« பாடசாலை அதிபர்கள் வெறுமனே கல்வி போதிப்பவர்களாக மட்டுமல்லாமல் ஒரு பண்பான சமூகத்தை ஒரு மேம்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கும் பாடுபட்டார்கள் »
நேர்காணல் :
கல்வியாளர் பொ.கனகசபாபதி
[இலங்கை முன்னாள் கல்லூரி அதிபர், கனடா கல்வியியல் பல் கலாச்சார ஆலோசகர்]
[கல்வித்துறைசார் பணிகளில் ஆற்றலும் பட்டறிவும் கொண்டவர் ‘கனெக்ஸ்’ எனப் பலராலும் அறியப்பட்ட பொன்னையா கனகசபாபதி அவர்கள். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து இலங்கை, நைஜீரியா, கனடா ஆகிய மூன்று நாடுகளில் கல்விப்பணியாற்றி 75 வயதினை கடந்த அவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
பணிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் எழுத்துப்பணிக்கு ஓய்வு கொடுக்காமல் இன்றுவரை தொடர்ந்து எழுதி வருகிறார்.
அவ்வகையில் அவர் கட்டுரைகளாக கனடா இதழ்களில் எழுதி நூல்களாக தொகுக்கப்பட்ட ‘எம்மை வாழ வைத்தவர்கள்’, ‘மரம் – மாந்தர் – மிருகம்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகள் ஐரோப்பிய நகரங்களில் நடைபெற்ற போது அவற்றில் பங்கேற்பதற்காக நூலாசிரியர் என்ற வகையில் பிரான்சுக்கும் வருகை தந்திருந்தார். அவ்வேளையில் கி.பி.அரவிந்தனின் வீட்டில் வைத்து 27-10-2012 அன்று இந்த நேர்காணல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. தொண்ணூறு நிமிடங்கள் கொண்டதான அந்த ஒலிப்பதிவை எழுத்துக்கு பெயர்த்தவர் டெல்லியில் வதியும் தோழர் ச.வீரமணி. நேர்கண்டவர் கி.பி.அரவிந்தன் உதவியுடன் க.முகுந்தன்.]
ஹண்டி பேரின்பநாயகத்துடைய முயற்சியாலே
தோன்றியது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ். இந்தியாவில் எழுந்த சுதந்திரப்
போராட்டத்தை இலங்கை நோக்கியும் பரவச் செய்தவர் அவர். அந்த இளைஞர் காங்கிரசினுடைய
குறிக்கோளாக இலங்கைக்கு பூரண சுதந்திரம். [அப்போது இலங்கையில் அரசியல் கட்சிகள்
இல்லை] இரண்டாவது சம பந்தி போஜனம். சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்ற
குறிக்கோளுடன். மூன்றாவதாக, எல்லோருக்கும் தொழில் சமத்துவம் இருக்க வேண்டும்
என்பது. நான்காவதாக, மிக முக்கியமான ஒன்று, தாய்மொழியில் கல்வி. 'யூத்' [இளைஞர்]
காங்கிரசினுடைய இந்தக் கொள்கை முதன்முதலாக இவர்களால்தான் ஆரம்பிக்கப்பட்டது.
அந்தக்காலத்திய அதிபர்கள் எல்லாருமே, தேசிய உணர்வுடையவர்களாக இருந்தனர். உடை கூட
வேட்டியும் நேஷனலும் தான்.
காந்தியத்தோடு, இந்தியாவில் சுதந்திரப்
போராட்டம் ஏற்பட்டதாலே, இங்கும் அந்த உணர்வு ஏற்பட்டது. ஹண்டி பேரின்பநாயகம்,
ஒறேற்ரர் சுப்பிரமணியம், என். சபாரத்தினம், ஐ.பி. துரைரத்தினம் போன்றவர்கள்
காந்தியத்தோடு தொடர்புடையவர்களாக இருந்தார்கள். மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு
யாழ்ப்பாணம் வந்தபோது, சொன்னார்கள்: «நான் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு வந்திருக்கிறேன். இதுநாள் வரையிலே சுதந்திரத்தைப் பற்றி எவரும்
கதைக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்தபோதுதான் முதன்முதலாக பூரண சுதந்திரம்
பற்றி குறிப்பிடுகிறார்கள்».
|
பகுதி – 02
கேள்வி: நீங்கள்
இலங்கையில் கற்பித்தீர்கள். பின்னர், கனடாவில் கற்பித்தீர்கள். இடையிலே உங்கள் பயணங்கள்
எப்படி இருந்தன? எப்படி நீங்கள் கனடாவுக்கு வந்து சேர்ந்தீர்கள்?
பதில்: உண்மையில் இலங்கையை விட்டு பிரச்சினைகள்
பாரிய அளவில் தொடங்கு முன்னமேயே புலம் பெயர்ந்து சென்று விட்டேன், காரணம் அரசியல்.
என்னைத் தேவையில்லாமல் இடம் மாற்றினார்கள். சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது. தேர்தலில்
யுஎன்பி ஆட்சிக்கு வந்த சமயம். அதனைத் தொடர்ந்து திடீர் திடீரென்று யுஎன்பி அமைப்பாளர்கள்
தோன்றினார்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையே பிணக்குகள் ஏற்பட்டன. ஒரு மாணவனை பாடசாலையிலே
சேர்க்க வேண்டும் என்று யுஎன்பி அமைப்பாளர் ஒருவர் என்னைக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.
டைரக்டர் சொன்னால் செய்வீர்களா? என்று கேட்டார். யார் வந்து சொன்னாலும் செய்ய மாட்டேன்
என்று சொன்னேன். மந்திரி சொன்னால் செய்வீர்களா? என்றார். அப்போதும் நான் செய்யமாட்டேன்
என்று சொன்னேன். அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அப்போது நான் தமிழரசுக் கட்சியைச்
சேர்ந்தவன், அக்கட்சிக்கு நிதி சேர்த்துக் கொடுத்தவன் என்று குற்றச்சாட்டைக் கூறி என்னை
வேறொரு பாடசாலைக்கு அதிபராக இடம் மாற்றிவிட்டார்கள். அதனை எதிர்த்துப் பிள்ளைகளும்
பெற்றோர்களும் போராடினார்கள். இரண்டு முறை உயரதிகாரிகள் வந்து எனது அரசியல் சம்பந்தமாக
விளக்கம் கேட்டார்கள். எனக்கு வழங்கிய புலமைப் பரிசில் வேறொருவருக்கு வழங்கப் பட்டது.
அந்த விதத்தில் எனக்கு மன விரக்தி ஏற்பட்டது. நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.
