சுவட்டுச்
சரம் -2
நம் அறிவுப் பயணத்தின்
திசை காட்டிகள் 2
ஹண்டி எஸ். பேரின்பநாயகம்
பகுதி -2
இலங்கைக்குப் பூரண சுதந்திரம் வேண்டும் என முதலில்
குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் அதிபர் ஹண்டி
-
கல்வியாளர்
பொ. கனகசபாபதி (நூல் : எம்மை வாழ வைத்தவர்கள்)
v புவிசார் வாழ்வில் சமைந்து போன மானிட இருப்பின் சொந்தக்காரர்தானே நாம்.
இந்த வாழ்வில் மீட்டுப்பார்க்கும் பல சுவையான சந்திப்புகள் தரும் ஆற்றுப்படுத்தலை வர்ணிக்க வார்த்தைகள்தான் ஏது!கனெக்ஸ் என பலராலும் உரிமையுடன் அழைக்கப்படும் மகாஜனாக் கல்லூரி முன்னாள் அதிபர் ச. பொ. கனசபாபதி அவர்களின் சமூகப் பிரக்ஞையும், தான் காணும் சமூகத்தின தேவையை அறிவுபூர்வமாக அலசிப் பக்குவமாக வழிகாட்டும் பாங்கும், தன்னிடம் கிடக்கும் விஞ்ஞான அறிவை கல்லூரிச் சுவர்களைத் தாண்டியவாறு சொல்லிக்கொடுக்க முனையும் பேரவாவாலும் என்னைப் பெரிதும் கவர்ந்தவர். இதனால்தானோ என்னவோ எத்தனையோ அதிபர்களைக் காணுற்ற சமூகத்தில் ஓய்வுபெற்ற் பின்னரும் 'அதிபர்' என உரிமையுடன் சுட்டப்படுகிறார். புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர் புலம்பெயர் புதிய சூழலில் நம்மவர்கள் தமது வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள தகுநல் ஆலோசகராகவும், ஆசானாகவும் இருக்கிறார். கல்லூரியை விட்டு வெளியே வந்தபின்னர் சமூகத்தின அறிவுத் தேடலுக்கான பதிவுகளாக இவரது ஆக்கங்களை நோக்கலாம்.
v இலங்கைத் தமிழர்களின் அறிவுத் தேடல் வரலாற்றில் முக்கியமான பங்கை
வகித்தவர்கள் ‘ஆசான்களாக’ மதிக்கப்படும் ஆசிரியர்களும் அவர்களை செல்நேர்த்தியாக நகர்த்திய
அதிபர்களும்தான். இவர்களின் வழிகாட்டுதலால்தான் பெரும்பாலான நிலம் மற்றும் கடல் தொழில்சார்
குடும்பப் பின்னணியிலிருந்து கல்வி அறிவுபெற்ற சமூகம் வெளிவந்திருக்கிறது. நம்முன்னோர்
இட்டுத்தந்த அந்த அறிவுத் தேடல் சாலையில்தான் இன்று நாம் பயணத்தைத் தொடர்கிறோம்.
இதனால் ‘எம்மை வாழ வைத்தவர்கள்’ என நினைவு மீட்கப்படும் பெரும் வாய்ப்பை வரலாறு தந்திருக்கிறது.
v தம்மை உருவாக்கியவர்கள் தொடர்பான நன்றி பாராட்டுதலை எங்களில் பலர்
தொடர்ந்த வண்ணமே காலம் கடந்து செல்கிறது. இன்று புவி எங்கணும் விரவியவர்களாகவுள்ள
ஈழத்தமிழர்களது வாழ்வு சில தடையங்களைப் பதிந்தவாறே பயணிக்கிறது. இதில் நன்றி பாராட்டும்
நிகழ்வுகளாகத் தொடரும் பழைய மாணவர் சங்கங்களின் தாம் கற்ற நிறுவனங்களுடனான ஆக்கபூர்வமான
உதவிகள் வழங்கும் செயலும் ஒன்றாகும். நாட்டை விட்டகன்று 30 ஆண்டுகள் கடந்தும் நீண்டு
செல்லும் புலம்பெயர்ந்த வாழ்விலும் தம்மோடு வளரும் அடுத்த தலைமுறையினருக்கு தமது
அடையாளமாக தாம் கற்ற ‘பாடசாலை’களை நினைவுறுத்திச் செல்லும் ‘பழைய மாணவர் ஒன்றியங்களின்’
மதிப்பார்ந்த செயல்களைக் காணலாம்.
|
காந்தீயவாதியாக ஹண்டி:
அமரர் பேராசிரியர் கல்கி
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திரு ஹண்டி பற்றிக் குறிப்பிடுகையில், « ஸ்ரீ ஹண்டியை ஒரு ‘மனிதர்’ என்று
சொல்வதினைக் காட்டிலும் ‘ஒரு ஸ்தாபனம்’ என்று சொல்வது பொருத்தமாகும். ஸ்ரீ ஹண்டி பேரின்பநாயகம்
கிறிஸ்தவரும் அல்ல, ஹிந்துவும் அல்ல அவருடைய மதம் காந்தீயமதம் » என்கிறார்
« ஸ்ரீ பேரின்பநாயகம்
தம் வாழ்க்கையில் இரண்டு பேரைக் காதலித்தார். அவர் காதலித்தவர்களில் ஒருவர் காந்திமகான்.
