Showing posts with label தகவலகம். Show all posts
Showing posts with label தகவலகம். Show all posts

Sunday, 14 January 2018

உலகமெல்லாம் விரவிய வாழ்வில் ‘தமிழ்’தான் எமக்கான அடையாளம்

தமிழர் திருநாள் 2018 பகிர்வு

உலகமெல்லாம் விரவிய வாழ்வில்
‘தமிழ்’தான் எமக்கான அடையாளம் :
‘வேற்றுமையில் ஒருத்துவம் காணும் தனித்துவநாள்’ – தைப் பொங்கல் நாள் : தமிழர் திருநாள்
'தமிழர் திருநாள்'
வள்ளுவர் ஆண்டு 2049

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’
‘காக்கை கரவா கரந்துண்ணும்..’ எனக் கூட்டமாக கூடி மகிழ்ந்து வாழும் மனித மனத்தின் பிரதிபலிப்பான கூற்றுகளை நாம் நம் முன்னோர் வழிகளில் கேட்டு அனுபவித்த தலைமுறையினர் நாம்.



ஆனால் மனிதர்களை 21வது நூற்றாண்டு உலகமயமாக்கிய கார்ப்பரேட் நிறுவனப் பொருளாதார அடிக் கட்டுமானத்தில் பயணிக்கும் ‘நுகரி’களாக்கிவிட்டிருக்கிறது. இந்தப் பொருளாதார அடித்தளத்தின் நிர்வாக இயந்திரங்களாக ‘அரசு’ப் பொறிமுறை அடக்கமாகிவிட்டது. உலகை அளவிடும்  ஒரே அலகாகிவிட்ட பணத்தை நிர்வகிக்கும் வங்கிப் பொறிமுறையும் இவற்றையெல்லாம் இணைக்கும் உலகளாவிய தொலைத்தொடர்பு வலையமைப்பும் பின்னிய பாதைகளில் புவியின்  நிலம் - நீர்  - காற்றும் அனைத்து உயிரிகளும் கட்டுண்டு போய்யுள்ளன.

21வது நூற்றாண்டு  உழுதுண்ட (சாகுபடி) வாழ்வு (cultivation life) என்ற நிலையிலிருந்து நுகர்வு வாழ்வு (consommation life) ஆக்கிவிட்டிருக்கிறது. இது புவியின் முழுமையான உலகமயமாகிய நிலையை எய்திருக்கிறது. இந்த உலக மயமாகிய உற்பத்தியும் (production - தயாரிப்பு) - விநியோகமும் (distribution) உலகக் காப்பிரேட் நிறுவனங்கள் வசமாகிவிட்டன.  இன்றைய பெரும்பான்மையான மக்கள் நுகர்வோராகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைய உலகு சந்தைப்படுத்துவோர் – நுகர்வோர் எனவாகப் பிளவுண்டிருக்கிறது.

உலகம் தழுவிய பெருநிறுவனத் தயாரிப்புகளாகியுள்ள உணவு உற்பத்தி முறைமையும், தொழிற்துறையும், பெரும் வணிக வளாகச் சுற்றுகளுக்குள் நுகர்வோராக ஒருங்கிணைக்கும் நகரமாக்கிய – மாநகரமாக்கிய அடுக்கு மாடித் தொகுப்புகளிலும் அதனையொட்டிய சேரிகளிலும் குவிக்கும் அசைவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இது தேசங்கள் – பிரதேசங்கள் – பிராந்தியங்கள் கடந்த எல்லையற்ற புலப்பெயர்வுக்கு அகன்றுசெல்ல நிர்ப்பந்திக்கிறது. கல்வி – சுகாதாரம் – மருத்துவம் போன்ற அடிப்படைச் சேவைகளும் சந்தை மைய இலாபநோக்கிலான நிறுவனங்களாக்கப்படுகின்றன. புதியதாகக் கட்டமைக்கப்பட்ட அன்னையர் நாள், தந்தையர் நாள், காதலர் நாள் என மனித உள்ளுணர்வு நிகழ்வுகள் கூட சந்தைகளால் வடிவமைக்கப்பட்ட நுகர்வுக் கலாச்சாரமயமாகியுள்ளது. ஆடம்பர கவர்ச்சியில் திருமண நிகழ்வுகளும் – இறப்பு நிகழ்வுகளும் அடக்கப்பட்டு விட்டன. பண்பாட்டு நிகழ்வுகளும் இத்தகைய சந்தைப்படுத்திய நிகழ்வுகளாகி இயந்திரத்தனமாகிவிட்டன.

வாழ்வுக்கான பணம் தேடி அலைபவர்களாகிவிட்ட மனிதர்கள் வெறும் நுகர்வும் - வாழ்வும் மட்டும் போதுமென்ற நிலையையுடைய உயிரிகள் அல்லவே ! தமது வாழ்தலுக்கான புலப்பெயர்வுகளால் தம் மனவெளியில் சிதையும் ஆழப்பதிந்த பண்பாட்டு அடையாளத் தகவமைப்பில் அலையுற்று கவனம் கொள்கிறார்கள். இது தம்மையொத்த கூட்டத்தினை ஒருங்கிணைத்து மகிழும் நிகழ்வுகளைத் தேடுகிறது.

