Showing posts with label பந்தல் 5. Show all posts
Showing posts with label பந்தல் 5. Show all posts

Friday, 16 October 2009

கதைச் சரம் 15 ஒரு பூனை இரு பூனைகளாகின!


கதைச் சரம் 15
சிறுகதை

ஒரு பூனை இரு பூனைகளாகின!



நினைக்கவே ஆச்சரியமாக இருக்கு. இந்த வேலை கிடைத்ததே கனவுமாதிரித்தான் இருக்கு. இன்றைக்கு இங்குள்ள பொருளாதார தள்ளாட்டத்தால் இலேசில் வேலை கிடைப்பதில்லை. ஆனாலும் சும்மா இருக்கயேலாது. அங்க எமது ஊர் இனசனமெல்லாமே ஒட்டுமொத்தமாக வன்னி அக(வ)தி முகாமுக்குள்ள முடங்கி கிடைக்கிடைக்கைக்க என்னதான் செய்வது? காசு ஏதேனும் அனுப்பமால் தூங்கவும் முடியாதிருக்கு.....
வாற தொலைபேசி அழைப்புகளும் "எடுங்கோ' என்று சொல்லிப் போட்டு துண்டிக்கப்பட்டுவிடும். உடனே நாம் பதிலுரைத்தே வீட்டுத் தொலைபேசி மாதக்கட்டணமும் எகிறிப்போய்த்தான் வருகுது. அவரைப் ஏறிட்டுப் பார்க்கவே பாவமாக்கிடக்கு! அவர் வேலை செய்கிற தொழிற்சாலையில முந்தின மாதிரியில்லை. சம்பளமும் குறைத்துப் போட்டாங்கள். போதாததற்கு சம்பளமில்லாது வேலை பார்க்க வைக்கும் முதலாளிகளின் பொருளாதாரச் சிக்கல் நடiடிக்கைகளால் சிரமப்படும்(!) முதலாளிகளுக்காக உழைத்துக்கொடுக்கும் இன்றைய உலகமயமாக்கல் தொழிலாளியாக அல்லல்படுகிறார்.

இந்தச் சமயத்திலதான் இந்த வேலையும் வந்ததை யார்தான் விடுவார்கள். அப்படியே இறுக்கிப் பிடிச்சிட்டன். பதிவில்லாததால் சம்பளம் அரைவாசிதான், ஆனால் காசாகக் கொடுப்பான். . அடடே.. வேலை நேரத்தைச் சொல்ல மறந்திட்டன்! இரவு 11 தொடக்கம் அதிகாலை 3 மணி வரைக்கும். ஊரே உறங்கிக்கிடக்கும் சாமத்தில பிள்ளைகளை தூங்கப் போட்டுவிட்டு இவ்வேலைக்காக தூங்காது விழித்திருந்து தொலைக் காட்சித் தொடர்களைப் பார்த்துவிட்டு போகவேண்டும். வாரத்தில் 7 நாட்களும் வேலை. மூடப்பட்ட ரெஸ்ரோறன்டில முழுவதையும் கழுவித் துடைத்து வைப்பதுதான் இந்த வேலை. அடுத்த நாள் கடையைத் திறக்கும் முதலாளிக்கு எல்லாம் பளீரென்று இருக்க வேண்டும்!

முதல் நாள் வேலையை எப்படிச் செய்து வீடு திரும்பினனான் என்றே தெரியவில்லை. அப்படி ஓடிப் போய்ச்சுது! இரண்டாம் நாள் சாமத்தில போய்வாறதெண்டது சும்மா இருக்கல்ல. திக்கு திக்கென்றாயிற்று. வேலையையும் விடேல்லாது. தனியாக எப்படிப் போறதெண்டும் தெரியேல்ல. பிராங்போட் மாதிரி பெரிய நகரமென்றாலும் எப்படியாவது பயணிக்கலாம். இது வெஸ்ற்பாலினில் ஒரு சுக்குட்டிக் கிராம நகரம். ஊரே அடங்கி கிடக்கும். ஒரே பனிப்புகாருடனான மாரிகால இருட்டை எப்படி வர்ணிக்கிறது. ஊரில இருக்கைக்க சின்னப்பிள்ளையில இரவில ஒண்ணுக்குப் போறதற்கே அம்மாவை எழுப்பித்தான் போவன். நினைக்க அழுகை அழுகையாக வருது. அப்ப இந்த மனுசன் சொன்னது காரை ஓடிப் பழகென்று. இந்த செர்மன் மொழியில 'கோட்' பாஸாக என்னால முடியேல்ல.... இப்ப இதைக் கேட்டா 'வள்'ளென்று பாயும்!!
'என்ன செய்யலாம்? இந்த மனுசனோடும் கதைக்கயேலாது?.....' இப்படியான மன அவலத்துடனேயே முதல் நான்கு நாட்களும் ஓடிவிட்டன.

'கீழே இருக்கிற அக்காவையும் வேலைக்குக் கூப்பிட்டா என்ன?..... பேச்சுத் துணையாகவும் இருக்கும்! போய் வாற வழித்துணையாகவும் இருக்கும்!! வேலையையும் வேகமாக முடிச்சு வேளைக்குத் திரும்பிவிடலாம்!!.... அப்பாடா.. ஒரே எத்தனதில பல மாங்காய்கள்...... " எண்ணமே இனித்தது. மனசுப் பட்சியின் வழிகாட்டலை உடனேயே நடைமுறைத்த கீழே இறங்கி அக்காவின் வீட்டுக் கதவு அழைப்பு மணியை அழுத்தினேன்.