உண்மையிலேயே அது எனக்கு மன வருத்தத்தினை
ஏற்படுத்தியதுதான். மகாஜனக் கல்லூரியை அந்த அளவுக்கு நான் நேசித்தேன். அது நல்ல விதத்தில்
நடந்து கொண்டிருந்தது. உன்னத பாடசாலை என எல்லோராலும் புகழாரம் சூட்டப்பட்டது. ஆனால்,
இப்படியான சந்தர்ப்பங்கள் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டன. அந்த சமயத்தில் நைஜீரியாவிலே
ஒரு கல்வி அதிகாரி பதவி வாய்ப்பு கிடைத்தது. அங்கே போனேன். அங்கே போனதும், வேடிக்கை
என்னவென்றால், நான் ஒரு விலங்கியல் ஆசிரியர். நான் போனதும், அவர்கள் என்னிடம், விவசாயம்
கற்பிப்பீர்களா? என்று கேட்டார்கள்.
விலங்கியல் கற்பித்துக்
களைத்துவிட்டிருந்த எனக்கு விவசாயம் மிகவும்
ஆர்வமாகிவிட, ஆய்வுக் கூடங்கள் அமைத்து மிகவும் நன்றாக செயல்பட்டேன். அவர்கள் மிகவும்
மகிழ்ந்து பதவி உயர்வு எல்லாம் தந்து, இன்ஸ்பெக்டர்’
ஆக்கி விட்டார்கள். இன்ஸ்பெக்டராக இருக்கும்போது, நிறைய வேலைகள் செய்தேன். 250 அல்லது
300 மரங்கள் நட்டு இருப்பேன். அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு உதவக் கூடிய பாடத் திட்டங்கள்
அமைத்து, நல்ல பெயரோடு இருந்தேன்.
நைஜீரியாவிலே ராணுவ ஆட்சி
வந்தது. இவ்வாறு ராணுவ ஆட்சி வந்ததுமட்டுமில்லை, நைஜீரியா பணத்தினுடைய பொறுமானம் (நாணய மதிப்பு) மிகவும் வீழ்ந்துவிட்டது. 1983ம் ஆண்டு நான் அங்கே
போனபோது மாத ஊதியம் 500 நைரா. அது அப்போது 600 அமெரிக்க டாலருக்குச் சமம். 1987ல் அதே
500 நைரா, 100 அமெரிக்க டாலராக வீழ்ந்துவிட்டது. அந்த அளவுக்கு நைரா வீழ்ந்த காரணத்தினால்,
அங்கே இருப்பதில் பிரயோஜனம் இல்லை என்பதால், கனடாவுக்குப் போனேன்.
கனடாவிற்குப் போனதும்,
ஆரம்பத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு எரிபொருள் நிரப்பும் நிறுவனத்தில்
(Gas
Station)
தொடக்கத்தில் வேலை பார்த்தேன். அதைப்பற்றிக் கூட மகாசிவம் என்ற தமிழாசிரியர் சங்கத்தைச்
சேர்ந்தவர் இலங்கையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ‘‘யாழ்ப்பாணத்திலே பிரபல்யமான
கல்லூரி அதிபர் ஒருவர் அங்கே ‘கேஸ்’ ஸ்டேஷனிலே வேலை செய்கிறார்’’ என்று எழுதி இருந்தார். வவுனியா எம்.பி.,சிவசிதம்பரம் சீட்டு பிடிக்கிறார்
என்றும் எழுதி இருந்தார். அதை எடுத்து கனடாவில் வெளிவந்த தாயகம்’ பத்திரிகையில் பிரசுரித்தும் விட்டார்கள்.
அதற்கு நான் « நீங்கள் சொல்வது சரி. ஆனால், இலங்கையைப் பொறுத்த அளவிலே தொழில் மகத்துவம்
பேணுவது இல்லை. இங்கே கனடாவிலே, உண்மையில் தொழிலுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது » என
எழுதினேன்.
நைஜீரியாவிற்குப் போகின்றபோது,
எல்லோரும் முன்பே போய்விட்டார்கள், நான் சற்றே சில நாட்கள் கழித்துத்தான் போனேன். போனபோது
என்னை முதலில் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் போய் பதியச் சொன்னார்கள். பப்ளிக் சர்வீஸ்
கமிஷனுக்குப் பொறுப்பு கல்வி மந்திரி. நான் போன போது அவரைக் காணவில்லை. அங்கு ஒரு வேலையாள்
வந்து விளக்குமாற்றால் கூட்டித் துப்பரவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வந்தார்.
விளக்குமாற்றை வைத்திருந்தவர் அதனைத் தன் கக்கத்தில் வைத்து விட்டு அவருக்குக் கை கொடுத்து
வணக்கம் கூறினார். வந்தவர் உள்ளே போய்விட்டார்.
என்னை உள்ளே வரச்சொன்னார்கள்.
அங்கிருந்த வேலையாளுக்குக் கைகுலுக்கிவிட்டு வந்திருந்தவர்தான் மந்திரி. எனக்கு மிகவும்
திகைப்பாய் போய்விட்டது. இதுவே யாழ்ப்பாணம் என்றால், ஓர் அற்பப் புழுவைப் பார்ப்பதுபோல
பார்த்துவிட்டுப் போயிருப்பார். இங்கே, கூட்டுகிறவருக்குக்
கைகொடுத்துவிட்டு உள்ளே செல்கிறார். அந்த அளவிற்கு அங்கே மனிதனுக்கு, மனிதன் செய்கின்ற
தொழிலுக்கு மதிப்பு இருக்கிறது.
நான் ஒருதடவை எழுதினேன்.
கனடாவிலே படுத்து உறங்கும்போது, அடுத்த நாள் உயிரோடு எழுவேன் என்ற நம்பிக்கையோடு உறங்குவேன். இலங்கையில் அந்த உத்தரவாதம் இல்லை. என்னைப் பொறுத்த
அளவில் அங்கே நான் அரசாங்கத்திற்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நானும் உழைக்க வேண்டும்
என்று கருதினேன். எனவேதான், கேஸ் ஸ்டேஷனில் வேலை செய்து கொண்டிருந்தேன். சனி, ஞாயிறுகளில்
செக்யுரிடி கார்டாகவும் வேலை செய்திருக்கிறேன். இரண்டு வேலையும் செய்து கொண்டிருந்தேன்.
போதிய அளவு ஊதியம் கிடைத்தது.
அந்த சமயத்தில்தான் நான் கனடாவில் ஆசிரியப் பணியாற்றுதற்கான என் கல்வித் தகுதியை உயர்த்தக் கூடிய வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது. அப்போது என்னுடைய தகுதியை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே ஒவ்வொரு
மாதமும் தொடர்ந்து படித்து, விஞ்ஞானம் கற்பிப்பதற்கு, ஆங்கிலம் கற்பிப்பதற்கு, பிரதம பாடசாலைகளில் கற்பிப்பதற்கு உரிய சான்றிதழ்களைப் பெற்றபோது எனக்கு
அங்கே பல் கலாச்சார ஆலோசகர் என்ற பதவி கிடைத்தது. அந்தப் பதவியை நான் விரும்பினேன்
என்றுதான் சொல்ல வேண்டும்.
