Friday, 16 October 2009

கதைச் சரம் 15 ஒரு பூனை இரு பூனைகளாகின!


கதைச் சரம் 15
சிறுகதை

ஒரு பூனை இரு பூனைகளாகின!



நினைக்கவே ஆச்சரியமாக இருக்கு. இந்த வேலை கிடைத்ததே கனவுமாதிரித்தான் இருக்கு. இன்றைக்கு இங்குள்ள பொருளாதார தள்ளாட்டத்தால் இலேசில் வேலை கிடைப்பதில்லை. ஆனாலும் சும்மா இருக்கயேலாது. அங்க எமது ஊர் இனசனமெல்லாமே ஒட்டுமொத்தமாக வன்னி அக(வ)தி முகாமுக்குள்ள முடங்கி கிடைக்கிடைக்கைக்க என்னதான் செய்வது? காசு ஏதேனும் அனுப்பமால் தூங்கவும் முடியாதிருக்கு.....
வாற தொலைபேசி அழைப்புகளும் "எடுங்கோ' என்று சொல்லிப் போட்டு துண்டிக்கப்பட்டுவிடும். உடனே நாம் பதிலுரைத்தே வீட்டுத் தொலைபேசி மாதக்கட்டணமும் எகிறிப்போய்த்தான் வருகுது. அவரைப் ஏறிட்டுப் பார்க்கவே பாவமாக்கிடக்கு! அவர் வேலை செய்கிற தொழிற்சாலையில முந்தின மாதிரியில்லை. சம்பளமும் குறைத்துப் போட்டாங்கள். போதாததற்கு சம்பளமில்லாது வேலை பார்க்க வைக்கும் முதலாளிகளின் பொருளாதாரச் சிக்கல் நடiடிக்கைகளால் சிரமப்படும்(!) முதலாளிகளுக்காக உழைத்துக்கொடுக்கும் இன்றைய உலகமயமாக்கல் தொழிலாளியாக அல்லல்படுகிறார்.

இந்தச் சமயத்திலதான் இந்த வேலையும் வந்ததை யார்தான் விடுவார்கள். அப்படியே இறுக்கிப் பிடிச்சிட்டன். பதிவில்லாததால் சம்பளம் அரைவாசிதான், ஆனால் காசாகக் கொடுப்பான். . அடடே.. வேலை நேரத்தைச் சொல்ல மறந்திட்டன்! இரவு 11 தொடக்கம் அதிகாலை 3 மணி வரைக்கும். ஊரே உறங்கிக்கிடக்கும் சாமத்தில பிள்ளைகளை தூங்கப் போட்டுவிட்டு இவ்வேலைக்காக தூங்காது விழித்திருந்து தொலைக் காட்சித் தொடர்களைப் பார்த்துவிட்டு போகவேண்டும். வாரத்தில் 7 நாட்களும் வேலை. மூடப்பட்ட ரெஸ்ரோறன்டில முழுவதையும் கழுவித் துடைத்து வைப்பதுதான் இந்த வேலை. அடுத்த நாள் கடையைத் திறக்கும் முதலாளிக்கு எல்லாம் பளீரென்று இருக்க வேண்டும்!

முதல் நாள் வேலையை எப்படிச் செய்து வீடு திரும்பினனான் என்றே தெரியவில்லை. அப்படி ஓடிப் போய்ச்சுது! இரண்டாம் நாள் சாமத்தில போய்வாறதெண்டது சும்மா இருக்கல்ல. திக்கு திக்கென்றாயிற்று. வேலையையும் விடேல்லாது. தனியாக எப்படிப் போறதெண்டும் தெரியேல்ல. பிராங்போட் மாதிரி பெரிய நகரமென்றாலும் எப்படியாவது பயணிக்கலாம். இது வெஸ்ற்பாலினில் ஒரு சுக்குட்டிக் கிராம நகரம். ஊரே அடங்கி கிடக்கும். ஒரே பனிப்புகாருடனான மாரிகால இருட்டை எப்படி வர்ணிக்கிறது. ஊரில இருக்கைக்க சின்னப்பிள்ளையில இரவில ஒண்ணுக்குப் போறதற்கே அம்மாவை எழுப்பித்தான் போவன். நினைக்க அழுகை அழுகையாக வருது. அப்ப இந்த மனுசன் சொன்னது காரை ஓடிப் பழகென்று. இந்த செர்மன் மொழியில 'கோட்' பாஸாக என்னால முடியேல்ல.... இப்ப இதைக் கேட்டா 'வள்'ளென்று பாயும்!!
'என்ன செய்யலாம்? இந்த மனுசனோடும் கதைக்கயேலாது?.....' இப்படியான மன அவலத்துடனேயே முதல் நான்கு நாட்களும் ஓடிவிட்டன.

