Friday, 20 September 2013

பெயரிடல் - எமது அடையாளம்

குஞ்சரம்: 19
பெயரிடல் - எமது அடையாளம்
பெயர் : Nom : Name : Nome :  : उपनाम : నామము

புலம்பெயர்வின் நீட்சியின் தொலைவில் தொலைவுறாது விட்டுச் செல்ல வேண்டியது எமது மூல அடையாளம். வரலாற்றுத் தொடர் ஓட்டத்தில் நாம் எமது எதிர்காலப் பரம்பரையினருக்குக் கையளித்துச் செல்லவேண்டிய மிகப் பெரிய பொக்கிசம் இது. எமது முகத்தை தெளிவாக எக்காலத்திலும் பதியும் அடையாளக் குறிதான் பெயர். ‘பெயர் சொல்லப் பிள்ளை இல்லையே’ எனப் பலர் கதறி அழுத ஓலத்திலே வாழும் சமூகம்தானே நம்முடையது. முடிமூடி அணிந்தும்- துண்டால் முகத்தைச் மறைத்தும்- இணையவழியில் பெயரிலிகளாகவும் நடமாடுவோரை யாரும் திரும்பிப் பார்ப்பதுண்டோ ?
.
1.
கடையில் சாமான்கள் வாங்கிச் சுமந்தவாறு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு அருகாமையில் சென்ற பென்ஸ் கார் திடீரென்று நிறுத்தப்பட என்னவோ ஏதோவெனத் திரும்பிப் பார்க்கிறேன். காரின்  மங்கலான சாரதிக் கண்ணாடி கீழிறங்க « வணக்கம் மாமா! எப்படி இருக்கிறீங்கள்? » அன்பான குரல் மகிழ்வான முகத்திலிருந்து வெளிவர என் முகமும் பிரகாசிக்கிறது.
« வணக்கம்!! தம்பி!! நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எப்படி புது மணவாழ்க்கை எல்லாம்? என்ன இந்தப் பக்கம்? » என ஆச்சரியமும் மகிழ்வும் பொங்கப் பதிலுரைக்கிறேன்.
« நாங்கள் நல்லா இருக்கிறோம் மாமா!! நானும் கடைக்குத்தான் வந்தனான். உங்களுடைய பிள்ளைகளும் நல்லா வளர்ந்துட்டாங்கள். அவர்கள் புதிதாக நான் வாங்கிய எனது வீட்டுக்கு அருகாமையில்தான் விளையாட வருவதைப் பார்க்கிறனாங்கள். » என்றான் அந்த எனது நண்பனின் மகன்.
« ஆகா!! அப்படியா? நல்லது!! காலங்கள் விரைவாகவே கரைந்து செல்கிறதுதானே!! » என்றேன் புன்முறுவலோடு.
« எங்களுக்கு குழந்தை கிடைக்கப்போகிறது மாமா!. »
« ஆகா! ரொம்ப நல்ல செய்தி. வாழ்த்துகள்!! எப்படியிருக்கிறார் உங்கள் துணைவி என கிட்டச் சென்று கைகுலுக்கினேன்.
« நன்றி மாமா! நாங்கள் நல்ல மகிழ்ச்சியாக இருக்கிறோம். »
« பிறக்கப்போகும் குழந்தைக்கும் எமது இனிய வாழ்த்துகள்! குழந்தைக்கு நல்ல தமிழ்ப் பெயர் வையுங்கள்!! » என்றேன் மகிழ்வுடன்.
« ஓமோம்! நாங்க நல்ல தமிழ்ப் பெயர்தான் வைப்போம். பெண் குழந்தைதான் கிடைத்திருக்கு! »
« தம்பி! இங்கு தமிழில ஒன்றும் பிரஞ்சுல ஒன்றுமாக இரண்டு பெயரை வைக்கலாம் என்று சொல்லுவாங்கள்... அதுதான்! » என்று இழுத்தவாறு அவனது முகத்தை உற்றுப் பார்த்தேன்.
« நோ.. நோ... நோ..! இதெல்லாம் நம்மிடம் நடக்கவே நடக்காது மாமா! ஒரே பெயர்தான்!! நாங்கள் எப்போதோ தீர்மானித்தும் விட்டோம். நாமொன்றும் குழப்பமான புலம்பெயர்ந்த முதற் தலைமுறையினர் இல்லைத்தானே. » என்றான். அறுத்துறுத்த வார்த்தைகள் வாயிலிருந்து கிளம்பும்போது அவனது கண்கள் குறுஞ்சிரிப்புச் சிரித்தது.
எனது முகம் பிரகாசமடைந்தது. விடைபெற்றுக் கொண்டு நிமிர்ந்த நடையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
000 000