அரக்கப்பரக்கவென வந்த என்னை அக்கா உள்ளே அழைத்தார்.
"என்ன விசயம் இவ்வளவு பரபரப்பா வாறீர்?" அக்காவின் முகத்தில் எதிர்பார்ப்பு ஆச்சரியம் அப்படியே தெரிந்தது.
"இல்லை அக்கா ஒரு நல்ல விசயந்தான், உங்களோட மட்டும்தான் கதைக்கலாம்!" எனது பீடிகை அவருக்கு உந்துதலைக் கொடுத்திருக்க வேண்டும்.
"அதுதான் சொல்லுமென்!!"
"அது அக்கா எனக்கு இந்த ஊரிலேயே ஒரு வேலை கிடைச்சிருக்கு. ஆனா சாமத்தில போய் வரவேண்டும். இரவில தனியாகப் போய்வாறது எனக்குப் பயமாக்கிடக்கு!"
"அதுக்கு நான் என்ன செய்ய?" அக்காவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"நாங்க இரண்டு பேரும் இதைச் செய்தால் என்ன? பதிவில்லாது கையில வாற சம்பளம் இரண்டு பேரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். முதலாளியிட்ட நான் கதைக்கிறன்."
வெட்டிய லொட்டா(Loto) விழுந்த மகிழ்ச்சி அக்காவின் முகத்தில் மலர்ச்சியாகப் பளீரிட்டது. இந்தக்காலத்தில் இங்கு வேலை வீடுதேடி வந்து கிடைப்பதை நம்மவர்கள் நல்வாய்ப்பாகத்தான் நினைப்பார்கள்!!
"எனக்கென்ன நாளக்கே நான் வாறன்!!"
"நான் இன்றைக்கே முதலாளியிட்ட கதைத்து ஏற்பாடு செய்கிறன்." அடைக்கப்பட்டுள்ள வன்னி அகதிகளை வெளியில் நடமாட விடுவதாக அறிவிப்பு வந்தால் எப்படியிருக்குமோ அப்படி ஆறுதலாக இருந்தது எனக்கு.

இருவரும் சேர்ந்து வேலைக்குப் போய்வருவதால் நாட்கள் மிக வேகமாகக் கரைய இருமாதச் சம்பளத்தையும் பகிர்ந்தெடுத்தாயிற்று. இப்ப வேலையும் பழகிப் போய்ச்சு. போய் வாற பயமும் தெளிந்து போய்ச்சு.

நாங்கள் நடந்து போற பாதையிலே நம்ம மனசு போவதேயில்லையே! அது அதன்பாட்டுக்குத்தானே போய்க் கொண்டிருக்கும்! அப்படிப் போய்க்கொண்டிருந்தாலும் பரவாயில்லை அடிக்கடி எங்களையும் அதன்பாட்டுக்கு இழுத்துக் கொண்டேதானே இருக்கும். இப்ப புதிய நெருடல் தொடங்கியது.
'இந்த வேலையை நான் மட்டும் செய்தால் என்ன? காசும் முழுசாக்கிடைக்கும்!!'

'இப்போது இதை யாரிடம் எப்படிக் கதைத்து வெல்லுவது?' விக்கிரமாதித்தன் சுமந்த வேதாளத்தின் கதையாக நானும் என் மனசுப்பிசாசும் ஆனது. மனசு அலைய அலைய நரக வேதனைதான்.....!

'அக்காவுக்கும் என்னமாதிரித்தான் யோசனை ஓடுதோ?"
"அவவின்ர கதையும் பார்வையும் சரியில்லாமத்தான் இருக்கு!"
"அண்டைக்கு ஏன் பேய்க் கதையெல்லாம் கதைத்தவ?"
"அவவுக்தான் பேய் பிசாசென்றால் நடுக்கமெடுக்குமே! அப்படியிருக்கைக்க திரும்பி வாறபோது பிசாசு விறாண்டிய கதையை எனக்கு எதுக்காகக் கதைக்க வேண்டும்?"
"பிசாசு இருக்கோ இல்லையோ ஆனா இந்தச் சந்தேகம் ஒரு முழுப்பிசாசுதான்!"

இப்படியே உள்ளுக்குள் பொருமியபடி வெளிப்படையாக 'கலைஞர்" பாணியில் சிரித்துப்பேசி கச்சிதமாக நடிக்கும் நாட்களாக கள்ளநளினத்தோடு கரையத்தொடங்கின. என்னை என்னாலேயே நம்ம முடியவில்லை. "நானா இப்படி?" என் நடைத்தை கண்டு எனக்கே ஆச்சரியமாகக் கிடக்கு!

'என்ர மனுசனுட்டச் சொன்னா....... 'வள்ளென்று' எரிஞ்சு விழுந்ததோடில்லாமல் வேலையை அக்காவுக்கே கொடுத்துவிட்டு நிக்கச் சொல்லிப்போடும்!'
"நானும் பார்க்கிறன் பார்க்கிறன் என்ர மனுசனெண்டால்....... ஒரு சரியான லூசு! சும்மா லூசில்லை எல்லாத்தையும் பகிடியாப்பார்க்கும் வடிகட்டின முழுலூசு!!'

அன்றைக்கு சனி இரவு வேலையை முடித்துவிட்டு ராஜபக்சேயை பார்க்க சென்ற பாலுவுடன் போன கனிமொழியாக பவ்வியமாகச் சிரித்துப் பேசியவாறு அக்காவுடன் வந்துகொண்டிருந்தேன். இன்றைக்குப் பார்த்து அந்தப் பூங்காவுக்குப் போகும் பாதையின் தெரு விளக்கு அணைந்திருந்தது. ஆனால் நாம் வரும்போது ஒளிபரப்பிக் கொண்டிருந்த விளக்கு ஒருவேளை சுட்டிருக்கும்! பெரு மரங்களால் சூழப்பட்டிந்த பாதை 'கும்' இருட்டில் மூழ்கி இருந்தது. மலைப் பகுதிகளுக்கே உரிய பனிப்புகாரும் சேரவே இருட்டென்றால் அப்படியொரு இருட்டு. ஊரே அடங்கிக் கிடந்தது. நாளை ஞாயிறாகையால் எல்லா செர்மனியர்களும் போர்வைக்குள் நிம்மதியாக முடங்கியிருப்பார்கள். சுற்றுமுற்றும் பார்க்கையில் எந்த வீட்டிலும் விளக்கு எரிவாதாக இல்லை.

இந்த வழியால போனால் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சுற்றிப் போனால் பதினைந்து நிமிடங்களாகும். அக்கா நின்று திரும்பிப்பார்த்தா..... 'திக் திக் திக்' என்ற என் இதய ஒலியே எனக்குப் பலமாகக் கேட்டத் தொடங்கியது.

