Showing posts with label பந்தல்-2. Show all posts
Showing posts with label பந்தல்-2. Show all posts

Wednesday, 1 July 2009

கதைச் சரம் - 3 காத்திரமான கடவுளின் இலை!


காத்திரமான கடவுளின் இலை!

செவி வழிக் கதைகள் - 1

நாம் சின்ன வயது முதல் பல்வேறு கதைசொல்லிகளால் கவரப்பட்டவர்கள். இக் கதைசொல்லிகளாக எம்மது மூத்த தலைமுறையினர், பெற்றோர், ஆசிரியர்கள், சுற்றத்தார், நண்பர்கள் எனப் பலவாறாகவும் காணப்பட்டனர். இவற்றில் பல கதைகள் இராமாயண, மகாபாரதக் கிளைக் கதைகளாகவும் இருந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் அறிமுகமாகிப் பரவலான எழுத்துலகின் பரந்துபட்ட வாசிப்புக் கலாச்சாரம் கதைசொல்லலைப் பதிவுகளாக்கித்தரத்தொடங்கியது. இது தற்போதுள்ள தொழில் நுட்பஙகளுடன் பாட்டி கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், இன்றைய கார்டூன் கதைகள் வரையில் கதைசொல்லிகளின் வெளிப்பாடும் மனிதனுடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

ஆனாலும் சில கதைசொல்லிகளின் கதைகள் நாடோடிக் கதைகளாகவும் வரையறுக்க முடியாது, கிராமக் கதைகளென்றும் கூறமுடியாது ஆனால் நகைச்சுவையுடன் குறுங்கதைகளாக கவனங்கொள்ள வைக்கும். ஆனால் இதைப் படைத்தவர் யாரென்பதை அறியவே முடியாது. செவி வழியாக அறிந்துள்ள இவ்வகைக் கதைகளைப் பதிய தோரணம் முனைகிறது.

00000000000000000000

ஈழத்தின் இன்றைய அவல நிலை, சிறிய வயதில் நான் கேட்ட இக்கதையை நினைவில் கொண்டு வந்தது.

வில்பத்துக் காட்டுக்குள் வந்திருந்து இருகுழுக்களிலிருந்து புதியதான இருவர்பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு காட்டைத்தாண்டிப் போகத் தெரியவில்லை. இரவில் மரங்களில் தூங்குதும் பகலில் சூரியன் உதிர்க்கும் திசை நோக்கிப்பயணமாவதுமாகி நண்பராகிவிட்டிருந்தனர். இதிலென்ன வேடிக்கையென்றால்இதில் ஒருவர் பெளத்தர் (சிங்களவர்) மற்றவர் சைவர்(தமிழர்).

வழக்கமான காலைப் பொழுதொன்றின்போது காலைக் கடனைக் கழிக்கச்சென்றிருந்த சைவர் ஒருமரத்தின் இலைகளால் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து பதட்டமடைந்த பெளத்தர்,
"ஐயையோ எங்கள் கடவுளை கேவலப்படுத்தி விட்டீரே!....." எனவேதனைப்பட்டார். இதனால் திகைத்துப்போன சைவர் தான் பயன்படுத்தியஇலையை உற்றுப் பார்த்தார். அது அரசமர இலையாக இருந்தது.
உடனே தன்னைச் சுதாகரித்தவராக,
"ஆ இது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. என்னை மன்னியுங்கள்! நான் இனிஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டேன்" என்றார். தொடர்ந்து "நண்பா, உங்கள்கடவுள் இலையில் சக்தியில்லைப் போலிருக்கு!" என்றார் தயங்கியவாறு.

"அதெப்படிச் சொல்கிறீர்?" ஆச்சரியத்துடன் பெளத்தர்.

"எங்களது கடவுளின் இலையைத் தொட்டிருந்தாலே அரிச்செடுத்திருக்கும், அதனால்தான் சொன்னேன்" என்றார் அப்பாவித்தனமான முகபாவத்தோடுசைவர்.

ஆச்சரியத்தால் உந்தப்பட்ட பெளத்தர் "அப்படியானால் காட்டும் உங்களதுகடவுளின் இலையை நானும் சோதித்துப் பார்க்கிறேன்" என்றார்.

"வேண்டாம் நண்பா, ரொம்பவும் சிரமப்படுத்திவிடும்" தயக்கமடைவதுபோல்பாசாங்கு செய்கிறார் சைவர். ஆனாலும் பெளத்தர் விடுவதாக இல்லை.

"சரி சரி வாரும்..." என அழைத்துச் செல்கிறார். காட்டில் காணப்பட்டகாஞ்சோண்டி'ச் செடியினை வணங்கி இதுதான் எனது கடவுள் மரம் என்றார் சைவர். பென்னாம் பெரிய மரமொன்றைக் காணும் ஆவலுடன் வந்திருந்தபெளத்தருக்கு இச் செடியைக் கண்டதும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

"பு... பூ... இதுதானா உங்களது கடவுளின் மரம்! இல்லை செடி! உங்களைப் பார்க்கபாவமாக இருக்கு... நண்பா என்றவாறு அக்.... க்கக்கா... வெடிச்சிரிப்புடன் விழுந்துவிழுந்து எழுந்தார்.

ஆனால் சைவரோ முகத்தை இறுக்கமாக வைத்தவாறு ப்கதி சிரத்தையை வெளிப்படுத்திக் கொண்டு, "நண்பா அதிகம் சிரிக்க வேண்டாம்! பிறகுசிரமப்படுவீர்....." என்கிறார்.

இந்த அணுகுமுறையால் உந்தப்பட்ட பெளத்தர் படாரென பாய்ந்து காஞ்சோண்டி இலைப் பிடுங்கி தனது அடியில் உரஞ்சிவிட்டார்.
'

(இக்கட்டத்தில் கதை சொல்லி மெளனியாகி கேட்போரை உற்றுப் பார்ப்பது வழக்கம்)
வெடிச் சிரிப்பு பரவலாகி அவ்விடத்தில் கூடி நின்ற அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும். வயிறுகுலுங்கச் சிரித்து கண்ணீர் வரத் துடைதவாறு கதைசொல்லியைத் திரும்பிப் பார்த்தால் அவர் எங்களைப் பார்த்து புன்முறுவலோடுஇரசித்துக் கொண்டிருப்பார்.

குறிப்பு:
காஞ்சோண்டி என்பது நம் நாட்டில் காணப்படும் ஒரு செடி. இதன் இலை உடம்பில் பட்டால் சுணைத்து அரிப்பெடுக்கும். சுமார் ஒரு நாள் மட்டும் இந்த அரிப்பு இருக்கும். நல்லெண்ணை தடவினால் கொஞ்சம் இதமாகும்.

- அநாமிகன் (யூலை 2009)

Saturday, 27 June 2009

கதைச் சரம் - 2 கி.பி. 2103ல் நான்



கி.பி. 2103ல் நான்
அறிவியல் புனை கதை: எதிர்வுகூறல் கதைகள்

பொ. கனகசபாபதி


நடைபெறும் காலம் : 2103
நடைபெறுமிடம் : கற்பனையூர்

கி.பி. 2103 புரட்டாதி மாதம் 4ம் தேதி அதிகாலை விசாலமான ஒரு வீதி வழியாகநான் நடந்து செல்கிறேன். 'அட பாவி! உனக்கு இப்பவே (அதாவது 2007ல்) 72 வயது. இன்னும் நூறு வருசங்கள் இருக்க வெண்டுமென்ற ஆசையா பாவி!' என்கிறீர்களா?
'ஏனையா அவசரப்படுகிறீர்கள்?'
'யாரையா சொன்னான் நான் உயிரோடு இருப்பதாக?'
நான் செத்துச் சாம்பலாகி எழுபத்தைந்து வருடங்களாகிவிட்டன. அங்கே நான்போனதும், சித்திரகுப்பதன் எழுதி வைத்த குற்றப்ப பட்டியலை வாசிக்கும்படிஇமயதர்மராஜன் வாசிக்க உத்தரவுபோட்டார்.
"இந்தத் தடியன் செய்த எல்லாக் குற்றங்களிலும் பாரிய குற்றம் ஒன்று உள்ளதுதர்மராஜாவே!" என்ற முன்னுரையுடன் ஆரம்பித்தான் சித்திரகுப்பதன். காலன்ஒரு உறுமல் விட்டான். எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டது.
"இவன் குறைந்தது ஐநூறு டொக்கடரகளையாவது உருவாக்கியிருக்கிறான்!"
"இந்தப் பாவிகளால் நமது கிங்கர்களால் தமது கடமைகளை ஒழுங்காகச்செய்யமுடியவில்லை. நாம் தயாரித்த பட்டியல்படி புரோகவாசிகளை இந்கேகொண்டுவர முடியவில்லை. அங்கோ பாவாத்துமாக்களின் தொலை்லைஅதிகரித்துக் காண்டுபோகிறது. புமியின் பாரம் தாங்க முடியவில்லை எனச்சொல்லி பூமாதேவி குறைகூறுகிறார். நமது கிங்கர்கள் கையூட்டு ஏதாயினும்வாங்கிக் காண்டு தமது கடைமையில் கவனம் செலுத்தாமல்தட்டிக்கழித்தார்களோ என்கிற சந்தேகம் கொள்வதாக ஒரு நினைவூட்டல்கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார் மகாராஜா".

'முன்னர் மார்க்கண்டேயன் சம்பந்தமாக நீங்கள் உதைபட்டு மயங்கிக்கிடந்தபோதும் இப்படித்தான் பூமாதேவி கஷ்டப்பட்டார் காலதேவனே!' என்றார்சித்திரகுப்தன். உதைபட்டது, இமயதர்மராஜன் மானப்பிரச்சனை. நான்இமயலோகப் பிரஜை என்பதற்காகச் சொல்லவி்ல்லை, சிந்தித்துப்பார்த்தீர்களென்றால் உங்களுக்கும் புரியும். இந்த விடையத்தில் சிவபெருமான்செய்தது படா அடாவடித்தனம். ஒருவன் தன் கடமையைச் செய்யும்போதுபாராட்ட வேண்டும். அட சரி, பாராட்டத்தான் மனம் வராவிட்டால் இப்படியாசெய்வது? மார்க்கண்டேயன் கட்டிப்பிடித்துக்கொண்டால் இயமனை மயக்கம்அடையக் காலால் உதைப்பதா? மிருகண்டு முனிவருக்கு பதினாறுவருடங்களுக்கு முன்னரேயே இது தெரிந்த விசயம்தானே. எப்போ அப்பீல்மனுசெய்து தீர்ப்பை மாற்றி எழுதியிருக்கலாம் அல்லவா? பாவம்இயமதரமராஜன் வாயில்லாப் பூச்சி உதைபட்டான். என்றோ ஒருநாள்அவனுக்கும் காலம் வரும் அதுவரை பொறு மனமே பொறு.'

