Showing posts with label பந்தல் 8. Show all posts
Showing posts with label பந்தல் 8. Show all posts

Friday, 26 July 2013

'83 கலவரம் உமக்கு என்ன செய்தது.... ஐசே!

குஞ்சரம் 9

'83 கலவரம் உமக்கு என்ன செய்தது.... ஐசே!


மூட்டை மூட்டைகளாய்க் கனவுகளைச் சுமந்தவர்களென்றால் அவர்கள் 40களில் தொடங்கி 80 -90 கள் வரையில் இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழர்களாகாத்தான் இருக்கும். அப்படியாக வானத்தை முட்டும் கனவுகளுக்குச் சொந்தக்காராக இருந்தும் பதிவுலகில் கொட்டப்படாமலும் முன்னைய காலத்தவர்கள் போல் தம் வாரிசுகளின் செவி வழியாகத் தொடரப்பட முடியாதவர்களாகவும் முடமாகிப் போனவர்களும் நம்மவர்கள்தான்.
எமது வாழ்நாட்களில் 'இரு கோடுகள்' தத்துவம் மீளவும் மீளவும் நிரூபணமாக பல சமயங்களில் சிறியதை பெரியது கௌவிச் சென்றதைக் கண்டிருக்கிறோம். இன்று '83 கறுப்பு யூலை உம் அப்படியாகி அடங்கிச் சிறுத்தும் விட்டது. 2009 கொடூர மே வெளுப்பால் அடித்துச் சென்றும் விட்டது. எல்லாமே திட்டமிடப்பட்ட ஆனால் பரிமாணங்களால் வேறுபட்டதான நிகழ்வுகள்தான். ஈழத் தமிழர்களின் அழிவின் கொடூர வடுவாக உலக மனித குல வரலாற்றில் பதிந்து சென்ற நிகழ்வுமாகிவிட்டது..
'90களின் ஆரம்பத்தில் மீளவும் ஐரோப்பிய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறேன். நான் கனவே கண்டிராததொரு மறுபிறப்பெடுத்த வரவு இது. கொழும்பில் தனியாகத் தவிக்கவிட்ட எனது துணைவியின் பிரிவைக் காவிவாறு புத்தம் புதியதான நுண்மன உணர்வுகளுடன் வந்தடைந்த பிரயாணம்.
எனது மைத்துனரின் இல்லத்தில் தங்கிய காலம். அவருடன் அவர் வேலைசெய்யும் பிட்சாறியாவுக்கு நானும் இரவு நேர உதவியாளனாகப் போவது வழக்கமானது. அங்கே நான் செய்த வேலை பாத்திரங்கள் கழுவுதல்தான். இந்தக் கடை முதலாளியாக இருந்தவர் ஒரு தமிழன். இவர் '80களில் இங்கு வந்து தரித்தவர். விடாத முயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் இப்போது தனியாகக் கடைபோட்டு நடத்தும் நிலைக்கு வந்திருந்தார். ஆரம்பத்தில் குசலம் விசாரித்துவிட்டுச் சென்றுவிடுவார். நாட்கள் சில கடந்த பின் எனது உழைப்பிலும் அவருக்கப் பிடித்தம் வந்திருக்க வேண்டும். இவ்வேளையில் எனது வரலாற்றையும் அறிந்திருந்தார்போலும்! இங்கு இவரது கண்டு பிடிப்பாக 'ராம் பிட்சா' விசேட உணவாகி இருந்ததை நானும் இரசித்தேன். மரக்கறி பிட்சாவாக சின்ன மிளகாயும் சிறிதளவு இஞ்சியும் வெண்டைக்காய்த் துண்டங்களுமாக உருவாக்கி இருந்தார். இவரது கற்பனை வளம் என்னைக் கவர்ந்து பாராட்ட வைத்தது.
ஒருநாள் வேலை முடிவுறும் நேரம் 'வணக்கம்! தம்பி!!' நானும் பதிலுக்கு 'வணக்கம்' என்கிறேன். அன்று எனக்கு ஒரு கிளாசு உசார் பானத்தை வழங்கிக் கைகுலுக்கிச் சிரித்தார். வழக்கமான கேள்விகளான 'இந்த நாடு பிடித்திருக்கா?' 'எவ்வளவு காலம் எடுத்து இங்கு வந்தடைய?' என்று என்னிடம் அவர் கேட்கவில்லை. தனது உணவகத்தில் பணி தொடர்பாகவும் பொதுவான நாட்டு நிலவரங்கள் பற்றியதுமான இலகுவான எண்ணங்களே கதைக்கப்பட்டன. மிடறு மிடறாக இறங்கிக் கொண்டிருந்த உசார் பானம் உரையாடலை வேறு தளத்தில் கொண்டு போயிற்று.
'முந்தி நீங்கள் பெர்லினில் இருந்தீர்களாமே?' கேள்வி சடாரென அடித்துவிட்ட பந்து மாதிரி வந்து விழுந்தது.
'ஓமோம். இருந்தனான்!' உயர எத்தனிக்கும் புருவத்தை அடக்கியதாக அமைந்தது எனது பதில்.
'எங்கே இருந்தனீங்கள்? நானும் அந்த வழியாலேதான் இவ்விடத்துக்கு வந்தனான்.
அமெரிக்கன் ஓட்டல் குறுமலங்கா... லோறன்ஸ் ஸ்ராச, போஸ்டமா ஸ்ராச, இன்னும் பிற இடங்களில் இருந்ததையும் தெரிந்தவர்கள் பற்றிய பரிமாறலாகவும் கதைக்கப்பட்டது.
'பெர்லினிலே வாழ உரிமம் கிடைத்தவர்கள் அந்த நேரத்தில் நன்றாகச் சம்பாதித்த காலமல்லவா?'
'ஓம்! சிலர் நன்றாகவே சம்பாதித்தவர்கள்தான்.....' நிதானமாக இவரது கேள்வியிலிருந்து அந்நியப் பட்டவனாக.
'அந்தக் காலங்களில் ஒரே பாஸ்போட்டில் முப்பது பேரை அனுப்பியவர்களும் இருந்திருக்கிறார்கள். இப்ப ஐரோப்பா எங்கிலும் வந்தவர்களெல்லோருமே அந்த வழியால் வந்தடைந்தவர்கள்தானே!'
'ஓமோம்!' என்ற ஒற்றைச் சொல்லில் பதில் சுருங்கிப்போனது.
'அப்ப நீர் என்ன செய்தனீர்?'
'அங்கு வந்தடையும் அகதிகளுக்கு தகுந்த முறையில் விரைவான உதவிகளைப் பெறும் தார்மீகத் தொண்டை வழங்கும் ஈழத்தமிழர் நலன்புரிச் சங்கத்தில் இணைந்து 'யதார்த்தம்' என்ற மாத சஞ்சிகையை வெளியிட்டனாங்கள்.' என்ற பதில் அவருக்கு எரிச்சலை மூட்டியிருக்க வேண்டும்.
'அதுசரி! அப்ப ஏன் நீர் திரும்பிப் போனனீர்?' என்றதான கேள்வி ஏறிய உசாரை சப்பென்று இறக்கிவிட்டது.

