ஓடலியார் - 'ஓடலி" யார்?
அன்றைய நாள் விடுமுறையாதலால், சோம்பலாகவே விடிந்தது. விழித்தும் படுக்கையை விட்டு எழும்பிவர 10 மணியாகிவிட்டது. ஒருவாறு காலைக் கடனை முடித்துவிட்டு இணையத் துளாவலைச் செய்துகொண்டிருந்தபோது, கைத் தொலைபேசி சிணுங்கி அழைத்தது.
'வணக்கம்! வாழ்க வளமுடன்!"
"வணக்கம் அண்ணா!, உங்களைத் தொந்தரவு செய்கிறேனோ தெரியவில்லை....!" குரல் பவ்வியமாக ஏதோ கேட்கப்படப்போவதைக்
கட்டியம் கூறியது.
'இலலை தம்பி, சொல்லுங்கோ!" நானும் தயாராகிக் கொண்டவனாக, 'பிறப்புச் சான்றிதழ் மொழிபெயர்ப்பு வேலை செய்து கொண்டிருக்கிறேன் அண்ணா! அதில் ஒரு சொல் விளங்கவில்லை."
'என்ன சொல்?"
'அகர முதலிகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. இன்றைக்குத்தான் இப்படியானதொரு சொல்லை முதற் தடவையாக கேள்விப்படுகிறேன்." குரலில் ஆர்வம் ததும்ப பீடிகைபோட்டார்.
'அதுதான் சொல்லுமேன், நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்!" என்னையும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.
"ஓடாலி"
'என்னது - ஓடாலி சிலவேளை கோடாலி ஆக இருக்கும்"
'இல்லை அண்ணா! ஓடாலிதான்"
'எழுத்துக் கூட்டுங்கோ!"
'ODALY' என்று தொழிலில் பதிவாகி இருக்கு."
'அப்படிச் சொல்லும்! ஓடாலி இல்லைதம்பி ஓடலி. இப்படியான தொழில்புரிபவரை உங்களுக்குத் தெரியாதா? "
'இல்லை அண்ணா!"
'இவர்தான் வைத்தியசாலைகளில் மருந்து கலக்கிக் கொடுப்பவர்- compounder. இவரை நீங்கள் அறிந்ததே இல்லையா?" என ஆச்சரியத்துடன் கேட்டேன்.
'இல்லவே இல்லை! சித்த ஆயுள்வேத வைத்தியசாலைகளாக இருக்குமோ?"
'அப்படியாகக் குறுக்க முடியாது, அந்தக் காலத்து அரச வைத்தியசாலைகளை நினைவு மீட்டுப் பாருங்கள்!"
'இல்லை! நான் சிறுவயதிலேயே இங்கு வந்துவிட்டேன்! எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை."
வினவியவர் என்னிலும் இருபது வருடம் இளமையானவர். எண்பதுகளில் ஈழத்தில் இன ஒடுக்கல் கொடூரத்திலான பிரளய இடப்பெயர்வுகளால் சின்னாபின்னமாகித் துகள்களாகப் புவியெங்கிலும் விரவியவர்கள்தானே நாங்கள். வைத்தியசாலைகளே இல்லாதிருந்த ஈழத்து ஊர்களில் வாழத் தலைப்பட்ட அடுத்த தலைமுறையினருக்கு முறைசார் வைத்திய முறைமைபற்றி எப்படித் தெரிந்திருக்க முடியும்? நினைவோடையில் மனம் ஆரவாரமில்லாமல் பயணித்தது.
'அந்தக் கால அரச வைத்தியசாலைகளை நினைத்துப்பார்க்க முடியாதிருந்தால் உங்கள் அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள். அங்கு வைத்தியசாலைக்குப் பொறுப்பானவராக பிரதம வைத்தியரும் (DMO) , அவரின் கீழ் வைத்தியராக (MO) ஒருவரும், பல் வைத்தியரும், இவர்களின்; கீழ் அப்போதிக்கரியும் (apothecary) மருந்தகத்தில் மருந்து வழங்குநராக இந்த ஓடலியாரும் இருப்பார்கள். இங்கு 'டொக்டர்" என அழைத்தால் அது வைத்திய அதிகாரியை மட்டுமே குறிக்கும், அப்போதிக்கரியை 'அப்போ" என்றுதான் அழைப்பர், இதுபோல 'ஓடலியாரை"யும் சுட்டித்தான் அழைப்பர்."
'அப்படியா...., இன்றுதான் இவற்றை அறிகிறேன். ரொம்ப நன்றி அண்ணா!" அவரது குரலில் திருப்தி இருந்தது. அவரது கேட்டறியும் ஆர்வம் என்னைத் தொடர்ந்தும் உரையாட வைத்தது.
