Showing posts with label பந்தல் - 3. Show all posts
Showing posts with label பந்தல் - 3. Show all posts

Wednesday, 29 July 2009

சரம் - 14 கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது?


சரம் - 14

கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது?

மானிட வாழ்வில் காலம் கரைந்துவிடுவதை அனுபவத்தால்தான் உணர முடியும். இதுதான் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என முதுமொழி கூறியதுபோலும். போனது திரும்பாது என்பது அப்படியே பொருந்திப்போவது நேரத்திற்கு (காலத்திற்கு) தான்!

1983 யூலை ஈழத் தமிழர் மத்தியில் கறுப்பு யூலையாக வரலாற்று வடுவாகிவிட்டது. அப்போது இந்நிகழ்வு ஈழம் நோக்கிச் செல்லப் பலரை ஈர்த்தது, இவர்களில் நானும் ஒருவனானேன்.

ஆனால், 1993- இன் தொடக்கம் மீளவும் ஐரோப்பிய அகதியாக ஒருவித மன உறுத்தலுடன் விண்ணப்பித்திருந்திருந்தேன். அந்த மீளகதியான முதல் நாள் இரவின் தூக்கமற்ற புரளலை எப்படித்தான் மறக்க முடியும்?..... என்னை மாதிரி எத்தனைபேர் நாடு திரும்பக் காரணமானது இந்தக் கறுப்பு யூலை. ஆனால் நான் அறியப் பலர் இன்றில்லை. ஆம் அவர்கள் போயே போய்விட்டார்கள். மானுட வாழ்வின் எச்சங்களைக் காணாத அவர்களது பயணம் முடிவடைந்துவிட்டது. நானோ தோற்றவனாகி, நூலறுந்த பட்டமாக மீளவும் வெண் பனிப் போர்வையால் தன்னை தன்னை மூடிப் பளீரிட்ட ஊசியிலை மரத்தடியில் வீழ்ந்து கிடந்தேன். இப்ப நினைக்கும் போதே பெருமூச்சு வீறிட்டுச் செல்கிறது.

வந்தாயிற்று, துணைவி வழிவந்த புது உறவுகளுடன் எதைத்தான் பேசமுடியும்? மெளனமும் சிரிப்பும் உடல் மொழியாகி, மானுட மொழி உறைந்து போனது. ஐரோப்பியப் பயணத்தால் பிரிந்த துணைவியை மீளவும் இங்கு அழைத்தாக வேண்டும். கரைந்து போன இளமையையும் மீறி காலத்தின் ஓட்டத்துக்குள் நானும் ஓடிக் கலந்தாக வேண்டும்.

80களின் தொடக்கத்திலிருந்து இந்த ஐரோப்பிய மண்ணில் பதியமிட்ட பலரது வாழுதல் சீரானதாகி பொருளாதார மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வாடகைத் தரிப்பிடம் சொந்தமாகிவிட்டிருந்தது. புதிய தொழில் வழங்குவோராகவும் சிலர் பரிமாணமாயினர். இன்னும் சிலர் நாடு விட்டு நாடு சென்றவர்களாகினர். மாற்மொன்றுதான் நிரந்தரமென்பதைப் பறைசாற்றிச் சிரித்தது ஐரோப்பா.

மைத்துனரது அழைப்பை ஏற்று அவர் பணியாற்றும் உணவகத்துக்கு அவருடன் உதவியாளனாகப் பணியாற்றச் செல்கிறேன். இது நம்மவர் நடாத்தும் பிட்சா உணவகம். அனைவருக்கும் 'வணக்கம்' கூறிக் கைகுலுக்கி சமையல் அறைக்குள் நுழைகிறேன். வெள்ளைக்காரச் சிப்பந்திகளும் வணக்கம் சொன்னது என்னையும் அறியாது பெருமையாக இருந்தது. ஈழத் தமிழனின் உலகளாவிய பிரசன்னம் 'வணக்கம்' என்ற சொல்லை உலகமயமாக்கிவிட்டிருக்கிறது.

சமயலறையில் எனக்குப் பாத்திரங்கள் கழுவும் வேலை. மைத்துனர் பிரதம சமையலாளர், தனக்கே உரிய வேகத்துடன் பல் வேறு வகை உணவுகளைத் தயாரித்தளித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர் குறைந்த நேரம், எல்லோரும் தமக்கான உணவைச் சாப்பிடத் தொடங்கினர். உணவகத்தின் தமிழரான முதலாளி உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொன்னார். எல்லோரும் என்னைப் பொறாமையாகப் பார்த்தனர்.
"எப்படி?" என்றார்.
"நலம்" என்றேன் மெளனம் கலைந்தவனாகி.
"எப்படி இருக்கு சேர்மனி?"
"நன்றாக இருக்கு, நம்மவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள்" என்றபின் தொடர்ந்து,
"உங்களுடைய 'காந்தி பிட்சா' பெயரும் இதன் சிறப்பாக மரக்கறிப் பிட்சாவாக்கிய உங்களது எண்ணம் மிகவும் சிறப்பானது" என்றேன் மகிழ்வோடு.
எனக்கு விசேட சாப்பாடு செய்து கொடுக்கச் சொல்கிறார்.
"எப்படி இத்தகைய எண்ணம் வந்தது?" என்றேன் அவரது நட்பால் கவரப்பட்டு
"இங்கு நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்றால் 'ராம்' அல்லது 'காந்தி' என்று சொல்ல வேண்டும். பெயரை வைத்தால் மட்டும் போதுமா? தனிச்சுவையுடன் இருக்க வேண்டுமல்லவா? இதற்காக இஞ்சி, உள்ளி, கொஞ்சம் பச்சை மிளகாய் சேர்த்து புதிய பசை செய்தேன். சிறப்பு 'காந்தி பிட்சா'வுக்காக வெண்டக்காயும் சேர்க்க நன்றாகப் போகிறது" என்றார் பெருமையுடன்
கொஞ்ச நேரம் அமைதியாகச் செல்கிறது.

"அது சரி, ஏன் நீர் திரும்பிப் போனீர்?" அமைதியைக் கலைத்தது அவரது கேள்வி.
என்னைப் பற்றிய விபரங்களை முன்னரே அறிந்திருக்கிறார். வேலை கொடுக்கும் முதலாளிகளுக்கு இது கைவந்த கலை.

நிமிர்ந்து பார்க்கிறேன், அவரது ஆர்வம் இயல்பானதாகவே இருப்பதாகப்பட்டது. திடீரெனக் கேட்ட இப்படியான கேள்வியை இவரிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
"அப்ப 83 கலவரம் நடந்ததே, அது ரொம்பவும் பாதிச்சுது அதுதான்!"...... என்றேன் ஒருவாறு சமாளித்தவாறு.

"83 கலவரம் அங்கே கொழும்பில் சிறிலங்காவில்தானே நடந்தது, ஆனால் பெர்லின் நகரில் இங்கிருந்த உம்மை அக்கலவரம் எப்படிப் பாதிச்சது?" என்றார் உறைப்பாக.

ஈழத் தமிழனொருனின் வாயிலிருந்து தமிழால் வெளிப்பட்ட வாக்கிய அதிர்வு காற்றைக் கிழித்து என் செவிப் புலனைத் தொட்டதும் இத்தகைய அதிர்வெண்ணை அறியாத என் செவிப்புலனை விறைப்பாகிக்கியது. இது என்னைப் பேச்சு மூச்சற்றதாக்கியது!
'என்ன சொல்லலாம்........?' இது நடந்து 15 வருடங்கள் கழிந்த நிலையிலும் இப்பவும் யோசிக்கிறேன்.

காலத்தின் ஓட்டத்திற்கு இசைவாகி தமக்கான தமக்கு மட்டுமான விருப்பின்
இருப்புக்காகவே வாழும் கருணாக்களுக்கான உலகில் இன்று எனக்குள் எரிமலையாகக் கொதிக்கும் கேள்வி

'அடேய்! முத்துக்குமாரா.... உனக்கென்ன வந்தது?'


- வளவன்
செர்மனி 25.07.2009


Monday, 27 July 2009

கதைச் சரம் - 7 சாப்பாட்டுராமன் கதை


கதைச் சரம் - 7
செவி வழிக் கதை - 5

சாப்பாட்டுராமன் கதை

இது ஒன்றும் இராமன் கதை கிடையாது. நன்றாகச் சாப்பிடுபவர்களை 'சாப்பாட்டுராமன்' என்று சொல்வது வழக்கம் என்ற வகையிலமைந்த கதை இது.


அந்த ஊரில் நன்கு அறிமுகமான சாப்பாட்டுராமன் இருந்தான் இவன் முன் எவ்வளவு உணவை இட்டாலும் பொறுமையாக முழுமையையும் முடித்துவிடுவான். அதனால் இவன் குண்டன் கிடையாது. வெண்ணிலாக் கபடிக்குழுவில் சாப்பிட்டவன் போல் இருப்பான்! கலகலப்பானவன் ஆகையால் இவனைச் சுற்றியொரு கூட்டம் எப்போதும் இருக்கும். இவனது திறமை அறிந்து அவ்வப்போது பக்கத்து ஊரிலிந்தெல்லாம் போட்டிகளுக்கான அழைப்புகள் வரும். இப்படியான போட்டிகளüல் கலந்து பெற்ற வெற்றிகளால் இவனது புகழ் பெருகி சுற்றுவட்டாரத்திலெல்லாம் விசிறிகளை ஏற்படுத்தியிருந்தது. இப்போதெல்லாம் இந்த விசிறிகள் தரும் உற்சாக விசிலடி ஆரவாரத்துடன்தான் போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது.

இந்த நிகழ்வுகளால் அவ்வூர் இராசாவின் கவனத்துக்கு உரியவனாகி விட்டான்.
அதனால் இந்த இராசாவுக்கு இவனைத் தோற்கடித்துக் காட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றிவிட்டது. இராசாவின் உய்தறிந்த எண்ணத்தை உய்தறிந்த மந்திரிமாரும்(இவர்களுக்கு வேறென்ன வேலை) தூபமிடத் தொடங்கினர். சாப்பாட்டுராமனை அழைத்து போட்டிக்கான நாள் குறிக்கப்பட்டு தண்டோராவும் தரப்பட்டது. இம்முறை சாப்பாட்டுராமன் தோற்கடிக்கப்படுவான் என்று மந்திரிகளிடமிருந்து கசிந்த செய்தியால் போட்டி நாளனன்று கூட்டம் அலை மோதியது.

