Friday, 19 July 2013

'அந்தக் கடவுளுக்குத்தான் நன்றி!"

குஞ்சரம் 4
சகமனிதன் வழங்கிய உதவிக்கு 'அந்தக் கடவுளுக்குத்தான் நன்றி!" எனத் தெரிவிப்பவர்கள்


இந்த ஆண்டும் 14 யூலை  தொடங்கும் நடுநிசி கோலாகலமான வாண வேடிக்கையைக் காண்பித்தது. அண்ணாந்து பார்ப்பதையே மறந்துவிட்டிருந்த புலம்பெயர்வு வாழ்க்கையில் இப்படியாக சில தருணங்கள் எமது கழுத்தின் அவசியத்தை முகமும் அறிந்துவிடுவது நகையானதுதான். பகல் முழுவதும் தொலைக் காட்சியில் பிரஞ்சுப் புரட்சி பற்றிய பல்வேறு ஆவணங்கள் - கதையாடல்கள் நிகழ்ந்த வண்ணமே இருந்தன. இந்த வருட ஆரம்பத்தில் நண்பர் வாசுதேவன் அவர்களால் எழுதப்பட்ட 'பிரஞ்சுப் புரட்சி" வரலாற்று நூல் வெளிவந்திருந்து வாசிக்கும் வாய்ப்பும் கிட்டியதால் தொலைக் காட்சி ஆவணங்கள் கொஞ்சம் அதிகமாகவே புரிந்தன. இந்த மக்களது கிளர்ச்சியும் மானிட குலத்திற்கான புதிய சகாப்தமும் என்றென்றும் மதிக்கப்பட வேண்டியது.
'பிரஞ்சுப் புரட்சி" என்னும் தமிழில் நேரடியான வரலாற்று நூல் மூலம் புலம்பெயர் தமிழன் வாசுதேவன் தமிழ்பேசும் படைப்புலகிற்கு பெரியதொரு ஆவணத்தை வழங்கியே இருக்கிறார். இவர் புலம்பெயர்வினால் பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" எனும் கனவின் தடத்தைத் தொட்டிருக்கிறார் என என்மனம் மகிழ்வுற்றது.

அடுத்த நாள் மதியம் எனது வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த பல்பொருளங்காடி வளாகத்தில் வண்டியைக் கழுவும் பணியில் மூழ்கியிருந்தேன். அப்போது பொடிநடையாக பரப்பரபுடன் அந்தத் தமிழ்ப்பெண் சென்றதானது 'இங்கு இவரால் பொருட்களை வாங்கிச் செல்ல முடியுமா?" என புருவத்தை உயரவைத்தது. தொலைவிலிருந்து வண்டியில்லாதவர்கள் இங்கு வந்து செல்வதில்லை. இவர் முன்னர் நாங்களிருந்த இடத்திற்கு அண்மையில் வாழ்பவர். இப்போது நாம் 2 கிலோ மீற்றர் தள்ளியுள்ள வேறொரு வீட்டில் குடியேறி இருந்தோம். எனக்கு நன்கு அறிமுகமான குடும்பத் தலைவி. ஆனால் வழித் தெருவில் என்னைக் கண்டால் கண்டு கொண்டதாகவே காட்டமாட்டார். 'வணக்கம்" கூட சொல்லமாட்டார். ஆனால் என் துணைவியைக் கண்டால் சரளமாக நேசபாவத்துடன் உரையாடுவார். ஆக நானாகச் சென்று ஏதும் விசாரிப்பது நன்றாக இருக்காதென மனம் கூற பேசாமல் என் வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்தேன்.