'இலங்கையில் பெரிய அளவில் அழிவுகள் நடந்ததுதானே.... அதுவம் திட்டமிடப்பட அழிவுகளாக நடந்தேறினதானே..... எல்லாத்துக்கும் உச்சமாக '83 கலவரம் நடக்க என்னாலே பொறுக்க முடியவில்லை!'
'83 கலவரம் அங்கதானே நடந்தது... நீர் இங்கதானே இருந்தனீர்?.... அந்தக் கலவரம் உமக்கு என்ன செய்தது?... ஐசே!'
முதற் கேள்வியுடன் குடிப்பதை நிறுத்திய நான் இனிமேல் இங்கு வருவதில்லை என்ற முடிவுடன் உறைந்து போனேன். கொழும்பில் கடை வைத்திருந்து கலவரங்களால் பாதிப்புள்ளாகி அகதியாக வந்தவர்தான் இவர்.
புலம்பெயர்ந்த நிலையில் புலம்பெயர்ந்த மண்ணில் ஈழத் தமிழன் ஒருவனால் தமிழில் இன்னொரு ஈழத் தமிழனிடம் இப்படியாக வினவ முடியுமா? எனவாக இன்று வரையில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக விண்ணபம் கொடுத்தபோது தமக்கானதும் தம்மோடு கூடியவர்களும் இனக்கொடுமையால் பாதிப்புற்றதை விபரமாக விளக்கி அகதிநிலை வதிவிட உரிமம் பெற்றிருந்தவர்கள்தானே நாமெல்லோரும். இவரது வார்த்தைகளால் கொடுக்கபட்ட தாக்குதல் '83 கலவரத்திற்கு ஒப்பானதாகவே உணர்கிறேன்.
முதலில் '80 களின் ஆரம்பத்தில் பல்கலைக் கழக் கல்வியை முடித்த இளம் துடிப்புடன் இருந்த என்னை யாழ் நகர அழிப்பும் --நாம் இரசித்த யாழ் நூலக எரிப்பும் - யாழ் முற்றவெளிக் காடையரின் அட்டகாசமும் நாட்டைவிட்டு வெளியேற்றும் உந்துதலைச் செய்தது. வந்தடைந்த ஐரோப்பிய வருகை முற்றிலும் வேறுபட்ட தொரு அனுபவமாகியது. நாம் காணுற்ற ஐரோப்பாவும் - நாம் விட்டுவந்த மண்ணும் எம்மை சும்மா இருக்கவிடவில்லை. ஈழக் கனவைச் சுமந்தவாறு மகிழ்வுடன் மீளவும் மண்ணைச் சென்றடைந்த பலரில் நானும் ஒருவனானேன்.
ஒரு விடிவெள்ளி நேரத்தில் யாழ் மண்ணில் மீளவும் கால் பதித்த வேளை நான் செய்தது. மண்ணைத் தொட்டு வணங்கி - மண்ணை இருகைகளாலும் அள்ளி பிசைந்து.... மண்ணில் ஒரு முறை புரண்டு எழும்பியதுதான்.... இதைப் பதிவிடும்போதே இலேசாக கலங்கத்தான் செய்கிறேன். பெருமூச்சும் தானாகவே வெளியேறுகிறது.


இருபது வருடங்களின் முன் நிகழ்ந்த உரையாடல் மீட்கப்படும்போது கூடவும் சில எண்ணச் சிதறல்களும் தெறித்தன..


இராமாயண இதிகாசத்தில் அனுமான் தனது வாலால் தீயைக் கொண்டு சென்று இலங்கைத் தீவைப் பொசுக்கினான் என்பதை வாயைப் பிளந்தவாறு பக்திப் பரசவத்துடன் கேட்டு வளர்ந்தவர்கள்தான் நாமெல்லோரும். ஆனால் தீப் பிளம்புகளால் உலகம் படும்பாட்டை இன்றைய தொடர்பூடகம் காவிவரும் போது கலங்காத மனிதர்களே கிடையாது. எப்பேர்ப்பட்ட இயற்கை நாசம் எவ்வளவு பல்வேறு உயிரிகளின் அழிவுகள்.... குறிக்கப்பட்ட சில பல கால எல்லைக்குள் நிகழ்ந்து முடிகின்றன. நினைவிடலே அச்சமூட்டுகின்றது. இதனைத் தடுக்கமுடியாத கையறு நிலையில் இன்றும் அதீத விஞ்ஞான வளர்ச்சி எனப் பெருமிதம் கொள்ளும் உலகம்.
'சித்திரையில் புத்திரன் பிறந்தால் பெரும் தரித்திரம்' எனக் கூறிக்கொண்டு சித்திரையில் மகப்பேற்றை விலக்கி வருடப் பிறப்பை ஊக்குவிக்க முடியுமா?  அதுவும் இவ்வருடங்களெல்லாம் ஆண் மக்களாகப் பிறந்த பெயர்களுடன் எப்டியாக கூசாமல் கொண்டடாட முடியும்? எனக் கேள்விகளைக் கேட்காமல் பின்பற்றுபவர்களும் நாம்தான்.
யூலை - ஆடி நீசமான மாதம் என்றதால் கறுப்பும் அதனுடன் ஒட்ட 'கறுப்பு யூலை' எனவாகிவிட்டது. இதனிலும் பேரழிவைக் கொடுத்த மார்கழி (யேசு பிறந்த புனித மாதம்) 2004 ஆழிப்பேரலை அழிவும் 2009 மே - வைகாசி (புத்தர் பிறந்த புனித மாதம்) மனித குல வடுவாகிப்போன கொடூர அழிவும் மாதத்துடனான அடைச் சொல்லுடன் ஏன் பதிவாக மறுக்கின்றன?


- முகிலன்
பாரீசு 25.07.2013
தொடர்புடைய வேறு ஆக்கங்கள் நுழைய:

சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (10)

சரம் - 6 யார் சிறிலங்கன்?

Thursday, 25 July 2013

தமிழ் கற்றல்

குஞ்சரம் 9


தமிழ் கற்றல் தமிழ் கற்றல் தமிழ் கற்றல் தமிழ் கற்றல் 

தமிழ் கற்றல்

-மௌனம் இதழில் இடம்பெற்ற அன்றைய பதிவு மீளவும் அசைபோடப்படும்போது-


பிரெஞ்சு பாடம் தீவிரமாகக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவன் நான். அவ்வப்போது தமிழில் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வேன்.
வழக்கத்திலுள்ள பிரெஞ்சு மொழியை 'மூன்று பிரிவுகளாக' வகுக்கின்றனர்.
1. Standart    - தரம் (வகுப்பறை)
2. Famimier    - வழக்கம் (வீடு - உறவு - நண்பர்  - வட்டாரம் - பிரதேசம்)
3. Soutenu    - பண்டிதம் (இலக்கியம் - அலுவலகம்)
பொதுவான இலக்கண விதிகளுக்கு அமைய நடைமுறையில் பிரெஞ்சின் உச்சரிப்பு - வாக்கிய அமைப்பு - வேறுபாடு என்பன சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.
1. தரமான தமிழ்
2. வட்டாரத் தமிழ்
3. பண்டிதத் தமிழ்
இருப்பதை அறிவோம். கல்விக்கூடங்களில் தரமான பாடத்திட்டங்களுடன் ஒப்பீட்டளவில் நடைமுறைத் தமிழையம் சொல்லிக் கொடுக்கும் நிலை வருமாயின் யதார்த்த நிலையின் பரிதல்கள் இலகுவாகுமல்லவா? அது மட்டுமல்லாமல் தமிழில் அகராதிகளின் தேவையும் பயன்பாடும் அதிகரிக்குமல்லவா?
- லிங்கம்
*****************