அது சமுதாயத்திற்கு நன்றாக
உதவக் கூடிய ஒரு பதவி என்பதால் அந்தப் பதவியை நான் விரும்பினேன். அவ்வாறு கனடா கல்வித்துறையில்
இலங்கைத் தமிழனுக்கு ஓர் உயர்ந்த பதவி கிடைத்தது என்றால் அது எனக்குத்தான். அதன் மூலம்
சமூகத்திற்கு உதவலாம் என்ற நம்பிக்கையுடன் நான் இணைந்தேன். நான் நினைத்ததை செய்யவும்
முடிந்தது. என் பணிப்பின் கீழே 18 மொழிகள்
இருந்தன. நான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆட்களை
நியமித்து அவர்கள் மூலமாக பிள்ளைகளுடனும் பெற்றோர்களுடனும் அவர்களுடைய தாய் மொழியிலே
கதைத்து, கணிதம் போன்ற பாடங்களிலே அவர்களுடைய திறனை அறிந்து அறிக்கை பெற்று அந்த அறிக்கையின்படி எவற்றையெல்லாம்
செய்யலாம் என்று ஆசிரியர்களுக்குச் சொல்லுவேன். புதிதாகப் புலம் பெயர்ந்த மற்றும் பாடசாலைக்
கல்வியில் பின்தங்கி நிற்கும் மாணவர்களை எமது
கவனத்துக்குக் கொண்டு வருவார்கள்.
ஆரம்பத்தில் கல்விச் சபை
பாடசாலைப் பிள்ளைகளுக்காகத் தாராளமாகவே செலவு
செய்தது. கொஞ்சம் குறைவான தரததுப் பிள்ளைகளுக்குப் பாட நேரத்திலேயே, தனியாக வைத்து
அவரவர ; மொழிகளில்பாட போதனை செய்தார்கள். அதற்காக
இலங்கைத் தமிழர்களை நியமித்து நான் அப்படிச் செய்தேன். அது சமூகத்திற்கு உதவக் கூடியதாகவும்,
பெற்றோர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடியதாகவும் ஏன் வேலையற்றிருந்த பல ஆசிரியர்களுக்கு
ஊதியம் கிடைக்கக் கூடிய வழியாகவும் இருந்தது.
பிள்ளைகளுக்கும் உதவக் கூடியதாகவும் இருந்தது.
அந்த சமயத்தில்தான், தமிழ்
மொழி கற்பிப்பதற்கு பொறுப்பாக இருந்தேன். இது எனக்கு வழங்கப்பட்ட இன்னொரு பணி. இதன்
மூலம் நான் பல தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்தேன். எம்மவர்கள் பலரை ஆசிரியர்களாக நியமித்தேன்.
அவர்களுக்கான ஊதியத்தை அரசாங்கம் கொடுத்தது. மணித்தியாலத்திற்குக கிட்டத்தட்ட 28 டொலர்.
நல்ல ஊதியம். என்னுடைய முயற்சியால், பல்கலைக்கழகம் புகுவதற்கு ஒரு பாடமாக தமிழ் அங்கீகாரம்
பெற்றது. இதன் விளைவாக, சில பிள்ளைகளுக்கு சிறப்பாக இலங்கையிலிருந்து அண்மைக் காலத்தில்
வந்தவர்களுக்கு ஏணியாக, பல்கலைக்கழகம் புகுவதற்கு சிறப்புப் பாடமாக தமிழ் கருதப்படுவதால்,
உபயோகமாக இருந்தது. இதை ஒரு சந்தோசமாகவே நான் நினைக்கிறேன்.
கேள்வி: உங்கள்
இளமைக்காலத்தின் போது, உங்களுக்கு வழிகாட்டியாக சில ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் அரசியல் பின்னணியோடும் இருந்திருக்கிறார்கள்.
1930களில் செயற்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் [Youth
Congress] அந்தப் பின்னணியில் வந்த
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அவர்களின் சமூக நோக்கு, மற்றும் காந்தீய சிந்தனைகள்,
எவ்வகையான பாதிப்பை யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்படுத்தி இருந்தன? எவ்வகையாக அவை வெற்றி
அளித்தன?
பதில்: உண்மையிலேயே. யாழ்ப்பாண
சமூகத்திலே, பாடசாலை அதிபர்களைப் பொறுத்த அளவிலே, ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவர்களது
கல்வி முயற்சி மாத்திரம் அல்ல, மாணவர்களுடைய ஆளுமை விருத்திக்கு உதவியதுடன், அவர்களுடைய
சமூகத்திலும் பல மாற்றங்களைக் கொண்டுவரக்கூடியதாக இருந்தது. சிறப்பாக, ஹண்டி பேரின்பநாயகத்துடைய
முயற்சியாலே தோன்றியது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ். இந்தியாவில் எழுந்த சுதந்திரப்
போராட்டத்தை இலங்கை நோக்கியும் பரவச் செய்தவர் அவர். அந்த இளைஞர் காங்கிரசினுடைய குறிக்கோளாக இலங்கைக்கு பூரண சுதந்திரம். [அப்போது இலங்கையில்
அரசியல் கட்சிகள் இல்லை] இரண்டாவது சம பந்தி
போஜனம். சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன். மூன்றாவதாக, எல்லோருக்கும்
தொழில் சமத்துவம் இருக்க வேண்டும் என்பது.
நான்காவதாக, மிக முக்கியமான ஒன்று, தாய்மொழியில் கல்வி. 'யூத்' [இளைஞர்] காங்கிரசினுடைய
இந்தக் கொள்கை முதன்முதலாக இவர்களால்தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக்காலத்திய அதிபர்கள்
எல்லாருமே, தேசிய உணர்வுடையவர்களாக இருந்தனர். உடை கூட வேட்டியும் நேஷனலும் தான்.
காந்தியத்தோடு, இந்தியாவில்
சுதந்திரப் போராட்டம் ஏற்பட்டதாலே, இங்கும் அந்த உணர்வு ஏற்பட்டது. ஹண்டி பேரின்பநாயகம்,
ஒறேற்ரர் சுப்பிரமணியம், என். சபாரத்தினம், ஐ.பி. துரைரத்தினம் போன்றவர்கள் காந்தியத்தோடு
தொடர்புடையவர்களாக இருந்தார்கள். மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்தபோது,
சொன்னார்கள்: «நான் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்திருக்கிறேன். இதுநாள்
வரையிலே சுதந்திரத்தைப் பற்றி எவரும் கதைக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்தபோதுதான்
முதன்முதலாக பூரண சுதந்திரம் பற்றி குறிப்பிடுகிறார்கள்».
அதேபோல் தாய்மொழிக் கல்வி.
அந்தக் காலத்திலேயே தாய்மொழிக் கல்வியின் அவசியம் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அதேபோன்று,
சாதித் திமிர் உடையவர்களின் எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது சம பந்தி போஜனம் நடத்தினார்கள்.