"தம்பி! அந்தக் காலத்தில் எமது சமூகம் முறைசார் முறைமையைத் (Formal system) தழுவி அதனுடான நிறுவகக் கட்டமைப்புடன் தொடர்புற்றதாக வாழ்ந்தது. கல்விக்கூடங்களாயினும், வைத்திசாலைகளாயினும், காவல் துறைகளாயினும், அரச நிர்வாக அமைப்புகளாயினும், தனியார் நிர்வாக அலகுகளாயினும் இந்த அதிகாரத்துவ (bureaucratic) முறைமையை சாதாரணர்களும் தெளிவாகப் புரிந்தவர்களாகவே வாழ்ந்தோம். அதற்கேற்ப மதிப்பளிக்கவும் பழக்கப்பட்டிருந்தோம். ஆனால், நீண்டு சென்ற போராட்டச் சூழலும், தொடர்ந்த பேரிடர்களும், இடப்பெயர்வுகளும் எமது சமூகத்தை முறைசாரா முறைமைக்குள் (Non formal system) முடங்கிப்போக வைத்துவிட்டது. இந்த நடைமுறை புலம்பெயர்ந்த வாழ்விலும் அமைந்துவிட்டது."
'அப்படியெண்டால்?!"
'நம்மவர் சமூக வாழ்வுடன் பின்னியதாக இருந்துவந்த அறிவுத்துறைசார் வல்லுநர்கள் கொண்ட படிம அடுக்கு (layer) தொடர்ந்த போராட்டச் சூழலால் தொடக்கம் முதலிலே விலகிச் சென்றுவிட்டது. இதனால் உண்டான வெற்றுச் சூழல் தன்முனைப்புடைய தகுநல் (appropriate) செயலர்களை தவிர்க்க முடியாதவாறு உள்வாங்கிவிட்டது. இது கடந்த முப்பது ஆண்டுகளாக வாழ்ந்தும் பழகிவிட்டது." என்றவாறு தொடர்ந்தேன்.
"இதை இலகுவாகச் சொல்வதானால் எல்லாத் துறைகளிலும் அந்தத் தொழில்களில் இருந்த 'ஓடலிகளால்" தொடரப்படலாயின. இதை குருவி தலையில் பனங்காய் வைத்தமாதிரி என்றுதான் சொல்லவேண்டும்."
'என்ன அண்ணா சொல்கிறீர்கள்?"
'தம்பி!, அந்தக்கால மருத்துவர்களின் மருந்துச் சீட்டை இலகுவில் வாசிக்கவே முடியாது. இப்போது கணனியால் தட்டச்சு செய்யபடுவதால் தெளிவாகப் புரியும். அந்தக் காலத்தில் மருத்துவர்கள் தமது கையால்தான் ஒரு 'R' போட்டுவிட்டு, கிறுக்கி விடுவார்கள். யாராலும் வாசிக்கவே முடியாது. ஆனால் ஓடலியார் இதை வாசித்துவிடுவார்."
'அப்ப ஓடலியார் கெட்டிக்காரர்தானே?!"
'ஆமாம தம்பி!;, அப்ப சிறுபிராயத்திலிருந்த எமக்கெல்லாம் பெரிய விண்ணானனாகத்தான் தெரிவார்." என்றவாறு பழைய நினைவுகளுடன் தொடர்ந்தேன்....
' இப்ப யோசித்துப் பார்க்கையில் சிரிப்புத்தான் வருகிறது. அவர் செய்தது ஒன்றும் மாயாஜாலம் அல்ல. ஓர் ஊரில் தொடர்ந்த நாளாந்த மருந்து கலந்து கொடுக்கும் வாழ்வினால் கிடைத்த அனுபவம் அவருக்கு தந்திருந்த அறிவு மட்டும்தான். காய்ச்சலுக்கு என்ன மருந்து, வாந்தி- பேதிக்கு என்ன மருந்து, வயிற்று வலிக்கு என்ன மருந்து, பெரியவர்களுக்கு எது - சிறியவர்களுக்கு எது எனவாக சிறந்ததொரு அனுபவ முதிர்ச்சி அவருக்கு இருந்திருக்கும்தானே?"
' ஓம் அண்ணா! இவரும் மருந்துச் சீட்டைப் பார்த்து என்ன நோய் எனக் கூறிவிடும் தலைகீழ் டொக்டராக அனுபவம் பெற்றிருப்பார்."
" சரியாகச் சொன்னீர் தம்பி! இங்குள்ள உணவகங்களுக்குக் கழுவச் சென்ற நாம் சலாட் போடப் பழகி படிமுறையாக சமையலாளர்களாகவே மாறியது போலத்தான் இதுவும்!!" என்ற நான் தொடர்ந்தேன்....
