Wednesday, 31 July 2013

'சிவ.. சிவா...!! நான் இயேசுவை மறப்பேனா?

குஞ்சரம் 11

'சிவ.. சிவா...!! நான் இயேசுவை மறப்பேனா?

அண்மையில் பாரீசில் நடந்த உறவினரின் மரணச் செய்தி கேட்டு கலங்கியவர்களாக அவரது வெற்றுடலைப் பார்க்கச் சென்றிருந்தோம். புலம்பெயர்ந்து நான்காவது தசாப்த காலத்திலும் மரணத் தகவல் கிடைத்ததும் கூடி ஆறுதல்கள் தெரிவிக்கும் மக்களாகவே நம்மவர்களது வாழ்வு நீடிக்கிறது.
நீடிக்கும் இந்தப் புலம்பெயர்வு வாழ்வு குடும்ப உறவுக் குழாத்துக்குள் ஆங்காங்கே செங்குத்தாகக் குத்தி நிறுத்திய ‘புத்தம் புது மதக் கோட்பாடு’களால் சமூகவலைத் தளம் பொத்தல்களாகி உறுத்துகின்றது. பல சமயங்களில் சங்கடங்களைத் தருவிக்கும்  இதனைச் சகித்துக்கொண்டு முனகிவாறு பொது சனம் கடந்து செல்கிறது.

இந்தப் புதியதான மதங்களின் குருவானவர்களாக அரிதாரத்துடன் பவனிவரும் 'பிரசங்கிகள்' படுத்தும்பாடு தனியாகவே ஆராயப்படவேண்டியவை. 'புது விளக்குமாறு நன்றாக் கூட்டும்' முதுமொழிக்கு ஒப்பானதாக இவர்களது செயல்கள் அவர்களின் உறவு - நட்பு நிகழ்வுச் சடங்குளில் பெருக்கிப் பளீரிட்டு பிரகாசிக்கும்.

இரு வருடங்களின் முன் இலண்டனில் நடந்த எனது பெறா மகனின் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே வருகைதந்தோரின் முன்னிலையில் கையைத்தூக்கி வைத்து ஆட்டிவைத்தார் ஒரு பிரச்சாரகர். குடும்பத் திருமணத்திற்குப் போன எமக்கு சுவிஸிலிருந்து வந்திருந்த பெண்ணின் மாமனாகிய பிரச்சாரகர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தனக்கு 'ஒளி கிடைத்தான அதிசயத்தை' எடுத்துரைத்து, தயாராகத் தனது கைப்பையிலிருந்து மதப் பிரசுரத்தையே எடுத்து தந்ததைக் கண்டு அரண்டுதான் போனோம். 


சென்ற வருடத்தில் பாரீசில் நண்பனின் 50வது அகவை நிகழ்வுக்குப் போயிருந்தபோது ஒரு பிரச்சாரகர் ‘டிரில் மாஸ்டராகி’ அங்கே வருகை தந்திருந்த மனித உயிரிகளை ஆட்டிப் படைத்தார் ! என்னை அங்கு அழைத்த அந்த நண்பர் அதிக முற்போக்குக் கருத்துகளை முன்மொழிபவராக இருப்பதுதான் நகைமுரண். இந்தப் பிரச்சாரர்களுக்கு 'இடம் பொருள் ஏவல்' என்பது பற்றியதான அறிவு மறந்தே போய்விட்டது போலும்! எங்கும் எதிலும் எப்போதுமே « ஒளி பெற்றவர்களாகிப் பிரகாசிக்க முனைவதையே » எவ்வித சங்கோசமும் கொள்ளாது தொடர்கிறார்கள். பிரான்சு போன்றதான மனித உரிமையை மதிக்கும் நாடுகளில் மற்றவர்களின் நிம்மதியை குலைக்கும் இவர்களின் அடாவடித்தனம் கவனம் கொள்ளப்பட வேண்டியதொன்றுதான். புலம்பெயர் பொது மகன் பயந்தவாறே குடும்பச் சடங்குகளுக்குப் போவதாகவே இன்றைய புலம்பெயர்வு வாழ்வு சந்தி சிரிக்க நிற்கிறது. 


இப்படித்தான் எனது உறவினரின் வெற்றுடலைப் பார்க்கத் தயக்கத்துடனதான் போனோம். இவர்களது நெருங்கிய உறவினர் இப்படியானதொரு புது மதப்பிரச்சாரக அண்டை நாடொன்றில் நீணடகாலமாகவே செயற்படுகிறார். ‘பாரீசில் பெண்களையும், கால நிலையையும் அறுதியிட்டு மதிப்பிட முடியாது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும்’ என்பார்கள். இதனுடன் நீடிக்கும் புலம்பெயர் வாழ்வில் நம்மவர்கள் பின் தொடரும் மத ஈடுபாட்டையும் இணைத்துவிடலாம். இப்போதெல்லாம் யார் யார் எந்த மத ஈடுபாடுகளுடன் இருக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது.