இன்னொருவர் அவரது மனைவியார். 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந் தேதி மாலை 6:00 மணிக்கு
ஸ்ரீ பேரின்பநாயகத்தின் அருமை மனைவி இறந்து போனார். இந்தப் பொறுக்க முடியாத துயரத்தில்
அவர் ஆழ்ந்து தவித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் வந்தார். ‘உங்களுக்கு இன்னொரு
பேரிடி போன்ற செய்தி கத்திருக்கிறது’ என்றார். ‘அது என்ன செய்தி’ என்று ஸ்ரீ பேரின்பநாயகம்
கேட்டார். அவருடைய மனைவி காலமான ஏறக்குறைய அதே நேரத்தில் காந்தி மகான் சுட்டுக் கொல்லப்பட்டார்
என்ற செய்தியை நண்பர் தெரிவித்தார். அன்று இரவே ஸ்ரீ பேரின்பநாயகத்தின் வயதில் பத்து
வயது கூடிவிட்டது என்று அவர் நண்பர்கள் தெரிவித்தார்கள் » என எழுதியுள்ளார்கள்
ஹண்டி அவர்களின் வாழ்க்கையில்
ஏற்பட்ட நற்காரியங்களுள் முதன்மை பெறுவது அவருக்கும் திருமதி அருந்தாதேவிக்கும் ஏற்பட்ட
மணவினை என அவர்களிருவரது வாழ்கையை கண்டவர்கள் கூறுவார்கள். திருமதி அருந்தா தேவி இந்தியாவில்
கல்வி கற்றவர், பரந்த மனப்பான்மை உடையவர். பிரமோ சமஜத்தினைச் சேர்ந்தவர். ஹண்டியின்
அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாகநின்றவர்
காந்திஜி இறந்த சில மாதங்களின்
பின்னர் ஹண்டி அவர்களும் இன்னும் காந்திஜியின் மீது அன்பு கொண்ட சிலருமாக ஒன்று கூடி
‘அகில இலங்கைக் காந்தீய சேவா சங்கம்’ என்ற அமைப்பினை உருவாக்கினர். அதன் தலைவராக ஹண்டி
அவர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். வேகமாக வளர்ந்த இச்சங்கத்தின் கிளைகள் கொழும்பு,
மட்டக்களப்பு, திரிகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் தோன்றின. வவுனியாவில் அனாதைப் பிள்ளைகளை
ஆதரிப்பதற்காக ‘காந்தி நிலையம்’ ஒன்றும் தொடக்கப்பட்டது. அங்கே சிறு தோட்டப் பயிர்ச்
செய்கை, பசு வளர்த்தல், தும்பு வேலை, மரவேலை, நெசவு வேலை போன்ற தொழிற்கல்வியும் வழங்கப்பட்டது.
1987 வரை எல்லாம் சீராக நடந்தன. பலர் நன்மை பெற்றனர். அதன் பின்னர்?
அதிபராக ஹண்டி: பாடசாலை
வளர்ச்சியில் பங்களிப்பு:
1947ஆம் ஆண்டுப் பொது தேர்தலில்
தோல்வி கண்ட ஹண்டி மாஸ்ரர் வழக்குரைஞராக அடுத்த இரண்டு ஆண்டுகள் கடமை ஆற்றினார். அவர்
குண இயல்புக்கு வழக்கறிஞர் தொழில் உகந்ததாய் அமையவில்லை. 1949 ஆம் ஆண்டு கொக்குவில்
இந்துக் கல்லூரியின் பெருமைக்குரிய அதிபர் ளூயமநளிநயசந ஏ. நாகலிங்கம் அவர்கள் பதவியிலிருந்து
ஓய்வு பெறுமுன் அமரராகிவிட அங்கு அதிபராகச் சேiவையாற்ற பாடசாலை நிர்வாகம் தகுதிவாய்ந்த
ஒருவரைத் தேடியது. நண்பர்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து ஹண்டி மாஸ்ரர் அப்பதவிக்கு
விண்ணப்பித்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது. சிக்கெனப் பிடித்துக் கொண்டது பாடசாலை
நிர்வாகம். ஹண்டி மாஸ்ரர் அப்பாடசாலையின் அதிபர் பதவியை ஏற்றார். அப்போது ஹண்டி அவர்களுக்கு
வயது 50.
இவர் கிறிஸ்தவராக உள்ளாரே,
ஒரு இந்துப் பாடசாலையினை எப்படி நிர்வகிக்கப் போகிறார் என ஒரு சில சந்தேகக் கண்கள் அவரைப் பார்த்த பொழுது, பாடசாலையில் பதவி ஏற்ற அன்றைய
தினம் ஹண்டி அவர்கள் பாடசாலைக்கு அருகே உள்ள ஆலயத்திற்குச் சென்று திருநீறு, பொட்டுடன்
பாடசாலையுள் புகுந்தது பலரது ஆச்சரியமிக்க நிம்மதிக்குக் காரணமாயிற்று. பாடசாலையின்
தரமும் உயர்த்தப்பட்டு முதலாம் தரக் கல்லூரியாக
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது.
சட்டசபையினிலே கல்வி அமைச்சராயிருந்த
அமரர் C.W.W. கன்னங்கரா என்ற பெருமகனார் 1944ஆம் ஆண்டினிலே கொண்டு வந்த இலவசக் கல்வித்
திட்டம் சைவப் பாடசாலைகள் பலவற்றிலே மாணவர் தொகையினை திடுமென பன்மடங்கு அதிகரிக்கச்
செய்தது. அது நாள் வரை கட்டணம் செலுத்த முடியாமையால் தாய்மொழிப் பாடசாலையே கதியென இருந்த
கீழ் மட்டபெற்றோர்கள் பலரின் குழந்தைகள் ஆங்கிலப் பாடசாலைகளை நோக்கி அடி எடுத்து வைக்கத்
தொடங்கினர். கொக்குவில் இந்துக் கல்லூரியும் இதற்கு விலக்கல்ல. அதிகரித்த மாணவர் தொகையினுக்கான
வகுப்பறைகள், தளபாடங்கள், ஆய்கூடவசதிகள் என அத்தனையுமே செய்ய வேண்டியிருந்தது. தற்காலிகக்
கொட்டில்கள் தான் உடனடியாக செய்யமுடிந்தவை. இதற்கான ஆக்க வேலைகளில் ஆரம்பப்பணியினை
ஆற்றிய அதிபர் நாகலிங்கம் அகால மரணமடைந்தது ஒரு பின்னிடைவினை ஏற்படுத்தியிருந்தது.
ஆகவே ஹண்டி மாஸ்ரர் அதிபர்
பதவி ஏற்றதும் எதிர் கொண்ட முதற்பிரச்சினை? பாடசாலையில் பெருகிவரும் மாணவர் சுமூகத்திற்கு
வேண்டிய வசதிகளை அமைத்துக் கொடுத்தலே. சிந்தித்த அதிபருக்கு மூன்று பிரதான வழிகள் தோன்றின.
1.
பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளிடம் உதவி கோரல்.
2.
களியாட்ட விழா ஒன்றினை நடத்;துதல்.