இயமன் சித்திரகுப்தனைப் பார்த்து சிவாஜி கட்டப்பொம்மனில் விட்டது போன்றஒரு உறுமலுடன், "இச்சமூகத் துரோகிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? நீயே சொல்லு" என்றார் தர்மராஜா.

இங்கே என்ன எங்கேயும்.... மடப்பள்ளிதானே பிரச்சனைக்குரிய இடம். அங்கேஇருநூறு வருடங்கள் மேற்பார்வை செய்யவேண்டும்" என்று கட்டளைபிறப்பித்தார் சித்திரகுப்தன். 'அப்படியே ஆகட்டும்' என்றார் தருமராஜன்.

'இதனால் ஒரு இலாபம் வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் போகுது. அதோடுமாத்திரமில்ல அங்கே மண்ணுலகத்தில் என்னோடு அரட்டை அடித்த பலநண்பர்களும் இங்கே இருப்பதால் அரட்டைக் கச்சேரிகளுக்கும் பஞ்சமில்லை. பொழுதும் உல்லாசமாகப் போகுது. ஒன்றும் பெரிய அளவில் வித்தியாசமாகஇருப்பதாகத் தெரியவில்லை. அதனாலென்ன நூறு வருடங்கள் முடிந்ததும்தண்டனையை மீள்பார்வை செய்வார்கள். பரோல் கொடுப்பதுபற்றி அப்போதுமுடிவு எடுப்பார்கள். நமக்கு அது கிடைக்காமலும் போனாலும் பரவாயில்லை... ஆனால் இடமாற்றம் வராவிட்டால் அதிர்ஷ்டம். நான் வணங்கும் எருமைவாகனனிடம் வேண்டுவதெல்லாம் இதுவே.'

உங்கு கோயில் குளமெனத் திரிந்த ஒரு சிலர் இங்கே மேலுலகவாசிகள். அதாவதுசொர்க்கவாசிகள். வருடத்தில் ஒரு நாள் இரண்டு உலகவாசிகளுக்கிடையிலானஒன்றுகூடல் நடைபெறுவதுண்டு. அன்றுதான் அவர்களைக் காணமுடியும். பரிதாபம்! பரிதாபம்!! தாடி மீசை, சடாமுடி சகிதம் "சிவ சிவா" எனஉருத்திராட்சைக் கொட்டையை உருட்டியபடி இருந்தனர். பார்க்கவேபரிதாபகரமாக இருந்தது. 'சிவ சத்தியமாக ஐயையோ தப்பு! இயம சத்தியமாகச்சொல்கிறேன், ஒரு நாள் கூட அங்கே போயிருக்கச் சம்மதிக்கமாட்டேன்.'
'நீதானே நிறைய வாசிப்பாய், அப்போ பத்திரிகைகள், வானொலிகள்.... என்கிறீர்களா?'
'எந்த உலகத்தில் ஐயா நீங்கள் இருக்கிறீர்கள்? ஓ நீங்கள் மண்ணுலகவாசிகள்அல்லவோ, உங்கள் கேள்வி உங்களுக்கே அசட்டுத்தனமாகத்தெரியவில்லையா?'

இங்கே மடப்பள்ளியில் எனது 75 வருட சேவைப் பாராட்டி பெரு மனசு வைத்துமூன்று நாள் விடுப்புத் தந்தார்கள். எனது பிறந்தகத்தைப் பார்க்க ஆசையாகஇருக்கிறதெனக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ உத்தரவு பெற்று வந்ததால்தான்இங்கே நிற்கிறேன்.
'இங்கு நிற்கிறேன் எனச் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! நான்அருவமான நரகலோகவாசி. என்னை ஒருவராலும் பார்க்க முடியாது. ஆனால்நான் எல்லாவற்றையும் பார்ப்பேன்! சரி.. சரி... பழையபடி ஆரம்பத்துக்கேவருவோம்.'

விசாலமான வீதி வழியாக நடந்து சென்றேன் எனக் கூறினேன் அல்லவா? உயர்ந்த மரங்கள் நடுவே பெரிய அடுக்ககளைக் கொண்ட மாளிகை உன்றுகம்பீரமாக நின்றது. மாளிகையின் முன்னே "ஈண் இல்லம்" என்ற பெயர்ப் பலகைஇருந்தது. அதன் கீழே 'இங்கு பிள்ளைகள் பெற்றுக் கொடுக்கப்படும்' என்றஇன்னொரு அட்டையும் காணப்பட்டது. வாயிலில் இருவர் மனித உடலும் நாய்முகமுமாகக் காவல் புரிந்து கொண்டிருந்தனர். அப்போ இவர்கள்தான்காவல்க்கார வர்க்கமா? மின்னியல் படலை திறந்த போது நான் மெல்ல நழுவிஉள்ளே சென்றுவிட்டேன்.

பெரிய மாளிகை. கர்ப்பம் தரித்த பல பெண்களஇ மாடு போன்ற தலையுடன் நின்றுபல்வேறு வகையான அப்பியாசங்களைச் செய்துகொண்டிருந்தனர். இவர்களெல்லோருமே மகப்பேறுக்கு அனுசரணையாக இருக்கும் விதமாகஅப்பியாசங்களைச் செய்து கொண்டிருந்தனர். அப்படியாக விறாந்தைப் பக்கமாகச்சென்று அலுவலக அறையை அடைந்தேன். அதன் வெளியே பலர் சோடியாகவும், தனித்தனியேயும் ஆசனங்களில் அமர்ந்திருந்தார்கள். இருப்பதற்கு முன்னர்இங்கிருந்த பொறியிலிருந்து தமக்கான எண்குறித்த சிட்டையைப் பெற்றுஅவ்வெண்ணின் அழைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

முதல் அழைக்கப்பட்டதும் இரு இளவயதினர் எழுந்தனர். மிக்க நெருக்கமாகஒருவரை ஒருவர் தழுவியபடி சென்றதோடில்லாமல் இருந்த இடத்திலிருந்துஅலுவலகத்தின் உள்ளே புகுவதற்கு முன்னர் மூன்று முறையாகிலும் முத்தம்கொடுத்திருப்பார்கள். அவ்வளவு அந்நியோன்னியமான தம்பதிகளாக இருந்தனர். நெருங்கிப் ஆவல் மிகுதியால் அவர்கள் முகங்களை உற்றுப் பார்க்கிறேன் 'ஆ! ஆ!! ' இருவரும் ஆண்கள். எனவே என்ன நடக்கப் பொகிறது என்ற ஆவலிலேநானும் தொடர்ந்தேன். உள்ளே சென்றார்கள். அலுவலர் இவர்களை முகமன் கூறிவரவேற்றதும் வந்த விசயம் பற்றி விசாரித்தார். அவர்களில் கணவன் போன்றவர்தமக்கு ஒரு குழந்தை வேணும் எனக் கூறினார். உடனே அலுவலர் கணினியின்பொத்தானை அமுக்க, பெரிதாக திரையிலே காட்சி விரிகிறது.

உங்கள் உடற்கலம் ஒன்றினை எடுத்து முளைவகையாக்கல்(cloning) முலம்விருத்தியுறச் செய்தல். இக் குழந்தை எப்பொதும் ஆண் குழந்தையாகவேபிறக்கும்.

ஒரு பெண்ணின் முட்டை ஒன்றினை விலைக்கு வாங்கி அதனை உங்கள்ஒருவரின் விந்துவால் கருக்கட்ட வைத்து விருத்தியுற வைத்தல். இக் குழந்தைஆணாக வருமா, பெண்ணாக வருமா எனச் சொல்ல முடியாது.

ஒரு பெண் குழந்தை வேண்டுமாயின் பெண் ஒருவரிடம் முட்டை ஒன்றினைவிலைக்கு வாங்கி அம்முட்டையைக் கன்னிப் பிறப்பின்(parthenogenisis) மூலம்விருத்தியுற வைக்கவேண்டும்.

விருத்தி தூண்டப்பட்ட இவ் முளையங்கள் மேற்கொண்டு விருத்தியைநடத்துவதாயின் அவை பதிக்கப்படல் வேண்டும். அதனை உங்கள் உடற் குழியின்உள்ளே பதித்து குறிப்பிட்ட காலத்தில் அறுவை சிகிச்சை மூலம் வெளியேஎடுக்கலாம்.

ஈன்றாள்(surrogate) ஒருத்தியுடன் ஒப்பந்தம் செய்து அவளிடத்தில் முளையவிருத்திக்கான பொறுப்பினை ஒப்படைக்கலாம்.

அலுவலர் தமது ஈண் இல்லம் இத்தகைய தொண்டாற்றுவதற்காகவேஉருவாக்கப்பட்டதாகவும் இதற்காகவே மாதச் சம்பளத்தில் ஈன்றாள் பெண்களைவைத்திருப்பதாகவும், வைத்தியர்களுடைய கண்காணிப்பில் அவர்களதுஒவ்வொரு செயலும் நடைபெறும் எனவும் கூறினார். அவர்கள்தான்உடற்பயிற்சிக்கூடத்தில் அப்பியாசங்கள் செய்து கொண்டிருந்த மாட்டுப்பெண்கள் என அறிந்துகொண்டேன். அதற்கான உத்தேச செலவினையும் எடுத்துக்கூறினார்.

அப்போது நேரம் காலை 10:00 மணியாயிருந்தது. ஆலயமணியின் ஓசை போன்றுமூன்று முறை கேட்டது. உட்காந்திருந்தவர்களெல்லோரும் பயபக்தியோடுஎழுந்தார்கள். தமது தலைகளை வெண்ணிறக் கைக்குட்டையால் போர்த்தியபடிஒரே திசையில் அமைதியாக நடந்து சென்றார்கள். நானும் பின் தொடர்ந்தேன். அவர்கள் யாபேரும் விசாலமான ஆலயத்தின் உள்ளே சென்றார்கள். கறுத்தஅங்கி அணிந்த ஒருவரே பூஜ்ஜியர். சிறிது நேரத்தில் அவர் பாடத் தொடங்கியதும்எல்லோரும் சேர்ந்து பாடினார்கள்.

