கதைச் சரம் 18
செவிவழிக்
கதை-15 :
பாண்டித்தியம்
அந்த
அழகான நகரை அலங்கரிப்பதே இந்த நதிதான். எந்தக் காலத்திலும் வற்றாது. நகரைக் கடப்பவர்கள்
ஆற்றில் மச்சுவாய் (1) ஓட்டிகளின் துணையையே நாடவேண்டும். தேவைக்கேற்ப மச்சுவாய்கள்
ஆற்றின் இருகரைகளிலும் அடுக்கடுக்காக இருப்பதே ஓர் அழகுதான். வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடும் காலங்களில் மச்சுவாய் ஓடாது.
ஒருநாள்
ஒரு வெளியூர்ப் பண்டிதர் அரசசபையில் தன் திறமையை வெளிப்படுத்த வந்திருந்தார். மிகமிக
அற்புதமான அறிவாளியென அனைவராலும் மதிக்கப்படுபவர் அவர்.
பண்டிதர்
ஆற்றைக் கடக்க ஒரு மச்சுவாயை அமர்த்திக் கொண்டார். பிரயாணத்தின் போது பண்டிதர் சும்மாயிருக்கவில்லை.
தன் திறமைகளை படகோட்டியிடம் சொல்லிக் கொண்டு வந்தார். படிகோட்டிக்குப் புரிந்தவை பாதி
புரியாதவை பாதி. திடீரென பண்டிதர் கேட்டார்.
'நீ
பாரதம் வாசித்திருக்கிறாயா?"
'இல்லை
ஐயா!"
'உன்
வாழ்வில் பாதியை இழந்துவிட்டாய். போகட்டும் இராமாயணம் வாசித்திருக்கிறாயா?"
'இல்லை
ஐயா!"
'ச்ச...
மீதிவாழ்விலே பாதியையும் இழந்து விட்டாய். சரி! சீவகசிந்தாமணி......"
'இல்லை!"
.............
இப்படியாக
பண்டிதர் பார்வையில் வாழ்வின் அனைத்தையும் இழந்து துரும்பாகிக் கொண்டிருந்தான் படகோட்டி.
மச்சுவாய் ஆற்றின் நடுப்பகுதியல் பயணித்துக் கொண்டிருந்தது. படகில் இலேசான சலனம். படகோட்டி
உசாரானான்.
'ஐயா!
உங்களுக்கு நீச்சல் வருமா?" என்றான் பவ்வியமாக.
'இல்லையப்பா!"
என்றார் பண்டிதர் புருவங்களைச் சுருக்கியவாறு.
'ஐயா
உங்கள் வாழ்க்கையே அழியப்போகிறது!" என்றான் படகோட்டி.
'ஏன்?"
பண்டிதர் கலங்கிவிட்டார்....
"மச்சுவாயினுள்
ஓட்டை..... தண்ணீர் புகுந்து கொண்டு வருகிறது....." மீதி சொல்லப்படாமலேயே ஆற்றில்
குதித்து நீந்தத் தொடங்கிவிட்டான் படகோட்டி.
- அநாமிகன்
நன்றி:
மௌனம் 4(காலாண்டிதழ்) - பெப்- மார்ச்சு - ஏப்பிரல் 1994 பிரான்சு.
(1)
மச்சுவாய் : சிறிய படகு - இப்படகின் நடுவில் உட்கார்ந்திருக்கும்
படகோட்டி தன் இரு கைகளால் பின்புறமாக தண்ணீரை உந்தி வாரித்தள்ளும் தண்டுக் கரண்டிகளால்
படகை முன்னோக்கி நகர்த்துவார்.
|
(2)
குறிப்பு: நாங்கள் பாரீசு வந்தபோது நடாத்திய காலாண்டிதழ்
'மௌனம்' இதில் எனது ஆக்கமாக இடம்பெற்றது. நாம் பல்வேறு
கதைகளை செவி வழியாகக் கேட்டு வளர்ந்த தலைமுறையினர். புலம் பெயர்ந்த நிலையில்
அப்படியான வற்றை பதிவு செய்யும் முயற்சியாகத் தொடருகிறேன். இக்கதையை என் தந்தை
வழியாக சிறு பிராயத்தில் கேட்டிருக்கிறேன்.
|
- முகிலன்
பாரீசு 22.07.2013
No comments:
Post a Comment