ஒவ்வொரு தனி மனிதரும் தம்மை அடையாளப்படுத்தும் ‘தான் யார் ?’ என்பதைக் கொண்ட தேடல்களில் தன்னை அறியும் முனைப்புடனே பயணிக்கின்றனர். இதனை தமிழ்ச் சமூகம் உலகளாவிய பரம்பலில் நேரடியாக அனுபவித்து எதிர்கொள்கிறது. இன்றைய ஈழத் தமிழர்களது வாழ்வு ஐந்திணைக் கோட்பாடுகளைக் கடந்த புவியெங்கும் சிதறிப் பரவிய (diaspora) நிலையைப் பெற்றிருக்கிறது. இது புதியதான பண்பாட்டு அடையாள ஒன்றித்தல் முறைமையைத் தேடி உசாவுகிறது. இந்தத் தேடலின் பெறுபேறுகள் பூர்வீகப் பரப்பின் நகர - மாநகரக் குடியேற்றல்களில் பொருத்தப்பாடுடன் இணையக்கூடியதாக அமைகின்றன.

தான் வாழ்ந்த ஐந்திணை மண்ணோடு பல்லுயிரி வாழ்வுடன் இயைந்து வாழ்ந்த நம் மூதாதையினர் கண்டெடுத்த அரிசிப் பண்பாட்டு நிகழ்வு ‘பொங்கல்’ நிகழ்வு. இந்தப் பொங்கலுடனான கூட்டிணைதல் நமது அடையாள ஒருங்கிணைவுக்கான சிறப்புடையதென்பதை சென்ற ஆண்டு தமிழ்நாடு கண்ட ‘காளை எழுச்சி’ கட்டியமிட்டிருக்கிறது.

............................................................................................................................................................
காக்கைச் சிறகினிலே (சனவரி 2018) இதழில் வெளிவந்த ஆக்கம் இது. 
...........................................................................................................................................................................................


இந்தியாவின் தெற்கிலும் இலங்கையின் வட கிழக்கிலும் பூர்வீகமாகத் பல்லாயிரம் ஆண்டு தொடர் வாழ்வைக் கொண்டது தமிழர்களது இருப்பு. இந்த நீண்ட தொடர் பயணத்தில் ஐந்திணைத் தமிழ், சைவத் தமிழ், சமணத் தமிழ், பௌத்தத் தமிழ், இஸ்லாம் தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இந்துத் தமிழ், பிரதேசத் தமிழ், நவீனத் தமிழ் என விரிவடையும் பன்முகத் தன்மையைக் கொண்டிருக்கிறது. இப்போது புவியெங்கும் பரவிய நீட்சியுடையதாகித் தொடர்கிறது. உலகத் தொடர்பாடல் கருவிகளில் பயன்படுத்தும் வாழும்  உலகமொழியாக ‘தமிழ்’ வழக்கிலுள்ளது.
« உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன. இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை. »  எனும் சென்ற நூற்றாண்டில் தமிழில் திறனாய்வுத்துறையை முன்னெடுத்த பேராசிரியர் க. கைலாசபதியின் கூற்றை நாம் கவனம் கொள்ளல் பொருத்தம்.

இங்கு நமக்குள்ளான அரசியல் மதம் சாதிய பிரதேச பிராந்திய தேச வேறுபாடுகளைத் தவிர்த்த ‘தமிழ்’ ஒன்றித்தலென்பதே இன்றைய - எதிர்காலத் தேவையாகும்.

மண்ணோடிணைந்த வாழ்வில் வீட்டு முற்றத்தில் தனித்த ‘தைப் பொங்கல்’ பொருத்தமாக இருந்தது. இன்றைய அடுக்குமாடி இருப்புகளில் நான்கு சுவர்களுக்குள் முற்றமில்லாத வெளியில் அடுப்படிப் பொங்கல் தைப்பொங்கலாகுமா ? மாற்றமொன்றே மாறாதது எனும் இயங்கியல் இயல்பைக் கொண்டதாக நகர – மாநகர வாழ்வைப் பெற்ற புதுமையான கூட்டுப் பொங்கலிடும் முறைமையைக் கண்டடையலாம். இத்தகைய கூட்டு ஒன்றித்தலில் நமக்கான தொன்மமும் தொடர்ச்சியுமான உணவு – உடை – கலை பண்பாட்டு அரங்குகளாக வடிவமைக்கலாம். இத்தகைய சங்கமித்தல்களில் பிற இனக்குழுமங்களை வரவழைத்து எமையும் எமது பண்பாட்டையும் புரியும் களமாக்கி மனித நேயப் புரிந்துணர்வை மேம்படுத்தலாம்.
*********


ஈழத்தமிழர்களாய் 1980களில் புலம்பெயர்ந்து நீட்சியுறும் எமது வாழ்வில், எம் அடுத்த தலைமுறையினர் புலம்பெயர் தமிழராய்- உலகத்தமிழர்களாய் புதிய சந்ததியினராகப் பரிணமிக்கத் தொடங்கியும் விட்டனர். பல்லின, பல்தேசிய மக்களுடன் வாழத் தலைப்பட்டுள்ள புலம்பெயர்வு வாழ்தலின் நீட்சியில் இந்தப் புதிய அடையாள ஒன்றிணைவு அவசியமாகிறது. இதனை மையமிடும் தைப்பொங்கல் பொது நிகழ்வரங்கம் - தமிழால் ஒருத்துவமாகி அரசியல், சாதி, மதம், பிரதேசம், தேசம் மற்றும் அரசியல்- வர்க்க பேதம் கடந்ததாகச் சங்கமிக்கிறது. இது எம்மைப் பற்றிய புரிதலை எம் சந்ததியினருக்கும், இங்கு வாழும் ஏனைய பல்தேசிய, பல்லின மக்களுக்கும் இதமான புரிதலுக்கு வழிசமைக்கிறது.