3.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அங்குள்ளோரிடம்
உதவி கேட்டுப் பெறுதல்.
கடமை உணர்வு மிக்க பாடசாலை
ஆசிரியர்கள், அபிமானமிக்க பெற்றோர்கள், விசுவாமான பழையமாணவர்கள் என அத்தனை பேருடைய
அபரிமிதமான ஒத்துழைப்புடன் அதிபர் ஹண்டி மூன்று செயல்திட்டங்களையும் ஒருங்கே செயற்படுத்தினார்.
1950ல் நடத்தப் பட்ட ‘Linga Lights Carnival’ அமோகமான வெற்றி. தென் இந்தியாவின் N.S
கிருஷ்ணன், T.A மதுரம், ரஞ்சன், அழகி T. சூரியகுமாரி போன்ற தலை சிறந்த நடிகர்கள் M.S.
சுப்புலஷ்மி போன்ற இசைக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். ஹண்டி அவர்களுக்கு தென்னிந்தியப்
பிரபலங்களாகிய சக்கரவர்த்தி இராஜகோபாலச்சாரியார் பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
போன்றோர்களுடன் இருந்த தொடர்பு தென் இந்தியக் கலைஞர்களை யாழ்ப்பாணத்திக்குக் கொண்டுவருவதைச்
சுலபமாக்கிற்று. களியாட்ட விழாக்களும் கலைவிழாக்களும் நடந்தன. கூட்டம் நிரம்பி வழிந்தது.
மக்கள் தாராளமாக வாரி வழங்கினர். அதன் விளைவாக சேகரிக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி மறைந்த
அதிபர் நாகலிங்கம் அவர்கள் வாங்கிய நிலத்துக்கான கல்லூரி முகாமைத்துவ சபைக்குக் (Board
of management) கொடுக்க வேண்டிய கடனில் ஒரு பகுதியை கொடுக்க உதவிற்று. தளபாட பகுதிகள்
செய்தது போக எஞ்சியது ஒரு மூன்று மாடிக்கட்டிடம் எழுவதற்குக் காரணமாயிற்று. இன்றும்
அது ஹண்டியின் புகழினை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது. கொக்குவில் சமூகம் கொடுத்த
ஆதரவு அதிபர் ஹண்டியைப் புழங்காகிதம் அடையச் செய்தது. பாடசாலையைச் சேவிக்கின்ற சமூகத்திற்கும்
பாடசாலைக்கும் இடையே ஒரு அந்நியோன்யமானதும் முழுமையானதுமான பற்று இருக்க வேண்டும்.
அதற்காக உழைக்க வேண்டும் என தன்மனதில் தீர்மானம் எடுத்ததாகவும் அதன் காரணமாகவே தான்
கொக்குவிலில் வசிப்பதற்கு முன்வந்ததாகவும் ஹண்டி
அவர்கள் கூறியுள்ளார்.
« ஆசிரியர்
மத்தியில் அவருக்கு மதிப்பு நிரம்ப உண்டு. சகோதரத்துவத்தடன் பழகுவார். தோற்றத்தில்
எளிமை உடையவர் போலப், பேச்சிலும் அப்படியே. தனக்குத் தெரிய வேண்டியவற்றைத் தெரிந்தவர்கள்
அறிந்தவர்களிடம் கேட்டறியும் பண்புள்ளவர். அவரது நற்குணங்கள், நற்பண்புகள் இவையெல்லாம்
அனைவரையும் அவர் பால் ஈர்த்தன. கல்லூரிச் சமூகத்தின் தொடர்பு பங்களிப்பு என்பன கல்லூரியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்பதை நன்கு அறிந்த
திரு.ஹண்டி, சமூகத்தில் தானும் ஒருவராக இணைந்து செயற்பட்டதன் நற்பயனைக் கல்லூரி பெற்றுக்
கொண்டது. தன் பிள்ளைகளையும் கொண்டு வந்து கொக்குவிலில் குடியேறி தானும் ஒரு கொக்குவில்
வாசியானார். கொக்குவில் மக்களின் வீட்டில் நடைபெறும் வைபவங்களில் கலந்து கொண்டு சமூகத்
தொடர்பை வலுப்படுத்தினார் » என
ஹண்டி மாஸ்ரரது குணநலன்களை விதந்து அவர் கீழ் ஆசிரியராகக் கடமையாற்றிய திருமதி. S.
சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியினுக்கு
உயர்தரமாணவர் வகுப்புகள் நடத்துதற்குரிய அங்கீகாரம் 1949ல் கிடைத்தது. ஆகவே சிரேஸ்டமாணவர்
தராதரப் பத்திரப் (S.S.C -பின்னர் அது பொதுத்
தராதரம் என மாற்றப்பட்டது- G.C.E) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் கற்பதற்கு வேறு
பாடசாலைகளை நாடிப் போகத் தேவையில்லை, அங்கேயே தங்கிப் படிக்கலாம் என ஆசிரியர்கள் மணவர்களுக்குக
கூறி உயர்தர மாணவர் வகுப்புகளை ஸ்திரமாக்கினர். ஹண்டி அவர்களது அருங்குணம் பற்றி அவர்
மேல் அதீத அன்பும் மதிப்பம் வைத்திருந்தவரான
பிரபல எழுத்தாளர் சிவநாயகம் அவர்கள் ஒரு சம்பவத்தினைக் கூறுகிறார். “1949 ஆம்
ஆண்டின் முற்பகுதியில் ஒரு நாள் ஹண்டி மாஸ்ரர் காலை வேளையில் என்னை அழைத்தார். ஆழ்ந்த
யோசனையுடன் ‘ சிவநாயகம், நீ பல்கலைக்கழகம் புக விரும்புகிறாய் தானே?’ என்றார். ‘ஆம்
சேர்’ என்றேன். ஒரு அதிபராக நான் இதனைச் சொல்லப்படாது ஆனால் எமது பாடசாலையில் உயர்தரமாணவர்
கல்வி கற்பதற்கான முழு வசதிகளும் இன்னும் செய்து முடிக்கப் படவில்லை.. எனக்கு வருத்தமாகத்
தான் உள்ளது, ஆனாலும் ஒரு பல்கலைக்கழகம் புக வேண்டும் என்ற உனது அபிலாசையையோ வாழ்க்கை
முன்னேற்றத்தையோ தடைப்படுத்த நான் விரும்பவில்லை.