போட்டிக்கான அரங்கம் நிரம்பி வழியும் உற்சாகம் கண்டு மன்னர் நெகிழ்து போனார். தனது அரசாட்சியில் மக்கள் மகிழ்வாக இருப்பதை எண்ணி அகமகிழ்கிறார். முன்னரே திட்டமிட்டபடி ஒருவனால் உண்ண முடியாத அளவில் போட்டிக்கான பண்டங்கள் தயாராகி விட்டன. விசிறிகளின் ஆரவார அழைப்பொலியுடன் அரங்கத்தில் நுழைகிறார் நம்ம சாப்பாட்டுராமன். சும்மா சொல்லக்கூடாது இராசாவுக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இராசாவிற்கும் சபைக்கும் வணக்கம் தெரிவித்து அமர்கிறான் சாப்பாட்டுராமன்.

போட்டி விதிகள் அறிவிக்கப்பட்டதும் எழுந்த நம்ம சாப்பாட்டுராமன் "மன்னா! ஒரு வேண்டுகோள் இந்தப் போட்டியில் நான் உண்ண வேண்டிய முழு உணவினையும் இங்குள்ள மேசையில் என் கண் முன்னால் வைக்க வேண்டும்!" என்றான்.

மன்னரும் சற்றே யோசித்துவிட்டு "சரி" என்கிறார்.
"நான் கேட்கும் வகையிலேயே உணவைப் பரிமாறவேண்டும்" என்கிறான் நம்ம சாப்பாட்டுராமன்.

சாப்பாட்டுராமன் பயந்துவிட்டான் என்று திருப்தியடைந்த மன்னர் "சரி" என்கிறார்.

விசிறிகளும் கைதட்டி ஆரவாரிக்கின்றன. அழகான மேசை தருவிக்கப்படுகிறது. அதன் மேல் வட்ட வட்டத் தாம்பாளங்களில் விதம் விதமான ஒழுங்காக அழகாக அடுக்கப்பட்ட உணவுகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. இவ்வளவு உணவை ஒருசேரப் பார்த்ததால் பலருக்கு வாயில் எச்சில் ஊறியது. சபை மெளனிக்கிறது. அனைவரது கண்களும் உணவு மேசையையும் நம்ம சாப்பாட்டுராமனையும் மாறி மாறிப் பார்த்த வண்ணமிருக்கின்றன.

நம்ம சாப்பாட்டுராமன் எழுந்து வந்து சாப்பாடு முழுவதையும் நோடமிடுகிறான். பின் அமைதியாகத் திரும்பி வந்து கை கால்களை ஒரு முறை அசைத்து தன்னைத் தயார் செய்து அமர்கிறான். ஒரு நிமிடம் தியானம் செய்தபின் சரியென்கிறான்.

அவன் சொல்லச் சொல்ல உணவுகளை எடுத்து வைக்கின்றனர். முதல் அரை மணித்தியாலத்தில் அரைவாசி உணவு காலியானதைக் காணவே அதிசயமாக இருந்தது. நம்ம சாப்பாட்டுராமன் கருமமே கண்ணாகியிருந்தான். சும்மா சொல்லக்கூடாது அவன் உண்பதே அழகாகத்தான் இருந்தது. இவனது அசைவுகளை வைத்த கண் விடாது பார்த்த வண்ணமிருந்தது பெரியதொரு இளையோர் கூட்டம்.

அடுத்த அரை மணியில் முக்கால்வாசி உணவும் காலியானதைக் கண்ட மன்னரும் துணுக்குற்றார். சபை ஆரவாரம் செய்து உற்சாகமளித்துக் கொண்டிருந்தது. அடுத்த அரை மணி மேலும் விறுவிறுப்பாகி உச்சக்கட்ட உணர்வு மயமாகியது. ஒவ்வொரு உணவாகக் காலியடைந்த தட்டுகள் பரிதாபகரமாக முழித்துக் கொண்டிருப்பதாகச் சிலருக்குத் தோற்றமளித்தன.

மந்திரிமார் முகங்களில் ஈயாட்டம் கிடையாதது போல் விறைத்திருந்தன. இராசா உறைந்தே போனவரானார். சபை அதிரும் ஆரவாரமும் மேளதாள ஓசைகளும் பெரிய அளவில் கிளம்பி நம்ம சாப்பாட்டுராமன் வெற்றியைக் கட்டியமிட்டன. மந்திரிமாரில் சிலரும் தம்மையும் அறியாது கைதட்டினர். வெற்றி முகத்துடன் எழுந்து நிற்கிறார் நம்ம சாப்பாட்டுராமன். 'எப்படி சாத்தியமானது?' என்ற குழப்பத்துடன் பரிசை வழங்குகிறார் மன்னர்.

ஆரவாரம் சற்றுத்தணிந்ததும், "எப்படியப்பா உன்னால் இது சாத்தியமாகிறது?" என்ற தனது விடை காணாத கேள்வியை நம்ம சாப்பாட்டுராமனிடம் கேட்டே விட்டார் மன்னர்.
"இது சின்ன விடையம் மன்னா! இதைச் சொல்வது சிரமம் செய்து காட்டுவதுதான் சுலபம்" என்றான் அடக்கத்தடன் நம்ம சாப்பாட்டுராமன்.
"சரி சரி!! விளக்கமாக விபரி பார்க்கலாம்.....!" என்றார் ஆர்வமிகுதியுடன் மன்னர்.

"ஒரு அறையில் அடைக்கக் கூடிய அளவு மக்களை அடையுங்கள் பார்க்கலாம்!" என்றான் மன்னனைப் பார்த்து நம்ம சாப்பாட்டுராமன்.

"அப்படியே ஆகட்டும்!" என்கிறார் மன்னர்.

ஒரு அறையில் மக்களை அடைக்கின்றனர் காவலர்கள்.

ஒவ்வொருவராக அறையிலிடவும், இதைப்பார்த்த நம்ம சாப்பாட்டுராமன் "இன்னும் அடைக்கலாம்" என்பதுமாகி மேலும் பலர் உள்ளே தள்ளப்பட்டு அறை நிரம்பி வழிகிறது. இனிமேல் யாருமே புகமுடியாத நிலை ஏற்படுகிறது.

"மன்னா! இனிமேல் யாருமே உள்ளே புகமுடியாது" என்றார் தலைமைக் காவலர்.

மன்னர் நம்ம சாப்பாட்டுராமனை நோக்கினார் நடப்பதை அறியும் ஆவலுடன். ஆனால் அவனோ "இன்னுமொருவர் புகமுடியும்" என்றான் அடக்கத்துடன்.

"எப்படியப்பா? சரி! செய்து காட்டு பார்க்கலாம்" மன்னரே தாங்க முடியாதவராக வினவினார். குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவில் அமைதியாக இருந்தது சபை.

எழுந்து வந்த நம்ம சாப்பாட்டுராமன் மன்னரை வணங்கி, "அடியேனின் கோரிக்கையை தாங்களால்தான் நிறைவேற்ற முடியும்" என்றான் அடக்கத்துடன்.

"அப்படி நான் என்ன செய்ய வேண்டும்?" என்கிறார் மன்னர்.

"தாங்கள் இந்த அறைக்குள் தயைகூர்ந்து நுழைய வேண்டும். இப்படி நான் கேட்பதால் குறை நினைக்கக் கூடாது மன்னா!!"

மன்னர் மறுக்காது அறையினுள் உள் நுழைகிறார். என்னே ஆச்சரியம்! மன்னரைக் கண்டு அறையிலிடப்பட்ட கூட்டம் இன்னும் நெருங்கி வழிவிடுகிறது.

விடைகிடைத்த திருப்தியுடன் மன்னர் திரும்பி நம்ம சாப்பாட்டுராமனை நோக்கிவந்து கைகுலுக்கி, தனது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அணிவிக்கிறார். கூட்டம் சந்தோச மிகுதியால் எழுந்து நின்று ஆர்பரிக்கிறது.



- முகிலன்
பாரீசு யூலை 2009

(இக்கதை என் சிறு வயதில், சிங்களப்பகுதியில் பணியாற்றிய எனது அண்ணாவிடம் கேட்டது)

Friday, 24 July 2009

கதைச் சரம் 6 நினைத்தாலே சிரிப்பு வரும்!!


கதைச் சரம் 6
செவி வழிக்கதை - 4


நினைத்தாலே சிரிப்பு வரும்!!
(உனக்குப் பின்னால் உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.......! )

முன்னொரு காலத்தில் விநோத எண்ணமுடைய ஒரு ராசா இருந்தார். இவருக்கு புதுசு புதுசா சாப்பிட வேண்டுமென்று விருப்பம் (அதுதான் நம்ம 23-ம் புலிகேசி மாதிரி, இப்பவுள்ள மஞ்சள் துண்டு ராசா மாதிரி, சிவப்புத் துண்டு ராசா மாதிரி நிறையவே இருந்திருக்காங்க). இவரின் விருப்த்தை நிறைவேற்று முகமாக அமைச்சரவையும் திட்டங்களை அறிவித்து ராசாவை உற்சாகப்படுத்தியது. இது ஒரு கோடை காலம், அமைச்சரவை காலத்துக்கு ஏற்றவாறு புதுப் புதுப் பழங்களை தருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கிடைக்குமென அறிவித்திருந்தது.

பரிசைப் பெறுவதற்காகப் பெருமளவில் வித விதமான பழ வகையுடன் போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். ஐயோ பாவம்! அதில் பெரும்பான்மையான பழ வகைகள் மன்னரால் அறியப்பட்டவைகளாக இருந்தன. இதனால் கோபப்பட்ட மன்னரது மன நிலையை அறிந்த அமைச்சரவை திடீரென புது அறிவிப்பை அறிவித்து. அது "மன்னருக்கு தெரிந்த பழங்களைக் கொண்டு வந்தால், அப்பழங்கள் முழுமையாக கொண்டு வந்தவர் வாய்களுக்குள் அப்படியே திணிப்படும்." என்பதாக இருந்தது. இதனை நிறைவேற்று முகமாக காவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்தச் சேதி காட்டுத் தீ எனப் பரவ, வேடிக்கையைக் காண்பதற்காக பொதுமக்களும் அலையலையாகத் திரள அரசவை அல்லோல கல்லோப்பட்டது.

இப்படியான ஒரு நாள், ஒரு வாலிபன் அன்னாசிப் பழத்துடன் அரசவைக்கு வந்தான். அன்னாசி பற்றி மன்னருக்கு ஏற்கனவே தெரிந்திருந்து. மன்னரும் "இது அன்னாசிப் பழம்" என்கிறார். உடனே காவலர்கள் பழம் கொண்டு வந்த இளைஞனை தர தரவென்று இழுத்து வந்து கட்டிவிட்டு அவனது வாயில் அந்த அன்னாசிப் பழத்தை திணிக்கத் தொடங்கினர்.

