Friday 8 February 2013

வெண்பனிக்குளிரிலும் பிரான்சில் சிறப்புற கொண்டாடப்பட்ட பொங்கல்

செய்திச் சரம் 9

வெண்பனிக்குளிரிலும் பிரான்சில் சிறப்புற கொண்டாடப்பட்ட பொங்கல்



பாரிசில் வெண்பனி மூடிய தரையில் தமிழர்களாக ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு - புலம்பெயர் தமிழர் திருநாளாக பல்லின மக்களால் வாழ்த்தப்பட்டது.
இத் தைப்பொங்கல் 7வது ஆண்டு நிகழ்வாக பிரான்சின் தலைநகரான பாரிஸ் நகரின் வடக்கிலமைந்த புறநகர்ப்பகுதியான ஸ்தான் என்னும் ஊரில் 19.01.2013 அன்று இடம்பெற்றது.புலம்பெயர்ந்து வாழத் தலைப்பட்டவர்களாக நான்காவது தசாப்த காலத்தில் பயணிக்கும் முதற் தலைமுறையினருடன், முழுமையான புலம் பெயர்ந்தவர்களாக வாழத் தலைப்பட்டுள்ள மூன்றாம் தலைமுறையினரும் [பேரர்] சங்கமித்ததாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.தமிழர்க்கு ஒருநாள் - தமிழால் அடையாளங் கொள்ளும் தனித்துவநாளாக விளங்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்; நிகழ்வு பிரான்சில் பல்தேசியத் தமிழர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாகி சிறப்பித்தது.
வெளித்திடல் நிகழ்வாக பொங்கலிடல், கோலமிடல் கட்புலச் சுவையூட்டலாக அமைந்திருக்க, உள்ளரங்கில் நிகழ்த்துக் கலை நிகழ்வுகள் மற்றும் தாமாகவே சுவைத்து அனுபவிக்கும் தமிழர் உணவுக் காட்சியும் கொண்டதாக செவிச்சுவையையும் நாச் சுவையூட்டலாகவும் அமைந்திருந்தது.நிகழ்கலை அரங்கினை நிகழ்த்தி வருகை தந்தோரை மகிழ்வித்தனர் சிறுவர்கள். 'கண்டியரசன் பொங்கல்' என்ற சிறு கூத்தரங்கம், மற்றும் பொங்லிடல் அரங்கில் அமைந்த பாரம்பரிய தாள வாத்திய முழக்கத்துடனான பாடலிசை அரங்கம் தமிழர் திருநாள் கொண்டாட்டத்திற்கு பெருமை கூட்டியது.தமிழர்களின் பாரம்பரிய பாடலிசை முழங்க சிறுவர் முதல் மூத்தோர் வரை சுற்றிச் சூழ நிற்க வெளித்திடலில் பொதுப் பொங்கலிடப்பட்டது. பொங்கலுக்கான அரிசியை பானையிலிட்டு ஆரம்பித்துச் சிறப்பித்தவர் 50 ஆண்டு திருமண வாழ்வை நிறைவுடன் தொடரும் மூதாளர்களான சின்னராசா பாக்கியலட்சுமி தம்பதியினர். தொடர்ச்சியாக உள்ளரங்கில் பொங்கலோடு தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.கலந்கொண்டிருந்தவர்கள் முக மலர்ச்சியுடன் காணப்பட்டதால் அரங்கம் மகிழ்வானதொரு ஒன்றுகூடலாகி அனைவரையும் மகிழ்வூட்டி சூழலில் தகித்துக் கொண்டிருந்த கடுமையான குளிரை மறக்கடிக்கச் செய்திருந்தது.
ஸ்தான் துணை நகரபிதா அசடீன்; சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழர் திருநாள் ஒன்றுகூடல் உணர்வினை வாழ்த்தி அனைவருக்குமான புத்தாண்டு வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டார்.தைப்பொங்கல் தொடர்பான பிரஞ்சு உரையை மனமுவந்து வழங்கி தனக்கிருக்கும் கோலம் போடும் ஆர்வத்தையும் சொன்னார் பாண்டிச்சேரி வழி வந்த புலம்பெயர்ந்த தமிழர் தலைமுறையினரான செல்வி ஜெசிமா மொகமட்.இந்நிகழ்வினை பிரபல நடனக் கலைஞர் பிரேம் கோபால் அவர்கள் தனக்கேயுரிய தனித்துவ அழகுடன் பிரஞ்சு தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தொகுத்தளித்தார்.

நன்றி: தினமணி
http://dinamani.com/world_tamils/others/article1438279.ece

No comments:

Post a Comment