ஒருவாறு சுதாகரித்தவாறு, "என்ன அக்கா?" என்றேன்.
"அமலா!............... சுற்றுப் பாதையால போவமா?" மெல்லிய குரலில் பதைபதைப்பு வெளிப்பட எனக்கு உடம்பு சூடேறத் தொடங்கியது.
"வேணாம் அக்கா! என்னத்துக்குப் பயம்? நாங்க இரண்டு பேர் இருக்கிறம்தானே!" எனக்கு இப்படியான துணிச்சல் எங்கிருந்து வந்ததென எனக்கே தெரியவில்லை!

"ச........ரி......" என்றுவாறு அக்கா மெல்ல நடக்கத் தொடங்கினார். ஒருவரது முகத்தை மற்றவர் பார்த்தவாறு நம்மிருவரது நடையிலும் க.. வ.. ன.. ம் இருந்தது. கொஞ்சத் தூரம் போனபின் அக்காவின் நடையில் கொஞ்சம் தடுமாற்றம்....
"என்ன அக்கா?" நான் குசுகுசுக்கிறேன்.
"அங்க பாரும்......" என்று குசுகுசுத்தாவாறு அக்காவின் கை நீட்டித் திசைகாட்டிவிட்டு முடங்கியது. இந்தக் கும்மிருட்டில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.

"என்ன அக்கா? எனக்கு ஒன்றுமே தெரியேல்ல...." என்ற எனது குசுகுசுப்பில் பதட்டமிருந்திருக்க வேண்டும்.
அக்காவின் நடை நிக்க எனது நடையும் தானாக நின்றது. மெல்ல அக்காவின் கிட்டப்போய் முகத்தை உற்றுப் பார்க்கிறேன்.
அக்கா தனது முகத்தால் ஒரு பக்கத்தைக் காட்டியாவாறு கண்ணாலும் காட்டினார். அக்காவுக்கு கிட்ட நின்று உற்றுப் பார்த்ததால் அவர்காட்டிய திசையும் இடமும் ஓரவு அறிய முடிந்தது. அந்தத் திசையில் உற்றுப் பார்க்கத் தொடங்கினேன் முதலில் ஒரு பெரிய மரத்தின் அடிப்பாகம் மட்டுமே தெரிந்தது. இப்ப எனது சுவாசமும் எனக்குச் சத்தமாகக் கேட்கத் தொடங்கியது.

"அந்த மரத்தடியில் என்னதான் கிடக்கோ?' இருட்டு கொஞ்சம் பழக்கமாக "அதோ பளபளக்கும் இரு கண்கள்!..... ஆ..... நல்ல கறுத்தப் பூனைதான்!!" அதுவும் பதுங்கியவாறு எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லாமே ஒரு இருபது மீட்டர் தொலைவுக்குள்தான் இருந்தது.

மௌனித்து நின்ற என் காதுக்குள் அக்கா "அங்கா பாருமேன் ஒரு பூனை!" என்று குசுகுசுக்கிறார்.
"ஒன்றில்லை அக்கா!... இரண்டு!!" என்ற என் குசுப்பில் உறுதியிருந்ததையிட்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
"இரண்டா.........?" அக்காவின் குசுகுசப்பில் நிறையவே தழும்பல்
"அங்க பாருமேன் நாலு கண்கள் பளீரிடுது..... இரண்டு கொழுத்த பூனைகள்."
"என்ன!! எனக்கு ஒன்ஓதானே தெரியுது!" அக்காவின் குரலில் பயப்பிரமை அப்படியே இருந்தது.
நானோ விடவில்லை "அக்கா...! நல்லாப் பாருங்கோ இரண்டு....."
என்ர குசுகுசப்பைக் கேட்க முடியாதவராய் ஒனறுமே பேசாது அக்கா தடதடவென வேகமாக நடக்கத் தொடங்கினார். எனக்கு என்ன நடக்குதென்றே தெரியவில்லை. மெல்லப் பின்தொடரத் தொடங்கினேன்.

அக்காவின் மருட்சியை அந்தக் 'கும்' இருட்டிலும் என் கண்ணால் கண்டதாலோ என்னவோ எனக்கிருந்த பயமெல்லாம் கரைந்துவிட்டிருந்ததுபோலும்! ஆனாலும் பொத்திக்கொண்டு சிரிப்பு வரத்தொடங்கியது. மிகச் சிரமப்பட்டு செருமிச் செருமி அடக்கினேன். நான் செருமச் செரும அக்காவும் 'பயத்தாலதான் நான் செருமுகிறேன்' என நினைத்தோ என்னவோ இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

எப்படி வீட்டுக்குள் நுழைந்து கதவினைச் சாத்தினேன் என்றே எனக்குத் தெரியவில்லை. மூடிய வாசல் கதவில் சாய்ந்ததுதான் தெரியும். பொங்கிய சிரிப்பு கொட்டத் தொடங்கியது.......
கண்கலங்கச் சிரித்தேன். ஒருவாறு கண்ணைத் துடைத்தவாறு நிமிர்ந்தால்....

"என்னப்பா? சாமத்தில வந்துபோட்டு.... இப்படி நேரங்கெட்ட நேரத்தில சிரிக்கிறீர்?" நித்திரை குழம்பிய மனுசனுடைய குரலில் கடுமையும் கடுகடுப்பும் இருந்தது. ஏதுமே பேசாதவளாய் தலையைக் குனிந்தவாறு குளியல் அறைக்குச் செல்லும் என்னை அவர் குழப்பத்துடன் உற்றுப் பார்ப்பதும் ஏதோ நினைப்பதும் மனத்திரையில் தெரிகிறது.

- அருந்தா
செர்மனி ஒக்டோபர் 2009

Monday, 12 October 2009

சரம் 20 'நாளும் கோளும் நலிந்தோருக்கில்லை!'