நீ யாழப்பாணக் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்க விரும்புகிறாயா என்றார். அடுத்த இரு
வாரங்களில் நான் யாழப்பாணக் கல்லூரி மாணவனாகி விட்டேன், என எழுதியுள்ளார். பொதுவாகவே
புதிதாக உயர்தர வகுப்பினை ஆரம்பிக்கின்ற போது அதிபர்கள் தமது சிறந்த மாணவர்களை அங்கேயே
வைத்திருக்கவே விரும்புவார்கள். அவர்கள் மூலமாகத்தான் கல்லூரிக்குப் பெருமை சேரும்
வாய்ப்பு உள்ளது என எண்ணிச் செயற்படுவார்கள். இங்கே ஹண்டி மாஸ்ரர் அதற்கு நேர்மாறாகச்
செயற்பட்டுள்ளார். திரு சிவநாயகம் அவர்கள் Ralph Waldo Emerson அவர்கள் கூறிய : « The secret of education lies in respecting
the pupil » என்ற வாக்கியத்தினைகட
கூறி அவர் பெருமையைப் போற்றுகிறார்.
ஹண்டி அவர்கள் பாடசாலையினை
நிர்வகித்த பாங்கே வித்தியாசமானது. அன்றைய காலகட்டத்தில் புரட்சிகரமானது என்று கூடச்
சொல்லலாம். « அவர், மாணவர்
அடங்கி, ஒடுங்கி வாழ்வதால் அவர்களின் உள்ள வளர்ச்சி தடைப்படுகிறதென்பதை உணர்ந்து, அவர்களுக்கு
கல்லூரி வாழ்க்கையில் சுதந்திரமளித்தார். இந்த மாற்றத்தைத் தவறாக உபயோகித்த மாணவர்களும்
இருந்தார்கள். எனினும், பொதுவாக பல மாணவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு இந்த முறை உதவியிருப்பதை
அவருடைய காலத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்ற மாணவர்கள் நன்றியறிதலோடு நினைவு
கூருவாரென்பதற்கு ஐயமில்லை » என
அவரின் கீழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் உப-அதிபராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றிய
திரு. C.K. கந்தசாமி அவர்கள் ‘Homage to
Guiru’ எனும் நினைவு மலரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மாணவர்களுடைய வளர்ச்சி
வெறும் கல்வியோடு நின்று விடுவதில்லை. அவர்கள் யாவரும் மக்களாட்சி ஒன்றிலே எப்படி வாழ
வேண்டும் என்பதை உணர்ந்து தமது ஆளுமையினை விருத்தி செய்ய வேண்டும் என்பதில் அதீத நம்பிக்கை
கொண்டிருந்த ஹண்டி அவர்கள் நாட்டில் தலைசிறந்த அரசியல்வாதிகளை எல்லாம் அழைத்து மாணவர்களுக்கு
உரை நிகழ்த்த வைத்தார். பழைய மாணவர் சங்கத்தினை மிக்க வலுவான ஒரு அமைப்பாக மாற்றி வருடாவருடம்
இராப்போசன விருந்து வைத்து அறிஞர் பெருமக்களை அழைத்து அங்கே உரையாற்ற வைத்தார்.
அன்று இட்ட தீ இன்னும்
எரிகிறது:
1953 சுதந்திர இலங்கையின்
பிரதமராயிருந்தவர் சேர் ஜோன் கொத்தலாவலை. அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். நெடுந்தீவிலே
அவருக்கு « Emperor of Delft » என்ற கிரீடமும் சூட்டப்பட்டது.
அவருக்கோ ஆனையில் ஏறிய புழுகம் யாழப்பாண மக்களின் அபரிமிதமான அன்பு அவரது உள்ளத்தை
பூரிக்கச் செய்தது.
அரசாங்க அதிபராக அன்று
கடைமையாற்றிவர் திரு. ஸ்ரீகாந்தா அவர்கள். குறிப்பிட்ட
தினம் ஒன்றில் சேர். ஜோன் கொத்தலாவலை
காங்கேசந்துறை வீதியால் செல்வதாக இருந்தது. ஆகவே ஸ்ரீகாந்தா அவர்கள் கொக்குவில் இந்துக்
கல்லூரி அதிபர் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் படிக்கு பிரதமர் காங்கேசந்துறை
வீதி வழியாகச் செல்கையில் கொக்குவில் இந்துக் கல்லூரியினைத் தாண்டியே செல்வார் எனவும்
அந்த வேளை பாடசாலை மாணவர்களை வீதியின் இரு மருங்கிலும் நின்று பிரதமருக்கு வணக்கம்
செலுத்துமாறும் கேட்டிருந்தார். அதிபர் ஹண்டி அவர்கள் உடனடியாகவே « எனது மாணவர்கள் தொருவோரத்தில் வெய்யிலில்
நின்று பிரதமரை வரவேற்பதில் எமக்குச் சம்மதமில்லை. அதனை அனுமதிக்கவும்; மாட்டேன் » எனப் பதில் அளித்தார்.
பின்னர் உப- அதிபர் கந்தசாமி மற்றும் சிரேஷ்ட
ஆசிரியர்களுடன் பேசிய அதிபர் ஒரு சிறு கருத்தினை அரசாங்க அதிபருக்குத் தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் பிரதமர் தனது பிரயாணத்தின்
போது நேரம் எடுத்து கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு வருவாராயின் பாடசாலை சார்பினில்
ஒரு வரவேற்பினைப் பிரதமருக்குக் கொடுக்கலாம் என ஹண்டி அவர்கள் தெரிவித்திருந்தார்.
ஹண்டி அவர்களது அபிப்பிராயத்தில் ஒரு சிறு
மாற்றத்தினைச் செய்து அதனை அரசாங்க அதிபர்
அங்கீகரித்தார். ஹண்டி அவர்கள் பிரேரித்த
அந்த வரவேற்பு பாடசாலை வரவேற்பு என்றில்லாமல் பொதுமக்கள் வரவேற்பு என மாற்றப்பட்டது.