2.

அண்மையில் தமிழில் உறுதிமொழி வழங்க நடந்த வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வின் பின்னரான தொலைபேசி உரையாடலில் நண்பன் அவனது உறவுக்காரனுக்கு நடந்த நிகழ்வை விபரித்தான்.
அவர்களது உறவுக்காரரது இல்ல மகிழ்வு நிகழ்வுக்கு அவர்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலை பல்லினத் தோழர்களும், உறவுக்காரர்களுடன் பணியாற்றும் பிரஞ்சுகாரர்களும் வந்திருந்தனர். இதில் மாரி றெனே என்ற வயதான அம்மணியும் வந்திருந்தார். வந்தவர் சிறுபிள்ளைகளுடன் சரளமாகப் பழக்கமாகி அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டார். அங்கிருந்த குழந்தைகளின் பெயர்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர், ஜுலியற், லூஸி, தியோ எனவான பெயர்களைக் கேட்டதும் அசந்துவிட்டார். உடனே அவர்களைத் தனியாக அழைத்து விசாரித்தபோது அந்த மூன்று பிள்ளைகளும் சகோதரர்கள் என்பதையும், அவர்களது பெற்றோர்கள் அங்கிருந்தவர்களில் யார் என்பதையும் அறிந்து கொண்டார்.
இரவு உணவு வேளை அனைவரும் மகிழ்வுடன் கலந்துபேசி உணவருந்திக் கொண்டிருந்தனர். மாரி றெனே அம்மணியார் அந்த மூன்று பிள்ளைகளுடன் அவர்களது பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்டவாறு பேசிக்கொண்டிருந்தார். இவர்களுக்கு அருகாமையில் நண்பர் குடும்பம் அமர்ந்திருந்தது.
« உங்கள் பிள்ளைகளா இந்தப் பிள்ளைகள்? » அம்மணி
« ஓமோம் மேடம்!! » என்றார் சரளமான பிரஞ்சில் பிள்ளைகளின் தயார்.
« பிரபல்யமான பிரஞ்சு பெயர்களை அவர்களுக்கு வைத்திருக்கிறீர்களே!! » அம்மணியின் ஆச்சரியம் அவரது முகத்தில் வெளிப்பட்டது. இதைக்ககேட்ட அந்தப் பெற்றோருக்கு கொஞ்சம் பெருமிதமாகவே இருந்தது.
« எப்படி இவர்களுக்கான பெயரைத் தெரிவு செய்தீர்கள்? » தொடர்ந்த அம்மணியின் கேள்வியில் ஆவல் அதிகம் இருந்தது.
« மேடம்!.... ஏன் கேட்கிறீர்கள்?.... » பிள்ளைகளின் தாயார் கேள்வி புரியாமல் குழம்பியவராக.
« நீங்கள் கத்தோலிக்கரும் இல்லை - ஆங்கிலேயக் கொலனியில் இருந்து வந்தவர்கள்.... இவர்களுக்கு பிரெஞ்சுப் பெயர்களை வைத்திருக்கிறீர்கள். அதுதான்.... அது எப்படி நடந்தது என்பதை அறியத்தான்!! » என்ற அந்த அம்மணி தொடர்ந்து, « ஏன் உங்களது பாரம்பரிய மொழியில் பெயர்கள் இல்லையா? » என்றதும் இதை எதிர் பார்த்திருக்காத பிள்ளைகளின் தாயாரின் முகம் இருண்டுவிட்டது.
« நாங்கள் பிரான்சில இருக்கிறபோது எமக்கு இப்பிள்ளைகள் பிறந்தார்கள். அதனாலதான் பிரான்சின் நினைவாக இப்படிப் பெயர் வைத்திருக்கிறோம்! » என்றார் பிள்ளைகளின் தந்தையார் அவசர அவசரமாக சிரித்துக் கொண்டு.
அருகில் இருந்த மேசையில் அமர்ந்திருந்த நண்பன் குடும்பம் வெட்கத்தால் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
000 000