'நாளும் கோளும் நலிந்தோருக்கில்லை!'
சரம் 20

சல சலவென அளவளாவிக்கொண்டிருந்த தமது இலைகள் உதிர்வதை தவிர்க்க முடியாத பரிதவிப்போடு எதிர்கொள்ளும் பாவனையில் மெளனிக்கும் மரங்கள் கட்டியங் கூறத் தொடங்கிவிட்டன. என்னதான் அறிவியல் தொழில்நுட்பம் அறியப்பட்ட ஐரோப்பிய சமூகமாக இருப்பினும் குளிர்காலம் நெருங்கத் தொடங்கியதும் ஒருவித தன்னடக்கமான செயல்கள் தானாகவே வெளிப்படத் தொடங்கிவிடும். நீண்டு செல்லும் அகதி வாழ்வில் எம்மையும் அறியாது நாமும் இயைந்தவர்களாய் இந்த ஐரோப்பிய சூழலில் இருப்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தக் குளிர்காலப் பயணங்களுக்கு நிலத்தடிப் பயணங்கள்தான் இதமான சூடாகவும் பரபரப்பாகவும் இருக்கும். எலிவளைகள் போன்ற தடமாற்றப் பாதைகளில் எத்தனையோ முகங்களின் தரிசனங்கள்! பாரீஸ் போன்ற மாநாகரங்களில் இந்தப் பொதுப் பாதைகளின் பரபரப்பான நடமாட்டம் இன்றைய வேக உலகின் போக்கை அப்படியே பளீரிடும். பாரீசுக்குள் வந்தவருக்கு இந்த நிலத்தடிப் பொதுப்பாதைகளின் கலை அழகூட்டலின் கரிசனைகளை அவதாக்கத் தவறமாட்டார்கள். ஒவ்வொரு தடமாகப் பயணிக்கும் மின்தொடரூந்துகளும் அவற்றுக்கான வெவ்வேறு தனித்துவமான அழகுடன் வடிவமைத்தே காணப்படும். தடமாற்ற நிலையங்களில் தனிக் கலைஞர்களின் வாத்திய இசையோ குரல் வழிப்பாடல்களோ இடம் பெற பொந்து வளைப் பாதைப் பயணங்களை வருடும்! பரபரப்பான பொது மனிதப் பயணங்களில் நாமும் ஒருவராகிச் செல்லும் இதமான சுகம் தனியனாகி மகிழ்வூர்தியில் செல்கையில் கிடைக்காது.

இப்படியாக ஒருநாள், எனது பெட்டியில் ஒரு தமிழ்க்குடும்பம் பரபரப்பாக ஏறி முன் இருக்கையில் அமர்கிறது. மூன்று சிறு பிள்ளைகளும் இளம் தாயாரும் இவர்களது இறுக்கமான உறவினராகக் காணப்படும் முதியவரான பெரிய அம்மாவாகவும் அக்குடும்பம் காணப்பட்டது. அந்த அம்மா நிமிர்ந்த நடையும், திடமான தோற்றத்துடனும் தனது செழிப்பைக் காட்டும் அணிகலங்களுடனும் இருந்த தோற்றம் இவர் வேறொரு நாட்டிலிருந்து இங்கு வந்துள்ளதை இலகுவில் வெளிப்படுத்தியது. இந்த எதிர்ப்பக்க இருக்கையில் தமிழ்ப் பத்திரிகையொன்றுடனும் தோளில் பையுடன் மிடுக்காக வந்த இன்னோரு ஒருவர் அமர்கிறார். வண்டி நகரத் தொடங்கியது. செவிப்புலனை முடுக்கிவிட்டு அமைதியாகப் பயணிக்கிறேன்.

பிள்ளைகளின் நலனைக் கரிசனையுடன் குசலம் விசாரிக்கிறார் பெரியம்மா. பிள்ளைகளின் பிறந்த நாள், நட்சத்திரம் பற்றியெல்லாம் அறிகிறார்.

"இவன் மகர ராசிக்காரன்.... நல்ல சுட்டியாகவும் அம்மாவுக்கு ஒத்தாசையாகவும் இருப்பான். ஆனால் இளம் வயதில் நோய்நொடி வராது கவனமாகப் பார்க்க வேண்டும்!" என மூத்த மகனைக் காட்டிச் சொன்னார் அந்தப் பெரியம்மா. அந்த இளந்தாயின் முகத்தில் பல்வேறு மாற்றங்கள் வந்து செல்கின்றன. முகத்தில் பொன்முறுவலையும் தந்து செல்கிறது!

"இவன் இருக்கிறானே உனது இரண்டாவது தனுராசிக்காரன்! உன்னைப் பாடாய்படுத்தப் போகிறான்..... ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். எல்லாமே அந்த ஆண்டவன் விட்டவழியில்தான் நடக்கும்!" என தாயின் அருகில் ஒன்றுமே அறியாததாக இரண்டு வயது பாலகனாக இருந்தவனைப் பற்றியதாக இருந்தது.

இதைக் கேட்ட எனக்கே மலைப்பாக இருந்தபோது அந்த இளந்தாய்க்கு எப்படியிருந்திருக்கும். அவரின் முகத்தைப் பார்க்க அஞ்சியவாறு ஒரு கணம் கடைக்கண்ணால் பார்க்கிறேன். 'அடடா....... அந்த இளந்தாயின் முகத்தில் தோன்றிய இருள்....' என்னைச் சங்கடப்படுத்தத் தொடங்கியது. 'எழுந்து சென்று விடுவோமா..." என்று என்று தோன்றியது.

அடுத்ததாக தாயின் நெஞ்சில் ஏணைப் பட்டியாகக் கட்டப்பட்டு தொங்கியவாறு தூங்கிக் கொண்டிருந்த கடைக்குட்டியான பெண் பற்றிய பலன்கள் சொல்லப்பட்ட வண்ணம் நீண்ட உரையாடலில் எனது மனம் செல்லாமல் தவிர்த்துக் கொண்டு இறுகியது.

திடீரென எமது இருக்கையின் எதிராக அமர்ந்திருந்த அந்த பத்திரிகை மனிதர் எழுந்து வந்து வணக்கம் சொல்கிறார். ஆச்சரியமாகத் திரும்பியவனாகப் பார்க்கிறேன். எல்லோரும் வணக்கம் சொல்கிறார்கள்.