நன்றி: மௌனம் 4(காலாண்டிதழ்) - பெப்- மார் - ஏப் '94 (பிரான்சு)

குறிப்பு: நாங்கள் பாரீசு வந்தபோது நடாத்திய காலாண்டிதழ் 'மௌனம்' இதில் எனது ஆக்கமாக இடம்பெற்றது. 
அகதிகளாகவும் - குடியேறிகளாகவும் பிரான்சினுள் நுழைந்தோரில் பாடசாலைக் கல்விக்கூடங்களில் நுழையும் வயதெல்லையைக் கடந்தவர்களுக்கு  அடிப்படைச்  சூழல் மொழியறிவைக் கொடுக்கும் முறைசாராக் கல்வி நிறுவனமொன்றில் கற்றுக் கொண்டிருந்தபோது பதிவான குஞ்சரம்.
- முகிலன்
பாரீசு 24.07.2013

Wednesday, 24 July 2013

இலக்கியச் சந்திப்பு

குஞ்சரம் 8
இலக்கியச் சந்திப்பு

-மௌனம் இதழில் இடம்பெற்ற அன்றைய பதிவு மீளவும் அசைபோடப்படும்போது-

சாலை ஓரத்தில் அமைந்த அந்த சிறிய பூங்கா. ரம்மியமான மாலை நேரங்களில் அதில் நிமிர்ந்து நிற்கும் மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'வாங்கில்' (bench) அந்த இலக்கிய நண்பர்கள் அடிக்கடி கூடி பல்வேறு சிந்தனைகளை அலசுவது வழக்கம்.
சாலையின் மறுபுறத்தில் ஒரு சம்சாரியின் குடும்பம் முழுமூச்சாக வியாபாரத்தில் ஈடுபடும் செருப்புக் கடை. சாலையில் மாலை நேரச் சிற்றுண்டிச் சேவை நடாத்தும் மணியனுக்கு இந்த இரண்டு பிரிவினரும் வாடிக்கையாளர்கள்.
ஏனோ மணியனின் சிந்தனையில் விசித்திரமானதொரு கேள்வி 'இவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் என்ன நினைப்பார்கள்?'
இலக்கியப் பெருமகன் : 'பாவம் சம்சாரி! தன்னையோ சமூகத்தையோ உணரமுடியாத சடம் போல் இந்த சீர்கெட்ட சமுதாயச் சாக்கடையில் உழண்டு கொண்டிருக்கும் அப்பாவி!'
சம்சாரி :  'வேலை கெட்டதுகள். வெட்டிப் பொழுதுபோக்கிக் கொண்டு நாட்டையே நாசமாக்கப் போகுதுகள்!'

- பயஸ்

**********************
நன்றி : மௌனம் 3(காலாண்டிதழ்) - நவ- டிச -'93  ஜன '94 (பிரான்சு)
குறிப்பு : நாங்கள் பாரீசு வந்தபோது நடாத்திய காலாண்டிதழ் 'மௌனம்' இதில் எனது ஆக்கமாக இடம்பெற்றது.
- முகிலன்

பாரீசு 24.07.2013

புலம்பெயர் வாழ்வில் புதியதாய் பரிணமிக்கும் 'பதியமிடல்' (implant)


குஞ்சரம் 7
புலம்பெயர் வாழ்வில் புதியதாய் பரிணமிக்கும் 'பதியமிடல்' (implant)