அக்காலகட்டத்திலே தமிழ்
மக்களது ஏகோபித்த அங்கீகாரம் பெற்ற கட்சியாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மெல்ல மெல்ல
மாறிவருகின்ற காலமாக இருந்தது. அரசாங்கத்தின் தமிழர் நலனுக்கு எதிரான போக்கு மக்கள்
மனதில் அரசாங்கத்தின் மீது வெறுப்பினையும்
அதன் காரணமாக பிரதமருக்கு மக்கள் சார்பினில் வரவேற்பு கொடுப்பதையும் விரும்பாத கோஷ்டியினர்
வரவேற்பு நடைபெறுவதற்கு முன் தினம் இரவு கொக்குவில் இந்துக் கல்லூரியின் உள்ளே சென்று
அங்கே ஓலைக் கொட்டில்களாயிருந்த வகுப்பறைகளை தீக்கிரையாக்கி விட்டனர். காலையில் பாடசாலை
வந்த ஹண்டி அவர்கள் அதனைக் கண்ணுற்றார். இன்னும் ஆங்காங்கே தணியாமல் இருந்த கனல் ஹண்டியின்
கண்களுக்குத் தெரிந்தது. நடந்ததைக் கண்டு கவலை கொண்ட போதும் நிலைகுலையவில்லை. அந்தக்
கனல் ஒன்றினில் தனது சுருட்டினைப் பற்ற வைத்தார் என அவருடன் சென்றவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் வந்தார். வரவேற்பு நடந்தது.
கொட்டில்களைத் தீக்கரையாக்கியவர்கள்
ஒரு விதத்தில் நன்மையே செய்தனர். ‘இனிமேல் கொக்குவில் இந்துக்கல்லூரியில்
ஓலைக் கொட்டில் வகுப்புகள் இருக்கமாட்டாது’ எனச் சபதம் பூண்டார் ஹண்டி. அது
நிறைவேற்றுதற்குப் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் இன்றுவரை உதவி வருகின்றனர்.
இலங்கையின் தேசிய மொழிகளாக
தமிழ், சிங்களம் ஆகியன தொடர்ந்து இருக்கும் எனச் சட்டசபை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தீர்மானித்திருந்தது உண்மையே. சுதந்திரம் பெற்ற
இலங்கையின் பாராளுமன்றமும் சட்டசபையின் தீர்மானத்தையே கடைப்பிடித்து வந்தது. ஆனால்
சிங்களத்தினை மட்டுமே அரசகரும மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கருந்து சில தென்னிலங்கை
அரசியல்வாதிகளிடமிருந்து அரசல் புரசலாக வந்து கொண்Nயிருந்தது. எனவே, ஹண்டி அவர்கள்
அன்றைய கூட்டத்தில் பிரதமரிடம் தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படவேண்டும்
என்ற கருத்தினை வலியுறுத்தி அவரிடமிருந்து சாதகமான அறிவிப்பினைப் பெறவேண்டும் என எண்ணினார்.
ஆகவே ஹண்டி அவர்கள் அக்கருத்தினை சேர் ஜோன் கொத்தலாவலை அவர்களுக்கு அளித்த வரவேற்புரையின்
போது மேடையில் எடுத்துக் கூறினார்கள். பிரதமரும் இரு மொழிகளுமே தொடர்ந்து ஆட்சி மொழிகளாக இருக்கும் என உத்தரவாதமளித்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது,
அது தென் இலங்கை வரை ஒலித்தது. தென்னிலங்கை ஆவேசம் கொண்டது. கட்சிக்குள் பிரதமரின்
காலை வாரிவிடக் காத்திருந்தவர்கள் துள்ளி எழுந்தனர். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என
ஆவல் கொண்டிருந்த எதிரணியினர் எக்காளமிட்டனர். சேர் ஜோனின் சரிவு ஆரம்பமாயது. ஹண்டி
என்ற சொல்லைக் கேட்டாலே குலை நடுங்கும் அளவிற்குக்
கொத்தலாவலை வந்தார் என்பதைப் பின்னொரு சந்தர்ப்பத்தில் அவரிடம் செவ்வி காணச் சென்ற
கல்லூரிப் பழைய மாணவர்கள் குறிப்பில் இருந்து அறிய முடிகிறது. 1960 லிலே ஹண்டி மாஸ்ரர்
அவர்கள் ஒய்வு பெற்றபோது கொழும்புப் பழையமாணவர் சங்கம் ஒலிநாடா ஒன்றினில் பிரமுகர்களின்
வாழ்த்துக்களை பதிவு செய்து கொடுக்க விரும்பினார்கள். தேர்தலில் ஆட்சியை இழந்து அரசியலில் ஓரங்கட்டப்பட்டு கண்டாவளையிலே அஞ்ஞாதவாசம்
செய்த கொத்தலாவலையிடம் விசயத்தைச் சொல்லாமலே நேர்காணல் ஒன்றினுக்குச் சம்மதம் கேட்டுச்
சென்ற பழையமாணவர் நேர்காணலை குற்றுயிரும் குலையுயிருமாக ஒரிரு நிமிடங்களிலேயே முடித்துக்
கொண்டு வரவேண்டியதாயிற்று. ஹண்டி அவர்களின் பெயரைச் சொன்னவுடனேயே முன்னை நாள் பிரதமர்
இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று கூப்பியபடி « Leave me out of this, please » என்றாராம். மேற்கொண்டு
பேச்சுக்கு இடமிருக்கவில்லை. செவ்வி முடிவுற்றது.
‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானம்
ஆண்டி’ என்ற பழமொழிக்கொப்ப சிங்கள வகுப்புவாத சக்திகளின் தீவிரவாதத்தை ஹண்டியின் கொக்குவில்
இந்துக்கல்லூரி உரை உசுப்பி விட்டது என ஹண்டி மேல் குற்றம் சாட்டுபவர்களும் உள்ளனர்.
ஹண்டி என்றுமே இருமொழிக்கொள்கையே நாட்டின்
நலனுக்கு உகந்தது என்ற மனப்பாங்குடன் வாழ்ந்தவர். ஆகவே அவர் மனத் தூய்மையுடன் சேர்
ஜோன் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் இப்படியான ஒரு அநாகரிகமான தனிச் சிங்களச் சட்டம்
வருவதற்குக் காரணமாகுமென யார் கண்டார்கள்.