"அம்மா! நீங்கள் வயதில் பெரியவர்.. எல்லோருக்கும் மூத்தவர்...... நான் என் கருத்தைச் சொல்லலாமா?" என அந்தப் பெரியம்மாவைப் பார்த்து இதமாக வினவினார்.

"ஓம் தம்பி!.... தாராளமாகச் சொல்லுங்கோ!" என்றார் மகிழ்வுடன்.

"அம்மா நான் யாரையும் குறை சொல்லும் நோக்கத்துடன் கதைப்பவனில்லை. நான் கதைப்பதை குறையாக நினைக்கவே கூடாது!" என்ற பீடிகையுடன் அந்தப் பெரியம்மாவைப் பார்க்கிறார் அவர். அவரது கண்களில் காணப்பட்ட தீர்க்கமானதொரு ஒளி என்னை ஈர்க்கிறது.

"தம்பி! நீங்கள் தாராளமாகவே கதைக்கலாம்!" என்றார் அந்த பெரியம்மா திறந்த மனதுடன்.

"நீங்கள் கதைத்து வந்த உரையாடல்களை நானும் கேட்டுக் கொண்டு வந்ததால்தான் இதில் கதைக்கிறேன். நீங்கள் சொன்ன பலன்களால் அந்த இளந்தாயின் முகத்தில் தோன்றிய மாற்றங்களால் துணுக்குற்றதால் உந்தப்பட்டே நான் கதைக்கிறேன். நம்ம நாட்டார் பழமொழி ஒன்று இருக்கு 'நாளும் கோளும் நலிவுற்றோருக்கில்லை!' தெரியுமா?....... நாடுவிட்டு நாடுவந்து குடும்ப உறவுகளை விட்டு தொலைவில் தன்னந்தனியாக பிள்ளைகளைப் பெற்று சிரமங்களுடன் இருக்கும் இந்த இளந்தாயார்களும் நலிவுற்றார்கள்தானே!"

அந்தப் பத்திரிகையுடன் வந்த அந்த மனிதரை வாஞ்சையுடன் பார்க்கிறேன். மனதில் மின்மினிப் பூச்சிகள் பறக்கின்றன.

வண்டியைவிட்டு இறங்கி நடக்கையில் இந்த உரையாடல் நினைவுகள் மீளவும் வந்து செல்ல எப்போதோ ஒருநாள் "வாஸ்து பார்க்குறாங்களாம்...... வாஸ்துசாத்திரமாம்... கக்கூசு கட்டுறதுக்கும் வாஸ்து.. இது என்டாது.. வெளிக்குப் போகக்கிலை... சுப்பிரமணி உனக்குவரலே....! கோவிந்தசாமி உனக்குவரலே....! என்னடாகிது வெளிப்போறதுக்கும் சாஸ்திரமா?..... " எனும் பெரியார்தாசனின் நையாண்டிப் பேச்சு நினைவில் தோன்ற முன்முறுவலிடுகிறேன்.

- முகிலன்
பாரீஸ் - ஒக்டோபர் 2009

Thursday, 17 September 2009

கதைச் சரம் 14 ஏட்டுக் கல்வியும்... நடைமுறையும்


கதைச் சரம் 14
செவி வழிக் கதை 12
ஏட்டுக் கல்வியும்... நடைமுறையும்

மொஸ்கோ மா நகரத்தில் அமைந்திருக்கும் மருத்துவக் கல்லூரியின் மதிய உணவு இடைவேளையின் போது கிடைக்கும் சிறிது நேரத்தில், நண்பர்களான அந்த மூன்று மருத்துவத்துறை இறுதியாண்டு மாணவர்களும் காலாற நடப்பதையும் பூங்காவுக்குச் சென்று அமர்ந்திருந்து தமது பாடங்களை மீட்பதுமான வழக்கத்தைக் கொண்டிருந்தனர். மருத்துவக் கல்வி முடிவில் என்னவெல்லாம் செய்யவேண்டுமென்ற தமக்கிடையிலான அளவளாவல்களையும் இவர்கள் செய்வது வழக்கம்.

கோடை காலத்தை வெயிலில் தரிசிப்பதற்கு ஐரோப்பியர்களுக்கு நிகராக யாருமே இருக்கமாட்டார்கள். உடம்பு முழுவதையும் பொத்தி மூடியவாறு இறுக்கமாக வாழ நிர்ப்பந்திக்கும் குளிர் கால அனுபவம் கோடையின் அருமையை பாரம்பரிய அனுபவக் கொடையாக்கியதில் வியப்பென்ன இருக்கிறது. குதூகலமான நடமாட்டம் இக்காலத்தில் எல்லா பிராயத்தினராலும் இருக்கும். வைத்திய மாணவர்களாகையால் மனிதர்களின் நடையை உற்று நோக்குவதும் அத்தகைய நடையுடைவர்களுக்கு 'மருத்துவம் தொடர்பான என்ன பிரச்சனைகள் இருக்கலாம்?' எனவாக அலசுவதை இவர்கள் சிலவேளைகளில் நடாத்துவதும் உண்டு.

இன்று, மாலை நேர வகுப்பு ஒரு மணித்தியாலம் சென்ற பின்னர்தான் ஆரம்பிக்குமாதலால் கொஞ்சம் தூரம் காலாற நடந்துவந்திருந்தனர். அந்த அகண்ட வீதியின் ஓரமாக அமைந்திருந்த பூங்காவிலிருக்கும் பெரிய மரத்தின் கீழ் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு கதைத்துக் கொண்டிருந்தனர். பிரதான வீதியில் செல்வோரையும் காணக்கூடியதாகவிருக்கும் இந்த இருக்கை அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. பக்கத்திலேயே பேரூந்து தரிப்பிடமும் இருப்பதால் திரும்பும்போது விரைவாகக் கல்லூரிக்குச் சென்றுவிடலாம்.