உலகத்து நாயகனே - எங்கள் நொஸ்றாடேமஸ்!
உன்பாதம் சரண்புகுந்தோம் - எங்கள் நொஸ்றாடேமஸ்!
கலகத் தரக்கர் பலர் - எங்கள் நொஸ்றாடேமஸ்!
கருத்தினிலே புகுந்துவிட்டார் - எங்கள் நொஸ்றாடேமஸ்!
நிலை எங்கும் காணவில்லை - எங்கள் நொஸ்றாடேமஸ்!
நின்பாதம் சரண் புகுந்தோம் - எங்கள் நொஸ்றாடேமஸ்!
பிணிகளுக்கு மாற்றுண்டு - எங்கள் நொஸ்றாடேமஸ்!
பேதமைக்கு மாற்றில்லை - எங்கள் நொஸ்றாடேமஸ்!
அணிகளுக்கோ எல்லையில்லை - எங்கள் நொஸ்றாடேமஸ்!
அடைக்கலமிங் குனைப் புகுந்தோம் - எங்கள் நொஸ்றாடேமஸ்!

எல்லோரும் பக்திச் சிரத்தையுடன் பாடியபின்னர் மீண்டும் தமது அலுவல்களைநோக்கிச் சென்றனர். அனாவசியமாகக் கூட்டம் கூட்டமாக நின்று பெசி நேரத்தைவீணாக்கவில்லை. எனக்கும் சிறிது சிறிதாக விஷயம் புரியத் தொடங்கியது.
இதுவொரு புதிய மதம். கிறுக்கன் நொஸ்றாடேமஸ் என அன்று ஏளனம்செய்யப்பட்டவர் இன்று வணக்கத்துக்குரிய தெய்வமாகிவிட்டார். விரையில்மனிதன் நீரில் வாழும் மனித இனத்தை(Aqua- humanis) உருவாக்குவான் எனநொஸ்றாடேமஸ் முன்னரே ஆரூடம் கூறியிருந்தார்.

இதோ என் கண்முன்னேயே அதற்கான முதல் படிகளாய் மாட்டுத்தலையுடன்மனிதர்களையும்(Bovi- humanis), நாய்த் தலையுடன்(Canis- humanis) கூடியமனிதர்களையும் காண்கிறேன். நொஸ்றாடேமஸ் வணக்கத்துக்குரியவர்தான்! மறுப்பதற்கில்லை.

ஆலயத்தைவிட்டு வெளியேறிய நான் சிந்தித்தபடியே கால்போன போக்கில்நடந்து செல்கிறேன். உனக்கு முன்னால் வேகமாக வந்த மோட்டார் வண்டி ஒன்றுஒரு பெரிய வியாபார மையத்தின் முன்னர் சடுதியாக நின்றதால் நிமிர்ந்துபார்க்கிறேன். "ஈசன் மனித உதிரிப்பாகங்கள் விற்பனை மையம்" என்றபெயர்ப்பலகை காணப்படுகிறது. பல நாடுகளிலே 2050 ஆண்டு வாக்கிலேமருத்துவ முளைவகையாக்கல்(clinical cloning) சட்ட ரீதியாகஅனுமதிக்கப்பட்டமையால் முளைவிரத்தி நடாத்தப்பட்டுஉதிரிப்பாகங்களுக்காகவே முளையங்கள் வளர்க்கப்படுகின்றன. உந்தஉடறுப்பும் தேவைக்கேற்ற வகையில் வியாபார மையங்களில்பெறக்கூடியதாகவுள்ளது.

மோட்டார் வண்டியில் வந்தவர் விற்பனை மையத்தின உள்ளே சென்று " 'O'வகைஇடப்பக்க சிறு நீரகம் ஒன்று தரமுடியுமா?" எனச் சிப்பந்தியிடம் கேட்கிறார்.
"'O'வகை எடுப்பது கொஞ்சம் சிரமம். அப்படிக் கிடைத்தாலும் இதற்கு இரட்டிப்புவிலை கொடுக்கவேண்டும்." என்கிறார் சிப்பந்தி.
வந்தவர் கொஞ்சம் பசையுள்ளவர் போலும்! அவரது மோட்டார் வண்டியின்பொலிவில் தெரிவதை சிப்பந்தி அவதானித்திருப்பார்.
"விலையைப் பற்றி கவலையில்லை. நல்லதாக ஒன்று தரமுடியுமா?" என்கிறார்வந்தவர். அச்சமயம் அவருடன் ஒட்டி நின்ற அவரது மனைவி அவர் காதினுள்ஏதோ கடிந்தார். நேராகவும் நேர்த்தியாகவும் அகலமாகவம் இருந்த வீதியின்எதிர்ப்புறத்தை தன் சுட்டுவிரலால் சுட்டிக் கிசுகிசுத்தார். திரும்பிப் பார்க்கிறேன். எதிர்புறமிருந்த குளோனிங் கொப்பி சென்றர்(Cloning copy center) விற்பனைமையத்தில் ' சேல்' பதாகைகள் மிளிர்கின்றன. ' சேல் நடைமெறுவதையும்பார்த்துவிட்டு வாங்கலாம்தானே என்று சொல்லியிருப்பார் போலும்!'
ஆச்சரியம் தாங்கமாட்டாது அவர்களைப் பின் தொடர்கிறேன். வீதியன் கீழாகஅமைந்த சுரங்கப் பாதை வழியாக எதிர்புறத்தில் மேலே ஏறவும் எனதுசெல்லிடபேசி(Cell phone) "கிணிங்.. கிணிங்" என்கிறது.(இதன் ஓசை எனக்குமட்டும்தான் கேட்கும்) எடுத்தால், அங்கே மடப்பள்ளியல் பெரிய ரகளையாம். எனது விடுப்பு ரத்தாகி விட்டதாம். உடனடியாக வேலையில் ஆஜராகுமாறு பணித்த இமயதர்மராஜனின் உத்தரவு செய்திப் பதிவாக வந்திருந்தது.
இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

அவசரமாகத் திரும்புகிறேன். பிறிதொரு முறை சந்திப்போம்!
"

நன்றி: திறவுகோல் -(வெற்றிமணி மற்றும் சேமமடு வெளியீடு)
000000

பிற்குறிப்பு:
எமது தமிழ் இலக்கியத்தில், அறிவியல் புனைவுகள் மற்றும் எதிர்காலக் எதிர்வுப்புனைவுகள் என்பன விருத்தியுறவேண்டும். உலகெங்கும் மொழிகடந்து - கண்டங்கடந்து விரவி வாழும் வாய்ப்புக் கிடைத்துள்ள ஈழத் தமிழனரின்எதிர்காலச் சந்ததியினரால் புதிய இலக்கியங்கள் வெளிப்படுமென்றுநம்புபவர்களில் நானும் ஒருவன். இவற்றுக்கு தொடக்கத் தூண்டுதலாக அதிபரின்முயற்சிகள் அமையட்டும்!!





நொஸ்றாடேமஸ் (Nostradamus):


நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஒரு யோகி. அவர் முன்கூட்டியே உலகில் நடைபெறப்போகின்ற பல நிகழ்வுகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். அயற்றில் பல நடந்துவிட்டன. இன்னும் பல நடக்குமென பலரும் நம்புகிறார்கள். மனித இனத்தை உயிரியல் இரீதியாக ஹோமோ சாப்பியன்ஸ் (Homo sapiens)என அழைப்பர். எல்லோரும் ஒத்த உருவ அமைப்புடையவர் என்பதே இதன் அர்த்தம். உதட்டின் தடிப்பில், சருமத்தின் நிறத்தில், மூக்கின் பருமனில் சிறு சிறு வேறுபாடிருக்கலாம், ஆனால் அடிப்படை அமைப்பு ஒரே வகையானதே. இருபத்தியொராம் நூற்றண்டிலே மனித இனம் பல கிளையினங்களைக் கொண்டதாக வந்துவிடும் என அவர் எதிர்வு சொல்லியிருக்கிறார். எப்படி மனிதன் தன் சுய முயற்சியால் வெவ்வேறு வகை நாய், பூனை இனங்களை உருவாக்கினானோ அதேபோன்று மனித இனமும் பல இனங்களைக் கொண்டதாக மாறிவிடும் என்றிருக்கிறார் நொஸ்றாடேமஸ். நானூறு வருங்களுக்கு முன்னர் கிறுக்கன் என்ற சமூகம் இன்று இவரை மேதை எனவும் யோகி எனவும் புகழ்கிறது. நானூறு வருடங்களுக்கு முன்னர் பிறப்புரிமைப் பொறியில் (Genetical Engineering) பற்றி எவன் சிந்தித்திருக்கிறான்?
இப்போ விவசாயத்துறையிலே தாவர விருத்தி (Plant breeding), மிருக வளர்ப்பு (Animal husbandary) எல்லாவற்றிலும் பிறப்புரிமைப் பொறியியல் கையாளப்படுகிறது. அடுத்த கட்டம் மனித சமூகத்திலும் பிறப்புரிமைப் பொறியியல் கையாளாப்படும். ஆனால் நொஸ்றாடேமஸ் ஒரு ஆச்சரியமான தவலையும் தருகிறார். மனிதத் தலையடன் மீன்போன்ற உடலமைப்போடு செதில்களால் மூடப்பட்ட உடலமைப்புடையநொஸ்றாடேமஸ் நீரிலே வாழும் தன்மையுடைய மனித இனம் (Aqua- Humans)ஒன்று தோன்றும் என்றிருக்கிறார்

- 'திறவுகோல்' பொ. கனகசபாபதி  சேமமடு பதிப்பகம் (பக்ககங்கள் 46- 47)

Wednesday, 24 June 2009

சரம் - 9 அரோகரா! அரோ....கரா....!!