அன்னாசிப்பழத்தை செலுத்தும் போது அவனது கடவாய் கிழிந்து இரத்தம் வழிந்தது. இக்காட்சியைப் பார்த்து சபை துணுக்குற்றது, ஆனால் அவனோ சிரிக்கிறான்..... இந்த நிலையில் அந்த வாலிபன் சிரிப்பதைக் கண்ட பிரதம அமைச்சர் திகைத்துப் போனார். உடனே காவலர்களை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார். அந்த இளைஞனைப் பார்த்து "இப்படியான நிலையிலும் ஏனப்பா சிரிக்கிறாய்?" என வினவினார்.

அவனும் " எனக்குப் பின்னால என்னுடைய மாமா பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறார். அன்னாசியுடன் வந்த என் கதி இப்படியிருக்க... அவரை நினைக்கவே...." என்றவாறு மீண்டும் வாய் விட்டுச் சிரிக்கிறான். இம்முறை அவனோடு அவையும் சேர்ந்து கொள்கிறது.

- முகிலன்
யூலை 2009 - பிரான்சு

00000000000000000000000000000
செவி வழிக் கதைகள்
நாம் சின்ன வயது முதல் பல்வேறு கதைசொல்லிகளால் கவரப்பட்டவர்கள். இக் கதைசொல்லிகளாக எம்மது மூத்த தலைமுறையினர், பெற்றோர், ஆசிரியர்கள், சுற்றத்தார், நண்பர்கள் எனப் பலவாறாகவும் காணப்பட்டனர். இவற்றில் பல கதைகள் இராமாயண, மகாபாரதக் கிளைக் கதைகளாகவும் இருந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் அறிமுகமாகிப் பரவலான எழுத்துலகின் பரந்துபட்ட வாசிப்புக் கலாச்சாரம் கதைசொல்லலைப் பதிவுகளாக்கித்தரத்தொடங்கியது. இது தற்போதுள்ள தொழில் நுட்பஙகளுடன் பாட்டி கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், இன்றைய கார்டூன் கதைகள் வரையில் கதைசொல்லிகளின் வெளிப்பாடும் மனிதனுடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனாலும் சில கதைசொல்லிகளின் கதைகள் நாடோடிக் கதைகளாகவும் வரையறுக்க முடியாது, கிராமக் கதைகளென்றும் கூறமுடியாது ஆனால் நகைச்சுவையுடன் குறுங்கதைகளாக கவனங்கொள்ள வைக்கும். ஆனால் இதைப் படைத்தவர் யாரென்பதை அறியவே முடியாது. செவி வழியாக அறிந்துள்ள இவ்வகைக் கதைகளைப் பதிய தோரணம் முனைகிறது.

00000000000000000000

Wednesday, 22 July 2009

சரம் - 13 மணவாழ்வில் விட்டுக் கொடுத்தல்


சரம் - 13
மணவாழ்வில் விட்டுக் கொடுத்தல்


புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினருக்கு அடுத்த தலைமுறை எப்படியாகவெல்லாம் வாழ்கிறது என்பதை அவதானிப்பதில் கொஞ்சம் அதிகமான ஈடுபாடுள்ளதென்றே சொல்ல வேண்டும். 
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் இந்த இளைஞனின் கல்யாணம் நடந்திருந்தது. பார்த்திருக்கும் போதே காலம் உருண்டோடியது தெரியாது போய்விட்டது. சும்மா சொல்லக் கூடாது ஐரோப்பாவில் நேரம் விரைந்துதான் ஓடுகிறது போலும்! இங்கு வளர்ந்திருந்தாலும் காதல் வலையில் சிக்காது பெரியவர்களால் பேசி முடித்த கல்யாணம் இவனுடையது. இன்று மூன்று பிள்ளைகளோடான இளம் குடும்பமாகி விட்டது.

இன்று நீண்ட நேரம் இருக்கும் சூரிய கிரகணம் என்ற செய்தி வரவே ஐரோப்பியரெல்லாம் கறுப்புக் கண்ணாடிகளுடன் ஆவலாக இருக்க, ‘வரப்போகிறது சிறப்புச் சுனாமி’ என்ற வதந்தியுடன் சாமி கும்பிட்டு காரியம் பார்க்கும் மூத்த தலைமுறையல்லவா? நம்மவருடையது.
எது நடந்தாலும் ஒருக்கா சாமியோடு பகிர்ந்து போட்டுச் செய்தா ஒரு யானை பலம் கிடைத்த மாதிரி- என்ற நினைவுடன் பயத்தையெல்லாம் அந்தக் கடவுளுடைய தலையில் சுமத்திவிட்டு வெளியில் வரும்போது கிடைக்கும் சுகத்தை அனுபவித்தால்தான் தெரியும். புலம்பெயர்ந்த வாழ்விலும் இப்படியான தமது மனவுணர்வுகளை ஒருவாறு அடுத்த தலைமுறைக்கும் கடத்தி அந்தப் பழக்க வழக்கத்தைக் கொடுத்திருந்து நிம்மதியான முதல் தலைமுறையின் செயலை வியக்காது இருக்கமுடியாது.

தனது திருமண நாளை கோவிலில் அரிசனையுடன் நினைவுகூர்ந்து விட்டு வந்திருந்தார் இந்த அடுத்த தலைமுறை இளம் குடும்பத்தன். நான் அவரது குடும்ப நண்பன்.

"அண்ணே!.............." என்று பெளவியமாக என்னைப் பார்த்து இழுத்தார்.


"என்ன தம்பி கூச்சப்படாது கேளுங்கோ......!" ஏதோ சூரிய கிரகணத்தைப் பற்றியதாக இருக்குமாக்குமென அலட்சியத்துடன்

"அண்ணே! குடும்பத்தில நிம்மதி இருக்க யார் அதிகவளவில் விட்டுக் கொடுக்கிறார்கள்? ஆணா? பெண்ணா? உள்ளதைச் சொல்ல வேண்டும்!" என்னை உற்றுப் பார்த்தவாறு

எதிபாராத கேள்வியால் துணுக்குற்ற எனது கண்கள் தடுமாறியவாறு சில கணங்கள் நிலம் நோக்கின....

புருவத்தின் மேல் தோலில் பலவான கீறல்கள் தோன்றியிருக்க வேண்டும்
கல்யாணம் பேசிய காலத்தில் அவனது கைத்தொலைபேசி டயல் ரோனில
 "நான் ஆம்பிளைச் சிங்கம்டா........." என்றதை நானும் கேட்டவன்.

"என்ன தம்பி திடீரென்று......" ஒருவாறு சமாளித்து வார்தைகள் விழுந்தன. எனது கண்கள் நேராக அவனது முகத்தை ஆழமிட்டன.

"இல்லை அண்ணே என்ர கண்டுபிடிப்பை ஒப்பிடத்தான்.........." சஞ்சலமில்லாது

"இது என்ன கேள்வி தம்பி! ஆம்பிளையாலதான் அதிகமாக விட்டுக் கொடுக்க முடியும். அப்பத்தான் நிம்மதியாக இருக்கலாம் தம்பி."  அனுபவ முதிர்ச்சி ஓசைநயமாகி இருந்திருக்க வேண்டும்.

"ஓம் அண்ணே! சரியாகச் சொன்னீர்கள்" என்றான் திருப்தியுடன். தொடர்ந்து "மாயாண்டி குடும்பத்தார் பார்த்தனீங்களா அண்ணே! கட்டாயம் பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்!" மகிழ்வுடன்.

"பார்க்கலாம்" என்கிறேன் அமைதியாக
- அமலன்
செர்மனி 22. 07. 2009

Monday, 20 July 2009

கதைச் சரம் - 5 நம்பூதிரி வீட்டுக் கத்தரித் தோடத்தில் புகுந்த மாடு


கதைச் சரம் - 5

செவிவழிக் கதை - 3

நம்பூதிரி வீட்டுக் கத்தரித் தோடத்தில் புகுந்த மாடு

கேரளாவில் நம்பூதிரிகள் உயர் அறிவுடைய மேல்மட்டக் குடியினர். மாலை நேரம், இப்படியான ஒருவரது கத்தரித் தோட்டத்தில் மாடு திடீரென நுழைந்து கத்தரிகளை வேகமாக நாசம் செய்து கொண்டிருந்தது. சாய்வுக் கதிரையில் கண்ணயிர்ந்து கொண்டிருந்த நம்பூதிரியார் திடுக்கிட்டு வழித்து் பார்த்தார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாட்டை விரட்டுவதற்காக உற்றுப் பார்த்தார். அவரது அறிவு கிளர்ந்தெழத் தொடங்கியது......

'மாட்டின் முதுகுத் தண்டில் அடித்தால் முன்னங்கால் செயலிழந்து போகும்!'
'மாட்டின் பின் பக்கத்தில் அடித்தால் பால் சுரப்பி செயலிழந்துவிடும்!'
'மாட்டின் கழுத்தில் அடித்தால் அதன் வாய் செயலிந்து விடும்!'
'தலையில் அடித்தால் மாடே இறந்து போகும்!'.....

என அவரது நரம்படி நுணுக்கப் பார்வையுடன் சிந்தனை ஓடத் தொடங்கியது. செய்வதறியாது திகைத்தப் போனார். இவரது கால தாமதத்தால் மாடு காற்பங்கு தோட்டத்தை நாசமாக்கிவிட்டது.
"பாலு.... டேய் பாலு............ " என வீரிட்ட இவரது வீரிட்ட அழைப்பைக் கேட்ட தோட்க்காரன் பாலு ஓடோடி வந்தான். இவரது பார்வை மாடை நோக்கியிருந்ததைக் கண்ட தோட்டக் காரன் கண நேரம் கூட தாமதிக்காது கையில் கிடைத்த தடியை எடுத்து தாறு மாறாக விளாசியவாறு மாட்டை விரட்டினான். அடியின் கோரம் தாங்காது மாடு கத்தியபடி அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டது.

"ஏன் ஐயா! முன்னமே என்னைக் கூப்பிடவில்லை? எவ்வளவு செடிகளை நாசம் செய்துவிட்டது இந்த மாடு." செல்லக் கோவத்துடன் நம்பூதியை வினவினான் பாலு.

நம்பூதிரி பாலுவின் செயலில் இலயித்தவராகி..... புன்முறுவலிக்கிறார்!


(இக்கதை நான் சிறுவனாக இருந்தபோது எமது உறவினரான நல்லையா வாத்தியார் சொல்லக் கேட்டது.)