எழுத்துலகிலும் தொழிற்
சங்க முயற்சிகளிலும் ஹண்டி:
ஹண்டி மாஸ்ரரது ஏழுத்தாற்றல்
பற்றி « Saturday Review » ஆசிரியராக இருந்தவரும்
மிக்க பிரபலமான எழுத்தாளருமாகிய சிவநாயகம் அவர்கள், « ஹண்டி மாஸ்ரரது
எழுத்து சலித்துப் போன சொற்பிரயோகங்களும் புளித்துப்போன மரபு மொழிகளும் தவிர்க்கப்பட்டுத்
துலக்கமான நடையிலேயே பரிணமிக்கும் » என்கிறார். 1940களிலே ஈழகேசரி
பொன்னையா அவர்களின் அனுசரணையுடன் ‘கேசரி’ (KESARI) எனும் ஆங்கில வார ஏட்டினை ஹண்டி
அவர்கள் ஆசிரியராக நடத்தி வந்தார் நீண்டகாலம் அதனை நடத்த முடியாத பொருளாதார நிர்பந்தம்
காரணமாக கேசரி நின்று விட்டது ஆனாலும் ஹண்டி அவரகள் « NORTHERN CO-OPERATOR » எனும் ஆங்கில சஞ்சிகையினுக்கு
தொடர்ந்து எழுதி வந்தார்
திரு மணி வேலுப்பிள்ளை
அவர்கள் ரொறன்ரோவில் நீதி மன்றதின் பிரபலமான மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றுகிறார்.
தாயகத்தில் கைத்தொழில் மற்றும் விஞ்ஞர்ன விருத்தி அமைச்சில் உயர்தர பதவியில் இருந்தவர்.
ஹண்டியிடம் கல்வி கற்காவிடினும் அவரது தமிழ்ப் புலமையையும் அறிவாற்றலையும் மிகவும்
போற்றுபவர். ஹண்டியின் எழுத்துத் திறமை பற்றி அவர் கூறுகிறார்.
« க.பொ.த.
(உயர்தர) வகுப்பினர்க்கென அமரர் ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் எழுதிய ‘ஆட்சி இயல் என்னும்
பாடநூல் வாயிலாகவே அவரை முதன் முதல் நான் அறிந்து கொண்டேன். அன்னார் கருத்தூன்றி எழுதிய
அந்நூலின் மொழியும், பொருளும் என்னை மிகவும் ஆட்கொண்டன. அதுவரை எனக்கு வேம்பாய்க் கசந்த
அரசியல் பாடத்தை, அந்த நூல் கரும்பாய் இனிக்கும்படி, எளிதாய் விளங்கும்படி, வழங்கு
தமிழில், நகைச்சுவையுடன் அள்ளித் தந்தது. » (1966)
எனது தமிழ், ஆங்கில, சமய
பாட ஆசிரியராகவும், ஆட்சிமொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், கண்காணிப்பாளராகவும்,
உதவி ஆணையாளராகவும் விளங்கிய திரு.சிவராசசிங்கம் அவர்கள் மூலமாக எனக்குக் கிடைத்த ஒரு
மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பில் பேரின்பநாயகம் அவர்களின் கட்டுரையும் இடம் பெற்றிருந்தது.
தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை அதில் நன்கு சுவைபடத் தெரிவித்திருந்தார் (நினைவில் உள்ளதை
எனது சொந்த மொழியில் எழுதுகிறேன்): ஆட்சிமொழித் திணைக்களத்து சொல்லாக்க அமர்வு ஒன்றில்
கலந்துகொள்ள நான் கொழும்பு சென்றிருந்தேன். Document
என்ற சொல்லுக்கு பத்திரம், தஸ்தாவேஜூ என்பவற்றை விட மிகவும் பொருத்தமான சொல்லைக் கண்டறியும்
முயற்சி நிறைவேறாத நிலையில் அன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. அன்றிரவு யாழ்தேவிப்
பயணத்துக்கு உதவட்டும் என்று ஒரு “கல்கி”யை வாங்கி வைத்திருந்தேன். பயணம் செய்தபடியே
அதிலிருந்த ஒரு கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ‘ஆவணம்’ என்ற சொல் எடுத்தாளப்பட்டிருந்தது கண்டு உள்ளம்
பூரித்தேன். அப்புறம் ‘ஆவணம்’ எங்கள் சொற்கோவையில்
சேர்க்கப்பட்டு, அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தப்படலாயிற்று (பருமட்டாக 1970).
அதே கட்டுரையில் பேரின்பநாயகம்
அவர்கள் குறிப்பிட்ட பிறிதொரு வேடிக்கையான சங்கதி (மீண்டும் நினைவில் உள்ளதை எனது சொந்த
மொழியில் எழுதுகிறேன்): ‘ஒருதடவை நான் மல்லாகம் நீதிமன்றில் ஒரு வழக்கு விடயமாகச் சென்றிருந்தேன்.
அங்கு ஏற்கெனவே ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. « How did
you get round her ? » என்று
நீதவான் கேட்டார். அதனை முதலியார் « நீ எப்படி
அவளைச் சுற்றி வந்தாய்? » என்று
மொழிபெயர்த்தார். இது தவறான தமிழாக்கம். இதன் சரியான தமிழாக்கம்: « நீ எப்படி அவளை வளைத்தாய்? » என்பதே. அதே கட்டுரையின்
இறுதியில் பேரின்பநாயகம் அவர்கள் எம்போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு இடித்துரைத்த விடயம்:
« எங்கள் அறியாமையை
நாங்கள் தமிழின் வறுமை ஆக்கக் கூடாது! » என்பதே.’
ஹண்டி அவர்கள் அதிபராக
இருந்த காலத்திலே ஒரு தொழிற்சங்கவாதியாகவும் பிரபலமாயிருந்தார். மீண்டும் அது பற்றி
ஓறேற்ரர் அவர்கள் கூறுவதிலிருந்து ஒரு பகுதி. « வடமாநில ஆசிரியர் சங்கம் (N.P.T.A), அகில
இலங்கை ஆசிரியர்கள் சம்மேளனம் (A.C.T.U), அதிபர்கள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஆகியவற்றில் அங்கம் வகித்தமையால் ஹண்டி
அவர்கள் எமது நாட்டின் கல்விக் கொள்கையினை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
தாய்மொழி மூலமாகவே கல்வி புகட்டப்படுதல் வேண்டும் என்பதில் ஹண்டி அவர்கள் தீவிரம் காட்டினார்.