அரோகரா! அரோ....கரா....!! ‘அரோகரா மதம்’

இப்போது அதிகம் பேசாத உறவாடல்களாக நட்புகளுடான சந்திப்புகள் நடப்பது சோகம்தான். கேட்டால் 'என்னத்தைச் பேச' என்ற பதிலே வரும். புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியும் எதிர்காலம் தொடர்பான கவலையும் முதற் தலைமுறையினர் மத்தியில் பேச்சற்ற சூழலை ஏற்படுத்தியிருப்பது யதார்த்தமானதுதான். ஆனாலும் சமூக அசைவியக்கம் தடங்கலில்லாது தொடர்கிறது. திட்டமிடப்பட்டிருந்தபடியே அடுத்த தலைமுறையினரின் திருமணங்கள், பிறந்தநாள், புது வீடு குடிபுகல் என கொண்டாட்டச் சந்திப்புகள் நடைபெறுகின்றன.

இப்படியான நிகழ்வொன்றின்போது மிகவேண்டப்பட்ட உற்றாருடனான சந்திப்பில் நிகழ்ந்த உரையாடல் பெரிதும் ஈர்த்தது. கதை கேட்பதில் அபரித விருப்புக் கொண்ட சமூகத்திற்கு ஏற்ப தற்போது ஊகங்களாலேயே கதைகள் பல நடமாடத் தொடங்கியாயிற்று. எங்குமே 'அவர் வருவாரா மாட்டாரா?' இதுதான் பேசு பொருள். இதற்குமாறாக அன்றைய சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களது உரையாடல் அமைந்திருந்தது.

"இன்றைய இக்கட்டான சூழலுக்கு ஈழத்தமிழரின் பெரும்பான்மையினரால் தழுவப்பட்டுள்ள மதமும் முக்கிய காரணம். இதை விவாதத்துக்காக நான் முன்மொழிகிறேன்" என்றார் ஒருவர். சுவாரிசத்தால் கவரப்பட்டவனாகி புலன்களை உசார்படுத்தினேன்.

"அப்படிச்சொல்ல முடியாது. மதத்தில் எப்படி குற்றம் சாட்ட முடியும்?" பதட்டத்துடன் வேறொருவர்.

"சண்டைகளில் தோற்ற மதம் செயலிழக்க வேண்டும்தானே!" இன்னொருவர்.
"மக்களின் செயற்பாடுகளில் மதச் சிந்தனையின் வழிகாட்டுதல் இருக்கவே செய்யும். வெற்று நம்பிக்கைகளுடனான முயற்சிகளில் ஈடுபட வைக்கும். இதனால்தான் சொல்கிறேன் இந்த முடக்கத்திற்கு மதமும் முக்கிய காரணம்." என்று தனது கருத்தை வலியுறுத்துகிறார் முதலாவது கருத்தைச் சொன்னவர்.
இதில் கலந்கொள்ளாது தவிர்க்கவோ என்னவோ இருவர் சற்று கலக்கத்துடன் ஏதுமே பேசாது வெளியேறினர்.

"இப்படி விட்டாத்திதனமாக் குற்றம் சாட்டக்கூடாது. மதவுணர்வு தனிப்பட்டது மென்மையானது." இரண்டாதவர்.

"இங்கு பாருங்கோ நமது சிந்தனைகளில் தாக்கம் புரிந்த அனைத்தையும் சுயவிமர்சனம் செய்தால்தான் நாம் உருப்படியான முடிவுகளுக்கு வரலாம்." முதலாவதவர் விட்டுக்கொடுப்பதாகத் தெரியவில்லை.

"சரி... இதுக்குள் எப்படி மதத்தை ஒப்பிடப் போகிறீர்கள்? சொல்லுங்கோ... " என்கிறார் இதனால் உந்தப்பட்ட புதியவர்.

" நம்மவர்கள் இஸ்லாமியராக இருந்திருந்தால்... எமக்கு இப்படியாக உலக அரங்கில் நிர்க்கதி ஏற்பட்டிருக்குமா? சரி நம்மவர்கள் பெரும்பான்மையானோர் கத்தோலிக்கர் எனவாக இருந்திருந்தால்... உலக கத்தோலிக்கத் திருச்சபை சும்மாவிட்டிருக்குமா?" முதலாவது கருத்தாளரின் வார்த்தைகள் முகங்களில் பட்டுத் தெறிக்கிறது. சில முகங்கள் தலை சாய்க்கின்றன.

"ஓம் இந்த இந்து மதம் ஏதும் செய்யக் கூடியதான நிறுவனக் கட்டமைப்பாக இல்லையே?" என்றார் மதத்தை குற்றம் சாட்டியதை ஜிரணிக்கமுடியாதவராக புதியவர்.
" அப்படித் தப்பிக்க முடியாது நண்பரே, 21ம் நூற்றாண்டில் நிறுவன வடிமில்லாது எப்படியாக இம்மதம் செயற்படுகிறது? எதற்காகச் செயற்படுகிறது?" கேள்வி சூடாகவே விழுகிறது.

"நிறுவனமயமாகாத கட்டமைப்பில்லாத இந்த மதத்தை எப்படி 'இந்து மதம்' என அழைக்கிறார்கள்?" முதலாவதவர் பொழிகிறார். சொல்வதறியாது திகைக்கிறது நட்பு வட்டம்.

"இதனால்தான் இந்த மதத்தை 'அரோகரா மதம்' என்கிறேன். போடுங்கோ எல்லோரும் 'அரோகரா!...' அரோகரா!!"

வாயடைத்தது கூட்டம். நானும்தான்!

வீடு திரும்பி கட்டிலில் சரிந்தபின்பும் இந்த உரையாடல் மனதில் வட்டமிட்ட வண்ணமே இருந்தது. 

'அரோகரா' அப்படியென்றால் என்ன? இச்சொல்லுடன் வேறு சில சொற்களும் உலாவத் தொடங்குகின்றன.
 'அரோகரா' 'கோவிந்தா' 'சுவாகா' 'அல்லலோயா'....
மானிட வாழ்வில் மனத்தின் வெறும் நம்பிக்கைகள் படாய்ப்படுத்துகின்றனதான். 

மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? 

-அருந்தா
பாரீஸ் யூன் 2009

Saturday, 20 June 2009

சலனச் சரம் -1 'பசங்க'



சிறார் உலகில் சஞ்சரிக்கும் தமிழ்ச் சினிமா

'பசங்க'

புலம்பெயர்ந்தபின்பும் அடுத்த தலைமுறையால், தமிழ் உறவாடும் மொழியாகத் தொடர நம்மவர்களின் குறுந்திரை நெடுந்திரை கணிசமான பங்கை வகிக்கிறது என்பது மறுக்கப்படமுடியாதது. நூற்றாண்டு கண்டு புதுமைப் பொலிவுறும் சகல தொழில்நுட்பங்களையும் உள்வாங்கிய கலைப்படைப்பாக மிளிரும் மானிடச் சலனத்தெறிப்பாகிய இக்கலை தலைமுறைகள் தாண்டியும், மொழிகள் கடந்தும் வசீகர ஆளுமை செலுத்துவது தனிச் சிறப்புதான்.
இதனால் சொல்லப்படும் தகவல் மிக இலகுவாக எல்லைகள் தாண்டிப் பரவலாகிவிடுகின்றன. இன்று வீடுகள் தோறும் குறுந்திரையிடல் அரங்கமென்பது வந்துவிட்டன. உயர் அடையHD) தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளும் வந்துவிட்டன. இதற்கேற்ற உயர் அடையக் காண்பிகளும்(HDMI) வந்துவிட்டன. ஆனால் தமிழில் 'சிவாஜி' மட்டும்தான் இவ்வகைத் தொழில் நுட்பத்தில் வெளிவந்துள்ள உயர் அடைய குடுந்தட்டுக்களாக(HDMI disque) வெளிவந்துள்ளது. அடுத்த தலைமுறையினரின் கவனிப்புக்குள் செல்வதென்றால் இவ்வகைத் தொழில்நுட்ப மேம்பாடுகள் நிச்சயமாகக் கவனங்கொள்ளப்படல் அவசியம். ஒரு படைப்பை முழுமையாக இரசனை கொள்வதற்கு அப்படைப்பிற்கு அண்மையில் செல்வதற்கு இத் தொழில் நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன.
உலக நுகர்வுச் சந்தை திறந்துள்ள இக்காலகட்டத்தில் மிகவும் பழைய தரத்திலான படப்பிரதிகளை வாங்கி படம் பார்க்கும் போது எம்முடன் கூடவே வாழும் அடுத்தலை முறையினரின் பரிதாபகரமான இரங்கல் பார்வையுடனேயே படைப்புகளுக்குள் நுழைய நேரிடுகிறது. தரமான படத்தகடுகளைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது நுகர்விற்கு நம் தமிழர்கள் பின்தங்கி இருப்பதாகவே நான் அறுதியிடுகிறேன்.
இதனை நாம் வாழும் பல்லின மக்களுடன் நேர்மையாக ஒப்பிட்டே உணர்ந்து கொள்கிறேன். இங்கு நகைச்சுவைத் தொடராக மாதாந்த வெளியீடைச் செய்யும் ஆபிரிக்க படக் குறுந்தட்டு ஒன்று 10 ஈரோக்களுக்கு விற்கப்படுகிறது. குறைந்த விலையில் அதிகத் தட்டுகள் வாங்கும் போக்கு அதாவது நிறையக் கதைகள் இருப்பது (ஒரு தட்டில் மூன்று படம் அல்லது 10 ஈரோக்களுக்கு மூன்று குறுந்தகடுப் படங்கள்) பெரிதும் கவனங் கொள்ளப்படுகிறது. இதன் தாக்கத்தால்தானோ என்னமோ ஒரு விடுமுறை நாளில் நம்மவர் தொலைக்காட்சிகள் மூன்று நான்கு படங்களைப் போட்டி போட்டுக் காண்பிக்கின்றன. அதிக அளவில் குறுந்திரைத் தொடர்கள் வெளிவருகின்றன. இது வாழ்வோட்டத்திற்கான நாளாந்த இரசனைப் போக்கை சீரற்றதாக்கிவிடுகிறது. அறிவைப் பரவலாக்கி தேடலை விருத்தி செய்ய வேண்டிய தொழிநுட்பத்தையுடைய தொலைக்காட்சிகள் விபரணப்படங்கள், இயற்கை புவிசார் மானிடவியல் வளர்ச்சி, பல தரப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியல்(இதில் சிறார் உலகும் அடங்கும்), விஞ்ஞானபூர்வமான எதிர்காலங்கள் பற்றிய எதிர்வுகூறல் எனப் பலவாறான விடையங்களில் கால்பதியப்படாதவாறு பயணிக்கின்றன. ஆனால் எதிர்காலத்தில் தமிழ் உறவாடும் மொழியாகத் திகழ வேண்டுமாயின் இவ்வகை படைப்புகளும் வெளிப்படத்துகைகளும் தமிழில் நிகழ்த்தப்படல் அவசியம்.