யூத் காங்கிரஸ் அவற்றிற்காக அரங்க கூட்டங்கள் எல்லாம் நடத்தினார்கள். கீரிமலை மடத்திலே,
சுன்னாகத்திலே இப்படி கூட்டம் நடந்த மண்டபங்களையே அச்சமயத்திலே சாதியத்தை ஆதரித்தவர்கள்
தீ வைத்துக் கொளுத்தி விட்டார்கள். இன்னொரு இடத்திலே பாம்பை அடித்து கிணற்றுக்குள்
போட்டுவிட்டார்கள். தண்ணீர் கெட்டு விடும். அப்படியான எதிர்ப்புக்கிடையேயும் அவர்களாலே
இவற்றையெல்லாம் செய்ய முடிந்தது. இந்தவிதமான ஒரு தாக்கத்தை முதலில் ஏற்படுத்த முடிந்தது.
பின்னர், அரசியல் கட்சிகள் வந்த காரணத்தால்தான் ‘யூத் காங்கிரஸ்’ [இளைஞர் காங்கிரஸ்]
உடைந்தது.
1930க்குப் பின்னர்தான்
தமிழ் காங்கிரஸ் வந்தது. பின்னர் லங்கா சமசமாஜக் கட்சி [LSSP] வந்தது. அது வரைக்கும்
Youth
Congress நல்லதொரு
வலுவான அமைப்பாக இருந்தது. சமூகத்திலே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அது மிக முக்கியமானதொன்று. அதற்கு மேலேயே வெளிநாடுகளிலிருந்து வந்த சில கிறீஸ்தவ
அதிபர்கள், குறிப்பாக ஃபாதர் லோங், விக்னல் பாதிரியார் போன்றவர்கள் சாதியத்திற்கு எதிராக
செயல்பட்டிருக்கிறார்கள்.
விக்னலைப் பொறுத்தவரையிலே
அவர் சாதியத்திற்கு எதிராக எப்படி எப்படி இயங்கினார் என்று பாருங்கள். ஒரு சமயம் அவர்,
அலோசியஸ் காந்தி என்ற மாணவர் ஒருவருக்கு பல பாடசாலைகளில் இடம் கிடைக்கவில்லை, சாதி
காரணமாக. யாழ்ப்பாண கல்லூரியிலே [Jaffna College] சேர்ந்தபோது, அவருக்கு விக்னல்; பாடங்கள் எடுத்தார்.
அப்போது ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களும் சாதிய எதிர்ப்பைக் காட்டினார்கள். அப்போது
விக்னல் சொன்னார்: « உங்களில் யார் வராவிட்டாலும் கூட நான் இந்தப் பையனுக்குப் பாடம்
படிப்பிப்பேன் » என்றார். இப்படியான சாதிய எதிர்ப்பு நடவடிக்கைகளை அப்போது செய்தார்கள்.
அதேபோன்று, ஃபாதர் லோங்
பொறுத்தவரையிலே யாழ்ப்பாணம் நூல் நிலையம் உருவாக்குவதற்கு மாத்திரம் அல்ல, அதற்கான
வளர்ச்சிக்கும் நிதி சேர்த்தவர். அதனால்தான்
அவரது சிலை யாழ்ப்பாணத்திலே வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி விமான
நிலையம் அப்போது நடைபெற்ற இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் மூடப்பட இருந்தது. இவருடைய
நண்பராக இருந்த கவர்னரைத் தொடர்புகொண்டு அந்த விமான நிலையம் கட்டாயமாக வேண்டும் என்று
கூறி மூடாமல் செய்து விட்டார். அப்படியான பல மாற்றங்களை யாழ்ப்பாண மக்களுக்காக ஃபாதர்
லோங் அவர்கள் செய்தார்கள்.
அப்படிப்பட்ட ஃபாதர் லோங்கிற்கு
யாழ்ப்பாணத்திலேயே ஒரு துரோகம் இழைக்கப்பட்டது. அதாவது, ஃபாதர் லோங் தான் அதிபராக இருந்த
யாழ்ப்பாணத்துப் புனித பத்திரியாசியர் கல்லூரியை [St. Patricks College] கொழும்பிலே உள்ள அக்குவைனாஸ்
கல்லூரி [Aquanas
College]
போல் கொண்டு வர வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தார். அதற்காக அமெரிக்கா போய் பணம் சேர்த்துக் கொண்டு வந்தார்.
அந்த சமயத்தில் இங்கே இருந்த யாழ்ப்பாண பிஷப், அப்பணத்தினை ஆலயம் கட்ட உபயோகிப்பதற்குத்
தருமாறு கேட்டார். லோங் அடிககளார் பாடசாலைக்காகச் சேகரிக்கப்பட்ட பணத்தை வேறு எதற்கும்
தரச் சம்மதியேன் என மறுத்துவிட்டார். கோபமுற்ற பிஷப் இவருடைய சேவை இங்கே தேவையில்லை
என்று கூறி ஆஸ்திரேலியாவுக்கு மாற்றி விட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்தபோதுகூட, நான் யாழ்ப்பாணத்தில்தான் வாழ விரும்பினேன். ஆனால்
விதி விடவில்லை என்று கடிதம் எழுதி இருக்கிறார். அப்படியான வெளிநாட்டவர்கள் கூட உன்னதக் கல்விக்கும், சமூக முன்னேற்றத்திற்கும்
தங்கள் பங்களிப்பினைச் செலுத்தி இருக்கிறார்கள்.
அதிபர்கள் என்று சொல்கின்றபோது,
வெறுமனே கல்வி போதிப்பவர்களாக - புகுத்துகிறவர்களாக மட்டுமல்லாமல் ஒரு பண்பான சமூகத்தை, ஒரு சீரான சமூகத்தை, ஒரு மேம்பட்ட சமூகத்தை
உருவாக்குவதற்கு அவர்கள் பாடுபட்டார்கள்.
அதிபர் என். சபாரத்தினத்தினம்
ஓய்வு பெற்றபின்னர் எழுதிய ஆசிரிய தலையங்கங்கள் ‘ஈழநாடு’ நாளிதழில் வந்தபோது அதற்கு என்றே ஒரு வாசகர் வட்டம்
இருந்தது.
அதேபோல் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் அமரர் சூரன்.
நான் சூரனையும், அம்பேத்கரையும் ஒப்பிடுவது உண்டு. அம்பேத்கர் சாதியத்திற்கு எதிராக
நின்றார். ஆனால், என்ன செய்தார்? அவர் தாழ்த்தப்பட்ட
மக்களின் மதத்தை மாற்றினார். தான் தாழ்ந்த சாதியாக இருந்ததால், மதத்தை மாற்றினார்.