அப்போது, பேரூந்தில் இருந்து இறங்கிய ஒருவரது நடை இவர்களது கவனத்தைப் பெற்றது.. வயிற்றை உள்ளிழுத்தவாறு மூச்சை நிதானமாக விடமுடியாது பரிதவித்தவாறு மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். அவரது கைகள் அசாதாரணமாக உடம்பின் பல பாகங்களையும் பிடித்தவண்ணம் இருந்தன. வழமையற்றிருந்த அந்த மனிதரின் நடவடிக்கையைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

"நண்பா, இவருக்கு இருதயக் கோளாறு வந்துள்ளது போலிருக்கு... உடனடியாக முதலுதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும்." முதலாவது எண்ணத்தை உதிர்த்தான் ஒருவன்.

"இல்லை... இல்லை இதயக்கோளாறு இருந்தால் அடியெடுத்து நடக்க முடியாது. இவருக்கு காலில்தான் பிரச்சினை இரண்டு முழங்காலிலும் மூட்டுச் சுழற்சி நடைபெறாத வாதப் பிரச்சனையால் அவதியுறுகிறார்." இது இரண்டாவதான மாணவனின் கருத்தானது.

"இல்லையில்லை! நண்பர்களே! அவரது கால் சில சமயத்தில் மெல்ல மேலும் கீழும் தூக்கப்படுகிறது. முகம் கோணிப் போயுள்ளது. தலையையும் தடவுகிறார்.... கைகளால் இறுக்கிப் பிடிக்கிறார். பதட்டமடைந்தவராக இருப்பினும் நிதானமாகத்தான் நடக்கிறார்.... நடக்க முடியாதவாராகவும் திணறுகிறார்.... எனக் கென்னவோ இவருக்குச் சித்த சுவாதீனப் பிரச்சனை(மனக் கோளாறு நோய்) இருப்பதாகத்தான் தெரிகிறது." என்றார் மூன்றாவதான மாணவன்.

இப்படியாக இவர்களது அலசல் நடைபெறம்போது அந்த மனிதர் இவர்களுக்கு அண்மையில் வந்தடைதுவிட்டார். மூவரும் அவருக்கருகில் சென்று, தங்களது கண்டுபிடிப்புகளில் எது சரியென்பதை உறுதிசெய்யலாயினர்.

"ஐயா, நாங்கள் மருத்துவத் துறை இறுதியாண்டு மாணவர்கள். தங்களுக்கான நோயை ஒருவாறு ஊகித்திருக்கிறோம். உங்களது நோயைக் குணப்படுத்த உடனடியாக உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். வாருங்கள் மருத்துவமனைக்கு.." என்றார்கள் கரிசனையுடன்.

வார்த்தைகள் தடுக்கித்தடுக்க "நோயா!.... எனக்கா?.... என்ன சொல்ல வருகிறீர்கள் தம்பீகளே!" மிகுந்த ஆச்சரியத்துடன் அந்த மனிதர்.

நண்பர்கள் ஒருவரை மற்றவர் தடுமாறிப் பார்த்தனர். "உங்களது நடையில்... நடக்க முடியாதவாறான தடுமாற்றமாக இருக்கிறதே...!" முதலாவதவன் கேட்டுவிட்டான்.

"ஓ!! அடபோங்கடா தம்பீகளா... நான் அவசரமாக வெளிக்குப் போகவேண்டிய நிர்ப்பந்த நிலையில் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்... தவிக்கிறேன். அதற்காக இடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...." தனது அவஸ்தையையும் பொருட்படுத்தாது கிளம்பிய மென் முறுவலுடன்.

- முகிலன்
பாரீசு செப்டெம்பர் 2009

இக்கதை மொஸ்கோவில் பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பி என்னுடன் பணியாற்றிய நண்பர் துருவர் சொன்னது.

Wednesday, 16 September 2009

பகிர்வுச் சரம் - 1 வால்மீகி இராமாயணம்



பகிர்வுச் சரம் - 1
வால்மீகி இராமாயணம் - மறுவாசிப்பு


அன்று காவியங்களாகவும் கூத்து, நாடகங்களாகவும், இப்போது, பிரமாண்டமான சினிமா - தொலைக் காட்சிகளாலும் பரவலான பார்வைத் தளத்தில் காண்பிக்கப்படும் "இராமாயணம்". தற்போது மணிரெத்தினத்தின் தயாரிப்பில் இருக்கும் படமும் 'ராவணன்'தான்.

வட இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி இராவணன்
அழிவைக் குறிப்பதாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. தற்போத இந்திய அடையாளத் திருநாளாக உலக நகரங்களில் 'தீபாவளி' கொண்டாடப்படும் நிகழ்வுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

தீபாவளி வெளி
ப்பாடுகளை தடபுடலாக்கும் இத்தருணத்தில், இதற்கான மறுவாசிப்பைத் தரும் அழ்வாய்வு நோக்கிலான தேடலாக வெளிவந்துள்ள நூலின் அறிமுகத்திற்காக இதனைப் பகிர்கிறேன். நீண்டு பயணிக்கும் மானிட வாழ்வியலில் மனித மனம் சார்ந்த பக்குவப்படல் எவ்வகையான பரிணாமங்களை இதுவரையில் பெற்றுள்ளது? ஒப்பிடவே வேண்டும். இவ்வாறானவை இனி பகிர்வுச் சரமாகப் பதிவுறும்.
நன்றியுடன்
- முகிலன்

0000000000



நூலில் இருந்து......

உத்தர காண்டம்
(ஒட்டக்கூத்தர்)

சாம்பன் - ஆதி தமிழன் கொல்லப்பட்டான்

இப்படியாக ராமன் அயோத்திபுரியை ஆண்டு வந்தான். ஒரு நாள், பார்ப்பனன் ஒருவன், "ராமா! உன் ஆட்சியில் இவ்வாறு பிராமணக் குழந்தை சாகலாமா?" என்று கத்தினான், கதறினான், அழுதான்.

கூடவே நாரதனும் வந்திருந்தான். அவன் "ராமா! உன்னுடைய ஆட்சியில் வருணக் காப்பு தவறி இருக்குமோ?" என்று வினவினான். வினவி விட்டு, அவனே பதிலும் சொன்னான்.