இன்று தமிழ்ச்சினிமா என்று தலைநிமிர்ந்து சொல்லத் தக்கதான வெளியீடுகள் பட்டியலிடப்படுகின்றன. இதன் ஒரு படலமாக வேரும் விழுதுமாக பாலுமகேந்திரா - பாலா - அமீர் - சசிக்குமார் - பாண்டிராஜ் எனவான பாரம்பரியம் இந்தத் தமிழ்பேசும் சினிமா உலகில் முறையாகத் தடம் பதித்துள்ளது. இதில் கடைக்குட்டியாக இடம்பெற்றவரின் முதற்படமாக அமைந்த 'பசங்க' படத்தை அண்மையில் பார்த்ததும் கிறங்கிப்போனவர்களில் நானுமொருவனானேன். பாரீஸில் மலின விலையில் விற்கப்பட்ட படக் குறுந்தகடு(சுருதிலயம் கம்பனி 4 ஈரோக்கள்) மூலம் வீட்டிலிருந்த அனைவரும் ஆசுவாசமாகப் பார்த்த படமாகி குடும்பத்தவரை ஒருங்கிணைத்தது. இலகுவில் தமிழ்ப்படம் பார்க்க மாட்டாத எனது இளைய மகன் அழுதழுது பார்த்ததைக் கண்டு எனது துணைவி கலங்கிப்போனார்.

நல்லதைக் கண்டால் முதலில் பாராட்டவேண்டும். அதனால் மகிழ்வுறும் படைப்பாளியின் மகிழ்வில் நாமும் கலக்கலாம். பதிவர்களில் நான் தேடியபோது அனேமாக பதிவுகள் படக் கதையை சுருக்கமாக குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. கதை கேட்கும் சமூகத்தின் அவாவுக்கமைய அனைவரும் சமைந்தே போயுள்ளோம். கமெராவினால் கதை சொல்லல் என்பதும் படத்தொகுப்பு உத்தி மற்றும் பாத்திரங்களுடனான வெளிப்படுத்துகை, இசைக்கோர்வை, வெளிப்புறக்காட்சிகள், அழகியல் என சினிமாவை காணுறும் போது இரசனையை இலவாக வார்த்தைகளில் தட்டச்சிட முடியாது. சினிமா கட்புல செவிப்புல வழியால் மனதை வருடும் ஓர் அழகு மொழி.

புலம்பெயர்ந்து வாழும் முதற்தலைமுறையினராகிய நாம், 'பசங்க' படத்தைக் காணும்போது அதன் கதை படமாக்கிய வெளிப்புறக் காட்சிகளின் அழகியல் தாக்கத்துக்குள்ளாகிறோம். நாம் தவழ்ந்த ஊரின் அழ்மன நினைவுச் சபலங்கள் மீள்பாக்கமடைகின்றன. ஒரு பாட்டுக்காக உலகமெல்லாம் கமராவோடு சுழலும் இந்தச் சினிமாக் கூட்டத்தில் ஒரு ஊரை மட்டும் கதைக்களமாக்கி அதைக் குவியமிடும் கமெராக் காட்சிப்படுத்தலால் அசர வைப்பதென்பது எவ்வளவு பெரிய செயல். பசங்க நடமாடும் களமாக அமைந்த பள்ளி, குடும்பம், தெருக்கள், மைதானம் , ஊர், சாதாரணமாகச் சந்திக்கும் உற்றார் எனவான கதைக்களத்தில் 'பசங்க' தமிழில் பதியப்படும் முக்கிய படமாகிவிட்டது. மொத்தத்தில் 'பசங்க' திரைக் குழுமத்திற்கும் எமது பாராட்டுகள்.

இப்படத்தைத் தயாரித்த இயக்குனர் சசிகுமார் தனது படைப்பாள நேர்மையை மெளனமாக வெளிப்படுத்தியுள்ளார். கோடம்பாக்கச் சினிமாவில் தனக்கென இடம் பிடிப்பதென்பது சாதாரணமானதொன்றல்ல. அப்படி இடம் கிடைத்தால் அந்தப்பெயரைத் தக்கவைத்துக் கொண்டு பல்வேறு படையல்களை அள்ளிக் கொட்டுவதென்பதே வழமை. இந்தப் பெயராளர்களின் பேரின் பதாகைகளின் பின்னால் எத்னையோ இணை இயக்குனர்களின் படைப்புகள் படையலாகிப்போயிருக்கும். ஆனால் புதிய இயக்குனருக்கு வழிவிட்டு கைகொடுத்து ஊக்கமளித்த இயக்குனர் சசிகுமார் தரமான தயாரிப்பாளர் சசிக்குமாராகி படைப்புலக நேர்மையை கட்டியங்கூறியுள்ளார்.இதற்காகப் பாராட்டியேயாகவேண்டும்.

இப்படத்திற்கான மரியாதையாக தோரணம் பதிவிடும் முதற்பதிவாகிறது.
இதனை வித்தியாசமாகச் சொல்ல வேண்டுமென்பதற்காக பல் வேறு பதிவர்களின் தோட்டங்களில் பறித்த கருத்துப் பூக்களின் தொகுப்பாக்கி மஞ்சரியாக தோரணம் படைப்பாளிக்கு வழங்குகிறது. பறித்த கருத்துப் பூக்களுக்காக பதிவுத் தோட்டக்காரர்களுக்கு நட்புடன் நன்றி தெரிவிக்கிறது. இப்பதிவிடலூடாக மானசீகமாக தொடர்பு கொள்ளும் 'பசங்க' படக்குழுமத்துடன் இந்த மஞ்சரியைக் கையளித்து நட்புடன் கைகுலுக்கிறது தோரணம்.

புதிய சுற்றில் மண்மணம் கமிழ தமிழ்த் திரை உலகை உலகத்தரத்தில் நிமிரச் செய்யும் முயற்சியில் தொடரட்டும் தங்கள் முயற்சி!!
- நட்புடன் முகிலன்



0
இலவச டிவி தரும் அரசாங்கம் இப்படத்துக்கு இலவச டிக்கெட் தந்தாவது இப்படத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் வரிவிலக்கு அளிக்கவாவது பரிசீலிக்கலாம். குடும்பம் குடும்பமாக பார்த்து மக்கள் ஆராதிக்க வேண்டிய படமிது.

தமிழின் சிறந்த படங்களின் பட்டியலில் ’பசங்க’ளுக்கு கட்டாயம் ஒரு இடமுண்டு.
-யுவகிருஷ்ணா
http://www.luckylookonline.com/2009/05/blog-post_09.html

0
சரி படம் எப்படி இருந்தது னு தான கேக்கறீங்க?? படம் கலக்கல்.. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதாம இருப்பது அந்த படத்துக்கு நான் செய்யும் மரியாதை.. இயக்குனர் புதுவரவாம்.. நல்வரவு..
மொத்தத்தில் பசங்க – புள்ள குட்டியோட பாருங்க.
-Suttapalam's Weblog
http://suttapalam.wordpress.com/2009/05/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

0
என் அப்பா, அம்மா கூட நாங்க சின்ன வயசுல இருக்கும் போது இப்படி நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. அன்புக்கரசு அழுத மாதிரி நான் கூட அழுதிருக்கேன். அப்பறம் நான் பெருசாக பெருசாக சண்டை ஓரளவு குறைந்தது. இப்பக்கூட எப்பவாது சண்டைப் போட்டா ”ஆமாம் புது மணத் தம்பதிகள். சண்டை போடறீங்க. நிறுத்துங்க” அப்படினு நான் கிண்டல் பண்றதுல ரெண்டு பேரும் சண்டையை நிறுத்திடுவாங்க.
சும்மா கடைசியா ஒரு பஞ்ச் : “பசங்க” - பசங்களுக்கான படமல்ல. பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக
-வெட்டிப்பயல்
http://www.vettipayal.com/2009/06/blog-post_14.html

0
குழந்தைகளை வைத்து நம்மை போன்ற பெரியவர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை.
புதிய ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு அருமை.. கேமரா பசங்களோடே ஓடுகிறது, நடக்கிறது, நிற்கிறது, மூச்சிரைக்கிறைது, சைக்கிள் ஓட்டுகிறது ஒரே அட்டகாசம் செய்திருக்கிறார். பலே ப்ரேம்குமார்.
-கேபிள் சங்கர்
http://cablesankar.blogspot.com/2009/05/blog-post.html

0
"அக்க புக்கா அமரா வள்ளி பாம்பே போனா சிக்கா" .. "ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு ..." போன்ற சிறு வயது மந்திரங்களோடு துவங்குகிறது படம். ஒவ்வொரு காட்சியும் "அட நல்லாருக்கே"...என்றவாறே நகர்கிறது ...
எல்லா தலைமுறை ரசிகர்களும் ரசித்து சிரிக்க வைக்கும் படம். சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது. சிறுவர் உலகத்திற்கும், பெரியவர்கள் உலகத்திற்குமான புரிந்துகொள்ளப் படாத இடைவெளி இந்தப் படத்தில் வெளிச்சத்திற்கு வருகிறது.
”நாம சொல்றதை புரிஞ்சுக்குறதுக்கும், ஏத்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும், அந்த மனசு உங்ககிட்ட இருக்கு”
”ஒருத்தருக்கு ஒண்ணுக்கு வந்தா ஏண்டா எல்லாத்துக்கும் ஒண்ணுக்கு வந்துருது?”
"நம்ம குழந்தைகளுக்கு நாமதான சார் ரோல் மாடல்" ..
ஒரு முறை கூட நெளியாமல் பார்க்க முடிந்த இன்னொரு நல்ல சினிமா.
- புதிய இயக்குனர் எம்.பாண்டியராஜன் மற்றும் அவரது குழுவினருக்கு முதலில் பாராட்டுகளை தெரிவிப்போம்.-
-சிந்தனிடமிருந்து வலைவிடு தூது
http://www.sindhan.info/2009/06/blog-post.html

0
சுள்ளான்களின் சூடுபறக்கும் ஈகோ யுத்தமே ‘பசங்க’. இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் முதலில் ஒரு பூங்கொத்து. வெற்றிக்கான போரட்டமாக மட்டுமே இல்லாமல், மரியாதையான வெற்றிக்குப் போராடியிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவிற்கு நல்வரவு. குழந்தைகள் பட்டாளத்தை கட்டி மேய்த்ததோடு கௌரவமான வெற்றியையும் தேடிக்கொண்டிருக்கிறார். கதையின் களமும், பாத்திரங்களின் தேர்வும் இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது. வாழைப்பழத்தில் ஊசி இறங்குவது போல, பெற்றவர்கள் பிள்ளைகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று ‘பசங்க’ளை வைத்து மறைமுக பாடம் நடத்திய உத்திக்கு பெரிய சபாஷ்.
-தெனாலி
http://www.thenaali.com/thenaali.aspx?A=126


0
அவன் பிச்சைக்காரனா இருக்கானேன்னு நீ பாக்குற!