'வணக்கம்" பெண்ணின் தமிழ்க்குரல் கேட்டு திகைப்புடன் திரும்பி 'வணக்கம்!" என்கிறேன். அதே பெண் முகத்தில் அவசரமும் பதைபதைப்பும் வார்:த்தைகளில் தொக்கியவாறே வெளிவந்திருந்தன்.
'இங்குள்ள தபாலகமும் இல்லையாம் பியறிபெத் தபாலகத்திற்கு எப்படிப் போகலாம்?"
'அது இங்கிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவு. இங்கிருந்து பஸ்சிலும் செல்ல முடியாது."
'பரவாயில்லை! நான் நடந்து சென்றுவிடுவேன். போகும் வழியை மட்டும் கூறுங்களேன்." என்றார் அவசர அவசரமாக.
'இந்த வீதியால் சென்று முதலாவது வட்டச் சந்தியில் வலதுபுறம் திரும்பி நேராகச் சென்றால் பியறிபெத் நகரசபை வரும். அதற்குப் பின்னால் சற்றுத் தொலைவில் இருக்கிறது." என்றேன் அமைதியாக....
காத்திருக்காமல் படபடவென நடக்கத் தொடங்கினார் அப்பெண். நானும் கொழுத்தும் வெயிலின் சாதகத் தன்மையுடன் வண்டியைத் துடைக்கலானேன்.
'ஐயோ! அது தொலைவிலதான் இருக்குதாம். நான் 3 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். தயைவு செய்து என்னைக் கூட்டிக் கொண்டுபோய் விடுவீர்களா?" மீண்டும் அதே பெண்ணின் குரல். திரும்பிப் பார்க்கிறேன்> அவரது முகத்தில் கெஞ்சல் கொப்பளித்திருந்தது. நேரத்தைப் பாரக்கிறேன். 2 மணி  51 நிமிடங்கள்.
'சிரமம் என்றால் விடுங்கள்.... பரவாயில்லை!!"
'அப்படியாக ஒன்றுமில்லை! மனிதனுக்கு மனிதன் செய்யகூடிய சிறு உதவிகள்தானே.... ஏறுங்கள்!!" என்கிறேன்.
'ஒரு கறுப்பாள் கூட்டிக் கொண்டு செல்வதாகச் சொன்னார். நான்தான் சம்மதிக்கவில்லை. தெரியாத ஆக்களோடு எப்படிப் போவது?" என்றவாறு வண்டியில் ஏறினார். நானும் வண்டியை முடுக்கிவாறு பிரயாணத்தைத் தொடர்ந்தேன்.
'அவர் அப்பவும் சொல்லியிருந்தார் வில்தானூஸ் தபாலகம் பூட்டியிருக்கு  மாற்றிடத்திற்கு 354 பஸ் பிடித்துச் செல்லவேண்டும் என்று! நான்தான் அசட்டையாக எந்த இடமென்பதைக் கேட்காமலிருந்து விட்டேன். அவர் வந்ததும் என்னை ஏசப்போகிறார்." எனவான பின்னிருக்கையிலிருந்தவாறு பதைபதைப்புடன் தொடர்ந்தார்.
"நிதானமாக.... ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் சரியாக 3 மணிக்கு அவ்விடத்தில் இருப்பீர்கள். கவலைப்படவேண்டாம்." அறுதலாக நான்.
'இல்லை.... அசட்டுத்தனமாக இருந்துவிட்டேன்!" என்றார் பதைபதைப்புடன்
'இப்ப எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும். தேவையில்லாது அந்தரப்பட வேண்டாம். நீங்கள் சந்திக்கப் போகும் முக்கியம் தொடர்பாக நிதானமாக தெளிவாக யோசித்தால் மட்டும் போதும்!" மீண்டும் ஆறுதலாக.
சரியாக  2 மணி 59 தபாலகம் வாசலில் நிறுத்துகிறேன். "கடவுள்மாதிரி வந்து என்னைக் கொண்டு வந்துவிட்டீர்கள்! நான் கும்பிடும்; கடவுள் கைவிடவில்லை! அந்தக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!" என்றவாறு மகிழ்வுடன் விடை பெற்றார். வாயடைத்துவனாகி வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தேன்.
இந்த உதவியை வேறொரு தேசத்தவருக்கு நான் செய்திருந்தால்..... Merci, merci beaucoup Monsieur, Vous êtes très gentille நன்றி! மிக்க நன்றி! பெரியவரே! நீங்கள்  மிகவும் நல்லவர்!)" என்றிருப்பார்கள். தன்முன்னால் குவிந்துகிடக்கும் மனிதப் பிணக் குவியல்களைக் கண்டும் எந்தச் சலனத்தையும் வெளிப்படுத்த முடியாத இந்த கடவுள்கள்(!) என்னதான் செய்வார்களோ?.... மௌனப் புன்முறுவலுடன் வண்டியை ஓட்டியவாறிருந்தேன்.
இங்குள்ள மனிதர்களுடைய நாளாந்த உரையாடலில் நன்றியையும் (merci) மன்னிப்பையும் (pardon) அதிகம் பயன்படுத்தும் சொற்களாலான சூழலில்  நம்மவர்களும் மூன்றாவது தசாப்தம் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.



14 யூலை 1789 இல் நிகழ்ந் மக்களது பெரும் கிளர்ச்சி மானிட உலகிற்கு சட்ட ஆவணங்களாக வரைபு செய்த வரலாறு மனித குலம் வாழும்வரை நிலைத்திருக்கும். பொது வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வது இந்தப் பிரஞ்சுப் புரட்சிப் பற்றியதுதான;. அதுவும் மூன்றாம் உலகிலிருந்து பாரீசு வருபவர்கள் மறக்காமல் தேடிச் சென்று பார்க்குமிடங்களில் பிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றுத் தடங்கள் முதன்மையானதாக இருக்கும். 14 யூலை என்பது எனது தனிப்பட்ட வாழ்விலும் முக்கியம் பெற்றதென்பது ஆச்சரியமானதுதான். பிரான்சில் குடியேறிய என்னுடன் இணைந்து வாழ எனது துணைவி பாரீசில் வந்திறங்கியது 19 ஆண்டுகளுக்கு முன்னதான இந்நாள் என்பதால் எங்களால் மறக்கவே முடியாததொரு நன்னாள்.


- முகிலன்

வில்தானுஸ் பிரான்சு 19. 07. 2013

2 comments:

  1. அருமையான பதிவு. மக்கள் பலரும் உதவுகின்ற போது, கடவுள், கடவுள் எனப் பலமுறை கூறுகின்றார்கள். சிலர் அடக் கடவுளே, என்றெல்லாம் கூறுவதும் உண்டு. இல்லாத கடவுளை உயிர்ப்புடன் வைத்திருப்பது மனித மனங்கள் மட்டுமே. முன்பு எல்லாம் எனக்கு அடக் கடவுளே, நன்றி கடவுளே என்ற சொல் வந்து விழுந்திடும். இப்போ எல்லாம் அதைக் கூறுவதில்லை. அடக் கொடுமையே, நன்றி என்பதோடு முற்றிவிடும். :

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகையுடனான எண்ணப் பதிவிடலுக்கும் நன்றிகள். இந்த மனித 'மனம்' பற்றிய விரிவான அறிதல் நம் எல்லோருக்கும் கட்டாயமான தேவை. குறிப்பாக சிறிய பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு இவ்வறிவு மிகவும் முக்கியத்துவதுடையது.

      Delete