'கீழே இருக்கிற அக்காவையும் வேலைக்குக் கூப்பிட்டா என்ன?..... பேச்சுத் துணையாகவும் இருக்கும்! போய் வாற வழித்துணையாகவும் இருக்கும்!! வேலையையும் வேகமாக முடிச்சு வேளைக்குத் திரும்பிவிடலாம்!!.... அப்பாடா.. ஒரே எத்தனதில பல மாங்காய்கள்...... " எண்ணமே இனித்தது. மனசுப் பட்சியின் வழிகாட்டலை உடனேயே நடைமுறைத்த கீழே இறங்கி அக்காவின் வீட்டுக் கதவு அழைப்பு மணியை அழுத்தினேன்.

அரக்கப்பரக்கவென வந்த என்னை அக்கா உள்ளே அழைத்தார்.
"என்ன விசயம் இவ்வளவு பரபரப்பா வாறீர்?" அக்காவின் முகத்தில் எதிர்பார்ப்பு ஆச்சரியம் அப்படியே தெரிந்தது.
"இல்லை அக்கா ஒரு நல்ல விசயந்தான், உங்களோட மட்டும்தான் கதைக்கலாம்!" எனது பீடிகை அவருக்கு உந்துதலைக் கொடுத்திருக்க வேண்டும்.
"அதுதான் சொல்லுமென்!!"
"அது அக்கா எனக்கு இந்த ஊரிலேயே ஒரு வேலை கிடைச்சிருக்கு. ஆனா சாமத்தில போய் வரவேண்டும். இரவில தனியாகப் போய்வாறது எனக்குப் பயமாக்கிடக்கு!"
"அதுக்கு நான் என்ன செய்ய?" அக்காவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"நாங்க இரண்டு பேரும் இதைச் செய்தால் என்ன? பதிவில்லாது கையில வாற சம்பளம் இரண்டு பேரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். முதலாளியிட்ட நான் கதைக்கிறன்."
வெட்டிய லொட்டா(Loto) விழுந்த மகிழ்ச்சி அக்காவின் முகத்தில் மலர்ச்சியாகப் பளீரிட்டது. இந்தக்காலத்தில் இங்கு வேலை வீடுதேடி வந்து கிடைப்பதை நம்மவர்கள் நல்வாய்ப்பாகத்தான் நினைப்பார்கள்!!
"எனக்கென்ன நாளக்கே நான் வாறன்!!"
"நான் இன்றைக்கே முதலாளியிட்ட கதைத்து ஏற்பாடு செய்கிறன்." அடைக்கப்பட்டுள்ள வன்னி அகதிகளை வெளியில் நடமாட விடுவதாக அறிவிப்பு வந்தால் எப்படியிருக்குமோ அப்படி ஆறுதலாக இருந்தது எனக்கு.

இருவரும் சேர்ந்து வேலைக்குப் போய்வருவதால் நாட்கள் மிக வேகமாகக் கரைய இருமாதச் சம்பளத்தையும் பகிர்ந்தெடுத்தாயிற்று. இப்ப வேலையும் பழகிப் போய்ச்சு. போய் வாற பயமும் தெளிந்து போய்ச்சு.

நாங்கள் நடந்து போற பாதையிலே நம்ம மனசு போவதேயில்லையே! அது அதன்பாட்டுக்குத்தானே போய்க் கொண்டிருக்கும்! அப்படிப் போய்க்கொண்டிருந்தாலும் பரவாயில்லை அடிக்கடி எங்களையும் அதன்பாட்டுக்கு இழுத்துக் கொண்டேதானே இருக்கும். இப்ப புதிய நெருடல் தொடங்கியது.
'இந்த வேலையை நான் மட்டும் செய்தால் என்ன? காசும் முழுசாக்கிடைக்கும்!!'

'இப்போது இதை யாரிடம் எப்படிக் கதைத்து வெல்லுவது?' விக்கிரமாதித்தன் சுமந்த வேதாளத்தின் கதையாக நானும் என் மனசுப்பிசாசும் ஆனது. மனசு அலைய அலைய நரக வேதனைதான்.....!