அவன் திருடனாகிடக் கூடாதுன்னு நான் பாக்குறேன்!

இது தப்பா???

இவ்வளவு சீரியசான டயலாக்கை கையாண்டிருந்த விதம்தான் ‘பசங்க’ படத்தை பார்க்க தூண்டியது முதலில். அதிலும் டயலாக்கை கதாநாயகி சொன்னவுடன் பிண்ணனியில் ‘தெண்பாண்டிச் சீமையிலே’ பாட்டுக்கான பிண்ணனி இசை வேண்டுமென்றே போடும் போது ஏற்படுத்துகின்ற சிரிப்பு கொஞ்ச நஞ்சமல்ல!
முதலில் சசிக்குமாரைத்தான் பாராட்ட வேண்டும். சுப்பிரமணியபுரம் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், அடுத்து உடனே படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதும், அதுவும் முழுக்க முழுக்க சிறுவர்களை மட்டும் மையமாகக் கொண்டு, எந்த ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் ஒரு படத்தை தயாரித்த தைரியத்தையும் பாராட்டவேண்டும். படத்தின் இயக்குநர் முதல் நடிகர்கள் வரை யாரையும் கேள்விப்பட்டது கூட கிடையாது! எனக்கு இந்த படத்தில் தெரிந்த இரண்டே இரண்டு பெயர்கள் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தயாரிப்பாளர் சசிக்குமார் மட்டுமே.
என்னளவில் இது மிகச் சிறந்த மட்டுமின்றி, வித்தியாசமான படமாகவும் பார்க்கிறேன்,காரணம், காதலை மெயின் ட்ராக்கில் விட்டு, அதைச்சுற்றி, நகைச்சுவையையும், ஆக்‌ஷனையும், மசாலாவையும் பின்னும் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு மத்தியில் சிறுவர்களை பிரதானப்படுத்தியும், காதலை சைட் ட்ராக்கில் மட்டும் ஓடவிட்டு, அதையே நகைச்சுவையாகவும் கையாண்டிருக்கும் விதமும், மிடில் கிளாஸ் தகப்பனின் பாசத்தை வெளிப்பட்டிருக்கும் விதமும், எல்லவற்றிற்கும் மேலாக படத்தில் எல்லாருமே நடித்திருப்பதும் இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம்.
-தேடல்
http://nareshin.wordpress.com/2009/05/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/

0
பசங்க படம் என்று மேம்போக்காக செயல்படாமல் துடைத்து வைத்தது போன்ற பளிச் காட்சியமைப்புகள் (ஜூலை, அக்டோபர், ஏப்ரல்... என வெயில், மழைக்காலம் முதலிய பருவகாலங்களையும், அதன் நிறச்சேர்க்கையும்) , அற்புதமான கேமிரா கோணங்கள், ஸ்லோ மோஷன் காட்சிகள், நறுக்கான படத்தொகுப்பு, ஜேம்ஸ் வசந்தனின் இசை மற்றும் ரொம்ப நாளுக்கு கழித்து பாலமுரளிகிருஷ்ணாவை பாடவைத்திருப்பது என்று டெக்னிக்கலாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறனர் இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழு.
ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் வந்துள்ள உண்மையான பசங்க படம்.. தமிழில் ராமநாராயனன் இயக்கத்தில் பாம்பு, மாடு, யானைகளோடு ஷாம்லி நடித்த படங்களை தவிர்த்துவிட்டு கடைசியாக எப்பொழுது ஒரு mainstream குழந்தைகள் படம் வந்தது என்று யோசித்தால் நினைவுக்கு வருவது மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ தான். அதில் கூட குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய நடவடிக்கைளோடு கொஞ்சம் கூடுதலாகவே கடுப்படித்து இருந்தனர். சமீபத்தில் எந்த வித முகாந்திரமும் அல்லது பரபரப்பும் இல்லாமல் இறங்கிய ‘பசங்க’ தமிழின் நல்ல பசங்க திரைப்படத்தில் ஒன்றாக காலத்துக்கும் பெயர் பெற்று நிற்கும்.
படம் முழுக்க எளிமையும், நல்ல செய்திகளும் பரவிக்கிடக்கின்றன. ஆனால் அவை ‘போதனை’ என்கிற ரீதியில் சொல்லப்படாமல், வெகு இயல்பாக அந்த செய்திகள் படம் பார்ப்பவர்களை எட்டியிருப்பது அழகு. ஜீவாவின் பெற்றோர்களின் சண்டை எப்படி குழந்தைகளின் படிப்பை, பள்ளி வாழ்க்கையை பாதிக்கிறது என்பதையும், குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்கள் கெட்ட பழக்க பழக்கங்களை விடவேண்டும் என்பதை ஆசிரியர் சிகரட்டை விடுவது என அழகான செய்திகள் நம் மனதை தொடுகிறது.
‘பசங்க’ படம் எல்லாரும் பார்ப்பது தமிழ் சினிமாவை நல்ல பாதைக்கு இட்டுச்செல்வதை வழிவகுக்கும். சுப்ரமணியபுரத்துக்கு அப்புறம் மிக துணிச்சலாக தயாரித்த இயக்குநர் சசிக்குமாருக்கும், வித்தியாசமாக யோசித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும் பெரிய பாராட்டுக்கள். இந்த படத்தை பார்த்தப்புறம் பேசாமல் மீண்டும் ஏதாவது சிறிய ஊருக்கு போய் செட்டில் ஆகி, மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம் என்ற யோசனை தீவிரமாக வருகிறது.
-படித்ததில் பிடித்தது
http://valaiyulagam.blogspot.com/2009/06/blog-post.html

0
குழந்தைகளைப் பெரியவர்களைப் போல் நடிக்க வைப்பதே ஒரு வன்கொடுமை என்றால், அவர்களைத் தெய்வங்களாக நடிக்க வைப்பது அதைவிடக் கொடுமை.
இப்படியெல்லாம் குழந்தைகளை வதைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா சூழலின் பின்னணியில்தான் ’பசங்க’ என்ற குழந்தைகள் படம் வெளியாகியுள்ளது.
பசங்க: தமிழில் குழந்தைகள் சினிமாவுக்கான முதல் முயற்சி
-Maraicoir
http://www.maraicoir.com/2009/06/blog-post_6684.html

0
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காக வந்துள்ள ஒரே படம் என்று அஞ்சலியை பலகாலமாக வேறுவழியின்றிக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அஞ்சலி குழந்தைகளுக்கான படமா என்ன?

இனி நாமும் துண்டை, கௌரவமாகத் தோளில் போட்டுக் கொள்ளலாம். பசங்க வந்துவிட்டது. குழந்தைகளுக்கான முதல் தமிழ் சினிமா வந்தேவிட்டது. இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரைப் பார்த்து கேட்கத் தோன்றும் கேள்வி, இத்தனை நாளா எங்க சார் இருந்தீங்க?
கோடை விடுமுறை என்பதால் படத்தில் நடித்த பசங்க, தியேட்டர் தியேட்டராக சென்று மக்களின் வரவேற்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம், நம் வீட்டுப் பசங்களோடு தியேட்டருக்குச் சென்று அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம் இது.
இயக்குநருடன் போனில் பேசும் வாய்ப்பு அமைந்தது. ‘அடுத்த படத்துல நீங்களும் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள்ள சிக்கிக்காதீங்க’ என்றேன். ‘கண்டிப்பாக மாட்டேன்’ என்றார் அழுத்தமாக.
-அகம் - புறம் - அந்தப்புரம்
http://www.writermugil.com/?tag=%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95

0
தமிழ் நடிகனுவவெல்லாம் உண்மையில் சின்னப்பசங்களை விடக் கேவலமா நடிக்கிறானுவன்னு நக்கலடிக்கும் படம் தான் பசங்க…

காசு கொடுத்து படமியக்கச் சொன்ன தயாரிப்பாளரின் படத்தையே நக்கலடித்த இயக்குனரின் அசாத்திய திறமைக்கு ஒரு சொட்டு.

ஒளிப்பதிவு, பாடல்காட்சி என்றெல்லாம் பார்க்காமல் படு ஜாலியாக பார்த்து ரசிக்கக்கூடிய படம் தான் பசங்க. இது அழகியைப் போன்று கடந்து போன மாணவ வாழ்க்கையை சொல்லவில்லை. இது வித்தியாசமான ஒன்று.
-அனாதி என்ற குடிகாரன்
http://velichathil.wordpress.com/2009/05/22/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/

0
முதல் ரேங்க் வாங்கி கற்றுக்கொள்ளாததை கடைசி ரேங்க் வாங்கி கற்றுக்கொண்டேன், வாழ்க்கையை அதன் போக்கை எல்லாவற்றையும் அந்த கடைசி பத்து ரேங்க் மட்டுமே கற்றுக்கொடுத்தது.

என்னைப்பொறுத்தவரை நான் படிப்பில் முதல்பத்து இடத்திலும் கடைசி பத்து இடத்திலும் இருந்து இருக்கிறேன், கண்டிப்பாக முதல் பத்து இடம் என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே, வெறும் உலகம் தெரியாதவனாக உலகத்தை நடத்தும் மிகப்பெரிய கூடத்தில் முறையை புரியாமல் இருக்க மட்டுமே லாயக்கு, கடைசி பத்து என்பது உலகத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, எப்போதும் ஒரு வித போட்டியும், தயாரிப்பும் தேவைப்படும் இடங்கள். உன்னை எப்போதும் ஒரு விதமான தகுதிக்கு தயார் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் அந்த இடத்தில் அதனால் நீ அடையும்பயன் பின்னாளில் உனக்கு தெரியும்.