முன்பின் அறிந்திராத புலம்பெயர் தேசங்களில் குடியேறி வாழத் தலைப்பட்டு நான்காவது தசாப்தம் கடக்கும் நிலையில் முதற் தலைமுறை. நினைக்கவே ஆச்சரியம். பிறந்த மண்ணில் வாழ்ந்த காலத்திலும் அதிகமாக புகுந்தகத்தில் வாழ்வைத் தொடரலாயிற்று. பிள்ளைகளை வளர்த்தெடுத்து பேரர்களையும் கண்டாயிற்று. இப்படியாக ஆகுமென நம்மவர்களில் எத்தனைபேர் ஆரம்பத்திலேயே நினைத்திருப்பார்கள்?
புத்தம் புதியதான பிரமாண்டமான பெருநகர்ச் சூழலில் முதற் தலைமுறையினர் பெற்ற அனுபவங்கள் ஆயிரமாயிரம். இவை பதிவிடப்பட்டால் தமிழ் எழுத்துலகிற்கு அனுபவப் பொக்கிசமாகும். இங்குள்ள முறைசார் கல்விகூடங்களில் கற்கையைத் தொடங்கிய தம் வாரிசுகளுடன் பெற்றோரும் முற்றிலும் மாறுபட்டதாய் முறைசாரா வகையில் 'கற்பவர்களாகவே' தத்தமது வீடுகளில் சமாந்தரமாக வாழ்வின் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த முதற் தலைமுறையினர் தாம் இளமையாக வாழ்ந்த ஊரும் ஊராரும் ஊர்ந்தவாறு தத்தமது நினைவிலி மனதில் உருத்தெரியாத விருட்சமாகி அவரவர்களுக்குப் பசுமையைக் கொடுக்கிறது. பல்தேசியச் சூழலில் தத்தமது கற்கைநெறி மற்றும் பணிகள் நிமித்தம் வாழத் தலைப்பட்டுள்ள அடுத்த தலைமுறையினருக்கு இத்தகைய நினைவோடைச் சிக்கல்கள் இருப்பதில்லை. இயல்பாகவே சூழலுடன் இணைந்து இயைந்போனவர்களாக அவர்களது வாழ்வு சீரானதாகப் பயணிக்க ஆரம்பித்தும் விட்டது. ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இத்தகைய புலப் பெயர்வுத் தலைமுறை இடைவெளிச் சிந்தனையோட்டத்தால் கொஞ்சம் நிலை குலைந்துள்ளார்கள் என்றே பதிவிட முடியும். தமது பிள்ளைகளின் திருமண வாழ்வு தொடர்பாக சொல்லிட முடியாத மிகை அழுத்தத்துடன் பலர் இருப்பதை வெளிப்படையாகவே காணக்கிடைக்கிறது.
என்னுடன் அந்தக்காலம் தொட்டு கிரமமாகத் தொலைபேசியில் உறவைப் பேணி வருபவர் இலண்டனில் வாழும் முப்பது வருடத்துக்கும் மேலான நட்பைத் தொடரும் நண்பர் கணா என்ற கணபதி. தனது வாழ்வை தமது குடும்ப மேம்பாட்டுக்காக் கொடுத்துவிட்டு இன்று வரையில் தனியனாகவே வாழ்பவர். தனக்கு ஏற்பட்ட நோய்த் தாக்குதலிருந்து மீண்டவராய்த் தனித்தே வாழ்பவர். எண்பதுகளின் தொடக்கத்தில் நாம் இருவரும் ஒன்றாக பெர்லின் நகரத்தில் நட்பாகிக் கைகோர்த்தவர்கள். இவர் மீது தனிப்பட்டதொரு பச்சாதாப ஈர்ப்பு எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இவர் எதாயினும் கேட்டால் நானும் அதிகம் மறுக்காது செய்து கொடுத்துவிடுவேன்.
அன்றொருநாள் எமது கனடாவில் வாழத் தலைப்பட்டுள்ள இன்னொரு நீண்ட கால நண்பரின் மகனின் அகால இழப்பால் நாமெல்லோரும் தொலைபேசி வாயிலான உணர்வுப் பகிர்வில் சங்கமித்திருந்தோம். இத் தருணத்தில்தான் அவரது வீட்டில் முதிர் கன்னிகளாக இருவர் இருப்பதை அனைவராலும் உணர முடிந்தது. சிறந்த கல்வி அறிவும் ஆற்றலுடையவர்களாகவும் இருக்கும் அவர்களுக்கு வரன் தேடும் தார்மீகப் பொறுப்பை எடுத்துவிட்டார் நண்பர் கணா.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நிலையில் இருந்தாலென்ன ஈழத்தில் வாழ்ந்தால் என்ன இந்த மாப்பிள்ளை தேடும் படலம் 'பொருத்தம்' பார்ப்பதாகத்தான் தொடரச் செய்கிறது. முகம் பார்த்துப் பழகி அறிய முடியாத அறிவை இந்தக் கடதாசியில் இடப்பட்ட கோட்டுக் கட்ட வரைபில் எப்படித்தான் பொருத்திப் பார்த்துத் திருப்திகொள்கிறாரகளோ? ஞான் அறியேன். எனக்கு கிஞ்சித்தும் இதில் உடன்பாடடில்லை. சும்மா சொல்லக் கூடாது... மனித மனத் தரையில் கண்ணை மூடியவாறு பின் தொடரப்படும் 'அசட்டு நம்பிக்கை' (மூட என்ற சொல்லை இதில் பிரயோகிக்க நான் விரும்பவில்லை)எனும் விதை வீழ்ந்து விட்டாலே போதும் இத்தரையில் வெற்றிடமே இருக்காது!!
முதிர் கன்னிகளுக்கு இனிமேல் பொருத்தம் பார்த்து.... விருப்பங்களுடன் இணைங்கி... எப்பதான் திருமணம் செய்வது? எனக்கு வழி தெரியவில்லை. எனது இயலாமையை வெளிப்படையாகவே கணாவுக்குத் தெரியப்படுத்திவிட்டேன். அவர் விடுவதாக இல்லை.
'முகிலன்.... உமக்கு என்ன செய்வது என்பது தெரியாமலிருக்கு! உமக்கு மட்டுமல்ல நாதன் அண்ணைக்கும் இது தெரியாமல் போச்சு. பிள்ளைகளை அவர்களது பாட்டில் விட்டுப்போட்டு இருந்திட்டார். இதுக்கு அப்பவே பதியமிட்டிருக்க வேண்டும்.'
நான் அசந்தே போய்விட்டேன். 'பதியமிடுவதா...?' அப்படியெண்டால் என்ன?' என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து அனாதரவாகச் சொற்கள் விழுந்தன.
எதிர்முனையில் க்கக்... க்கக்...க்கக்.... க்கக்... க்கக்...க்கக்.... க்கக்... க்கக்...க்கக்.... எக்காளச் சிரிப்பு எனது காதுக்குள் நுழைந்தது.
'தெரியாத படியால்தான் கேட்கிறேன்.... சொல்லிதாருமேன்....' எனது இறைஞ்சல் ரிதத்தை சொற்களைக் காவிச் சென்றன.
'முகிலன்!... சமூகத்தை அறியவேண்டும். இதில் எப்படியாக வாழவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகள் பற்றிய கரிசனையை அவர்களது கல்வியில் மட்டும் செலுத்தினால் போதாது முகிலன்! அவர்களது எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கக் கூடியவாறு.... சிலபல பதியம் போடலையும் செய்யத்தானே வேணும்.' என்று இழுத்து இழுத்து நிதானமாக ஏற்ற இறக்கத்துடன் தெளிவாக வந்திறங்கின வார்த்தைகள். அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
'பிள்ளைகள் வளரும்போதே நாசூக்காக அங்கங்கே பழகும் வாய்ப்பைக் கொடுத்து.... முகமாற்றங்களை அளவிட்டு.... வேறுபல சந்தர்ப்பங்களை வரவழைத்து... குடும்ப நிகழ்வுகளை நடாத்தி 'டெக்னிக்கலா' நகர்த்த வேண்டும். இதைவிட்டுப் போட்டு வயது ஏறிய பின் புலம்பக்கூடாது..... இதெல்லாம் உங்களைப் போன்றவர்களால் நினைக்கப்படுவதே இல்லை. கனக்க கதைப்பீர்கள்.... ஆனால் எப்படி வாழ்வதென்று உங்களுக்குத் தெரியாது! இதுதான் நாதன் அண்ணைக்கு நடந்தது. பாவம் அவர் ஊர்ச் சோலி பார்ப்பதாகவே நாட்களைக் கடத்திவிட்டார்...... ம்!....!' பெருமூச்சுடன் நிறுத்தினார் கணா.
'முகிலன்! நான் சொல்கிறேன் எனத் தப்பாக எடுக்கக்கூடாது... உங்களது பொடியங்களுக்கு இப்பவே பதியமிடல் வேலையைத் தொடங்கிப் போடுங்கோ! பிறகு நாதன் அண்ணையின் நிலைதான் வரும்!' என்றார்.
நான் என்னத்தைச் சொல்ல..... திணறித்தான் போனேன். 
'நன்றி' பரிமாற்றத்துடன் தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்படுகிறது.
***************
இன்றைய உரையாடல் சற்று நீண்டிருந்தாலும் புதியதாய் இருந்ததால் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தேன். சமூகத்தின் - குடும்பங்களின் விமரிசையான ஒன்றுகூடல் நிகழ்வுகள் .... அவர்களது மலர்ச்சியான முககங்கள்..... மீளவும் மனத் திரையில் ஓடத் தொடங்கின. அமைதியானேன்.
இருவருடங்களுக்கு முன்னர் எனது வேலைத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நடந்த உரையாடலை மனக்கணினி மீளவும் திரையிட்டது.
தர்மன் நான் பணியாற்றும் நிறுவனத்திற்கு அண்மையில் அமைந்த பிட்சாறியாவில் இருபது வருடமாகப் பணியாற்றுபவர். மதியம்மூடப்பட்டு இரவு வேலை தொடங்கும் இடைவெளியில் சிலவேளைகளில் வீட்டுக்குப் போகாமல் விடுவதும் உண்டு. இத்தருணங்களில் பலதும் பத்தும் கதைப்பதற்காக என் வேலைத்தளத்திற்கு வந்திடுவார். அவரது முதலாளி யூதர். அவர்களது வித்தியாசமான சடங்குகள்.... சம்பிரதாயங்கள்...... நடைமுறைகள்..... எனவாக பல்வேறு விடையங்களை நானும் அவ்வப்போது கேட்டறியும் ஆவல் உள்ளவன். இந்தச் சந்திப்பில் பிள்ளைகளின் கல்விக்கான பாடசாலைத் தெரிவு மையக்கருவாக இருந்தது.
'என் முதலாளி அவரது பெண்பிள்ளையை தனியார் பல்கலைக்கழகப் புகுமுகக் கல்லூரியில் (Lycée) சேர்த்துவிட்டார்.'
'அது நல்லதுதானே! அப்பத்தான் பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள்.'  எனக்கு இத்தகவல் பெரிய அளவில் பாதிப்பைத் தரவில்லை.
'அது இல்லை.... அக்கல்லூரி யூதக் கல்லூரி!'
'அப்ப அதுதான் மிக நல்லது சிறப்பாகக் கவனமெடுத்துக் கற்பிப்பார்கள். நல்ல வேலைதான் செய்திருக்கிறார்...... உமது முதலாளி யூதர் ஆகையால் முன்னுரிமை இருந்திருக்கும்.'
'அப்ப இவ்வளவு நாளும் ஏன் அரசாங்கப் பள்ளியில் வைத்துப் படிப்பித்தாராம்?' கேள்வி தர்மனிடமிருந்து எனக்குப் பாய்ந்தது. என்னால் எப்படித்தான் பதில் சொல்ல முடியும்? விழி பிதுங்கப் பரிதாபகரமாகப் பார்த்தேன்.
'இதைத்தான் நான் அவரிடம் கேட்டேன்..... தெரியுமா?' என்றார் பீடிகையுடன்.
'என்ன சொன்னார்?' நானும் ஆவலுடன்.
'பிள்ளைக்கு வயது வந்துவிட்டது. இனி பலதையும் தேடலுடன் கௌவும் பிராயம். பொதுப் பள்ளியில் தொடர்ந்தால்..... அவளுக்கு இணைவு நண்பனாக(copain) மொகமட்டும்... மூறாட்டும்.....தான் கிடைப்பார்கள். நானென்ன பைத்தியக்காரனா... விளையாட்டா நினைக்க!! நம்ம யூதக் கல்லூரியில் சேர்த்திட்டா... எப்படியும் நம்ம பையன்களுடன்தானே பழகுவா.... அவருக்கும் நம்ம பையன்தானே இணைவு நண்பனாகக் கிடைப்பான். அதை அதை அந்தத் தருணங்களில் செய்து போடவேண்டும் தர்மா... பிறகு புலம்பக் கூடாது?' என்றவாறு என்னை உறுத்துப் பார்த்த பார்வை என் நினைவில் மீளவும் வந்து போகிறது.
- முகிலன்
பாரீசு 24.07.2013