தென்பகுதி கல்வியாளர்களுக்கு இது ஏற்புடையதாக இருக்கவில்லை. அதன் காரணமாகவே ஹண்டி அவர்கள் A.C.T.U-யின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத்
தோல்வி காண வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஹண்டி தோல்வி கண்டு துவளவில்லை. தொடர்ந்து
போராடினார். இறுதியில் தாய் மொழிமூலம் கல்வி என்பதை A.C.T.U ஏற்கவே செய்தது.
சமூக சீர்திருத்தவாதியாக
ஹண்டி: பிறப்பால் கிறிஸ்தவர் உள்ளதால் சன்மார்க்கர் :
இலங்கை அரசாங்கம் இந்து
சமயத்துக்கும் புத்த சாசனம் போல, ஒரு சாசனம் உண்டாக்கும் நோக்குடன், பல இடங்களிலும்
இந்துக்களிடையே கருத்துக்கள் சேகரித்தது. உதவிக் கல்வி மந்திரியாக இருந்த திரு. K.
கனகரத்தினம் அவர்கள் கமிஷன் தலைவராகவும், சைவப்பெரியார் S. சிவபாதசுந்தரம், இழைப்பாறிய
C.C.S.M வைரமுத்து ஆகியோரை உறுப்பினராகவும்
கொண்ட கமிஷன் முதற் கூட்டத்தினை யாழப்பாணத்தில் கூட்டியது. காந்தீய சேவா சங்கத்தின்
சார்பில் S.H பேரின்பநாயகம் தலைமையில் ஒரு குழு கமிஷனைச் சந்திக்கச் சென்றிருந்தது.
« Handy என்ற
பெயர் கிறித்தவப் பெயராகையால் அவர் தலைமையிலான இந்தக் குழுவின் சாட்சியம் பதியப்படமாட்டாது » எனத் தலைவர் கூறினார்.
உடனே S.H. பேரின்பநாயகம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார், ‘I am a Hindu by conviction
and I have a right to give evidence’ என்ற வகையில் அவருடைய கடிதத்தின் கடைசி வசனம்
அமைந்தது எனக்கு ஞாபகம். குழுவின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குழுவின் அறிக்கை
வெளியிடப்பட்டதை விட வேறு ஒன்றும் நடக்கவில்லை என திரு இ.கந்தையா அவர்கள் ‘ A
sheaf of Tributes to S. Handy Perinpanayagam’
எனும் நினைவு மலரில் எழுதியுள்ளார்கள்.
யாழ்ப்பாணக் கல்லூரியினுக்கு
ஒரு மாணவராக, ஆசியராக ஹண்டி அவர்களுக்கு ஏறக்குறைய
30 ஆண்டுகள் தொடர்பு இருந்தது. அவர் தனது தொடர்பினை 1943ல் துண்டித்துக் கொண்டார்.
அதன் பின்னர் படிப்படியாக அவர் நோக்கு அவரது மூதாதையரது சமயநம்பிக்கை பக்கமாகச் செல்ல
ஆரம்பித்து கொக்குவில் இந்துக்கல்லூரியில் அதிபர் பதவி ஏற்றதும் முடிவிற்கு வந்தது
எனலாம். கிறிஸ்தவ மதத்தை ஓர் அந்நிய மதமாகவே தான் கருதினார் என்பதை ‘ஈழகேகசரி’ பத்திரிகையில்
அவர் விளக்கியுள்ளார் என திரு ச. அம்பிகைபாகன் அவர்கள் கட்டுரை ஒன்றினில் எழுதியுள்ளார்கள்.
« சமயத்திற்கும் கல்விக்குமுள்ள
ஈடுபாட்டினை சைவரும், அறியாதிருக்கவில்லை. நாவலர் செய்த இடிமுழக்கங்கள் இந்த அடிப்படையிலேதான்
உருவாகின. பல்லாண்டுகட்கு முன் சுன்னாகச் சந்தையிலே துரையப்பாபிள்ளை அவர்கள் நிகழ்த்திய
பேச்சொன்று நினைவிலிருக்கிறது. சைவப் பள்ளிகளைக் கட்டி அவற்றின் மூலம் பிற சமயிகளின்
சூழ்ச்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர் அன்று கூறியது. ஆறுமுக நாவலர், சி.வை.
தாமோதரம்பிள்ளை, மு.கி. இராசரத்தினம், சு. சிவபாதசுந்தரம், சு. இராசரத்தினம், தெ. ஆ.
துரையப்பாபிள்ளை ஆகியோர் சைவப் பள்ளிகளை ஆக்க முயன்றதும் அவற்றை நிறுவியதும் இதை உணர்ந்தே.
இவர்கள் யாவரும் கிறித்துவ பாடசாலையில் கற்றுத் தேறியவர்களாயிருந்தும் ஆர்வங் கொண்டு
சைவப் பள்ளிகளை உருவாக்கியதும் காரணம் பற்றிப் பிறந்த காரியமோ, தற்செயலோ, யாரறிவார்?
அன்னிய மதப் பிரசாரத்தாலே தமிழர் தமது பரம்பரைச் சமயத்தைக் கைவிட்டதுடன் தம்முடைய தன்மானத்தையும்
விலைக்கு விற்று விட்டனர் என்ற உணர்ச்சி இவர்கள் உள்ளத்தை உறுத்தியது போலும். »
« துரையப்பா
பிள்ளை அவர்கள் போன்றவர்கள் இதை உணர்ந்து ஆத்திரப்பட்டனர். ஆனால் பாதிரிமார் தமக்குச்
செய்த நன்றியை மறக்கவில்லை. நானும் கிறித்துவ பள்ளியிற் படித்தேன். படிப்பித்தேன்.
கிறித்த கோயில்களில் சமயப் பிரசங்கம் செய்தேன். கிறிஸ்தவர்கள் செய்த, செய்கின்ற சூழ்ச்சிகளையும்
அறிவேன். ஆனால் யாழப்பாணக் கல்லூரியோ பிக்னெல் பாதிரியாரோ எனக்குச் செய்த நன்றியை நான்
மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. » என்று ஹண்டி எஸ். பேரின்பநாயகம்
அவர்கள் பாவலர் துரையப்பா பிள்ளை நூற்றாண்டு மலரில் “மானங்காத்தல்” எனும் தலைப்பினிலே எழுதிய கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளார்கள்.