- முகிலன்
பாரீஸ் - யூலை 2009

Friday, 17 July 2009

சரம் - 12 விண்ணாதி விண்ணர்களாக நாம்!!

சரம் - 12 விண்ணாதி விண்ணகர்ளாக நாம்!!
1. சுயபெருமை?


சந்திப்பிடங்களில், நம்மவர் கண்களால் அளவெடுத்து, பகுத்து தகுதிகள் தெரிந்துமெல்லமாகக் கலந்துரையாடல் தொடங்குவது வழமை. இந்தத் தகுதிப்பிரிப்புபுதிய புலம் பெயர் கலாச்சார அளவீடுடாகியுள்ளது. சொந்த வீடுடையவர்கள், வாடகை வீட்டில் இருப்பவர்கள், விசா இல்லாதிருப்பவர்கள் என முதல்கட்டத்திலும், சொந்த வீடுடையவர்களில் - தனியான வீடுடையவர்கள், தொடர்மாடிக் கட்டிட வீடுடையவர்கள் எனவாகவும், வாடகை வீடுடையவர்களில் - தனியார் வீடுகளில் இருப்போர், அரசாங்க வீடுகளில் இருப்போர் எனவாகவும், விசா இல்லாதிருப்போரைத் தனியாகவும் வேறுபிரிக்கும் பாவம்வந்துவிட்டுள்ளது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுடையவர்கள் எல்லோருக்கும்மேலாகவும் இருப்பர். சொத்து இல்லாதவர்களை யாரும் சட்டைசெய்யமாட்டார்கள்.

வட்டமாகக் கூடிநின்றவர்களுடன் நானும் கலந்து கொள்கிறேன். எதிர்காலத்தலைமுறையினர் தொடர்பாக உரையாடல் இருந்தது.

" என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் நன்றாகப் படிப்பித்துப் போட்டன், அந்தமாதிரிக் கெட்டிக்காரங்கள். முதலாவதவன் கனேடியன் கம்பனியில வேலையாகிஇலண்டனில் இருக்கிறான். இரண்டாவது பெட்டடை இந்த முறை பட்டமெடுத்துவெளியேறுகிறாள் இவளுக்கும் இலண்டனில்தான் கல்யாணம்செய்யவுள்ளோம்."

" இங்க நம்ம புள்ளைகள் கலக்குறாங்கள். படிப்பில பேய்க் கெட்டிக்காரங்கள்! " என்கிறார் இன்னொருவர்.

" மொழி தெரியாதிருந்தும் நம்மவர்கள் நன்றாகப் பிள்ளைகளைவளர்திருக்கிறார்கள். ஆனால் இந்த அடைகளைப்(அரபு நாட்டவர்கள்) பாருங்கள்.... எக்கச் சக்கமாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு வாழத்தெரியாமல் இருக்கிறார்கள்...."

" இங்க பாருங்க, எங்களை யூதருடன் மட்டும்தான் ஒப்பிட முடியும்......!"

" தமிழர்கள் என்றா சும்மாவா? யூதர்களிலும் பார்க்க எத்தைனையோ மடங்குவிண்ணர்கள் தெரியுமா? " என்கிறார் உணர்ச்சி மேலிட்டவராககேட்டுக்கொண்டிந்தவர்.

என் எண்ணக்குளத்தில் அடுத்தடுத்து விழும் கருத்துக் கற்களால் விரியும்அலையில் மெளனமாகி உறைந்துப் போகிறேன்.

அந்தக் காலத்தில் நம் செவிவழியாக நேரே உச்சியிலேற்றப்பட்ட வாசகங்கள்மீளவும் நினைவலையில்....
'மோட்டுச் சிங்களவன்...முழு முட்டாள்கள்! அக்க்க....கா!! (சிரிப்பு)'
'வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தானை நம்பக் கூடாது! சரியோ...?'
'இந்தத் தொப்பி பிரட்டிகள் எப்போதும் இப்படித்தான்!.....'
'கிராமத்தான் கவனம்! இவன்கள் காட்டான்கள்... மொக்குத்தனமாக ஏதாவதுசெய்துவிடுவான்கள். ஆட்களை அறிந்து பழகிக் கொள்ள வேண்டும் தம்பி!'

அந்தக் காலத்தில் பல்கலைக் களகத்தில் நுழைந்தபோது, பல்கலைஆற்றல்களுடன் விளங்கிய இந்த மொக்கன்களும், காட்டான்களும், மோடன்களும், தொப்பிகளும், வயிற்றுவலியிலும் மேலானவர்களும்..... இலாடமிடப்பட்டவர்களாக வளர்க்கப்பட்ட நம்மவர்களும் சங்கமித்த காட்சி......!

சிரிப்பதா? அழுவதா?
சுயம் இருந்தால்தானே சுயபெருமை இருக்கும்.

முப்பது வருடங்கள் கடக்கும் புலம்பெயர் வாழ்வில் நம்மவர் மனப்புலப் பெயர்வுமலர்வுக்கான உழவு நடந்ததா?


- அநாமிகன்
பாரீஸ் யூலை 2009

00000000000

2. சாதிகள் இல்லையடி பாப்பா....!
... (பாரதியின் எண்ணம்) நூற்றாண்டு கழிந்து, கண்டங்கள் தாண்டிய நிலையில்!

அடுத்த தலைமுறையின் வீச்சைக் காணுவதும் வியப்புறுவதுமானபுலம்பெயர்வின் மூன்றாவது தசாப்பத்தில் ஒருநாள்.
இலட்சம் ஈரோக்கள் என்று சொல்வதைத்தாண்டி அரை மில்லியன் ஈரோக்களெனசரளமாக உச்சரிக்கும் மாளிகைகள் நம் அடுத்த தலைமுறையினரால் குடிபுகலத்தொடங்கிவிட்டன. இப்படியாக குடிபுகல் நிகழ்ந்த புதிய வீடு நண்பர்களாலும்உறவுகளாலும் களைகட்டியிருந்தது.

இளைஞர்களாக இருந்த இளம் தம்பதியினருக்கு உறவினரின் வருகையும்அவர்களின் விழி பிதுங்கல்களும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. வாழ்த்தவந்தவர்கள் அவர்களையும் மீறியதாகக் கொட்டிய பொறாமை உணர்வால்கொஞ்சம் தள்ளாடிப்போனார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்தபோது தெரியாதவிடையங்கள் இப்ப தெரியத் தொடங்கிவிட்டிருந்தன. அதுதானே நீத்துப்பூசணியின் மகிமை, நாவூறு படாதிருக்க கட்டப்படும் பொம்மை, வீட்டு வளவின்வாசலில் வைரவர் சூலம் வைக்க வேண்டிய மக்கியத்துவம் எனப் பலவற்றினைஅறி ஆவல்கொண்டதானது பெற்றோரைக்(இரண்டு பெற்றோரையும்) கிளர்ச்சியூட்டியது. கல்யாணம் கட்டி மூன்றாவது பிள்ளை பெறும்போதும் வராதபொறுப்புணர்ச்சி வீடு வாங்கய போதுதான் வந்துள்ளதை எண்ணி அகமகிழ்ந்துஓடி ஆடி ஒத்தாசைகள் புரிந்தனர்.

புதிய வீட்டின் முற்றக் காற்றைச் சுவாசித்தபடி உறவினர்கள் கதைத்துக்கொண்டிருந்தனர்.
இளந்தம்பதினரின் மூத்த மகன் துடிதாட்டமானவன். தகப்பனாகிய இளைஞன்செய்யும் யோகாசனப் பயிற்சிகளையும் சிலம்பு சுற்றலையும் கை்ககுழந்தையாக இருந்தபோதே பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ இச்சிறுவயதிலேயே சிலம்பு சுற்றப் பழகியிருந்தான். பெரியவர்கள் இருந்து கதைத்துக்கொண்டிருந்த முற்றதில் கம்புடன் வந்த இந்தப் பொடியன் கம்பைச் சுற்றத்தொடங்கினான். இவனது தன்னார்வச் செயற்பாடு அனைவரையும் கதைகளைநிற்பாட்டிக் கவர்ந்தது.

வந்தவரில் ஒருவருக்கு இது புதியதாக இருந்திருக்க வேண்டும். "எப்படி இவன்இதைக் கற்றுக் கொண்டான்?" வார்த்தைகளிலேயே ஆச்சரியத்தின் ஓசைநயமிருந்தது.

"யாருமே பழக்கவில்லை. தானாகத்தான் பழகிச் செய்கிறான்" மகிழ்வுடன் இளம்தந்தை.

"அதெப்படி சொல்லிக் கொடுக்காது பழகுவதற்கு..... சிறுபிள்ளைகளிடத்தில்கவனமாக இருக்கவேண்டும்... அதுவும் தடி தண்டுகள் என்றால் அதீத கவனம்தேவை" முன்னவரின் வார்த்தைகளில் அக்கறை கொட்டியது.

"அது பாருங்கோ எனக்கு சிலம்பு சுற்றவிருப்பம். இதை முறைப்படி கற்றனான். நான் சிலம்பு சுற்றுவதைப் பார்த்து இவனும் சுற்றத் தொடங்கிவிட்டான்" என்றார்சிரித்துக் கொண்டு அந்தத் தந்தை.
சிலம்பின் பெருமை பற்றியும் அதனால் ஏற்படும் ஆராக்கியம் பற்றியும் கொஞ்சம்விளக்கினார் இந்த ஈடுபாட்டில் வாழும் இளம் தந்தை.

"ஓம் தம்பி, நானும் ஊரல கேள்விப்பட்டிருந்தனான்தான். இந்தச் சிலம்புபழகியிருந்தால் நல்ல தற்காப்பாகத்தான் இருக்கும். அங்க நம்ம ஊரில சாதிகுறைந்தவர்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்!"

'ஆ ஆ!!...' மனதுக்குள் முனகியவாறு சிலம்பாட்டத்தில் ஆர்வத்துடன் இருந்தஇந்த அடுத்த தலைமுறை இளைஞன் துவண்டுதான் போனான்.
காவல் வைரவரை எந்த இடத்தில் வைப்பதென்ற ஆய்வில் இறங்கினர்மூத்தவர்கள்.

- அமலா
(செர்மனி - யூலை 2009)

Tuesday, 14 July 2009

கதைச் சரம் - 4 பட்டணம் பார்க்கப் போன நாய்!


செவிவழிக் கதை - 2

பட்டணம் பார்க்கப் போன நாய்!