3.
1996 இல் பிறெஸ்ட என்ற பிரான்சின் தென்கோடி கடற்கரை நகரில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்போது 'சியல்' (CIEL) என்ற பிரஞ்சு மொழி கற்பிக்கும் தனியார் நிறுவனத்தில் மொழி கற்றுக் கொண்டிருந்தேன். என்னுடன் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த மாணவர் குளாம் கற்றுக் கொண்டிருந்தனர். இதில் சுவிஸிலிருந்து வந்திருந்த பிறட்டிறிக்கே (Friederike) என்னோடு அன்பாகப் பழகுவார். இவர் சுவிஸில் அஞ்சல் துறையில் பணிபுரிபவராக இருந்தார். தனது பிரஞ்சு மொழியின் செயற்திறன் மதிப்பை உயர்த்தும் கற்கைக்காக இங்கு வந்திருந்தார்.
ஒரு நாள் ஒவ்வொரு நாட்டினரது பிள்ளைகளின் அழைப்புப் பெயர்கள் பற்றிய கலந்துரையாடல்களாக அந்த வகுப்பறையில் பாடம் நிகழ்ந்தது. ஐரோப்பிய சமூகத்தில் அனேகரது பெயர்கள் கத்தோலிக்க மதம் சார்ந்ததான அவர்கள் பிறந்த நாளைக் குறிக்கும் நிறுவனப்பட்ட பெயர்களாகவே இருக்குமென்றும் இவை அந்தந்த நாட்டு மொழி ஒலிக் குறிப்புகளுக்கிசைவாக ஓசை மாற்றம் உடையதாகவும் இருக்கும் என்பதை ஆசிரியர் அங்குள்ள ஐரோப்பிய மாணவர்களது பெயர்களிலேயே தொடர்புபடுத்தி விபரித்தார். இதனை ஏற்றுக் கொண்ட பிறட்றிக்கே, « தமிழ்ப் பிள்ளைகளின் பெயர்கள் வித்தியாசமானவை அர்த்தமுள்ளவை » என்றார். எல்லோரும் என்னைப் பார்த்தனர்.
எனக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். « இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் எங்கள் சுயமான விருப்பின் அடிப்படையிலேயே பெயரிடுவோம். நாங்கள் வைக்கும் பெயர்களுக்கு ஒரு அர்த்தம் அனேகமாக இருக்கும். எங்களில் சிலர் மதப்பற்றாளர்களாயின் அவர்கள் விரும்பும் கடவுளர்களின் பெயர்களை வைப்பதும் உண்டு. » என்றேன்.
« அப்படியாயின், உங்கள் பிள்ளையின் பெயர் என்ன? அப்பெயர் வைக்கக் காரணமென்ன? » அனைவரும் எனது பதிலுக்காக முகம் பார்த்திருந்தனர்.
« எங்கள் பையன் பெயர் 'இளவேனில்' - நாங்கள் வயது பிந்திய நிலையில்தான் மணம் முடித்திருந்தோம் ஆக எமக்குக் கிடைத்த முதல் பிள்ளை என்றென்றும் எமக்கான இளவேனில்தானே! இது மட்டுமல்ல இவன் பிறந்தது சித்திரை மாதம் - இது இளவேனில் காலம்தானே - ஆக அவனது பெயராக இயற்கையின் குறிச் சொல்லாகவே வைத்துவிட்டோம். »
« ஆகா... என்ன அருமை! நல்லதொரு இலக்கிய உயிர்ப்பு உங்களது பெயரிடலில் இருக்கிறது. » என ஆசிரியரும் பாராட்டினார்.
இதன்பின் பிறட்டிறிக்கேயிடம் ஆச்சரியமாகவே கேட்டேன் « எப்படி இந்த விடையங்கள் உங்களுக்குத் தெரிந்திருந்து? »
அவள் « சுவிஸில் எனக்கு நிறையவே தமிழர்களைத் தெரியும். எனக்கு நல்லதொரு தமிழ் நண்பர் இருக்கிறார். » என்றார் மகிழ்வோடு.
000 000