அவர்
தன்னை ஒரு இந்துவாக மாற்றியமைக்கான காரணத்தினை அவரே சொல்கிறார் “People cannot for
long stand apart from their neighbours, nor can they divest themselves totally
old raditional beliefs, folkways, and practices and presuppositions that formed
an integral element in their way of life”.
« கிறிஸ்தவராக
இருந்தவர் இந்துவாக மாறிய காரணத்தால் அதற்கான தண்டனையாக ஹண்டி மாஸ்ரர் நரகத்துக்கு
போவார் » என ஒரு சமயம் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் கூறினார். அதற்கு நான் ‘அப்படி ஹண்டி மாஸ்ரர் அங்கு போவாரானால் அங்கே உள்ள சூழல் நிலையினை மாற்றி எல்லோரும் சொர்க்கத்திலிருந்து அங்கே உல்லாசப் பயணம் செய்வதற்குகந்ததாக ஆக்கிவிடுவார்’ எனக் கூறினேன் என ஓறேறர் அவர்கள் கட்டுரை ஒன்றினில் எழுதியள்ளார்கள்.
மொத்தத்தில்,
“His religion was one of
love, service and forgiveness” - Orator Subramaniam
0000 0000
தொடரின் முதற் பகுதிக்கு நுழைக :
0000 0000
தொடரின் முதற் பகுதிக்கு நுழைக :
தகவல்:
1.
Memories are for ever- Karthigesoo Jeganathan
2.
A sheaf of tributes to S.Handy.
Perinpanayagam
3.
Homage to a Guru
4. Kokuvil Hindu College. Diamond Jubilee- Colombo old Students’ Association.
5. பாவலர் துரையப்பா பிள்ளை நூற்றாண்டு மலர்.
4. Kokuvil Hindu College. Diamond Jubilee- Colombo old Students’ Association.
5. பாவலர் துரையப்பா பிள்ளை நூற்றாண்டு மலர்.
தொடர்பான பிறிதொரு ஆக்கம் காண நுழைக : சுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1
பகுதி -2 சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்
சுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1
யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்
5. படங்கள் நன்றி : பொ. கனகசபாபதி மற்றும் கூகிள் இணைய
வழங்கி
6. அன்றைய யாழ் இளைஞன் ஒருவனின் நினைவுகள். ஒரு காலகட்டத்தை நினைவு
மீட்கும்போது அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களது வேறு சில பதிவுகளை இங்கு பொருத்திப்
பார்க்கத் தோன்றியதால் இதனை மேலதிக இணைப்பாக்கிவிடுகிறேன்.
இரண்டாம் உலக யுத்தம் உக்ரமாக நடைபெற்ற நாட்கள் அன்று! அவன் வயது பன்னிரண்டு - கிராம பாடசாலைச் சிறுவன், என்றாலும் ஆங்கில அரசின் கீழ் நாடு இருந்ததால், இலங்கை தீவிலும் யுத்தமேகம், கவிழ்ந்த காரணத்தால் தற்காப்பு ஏற்பாடுகள் குக்கிராமங்கள், வீடுகள் தோறும் செய்யப்படுவது கட்டாயம்! வீடுகளில், பாடசாலைகள் தோறும், அண்மைக்கால அனுபவங்களை போல பதுங்கு குழிகள், அன்றும் வெட்டப்பட்டு, விமான இரைச்சல் கேட்டதும், பதுங்கு குழிக்குள்ளும், வீதி, பாதை, வயல், தோட்டம், பாடசாலைகளிலும், முட்டுக்கால் இட்டு, இரண்டு கைகளினாலும் காதுகளை பொத்தல் வேண்டும்! சிறுவர்கள் குச்சி ஒன்றை வாயில் குறுக்காக கவ்விடவேண்டும்! ஆங்கில அரசின் கொலனியின் கீழ் இருந்த இலங்கைத் தலைநகர், துறைமுகம் மீது ஜப்பான், போர் விமானங்கள் குண்டு வீசியதால், இவ்வாறு தற்பாதுகாப்பு நடவடிக்கை அமுலில் இருந்தது. உணவு பற்றாகுறை, பஞ்சம், பசி எங்கும் இருந்த காலம்! முதன்முதலாக கோதுமைத் தானியம் அறிமுகமாகியது. அதன் பின்னர்தான் இன்றைய, கோதுமை மாவு உபயோகம் ஆனது! வசதியற்ற ஏழை மக்கள், அதனை சிறிது சிறிதாக பசியை தீர்க்கும் பண்டமாக பாவித்தும் செல்வர்கள் அரிசி உணவையும் உண்டர்கள். கோதுமைக் கொட்டையை இடித்துப் பசை காய்ச்சி, பாடை கட்டி ஓட்டுவதும், கொடி கட்டி ஒட்டிக் காற்றில் விடுவதும், நினைவுக்கு வரும் ஒன்று! பசை கிண்டி, பாடை கட்டி ஒட்டிய பழைய மண் சட்டியைக் கூட, கோடிப்பக்கமாக, வைத்து விடுவார்கள்! சில கிராமத்து சிட்டுகள். கோதுமை மாவை, வாசனைப் பொருளாக பாவித்து முகத்தில் பூசும் அசட்டு தனத்திலும் ஈடுபடுவதுண்டு! இன்று அறுபது - எழுபது ஆண்டுகள் தாண்டி உலகில் கோதுமை மாவுப் பண்டங்களை உண்ணாத மக்களை எங்கும் காணத்தான் -காட்டதான் முடியுமா? பனம் பண்டம், கிழங்கு வகைகள், குரக்கன், வரகு, சாமை, அரிசி உணவு, நன்னாரி வேர் தேனீர் போல அவித்து குடித்த அந்த நாட்களை எண்ணிப்பார்க்க எத்தனை சுகமானது!
(நினைவுகள் தொடரும்) – முகநூல் பதிவு Vettivelu Selliah Gunaratnam (Berlin)
No comments:
Post a Comment