ஆனால் சூரன் சாதியை எதிர்த்தார். அந்த மதத்திலிருந்தே போராடினார். அவர் ஒரு கோழை அல்ல
என்பதை மெய்ப்பித்துக்காட்டினார். சூரன் அந்த
அளவுக்கு தன் மதத்திலிருந்து கொண்டே போராடினார். அம்பேத்கரும் அதேபோல் தன் மதத்திலிருந்தே
போராடி இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
புத்தூரிலே நான் அதிபராக
பதவி ஏற்கச் சென்றேன். நான் டிசம்பரிலே சென்றேன். ஜனவரியிலே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்து
மாணவனை நான் சேர்த்துக் கொண்டேன். புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரி வள்ளல் மழவராயரால் கட்டப்பட்டது. அதற்கு ஒரு தர்மகர்த்தா
சபை இருந்தது. அதன் முக்கியஸ்தர் என்னிடம்
வந்தார். [அந்தச் சோமாஸ்கந்தா கல்லூரிக்கு அடித்தளமிட்ட தினத்திலே, அருகே உள்ள சோமாஸ்கந்தர்
சிலையைக் கொண்டு வந்து பாடசாலையில் வைப்பார்கள். எல்லோருக்கும் சாப்பாடு செய்து கொடுப்பார்கள்]
வந்த தர்மகர்தா சபையின் தலைவர் பாடசாலை தீட்டுப்பட்டுவிட்டது. எனவே இனிமேல் சோமாஸ்கந்தர் பாடசாலைக்குக் கொண்டு வரப்பட மாட்டார்
என்றார். அதுவே உங்கள் விருப்பமாயின் அப்படியே
நீங்கள் செய்யுங்கள் என்றேன்.
அதற்குப் பிறகுதான் நான் நிறுவியவர் பிறந்த தேதியை அறிந்து அத்தினத்தினைப்
பாடசாலையின் நிறுவியவர் தினமாக கொண்டாடினேன்.
அது இப்பொழுதும் தொடர்கிறது. இந்த சாதியம்
அந்த ஊரிலே இருந்த காரணத்தினாலே, அப்போது அந்த ஊரிலே இரண்டு பெளத்த பாடசாலைகள் அங்கு
இருந்தன. நான் போய் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் அந்த பிள்ளைகளை பாடசாலையில்
கவனமாக சேர்த்ததினாலே அந்த இரண்டு பெளத்த பாடசாலைகளும்
இல்லாமல் போய்விட்டன, அதிலும் ஒரு போராட்டம் செய்யக்கூடிய நிலை இருந்தது.
அப்படியாக ஒரு சமூக மாற்றத்தை
அதிபர்களால் செய்ய முடியும். நான் அதிபர் பதவி ஏற்றபோது நான் அனுபவமற்ற ஓர் இளம் ஆசிரியர். அதுவும் 31 வயதில்
நான் அதிபராகிவிட்டேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியபோது கண் முன்னே நின்றவர்கள்
மூன்று பேர். ஒருவர் ஜயரத்தினம். இன்னொருவர்
‘ஒரேற்றர்’ சுப்ரமணியம் [Orator] மூன்றாமவர் குமாரசாமி.
சோமாஸ்கந்தாவில் அதிபராக இருந்தவர்.
அதிபர் ஜயரத்னம் இங்கிதமானவர்.
இங்கிதம் என்ற சொல் அவருக்குத்தான் பொருந்தும். அவருடைய புன்முறுவல் ஆயிரம் கப்பல்களை
உடைக்கும்.
அதேபோல் ஒரேற்றருடைய மனிதாபிமானம்.
எத்தனையோ பாடசாலைகளில் உதவாக்கரை என்று நீக்கியவர்களை அவர் எடுத்து. வளர்த்து. அவர்களின்
தனித் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கு வாழ்வு அமைத்துக் கொடுத்தவர்.
ஒருதடவை சாதியாலே ஒடுக்கப்பட்ட
பையன் ஒருவனின் ‘பேக்’ [Bag] -ஐக் கொண்டுபோய் விடுதிச் சாலையின் மேற்சாதி பையன்கள் கிணற்றில்
கொண்டுபோய் போட்டுவிட்டார்கள். யார் கொண்டுபோய் போட்டது என்று அதிபர் கண்டுபிடித்துவிட்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வேறு பாடசாலையாக இருந்திருந்தால் உடனே அவர்களைப் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கி இருப்பார்கள். ஆனால் இவர் என்ன செய்தார்?
மாணவர்களிடம், « இதைச் செய்தது யார் என்று
எனக்குத் தெரியும். ஆனால் உங்களை நான் தண்டிக்கப் போவது இல்லை. நீங்கள் செய்ய
வேண்டியது என்னவென்றால், அந்த ‘பேக்’-ஐ கிணற்றில் இருந்து எடுத்து உடுப்புகளைக் காய
வைத்து. உரியவரிடம் கொடுத்து விட வேண்டும், அவ்வளவுதான் » என்றார். அதுதான் மனிதாபிமானம். அதேபோல் இங்கிதம். இந்த குமாரசாமியினுடைய
‘கமிட்மெண்ட்’ [commitment] அர்ப்பணிப்பு. அதே போன்றவர்
நவரத்தினராசா. அப்படியாக வாழ்ந்த அதிபர்கள். இவ்வாறு ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்லலாம்.
கேள்வி: அதிபர்கள்
கல்லூரியை நடத்துகிறவர்கள் என்ற வகையில் நிர்வாகம் [administration], மற்றும் ஒழுங்கமைப்பு
என்பவற்றில் அதிக கவனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எழுத்துத் துறைக்கு வருவது கொஞ்சம் கடினம். நீங்கள்
அதிபராக இருந்திருக்கிறீர்கள். இந்த நிலையில் எழுத்துத் துறை எப்படி உங்களைக் கவர்ந்தது?
பதில்: முதலில் நான் நல்லதொரு
வாசகன். எனது வீட்டிலேயே நூலகம் வைத்திருப்பவன். அனைவரையும் வாசிக்கத் தூண்டுபவன்.
உண்மையில் சொல்லப்போனால், பாடசாலைகளில் ஆசிரியராக இருந்தபோதே எனக்கு எழுத்தில் ஓர்
ஆசை இருந்தது. விஞ்ஞானக் கட்டுரை எழுதலாம் என்று யோசித்து ஒரு முறை வீரகேசரிக்கு விஞ்ஞானக்
கட்டுரையை அனுப்பி இருந்தேன். அவர்கள் முன்னுரையை மாத்திரம் பிரசுரித்துவிட்டு மற்றதை
விட்டுவிட்டார்கள். அதோடு அந்த ஆசையை விட்டுவிட்டேன். நைஜீரியாவிலிருந்து, கனடாவுக்குப்
போனபிறகு, போதிய அவகாசம் கிடைத்தது.
இந்தக் கல்வி சம்பந்தமாக
கனடாவிலே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு - கனடிய கல்வி சம்பந்தமாக எடுத்துச் சொல்ல வேண்டும்
என்று ‘தமிழர் தகவல் என்ற மாதாந்த தகவல் சஞ்சிகை ஒன்றினை நடத்தி வந்த திரு. திருச்செல்வம்
அவர்கள் கேட்டார்கள். அவர் யாழ்நகரில் ‘முரசொலி’ என்ற பத்திரிகையை ஆசிரியராக இருந்து
நடத்தியவர். நான் தொடர்ச்சியாக எழுதியபோது கனடிய கல்வி முறை, இலங்கை கல்வி முறை இரண்டையும் ஒப்பீட்டளவிலே எழுதத் துவங்கினேன். அப்படித்தான்
எழுதத் துவங்கினேன். தமிழ் மக்களுக்கு உபயோகப்பட வேண்டும் என்ற எண்ணத்திலே எழுதி வந்தேன்.