'கெட்டும் பட்டணம் போ' இது நம்மவர் மத்தியில் புளங்கிய ஒரு முதுமொழி. அப்படியிருக்க நாம் வளர்த்த நாய்களுக்கும் இது இல்லாதிருக்குமா? இந்தக் கனவுடன் வாழ்ந்த நம்மூர் நாயின் கதைதான் இது.

முன்னொரு காலத்தில் ஒருநாள். அப்போதுதான் பட்டிதொட்டிக் கிராமங்களுக்குமையங்களாக நகரங்கள் புதுமைப் பொலிவுடன் தோன்றிக் கொண்டிருந்தன. என்றென்றும் திருவிழாக் கோலமாகக் காட்சிதரும் இந்நகரங்கள்கிராமவாசிகளின் புதிய ஒன்றுகூடல் மையங்களாகிக் கொண்டிருந்த காலமது. இது விரிவாகி நகரங்கள், மாநகரங்கள், பிரமாண்ட நகரங்கள் எனவாகவும்உருமாறிக் கொள்ளும் காலமது. அங்கே பல பேரூந்துகள் தரிக்கும் விசாலமானமையங்கள், பெரிய கடைத் தெருக்கள், புகையிரத நிலையங்கள், அழகானசினிமாக் கொட்டைகைகள், நிறைய வாகனங்கள், பெரிய உணவகங்கள், பிரமிக்கவைக்கும் கடடிடங்கள் என இங்கு போய்வருதல் பெரிய விடையமாகவும், அப்படிப் போய்வந்தவர்களின் விபரணங்களைக் கேட்டு கனவுலகில் மிதப்பதுஇதமான அனுபவம்தான். இந்த அனுபவங்களைப் பெற்று நம்முடன் பகிரவரும்வர்ணனையாளராக எல்லோராலும் வந்திட முடியாது..

வழமையாக ஊர் நாய்கள் ஒன்றுகூடும் இடம் அந்தக் கோயில் மடப்பள்ளியின்தெற்கே வெளிப்புறத்தில், தனியாக இருந்த வேப்ப மரத்தின் கீழேதான். இந்தவேப்பரம் பெரிதானதில்லை, ஆனால் வயதானது. நோஞ்சானாகத் தெரியும்இதனால் பெரிதாக நிழல் விழுவதில்லை. இந்த இடத்தில் ஆடு மாடுகள்வரவுதற்கு விரும்புவதில்லை. தனியாக இருந்த இம்மரத்தடியிலதான் கோயில்மிச்சங்கள் கொட்டப்படுவது வழமை. இப்படியான காரணங்களால் நம்ம ஊர்நாய்களுக்கு இந்த இடம் பொருத்தமானதாகவே இருந்தது. கல்லெடுத்தெறியும்கெட்ட மனிதர்களின் நடமாட்ங்களும் இல்லாது சுதந்திரக் காற்றை சுவாசித்தனபோலும். மாலை வேளையில் இவ்விடத்தில் அநேகமாக எல்லோரும்கூடிவிடுவார்கள். இதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு நாய்களும்இதில் அடங்கும். இதை தெருநாய் என்றுதான் அழைப்பார்கள். ஊர் நாய்கள் என்றுசொன்னாலும் அவற்றில் எத்தனை வகைகள்...... ஒல்லியாவை - கொழுத்தவை, உயரமானவை - கட்டையானவை, வயதானவை - இளமையானவை, தனிக்கறுப்பு, தனிச் சிவலை, வெள்ளை, மாநிறம், கலப்பு நிறம், புள்ளி போட்டவைஎனவாக ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் பிரித்தும் பார்க்கலாம். தவிரஇவற்றை வளர்க்கும் மனிதர்களின் விருப்புக்காக வால் வெட்டப்பட்டதாகவும், நலமெடுக்கப்பட்டதாகவும், நொண்டி காலுடையதாகவும் ஆன வகையிலும்வேறுபித்தும் பார்க்க முடியும்.

இக்கூட்டத்தில் நல்ல சிவலை கொழு கொழுவென பார்த்தவுடன் கவரக்கூடியவசியமுடைய இளைய நாய் ஒன்று அதிகம் அலட்டிக் கொள்ளாது இருக்கும். இதனை வளர்ப்பவர் வீட்டில் இதற்கு அதீத செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். முறைப்படி மனிதர்களின் கூற்றைக் கேட்டு நடக்கும் பயிற்சியையும் இதுபெற்றிருந்தது. அக்கிராமத்தில் முறைப்படி கற்றிருந்த நாய் இதுதான்.

மெத்தப் படித்திருப்பதால் இது தன் இன ஆக்களுடன் அதிகம் சேராதிருப்பதாகஅந்தத் தெருநாய்கள் தங்களுக்குள் ஒருநாள் கதைத்துக் கொண்டன. இதைக்கிறுக்கன் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்தனர். இது தன்னோடுஒத்தவர்களுடனும் அதிகம் உறவு வைக்காதது ஊர் பெரிய நாய்களுக்கு மிகுந்தகவலையைக் கொடுத்தது. வெறும் இரண்டு பேருடன் மாத்திரம்தான் இதுகதைக்கும். மற்றவர்களைச் சட்டைசெய்வதே இல்லை.

'அப்படி என்னதான் நினைப்போடு இது இருக்கு?' என்ற கேண்வியால்அரித்தெடுக்கப்பட்ட ஊர் பெரிசு, தனது கேள்வியை சபையில் வைத்துவிட்டது. பலரும் பலவிதமான ஊகங்களைச் சொல்ல அந்த நாயின் நட்பைப் பெற்றிருந்தகறுப்பு வெள்ளை நாய்தான் தான் அறிந்தவற்றைச் சொல்லி ஊகங்களுக்குமுற்றுவைத்தது.
"அதுக்கு இந்த ஊர் பிடிக்க வில்லையாம். தனது எடுப்புக்கும் அறிவுக்கும்ஏற்றதாக இந்த ஊர் இல்லையாம். தான் படடினத்தில்தான் வாழக்கூடிதாகஇருக்கும்" என தன்னிடம் கூறியதாக அந்த நட்பு நாய் கூறியது.

"பட்டினத்தில் வாழ்வதாக இருந்தால் அதற்குரிய லைசென்ஸ் எடுக்கவேண்டுமே?" ஊர் பெரிசு சொல்ல
"அப்படியாக லைசென்சு இல்லாதிருந்தால் 'நாய் பிடிகாரர்கள்' பிடித்துக் கொண்டுபோய் நடுக் கடலில் மூழ்கடித்துவிடுவிவார்களென நானும்கேள்விப்பட்டிருக்கிறேன்!" என ஆமோதித்தது இன்னுமொரு நாய்.
"ஊருக்குள் தனியனாக நடமாடும் சிவலை நாயின் பிரச்சனையைக் களையாதுவிட்டால்... வால் நிமிர்ந்த நாயாகப் போய்விடும். பிறகென்ன நாய் வண்டில்கொண்டுவந்து பிடித்துச் சென்று விடுவார்களென" சிலர் பெளவியமாக எடுத்துச்சொன்னார்கள்.
"என்ன இருந்தாலும் நாய்ப் பஞ்சாயித்துக் கூடி இறுதி முடிவெடுப்பதுதான்நல்லது" என மூத்த நாய் கூறிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்த வெள்ளி மாலையில் பஞ்சாயத்து என முடிவானது. முறைப்படி அந்தஎடுப்பான சிவலைக்கு அழைப்பும் விடப்பட்டது.

மரத்தடியில் ஊர்நாய்களெல்லாம் குழுமியதைக்கண்ட கோயில் ஐயருக்கு 'நாய்சீசன் வந்துட்டாக்கும்!' எனத்தான் எண்ணத் தோன்றியது. இதுக்குள்நுழையக்கூடாதென்ற பட்டறிவால் அவர் பேசாதிருந்துவிட்டார்.

விரிவாகப் பஞ்சாயத்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.
"என்னுடைய மிடுக்குக்கும் திறமைக்கு நான் இந்தக் கிராமத்தில் இருக்கமுடியாது. இங்கு எனக்கேற்ற ஒரு சோடிகூட கிடைக்கமாட்டுது. நான்பட்டணத்தில்தான் வாழ வேண்டும்."
"தம்பி... பட்டணம் நம்ம ஊர் போல வராது. அங்கு யாரையும் மதிக்கவும்மாட்டார்கள், கவனமெடுக்கவும் மாட்டார்கள்!" ஒருவர் உறுதியாகச் சொன்னார்.
"எனக்கு யாரது அரவணைப்பும் தேவையில்லை. என்னால் தனித்தே வாழ்ந்துகாட்ட முடியும்... நான் அங்குதானே நாய் பயிற்சிக் கல்லூரியில படிச்சனான். என்ர திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கு!" சிவலை விடுவதாக இல்லை.
"தம்பி இந்த மனுசர்களுக்கு எப்ப எப்ப என்ன எண்ணம் வரும் என்று சொல்லமுடியாது! பட்டணத்தில இது பயங்கரமான முடிவாகிவிடலாம்..." கால் கொஞ்சம்ஊனமான நாய் சொன்னது.
"என்ர வசீகரத்தால் இந்த மனுசக்கூட்டம் மயங்கிவிடும். நான் இங்கு எப்படிப்பட்டசெல்லமாக இருக்கிறன் என்று தெரியும்தானே!"

'அடடா.... இவ்வளவு நாளும் பேசாதிருந்த இந்தச் சிவலைக்குள் எந்தப் பெரியகனவு இருந்திருக்கு. இந்தக் கனவைக் கலைக்க்கூடாது' எனவாறாக யோசித்துக்கொண்ட ஊர் பெரிய நாய்,
"சரி, உன் விருப்பப்படி பட்டணத்திற்கு அனுப்பி வைக்கிறம். ஆனால்வருடத்திற்கு ஒருமுறையாவது இங்கு வந்து செல்ல வேண்டும்." என்றது.
இதைக் கேட்ட சிவலை மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. ஆனால் சிவலையின்நண்பர்களான இரண்டு நாய்களின் முகத்தில் அவர்களையும் அறியாது கண்ணீர்வழிய ஆரம்பித்துவிட்டன. சிவலையின் உற்றாரான நாய்களுக்கு திக்கென்றுஇருந்திருக்க வேண்டும்.
"இங்கு இளவரசராட்டம் செல்லமாக வளர்ந்திட்டான். அங்குபோய் என்ன செய்யப்போறானோ...." என்றது ஒரு நாய் கவலையுடன்.