மத நம்பிக்கை அற்றவர்கள் வில்லங்கமானவர்கள்!


குஞ்சரம் 6
மத நம்பிக்கை அற்றவர்கள் வில்லங்கமானவர்கள்!
வேகமாக கரையும் கால ஓட்டத்தில் சங்கமமாகிவிட்ட வாழ்வில் அவ்வப்போதுதான் நினைவில் சிலர் வருவார்கள்.  உடனே அவர்களுடன் தொடர்பாடல் கொள்ள மனத்து}ண்டலாகும். இத்தகைய தருணங்களில் கைகொடுப்பது தொலைபேசிதான். இதிலும் எங்கிருந்தாலும் தொடர்பாடல் இணைப்பைக் கொடுப்பது இந்த 'செல்பேசி"தான். இப்படியான நினைவுத் தொடர்பாடலில் தனது காத்திரமான பங்கை அளிப்பதனு}டாக 'செல்லிட பேசி" 'கைபேசி" 'கைத் தொலைபேசி" 'செல்பேசி" எனவாகப் பல பெயர்களுடன் மனிதர்களின் நெஞ்சோடு இணையும் விஞ்ஞானக் கருவியாகிவிட்டது.
ஆதிகால மனித உயிரி காட்டிலிருந்து வீட்டுக்கு வரும்போது உடன் வந்த மிருகம் நாய். இன்று வரையில் இந்த மனிதக் கூட்டத்துடன் விசுவாசமானதாகச்  சங்கமித்த  விலங்காகிவிட்டது. தற்போதைய தொடர்பூடக விஞ்ஞான யுகத்தில் விஞ்ஞானக் காட்டியாக மனிதஅவர்களது அவயங்களுடன் இணைக்கப்பட்தொரு கருவியாகிவிட்டது செல்பேசி. குரல் வழியான உணர்வுப் பகிர்வுடன் இணைந்து புதிய பல பரிமாணங்களுடன் மனிதக் கைகளுக்குள்ளேயே உலகைச் சுருக்கிக் கொடுக்கும்  விசுவாசமான கருவியாக மனித வாழ்வோட்டத்துடன்  பின்னிப் பிணைந்து விட்டது.
இப்படித்தான் ஒருநாள் எனது ஊர் நண்பன் நினைவுத் திரையில் தோன்ற எனது கைபேசி அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது. வழமையான  குசல விசாரிப்புகளின் பின் உரையாடல் 'தமிழர்களின் தனித்துவ ஆடல் கலைகள்' தொடர்பான உரையாடலுக்குச் சென்றது. இந்த நண்பர் எமது பாரம்பரியமிக்க 'கூத்து இசைக் கலைஞன்'. புலம்பெயர்வு வாழ்வில் எமது அடையாளக் கலைகள் தொடர்பான கரிசனைகளில் அதுவும் அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் சமூகப் பொறுப்புணர்வில் நாம் என்றென்றும் இணைந்தவர்கள். இரு வாரங்களுக்கு முந்திய ஞாயிறன்று இவர்களது நிகழ்வரங்கமொன்று நிகழ்த்தப் பட்டிருந்தது. என்னால் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இதற்கான செல்லக் கோபத்தை உரிமையுடன் கொப்பளித்தார் நண்பன்.
'எனது நண்பர் ஒருவரின் மூத்த மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. காதல் திருமணம். இருபெற்றோரும் இணைந்து நிகழ்வரங்கை வித்தியாசமானதாக நடாத்த இருக்கிறார்கள். இதற்காக என்னையும் அழைத்திருந்தார்கள். நான் அங்கு சென்றுவிட்டேன். இதனால் உங்களது நிகழ்ச்சியைப் பார்க்க வரமுடியவில்லை.' என எனது இயலாமையை  நிதானத்துடன்  தெரிவித்தேன்.
'இதென்ன.... பெரிய விடையம்!.... சம்பந்தம் கலக்கிறது என்று சொல்லலாம்தானே!.... அங்கே பலகாரத்தைச் சாப்பிட்டுப் போட்டு எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம்தானே!!' வார்த்தைகளின் ஒலி அசைவுகளுடன் கோப அதிர்வும் இணைந்தே செவிப்பறையைத் தாக்கியது.
'அது இல்லை... சிறி! பிள்ளைகள் காதலால் இணைகிறார்கள். பெற்றோர்களில் ஒரு குடும்பம் முழுமையான பக்தி சிரத்தையானது. மற்றைய குடும்பம் கடவுள் மறுப்புடையது.'
'என்னது!! அய்யையே... கடவுள் மறுப்பா?...... இது வில்லங்கமானது அண்ணே!' என்றார் பழைய இயல்பான பாவத்துடன்.
நான் விக்கித்துப் போனவனானேன்.  தொலைபேசித் தொடர்பாடலாகையால் என் நிலை அறியாமல் தொடர்கிறார்....
'அண்ணே! மனுசனாகப்பட்டவன் கடவுளை நம்ப வேண்டும். அது எந்த மதமாக  இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் இந்துவாகவோ கத்தோலிக்கர்களாகவோ இசுலாமியர்களாகவோ பௌத்தர்களாகவோ இன்னும் அல்லலோயாவாகவோ இருந்தாலும் பரவாயில்லை என்பேன்! இப்படியில்லாமல் கடவுள் மறுப்பவராக இருந்தால் வில்லங்கம்தான். இவர்களுடன் கதைக்க இயலாது. என்னென்னவோ எல்லாம் நாக்கூசலில்லாமல் கதைப்பார்கள். இவர்களுடன் சம்பந்தம் கலக்கிறதை நினைக்கவே நடுக்கமாக இருக்கு! இப்ப எல்லாம் விளங்கிவிட்டது. அண்ணே! அங்கே நீ இருந்ததுதான் சரி.' அவரது குரலில் தெளிவு பிரகாசமாகத் தொனித்தது.  நான் பேசும் நிலையில் இருக்கவில்லை.
'எல்லாம் நல்லபடியாக ஒப்புக்கொள்ளப்பட்டாயிற்றா?' அக்றையுடன் விசாரித்தார்.
'ஓம்! ஓமோம் இரு பகுதியினரும் ஏற்புடையதாக பொதுவானதொரு நிகழ்வைச் செய்வதாக முடிவெடுத்துவிட்டார்கள்' என்று வார்த்தைகளை அளவெடுத்துக் கதைத்தேன்.
'அது போதும் அண்ணே!! எல்லாம் நல்லபடியாக நடக்கும்!' அவர் எனக்க ஆறுதலளிப்பதாக இருந்தது அவரது கூற்று. இந்த உரையாடலை அவருடன் நீட்ட என் மனம் இடம்கொடுக்காது விலகிச் சென்று கொண்டிருந்தது.
'வேறென்ன சிறி! இன்னுமொரு முறை ஆறுதலாகக் கதைப்போம்!'
'ஓம்! மீண்டும் சந்திப்போம்!!'
'நன்றி சிறி! சந்திப்போம்!' தொலைபேசி இணைப்பு துண்டிப்பாகிறது.
-----
இரவு படுக்கையிலும் இந்தக் கூற்று என்னை அரித்துக் கொண்டே இருந்தது.