தனியார் மரணநிகழ்வு நிறுவனத்தின் 'பிணக் காட்சி அறையில்' மௌனமாக இறுக்கமான மனத்துடன் நுழைகிறோம். தேவாரம் மெல்லிய கணீரென்ற குரலில் பாடப்பட்டுக் கொண்டிருந்ததானது எமது காதையெட்ட படியேறிவந்த என் துணைவிக்கு 'அப்பாடா..!' என்றிருந்திருக்க வேண்டும். என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டார். உறவினர்கள் அழுகையுடன் அணைத்து வரவேற்றனர். சிலர் அழுகையை அடக்கியவாறு மௌனித்து நின்றனர். உள் அறையில் கட்டிலில் அவர் மீளாத் துயிலில் கிடந்தார். பிள்ளைகள் கதறியவாறு அருகில் நின்றனர். எனது துணைவியும் குசலம் விசாரித்தவாறு உள் அறைக்குள் நுழையவும் திருவாசகம் பாடலாக ஒலிக்கத் தொடங்கவும் சரியாக இருந்தது. நான் சிறிது நேரம் மௌனித்தேன். யாருடனும் கதைக்க நான் விரும்பவில்லை. சிறிது நேரம் நின்று விட்டு எனது முகத்தைத் திருப்பி முகங்களைப் பார்வையிடத் தொடங்கினேன். 


ஆச்சரியமோ..... ஆச்சரியம்.... திகைத்தேவிட்டேன். எனக்கு நேரெதிரில் அமர்ந்திருந்த அந்த மதப் பிரச்சாரகர் கலங்கியவாறு மெய்மறந்த நிலையில் மௌனித்து உறைந்திருந்தார். ‘தமிழ் தெரிந்திருந்து திருவாசகம் கேட்டு உருகாதார் உண்டா?’ எனவாக சிறுவயதில் எமக்குப் பாடம் நடத்திய தியாகராசா மாஸ்டர் சொல்லிப் பாடிக்காட்டியதுதான் நினைவோடையில் வந்திறங்கியது.

சும்மாவா சொன்னார்கள் 'தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்று?’

பேசாது அடுத்த அறையிலிருந்த இருக்கையில் தனியனாக வந்த அமர்கிறேன். ஆங்காங்கே சிலர் குழுக்களாக அளவளாவிக் கொண்டிருந்தனர். எனது மனம் அசைபோடத் தொங்கியது. எனது அப்பாவுடன் ஆசிரியராக இருந்த நடராசா மாஸ்டரின் கதைதான் நினைவிலிருந்து வந்துவிழுந்தது. 
0000

இலங்கையில் பிரித்தானிய கொலணி ஆட்சிக்காலம். அந்தக் காலங்களில் ஆசிரியர்களாக வருபவர்கள் முறைசார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். யாழ்நகரில் எனது அப்பா பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம்பெற்றிருந்தவர். நடராசா மாஸ்டர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

அந்தக் காலத்தில் இந்த கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி கொலணிய கிறீஸ்தவ மதபீடத்தினரால் நடாத்தப்பட்டது. இங்கு அனுமதி கிடைக்க வேண்டுமாயின் கிறீஸ்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கிறீஸ்தவர்களாகி மதம் மாறியிருக்க வேண்டும்.

நமது நடராசா மாஸ்டரும் கல்விக்காக மதம் மாறியிருந்து அனுமதி பெற்றிருந்தார். ஆனாலும் பழக்க தோசம் அவரை விடுவதாக இல்லை. யாருக்கும் தெரியாதவாறு தனது அறையிலிருக்கும் தனக்கேயான அலுமாரியினுள் மறைத்து வைத்துள்ள 'சிவன்' படத்தைப் பார்த்து அவ்வப்போது உருகி வணங்கிக்; கொள்வதை வழக்கமாக் கொண்டிருந்தார்.

கால ஓட்டத்தில் இதனை ஒரு சக ஆசிரியப் பெருமகன் கண்டுவிட்டார். ‘தமிழர்களுக்கேயான கோள்மூட்டிக் குணம் சும்மா இருக்குமா? உடனடியாகவே நேரே சென்று தலைமைப் பாதிரியாரிடம் வத்தி வைக்கப்பட்டது. பிறகென்ன..... வழக்கமான விசாரணைக்கு ஆசிரியர் அழைக்கப்பட்டார். கல்வி பாதியிலே நிறுத்தப்படப் போவதை எண்ணிக் கலங்கித்தான் போனார் நடராசா மாஸ்டர். 