"இது பஞ்சாயத்து, யாரையும் பொத்தி வைத்துப் பராமரிக்க முடியாது. நடப்பதெல்லாம் நடக்கட்டும். அவனுடைய விருப்பப்படி விடுவதுதான் நல்லது. நாளைக்கே அவன் பட்டணத்திற்குப் போக ஏற்பாடாகட்டும்" என்றுஎல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளியிட்டது தலைமை நாய்.

சனி அதிகாலை சாமான் கொண்டு போகும் வண்டியில் பிரியா விடைகொடுத்துஅனுப்பின ஊர் நாய்கள்.

கனவுக் கோட்டையில் கால் பதித்த அந்தக் கணத்தை சிவலையால் மறக்கவேமுடியாது. 'ஆகா என்ன அழகு! பெரிய பேரூந்து தரிப்பிடத்தில் ஒரே மாதிரியானபேரூந்துகள், பென்னாம் பெரிய புகையிரத நிலையம், பெரிய அடுக்குமாடிக்கடடிடங்கள், நீணட கடைத் தெருக்கள், சினிமாக் கொட்டகைகள், பத்திப் பத்திஎரியும் முகப்பு மின் விளக்குகளைக் கொண்ட பெரிய அடுக்குமாடி விடுதிகள், பெரிய பெரிய கல்லூரிகள், பல்வேறு பூக்களைத் தரும் செடிகளைக் கொண்டபூங்காக்கள், அகண்ட வீதிகளின் சந்திகளில் சிலைகள், பார்க்குமிடமெல்லாம்பரபரப்பாக அங்கும் இங்குமென நடமாடும் மனிதர்கள்.....' எனவாகப் பார்த்துக்கொண்டு புளங்காகிதமடைந்தவாறு நகர் வலம் வருகிறது சிவலை.

தன்னந்தனியாக இவ்வளவு நேரமும் நகரை வலம் வந்த சிவலைக்குமாலையானதே தெரியவில்லை. இப்பத்தான் கொஞசம் பசியெடுக்கத்தொடங்கியது. 'சரி எங்காவது சென்று சாப்பிடுவம்' என்ற எண்ணத்தோடு அந்தப்பெரிய கோயிலின் கிழக்கில் அமைந்திருந்த அன்னதானமடத்தின் ஓரமாகவந்தது. அங்கே எச்சில் இலைகள் போடப்பட்டிருந்த இடத்தின் கிட்டேபோனபோதுதான் தன்னைப் போன்றவர்களை நகரத்தில் கண்டது. தான்கிராமத்தில் பார்த்தமாதியான தோற்றங்களுடனானதாகவே இவையும் இருந்தன. நகர நாய்கள் என்பதால் முற்போக்கானவையாக இருக்கும் என எண்ணியவாறுசினேகபாவத்துடன் தனது நட்பை வெளியிட்டது. என்ன ஆச்சரியம் 'ம் ம் ம்.... உர்ர்ர்ர்................. உர்......' படுத்திருந்தவாறு தன்னைப் பார்த்து முறைக்கும் அந்தப்பெரிய நாயின் உறுமல் சிவலையைப் பயங்கொள்ள வைத்துவிட்டது.

கிராமத்தில் செல்லப்பிள்ளையாக விரும்பியதெல்லாம் சாப்பிட்டுவந்தசிவலைக்கு இந்த முறைப்பு புதுசாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.. தான்கிராமத்தில் இருந்து இங்கு வந்துள்ளது பற்றியும் உங்களுடன் சேர்ந்து வாழவேஆசைப்பட்டு வந்தது பற்றியும் விளக்கிக் கூறமுற்பட்டது. ஆனால் இதன்கதையை யாரும் கேட்கத் தயாராக இருக்கவில்லை. முறைத்துக்கொண்டிருக்கும் அந்தத் தடியனான நாய் சிவலையை உள்ளே செல்லவும்விடவில்லை. நேரம் செல்லச் செல்ல பசி கொஞ்சம் வாட்டியெடுக்கத்தொடங்கியது. மற்ற நாய்கள் சாப்பிடுவதைப் பார்க்க எச்சில் ஊறி வழிந்துகொண்டிருந்தது.

சரி வருவதுவரட்டுமென உள்ளே செல்ல காலடியெடுத்து வைத்ததுதான் தெரியும்எப்படி வெளியே வந்து விழுந்ததென்றே ஞாபகமில்லாது போயிற்று. அந்தத்தடியன் மாதிரி மூன்று நாய்கள் 'வாவ்....' எனப் பாய்ந்து கடித்து எறிந்துவிட்டன. இங்கு மெம்பர்சிப் இல்லாத எவருமே நுழைய முடியாதாம். அவமானம் தாங்கமுடியாததாக அங்குமிங்கம் பார்த்தது சிவலை. பசியும் விடுவதாக இல்லை.

ஒருவாறு தன்னைத் தேற்றியவாறு ஒரு உணவகத்தை நோக்கிச் சென்றது. இப்பஇருள் கவிந்துவிட்டிருந்ததால் மின்னொளியில் நகரம் பிரகாசமாக இருந்தது. இரு விளக்குகள் மிளிர வாகனங்கள் சர் சர் என ஓடும் காட்சிமயிர்க்கூச்செறிந்தது. முன்னே வெள்ளொளியும் பின்னே சிகப்பொளியுமாகநகர்ந்து கொண்டிருந்தன. 'ஆகா ஆகா..... இந்த மனிதர்கள் ஏதாயினும் ஒன்றைச்செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்'

ஒருவாறு நகரின் மையத்திலமைந்த அந்த பிரபல்யமான உணவகத்தின் எச்சில்இலை போடுமிடத்திற்கு வந்துவிட்டிருந்தது. இங்கேயும் பல நாய்கள்உணவருந்தியவாறு இருந்தன. 'சரி தானும் போய்ச் சாப்பிடுவம்' எனஎண்ணியவாறு ஒரு இலையை நோக்கி ஓடியது.. தன் மேல் முதுகில்இப்படியொரு கடியை இதுவரையில் சிவலை பெற்றிருந்ததே இல்லை. அப்படியொரு கடியால் தூக்கி எறியப்பட்டிருந்து.
"நானும் உங்களைப் போன்றவன்தானே! எனக்குச் சரியாப் பசிக்குது.... " என்றதுகெஞ்சல் குரலில்
"உர்........... உர்........." முறைப்பு பலமாகவும் பல்வேறு குரல்களிலுமாகவெளிவந்தன.
'இங்கு வருவதானால் முதலிலேயே முன்பதிவு செய்ய வேண்டும். தெரியுதா? என்ன காட்டான் மாதிரி நுழைகிறாய்!' என்றது இன்னொரு நாய்.
தனது கதையைச் சொல்லத் தொடங்கியது சிவலை. ஐயோ பாவம் இதன்கதையைக் கேட்க இங்கு யாரும் தயாரில்லை. முதுகிலிருந்து வடிந்த இரத்தம்கால்களால் கீழிறங்குவதைக் கண்டு கலங்கிப் போனது சிவலை. காதிலும்எரிச்சலாக இருந்தது. இதன் பரிதாபத்தைக் கண்டு உரு நாய் கிட்டே வந்தது.
"தம்பிக்கு எந்த ஊர்? வீட்டிலை கோவிச்சுக் கொண்டு வந்தனியா?"
தன் கதையை சிவலை சொல்லத் தொடங்கியது. அரைவாசியைக் கேட்டதும்,
"இங்கபார் தம்பி இங்கு வந்துள்ள எல்லாருக்கும் உன்னைமாதிரிக் கதையிருக்கு. இதெல்லாம் பயன்படாது. பேசாம ஊர் திரும்புற வழியைப் பார்!" என்று சொல்லிச்சென்றுவிட்டது. மெளனித்து போன சிவலைக்கு மின்னொளியில் பிரகாசித்தநகரத்தில் ஏதுமே தெரியவில்லை.

சாமம் கடந்திருந்தது. சரியான இருட்டு ஆனால் எல்லாமே தெரிகின்றனசிவலைக்கு. கோயிலின் தெற்குப்பக்கமாக மெதுவாகப் போகிறது. படுத்திருந்ததெருநாய்களுக்கு ஆச்சரியம். இந்த நேரங்கெட்ட நேரத்தில் நொண்டியவாறுஎமது ஊருக்குள் யார் நுழைவார்?
'வவ்... வவ்...' முதற்குரையல் கட்டியமிட தொடர்ந்தன குரையல்கள்.
மிகவிரைவாகவே நாய்கள் கூடிவிட்டன.
மெதுவாக நடந்துவரும் அந்த இருட்டு நாயை எதிர்கொள்ள ஊர்ப் பெரிசுமுன்செல்கிறது.
வந்த நாய் படுத்தவாறு முனகிறது. கிடடே வந்த ஊர்ப்பெரிசு, "என்ர ராசாசிவலை! என்னடா மோன நடந்தது....." என்று தன்னையும் அறியாதுகலங்கியதுதான் தருணம் அவ்வளவு நாய்களும் விரைந்து செயற்பட்டன.

சிவலைக்கு தண்ணீர், சாப்பாடு கொடுக்கப்பட்டன. கடிபட்ட இடங்கள் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தின. சிவலையைத் தொந்தவு செய்ய வேண்டாம் என்றுசொல்லிச் சென்றது ஊர்ப் பெரிசு.

அடுத்த நாள் நிம்மதியாக பொழுது புலர்ந்தது. தெரு நாய்களுடன் படுத்துறங்கியசிவலை உடம்பை முறித்தவாறு எழுந்தது. ஆங்காங்கே வலிகள் இருந்தாலும்மனதில் ஏதோ நிம்மதியிருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.

"எப்படியப்பா சிவலை! நகரம் எப்படியிருக்கு?" என்றது தெருநாய்களில் ஒன்று.

"நகரம் நல்லாத்தான் இருக்கு. நம்மாக்கள்தான் சரியில்லை!" என்றதுஅமைதியாக சிவலை.


-முகிலன்
(பாரீஸ் 1993)
இக்கதையின் வேறொரு வடிவம் பாரீசில் வெளிவந்த 'ஓசை' இதழில் இடம் பெற்றிருந்தது. )

Friday, 10 July 2009

சரம் - 11 ஈழத்தமிழரும் யூதர்களும்


சரம் - 11 ஈழத்தமிழரும் யூதர்களும்
அன்று! - இன்று!! - நாளை?