யார் வில்லங்கமானவர்கள்?.....  நாத்திகர்கள் தொடர்பாக சாதாரண மத ஈடுபாட்டாளர்கள் கொண்டிருக்கும் பயப் பீதியான எண்ணம் எப்படியாக நிலைபெற்றது? ஏன்?..... நாத்திகர்களும் ஆத்திகர்களும் - நண்பராக இருக் முடியாதா?... கணவன் மனைவியாக வாழ முடியாதா?.. சக தொழிலாளியாக ஒரே கூடத்தில் பணியாற்ற முடியாதா?.... வகுப்பறையில் பாடமெடுக்க முடியாதா?..... பக்கத்து வீட்டில் வாழ முடியாதா?.... இன்னுமேன் ஒரே பேரூந்தில் பயணிக்க முடியாதா?.....
அப்ப எப்படி வில்லங்கம் வந்திருக்க முடியும்?.... என்னையும் அறியாமல் புன்முறுவலிடுகிறேன்.


- முகிலன்
பாரீசு 24.07.2013

தொடர்பான இன்னுமொரு பதிவு நுழைக:

சரம் - 9 அரோகரா! அரோ....கரா....!!

Monday, 22 July 2013

செவி வழிக் கதை 15 : 'பாண்டித்தியம்'

கதைச் சரம் 18  
செவிவழிக் கதை-15 :
பாண்டித்தியம்


அந்த அழகான நகரை அலங்கரிப்பதே இந்த நதிதான். எந்தக் காலத்திலும் வற்றாது. நகரைக் கடப்பவர்கள் ஆற்றில் மச்சுவாய் (1) ஓட்டிகளின் துணையையே நாடவேண்டும். தேவைக்கேற்ப மச்சுவாய்கள் ஆற்றின் இருகரைகளிலும் அடுக்கடுக்காக இருப்பதே ஓர் அழகுதான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் மச்சுவாய் ஓடாது.
ஒருநாள் ஒரு வெளியூர்ப் பண்டிதர் அரசசபையில் தன் திறமையை வெளிப்படுத்த வந்திருந்தார். மிகமிக அற்புதமான அறிவாளியென அனைவராலும் மதிக்கப்படுபவர் அவர்.
பண்டிதர் ஆற்றைக் கடக்க ஒரு மச்சுவாயை அமர்த்திக் கொண்டார். பிரயாணத்தின் போது பண்டிதர் சும்மாயிருக்கவில்லை. தன் திறமைகளை படகோட்டியிடம் சொல்லிக் கொண்டு வந்தார். படிகோட்டிக்குப் புரிந்தவை பாதி புரியாதவை பாதி. திடீரென பண்டிதர் கேட்டார்.
'நீ பாரதம் வாசித்திருக்கிறாயா?"
'இல்லை ஐயா!"
'உன் வாழ்வில் பாதியை இழந்துவிட்டாய். போகட்டும் இராமாயணம் வாசித்திருக்கிறாயா?"
'இல்லை ஐயா!"
'ச்ச... மீதிவாழ்விலே பாதியையும் இழந்து விட்டாய். சரி! சீவகசிந்தாமணி......"
'இல்லை!"
.............
இப்படியாக பண்டிதர் பார்வையில் வாழ்வின் அனைத்தையும் இழந்து துரும்பாகிக் கொண்டிருந்தான் படகோட்டி. மச்சுவாய் ஆற்றின் நடுப்பகுதியல் பயணித்துக் கொண்டிருந்தது. படகில் இலேசான சலனம். படகோட்டி உசாரானான்.
'ஐயா! உங்களுக்கு நீச்சல் வருமா?" என்றான் பவ்வியமாக.
'இல்லையப்பா!" என்றார் பண்டிதர் புருவங்களைச் சுருக்கியவாறு.
'ஐயா உங்கள் வாழ்க்கையே அழியப்போகிறது!" என்றான் படகோட்டி.
'ஏன்?" பண்டிதர் கலங்கிவிட்டார்....
"மச்சுவாயினுள் ஓட்டை..... தண்ணீர் புகுந்து கொண்டு வருகிறது....." மீதி சொல்லப்படாமலேயே ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்கிவிட்டான் படகோட்டி.
- அநாமிகன்
நன்றி: மௌனம் 4(காலாண்டிதழ்) - பெப்- மார்ச்சு - ஏப்பிரல் 1994 பிரான்சு.