'அக்காவுக்கும் என்னமாதிரித்தான் யோசனை ஓடுதோ?"
"அவவின்ர கதையும் பார்வையும் சரியில்லாமத்தான் இருக்கு!"
"அண்டைக்கு ஏன் பேய்க் கதையெல்லாம் கதைத்தவ?"
"அவவுக்தான் பேய் பிசாசென்றால் நடுக்கமெடுக்குமே! அப்படியிருக்கைக்க திரும்பி வாறபோது பிசாசு விறாண்டிய கதையை எனக்கு எதுக்காகக் கதைக்க வேண்டும்?"
"பிசாசு இருக்கோ இல்லையோ ஆனா இந்தச் சந்தேகம் ஒரு முழுப்பிசாசுதான்!"

இப்படியே உள்ளுக்குள் பொருமியபடி வெளிப்படையாக 'கலைஞர்" பாணியில் சிரித்துப்பேசி கச்சிதமாக நடிக்கும் நாட்களாக கள்ளநளினத்தோடு கரையத்தொடங்கின. என்னை என்னாலேயே நம்ம முடியவில்லை. "நானா இப்படி?" என் நடைத்தை கண்டு எனக்கே ஆச்சரியமாகக் கிடக்கு!

'என்ர மனுசனுட்டச் சொன்னா....... 'வள்ளென்று' எரிஞ்சு விழுந்ததோடில்லாமல் வேலையை அக்காவுக்கே கொடுத்துவிட்டு நிக்கச் சொல்லிப்போடும்!'
"நானும் பார்க்கிறன் பார்க்கிறன் என்ர மனுசனெண்டால்....... ஒரு சரியான லூசு! சும்மா லூசில்லை எல்லாத்தையும் பகிடியாப்பார்க்கும் வடிகட்டின முழுலூசு!!'

அன்றைக்கு சனி இரவு வேலையை முடித்துவிட்டு ராஜபக்சேயை பார்க்க சென்ற பாலுவுடன் போன கனிமொழியாக பவ்வியமாகச் சிரித்துப் பேசியவாறு அக்காவுடன் வந்துகொண்டிருந்தேன். இன்றைக்குப் பார்த்து அந்தப் பூங்காவுக்குப் போகும் பாதையின் தெரு விளக்கு அணைந்திருந்தது. ஆனால் நாம் வரும்போது ஒளிபரப்பிக் கொண்டிருந்த விளக்கு ஒருவேளை சுட்டிருக்கும்! பெரு மரங்களால் சூழப்பட்டிந்த பாதை 'கும்' இருட்டில் மூழ்கி இருந்தது. மலைப் பகுதிகளுக்கே உரிய பனிப்புகாரும் சேரவே இருட்டென்றால் அப்படியொரு இருட்டு. ஊரே அடங்கிக் கிடந்தது. நாளை ஞாயிறாகையால் எல்லா செர்மனியர்களும் போர்வைக்குள் நிம்மதியாக முடங்கியிருப்பார்கள். சுற்றுமுற்றும் பார்க்கையில் எந்த வீட்டிலும் விளக்கு எரிவாதாக இல்லை.

இந்த வழியால போனால் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சுற்றிப் போனால் பதினைந்து நிமிடங்களாகும். அக்கா நின்று திரும்பிப்பார்த்தா..... 'திக் திக் திக்' என்ற என் இதய ஒலியே எனக்குப் பலமாகக் கேட்டத் தொடங்கியது.

ஒருவாறு சுதாகரித்தவாறு, "என்ன அக்கா?" என்றேன்.
"அமலா!............... சுற்றுப் பாதையால போவமா?" மெல்லிய குரலில் பதைபதைப்பு வெளிப்பட எனக்கு உடம்பு சூடேறத் தொடங்கியது.
"வேணாம் அக்கா! என்னத்துக்குப் பயம்? நாங்க இரண்டு பேர் இருக்கிறம்தானே!" எனக்கு இப்படியான துணிச்சல் எங்கிருந்து வந்ததென எனக்கே தெரியவில்லை!

"ச........ரி......" என்றுவாறு அக்கா மெல்ல நடக்கத் தொடங்கினார். ஒருவரது முகத்தை மற்றவர் பார்த்தவாறு நம்மிருவரது நடையிலும் க.. வ.. ன.. ம் இருந்தது. கொஞ்சத் தூரம் போனபின் அக்காவின் நடையில் கொஞ்சம் தடுமாற்றம்....
"என்ன அக்கா?" நான் குசுகுசுக்கிறேன்.
"அங்க பாரும்......" என்று குசுகுசுத்தாவாறு அக்காவின் கை நீட்டித் திசைகாட்டிவிட்டு முடங்கியது. இந்தக் கும்மிருட்டில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.