1. இன்று

வீடு வாங்குவதற்காக விற்பனை முகவரிடம் சென்றிருந்தோம். பிரான்சில் பெரும்பாலான வெற்றிகரமான முகவர்கள் யூத இனத்தவர்களாலேயே நடாத்தப்படுகின்றன. 'கருமமே கண்ணாயினார்' என்ற வாக்கியத்தை யூத இனத்துடன் அப்படியே பொருத்திவிடலாம். இந்த முகவர்களின் மொழியாடல்களால் ஒரு வித ஈர்ப்புச் சக்தி வெளியேறி கெளவிப் பிடித்துவிடும். மொழி வாயால் துள்ளி விழும் போது அதற்கு இசைவாக சுறுசுறுப்பாக கை பரபரப்பாக பதிவுகளை இடும். கவனம் பிசகவே பிசகாது. சும்மா சொல்லக் கூடாது இதுவும் ஒருவிதக் கலைதான். வாயை மட்டும் வைத்து எப்படியாகவெல்லாம் வாழமுடியும் என்பதற்கு இந்த முகவர்களின் வரவேற்பறைகளே சாட்சி.

பல்கலைக்கழக புகுமுறைப் பரீட்சை முடிவுகள் வெளிவந்திருந்த வேளையாதலால் உரையாடல்களில் படிப்பு பற்றியும் வந்தது.
"எங்களுக்கு(யூதர்) அடுத்தபடியாக சுயமுன்னேற்றத்தில் குறியாக இருப்பவர்கள் நீங்கள்தான்(ஈழத் தமிழர்)" சொன்னது யூதனாகையால் திகைத்துப் போனேன்.
'என்னைக் கவருவதற்காக இப்படியாகச் சொல்கிறாரோ?' கேள்வியுடன் உற்றுப் பார்த்தவாறு,
"எப்படிச் சொல்கிறீர்கள்?"
"ஈழத்தமிழர் பற்றி நான் அறிந்தது மிகக் குறுகிய காலம்தான். செய்யும் வேலையிலும் சுயமுயற்சியிலும் நல்ல ஈடுபாடுடையவர்கள். குறைந்த வருமானங்கள் இருந்தபோதும் முறையாக வங்கிக் கையாளல்களைச் செய்து கடனை மீட்டு இருக்கிறார்கள். இன்று உங்களில் பலர் சொந்த வீடுடையவர்களாகி விட்டனர். வங்கி மட்டத்திலும் உங்களுக்குக் கடன் கொடுப்பதில் தயக்கம் அதிகமாக இருப்பதில்லை. இந்த முறை கல்லூரிப் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் பொறியிலாளராகவும் ஒருவர் மருத்துவத்துக்கும் இந்தக் கிராமத்தில் தெரிவாகியுள்ளார்கள்....."
என்னால் நம்பவே முடியவில்லை. முகவராக இருந்தபடியே சமூகம் தொடர்பான அறிதல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். பணமிடும் தொழில் புரிபவர்களின் சாதுரியமே தனியானவைதான். வட்டியுடன் திரும்பி வரும் உத்தரவாதமில்லாத எதிலும் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். நேரத்தையும் கூட...
துணைவியார் வந்த விடையத்தின் விபரங்களைப் பதிவிடத் தொடங்க, மனம் பலவித எண்ணச் சுழலுக்குள் நுழைகிறது.

புலம் பெயர்ந்த அடுத்த தலைமுறை தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. முதற் தலைமுறையின் கடின உழைப்பும் சிக்கனமும், தனது வம்சமாகுதல் சிறப்பான வாழ்வைப் பெறுதல் அவசியமென்ற கரிசனையால் கவனத்துடன் வளர்ந்த அடுத்த தலைமுறையாயிற்றே. இந்த முறை பல்கலைக் கழக புகுமுகப் பரீட்சையில் நல்ல புள்ளிகளுடன் கணிசமான ஈழத்தமிழ் மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

இங்கெல்லாம் யார் அதீத கவனமெடுத்து பணியாற்றுகிறார்களோ அவர்களுக்குத் தனியான மதிப்பீடு இலகுவாகக் கிடைத்துவிடும். இதில் ஈழத்தமிழர்கள் தடம் பதித்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும். தற்போதைய இளையோரின் வாகனங்கள், வாங்கப்படும் வீடுகள் மற்றும் நடைமுறைகளைக் காணும் போது முதற் தலைமுறையினருக்கு கனவுலக சஞ்சாரம் போலத்தான் இருக்கும். இந்தப் புலம்பெயர்வாழ்வின் இருப்பில் இயல்பாகவே இயைந்து போயுள்ள இந்தத் தலைமுறையினருக்கு இது பெரிய சவாலாக இருக்கவில்லை. ஐரோப்பாவில், குடும்ப மாத வருமானம் சுமார் 6000 ஈரோக்களைப் பெறும் பொருளாதாரத் தளத்தில் மேல் நடுத்தர நிலையை வேகமாக அடைந்த சமூகமாக நம் கண்முன்னால் அடுத்த தலைமுறையினர் காணப்படுகின்றனர்.

"எப்படி உங்களுக்கும் 'நாதொன்(Nathan), வினி(Vignes), யோகம்(Yoham)...... எனப் பல எங்களவர் பெயர்கள் இருக்கின்றன?"
முகவரின் கேள்விக்குப் பதில் தெரியாது என்னைப் பார்க்கிறார் துணைவி.

ஏற்கனவே வாயடைத்துப் போயிருந்த நான் மெல்லியதாக அசட்டுச்சிரிப்பை வெளியிடுகிறேன்.

சந்திரன்
யூலை 2009 - பாரீஸ்

000000000000

2. அன்று

தொண்ணூறுகளின் தொடக்கம், நான் ஐரோப்பா வந்த புதிது, அதுவும் பென்னாம்பெரிய பட்டினமாம் பாரீசில் வந்திருப்பதை நம்பவே முடியவில்லை. எல்லாமே மலைப்பாக இருந்தது. புலம் பெயரும்போது நான் நினைத்தே இருக்கவில்லை இப்படியான பட்டினத்தில் குடியேறுவதாக நான் கனவுகூட கண்டதில்லை.... நிலத்தடி இரயில் (மெட்ரோக்களில்) பயணங்களும் பிரமாண்டமான கட்டிடக் காட்டின் தரிசனங்களும் என்னைப் புள்ளியாக்கின. ஆயினும் பொருடக்களுக்கும் பாலிடும்(ஆண்பால், பெண்பால், பலர் பால்) புதிய மொழியைக் கற்கும் முயற்சியிலிருந்தேன்.

எனக்குக் கிடைத்த முதல் வேலையும் ஆச்சரியமாகத்தான் அமைந்தது. நண்பர் வீட்டுக்கு அழைத்திருந்தார். அவர் ஒரு பிரஞ்சுச் சீமாட்டியிடம் உதவியாளராக இருப்பவர். பாரீசின் மேற்கே செல்வச் செழிப்பான பகுதியில் மூன்று மாடிகளைக் கொண்ட அவரது பங்களா இருந்தது. அகண்ட வரவேற்பறையும் சமையலறையும் முதற் தளத்திலிருந்தது.

வரவேற்பறையிலிருந்த பெரிய மேசையைச் சுற்றியிருந்த ஆறு இருக்கைகளில் ஒன்றில் நான் அமர, எதிரில் எனது நண்பரும் அந்தச் சீமாட்டியும் இருக்க தேனீர் அருந்தியவாறு அளவளாவினோம். அப்போது ஒரு பூனை எனது கால்களைத் தழுவியவாறு அந்த அம்மாவின் மடியில் ஏறி உட்கார்ந்தது. அவர் வாஞ்சையுடன் அதன் முகத்தை வருடிக் கொடுத்தார். பூனையும் அதன் பாசையில் மியா மியாவ்... எனக் குழைந்தவாறு ஏதோ பேசியது.

நண்பர் முகத்தில் நல்ல மகிழ்ச்சி. எங்களுக்கான உரையாடல்களின் மொழிபெயர்ப்பாளனாகவும் இவர்தான் இருந்தார்.
"நீங்கள் பூனைகளுடன் இருந்திருக்கிறீர்களா?" அம்மணி என்னைப் பார்த்துக் கேட்க எனக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
"எனது வீட்டில் பூனைப் பட்டியே இருந்தது. எங்கள் வீட்டில் நாயும் பூனைகளும் நண்பர்களாக இருந்தன. நான் படிக்கும் போது மூக்கில கறுப்பன் என்ற பூனையைச் செல்லப் பிராணியாக வைத்திருந்தவன்" என்றேன்.
அவர் முறுவலித்தார். பல் வேறு உரையாடல்களுடன் சந்திப்பு நிறைவுற கிளம்புகிறேன்.
வாசல் வரை வந்த நண்பன் எனது கைகளைக் குலுக்கி "இந்த வீட்டில் வேலை செய்யும் பணிக்கு நீ தெரிவாகிவிட்டாய்" என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"என்னது?"
"ஆம் இன்றைய சந்திப்பு வேலைக்குப் பொருத்தமானவரா என்பதைத் தெரிவதாகத்தான் இருந்தது"
எனக்கு ஏதுமே புரியவில்லை. "அப்படி என்ன வேலை எனக்கு இங்கிருக்கிறது?" என்கிறேன் அப்பாவித்தனதுடன்.
"பூனைகள் பராமரிப்புதான் உமது வேலை. அதே நேரம் தொடர்ந்து மொழிக் கல்வியைத் தொடரலாம்"
பொருத்தமான தெரிவாக நட்புடன் வழங்கும் இந்த முயற்சியை உடைய உள்ளத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. 'ஆகா எப்பேற்பட்ட காருண்ய உள்ளமுடையவர்.' எனது கை இறுக்கமாகவே அவரது கையைப் பற்றியிருக்க வேண்டும்.
பாரீசில் முதல் வேலை பூனை வளர்ப்பு.
"எப்படி நான் தெரிவானேன்?" ஆவலுடன் கேட்கிறேன்.
"அதுதான் பூனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு விட்டதே!" என்றார் மகிழ்வுடன்.
"என்ன பூனையா?....." என்னால் நம்பவே முடியவில்லை. இப்போது பூனையுடன் அந்தச் சீமாட்டி செல்லமாக உரையாடியது நினைவில் வந்து சென்றது.
"இவர்கள் சும்மா மிருகங்களை வளர்க்க மாட்டார்கள் அவற்றின் உளவியலையும் நன்றாகக் கற்றுக்கொண்டவாறே வளர்க்கிறார்கள். இங்கு இவை தொடர்பான எத்தனை புத்தகங்கள் இருக்குத் தெரியுமா?"
'ஆம்! மிருகங்களும் குழந்தைகளும் எல்லோரிடமும் சேரமாட்டாது' அப்பா சொல்லுவது ஞாபகத்தில் வந்து சென்றது....'