(1)  மச்சுவாய் : சிறிய படகு - இப்படகின் நடுவில் உட்கார்ந்திருக்கும் படகோட்டி தன் இரு கைகளால் பின்புறமாக தண்ணீரை உந்தி வாரித்தள்ளும் தண்டுக் கரண்டிகளால் படகை முன்னோக்கி நகர்த்துவார்.

(2)  குறிப்பு: நாங்கள் பாரீசு வந்தபோது நடாத்திய காலாண்டிதழ் 'மௌனம்' இதில் எனது ஆக்கமாக இடம்பெற்றது.  நாம் பல்வேறு கதைகளை செவி வழியாகக் கேட்டு வளர்ந்த தலைமுறையினர். புலம் பெயர்ந்த நிலையில் அப்படியான வற்றை பதிவு செய்யும் முயற்சியாகத் தொடருகிறேன். இக்கதையை என் தந்தை வழியாக சிறு பிராயத்தில் கேட்டிருக்கிறேன்.
- முகிலன்
பாரீசு 22.07.2013


நீட்சிபெறும் புலம்பெயர்வு வாழ்வில் குமர்ப் பொடியங்களும் - குமர்ப் பொட்டைகளும் ஒருபாலார் இணைவுகளும்!

குஞ்சரம் 5

நீட்சிபெறும் புலம்பெயர்வு வாழ்வில் குமர்ப் பொடியங்களும் - குமர்ப் பொட்டைகளும் ஒருபாலார் இணைவுகளும்!

புலம்பெயர் வாழ்வின் அதீதச் சுழற்சியால் நாமும் வேகமாச் சுழன்றடித்துச் செல்கிறோம். பிரான்சில் கல்லூரி ஆண்டு இறுதிக் கோடை விடுமுறைக்காலம் கொஞ்சம் அதிகம். அதிலும் பல்கலைக் கழக புகுமுக வகுப்புக் காலத்தில் இவ்விடுமுறை காலம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இத்தகைய இளையோரான பதின்ம வயதின் கடைக் கோடி எல்லைப் பிராயத்தினருடன்(ஆண் - பெண்) வேலைக்குச் சென்றுவரும் பெற்றோர் படும்பாடு புதியதோர் பதிவுதான். இப்பிராயத்தினர் தத்தமது நண்பர்களுடன் அதிக தொடர்பாடல்களை மகிழ்வுடன் தொடரும் விடுமுறையாக்கவே பிரயத்தனம் செய்வார்கள். பல்தேசிய நண்பர்கள் குழாத்துடன் இவர்கள் சங்கமிப்பதை ஜீரணிக்க முடியாத முதற் தலைமுறைப் பெற்றோர் தத்தமது பிள்ளைகளை 'குமர்ப் பொட்டைகளாகவும்" 'குமர்ப் பொடியங்களாகவும்" பொத்தியபடியே வளர்க்க பிரயத்தனம் கொள்கிறார்கள்.
ஐரோப்பியக் கோடை இரவுகளைச் சுருங்கி பகல்களை வீங்கிப் பெருத்தனவாக்கி கழிந்து செல்லும். இரு குமர்ப் பொடியங்களையுடைய சிறிய குடும்பம் எங்களுடையது. 2013 கோடைக் கல்லூரி விடுமுறையின் நீட்சி தகிக்கும் வெயிலுடன் பெரும் புழுக்கத்தை வீட்டுக்குள் வாரி இறைப்பாதாகவே அமைந்து விட்டிருந்தது. நம்; பொடியங்களோ ஜெர்மனிச் சுற்றுலாவை தனியர்களாகச் செய்வதென ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். அவர்களை இங்கிருந்து நான் ஜெர்மனிய நகரான சார்புறூக்கனுக்கு அவர்களது மச்சான் (இவர்களும் இவர்களோடு ஒத்த குமர்ப் பொடியன்கள்தான்) வீட்டில் கொண்டு போய்விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தேன். ஊருக்குச் சென்றிருந்த தாயார் இங்கு வந்ததும் வரும் வார இறுதியில் ஜெர்மனி செல்வதாக எப்போதோ வாக்கு கொடுக்கப்ட்டிருந்தது.
எனது மைத்துனர் வீட்டிற்கு சென்ற சனியன்று குடும்பமாகச் சென்றிருந்தோம். பிள்ளைகளை அங்கு விட்டுவிட்டு அடுத்தநாள் பாரீசு திரும்ப வேண்டும். திங்களன்று மனைவிக்கு விடுமுறை கழிந்து வேலை தொடங்குகிறது. நாம் போனபோது அங்கே இந்த வார சனி - ஞாயிறுக் கொண்டாட்டமாக 'ஒத்தபாலார் இணைவுத் திருவிழா" கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனது மைத்துனர் பணியாற்றும் உணவகத்தில் பெரும் கூட்டம் அலைமோதுவதால் கடுமையான உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது பெரிய மகனும் அங்கு தற்காலிக மேலதிக வேலைக்காக இணைந்திருந்தார். இவர்களுடன் அடுத்த வருடம் பல்கலைக் கழகத்தினுள் புகவுள்ள எங்களது மூத்த மகனும் தற்காலிக மேலதிக பணியில் இணைந்து கொண்டார். வண்டி ஓட்டிச் சென்ற பயணக் களைப்பால் நாம் முன்னரே தூங்கிவிட்டதால் சனியன்று நாம் அவர்களுடன் உரையாடவே முடியவில்லை.
ஞாயிறு பகல் வேலைக்கு அவர்கள் செல்ல வேண்டும் நாமோ பாரீசு திரும்ப வேண்டும். இடையில் கொஞ்ச நேரம் மைத்துனரோடு உரையாட முடிந்தது. இந்த உரையாடல் கொஞ்சம் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. மைத்துனருக்கு 'ஒத்தபாலார் இணைவு" புதிர் கலந்த வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
'அத்தார்! ஆணும்- ஆணும் பெண்ணும்- பெண்ணும் கல்யாணம் செய்து என்னதான் சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை?....... நல்ல முசுப்பாத்தியாகத்தான் இருக்கு! அவர்களும் அவர்களது கொஞ்சல்களும்!!" நான் அவரது முகத்தை உற்று நோக்கியவாறு ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்ததானது, அவரைத் தொடர்ந்தும் உரையாட வைத்தது.
'உங்களது பிரான்சின் தற்போதைய புதிய அதிபரும் இவர்களது திருமணத்துக்கு முன்னுரிமையை வழங்கித்தானே இருக்கிறார்?"
'ஓம்! இப்போது உலகம் முழுவதிலும் இந்த வகையான இணைவுக்கு ஒத்துப்போகும் நீதி வழங்கும் சட்ட உரிமம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன." என்ற எவ்வித ஆச்சரியமும் கலக்காத எனது பதில் அமைந்திருந்ததை அவருடைய முகத்தின் சலனங்கள் புலப்படுத்தின.
'அதெப்படி மூன்று அல்லது நான்கு சதவீதத்தினரது கிலேச விருப்பத்தை இந்த சனநாயக நாடுகளில் பெரும்பான்மையை மீறிச் செய்கிறார்கள்?" என்ற மைத்துனரின் கேள்வியில் அமைந்திருந்த நியாயம் என்னைக் கவர்ந்தது.
'எல்லாமே எதிர்கால இலாபத்திற்காகத்தான்!" அமைதியாக நான்.
'இலாபமா? யாருக்கு?"
'இப்படியானவர்கள் குழந்தைகள் பெறும் போது வருமானம் பெருகும். புத்தம் புதியதான தொழில் வாய்ப்பு கிடைக்கும்."
'அதெப்படி அத்தார்?"
'உயிரி வாழ்வுக்கான அத்தியாவசிய இயற்கை நிலம் நீர் காற்று எல்லாமே இப்போது சந்தைப் பண்டமாகி விற்கத் தொடங்கிவிட்டனதானே! இதன் அடுத்த கட்ட நீட்சிதான் மனித இனவிருத்தி வியாபாரம்."
'ஓரினச் சேர்க்கையாளர்களும் பிள்ளை பெற முடியுமா?"
'உலகமயமாகிய வியாபாரத்துடன் இணைந்துள்ள விஞ்ஞானம் மனித வினையாக்கத்தில் புதியதான உலக ஒழுங்கைத் தரப்போகிறது. எதிர்காலத்தில் 'நோகாமல் பிள்ளைகள் பெற்றெடுக்கப் போகிறார்கள்!" யாராருக்காகவோ புதியதாக உருவாகவுள்ள ஈண் இல்லங்களில் வாடகைத் தாய்மார்கள் - ஈன்றாள் (surrogate) இவ்வேலைகளைச் செய்யப் போகிறார்கள். அதுமாத்திரமில்லாது விற்பனைக்காக தாய்ப் பால் கொடுக்கும் கறவைப் பெண்களாகவும் இருக்கப் போகிறார்கள். தற்போதே தொடங்கப்பட்டுள்ள இந்த வகையிலான பெற்றெடுக்கபடும் பிள்ளைகளுக்கு ஒரு இலட்சம்யூரோக்கள் கொடுக்க நோகாத பெற்றோர் தயாராகி விட்டார்கள்." என்ற என் சிறுவிளக்கம் மைத்துனருக்கு ஒரளவு புரிந்திருக்கவேண்டும். அவர் முகத்தில் சிறு பிரகாசம் மின்னிச் சென்றது.
'இந்த நகரத்தில் இங்கு பிறந்து வளர்ந்த ஒரு புலம்பெயர்ந்த தமிழ்ப் பெண்பிள்ளையும் இப்படியாகத் திருமணம் செய்து போயிட்டா...."
'என்னது?" இப்போது ஆச்சரியப்பட்டது நான்தான்.
'அவளது தாய் தகப்பன் மிகவும் கவலையோடு இருக்கிறார்கள். பார்க்கப் பாவமாக இருக்கிறது." என்றவாறு தொடர்ந்தார்.... 'நம்மவர்கள் போய்க் கதைப்பதாலோ என்னவோ அப்பெண் இங்கிருந்து 150 கிலோ மீற்றர் தொலைவில் வேறிடமொன்றில் குடியேறி வாழத் தொடங்கிவிட்டார். அவளின் தாய் தகப்பனை நினைக்கவே எங்களுக்கு வேதனையாக இருக்கு...." பெருமூச்சை விட்டவாறு அவ்விடத்தைவிட்டு அகன்றார்....
ஒன்றுமே பேசாதவனாக அந்த இருக்கையில் உறைந்தவனாகினேன்.
0000000000
பல்வேறு நினைவுகளுடன் நான் சங்கமிக்கிறேன்.