' வைத்தியர் கிடையாத ஊரில் இந்த ஓடலியார் தவிர்க்க முடியாதவாறு டொக்டர்களாகினர். இதுபோல் எல்லாத் துறைகளும் அந்ததந்தத் துறையின் ஓடலிகளால் நிரப்பப்பட்டன. ஆரம்பத்தில் இது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது உண்மைதான். ஆனால் இப்போது.......? " எனப் பெரு மூச்சுவிட்டவிட்டவாறு நிறுத்தினேன்.
"சரி அண்ணா! இப்ப எனக்கு நன்றாகவே விளங்கிப் போச்சு! ரொம்ப நன்றி அண்ணா!!" அவரது குரலில் வெளிப்பட்ட மகிழ்ச்சி திருப்தி தர, "மீண்டும் சந்திப்போம்!"
என்றதான சம்பிரதாய வாக்கியங்களுடன் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
*************
கிளறப்பட்ட நினைவலைச் சுழற்சிக்குள் சிக்குண்டவனானேன்.
தொடர்ந்த போர்ச் சூழலால், தற்காலிகமாக தவிர்க்க முடியாதவாறு இணைக்கபட்ட இந்த 'ஓடலிமார்கள்" தொடர்ந்த போர்ச் சூழலால் அப்படியே நிலைபெற்றதாக்கிவிட்டதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. 2009 மே நிகழ்வுகளின் பின் ஈழச்சூழல் புதியதான முறைசார் வடிவமைப்புகள் படிமுறையாக மாறத்தொடங்கிவிட்டது. ஆனால், ஈழத் தமிழரின் புலம்பெயர்வு வாழ்வில் இவ்வலகு இன்றும் தொடர்வதைத் தெளிவாகவே காணமுடியும். இங்கு நடாத்தப்படும் சமூக மன்றங்களின் செயல்கள் அனைத்திலும் இந்த 'ஓடலிகளின்" வகிபாகமே முதன்மையானதாக இருக்கிறது. இவர்கள் தமக்கு அரிதாகக் கிடைத்த மதிப்பான இருப்பை விட்டகலமாட்டார்கள். இதனால் அறிவுசார் வல்லுநர் படிம அடுக்கு (layer) நெருங்கப் போவது சாத்தியமில்லாததாகிறது. இந்நிலை புதிய தொலைத்தொடர்பு மையத்தை கையடக்கத்தில் கொண்டுள்ள உலகமயமாக்கலின் புதிய போக்குத் திசையில் சமதையான சமாந்திரப் பயணம் மேற்கொள்ள முடியாத அவலத்தைத் தோற்றுவித்திருக்கிறதென்பதை இலகுவில் ஒதுக்க முடியுமா?
2009 மே தந்த குலுக்கலால், இன்று பலவற்றையும் மீட்டுருவாக்கிப் பார்க்கத் திகைப்பாகவே இருக்கிறது. விடுபட்டுப் போன அறிவுத்துறைசார் வல்லுநர்கள் கொண்ட படிம அடுக்கு (layer) தற்போதைய வரலாற்றுத் தேவையாக இருக்கிறது. இவ்வடுக்கு மீளுருப்பெற ஏது தடை? இக்கேள்வியின் உந்துதல் கொடுக்கும் மனவேட்கையில் வெளிவரும் பதில் உரத்த சிந்தனைக்கு உரியதாகிறது.
கடந்த கால வரலாற்றுப் போக்கில் தற்செயலாக ஒட்டிக்கொண்ட இந்த "ஓடலிகள்" சுகபோகமடைந்த ஒட்டுண்ணிகளாகி, நவீன உலகப்போக்கால் புவியில் படிந்துவரும் பிளாஸ்டிக் படிமங்கள் போல் அகற்ற முடியாத துர்நிலையில் இருப்பதை உணரவே முடிகிறது. எமது சமூகத்தில் உறைந்து இறுகியுள்ள இந்த ஓடலிகளை நெகிழ வைத்து அகற்ற முடியாதா?
தமிழில்
சில சொற்கள் எப்படியாகப் புழக்கமாகின்றன என்பது ஆய்வுக்குரியதொன்று. அவ்வகையில் அமைந்ததொரு
சொல்தான்இந்த 'ஓடலி". இன்று புழக்கத்தில் நேரடியாக இல்லாது போயினும், வேறு வடிவங்களில்
எமைவிட்டு நீங்காதொரு செல்லாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
இன்று, கேட்டதும்
கொடுப்பதான 'கூகிள்"ஐ துளாவி 'ஓடலி" பற்றிவினவியபோது தன்னால் முடியாதுள்ளதை
பரிதவிப்புடன்ஒப்புக்கொண்டது. தேடிய எந்த அகர முதலிகளிலும்காணக்கிடைக்கவில்லை. தமிழ்
லெக்ஸிக்கன் தொகுப்பிலும்அகப்படவில்லை.
ஓடலி -ஓடலியார்-
வைத்தியசாலைகளில் மருந்து கலக்கிக்கொடுப்பவர் - Compounder - மருந்து கலக்கிக் கொடுக்கும்
தொழில்சார் முறையால் சுட்டி அழைக்கப்படுபவர். ஈழத்து பேச்சு வழக்காடலில்' என்ன ஓடலி
வேலையா பார்க்கிறாய்.... போடா போய் வேறு சோலியைப் பார்!!" என்ற ஏளன வாக்கியப்
பிரயோகம் இருந்திருக்கிறது. அதாவது முந்திரிக் கொட்டையாகச் செயற்படுகிறாய் என இது அர்த்தப்படும்.
நீதிமன்றங்களில் வக்கீல்களால் முன்வைக்கப்படும் ஆவணங்களைத் தூக்கிச் சென்று நீதிபதியிடம்
கையளிக்கும் எடுபிடியாளர்களையும் 'ஓடலி" என அழைப்பர். இவர்கள் தமக்குத் தெரிந்தவர்கள் மத்தியில்
சட்டங்களை நன்கு அறிந்தவர் போல் பெரும்பாவனையுடன் நடமாடுவார்கள்.
- இந்த ஆக்கம் பாரீசிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான ‘முற்றம்’ 50 இதழில்- யூன் 2014 பதிப்பில்
அச்சு வாகமனமேறியிருக்கறது.
(ஈழத்தின் மூத்த கலைஞன் அண்ணை றையிற் புகழ் பாலச்சந்திரன்)
தொடர்பான ஆவணங்கள்:
1. ஈழத்துப் புகழ்பெற்ற நாடகவியலாளரான அண்ணை றையிற் கே.எஸ். பாலச்சந்திரனது 'ஓடலி இராசையா" நாடகம் ஒலிவடிவில் 'யூ ரியூப்"பில் கிடைத்தது.
http://www.youtube.com/watch?
2. ஈழத்துக் கலைஞன் பாஸ்கரன் புலம்பெயர் வாழ்வை நையாண்டி செய்து விமர்சிக்கும் மேடை அரங்கம்.
http://www.youtube.com/watch?
3. எழுத்தாளர் ஓட்டுமாவடி அரபாத் அவர்களின் தொடரில்.....
மருத்துவக்கல்லூரியில் படித்து முறைப்படி பட்டம் பெற்ற மருத்துவர்கள் இல்லாத காலம்.ஆனானப்பட்ட வைத்தியர்களிடம் மருந்து கலக்கியவர்களெல்லாம் வைத்தியர்களாக வலம் வந்து மக்களை சுரண்டிப்பிழைத்த காலம். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு “மோதின் முத்தி லெப்பை ஆகிய கதை” அப்படித்தான் ஓடலி முத்தி டொக்டர் ஆகியது.(ஓடலி என்பது மருந்து கலக்கும் நபரை குறிக்கும் ) இந்த முத்தின கேஸ்களிடமிருந்து தப்பிப்பிழைத்து மட்டக்களப்புக்கு சென்று வைத்தியரிடத்தில் மகனைக்காட்டிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன்.
http://oddamavadi-arafath.
4. 21-ம் நூற்றாண்டின் வெறும் பணத்தாலான முதலீட்டு இலாபம் கருதிய உலகமயமாக்கப்பட்ட விஞ்ஞான வளர்ச்சியும், இணையவழி கணனி மையப்பட்ட தொடர்பாடல் தொழில் முறைமையும் மானிடர்களின் உலக வழமையை புரட்டிப் போட்டவாறே நகரவைக்கிறது. இந்த வளர்ச்சிக்குள்(!) உற்றுநோக்கில் 'மனித மன-வளக் கலை' போன்ற பல்துறைகளிலும் ஆற்றலாளர்களாகத் தோற்றமிடும் மலினப்படுத்தப்பட்ட 'ஓடலிகள்" பல்கிப் பெருகி விரவுவதைக் காணமுடியும். இதை சமூகவலைத்தளங்களில் நடைபெறும் மேலோட்டமான கருத்தாடல்களில் தெளிவாகவே அடையாளமிட முடியும்.
http://www.youtube.com/watch?
- முகிலன்
பாரீஸ் 29.06.2013
Tweet
No comments:
Post a Comment