"ராமா! சூத்திரன் என்பவன், பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று சாதியருக்கும் அடிமைபோல் உழைக்க வேண்டியவன். ஆனால் சூத்திரன் அவ்வாறு செய்யாமல், கால்மேல் காலை வைத்தபடி ஒரு மரத்தடியில் தவம் செய்கிறான், கல்வி கற்கிறான். சிறந்த தவத்திற்கு உரிமையில்லாத ஒரு சூத்திரப் பயல் கடுந்தவம் செய்கிறான். பெருமை தரும் உயர் கல்வியைக் கற்கிறான். சூத்திரன் கற்றதினால் தந்தை இருக்க மகன் மரணம் அடைய நேர்ந்தது" எனச் சொன்னான் நாரதன்.

ராமன், உடனே புறப்பட்டான். வடக்கே தேடினான், மேற்கே தேடினான், கிழக்கே தேடினான், சூத்திரனைக் காண முடியவில்லை. தென்திசைப் பக்கம் அப்பெருந்தவத்தானை, சூத்திரனை, தாமரை புத்த தடாகத்தின் அருகிலிருந்த அரச மரத்தடியில், கால்மேலாய்த் தலை கீழாய் நின்று தவம் செய்வோன் தன்னைக் கண்டான்.

கார்மேக வண்ணத்தான், கருணை மிகுந்த ராமன், "நீ மறையவனோ? மன்னவனோ? வணிகனோ? சூத்திரனோ?" என்றான்.

அவன் "தும்பை மலர் மாலை சூடியவனே! நான் சூத்திர யோனியில் வந்தவன், சூத்திர சாதியில் பிறந்தவன், என் பெயர் சாம்பன். அறிவைப் பெருக்க வேண்டி தவம் செய்கிறேன்" என்று 'உண்மை' சொன்னான்.

ராமன் உறை வாளை உருவினான், அந்தச் சாம்பனின் தலையைச் சீவினான்.

சிறந்த கல்வியைக் கற்ற சூத்திரன் கொல்லப்பட்டான். பார்ப்பனன் மகன் உயிர் பெற்றான்.

தேவர் உலகம் மகிழ்வுற்றது.

-முற்றும்-

0000000000000000000000

இந்நூல் முன்னுரையிலிருந்து......

'இராமாயணம்' நாடே அறிந்த கதை. தமிழர்களைப் பொருத்தவரை சங்க காலத்துப் பாடல்களிலேயே, அக்கதையின் வால் தெரிகிறது. இன்றைய தமிழகத்தில் இராவணனைப் போற்றுவாரும் உள்ளனர். ராமனைப் போற்றுவாரும் வாழ்கின்றனர். இராவணனுடைய பெயரைத் தங்களுடைய வாரிசுகளுக்குச் சூட்டி மகிழும் பெற்றோர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என்பதை அனைவரும் அறிவர்.

வால்மீகியால் எழுதப்பட்டதை ஒட்டியோ அல்லது தழுவியோ இராமாயணத்தை எண்பதிற்கு மேற்பட்டோர் எழுதியுள்ளனர். ஒன்றுக்கொன்று வேறுபட்ட வகையில் அமைந்தவை என்பதனை மயிலாப்பூர் 'சமசுக்கிரதக்' கல்லூரி ஆங்கிலத்தில் வெளியிடு்டுள்ளது என்பதை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கதையின் நாயகன் ராமன் பிராமண தர்மத்தையும், அதற்கு ஆணிவேராக உள்ள நால்வருண்ண தர்மத்தைக் (சாதிப்பாகுபாட்டை) காப்பாற்றுவதற்கு என்றே பிறந்தவன்.

"என்னுடைய மனைவியாகிய சீதையை விட்டுவிடு என்றாலும் விட்டுவிடுவேன்! எனது ஆனால் பிராமணர்களைப் பாதுகாப்பதையோ, அவர்களுடைய தருமத்தைக் காப்பதையோ எள்ளால் விட முடியாது!" என்று தசரத ராமனின் வாயாலேயே சொல்ல வைக்கிறார் வால்மீகி.

பிராமண தர்மத்தையும், அவர்கள் ஆடு, பசு போன்றவைகளைக் கொன்று செய்யும் யாகங்களைச் செய்யவிடாது தடுப்பதும், தன் இனத்தை, வேறு ஓர் இனம் கொன்று அழிக்கும் செயலை எதிர்ப்பதுமே தனது ஆட்சியின் வேலை என்று சொல்லக்கூடிய பவுத்த நெறிக் கொள்கையைப் பின்பற்றுகிறனாகவே ராவணன் திகழ்கிறான். இவ்வாறுதான் ராவணனைச் சித்தரிக்கிறார் வால்மீகி முனிவர்.

இராமன், அத்துமீறி மற்றவர்களின் காடுகளையும், நாடுகளையும் ஆக்கிரமித்து தனது காலடியில் விழுந்து கிடக்கின்றவர்களாக வாலியின் தம்பியையும், ராவணனுடைய தம்பி விபீசணனையும் தனது கதையில் சித்தரிக்கிறார்.

இவை போன்று வேறு பலவும் இக்காவியத்தில் உண்டு என்பதை முன்பே அறிந்தவர்கள்தான் தமிழர்கள்.

இருந்தாலும் இதனை அறியாத ஒரு சிலர் படித்து மகிழவும், சிந்திக்கவும், தன்மானம் பெறவும் இச்சிறு நூல் உதவும் என்ற நம்பிக்கையோடுதான் இதனை வெளியிடுகிறோம்.

நான் ஒரு சுயமரியாதைக்காரன். ராமாயணத்தை ஏற்றுக்கொள்ளாதவன். ஆனாலும் மக்கள் எல்லாவிதமான கருத்துகளையும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் இதனை தமிழாக்கம் செய்துள்ளேன். தவறாக மொழிபெயர்த்துள்ள இடத்தை மட்டிலும் திருத்தியுள்ளேன்.