பிரான்சில் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடரப்படும் ‘பானை வைத்துப் பொங்கலிடும்’ பொது நிகழ்வரங்கத்தினூடாக, மனித வாழ்வுக்கான அறநூலாகிய திருக்குறளும் திருவள்ளுவரும் முன்னிறுத்தப்பட்டு, தைப்பொங்கல் தமிழர் திருநாளாக புலம்பெயர் திருநாளாக எமக்கான பண்பாட்டு அடையாள நிகழ்வாக ஐரோப்பாவில் அறிமுகமாகியிருக்கிறது. இது எமக்கான பொதுப் பண்பாட்டுக் குறியீடாக, அரசியல், சாதி, மத, பிரதேச, தேசம் போன்ற பேதங்கள் கடந்த காட்சி அரங்காக நிகழ்த்தப்படுகிறது.

எமது தொன்மச் சமூகத்தினர் கண்டடைந்து தொடரும் இயற்கையுடன் இயைந்த மானிட வாழ்வைக் குறித்து - இயற்கைக்கு நன்றி பாராட்டி மகிழும் நன்னாள் பொங்கல் திருநாள்இன்று தேசங்கள் கடந்து -கண்டங்கள் கடந்து - நூற்றாண்டுகள் பல கடந்து தொடரும் சமூக பண்பாட்டு நிகழ்வுத் தொடராக எமையெல்லாம் ஒன்றிணைக்கிறது.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின். (குறள் 334 - நிலையாமை)
"தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை - தொடர்ச்சியில் உள்ளது"
- இந்தத் தொடர்ச்சியில் தற்போதைய வாழ்வில் நமது பங்கு என்ன? 
- வாழும் தமிழ்தான் எமக்கான தொன்மையும் தொடர்ச்சியுமான தனித்துவ அடையாளம்!!
« யாதும் ஊரே யாவரும் கேளிர் »

'தை பிறந்தால் வழி பிறக்கும்!' என எம்மவர் வாழ்வில் முன்னோர்களால் விட்டுச் சென்ற முதுமொழியின் வழி எம்மவர் வாழ்வுத் தளத்தில் புதிய நம்பிக்கை வாழ்வாதாரம் கிட்டடும்!
நீண்டு செல்லும் தமிழர் வாழ்வில் இயற்கையின் சீற்றத்தாலும் மானிடக் கொடூரங்களாலும் கண்ட அழிவுகள் பலவாயினும் அவற்றையும் கடந்து எதிர்கொண்டு வாழும் நம்பிக்கையூட்டும் நன்னாள் பொங்கல் நாள் !
பழையன கழிந்து புதியன புகட்டும்!
எல்லோருக்கும் இன்பம் பொங்கட்டும்!!
இனிய தைப் பொங்கல் – தமிழர் திருநாள் வாழ்த்துகள் !!
தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்!!

000000

பாரீசில் இந்த ஆண்டு 12வது நிகழ்வரங்காக சிலம்புச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் 
புலம்பெயர் தமிழர் திருநாள் 2018

000000


-        க.முகுந்தன் (பிரான்சு சிலம்புச் சங்கத்தின் நிறுவனர்) ஐரோப்பியக் கண்டத்தில் பிரான்சில் முதல் தடவையாக பானை வைத்து கூட்டுப்பொங்கலிட்டு தைப்பொங்கலை ‘தமிழர் திருநாள்’ என முன்னெடுத்த சங்கம். இது 12வது நிகழ்வரங்கை பாரீசு பெருநகர மையத்தில் எதிர்வரும் 14.01.2018 அன்று நிகழ்த்துகிறது.
    


     தகவல் முகுந்தன் பாரீசு 14.01.2018

Friday, 17 November 2017

தனித்துவ முன்னெடுப்பாளராக வாழ்வுத் தடமிட்ட ஈழத் தமிழ் ஊடகவியவியலாளர் கோபு எனும் 'எழுத்தாணி எஸ்.எம்.ஜி' !!

தகவல் பகிர்வு :


ஈழத் தமிழ் ஊடகவியல் -  தனித்துவ முன்னெடுப்பாளராக வாழ்வுத் தடமிட்ட கோபு   எனும் 'எழுத்தாணி எஸ்.எம்.ஜி' !!
எஸ்.எம். கோபாலரத்தினம் (03.10.1930 - 15.11.2017)


தனித்துவ தடமிட்ட வாழ்வினை முன்னெடுத்த சாதனையாளர்   எஸ்.எம். கோபாலரத்தினம்  - காலம் கடந்தும் வாழ்வார்!!

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப்ப படும். (குறள் 114 - நடுவு நிலைமை) 

ஈழத் தமிழ் ஊடகர் - எஸ்.எம். கோபாலரத்தினம்

'நேற்றிருந்தார் இன்று இல்லை..!' என காலம் கரையும் வாழ்வில், 'காயமே இது பொய்யடா வெறும் காற்றடடைத்த பையடா..' எனச் சித்தர் சொன்ன வாக்கிலும் நிலையாமைக் கோட்பாட்டில் வாழும் தொடர் அசைவில் பிறந்த ஓர் உயிரிகள்தானே.  -  நமக்கு நாமே (நம்மை நாமே அறிந்த) 'மனிதர்களாக' அடையாளமிட்ட ஒரு சிறப்பு உயிரிகள்!

இத்தகைய வாழ்வில் தனித்துவமான தடங்களில் பயணிப்பவர்களது அனுபவங்களை காலத்தின் பதிவுக்கல், தன்னில் பொறித்து காலம் கடந்தும் கடத்தும் வழமையைக் கொண்டிருக்கிறது. இது இரு வகைகளில் தொடரப்படுகிறது. 1) தொன்மையாகத் தொடரும் வாய்வழிக் கதைகள் - பாடல்கள் 2.) வரலாற்று ஆவணங்கள்.

தான் கைபிடித்த பேனாவை - எழுதுகோல் கருவியை நேசித்து வரலாற்றை புனைவின்றி உண்மையின் பதிவாக காலத்தின் பதிவேடுகளில் பதிந்தவர் ஊடகர்  கோபு ஐயா. இன்று அவை எழுத்துச் சாட்சியங்களாக நிலைபெற்றிருக்கின்றன. நாளிதழ்கள் - வார இதழ்கள் - மாத இதழ்கள் என ஆயிரமாயிரம் பதிவுகளை இவரது கைப்பட்ட பேனா எழுதிப் பதிப்பித்திருக்கிறது. இவரது கைவிரலிடுக்கில் பிடிபட்ட பேனா தானாகவே துரித பயணத்தைச் செய்யும் காட்சியில் மெய் சிலிர்த்திருக்கிறேன். இவரது பார்வை மங்கிய காலத்தில் வெள்ளைத் தாள்களில் கட்டுக்கட்டாக எழுதியவற்றைக் கொண்டு தொகுத்ததுதான் 'ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை'. இதனை நான் பணியாற்றிய ஆய்வு நிறுவனத்தில் மறைந்த பேபியும், பபாவும் தட்டச்சுப் பிரதிகளாக்கித் தந்திருந்தனர். இவரிடம் வசமாகும் தலைப்புகள் பொது மக்களை வசீகரித்து ஈர்க்கும். சாதாரண பொதுமக்கள் இலகுவாக வாசிக்கும் மொழியாடலாக இவரது ஆக்கங்கள் எளிமையானவை. இவரது கூர் அவதானிப்பில் தகவல்கள் செய்திகளாக வடிவமடையும். எதை? எப்போது? எப்படி? தகவலாகப் பதிவு செய்வதென்பதை சதா அவாவுறும் பத்திரிகையாளராகவே வாழ்ந்தார். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அதீத கவனத்துடன் வெளியிடுவார். அந்தக் காலத் தகவல் திரட்டலுக்காக  அதிக நேரப் பிரயாணங்கள் - தொலைபேசி வசதியீனங்கள் - தொலை அஞ்சல் தொடர்புத் தகவல் சேகரிப்புகள் எனப் பரபரப்பாகவும்  'வானொலிகளில்' மூழ்கியவர்களாகவும் இருப்பார்கள் பத்திரிகையாளர்கள். இத்தகைய சூழலில் இவரிடம் காணப்படும் நகைச் சுவை உணர்வு சொல்லும் செயலுமாக வெளிப்படும். 

"நிர்மலா- எனும் ஈழத் திரைப்படம் வெளிவந்தபோது ஈழநாடு இதழில் நாளாந்தம் இப்படம் பற்றிய ஒரு தகவல்வருமாறு தொடர்ந்து தன்னியல்பாகச் செயற்பட்டார்!" என நெகிழ்ச்சியோடு நினைவுகூர்வார் பாரீசில் வாழும் முதுபெரும் கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள். தினசரி இதழ்களில் விளம்பரம் செய்ய முடியாத நிலையில் வெளியிடப்பட்ட மறைமுகப் பிரச்சாரமாக இத் தகவல்கள் மக்களைிடம் சென்றடைந்தன. ஈழத் திரைப்படத்தை பரந்த பார்வைக்கு ஊக்குவிக்கும்  பத்திரிகையாளனாக செயற்பட்ட பதிவு இதுவாகும். இத்தகைய தார்மீகச் செயலை செய்வதென்பது ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். 

ஈழத்தின் தமிழ் ஊடகராக பலரை உருவாக்கி ஊக்கப்படுத்தி நிலைநிறுத்திய பெருமை அவரது தனிச் சிறப்பு. 

இவரது எழுத்துகளின் தொகுப்பாக 
1. ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை
ஆரம்பத்தில் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களது கவனத்தைப் பெற்றது. பின்னர் இரு பதிப்புகளாக வெளிவந்துள்ளன - நிகரி (இலங்கை வெளியீடு 2000 மற்றும் 2002). தற்போது தோழமை வெளியீடாக (இந்தியா 2007) வெளிவந்துள்ளது.
2. அந்த ஒரு உயிர் தானா உயிர்? (2003 நிகரி)
3. பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு (2003 - பாரதி) தன் வரலாறு
4. ஈழம் : முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு (2008 -தோழமை வெளியீடு இந்தியா)
ஆகியன தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது ஆயிரமாயிரம் கட்டுரைகள் - ஆசிரியத் தலையங்கள் - கட்டுரைகள் - தகவல்கள் - சிறுகதைகள் என்பன தொகுக்கப்பட வேண்டியன. தகுந்த மொழிபெயர்ப்புக்கும் உரியன.

யாழ்- பெருமாள் கோவிலடியில் வாழ்ந்த இவர்களது இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்புகளை தனி நூலாகத் தொகுக்கலாம். கண்டதும் விருப்புற்ற குயின்சி எனும் கத்தோலிக்க இந்திய வம்சாவழிப் பெண்ணை கைகோர்த்து துணைவியாக இணைந்து - ஆச்சாரியமுடைய பெருமாள் கோவிலடி வீட்டில் வாழ்ந்த இவர்களது வாழ்க்கை தனித்துவமானது. இவர்களது இந்தச் சிறிய வீட்டில் தரித்து விருந்தோம்பிய பிரமுகர்களை தனியாகவே பட்டியலிடலாம். இப்படியாக இவர்களது மூத்த மகனின் நண்பனாக - தோழனாக அறிமுகமாகி இவர்களது பெறாமகனாக வாழ்பவன் நான். தான் பெற்ற ஐந்து பிள்ளைகளுடன் என்னையும் மூத்த பிள்ளையாக இணைத்ததால் இன்னும் பலரை அவர்களுடன் இணைத்த வாழ்வு எனக்குண்டு.

"ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் நிகழ்த்திய கோரத் தாண்டவத்தின் முப்பது ஆண்டுகளை வேதனையோடு நினைவுகூரும் இந்த வேளை இவற்றுக்கெல்லாம் நேரடிச் சாட்சியாக விளங்கிய கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் பிரிவுக்கு நாம் செய்யக் கூடிய கைமாறு இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூலை மீள் பதிப்பித்துப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சென்றடைய வைக்க வேண்டும். அத்தோடு இந்த நூல் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் உட்பட வேண்டிய தேவை இருக்கிறது."  - கானாப்பிரபா (முகநூல்)






குடும்பத்துக்கு அப்பால் சமூகத்துடன் பிணைந்த எழுத்தாணியயாக இவரது வாழ்க்கை பயணிக்கிறது. இது இவரது ஆழ்மன ஈடுபாடுடன் எல்லைகள் கடந்ததாக அமைகிறது. ஈழம் - இலங்கை - தமிழ்நாடு - இந்தியா - உலகம் என மனித நேயமிக்க பத்திரிகையாளராக உறவை பின்னிப் பிணைத்தது. 

'தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார். 1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'ஈழநாடு' நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான " தினக்கதிர் " நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.
யாழ்பாணத்தில் வெளிவந்த " ஈழமுரசு "பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.'

பத்திரிகையாளர் கோபு:
இந்திய அமைதிப்படையினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது அனுபவத்தை " ஈழ மண்ணில் ஓர் இந்திய சிறை " என்ற தலைப்பில் எழுதினார்.
இந்த கட்டுரை "ஜுனியர் விகடன் " இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.
இலங்கை தமிழ் பத்திரிகை உலகில் கோபு ,எஸ்.எம்.ஜி என பலராலும் அறியப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் ஆணித்தரமான அரசியல் தலையங்கங்கள், கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக விளங்கினார்." (பிபிசி - தமிழ்)

“பேனா ஒரு வலிமை மிக்க ஆயுதம் என்கிறார்கள். உண்மை தான்! அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அது மட்டுமே! அதைப் பறித்து விட்டு அவன் கைகளைப் பிணைத்து விட்டால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” - கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம்.

"தமிழில் நாம் பத்திரிகையாளருக்கும் எழுத்தாளருக்கும் அதிகம் வேறுபாடு காட்டுவதில்லை. ஒருவரே இரண்டு நிலையிலும் தென்படலாம் (கைலாசபதி நல்ல உதாரணம்). ஆனால் பத்திரிகையாளர் என்பவர் எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர். பத்திரிகைகளின் (இதழ்களின்) தேவைகளை மனங்கொண்டவராய் வாசக நுகர்வைப் புரிந்தவராய் பத்திரிகையின் எழுத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்பவராக அதனைத் தொழில் முறையாகக் கொண்டபவராக விளங்குபவர்." - பேராசாசிரியர் க. சிவத்தம்பி (அணிந்துரை - ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை)

"பாரிசிலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு” பத்திரிகையில் கோபாலரத்தினம் அவர்கள்; எழுதிய தொடரின் ஒரு பகுதி ‘முடிவில்லாப் பயணத்தில்” என்ற தலைப்பில் சிறு பிரசுரமாக வெளிவந்திருந்தது. அந்நூலின் விரிவான பதிப்பினைப் பின்னர் ‘ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” என்ற தலைப்பில் எஸ்.எம்.ஜி அவர்கள் தமிழகத்தின்; சென்னை, தோழமை வெளியீடாக வெளியிட்டிருந்தார். இந்த நூலே இவரது இறுதி நூலென்று கருதுகின்றேன். டிசம்பர்; 2008இல் வெளிவந்த இந்நூல் அலைகடல் பயணம், கரை தெரியவில்லை, முடிவில்லாப் பயணம், துக்கதினம், ஓரின ஆட்சி – இது சிங்கள ஜனநாயகம், தனிச் சிங்கள அமைச்சரவை, அரசியல் யாப்பு, சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டுமே, அமைதிவழிப் போராட்டம், பண்டா-செல்வா ஒப்பந்தம், சரணடைந்தார் பண்டாரநாயக்க, கடவுளே வருவார் காடுகளே சுடும், ஓநாய்கள் மீண்டும் உறுமின, ஓரினத்தின் பிரதமர் – ஒரு தேசத்தின் பிரதமர் அல்ல, வஞ்சக வலை, நெடும்பயணம் போன நீதி, சிங்களம் சிங்களம் சிங்களம் மட்டுமே, ஈழநாடு, மறுபடியும் காந்தி மகாத்மா, ஆதிக்க நரித்தனம் ஆண் என்ன பெண் என்ன, குனிவதா நிமிர்வதா, புதுடில்லி வஞ்சகம், நட்டாற்றில் மூழ்கும் படகுகள், அடிமைகள் ஓய்வதில்லை, மீண்டும் வென்றார் சிறிமாவோ> இனப்பாகுபாடு-இனவெறி -இனஒழிப்பு> வங்கதேசம் போல், உலகத் தமிழர் மாநாடு, தமிழருக்குத் தனிஅரசு, ஆயுதம் செய்வோம், தனி ஈழப் பிரகடனம் ஆகிய தலைப்புகளினூடாக இலங்கையின் இனப்பிரச்சினையின் அரசியல் வரலாறு பேசப்படுகின்றது. பின்னிணைப்பாக புதினம் இணையத் தளத்தில் பிரசுரமான அனிதா பிரதாப் அவர்களுக்கு வழங்கிய நேர்காணலும் இணைக்கப்பட்டிருந்தது.


கோபு, எஸ்.எம்.ஜி ஆகிய அடைமொழிகளில் பத்திரிகையாளர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.எம்.கோபாலரத்தினம், ஈழத்துப் பத்திரிகை உலகில் மூத்த தேர்ச்சிபெற்ற ஒரு பத்திரிகையாளராக எப்போதும் மதிக்கப்பட்டவராக இருந்தார். இன்று ஈழத்துப் பத்திரிகைத்துறையில் சிறந்த விளங்கும் பலர், எஸ்.எம்.ஜி.யின் வழிகாட்டலின்கீழ் வளர்ந்தவர்களே. ஈழத்துப் பத்திரிகைத் துறையில் சுமார் 65 வருட எழுத்துப் பணியாற்றிய கோபாலரத்தினம் மீளாத்துயில் கொண்டுவிட்டார்" - எனப் பதிவு செய்திருக்கிறார் நூலகர் என். செல்வராஜா (தேசம் நெற்).

ஈழத் தமிழ்ப் பத்திரிகையின் முன்னுதாரண ஆசானாக விளங்கிய எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்கள் காலம் ஆகிவிட்டார். இனி நினைவிலி மனங்களில் அவர் விட்டுச் சென்ற தடங்களைத் தொட்ட பயணங்கள் தொடரும்!!
*********
இறுதி நிகழ்வு
பின்னிணைப்பு  1 :

பின்னிணைப்பு 2 : ஈழத்தில் பத்திரிகைப் பணியில் தான்பெற்ற அரை நூற்றாண்டு அனுபவங்களை தனது தனித்துவமான மொழிநடையில் தொகுத்த தன் வரலாறாக அமையும் 'பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு' நூல். (2003 - யாழ். பாரதி பதிப்பகம்) 





பின்னிணைப்பு 3 : காணொலி (நன்றி ஆதவன் தொலைக் காட்சி)



- முகிலன்
பாரீசு 16.11.2017

Saturday, 4 November 2017

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - '- உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018'

செய்திச் சரம் 34
தகவல் பகிர்வு :
காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் 
கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 

'- உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - வள்ளுவராண்டு 2049

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. 
பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.
சென்னையில் இருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழ் காக்கைச் சிறகினிலே முன்னெடுக்கும்
மூன்றாவது ஆண்டு இலக்கியப் பரிசு

இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ நடாத்தப்படுகிறது.

 உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை  வழங்கும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி அமைகிறது. இந்தப் போட்டியில் உற்சாகமாப் பங்கெடுத்துச் சிறப்பிக்க உலகத் தமிழ் எழுத்தாளர்களை அன்போடு அழைக்கிறோம்.
இந்தக் குறுநாவல் தெரிவில் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த ஆக்கங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது.

தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் - இசை - நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து புதிய ‘கணினித் தமிழாக’ நான்காவது பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றபடி பாரெங்கும் விரவித் தொடரும் வாழ்வின் அசைவினைப் பதியும் படைப்புகளை ஊக்குவிக்கும் உலகத் தமிழ்ப் படைப்புப் போட்டியாக இது அமையப் பெறுகிறது.

போட்டி விதி முறைகள் :

1. சுய ஆக்கமாக உலகத் தமிழ் எழுத்தாளர் பங்குபற்றும் போட்டி. இதுவரையில் ஊடகங்களில் பிரசுரமாகாத படைப்பு என்ற உத்தரவாதம் போட்டியாளரால் தரப்படல் வேண்டும்.

2. கணனித் தமிழ் எழுத்துருவில் காக்கை இதழில் அதிகபட்சம் 35 பக்கங்கள் (ஏ4 தாள்களில் 28 - அண்ணளவாக 10000 சொற்களுக்கு மிகைப்படாத) கொண்டனவாக இந்தக் குறுநாவல்கள் அமையலாம்.

3. தமது சுய விபரத்தையும் தொடர்பு விபரத்தையும் தனக்கான மின்னஞ்சலையும் எழுத்தாளர் கொண்டிருத்தல்.
0- படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: : kipian2018kaakkaicirakinile@gmail.com
0- தலைப்பு: உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' எனக் குறிப்பிடல் வேண்டும்.
0- படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 05.01.2018

4. நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழு பரீட்சித்து முடிவுகளை அறிவிக்கும்.

நடுவர் குழு :
மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா)
மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா)
மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே)

5. காக்கை இதழ்க் குழுமத்தின் தெரிவுக்குழுவின் முடிவே இறுதியானதாக அமையும். இந்த முடிவுகள் 2018 மார்ச்சு கடைசி வாரத்தில் முறைப்படி காக்கை குழுமத்தினால் வெளியிடப்படும்.

6. பரிசுகள்:

0. முதல் பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
0. இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
0. மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
0. மூன்று ஆறுதல் பரிசுகள் : 2000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

தெரிவாகும் தகுதிபெற்ற குறுநாவல் எழுத்தாளருக்கு சிறப்புப் பரிசு : காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டுச் சந்தா
மேலதிக விபரங்களுக்கு: காக்கைச் சிறகினிலே 
மின்னஞ்சல் - kaakkaicirakinile@gmail.com

...........................................................
தகவல் : முகிலன்
04.11.2017 
...........................................................

தகவல் : முகிலன்
04.11.2017 

Friday, 31 March 2017

முகம்கொள்: கவிஞர் கி பி அரவிந்தன் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் – புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017 -

புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017 (வள்ளுவராண்டு 2048)
புலம்பெயர் இணையவலைப் பதிவர் தெரிவு

செய்திச் சரம் 32


முகம்கொள்: கவிஞர் கி பி அரவிந்தன் (17.09.1953 - 08.03.2015) இரண்டாவது ஆண்டு நினைவேந்தல்



காக்கைச் சிறகினிலே (சென்னை) இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்

கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு  புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017
புலம்பெயர் இணையவலைப் பதிவர் போட்டி  - முடிவுகள்



கவிஞரும் எழுத்தாளரும் சமூகக் கரிசனையாளருமாக புலம்பெயர்வு வாழ்வில் எம்மோடு பாரீசில் வாழ்ந்து மறைந்த கி பி அரவிந்தன் அவர்களது இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் தாங்கி நடாத்தப்பட்ட போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறன.

தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் - இசை - நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து புதிய 'கணினித் தமிழாக' நான்காவது பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில் இப்போட்டி அமையப் பெறுகிறது.


சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான 'காக்கைச் சிறகினிலே' இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடாத்துவதென அறிவித்தது. அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது இரண்டாவது நினைவையொட்டி 'புலம்பெயர் இணையவலைப் பதிவர் போட்டி 2017' யை முன்னெடுத்தது. இப்போட்டியின் கடைசி நாளாக 15. 01. 2017 என அறிவிக்கப்பட்டு முடிவு கிபி அரவிந்தன் நினைவு மாதமான மார்ச்சு 2017 இல் அறிவிக்கப்படும் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.

இதன்படியாக இப்போட்டியின் முடிவு 25. 03. 2017 சனியன்று சென்னையில் காக்கைச் சிறகினிலே முகநூல் வாயிலாகவும் ஏப்பிரல் 2017 இதழின் வாயிலாகவும் வெளியிடப்பட்டது. 

இப்போட்டியின்
வழிகாட்டு நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து 

இப்போட்டியில் நடுவர்கள்
இரா எட்வின் (இந்தியா)  
கானாப்பிரபா (அவுத்திரேலியா)  
கவிதா லட்சுமி (நோர்வே)  
முகிலன் (பிரான்சு)  
ஆகியோர் கலந்து கொண்டனர்.







.........................................................
முதல் பரிசு                      : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு         : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு           : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

மூன்று ஆறுதல் பரிசுகள்  : தெரிவான பதிர்வர்களை முன்மொழிந்த சிறந்த வாசகர்களைக் கௌரவித்து காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டு சந்தா வழங்கப்படுகிறது.
...........................................................

புலம்பெயர்பெயர்வு வாழ்வில் கனவுகள் சுமந்தவராக எம்மோடு பயணித்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவேந்தலாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் காக்கை இதழ்க் குழுமத்தினர்  நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.  மூன்று பரிசுகள் எனவாக மட்டுப்படுத்தப்படடிந்தமையால் பரிசுகள் பின்வருவோருக்கானதாகச் சென்றடைகிறது.

புலம்பெயர்ந்த வாழ்வில் தொடரும் தமிழ்த் தடத்துடன் சுயம்புகளாக இணைய வலைப் பதிவுகளைப் பொறுப்புடன் நிகழ்த்தும் அனைவருக்குமான பரிசுகளின் மாதியாகவே இதனைக் கொள்ளல் பொருத்தம். வாழும் தமிழாக இணையவலைகளூடாக தன்னலமற்ற சேவையாக இவர்கள் ஆற்றும் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் நிலைபெறும்.