ஆகவே அப்படி எழுதத் துவங்கியபின், கொஞ்சம் கொஞ்சமாக அங்கேயுள்ள பத்திரிகையாளர்கள் எனக்கு
எழுதிக்கொடுங்கள், எனக்கு எழுதுங்கள் என்று கேட்கத் தொடங்கினார்கள். இப்படியாக எழுத்தாளனாகி
விட்டேன்.
இப்படி தொடர்ச்சியாகப்
பல பத்திரிகைகளில் நான் எழுதியவற்றை நண்பர்கள் நூலாக்க வடிவம் கொடுத்தார்கள். இப்படியாகத்தான்
எழுத்துத்துறையில் ஓர் ஈடுபாடு வந்தது.
என்னைப் பொறுத்தவரையில்
பல சந்தர்ப்பங்களில் நான் சொல்லி இருக்கிறேன். « நான் ஓர் எழுத்தாளன் அல்ல » என்பதுதான். என்னைப்பற்றி நான் சொல்வது « நான் ஒரு
பொறுக்கி. அங்கும் இங்கும் பொறுக்கி கோர்வையாகக் கோர்த்து உங்களுக்குத் தருகிறேனே தவிர நான் பெரிதாக அப்படி ஒன்றும் தருவது
இல்லை»
அந்த அளவிலே சில விஷயங்களை
மனதில் தோன்றுவதை எழுதுகிறோம். சில விஷயங்களை கேள்விப்பட்டவைகளை எழுதுகிறோம், சில விஷயங்களைத்
தகவல்கள் திரட்டி, பெற்று எழுதுகிறோம். அதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற
எண்ணத்திலேயே அப்படியாக நான் செய்திருக்கிறேன். இவ்வாறு எழுதத் துவங்கிய பிறகு படிப்படியாக
என்னுடைய எழுத்துத் துறை கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது. தனியாகக் கல்வி சம்பந்தமான
கட்டுரைகளோடு நின்று விடாமல் படிப்படியாக விரிவடைந்தது.
மாறன் மணிக் கதைகள்
-1. எனும் தொகுப்பை எனது மகனுடைய ஞாபகார்த்தமாக
செய்தேன். சில விஞ்ஞான ரீதியான கருத்துக்களை
சுலபமாக இளம் தலைமுறையினருக்கு விளங்கக்கூடிய அளவிலே சிறிய கதைகளாகக் கொடுத்திருக்கிறேன்.
அதேபோல் இன்றைக்குச் சொல்லப்போனால்,
என்னுடைய ‘ஒரு அதிபருடைய பார்வையிலே’ என்ற
கட்டுரைப் புத்தகம். அது என் நண்பர்களாலே பிரசுரிக்கப்பட்டது. அது இலங்கை கல்வி முறையை,
கனடிய கல்வி முறையோடு ஒப்பிட்டு எழுதப்பட்டது.
அதற்குப் பின்னர் இன்னொன்று
எழுதினேன். ‘பெற்றோர் - பிள்ளை உளவியல்.’ குறிப்பாக கனடாவில் வாழ்கின்ற பெற்றோர்கள்,
அங்கே பிள்ளை வளர்ப்பு பற்றிய விளக்கம் தர வேண்டும் என்ற காரணத்தினால், ‘பெற்றோர்
- பிள்ளை உளவியல்’ நூலாக்கி பிரசுரித்தேன்.
பின்னர் வெற்றிமணி என்ற
பத்திரிகையினை ஜெர்மனியில் இருக்கிற நண்பர் சிவகுமாரன் நடத்துகிறார். அவருக்கு சில
விஞ்ஞான தகவல்களைக் கொஞ்சம் நகைச்சுவையோடு கலந்து கட்டுரையாகக் கொடுக்கக்கூடியதாக இருந்தது.
விஞ்ஞான உண்மைகளைச் சொல்லுகின்ற விதத்திலே கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்லுகின்றபோது வாசிப்பவர்களுக்கு
ஓர் ஈர்ப்பு ஏற்படும் என்ற காரணத்தினாலே அவ்வாறு செய்தேன். அதனையும் ‘திறவுகோல்’ என்ற
கட்டுரை நூலாக வெளியிட்டார்கள்.
பிறகு. மீண்டும் உளவியல்
கட்டுரைகளை இலங்கையில் உள்ள எனது மாணவியும் பிரபல எழுத்தாளருமாகிய கோகிலா மகேந்திரன்
‘மனம் எங்கே போகிறது ?’ என்ற பெயரிலே நூலாக பிரசுரித்தார். இதைத் தவிர மற்ற இரண்டு
புத்தகங்கள்.
‘மாறன் மணிக்கதைகள்
-1’. ‘மாறன் மணிக் கதைகள் – 2’. எனக்கு அது மிகவும் பிடித்த ஒரு காரியமாக இருந்தது.
ஏனென்றால், இளைய தலைமுறையினருக்குச் சில விஞ்ஞான உண்மைகளையும், தத்துவங்களையும் எளிமையாகச்
சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலே அந்த இரண்டு சிறார் கதைத் தொகுதிகளையும் பிரசுரித்தேன்.
சிறு வயதில் மறைந்த என்னுடைய மகனுடைய ஞாபகார்த்தமாகவே அதைச்செய்தேன்.
அந்த மாறன் மணிக் கதைகள்
வெளியீட்டின் போது, அவனுடைய நண்பர்கள், எனது உறவினர்கள் எல்லோரும் பண உதவி செய்தார்கள்.
பின்னர் அரசாங்கம் அதற்கு ஈடான தொகையையும் கொடுத்த காரணத்தினாலே கார்ல்ரன் பல்கலைக் கழகத்திலே மகனுடைய பெயராலே ஒரு புலமைப்
பரிசிலும், உதவித் தொகை வழங்கலும் ஆரம்பித்தேன். வருடாவருடம் தகுதியான மாணவர்களுக்குப்
பணம் கொடுக்கப்படுகிறது. மணிமாறன் Scholarship. மணிமாறன் Bursary இருந்துகொண்டே இருக்கும்.
தொடர்ந்தும் அவருடைய நண்பர்கள், என்னுடைய உறவினர்கள் மேலும் மேலும் உதவுகிறார்கள்.
இப்போது என் மருமகனும் சிறிது பணம் தந்திருக்கிறார். இவற்றையும் அந்த நிதியத்திலேயே
சேர்ப்பேன்.
இந்தப் ‘பெற்றோர் பிள்ளை
உளவியல்’ என்ற அந்த நூல் என்னுடைய மனைவியினுடைய பத்தாவது ஆண்டு நினைவு தினத்தன்று வெளியிட்டபோது
- அவர் கான்சரால் இறந்த காரணத்தினாலே - அதில் வரக்கூடிய பண வளத்தை கான்சர் சொசைட்டிக்குக்
கொடுத்தேன்.