வால்மீகியின் கருத்தை எந்தவொரு இடத்திலும் நான் சிதைக்கவே இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

இந்த ராமாயணத்தின் சமசுக்கிரதத் தொகுப்பு என்னிடத்திலேயே உள்ளது. அய்யப்படுவோர், வேண்டும்போது எனது இல்லம் வந்து ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


- குருவிக்கரம்பை வேலு
00000000000000



வைதீக இலக்கியங்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக அவற்றைப் பயில வேண்டும். மறுவாசிப்புச் செய்ய வேண்டும். 'சீன தேசத்துக்குச் சென்றேனும் அறிவைத் தேடு' என்ற ஓர் இறைதூதர் சொல்லியுள்ளார். சமஸ்கிரதம் தொலைதூர நாட்டு மொழியல்ல. நம் நாட்டிலேயே செயற்கையாகச் 'செய்ய'ப்பட்ட மொழி. இம் மொழியைப் படிப்பதும் இம் மொழியில் புதைக்கப்பட்டுள்ள உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டுவருவதும் அரிய செயலல்ல. தோழர் வேலு 'வால்மீகி இராமாயணம்' மூலம் இதைத் தொடங்கி வைத்துள்ளார். இளந் தலைமுறை இப்பணியை ஏற்று இன்னும் விரிவுபடுத்திச் செல்லவேண்டும்.
- இந்நூ லை வெளியிட்ட சாளரம் வைகறை
000000000000


நூல் : வால்மீகி இராமாயணம்
தமிழில் : குருவிக்கரம்பை வேலு
வெளியீடு : சாளரம், சென்னை

Tuesday, 15 September 2009

சரம் - 19 இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி ?

சரம் - 19

இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி ?

பக்திப் பிரவாகத்துடன் கோயில் பூசையுடன் அந்த இளம் அடுத்த தலைமுறைத் தமிழர்களின் திருமணம் ஐயரின் ஆசீர்வாதத்துடன் சென்ற ஞாயிறன்றுதான் நடந்திருந்தது. பிரமாண்டமான மண்டபத்தில் தமது அழைப்பை ஏற்று வந்திருந்த பெருங்கூட்டத்தின் ஆரவாரத்தால் பெற்றோர் சொந்தங்கள் பந்தங்களைச் சந்தித்த திருப்தியுடன் இருந்தனர். நடைபெறும் நிகழ்வுகளை ஆவல் ததும்பும் நிறையவே கேள்விகளோடுதான் வேடிக்கை பார்த்தனர் புகலிட இளந்தலைமுறையினர்.

இளந்தம்பதியினரை கல்யாணம் முடிந்தபின் முதல் பூசை பார்ப்பதற்காக கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பூசை முடியவும் பெண்வீட்டார் நான்காம் சடங்கிற்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் செல்ல விரும்பினர். ஐயர் விடுவதாக இல்லையாதலால், வேறு வழியில்லாது எல்லாம் முடிந்தபின் வரவேண்டிய கடையின் பெயரைச் சொல்லிவிட்டு (மீண்டும் சந்திப்பதற்கான இடம்) பெண்ணின் தந்தையும் மாமன்மாரும் அவசரமாக கடைத் தெருவுக்கு விரைந்தனர்.

கோயில் பூசை முடிய அனைவரும் பகிடிவிட்டுச் சிரித்தவாறு குறிப்பிட்ட கடைக்குச் செல்கின்றனர். அக்கடை இறைச்சிக்கடையாக இருந்ததால் கூடவே பல்வேறு சடங்குகள் அறியும் ஆவலுடன் வந்திருந்த மாப்பிளையின் தங்கைக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்....! ஆனாலும் ஏதும் பேசாதவளாகி சுற்றுமுற்றும் கடையை நோட்டமிடுகிறார். அவரது கண்களில் அங்கு மாட்டியிருந்த சாமி படம் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. மச்சம் சாப்பிட்டாலே சாமி அறைக்குள் நுழைய மறுக்கும் அம்மாவின் அறிவுரைக்கு இடி விழுந்தது போல் இறைச்சிக்கு முன் வீற்றிருந்த கடவுளைக் கண்டாள்.

அவளுக்குத் தெரிந்த சாமிகளின்படி அப்படத்திலிருந்தவர் சரசுவதியாகவே தெரிந்திருந்தார். சிறுவயதிலிருந்து சரசுவதி பூசையை வீட்டில் செய்தது பசுமரத்தாணியாகப் பதிந்திருந்தது.

'புத்தகக் கடையில் இருக்க வேண்டிய கடவுள் இங்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறார்?' மனதுள் குடைச்சலெடுத்த கேள்வியை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென அவளுக்குத் தெரியவில்லை.

இதில் கதைத்தால் பெரிசுகள் என்ன நினைக்குமோ எனப் பயந்தவளாகி, தனது தமையனிடம் புகலிடச் சூழல் மொழியில்
"அண்ணா! இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி படம் வைத்திருக்கிறார்கள்?" என்றாள்.

மாப்பிளை மயக்கத்தில் நடமாடிக் கொண்டிருந்த தமையனாரும் அப்பத்தான் அந்தப் படத்தைப் பார்த்தார். தங்கையின் நியாயமான கேள்வி அவரைப் பதில் சொல்லத் தூண்டியிருக்க வேண்டும்.

"சரசுவதி நன்றாக இறைச்சி சாப்பிடுவார் அதனால்தான் இங்கு வைத்திருக்கிறார்கள்" என்றார் புகலிடச் சூழல் மொழியில்.

அண்ணனின் தெளிவான பதிலால் தங்கையின் முகத்தில் மலர்ச்சி!!

கூட்டத்துடன் சென்றிருந்த நான் பொத்திக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவனாகி மற்றோரை நோட்டமிட்டவாறு முகத்தைத் திருப்புகிறேன். வழமைபோல் எதையும் சட்டை செய்யாதவர்களாக பெரிசுகள் தமது கருமங்களில் மூழ்கி இருந்தனர்.

ஒன்றாக வாழ்ந்திருந்த போதும்....., ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுடன்தான் அடுத்த தலைமுறை உலகம் தனித்தே இயங்கிக் கொண்டிருக்கிறது.

- அருந்தா
பாரீஸ்
செப்டெம்பர் 2009