0-   புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில், எம்மோடு வளரத் தலைப்பட்ட ஆனாலும்; புலம்பெயர் நாட்டுச் சூழலுடன் பின்னிய எமது வாரிசுகளின் வளர்ச்சியுடன் நாமும் இயைந்தும் உரசியவாறும் அசைவுற்றுக் கொண்டிருக்கிறோம். இது புத்தம் புதியதோர் அனுபவங்களாகி பதிவுறுகின்றன. இங்கு பெரும்பான்மையான பெற்றோர் தமது பதிம வயதின் கடைசியிலிருந்து வாலிபத்தைத் தொடும் பிள்ளைகளை 'குமர்ப் பொட்டைகளாகவும்" 'குமர்ப் பொடியங்களாகவும்" குறிப்பிட்டு அதீத அவதானிப்புடனேயே வளர்க்கின்றனர்.
இதனால் வெளியிலே சொல்ல முடியாத மிகை மன அழுத்தத்துடனேயே நாளாந்த வாழ்வைக் கழிக்கின்றனர். சூழலுடன் முழுமையாக இயைய முடியாத முதற்தலைமுறையினருக்கு தாம் வாழ்ந்த தத்தமது கிராமத்திலான சிறு பிராய நினைவோடையே முன்னுதாரணமாகி விரிந்தாலும் குடியேறிய பென்னம்பெரு நகர வாழ்வோட்டம் புரட்டிப் போட்டவாறே அசைகிறது.
நமது பிறந்த ஊர்க் கிராமங்களில் ஆண் பிள்ளைகள் என்றால் 'சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணி கண்ட இடத்தில் கழுவிச் செல்வதாக" அலட்சியத்துடன் வளர்க்கபட்டுவது சாதாரணம். ஆனால் புலம்பெயர்வு வாழ்வில் இவர்களை 'குமர்ப் பொடியங்களாக" பொத்தி கவனமாக வளர்க்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.
2013 மே நடுப்பகுதியில் பாரீசில் ஒரேபாலார் இணைவுச் சட்டமாக்கலுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஆர்பாட்டப் பேரணியின் ஒரு காட்சிப் பதிவு


0-   எதிர்கால மகப்பேறுக்கான வாடகைத் தாய் - ஈன்றாள் (surrogate) ஒருத்தியுடன் ஒப்பந்தம் செய்து அவளிடத்தில் முளையை விருத்திக்கான பொறுப்பினை   ஒப்படைக்கபடும். இத்தகைய தொண்டாற்றுவதற்காகவே 'ஈண் இல்லம்' மாதச் சம்பளத்தில் ஈன்றாள் பெண்களை வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள். வைத்தியர்களின் கண்காணிப்பில் அவர்களது ஒவ்வொரு செயல்களும் நடைபெறும். என்று குறிபிடுகிறார் கல்வியாளர் பொ. கனகசபாபதி (நூல் : திறவு கோல்).

0-   சென்ற நு}ற்றாண்டில் வெளிவந்திருந்த சிலுவையில் தொங்கும் சாத்தான்(கூகி வா தியாங்கோ - ஆபிரிக்க நாவல். வெளியீடு: தாமரைச்செல்வி பதிப்பகம்) கூறும் தகவல்கள்  இன்று நாம் காணும் உலகில் பொருந்திப்போகின்றன. ஆபிரிக்க கென்யக் கலக எழுத்தாளரின் இந்நாவலை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும். புரிதல்கள்தானே மனித மனவளமூட்டலைக் கொடுத்து மானுட நேசிப்பை விரிவாக்குகிறது.

தொடர்பார்ன வேறொரு பதிவினுள் நுழைய : 

சரம் - 8 "வாடகை அம்மா"


-முகிலன்
பாரீசு 22.07.2013