4.
இப்போது எமது பிள்ளைகள் தலையெடுத்துவரும் அடுத்த தலைமுறையினரது காலம். எனது இரண்டாவது மகன் இலக்கியன் இங்குள்ள யூதர்களால் நடாத்தப்படும் தனியார் உயர் கல்வியகத்தில் படிக்கிறான்.
ஒருநாள் வீட்டில், « அம்மா.... தமிழாக்கள் ஏன் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்னென்வோ பெயர்களை வைக்கிறார்கள்? »
என் மனைவி திகைத்தவராகி, « ஏன்.... இப்படிக் கேட்கிறாய்? பெயர் வைப்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதுக்கு நாமென்ன செய்ய முடியும்? » ஒருவாறு சமாளித்துக் கொண்டார்.
« இல்லையம்மா.... அரபுக்காரங்கள் தங்களது அடையாளப் பெயர்களைத்தான் வைக்கிறார்கள். யூதர்களும் அப்படித்தான் வைக்கிறார்கள். சீனாக்காரரும் அப்படித்தான் வைக்கிறார்கள். தமிழாக்கள்தான் சில்வா, நிக்கோலா, ஜோனாத்தன், மகிஷா, ஒலிவியே, டுலுக்ஷன், அநோஷா, ஆபிஷா எனப் பலவாக வைக்கிறாங்கள்!! எனக்குப் பிடிக்கவே இல்லை. » என்றான்.
« ஓ அதுவா…. அதுதான் இப்ப பஃசன். இதனால் அவர்களது பெற்றோர் பெருமைப்படுகிறார்கள். »
« கூப்பிடுகிற பெயரில என்ன பஃசன் இருக்கம்மா ? லூசுத்தனந்தான் கிடக்கு !! »
தாயாரால் ஏதும் பேசவே முடியவில்லை.
மொழிபுரியாத நாடுகளில் வந்திறங்கிய முதற் தலைமுறையினரது பெயர்களை அந்தக்கால அகதிக் கோரிக்கை நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களால் உச்சரிக்கத் தெரியாது திணறித் திக்குமுக்காடிய ஒலிபெருக்கியின் குரல்களும், உடனே பரப்பரப்பாகி இது தமிழாக்களைத்தான் சுட்டுவதாக உற்றுக் கேட்டுப் புரிந்துக் கொண்டதையும், கால நீட்சியில் இன்று ‘வணக்கம் ! – நன்றி ! – நல்வரவு ! நலமா ?’ என்ற சொற்கள் உலகப் பரப்பில் தனித்துவ அடையாளத் தடமாகப் பவனிவருவதும் நினைவுத் திரையில் நிழலாட…… புன்முறுவலிட்டவாறு கணனியில் மூழ்கினேன் நான்.
000 000