இதை எழுதும் போதே உங்களுக்கே தெரியும்..... 'தமிழ்படத்தின் பிளாஸ் பாக் காட்சியாக' விரியும் விபரணத்தில், அவர் பட்டம் பெற்றுவிட்டதும் ஆசிரியராகப் பணி புரிவதென்பதும்!! மோசமாக ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றால் என்னதான் நடந்தது?

தலைமைக் குருவானவர் அறைக்குள் மிகவும் கலங்கிய நிலையில் நுழைகிறார் நடராசா.

'வாருங்கள் மிஸ்டர் நடராசா... வணக்கம்!! உட்காருங்கள்!!"

'வணக்கம் ஃபாதர்... பரவாயில்லை நான் நிற்கிறேன்!"

"சரி! நேராகவே விடயத்திற்கு வாறேன்.... என்னத்துக்காக நீர் இங்கு என் முன்னால் நிற்கிறீர் எனத் தெரியும்தானே!" மிடுக்கான குரலில்.

'ஆம்... ஃபாதர் ஆனால் நான் அப்படியாக ஏதுமே செய்பவனில்லை... இங்கு முறைப்படியாக அனைத்து செபக் கூட்டங்களிலும் முறையாகக் கலந்து கொள்ளுபவன் ஃபாதர்!!"

'கிறீஸ்தவராக மதம்மாறியிருக்கும் நீர்.... இனிமேல் பிசாசுகளை எல்லாம் வைத்திருக்கலாமா?"

'அப்படியாக... ஏதுமே என்னிடம் இல்லையே ஃபாதர்!" ஆச்சரிய பாவத்துடன்.

'பொய் சொல்லக் கூடாது... மிஸ்டர் நடராசா! நாங்கள் முறையாக விசாரிக்கத்தான் உம்மை இங்கு அழைத்திருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டு வந்தபின் உமது நடவடிக்கைகளைக் கண்காணித்தே வருகிறோம். குற்றம் நிரூபணமானால் உடனடியாகவே இங்கிருந்து விரட்டப்படுவீர் தெரியும்தானே!!" குரலில் கடுமை தகித்தது.

ஆசிரியர் நடுங்கிவிட்டார். பாதிரியார் தொடர்ந்தார், 'கிறீஸ்தவராக மாறியபின் சபலப்படக் கூடாது! பரிசுத்த வேதாகாமத்தைத் தவிர பிற மத நூல்களைத் தொடவே கூடாது. தேவையற்றதைக் காதில் விழுத்தவே கூடாது.... எல்லாச் செபங்களிலும் கலந்து கொள்ள வேண்டும்! எனக்கு டிசுப்பிளீன் மிகவும் முக்கியம் மிஸ்டர்!" கடுமையான தொனியில்.

'என்ன ஃபாதர் என்னென்னவொ எல்லாம் சொல்கின்றீர்கள்.... அப்படியாக ஏதுமே நான் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன்!" மன்றாட்டமாக தன்னிலையை மறந்தவராகிவிட்டார்.

'சும்மா என்னிடம் முறைப்பாடு வந்திருக்காதே?" ஃபாதர் கண் முறைக்கத் தொடங்கியது.

'ஐயையோ....! சிவ.... சிவா....  நான் இயேசுவை மறப்பேனா.... ஃபாதர்!!' கன்னத்தில் இருகைகளாலும் போட்டவாறு கதறியேவிட்டார் நடராசா மாஸ்டர்.


0000

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட காலமாக இவ்வேளை இருந்ததால் தப்பிப் பிழைத்து நடராசா மாஸ்டர் என்ற பெயருடனேயே இன்றும் ஆசிரியராக இருக்கிறார் என அப்பாவும் இக்கதைக்கு தமிழ்ப்படத்தின் இறுதிக் காட்சியாக ‘சுபம்’ போட்டார்.


« போகும் திசை மறந்து போச்சு -இங்கே
பொய்யே வேதமுன்னு ஆச்சு…. »
எனும் வைரமுத்துவின் கவிதை வரிகளை இசைஉயிரூட்டிக் காற்றில் மிதக்கவிட்டவர் எங்கள் இளையராசா. இவ்வாறாக  காற்றில் மிதந்து வந்து எமது மண்டைக்குள் சென்றடைந்த கவிதைகள் எம் நினைவழியா மனவெளியில் பதிந்து கிடக்கின்றன.
இசையோடு இப்பாடலை நினைவுகூர்ந்து எங்கள் இசைராசாவுக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறேன்!


-முகிலன்
பாரீசு 31.07.2013

No comments:

Post a Comment