பரிசுக்குரியவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தெரிவிப்பதோடு பொறுப்புடன் இவர்களை அறிமுகம் செய்த வாசகர்களுக்கு மிக்க நன்றிகளையும் காக்கை இதழ்க் குழுமம் இணையவலைத் தொடர்பூடக வாயிலாகப் பதிவு செய்கின்றது. ஆழமான இத்தகைய வாசகர்களை வாஞ்சையுடன் இணயவலைக்கூடாகக் கைகுலுக்கி வரவேற்பதோடு. இந்த வாசகர்களுக்கு ஓராண்டு காக்கை இதழ்களை இலவசமாக அனுப்ப ஆவனசெய்கிறது..

தெரிவான இணையவலைப் பதிவர்களது வெளிப்பாடுகளை இனி வெளிவர இருக்கும் காக்கை பதிவுசெய்யும்.

பரிசுகளுக்கு தெரிவானவர்கள் : 

1. முதற் பரிசு 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

சுடு மணல் (சுவிஸ்)
https://sudumanal.wordpress.com/
ரவி
ravindran.pa 

- முன்மொழிவு : அருந்தா


2. இரண்டாம்பரிசு 7 500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

மின்னேறிஞ்சான் வெளி (நோர்வே)
http://minnirinchan.blogspot.no/
நாவுக்கரசன் 
Naavuk Arasan


- முன்மொழிவு: ரூபன் சிவராசா 


3. மூன்றாம் பரிசு 5 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

கீத மஞ்சரி (அவுஸ்திரேலியா)
www.geethamanjari.blogspot.com.au
கீதா.மதிவாணன் 

Geetha Mathi 


- முன்மொழிவு: யசோதா.பத்மநாதன்.

 
தொடர்பு கொள்க :
kaakkaicirakinile@gmail.com
Kaakkai Cirakinile, 288, Dr natesan Road, Triplicane, chennai 600005 India.
Contact - Mr. V. Muthaiah Tel: 00919841457503

Ø  இந்த இணயைவலைப் பதிவர்களை முன்மொழிந்த 
திருமதி அருந்தா, திரு ரூபன் சிவராசா மற்றும் திருமதி யசோதா பத்மநாதன் ஆகிய முவரையும் சிறந்த வாசகர்களாக காக்கை இதழ்க் குழுமம் கௌரவித்து மகிழ்கிறது.
Ø  புலப்பெயர்வின் நீட்சியில் வெளிவரும் ஆக்கங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் பழக்கமுடைய இத்தகைய வாசகர்கள் அறிமுகமாகியதையிட்டு காக்கை இதழ்க் குழுமம் பெருமை கொள்கிறது. இத்தகைய சிறந்த வாசகர்களை கௌரவித்து ஓர் ஆண்டு காக்கை இதழ்கள் அனுப்ப ஆவனசெய்யப்படுகிறது.
Ø  அதுமட்டுமல்லாது இத்தகைய ஆழமான வாசகர்களுடனான நேச உறவாடலைக் கிரமமாகப் பேண காக்கை இதழ்க் குழுமம் இணையவலையூடாக நன்றியுடன் கைகுலுக்கி மகிழ்கின்றது.


இரண்டாவது ஆண்டு நினைவு
கவிஞர் கிபி அரவிந்தன்  நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017
புலம்பெயர் இணையவலைப் பதிவர் தெரிவு

காக்கை இதழ்க் குழுமம் முன்னெடுக்கும் இந்த தொடர் முயற்சிக்குரிய பரிசுகளை வழங்க பெரும் ஒத்தாசைகளையும் ஊக்கத்தையும் வழங்கும் கிபி அரவிந்தன் குடும்ப அங்கத்தினர் அனைவுருக்கும் குறிப்பாக அவரது துணைவி திருமதி சுமதி பிரான்சிஸ், மகன் அங்கதன் , மகள் மானினி , மற்றும் அவரது சகோதரர் குடும்ப அங்கத்தவர் அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள்.

இப்போட்டியை செவ்வனே நடாத்தும் வழிகாட்டு நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து) அவர்களுக்கம்,   இப்போட்டியில் நடுவர்கள் இரா எட்வின் (இந்தியா), கானாப்பிரபா (அவுத்திரேலியா), கவிதா லட்சுமி (நோர்வே), முகிலன் (பிரான்சு) அனைவருக்கம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்..



000000

00000 



தொடர்பு :
காக்கை
288 டாக்டர் நடேசன் சாலை, 
திருவல்லிக் கேணி, 
சென்னை 600 005. 
இந்தியா



 

தகவல் : முகிலன் 25.03.2017

000000




தொடர்பான தகவல்கள் :



 பின்னிணைப்பு:
1.   ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் எ ஸ் எம் கோபாலரத்தினம் (கோபு ஐயா) அவர்களுடன் கிபி அரவிந்தன் 2008 பாரீசில்


2.   கனடாவிலிருந்த வருகைதந்திருந்த நண்பர் இராசரெத்தினம் அவர்களுடன் பிரான்சில் ஒரு சந்திப்பு நண்பர்கள் முகிலன் , பரா மற்றும் கிபி அரவிந்தன்



3.   2007 பொங்கல் விழாவுக்கு சிறப்பு அதிதியாக பாரீசு வச்திருந்த மதிப்புக்குரிய மணவை முஸ்தபா அவர்கள் திடீர் சுகயீனமுற்ற நிலையில் நாடு திரும்பியபோது சார்ல் தூ கோல் விமான நிலையத்தில் வழியனுப்பியபோது




முகிலன்
பாரீசு 30.03.2017