என்னுடைய இந்த ‘மரம் -
மாந்தர் – மிருகம்’ நூலையும் என்னுடைய மகனுக்குத்தான் அர்ப்பணம் செய்திருக்கிறேன்.
அதிலே நான் இப்படி குறித்திருக்கிறேன்:
‘‘அவசரமாக வந்தாய்
அவசரமாகப் போய்விட்டாய்
ஆனாலும் நெஞ்சிலும்
கார்ல்ரன் பல்கலைக்கழகத்திலும்
நகராமல் நிலையாய்
நிற்கிறாய்’’
என்று. அவருடைய ஞாபகார்த்தமாக
அங்கே ஸ்காலர்ஷிப் இருக்கிறது.
இதன் பின்னர்தான் ‘மரம்
- மாந்தர் – மிருகம்’ என்ற நூல் - கட்டுரையோ, புனைவோ, நீங்கள்தான் சொல்ல வேண்டும்
- அது என்னுடைய இளமைக்கால நினைவுகளை அதிலே வித்தியாசமாக அணுகி இருக்கிறேன். மரங்களைப்
பற்றி சொல்வது இருக்கிறது, இளமைகால நினைவுகளையும்
வைத்து ஒரு கதையையும் இணைத்து விஞ்ஞானத்தையும் இணைத்து ஒரு கதம்பமாக அமைத்து இருக்கிறேன்.
அடுத்தது, ‘எம்மை வாழ வைத்தவர்கள்’, இந் நூலினை எழுதுவது என்னுடைய வாழ்வின் இலட்சியமாக
இருந்தது.
கேள்வி: உங்களுடைய
நூலைப் படித்தவர்கள், ‘மரம் - மாந்தர் – மிருகம்’ பற்றி மிகவும் சிறப்பாகச் சொல்கிறார்கள்.
ஏனென்றால் இதில் பயன்பட்டிருக்கிற மொழி, விவரணம், இதில் சொல்லப்பட்டிருக்கிற முறை எல்லாமே
மிகச்சிறப்பாக இருக்கிறது, ஒரு வகையான படைப்பு இலக்கியமாக இருக்கிறது. அந்த நூலை எழுத எப்போது நீங்கள் தயாரானீர்கள்?
பதில்: இரண்டு விஷயங்கள்.
ஒன்று, இது என்னுடைய ஆழ் மனதிலே இருந்த சில எண்ணங்கள், கருத்துக்கள். என்னுடைய ஊரைப்பற்றிய
செய்திகள். மற்றது, ஒரு வித்தியாசமான முறையில் எழுத வேண்டும் என்ற எண்ணம். இப்படியான
சிந்தனையில், மற்றவர்கள் எழுதாத ஒரு வித்தியாசமான பாணியைக் கையாள வேண்டும் என்று கருதினேன்.
நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அந்த விதத்தில் யோசித்து யோசித்து எழுதினேன். மேலும்
மாதம் ஒரு தடவைதான் கட்டுரை எழுதுவது என்று வைத்திருந்தேன். அந்த வகையில் நிறைய கால
அவகாசம் கிடைத்தது. சிந்திக்க நேரம் கிடைத்தது.
மேலும், கணினி என்பது ஓர்
அற்புதம், இல்லையா? எண்ணுவதை எந்த நேரத்திலும் பதிவு செய்துவிடலாம். திடீரென்று ஏற்படக்கூடிய
எண்ணங்களை எல்லாம் பதிவு செய்துவிடுவேன். ஆழ்மனதிலே பதிந்திருந்த எண்ணங்களைப் புகுத்தும்
போது, அவை விஞ்ஞான ரீதியாக ஏற்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். வாசகர்களுக்கு இது
வெறுமனே விஞ்ஞான கருத்து என்று சொன்னால் சுவைபடாது. சொல்வதை சுவைபடச் சொல்ல வேண்டியதும்
அவசியமாகும். அதை நான் கையாண்டேன். மிகைப்படுத்தாமல் ஓரளவுக்குச் சொல்ல வேண்டும். உண்மையாகவும்
இருக்க வேண்டும். இவை உண்மை கலந்த பொய் என்று சொல்வேன். கதைகள் என்றால் பொய்தானே. ஆனால்
உண்மை கலந்த பொய்கள்.
சில விஷயங்கள் நிச்சயமாக
என்னைப் பாதித்த விஷயங்கள். சில விஷயங்கள் என் மனதைப் பாதித்த விஷயங்கள். ஆனால் கொஞ்சம்
சேர்த்து மிகைப்படுத்தி எழுதி இருக்கிறேன். அந்தக் காலத்திலே நான் சின்ன பிள்ளையாக
இருந்த காலத்தில் சில பாத்திரங்கள் என் மனிதலே
இடம் பெற்றிருந்தன. அதைப்பற்றிச் சொல்லி இருக்கிறேன்.
கேள்வி : நீங்கள்
உலகம் முழுதும் பயணித்திருக்கிறீர்கள். உங்களை ஆர்கசித்த கருத்துக்கள் மற்றும் இந்த
நூல் தொடர்பாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சம்பவங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
பதில்: குறிப்பிடக்கூடிய சம்பவங்கள் என்று எதைச் சொல்வது?
ஒரு கவிஞர் ஒரு கவிதை எழுதுகிறார். ஆனால் அந்தக் கவிஞனை உயர்த்துவது வாசகர்கள்தான்.
ஏனென்றால், கவிஞன் மனதிலே தோன்றாத கற்பனைகள் எல்லாம் அதை வாசிக்கையில் வாசகனுக்கு வருகிறது.
அதைச் சொல்லுகின்றபோது, அவனே தெரிந்தவனாகிவிடுகிறான். கவிஞன் எழுதுகின்றபோது அந்த அளவுக்குத்
தோன்றி இருக்காது. ஆனால் வாசகர்கள் அவற்றை எடுத்துச்சொல்கின்றபோது அவர் பெரிய கவிஞராகிவிடுகிறார்.
அப்படித்தான், நான் எழுதியதிலும் பார்க்க, உங்கள் வழியாக விமர்சனங்கள் வருகிறபோது,
நானும் உயர்கிறேன். அதுதான் முக்கியம். உண்மையிலேயே நான் எளிய தமிழில்தான் எழுதி இருக்கிறேன்.
நான் அப்படி ஒன்றும் தமிழ் இலக்கணம் படித்தவன் அல்ல.
கேள்வி: நீங்கள்
வந்து உங்களுடைய உயர்கல்வியைத் தமிழ்நாட்டில் பெற்றிருக்கிறீர்கள். கல்வி கற்றிருக்கிறீர்கள்.
கல்வி கற்றபோது அன்றைய தமிழ்நாடும், பின்னால் நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போனபோது இப்போது
தமிழ்நாடு இருக்கும் நிலைமையும் குறித்து உங்கள் அவதானிப்பு எப்படி இருந்தது?