"என்ன இருந்தாலும் உங்கள் இலங்கை வீட்டில் பூனைகள், நாய் இருந்த கதையைத் தவிர்த்திருந்திருக்கலாம்."
"ஏன்?" அப்பாவித்தனமாக
"இவர்கள் பெருமையாக வளர்ப்பதை நாமும் செய்வதாகச் சொல்லலாமா?, கொஞ்சம் அடக்கியே வாழப் பழக வேண்டும்... எல்லாம் போகப் போகத் தெரிந்துவிடும்."
இப்படியாகத் தொடங்கிய வேலையுடன் பாரீஸ் வாழ்வில் ஓடத்தொடங்கினேன்.

கொக்கோ கோலா சாப்பிடக்கூடாது, முட்டைகளில் நடமாடும் கோழி முட்டைகளையே சாப்பிட வேண்டும், சுவையூட்டாத பழரசங்களையும் நன்னீரையும் நன்றாகப் பருகவேண்டுமென பலவாறான அறிவுரைகளை அந்த சீமாட்டியிடமிருந்தே பெற்றுக் கொண்டேன்.
இப்படியாக சென்ற நாட்களில் ஒருநாள்,
நண்பர் உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறார்
"உங்கள் நாட்டில் யூதர்கள் இருக்கிறார்களா?" சீமாட்டியின் கேள்வி என்னை நோக்கியதாக இருந்தது
"இலங்கையில் யூதர்களா? நான் அறிந்த வரையில் அப்படியாக யாரும் இருந்ததில்லை" என்கிறேன் உறுதியாக
"இல்லை. ஒருவர் இருக்கிறார்" என்றார் சிரித்துக் கொண்டு
"அதெப்படி ஒருவர் மட்டும்?" நம்பவே முடியாதவனாக
"ஆம் ஒருவர் இருக்கிறார்" அம்மாவின் உறுதியான பதில் என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
"யாரவர்?"
"இவர்தான்" என்றார் சிரித்தவாறு எனது நண்பனைக் காட்டி.....
நண்பனும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்.
நானும் சிரிக்கிறேன்.
ஒருபோதும் எதிர்பார்க்காத அந்தக் காட்சி என்றென்றும் எனைவிட்டு அகலாது.

- அநாமிகன்
யூலை 2009 - பாரீஸ்

Saturday, 4 July 2009

சரம் 10 - கோவிந்தசாமியும் - அரோகராவும்




சரம் 10 -

கோவிந்தசாமியும் - அரோகராவும்

1. 'அரோகரா...'

நான் புலமபெயர்ந்து வந்திருந்த 90களின் ஆரம்பக்காலம். துணைவியின வருகையும் அமையவே பிரான்சின் மேற்கே ஐரோப்பிய கடைசி நிலமுடிவு எல்லை நகரான பிறஸ்டில் குடியேறிய காலம். அட்லாண்டிக் சமுத்திரத்தால் வருடப்படும் கரையோர நகரம் அது. பெரிய துறைமுகமுடையதும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கப்பல் விழாக் காணும் நகரம் அது. இவ்விழாவில் உலகெங்கிலுமிருந்து பழையதான கப்பல்கள் காட்சிக்கு வரும். கப்பலால் உலகை வென்றதையும் நிலை செழித்ததையும் நினைவு கூருவதாக எண்ணிக்கொள்வேன். நீண்ட பகலைக் கொண்ட கோடையை திறந்த வெளி வெயிலில் கொண்டாடிக் களிப்புறுவதில் ஐரோப்பியப் பாரம்பரிய விருப்புடையவர்களுக்கு நிகர் யாருமில்லை.

இங்கு அதிகம் தமிழர்கள் கிடையாது. அவர்களும் சற்று தொலைவில்தான் இருப்பார்கள். இது பல்தேசிய இனங்களுடன் இணைந்து வாழும் அரிய வாய்ப்பைக் கொடுத்தது. இங்கெல்லாம் கொண்டாட்டமென்றால் சம்பையின்தான் ஓசை எழுப்பி தொடக்கி வைக்கும். (அங்கு தேங்காய் உடைப்பதுபோல்).

இப்படியான நிகழ்வொன்றில் ஒருநாள்.....
நிரப்பப்பட்ட சம்பயின் கிளாசுகளுடன் ஒன்று கூடிய நண்பர்கள், "சிங..; சிங்.. " என்று மட்டும் பிரஞ்சில் (ஆங்கிலத்தில் "சியர்ஸ்..." என்பது போல்) சொல்லாமல் தங்கள் தங்கள் மொழியால் சொல்வதாக நிகழ்வு அமைந்துவிட்டது. எல்லோரும் தத்தம் மொழிகளால்; சொல்லி எனது முறைக்கானது... அதாவது தமிழில் சொல்லியாக வேண்டும்.

என்னசெய்யலாம் என நிகழ்வு தொடங்கியபோதிருந்தே பதட்டத்துடன் யோசித்தவாறிருந்த எனக்கு சட்டெனக் கிடைத்த சொல்..... "அரோகரா" என்றேன். எல்லோரும் அன்றிலிருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று என்னைப் போன்றவர்கள்; இவ்வேளையில் பயன்படுத்தும் சொல் இதுதான்.

'ஆகா என்ன பொருத்தமான இடத்தித்தில் இச்சொல் இணைந்திருக்கிறது. இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே!......" சுமார் 15 வருடங்களின் நினைவு மீள்கையில் முகத்தில் லேசான முறுவல்.

- முகிலன்
(பாரீஸ் யூலை 2009)


2. 'கோவிந்தசாமி'

இதுவொன்றும் சாமி கிடையாது. எண்பதுகளில் தமிழ்நாட்டில் இருந்தபோது அறிமுகமான மறைச்சொல் இது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எமது நெருங்கிய ஓவிய நண்பர் அவர். அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கிடைத்தால் கொஞ்சம் மது அருந்துவதற்கு விருப்பம். ஆனால் வீட்டில் கடுமையான கெடுபிடி.

ஒருநாள் இவர் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்ட துணிச்சலால் ஆசுவாசமாக வீடு திரும்பிவிட்டிருந்தார். வழமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் செய்யவில்லை. கணவன்மாரின் நடத்தைகளை உற்று உணரும் வல்லமை பொருந்திய பெண்களிடமிருந்து இலகுவில் தப்பிவிட முடியுமா? ஐயா வசமாக மாட்டிவிட்டார். அந்தக் கிறுகிறுப்பிலும் இலக்கியச்சுவை ததும்ப அவரது மூளை தடாலடியாச் செயற்பட்டிருக்க வேண்டும்.
"என்ன இது பழக்கமில்லாத புது நடத்தைகளாக இருக்கு" கோவத்துடன் இல்லத்துணைவி.
"பெரிசா சத்தம் போடாத புள்ள..... குழந்தைகள் முழிச்சுக்கப் போது..." பவ்வியமாக இவ்வகை வேளையில் பணிதல் பெரு வெற்றியைத்தரும். ஆனால் அம்மா விடுவிதாகத் தெரியவில்லை. மனைவியின் முறைப்பைக் கண்டும் காணாதவராக,
"இன்று கோவிந்தசாமியைப் பார்த்துட்டு வாறன் என்று சொன்னல்லவா?" என்றவாறு கொஞ்சம் குரலை உயர்த்தி கடைக்கண்ணால் நோட்டமிட்டார்.
"கோவிந்தசாமியா? இதுஎன்ன புதுச்சாமியா இருக்கு" மனைவியின் குரலில் பழைய இறுமில்லை.
"எத்தனை தடவை சொல்லுறது.... அதுதான் கலெட்டர் ஆபிசில...."
"கலெக்கடர் ஆபிசிலயா......... அப்படி எனக்குத் தெரியாதே..." குரலிலே தொய்வு பளீரிட்டிருக்க வேண்டும். கலைஞர் துடிப்பாகி விட்டார்.
"உனக்கு எத்தனைவாட்டிதான் சொலலறது. கோவிந்தசாமி கலெக்ட்டர் ஆபிசில எந்தப் பெரிய அதிகாரி. அவர் கூப்பிட்டு மேசையில உட்கார்ந்து பரிமாறினா மறுக்கமுடியுமா என்ன?" அம்மாவின் வாய் அடங்கிப்போனதால் ஐயா மேலும்,
"ஆபிசு வேலையின்னா அப்பிடி இப்பிடி இருக்கத்தானே செய்யும். நானென்ன நாளாந்தமா செய்யிறன் அந்தப்பெரிய ஆபிசரே அழைக்கும்போது....."

ஆகா 'கோவிந்தசாமி" சூத்திரம் நன்றாக வேலை செய்திருந்தது.. ஐயாவும் நிம்மதியாக வீடு திரும்புவது பழகிவிட்டிருந்தது. இப்படியாக நடைமுறையான ஒருநாள் முன்னிரவில் ஆட்டோவிலிந்து இறங்கி ஆசுவாசமாக நுழைகிறார் கலைஞர், "அம்மா... அப்பா கோவிந்தசாமியைப் பார்த்துவிட்டு வருகிறார்" உரத்த குரலில் சிறிய மகள்.
வந்திருந்த உசார்நிலையிலும் அதிர்ந்து போனார் கலைஞர்.

தனது கதையை மனம்விட்டுக்கூறி கலகலக்க வைத்த அந்த இரவு விருந்தின் நினைவுடன் கலைஞரின் தயைவால் கிடைத்த "கோவிந்தசாமியை" நாம் இப்போதும் பயன்படுத்தும் சொல்லாக்கியுள்ளோம்.

மூன்றாண்டு ஆண்டுகளுக்கு முன் பாரீஸ் வந்திருந்த கலைஞர் எம்முடன் "கோவிந்தசாமி"யும் சந்தித்து தன் சொல்லாடலின் உலகப்பயணத்தைக் கண்டு மகிழ்வுற்றார்.

- முகிலன்
(பாரீஸ் யூலை 2009)

பின் குறிப்பு:
எண்பதுகளின் ஆரம்பத்தில் சென்னையில் எம்மோடு நண்பனாய் வாழ்ந்த நேரு, அழைத்த சொல் "கையேந்தி பவன்" கையில் போதிய காசில்லாத வேளையில் பெயரிடாத தெருக்கடைகளுக்குச் செல்ல புதியவர்கள் முன் அழகாகச் சொன்ன பெயர்தான் 'கையேந்தி பவன்'. இன்று பரவலான பாவனைக்கு வந்துவிட்டது. இந்த நேரு இப்போது எங்கிருக்கிறாரோ... சிதறுண்டு சின்னாபின்னமாகிய ஈழத்தமிழரின் சிதறல்கள் கொஞ்சநஞ்சமல்ல...........