புலம்பெயர்வு வாழ்வின் பெறுமானம் தெரியாது முக்குளித்த முதற் தலைமுறையும் இதனைத் தொடரும் அடுத்த தலைமுறையினரும் எடுத்துக் கொடுக்கும் தடவழிப் பாதையில் பயணமாகப்போகும் அடுத்தடுத்த தலைமுறையினர் காலவோட்டத்தில் கரைந்து காணாது போகப் போகிறார்களா ? அல்லது தமது சுயத்தோடு உலக வலம் வரப்போகிறார்களா ?
ஆனாலும் தொலைவு தொடர்பான கனவுகளுடனும் இதற்கான மீட்சிக்கான அயராத உழைப்புடனுமான பயணங்களில்தான் மானுடவாழ்வு புவியில் தடம் பதித்து மேலெழுகிறது. தமிழின் வரலாற்றுப் பாதையில் அகம் – புறமென காரண – காரியப் பெயர்ப் பதிவுகளுடனான சொற்களாலும் சொற்கோர்வைகளாலும் இன்று வரை தமிழ் தனித்துவமான மொழியாக வாழ்கிறது. புத்தம் பதியதான சொற்கள்கூட இவ்வகைப் பொருத்தப்பாடுகளுடனேயே நடைமுறைகளாகின்றன.
இன்று படைப்பாளி ஜோ டி குருஸ் முன் வைக்கும் ‘பரதவர்கள்’ தொடர்பான கருத்துரு விரிவான மீள் பார்வையைத் தொடுகிறது. இது தொன்மத்தின் நீட்சியிலான எமக்கான பெயர்களின் முக்கியத்துவம் தொடர்பான உரத்த சிந்தனையை முன்வைக்கிறது
பெயர்களைக் காவித் தொடர்ந்ததாலேதானே ‘பெயரர்கள்’ என்ற பேரர் அழைப்பைக் கொண்டது தமிழ். ‘குப்பைத் திருமேனியாக – எவ்வளவு குப்பைகளைக் கொட்டினாலும் எந்தக் குப்பைத் துகளுமல்லாது சுத்தமாக குப்பைக்குள்ளிருந்தே மிளிரும் தாவரம். இதை இப்போது ‘குப்பைமேனி’ ஆக குப்பைக்குள் போட்டுவிட்டோம். செம்பருத்தி – செவ்விரத்தை எனவாக அதன் தோற்றத்துடனாக இருந்த பெயரை ஈவிரக்கமல்லாது ‘செம்பரத்தை’ எனவாக்கி விட்டோம் !
இராமபிரான் எனக் கடவுளாக்கப்பட்ட இதிகாச நாயகனால் மரண தண்டனை வழங்கப்பட்ட ‘வாலி’யும் அவனது மகனான அங்கதனும்,  எம்மரபில் இன்றும் பெயராக தொடர்கிறார்கள். இராவணனது பெயரும் அவனது மகன் ‘இந்திரசித்’தும் இன்று வரை பெருமையுடன் தொடர்கிறது. ஆனால் இராமனுக்கு உதவிபுரிந்த ‘சுக்கிரீவன்’ பெயரோ இராமரால் முடிசூட்டப்பட்ட ‘விபீடணன்’ பெயரோ எங்காவது மதிப்பாகத் தொடர்வதுண்டா ?
புலம்பெயர்வு வாழ்வில் எமது அடுத்துவரும் சந்ததியினர் எல்லாவற்றுக்கும் ‘ஏன் ? எதற்கு எப்படி ?’ எனும் காரண காரியங்களைத் தேடுவோராகவே தமக்கான கல்வித் தேடல் தடத்தில் பயணிக்கிறார்கள். இவர்களினது கேள்விகளுக்குப் பதிலளித்தவாறுதானே நாமும் பயணிக்க வேண்டும்.

