! »
எதையும் வெளிப்படுத்த முடியாது மெளனித்தோம் !

‘அகதி’ எனவாக யாருமே குறிப்பிடவில்லை. இச் சொல்லையும் அறிந்தவர்களாகவும் இருக்கவில்லை.

000000000

‘இங்கு அடுத்த தலைமுறையினர் தமக்கான தேடல்களுடன் அறிய ஆவலுடையவர்களாகவே இருக்கின்றனர். ‘தமிழ்’ ஒரு மொழியாகக் கற்பிக்கப்படுவதற்கு அப்பால் உரையாடலுடன் பேசிப் பழகி உறவாடும் தளத்தில் கற்கை தொடரப்பட வேண்டும். இதற்கு பொறுமையுடன் தகுந்த ஆற்றலுடைய ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். பெற்றோரையும் இணைத்தவாறு பயணிக்கும் கூட்டுக் கல்வி முறைமைகள் கண்டடைய வேண்டும். எல்லாவற்றுக்கும் சமூகப் பிரக்ஞையுடைய அறிவுசார் சமூக மையங்கள் தேவை…. !’ எனத் தானாகக் கிளர்ந்தெழும் எண்ணங்களுடன் ஏதும் பேசாதவனாக வண்டியில் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.

பிற்குறிப்பு
முதுசொம் https://ta.wikipedia.org/s/31mf
ஓவியம் நன்றி – இணைய வழி (முகநூல் பகிர்ந்த நண்பர்)

பதிவு : முகிலன்

பாரீசு 01.12.2015

No comments:

Post a Comment