தமிழ் வழியில் படித்த அனைவருக்கும் பசங்க படத்தை பார்த்தவுடன் அவர்கள் பள்ளி நியாபகம் வருவது தவிர்க்க முடியாதது
-விளைச்சல்
http://dhans4all.blogspot.com/2009/05/blog-post_08.html

0
பாருங்கள்..எதார்த்தம்..எதார்த்தம்னு..ரொம்ப பார்த்தாச்சு.எதார்த்தமே இல்லாமல்....அட உண்மையிலயே இது எதார்த்தமான படங்க..பசங்க..படம் பார்க்கும் அந்த இரண்டரை மணி நேரம், கிட்டத்தட்ட நானும்..என்னைபோல் மற்ற ரசிகர்களும்..குழந்தைகளாக மாறிப்போனோம்..இன்னும் அந்த மனநிலை மாறாமல் இருக்கிறேன்...அண்ணே பாண்டிராஜ்னே ..கலக்கிட்டீங்க..கை குடுங்க.பெரிய பெரிய பாராட்டெல்லாம்..பெரிய ஆளுங்க உங்களுக்கு சொல்வாங்க..நான் சராசரி தமிழ் சினிமா ரசிகன்..உங்களுக்கே தெரியும்..உண்மையில் பாராட்டுபவர்கள் எதுவும் சொல்லாமல் தான் பாராட்டுவார்கள்.மீண்டும் ஒரு முறை கை குடுங்க...அண்ணே சசிகுமார் மேல..நம்பிக்கை அதிகம் இருந்துச்சு..காப்பாத்திட்டீங்க ..குறிப்பா ஒளிப்பதிவாளர் பிரேம் குமார பாராட்டாம மனசு கேக்காது...அந்த மழை பாட்டுல உண்மயேலயே நனஞ்சேங்க..
சபாஷ்..நண்பர்களே..உங்கள மாதிரி படைப்பாளிகள ஆதரிக்க நாங்க இருக்கோம்..
மண்ணையும் ,மனிதர்களையும்...பதிவு செய்யுங்கள்...தலகளையும்..தளபதிகளையும் உணர வையுங்கள்,
-பதிவு
http://theepandham.blogspot.com/2009/05/blog-post_05.html

0
இப்படிப்பட்ட ஒரு படத்தை தயாரித்ததற்காக - முதலில் சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே கதை நாயகர்களாக கொண்டு படம் எதுவும் சமீபத்தில் வந்ததாக நினைவில்லை. பொதுவாக தமிழ் சினிமாவின் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுபவர்களாக, இயல்பு நிலைக்கு மாறாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். அதை உடைத்து, முதல் முறையாக குழந்தைகளின் அக உலகுக்கு வெகு நெருக்கத்தில் இருக்கும் ஒரு படமாக இருக்கிறது.."பசங்க..". படம் பார்க்கும் மக்களுக்கு மீண்டும் தங்கள் பள்ளிப் பிராயத்து நினைவுகளை கண்டிப்பாக இந்தப் படம் மீட்டு தரும்.
-பொன்னியின் செல்வன்
http://ponniyinselvan-mkp.blogspot.com/2009_05_01_archive.html

Friday, 19 June 2009

சரம் - 8 "வாடகை அம்மா"

"ஆசைப்பட்ட எல்லாத்தையும் ...
காசிருந்தால் வாங்கலாம்.
அம்மாவை வாங்க முடியுமா?..
ம்ம்.."
  ஈனக் குரலில் கவிஞன்.

2009 தொடங்கியபோது, 21-ம் நூற்றாண்டு பதிவு செய்த கெஞ்சலுடன் அழிவுற்ற தமிழ் ஓலங்களின் பேரிரைச்சலுடன் காலம் கடந்ததே தெரியாது போய்விட்டது..
முடிந்தவை முடிந்ததுதானே! வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் பலரில் நாமும் அடங்கலாகி பாரீஸ் கோடையில் சாதாரண சட்டைகளுடன் நடமாடுகிறோம். நாளாந்தம் சுமார் 16 மணித்தியாலங்கள் பயணிக்கும் கோடைச் சூரியன் பாரீஸ் போன்ற கட்டிடக்காட்டில் தகிக்கும் தாக்கத்தை அனுபவித்தால்தான் தெரியும். இங்கு புலம் பெயர்ந்து வந்த புதிதில் இந்த அகண்ட பகலை நிசமாகக் காணுற்றதால் ஏற்பட்ட பிரமிப்பை என்னால் மறக்கவே முடியாது. இயந்திர வாழ்வுச் சுழற்சியில் போகப் போக வாழ்வில் இயைந்து போனவர்களாகி, இரசனை தொலைத்ததைக்கூட மறந்தாயிற்று.
மாற்றமொன்றுதானே நிரந்தரமானது! அதற்காக வாயால் உண்ணுவதையே தலை கீழாக மாற்றமுடியுமா? நினைப்பே சிரிப்பைப் பொத்திக் கொண்டு வருகிறது.
தொடரும் புலம்பெயர் வாழ்வில் வீட்டு உணவு முறையிலேயே வேறுபட்ட முத்தலைமுறை இடைவெளிகளின் கூட்டுக்குடிதனம். வேலைத்தளங்களில் உறவாடும் பல் தள வேறுபாடுடைய சிந்தனைகளின் சங்கமம். இவ்வாழ்வின் நீட்சி அனுபவக்குவிலாகி கவனிபாரற்றுக்கிடக்கிறது.

மாலைவேளை கடும் வெயிலைப் பொருட்படுத்தாதவாறு பணியில் ஈடுபடும்போது, வேர்க்க விறுவிறுக்க வருகிறார் எனது பணித்தோழன் சந்துரு. "என்ன?" எனது புருவம் உயர்ந்திருக்க வேண்டும்.
"நேற்றைக்கு எம்6 தொலைக்காட்சி பார்த்தனான். என்னாலே நம்மவே முடியல்ல... என்னடா இந்த வாழ்க்கை என்றாகிவிட்டது.!"
"ஆ.... " எனக்குள் பல்வேறு கேள்விகள்..... மனந்திறக்கும் பணித்தோழனின் உரையாடலைக் தடுமாற வைக்கக்கூடாது. என்னை நம்பி ஏதோ சொல்ல வருகிறார். கல்யாணமாகிய இளம் குடும்பத்தலைவன். சரளமாகப் பிரெஞ்சு மொழி பேசும் அடுத்த தலைமுறை வாலிபன். குடும்பமென்றால் ஆயிரம் இருக்கத்தானே செய்யும். என்னிடமிருந்து வார்த்தைகள் வராதது ஏமாற்றமானதோ என்னவோ....
"அண்ணே!!..."
முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன். "என்ன சொல்லுங்கோ"
"இதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை..... இந்தியாவிலே வெள்ளைக்காரர் போய்ப் பிள்ளை பெற்றெடுக்கிறார்கள்."
"இப்ப மலிவான பிரசவம் அங்கிருப்பதால் அப்படித்தானே செய்வார்கள். இதிலென்ன இருக்கு"
மனதுக்குள் அப்பாடா என்றிருக்கு குடும்பப் பிரச்சினையில்லை. முகத்தை ஏறிட்டுப்பார்க்கிறேன்.
"நேற்றைய தொலைக்காட்சியில் வெள்ளைக்காரருக்காக இந்தியக் குடும்ப்ப பெண்கள் பிள்ளை பெற்றுக் கொடுப்பதைக் காட்டினார்கள். அதுதான்.."
"ஆ அப்படியா..... " எனக்குள் ஆச்சரியம் அடுத்த தலைமுறையினராலேயே ஜீரணிக்க முடியாத பிரசவங்கள் வெளிப்படத் தொடங்கிவிட்டனபோலும்.
"அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்ற வெள்ளைக்கார குடும்பத்துக்காக இந்திய நடுத்தரக் குடும்பத் தலைவி (இரண்டு பிள்ளைகளின் தாய்) வயிற்றில் பிள்ளை சுமக்கிறார். அதாவது வாடகைத் தாய். இவர் பிளையைப் பெற்றுக் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு பிள்ளைகளுக்கான அமெரிக்க பிரஜா உரிமையுடனான கடவுச் சீட்டுகளுடன் அமெரிக்கா செல்கிறது அமெரிக்கர் குடும்பம். இதனால் வந்த வருமானத்துடன் வீட்டைக் கட்டி முடித்து பிள்ளைகளை(தனது கணவனுடன் உறவாடிப் பிறந்த பிள்ளைகள்) நல்ல பள்ளியில் படிப்பிக்கப் போகிறார் வாடகை தாயாகப் பணி புரியும் இந்த இந்திய அம்மா. இவர்களுடனான பேட்டி என விறுவிறுப்பாக இருந்தது தெரியுமா? எனக்குத் தூக்கமே வரவில்லை. என்ர மனுசி அரைவாசியிலேயே பார்க்காமல் போய்ப்படுத்துட்டா"
"ஆக நோகாமல் பெற்ற பிள்ளைகளுடன் வெள்ளையர் தம்பதி நாடு திரும்பிவிட்டது!"
எனது கிண்டலும் ஆச்சரியமின்மையும் கண்டு திகைப்புற்றவராகி, "என்ன அண்ணே இப்படி அலட்சியப்டுத்துறீங்க.... வாடகைக் கார், வாடகை வீடு, வாடகைத் தொலைபேசி, வாடகைப் பெண், என்றாகி வாடகை அம்மாவும் வந்தாயிற்று... இனி மனித வாழ்விலே என்னதான் இருக்கப் போகிறது?"
கேள்வி உறைக்க.... தலையைக் கவிழ்க்கிறேன்.
"..... காசிருந்தால் வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா.. ம்ம்.." பாவம் அப்பாவிக் கலைஞர்கள்.... என்னையும் அறியாது வெளிப்பட்ட பெருமூச்சுடன் விலகிச் செல்கிறேன்.

புத்தாயிரமாகிக் கடக்கும் உலகில் உலகமயமாக்கல் சுனாமி ஒரு முடிவைக் காணுற்றபின்தான் நிறைவுறுமாக்கும்!