"என்ன அக்கா? எனக்கு ஒன்றுமே தெரியேல்ல...." என்ற எனது குசுகுசுப்பில் பதட்டமிருந்திருக்க வேண்டும்.
அக்காவின் நடை நிக்க எனது நடையும் தானாக நின்றது. மெல்ல அக்காவின் கிட்டப்போய் முகத்தை உற்றுப் பார்க்கிறேன்.
அக்கா தனது முகத்தால் ஒரு பக்கத்தைக் காட்டியாவாறு கண்ணாலும் காட்டினார். அக்காவுக்கு கிட்ட நின்று உற்றுப் பார்த்ததால் அவர்காட்டிய திசையும் இடமும் ஓரவு அறிய முடிந்தது. அந்தத் திசையில் உற்றுப் பார்க்கத் தொடங்கினேன் முதலில் ஒரு பெரிய மரத்தின் அடிப்பாகம் மட்டுமே தெரிந்தது. இப்ப எனது சுவாசமும் எனக்குச் சத்தமாகக் கேட்கத் தொடங்கியது.

"அந்த மரத்தடியில் என்னதான் கிடக்கோ?' இருட்டு கொஞ்சம் பழக்கமாக "அதோ பளபளக்கும் இரு கண்கள்!..... ஆ..... நல்ல கறுத்தப் பூனைதான்!!" அதுவும் பதுங்கியவாறு எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லாமே ஒரு இருபது மீட்டர் தொலைவுக்குள்தான் இருந்தது.

மௌனித்து நின்ற என் காதுக்குள் அக்கா "அங்கா பாருமேன் ஒரு பூனை!" என்று குசுகுசுக்கிறார்.
"ஒன்றில்லை அக்கா!... இரண்டு!!" என்ற என் குசுப்பில் உறுதியிருந்ததையிட்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
"இரண்டா.........?" அக்காவின் குசுகுசப்பில் நிறையவே தழும்பல்
"அங்க பாருமேன் நாலு கண்கள் பளீரிடுது..... இரண்டு கொழுத்த பூனைகள்."
"என்ன!! எனக்கு ஒன்ஓதானே தெரியுது!" அக்காவின் குரலில் பயப்பிரமை அப்படியே இருந்தது.
நானோ விடவில்லை "அக்கா...! நல்லாப் பாருங்கோ இரண்டு....."
என்ர குசுகுசப்பைக் கேட்க முடியாதவராய் ஒனறுமே பேசாது அக்கா தடதடவென வேகமாக நடக்கத் தொடங்கினார். எனக்கு என்ன நடக்குதென்றே தெரியவில்லை. மெல்லப் பின்தொடரத் தொடங்கினேன்.

அக்காவின் மருட்சியை அந்தக் 'கும்' இருட்டிலும் என் கண்ணால் கண்டதாலோ என்னவோ எனக்கிருந்த பயமெல்லாம் கரைந்துவிட்டிருந்ததுபோலும்! ஆனாலும் பொத்திக்கொண்டு சிரிப்பு வரத்தொடங்கியது. மிகச் சிரமப்பட்டு செருமிச் செருமி அடக்கினேன். நான் செருமச் செரும அக்காவும் 'பயத்தாலதான் நான் செருமுகிறேன்' என நினைத்தோ என்னவோ இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

எப்படி வீட்டுக்குள் நுழைந்து கதவினைச் சாத்தினேன் என்றே எனக்குத் தெரியவில்லை. மூடிய வாசல் கதவில் சாய்ந்ததுதான் தெரியும். பொங்கிய சிரிப்பு கொட்டத் தொடங்கியது.......
கண்கலங்கச் சிரித்தேன். ஒருவாறு கண்ணைத் துடைத்தவாறு நிமிர்ந்தால்....

"என்னப்பா? சாமத்தில வந்துபோட்டு.... இப்படி நேரங்கெட்ட நேரத்தில சிரிக்கிறீர்?" நித்திரை குழம்பிய மனுசனுடைய குரலில் கடுமையும் கடுகடுப்பும் இருந்தது. ஏதுமே பேசாதவளாய் தலையைக் குனிந்தவாறு குளியல் அறைக்குச் செல்லும் என்னை அவர் குழப்பத்துடன் உற்றுப் பார்ப்பதும் ஏதோ நினைப்பதும் மனத்திரையில் தெரிகிறது.

- அருந்தா
செர்மனி ஒக்டோபர் 2009

No comments:

Post a Comment