Friday, 26 July 2013

'83 கலவரம் உமக்கு என்ன செய்தது.... ஐசே!

குஞ்சரம் 9

'83 கலவரம் உமக்கு என்ன செய்தது.... ஐசே!


மூட்டை மூட்டைகளாய்க் கனவுகளைச் சுமந்தவர்களென்றால் அவர்கள் 40களில் தொடங்கி 80 -90 கள் வரையில் இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழர்களாகாத்தான் இருக்கும். அப்படியாக வானத்தை முட்டும் கனவுகளுக்குச் சொந்தக்காராக இருந்தும் பதிவுலகில் கொட்டப்படாமலும் முன்னைய காலத்தவர்கள் போல் தம் வாரிசுகளின் செவி வழியாகத் தொடரப்பட முடியாதவர்களாகவும் முடமாகிப் போனவர்களும் நம்மவர்கள்தான்.
எமது வாழ்நாட்களில் 'இரு கோடுகள்' தத்துவம் மீளவும் மீளவும் நிரூபணமாக பல சமயங்களில் சிறியதை பெரியது கௌவிச் சென்றதைக் கண்டிருக்கிறோம். இன்று '83 கறுப்பு யூலை உம் அப்படியாகி அடங்கிச் சிறுத்தும் விட்டது. 2009 கொடூர மே வெளுப்பால் அடித்துச் சென்றும் விட்டது. எல்லாமே திட்டமிடப்பட்ட ஆனால் பரிமாணங்களால் வேறுபட்டதான நிகழ்வுகள்தான். ஈழத் தமிழர்களின் அழிவின் கொடூர வடுவாக உலக மனித குல வரலாற்றில் பதிந்து சென்ற நிகழ்வுமாகிவிட்டது..
'90களின் ஆரம்பத்தில் மீளவும் ஐரோப்பிய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறேன். நான் கனவே கண்டிராததொரு மறுபிறப்பெடுத்த வரவு இது. கொழும்பில் தனியாகத் தவிக்கவிட்ட எனது துணைவியின் பிரிவைக் காவிவாறு புத்தம் புதியதான நுண்மன உணர்வுகளுடன் வந்தடைந்த பிரயாணம்.
எனது மைத்துனரின் இல்லத்தில் தங்கிய காலம். அவருடன் அவர் வேலைசெய்யும் பிட்சாறியாவுக்கு நானும் இரவு நேர உதவியாளனாகப் போவது வழக்கமானது. அங்கே நான் செய்த வேலை பாத்திரங்கள் கழுவுதல்தான். இந்தக் கடை முதலாளியாக இருந்தவர் ஒரு தமிழன். இவர் '80களில் இங்கு வந்து தரித்தவர். விடாத முயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் இப்போது தனியாகக் கடைபோட்டு நடத்தும் நிலைக்கு வந்திருந்தார். ஆரம்பத்தில் குசலம் விசாரித்துவிட்டுச் சென்றுவிடுவார். நாட்கள் சில கடந்த பின் எனது உழைப்பிலும் அவருக்கப் பிடித்தம் வந்திருக்க வேண்டும். இவ்வேளையில் எனது வரலாற்றையும் அறிந்திருந்தார்போலும்! இங்கு இவரது கண்டு பிடிப்பாக 'ராம் பிட்சா' விசேட உணவாகி இருந்ததை நானும் இரசித்தேன். மரக்கறி பிட்சாவாக சின்ன மிளகாயும் சிறிதளவு இஞ்சியும் வெண்டைக்காய்த் துண்டங்களுமாக உருவாக்கி இருந்தார். இவரது கற்பனை வளம் என்னைக் கவர்ந்து பாராட்ட வைத்தது.
ஒருநாள் வேலை முடிவுறும் நேரம் 'வணக்கம்! தம்பி!!' நானும் பதிலுக்கு 'வணக்கம்' என்கிறேன். அன்று எனக்கு ஒரு கிளாசு உசார் பானத்தை வழங்கிக் கைகுலுக்கிச் சிரித்தார். வழக்கமான கேள்விகளான 'இந்த நாடு பிடித்திருக்கா?' 'எவ்வளவு காலம் எடுத்து இங்கு வந்தடைய?' என்று என்னிடம் அவர் கேட்கவில்லை. தனது உணவகத்தில் பணி தொடர்பாகவும் பொதுவான நாட்டு நிலவரங்கள் பற்றியதுமான இலகுவான எண்ணங்களே கதைக்கப்பட்டன. மிடறு மிடறாக இறங்கிக் கொண்டிருந்த உசார் பானம் உரையாடலை வேறு தளத்தில் கொண்டு போயிற்று.
'முந்தி நீங்கள் பெர்லினில் இருந்தீர்களாமே?' கேள்வி சடாரென அடித்துவிட்ட பந்து மாதிரி வந்து விழுந்தது.
'ஓமோம். இருந்தனான்!' உயர எத்தனிக்கும் புருவத்தை அடக்கியதாக அமைந்தது எனது பதில்.
'எங்கே இருந்தனீங்கள்? நானும் அந்த வழியாலேதான் இவ்விடத்துக்கு வந்தனான்.
அமெரிக்கன் ஓட்டல் குறுமலங்கா... லோறன்ஸ் ஸ்ராச, போஸ்டமா ஸ்ராச, இன்னும் பிற இடங்களில் இருந்ததையும் தெரிந்தவர்கள் பற்றிய பரிமாறலாகவும் கதைக்கப்பட்டது.
'பெர்லினிலே வாழ உரிமம் கிடைத்தவர்கள் அந்த நேரத்தில் நன்றாகச் சம்பாதித்த காலமல்லவா?'
'ஓம்! சிலர் நன்றாகவே சம்பாதித்தவர்கள்தான்.....' நிதானமாக இவரது கேள்வியிலிருந்து அந்நியப் பட்டவனாக.
'அந்தக் காலங்களில் ஒரே பாஸ்போட்டில் முப்பது பேரை அனுப்பியவர்களும் இருந்திருக்கிறார்கள். இப்ப ஐரோப்பா எங்கிலும் வந்தவர்களெல்லோருமே அந்த வழியால் வந்தடைந்தவர்கள்தானே!'
'ஓமோம்!' என்ற ஒற்றைச் சொல்லில் பதில் சுருங்கிப்போனது.
'அப்ப நீர் என்ன செய்தனீர்?'
'அங்கு வந்தடையும் அகதிகளுக்கு தகுந்த முறையில் விரைவான உதவிகளைப் பெறும் தார்மீகத் தொண்டை வழங்கும் ஈழத்தமிழர் நலன்புரிச் சங்கத்தில் இணைந்து 'யதார்த்தம்' என்ற மாத சஞ்சிகையை வெளியிட்டனாங்கள்.' என்ற பதில் அவருக்கு எரிச்சலை மூட்டியிருக்க வேண்டும்.
'அதுசரி! அப்ப ஏன் நீர் திரும்பிப் போனனீர்?' என்றதான கேள்வி ஏறிய உசாரை சப்பென்று இறக்கிவிட்டது.

'இலங்கையில் பெரிய அளவில் அழிவுகள் நடந்ததுதானே.... அதுவம் திட்டமிடப்பட அழிவுகளாக நடந்தேறினதானே..... எல்லாத்துக்கும் உச்சமாக '83 கலவரம் நடக்க என்னாலே பொறுக்க முடியவில்லை!'
'83 கலவரம் அங்கதானே நடந்தது... நீர் இங்கதானே இருந்தனீர்?.... அந்தக் கலவரம் உமக்கு என்ன செய்தது?... ஐசே!'
முதற் கேள்வியுடன் குடிப்பதை நிறுத்திய நான் இனிமேல் இங்கு வருவதில்லை என்ற முடிவுடன் உறைந்து போனேன். கொழும்பில் கடை வைத்திருந்து கலவரங்களால் பாதிப்புள்ளாகி அகதியாக வந்தவர்தான் இவர்.
புலம்பெயர்ந்த நிலையில் புலம்பெயர்ந்த மண்ணில் ஈழத் தமிழன் ஒருவனால் தமிழில் இன்னொரு ஈழத் தமிழனிடம் இப்படியாக வினவ முடியுமா? எனவாக இன்று வரையில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக விண்ணபம் கொடுத்தபோது தமக்கானதும் தம்மோடு கூடியவர்களும் இனக்கொடுமையால் பாதிப்புற்றதை விபரமாக விளக்கி அகதிநிலை வதிவிட உரிமம் பெற்றிருந்தவர்கள்தானே நாமெல்லோரும். இவரது வார்த்தைகளால் கொடுக்கபட்ட தாக்குதல் '83 கலவரத்திற்கு ஒப்பானதாகவே உணர்கிறேன்.
முதலில் '80 களின் ஆரம்பத்தில் பல்கலைக் கழக் கல்வியை முடித்த இளம் துடிப்புடன் இருந்த என்னை யாழ் நகர அழிப்பும் --நாம் இரசித்த யாழ் நூலக எரிப்பும் - யாழ் முற்றவெளிக் காடையரின் அட்டகாசமும் நாட்டைவிட்டு வெளியேற்றும் உந்துதலைச் செய்தது. வந்தடைந்த ஐரோப்பிய வருகை முற்றிலும் வேறுபட்ட தொரு அனுபவமாகியது. நாம் காணுற்ற ஐரோப்பாவும் - நாம் விட்டுவந்த மண்ணும் எம்மை சும்மா இருக்கவிடவில்லை. ஈழக் கனவைச் சுமந்தவாறு மகிழ்வுடன் மீளவும் மண்ணைச் சென்றடைந்த பலரில் நானும் ஒருவனானேன்.
ஒரு விடிவெள்ளி நேரத்தில் யாழ் மண்ணில் மீளவும் கால் பதித்த வேளை நான் செய்தது. மண்ணைத் தொட்டு வணங்கி - மண்ணை இருகைகளாலும் அள்ளி பிசைந்து.... மண்ணில் ஒரு முறை புரண்டு எழும்பியதுதான்.... இதைப் பதிவிடும்போதே இலேசாக கலங்கத்தான் செய்கிறேன். பெருமூச்சும் தானாகவே வெளியேறுகிறது.


இருபது வருடங்களின் முன் நிகழ்ந்த உரையாடல் மீட்கப்படும்போது கூடவும் சில எண்ணச் சிதறல்களும் தெறித்தன..


இராமாயண இதிகாசத்தில் அனுமான் தனது வாலால் தீயைக் கொண்டு சென்று இலங்கைத் தீவைப் பொசுக்கினான் என்பதை வாயைப் பிளந்தவாறு பக்திப் பரசவத்துடன் கேட்டு வளர்ந்தவர்கள்தான் நாமெல்லோரும். ஆனால் தீப் பிளம்புகளால் உலகம் படும்பாட்டை இன்றைய தொடர்பூடகம் காவிவரும் போது கலங்காத மனிதர்களே கிடையாது. எப்பேர்ப்பட்ட இயற்கை நாசம் எவ்வளவு பல்வேறு உயிரிகளின் அழிவுகள்.... குறிக்கப்பட்ட சில பல கால எல்லைக்குள் நிகழ்ந்து முடிகின்றன. நினைவிடலே அச்சமூட்டுகின்றது. இதனைத் தடுக்கமுடியாத கையறு நிலையில் இன்றும் அதீத விஞ்ஞான வளர்ச்சி எனப் பெருமிதம் கொள்ளும் உலகம்.
'சித்திரையில் புத்திரன் பிறந்தால் பெரும் தரித்திரம்' எனக் கூறிக்கொண்டு சித்திரையில் மகப்பேற்றை விலக்கி வருடப் பிறப்பை ஊக்குவிக்க முடியுமா?  அதுவும் இவ்வருடங்களெல்லாம் ஆண் மக்களாகப் பிறந்த பெயர்களுடன் எப்டியாக கூசாமல் கொண்டடாட முடியும்? எனக் கேள்விகளைக் கேட்காமல் பின்பற்றுபவர்களும் நாம்தான்.
யூலை - ஆடி நீசமான மாதம் என்றதால் கறுப்பும் அதனுடன் ஒட்ட 'கறுப்பு யூலை' எனவாகிவிட்டது. இதனிலும் பேரழிவைக் கொடுத்த மார்கழி (யேசு பிறந்த புனித மாதம்) 2004 ஆழிப்பேரலை அழிவும் 2009 மே - வைகாசி (புத்தர் பிறந்த புனித மாதம்) மனித குல வடுவாகிப்போன கொடூர அழிவும் மாதத்துடனான அடைச் சொல்லுடன் ஏன் பதிவாக மறுக்கின்றன?


- முகிலன்
பாரீசு 25.07.2013
தொடர்புடைய வேறு ஆக்கங்கள் நுழைய:

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (10)

சரம் - 6 யார் சிறிலங்கன்?

2 comments:

  1. ஈழத் தமிழர்கள் மூன்று விதமாய் பிளவடைந்து விட்டனர். தாயகத்தில் வசிப்போர், தாயகத்தின் நினைவுகளோடு புலத்தில் வசிப்போர், தாயக நினைவுகளே இல்லாமல் மறதி நோயுடன் புலத்தில் வசிப்போர். இதில் மூன்மாவது பேர்கள் ஆபத்தானவர்கள் மட்டுமில்லை எரிச்சலூட்டுபவர்களும் கூட.. பலர் வெள்ளையடிக்கப்பட்டவர்களாய், தேங்காய்களாய் மாறி கும்மாளம், குதூகலம் என அலைகின்றனர். அவற்றில் கொஞ்சத்தைக் கிள்ளி தாயகத் துயர் துடைக்க பயன்படுத்தலாமே எனக் கேட்டால், நீ யார் இந்தியத் தமிழன் என்பார்கள். ஆனால் போர் தோற்றத்தில் மட்டும் இந்தியத் தமிழர்கள் உதவவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றார்கள். இந்தியாத் தமிழர் ஒன்றும் மக்டோனால்டுகளில் உணவருந்தி, நயாகராவில் நீந்திக் கொண்டு, கள்ள மட்டைகளில் உலாவரும் கூட்டம் இல்லையே. அங்கும் அன்றாடங்காட்சிகள் தானே எனக் கூறுவதை செவி மடுக்க விரும்பாதவர்கள். என்னத்த பேசி என்ன, முற்றுப் பெற்ற யுத்தம் முற்று பெற்றதாகவே இருக்கட்டும், அங்கு பசித்தவருக்கு உணவும், உடையும், கற்க கல்வியும், வாழ தொழில் செய்து கொடுத்தாலே பாவப்பட்டவர்கள் வாழ்ந்துவுட்டு போகட்டுமே.. எதோ எனது ஆதங்கம் அவ்வளவு.

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்துகளை பதிவிட்ட பொறுப்புணர்வுக்காக நன்றிகள்! மனந்திறந்த உரையாடல்களாக மனித எண்ணங்கள் பகிரப்படட்டும். வரலாற்று அனுபவங்கள் பதிவேற்றப்படல் காலத்தின் கட்டாயமானதாகும்.

      Delete