பதில்: தமிழ்நாடு குறித்து,
என் கதையைச் சொல்வதற்குமுன், யாழ்ப்பாணம் குறித்து சொல்கிறேன். யாழ்ப்பாணத்திற்கு இந்த
முறை போகும்போது, கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்காரர்கள் அடித்துப் போட்டாலும் நிமிரக்கூடிய ஓர் ஆத்மபலம்
உள்ளவர்கள் என்று நான் கருதுவேன். இப்போது புத்தூருக்குப் போனேன். போகிற வழியில் எல்லா
பகுதிகளிலும் அனைத்து வகையான பழவகைகளும் நட்டிருப்பதைக் காண முடிந்தது. பழையபடி ஊர்
சிறுகச் சிறுக மாறிக்கொண்டு வருவதைப் பார்க்கிறேன். ஆனால் அதே சமயத்திலே இந்த வீடுகள்?
அது உங்களுக்கு போராட்டங்களை நினைவுபடுத்திக் கொண்டு இன்னும் எத்தனை வருஷங்களுக்கு
இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஏனென்றால். நாட்டை விட்டு இங்கிலாந்து போனவர்கள்,
கொழும்பு போனவர்கள் திரும்ப வரப்போவது இல்லை. அதே சமயத்தில் வீட்டைத் திருத்தப் போவதும்
இல்லை. அது ஒரு பெரிய மனக்கவலையை ஏற்படுத்துகிறது. ஒருபக்கம் பார்க்கையில் சந்தோசமாக
இருக்கிறது. ஆனால், அதே சமயத்தில் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் அதே சமயத்திலே இவைகளைப்
பார்க்கின்றபோது இவை இப்படியே இருக்கப் போகின்றதா? என்ற கேள்வியும் தொடர்கிறது.
மகாஜனக் கல்லூரி அதிபர்
ஜெயரத்தினம்; வீட்டு வழியாகப் போனேன். தெரு எல்லாம் போடுகிறார்கள். ஆனால் வீடுகள்?
யார் கட்டப் போகிறார்கள்? லண்டனில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திருத்தப் போவதும் இல்லை, இருக்கவும் போவது இல்லை.
இது எனக்கு ஒரு பெரிய ஆதங்கமாக இருக்கிறது. இந்தப் போராட்டத்தை எந்த நேரமும் நினைத்து
கலங்கக் கூடிய ஒரு நினைவை ஏற்படுத்துகிறது.
என்னைப் பொறுத்தவரையில்
நான் படித்த காலத்திலிருந்ததையும் பார்க்க எல்லா துறைகளிலும் தமிழ்நாட்டில் நல்ல முன்னேற்றம்
காணப்படுகிறது. அந்தக் காலத்திலே உண்மையைச் சொல்லப்போனால், நான் திராவிட முன்னேற்றக்
கழக ஆதரவாளன். இப்போதும் கூட கலைஞரைப் பெரிதாக மதிக்கக்கூடியவன்தான். அவருடைய குறைபாடுகள்
இருக்கட்டும். அவருடைய பேச்சால் கவரப்பட்டவன். அந்தக் காலத்திலே டிக்கெட்டுகள் வாங்கிக்
கொண்டுதான் அவருடைய கூட்டத்திற்குப் போவோம். காசு கொடுத்துத்தான் பார்க்க வேண்டும்.
அந்த அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது.
கிரிக்கெட்டிலும் எனக்கு
இன்றைக்கும் இந்திய கிரிக்கெட் அணிதான் நம்பர் 1. இந்தியா தோற்றால், என் பிள்ளைகள்
சொல்வார்கள் ‘‘அப்பா முகத்திலே வருத்தம் தெரிகிறது’’ என்று. அந்த அளவுக்கு இந்தியாதான் என்னுடைய ஈர்ப்பு.
IPL போட்டியில் எனது உள்ளத்தில் சென்னைக்கே முதலிடம்.
இந்தியாவுக்குச் சென்றமுறை
போயிருந்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அங்கே பேரீச்சை உண்டாக்குகிறார்கள். பேரீச்சை
மரங்கள் இருக்கின்றன. சென்னையில் சென்று பார்த்தால்,
பேரீச்சை மரங்களைப் பார்க்க முடிகிறது. கோயம்பத்தூரில் பேரிச்சை தோட்டம் எல்லாம் உண்டாக்கி
இருக்கிறார்கள். இப்போதைய சென்னை நகரத்தில் எத்தனையோ தேவையான மாற்றங்களை செய்துளார்கள்
ஆட்சியாளர்கள்.
மொத்தத்தில், ஓரளவுக்கு
நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அரசியலிலும் பிரச்சனைகள் வருவது இல்லாமல் நாட்டைப் பொறுத்த
அளவிலே நல்ல முன்னேற்றம் இருக்கிறது. உண்மையிலேயே நல்ல முன்னேற்றப் பாதையிலே போய்க்கொண்டிருக்கிறது.
கல்வியைப் பொறுத்த அளவிலே கனடாவிலே பல தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்தியாவிலே வேலை கொடுத்து
வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ளவர்களே நல்ல ஊதியம் பெறுகிறார்கள். கனடாவிலே
இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் சென்னையிலே உள்ள ஆட்களை உபயோகித்துக்கொள்கிறார்கள்.
அந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கல்வித்துறையிலே போட்டிபோட்டுக்கொண்டு
பாடசாலைகள், கல்லூரிகள் வந்திருக்கின்றன. ஆனால், அதே சமயத்திலே ஊழலும் அதிகமாகி இருக்கிறது.
000 : நல்லது ஐயா, மிகவும்
நன்றி.
-முகிலன்
பாரீசு 17.07.2013
நன்றி : காக்கைச் சிறகினிலே யூலை 2013
இவரது நேர்காணல் பகுதி1 இனைக் காண பின்வரும் இணைப்பில் சொடுக்குக:
அறியாத பல விசயங்களை அறிந்துக் கொள்ள வைத்தது உங்க நேர்க்காணல்.., பகிர்வுக்கு நன்றி, முயற்சிக்கு வாழ்த்துகள்
ReplyDeleteகண்டதை பார்த்ததை கண்டுகொள்ளாது நகரும் சமூகவோட்டத்தில் தாங்கள் வேறுபட்டவராய் நிதானமாகக் கருத்துரைத்து இன்முறுவலுடன் பதிவட்டதற்று நன்றிகள்.
Deleteதிரு.பொ.கனகசபாபதி அவர்கள் ஒரு வாழும் Legend. அவரது பேட்டியை முழுவதுமாக பதிவு செய்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteபொறுப்பாகக் தங்களது எண்ணங்களைப் பதிவு செய்தமையானது 78வது அகவையிலும் துடிப்பான எழுத்துலக இளைஞனாகத் திகழும் பொ. கனகசபாபதி அவர்களை உற்சாகமுற வைக்கும். தங்களது அன்பான பதிவுக்கு நன்றிகள். வாழ்! வளமுடன்!!
Delete