-அனாமிகன் (பாரீஸ் யூன் 2009)

Friday, 12 June 2009

கதைச் சரம் -1 புத்தியுள்ள கொக்கு


அறிவியல் புனைகதை - சிறார் இலக்கியம்

முற்குறிப்பு:
புவிசார் வாழவில் சமைந்து போன மானிட இருப்பின் சொந்தக்காரர்தானே நாம். இந்த வாழ்வில் மீட்டுப்பார்க்கும் பல சுவையான சந்திப்புகள் தரும் ஆற்றுப்படுத்தலை வர்ணிக்க வார்த்தைகள்தான் ஏது!
கனெக்ஸ் என பலராலும் உரிமையுடன் அழைக்கப்படும் மகாஜனாக் கல்லூரி முன்னாள் அதிபர் ச. பொ. கனசபாபதி அவர்களின் சமூகப் பிரக்ஞையும், தான் காணும் சமூகத்தின தேவையை அறிவுபூர்வமாக அலசிப் பக்குவமாக வழிகாட்டும் பாங்கும், தன்னிடம் கிடக்கும் விஞ்ஞான அறிவை கல்லூரிச் சுவர்களைத் தாண்டியவாறு சொல்லிக்கொடுக்க முனையும் பேரவாவாலும் என்னைப் பெரிதும் கவர்ந்தவர். இதனால்தானோ என்னவோ எத்தனையோ அதிபர்களைக் காணுற்ற சமூகத்தில் ஓய்வுபெற்ற் பின்னரும் 'அதிபர்' என உரிமையுடன் சுட்டப்படுகிறார். புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர் புலம்பெயர் புதிய சூழலில் நம்மவர்கள் தமது வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள தகுநல் ஆலோசகராகவும், ஆசானாகவும் இருக்கிறார். கல்லூரியை விட்டு வெளியே வந்தபின்னர் சமூகத்தின அறிவுத் தேடலுக்கான பதிவுகளாக இவரது ஆக்கங்களை நோக்கலாம்.

எமது தமிழ் இலக்கியத்தில், அறிவியல் புனைவுகள் மற்றும் எதிர்காலக் எதிர்வுப் புனைவுகள் என்பன விருத்தியுறவேண்டும். உலகெங்கும் மொழிகடந்து - கண்டங்கடந்து விரவி வாழும் வாய்ப்புக் கிடைத்துள்ள ஈழத் தமிழனரின் எதிர்காலச் சந்ததியினரால் புதிய இலக்கியங்கள் வெளிப்படுமென்று நம்புபவர்களில் நானும் ஒருவன். இவற்றுக்கு தொடக்கத் தூண்டுதலாக அதிபரின் முயற்சிகள் அமையட்டும்!!


புத்தியுள்ள கொக்கு

-ச. பொ. கனகசபாபதி

அருச்சுனனும் ஆனந்தனும் சகோதரர்கள். வீட்டின் அருகேயுள்ள ஆரம்பப்பாடசாலையில் கல்வி கற்கிறார்கள். அவர்கள் வீடு பெரிய ஏரியொன்றின் கரைக்கு அண்மையில் உள்ளது. ஏரியில் வெள்ளை நிற அன்னங்கள் நீந்தகி கொண்டிருப்பதைப் பார்க்க மிக அழகாக இருக்கும். அவை பொன்னிறமான தமது கால்களைத் துக்கி வைத்து நிலத்திலே அழகாக நடப்பதை என்றுமே பார்த்துக் கொண்டிருக்கலாம். தமிழ்ப் புலவர்கள் அன்னத்தின் நடையினைப் பெண்கள் நடப்பதற்கு ஒப்பிடுவார்கள்.

அருச்சுனனும் ஆனந்தனும் பாடசாலை முடிந்ததும் வீட்டில் சிறது ஓய்வெடுத்த பின்னர் ஏரியின் கரையிலே விளையாடுவார்கள். அவர்களுக்கு அன்னங்களின் மேல் கொள்ளை ஆசை. ஆகவே ஒவ்வொரு நாளும் விளையாடு முன்னர் பாண் அல்லது விசுக்கோத்தினை வீட்டிலிருந்து கொண்டுவந்து ஏரிக் கரையிலே போடுவார்கள். அன்னங்கள் யாவும் ஓடி வந்து போட்டி போட்டு கொத்திச் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தப்படுவார்கள்.

அந்த ஏரியின் கரை ஓரமாகக் கொக்கு ஒன்று எப்பொழுதும் நிற்பதைக் காணலாம். நீண்ட கழுத்தின் முடிவிலே உள்ள சிறிய தலையிலே நீளமான கூரிய சொண்டு அதற்கு உண்டு. அச் சொண்டினைக் கீழே சாய்த்த வண்ணம் கருமை நிறமுடைய நீண்ட கால்களில் ஒன்றினை ஒன்றின் மேல் வைத்தபடி கொக்கு நிற்கும். அதனை முனிவர் ஒருவர் தவம் செய்வது போல உள்ளது என அவர்களது அம்மா கூறுவார்.

ஆரம்பத்தில் பாண் துண்டினைக் கொக்கு இருக்கும் பக்கமாக எறிவார். ஆனால் அது அதனைத் திரும்பியும் பார்ப்பதில்லை. எனவெ அவர் உணவு பொடுவதை விட்டுவிட்டார். ஆனால் சிறிது நாள்களின்பின்னர் இவர்களைக் கண்டதும் கொக்க நீரினை விட்டு வெளியே வந்து நிற்பதைக் காண முடிந்தது. கொக்கு அவர்கள் அன்னங்களுக்கு உணவு போடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கும். அன்று பாணின் ஒரு சிறு துண்டினைக் கிள்ளி கொக்கினை நோக்கி எறிந்தார். கொக்கு உடனே உணவினைக் கொத்தியது. ஆனால் பாணை விழுங்காமல் அவ்விடத்தைவிட்டுப் பறந்து சென்றது. அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் கொக்கு அப்படியேதான் உணவுடன் பறந்து சென்றது. ஆனந்தனுக்கும் அருச்சுனனுக்கும் அது பெரிய ஆச்சரியமாக இருந்தது. கொக்கு உணவினை உண்ணாமல் ஏன் உணவுடன் பறந்து செல்கிறது? என அவர்கள் சிந்த்தித்தார்கள். "அதற்கு குஞ்சுகள் இருக்கலாம். குங்சுகளுக்கு உணவூட்டுவதற்காகவே பாணினை எடுத்துச் சென்றிருக்கிறது" என அருச்சுனன் கூறினார். இது பற்றி அன்று இருவரும் தமது தாயாரிடம் கூறினார்கள். "கொக்கு மீனையே உண்ணும். ஆகவே குஞ்சுகளுக்கு பாணினை ஊட்டியிருக்க முடியாது, என்ன செய்கிறது என நீங்களே கண்டு பிடியுங்களேன்" என்றார். அன்று முழுவதும் இருவரும் யோசித்து ஒர தீர்மானத்திற்கு வந்தனர். "நாம் செய்யப் போவதை அம்மாவிடம் கூற வேண்டாம். வெற்றி பெற்றால் கூறுவோம்" என்றார் அருச்சுனன்.

மறுநாள் மாலை ஏற்கனவே தீர்மானித்தபடி அருச்சுனன் பாண் கொண்டு ஏரிக் கரைக்குச் சென்றார். ஆனந்தன் மறுபக்கமாக கொக்கு பற்ந்த திசையில் சென்று அங்கே ஒரு இடத்தில் நின்றார். அருச்சுனன் வழமைபோன்று அன்னப் பட்சிகளுக்குப் பாண் போட்டார். கொக்கு சிறிது சிறிதாக அவர் நிற்கும் இடம் நோக்கி வந்தது. அருச்சனன் அதனை நோக்கி ஒரு துண்டு பாணினை எறிந்தார். கொக்கு வேகமாக அப்பாண் துண்டினைக் கெளவிய பின் வழமை போன்று பறந்து சென்றது.அருச்சுனன் சிறிது நேரம் அங்கு நின்று அன்னப் பறவைகளைப் பார்த்த பின்னர், என்னதான் நடத்தது என்பதை அறியும் பொருட்டு ஆனந்தன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றார். அப்போது ஆனந்தன் சந்தோசமாக ஓடிவந்தார். "என்ன நடந்தது என்று தெரியுமா அண்ணா?" என்ற வினாவுடன் ஆரம்பித்து நடந்ததைக் கூறினார். பாணினைக் கெளவிக் கொண்டு வந்த கொக்கு அதனை அப்படியே நீரில் போட்டது. நீரிலே போட்டதும் பாணினை உண்ண வந்த மீன்களைச் சுலபமாகப் பிடித்து உண்டது. "எப்படி இருக்கிறது பார்த்தீர்களா கொக்கினது மூளை, புத்தியுள்ள கொக்கு" என்றார் ஆனந்தன். "வாருங்கள் அம்மாவிடம் கூறுவோம்" என்றார் அருச்சுனன். இருவரும் "வெற்றி வெற்றி" என ஆரவாரம் செய்தபடி ஓடினார்கள். வீட்டிலே அம்மாவிடம் நடந்ததைக் கூறி "எப்படி எமது கண்டு பிடிப்பு?" என்றார் ஆனந்தன். சந்தோசமாய் "இயூறேக்கா" என்றார் அம்மா. "அது என்னம்மா புதுச் சொல், இயூறேக்கா என்றால் என்ன அம்மா?" என்றார் அருச்சுனன். இயூறேக்கா என்றால் கண்டுபிடித்துவிட்டேன் என்று அர்த்தம். இப்பிடித்தான் ஆர்க்கமீடிஸ் எனும் விஞ்ஞானி குளிக்கும்போது ஆர்க்கமீடிஸ் தத்துவத்தைக் கண்டு பிடித்தாராம். உடனே நிர்வாணமாக "இயூறேக்காறு இயூறேக்கா" எனக் கூவியபடி தெருவிலே ஓடினாராம்" என்றார் அம்மா. ஆனந்தன் சிரித்தபடியே, "அது என்னம்மா ஆர்க்கமீடிஸ் தத்துவம்?" என்றார். "அதையும்தான் கண்டு பிடியுங்களேன்" என்றார் அம்மா. "அம்மா, நல்ல அம்மா" என இரு பிள்ளைகளும் அம்மாவைக் கட்டிப் பிடித்தனர்.


நன்றி:
மாறன் மணிக்கதைகள்-2 (தெல்லிப்பழை கலை இலக்கியக்கள வெளியீடு -இலங்கை)

***********