பிற்குறிப்பு
1. படங்கள் நன்றி: கூகிள் இணைய வழங்கி
2.  பெயரிடுதலும் அடையாளமும் - கீதா கணபதி தொரே
(நன்றி: மௌனம் 3 - இதழில் வெளிவந்த ஆக்கம் காண்க : பக்கம் 4-7)

3. சியல் கல்வி நிறுவனம் Ecole pour apprendre le français en France - CIEL Bretagne -

4.  புலம்பெயர்ந்த தமிழர்களால் தாம் பெற்றெடுத்த வாரிசுகளுக்கு இட்ட பெயர்கள். ஒரு குறுக்குவெட்டுப் பரிசீனைக்கான தொகுப்பு



-    இந்த ஆக்கம் சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழான ‘காக்கைச் சிறகினிலே’ மே 2014 பதிப்பில் அச்சு வாகமனமேறியிருக்கிறது.
-       முகிலன்
-       பிரான்சு 20.09.2013


3 comments:

  1. புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு தமிழில் பெயரிடுவது மட்டுமல்ல - அவர்கள் தமிழில் போதுமான அளவு உரையாட வழிவகை செய்யவேண்டியதும் பெற்றோரது கடமைதான். வீட்டில் அவர்கள் தமிழ் மூலம் சரளமாக உரையாடவும் புரிந்து கொள்ளவும் சிறுபிராயத்திலிருந்து கவனம் கொள்ள வேண்டும்.
    நல்லதொரு பதிவு. தொடருங்கள்!!

    ReplyDelete
  2. தமிழர்கள் தமிழ் பெயரை விடத் தொடங்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன எனலாம். பக்தி இயக்கங்களால் உந்தப்பட்டு சமணத்தில் இருந்து சைவ, வைணவத்துக்கு தமிழர்கள் மாறிய போது இருந்த தமிழ் பெயர்கள், 10-ம் நூற்றாண்டுக்குப் பின் வடமொழியாக்கப்பட்டது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் கூட வடமொழிப் பெயரிலே இட்டுக் கொண்டதோடும் மிக நீளமான பெயர்களையும் வைத்துக் கொண்டனர். பண்டைய தமிழ் பெயர்கள் மிகச் சிறியவை. காலம் மாறியது 20 நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் மீண்டும் தமிழ்ப் பெயர்களை கொண்டு வந்ததால் தமிழ் பாரம்பரியம் இல்லாத போதும் தமிழகத்தில் வாழ்ந்த பிற மக்கள் கூட தமிழ் பெயர்களை ஏற்றுக் கொண்டனர். தொய்வு நிலை மீண்டும் வந்தது எழுத்தாளர்கள், சினிமாக்கள், ஊடகங்கள் மூலமாய் மீண்டும் வடமொழிப் பெயர்கள் பிரபல்யப் படுத்தப் பட்டன. ஆன போதும் தமிழகத்தில் பரவலாய் தமிழ் பெயர்கள் அழியாமல் மீட்டு எடுக்கப்பட்டன. இலங்கையைப் பொறுத்த வரை தமிழ் பெயர்களை தமிழ் போராளிகள் ஊக்குவித்தனர், ஆன போதும் புலம் பெயர் தமிழர்கள் தமது நீளமான வடமொழி பெயருக்கு மாற்றாக தாம் வாழும் பிற மொழிப் பெயர்களை ஏற்றுக் கொண்டனர், இன்னும் பலரோ அர்த்தமற்ற சிங்கள சாயல் கொண்ட, வடமொழி சாயல் கொண்ட பெயர்களை இட்டனர். புலம் பெயர் ஈழத் தமிழர் மத்தியில் நல்ல தமிழ் பெயர்கள் காண்பது மிக அரிது. ஆனால் தலைமுறைக் கடந்து தமிழை மறந்துவிட்ட கயானா, மொறிசியஸ் தமிழர்கள் மத்தியில் கிராம மணம் மாறாத பச்சைத் தமிழ் பெயர் கண்ட போது வியந்து போனேன்.

    ReplyDelete
  3. பதிவை வாசித்து தங்களது எண்ணங்களைப் பகிர்ந்த அருந்தா மற்றும் விவரணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete