Tuesday, 3 September 2013

புதுமை

செவி வழிக்கதை 19
கதைச்சரம் 22

புதுமை புதுமை புதுமை புதுமை புதுமை புதுமை புதுமை புதுமை புதுமை


ராஜபுரி என்ற வளமான நாடு. வினோதவர்மன் என்ற அரசன் அரசோச்சிய காலம். பெயருக்கேற்பவே புதுமைகளைச் செய்ய நாட்டங்கொண்ட தலைமகன். இதனாலோ என்னவோ அவன் பெயர் காரணப் பெயராகவே அமைந்துவிட்டது!
வினோதங்களில்தான் எத்தனை வகைகள்! அதில் இவ்வரசன் ஆடை வினோதங்களில் தனி நாட்டங்கொண்டிருந்தான். 'அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி'- கேட்கவா வேண்டும்? வித்தியாசமான ஆடைகளை அணிவதிலும்- அறிமுகம் செய்து பிரபல்யப்படுத்துவதிலும் ராஜபுரி சுற்றியுள்ள சிற்றரசுகளிலும், பேரரசுகளிலும் அதிகம் பேசப்பட்டு வந்தது.
புதிய ஆடை அறிமுகங்கள் செய்து பரிசுகள் பெறவும், இதனை வேடிக்கை காணவும் மக்கள் கூட்டம் அலைமோதின. ராஜபுரியின் அரண்மனையில் தினமும் இதே வேலையாகிவிட்டது. சாதாரண ராஜபணிகள் தடைப்பட்டன. வினோதவர்மனுக்கும், அரசி வினோதினிக்கும் இப்பிரச்சினையைத் தீர்க்க வழி தெரியவில்லை. மந்திரி மதிசூதனனை அழைத்து ஆலோசனை கோரினார் அரசர்.
மதிசூதனன் தன் அறிவின்பால் கர்வம் கொண்டவர். "ராஜாவுக்கும், ராணிக்கும் புதியதும், இதுவரை அறியப்படாததுமான புதுமையான ஆடையை அறிமுகம் செய்பவருக்குப் பரிசு 1000 பொற்காசுகள் என்றும், ஆனால் ஏற்கனவே அறியப்பட்ட ஆடையைக் காட்டுபவர் சிறைக்குச் செல்லப்படுவார் என்றும்' புதிய விதிமுறையை மந்திரி மதிசூதனன் வகுத்தார்.
புதிய நடைமுறை பற்றி ராஜபுரியிலும், சுற்றியுள்ள ஊர்களிலும் பறை சாற்றப்பட்டது. மக்கள் திகைத்து விட்டனர்! கூட்டம் திடீரென்று தடைப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வருபவர்களும் சிறை சென்றனர். நாடு அமைதியாகிவிட்டது.
சுமார் 6 மாத இடைவெளியின்பின் ஒருநாள், இரு நாடோடிகள் ராஜபுரி அரண்மனையில் நுழைந்தனர். தாம் இதுவரையில் அறியாத புதுமையான புதுமையான ஆடையைத் தயாரித்துத் தருவதாகவும், அதற்குத் தயாரிப்புக் காலம் ஒரு மாதமும், தனிமையான இடமும் வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். ராஜாவும், ராணியும் ஆவலுடன் ஆவனசெய்வதாக வாக்களித்தனர்.
நீண்ட காலத்தின் பின் ஏற்பட்ட 'புதுமை' என்பதால் அரண்மனை முழுவதுமே ஆவல் பொங்கியது. நாடோடிகளும் வித்தியாசமாகவே நடந்து கொண்டனர். பிறகென்ன ஊர் முழுவதும் செய்தி பரவியது. நாடோடிகளுக்கான வீட்டின் வெளியே மக்கள் கூடி அதிசயம் பற்றி ஏதோ கூறிச் செல்வதும், கலைவதுமாக ராஜபுரி மீண்டும் களைகட்டியது. தையல் இயந்திரத்தின் ஒலி அந்த வீட்டுக்கு வெளியே செல்வோரின் செவிகளுக்கு ஏதோ புதுமைகளைச் சொல்வதாக கிளுகிளுப்பூட்டின.
அரண்மனையில், மந்திரியின் மனம் தடுமாறியது. வினோத உடையை எப்படியாவது முன்கூட்டியே அறிந்துவிட வேண்டுமென மனம் உந்தியது. ஒருநாள் நாடோடிகளின் விருந்தினர் மாளிகைக்குச் சென்றார் மந்திரி. உள்ளே சென்ற மந்திரியைக் கவனிக்காதவாறே நாடோடிகள் இருவரும் தீவிரமாக தையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
தையல் நடந்தபோதும் 'சட்டையை' மந்திரியால் காண முடியவில்லை. குழப்பத்துடன் மந்திரி "என்னப்பா ஏதுமே தெரியவில்லையே?" எனக் கேட்டுவிட்டார்.
அப்போதுதான் நிமிர்ந்து பார்த்த நாடோடிகளில் ஒருவன், மந்திரியைப் பார்த்துப் புன்சிரிப்புடன் வரவேற்றுவிட்டு, "எமது ஆடை அறிவாளிகளின் கண்களுக்கே தெரியும்" என்றான்.
அதிர்ச்சியுற்ற மந்திரி சங்கடத்துடன் ஒருவாறு சமாளித்துவிட்டு, "ஆடை மிகவும் நன்றாக எடுப்பாக புதுமையாக இருக்கிறது!" என ஆகா.. ஓகோ.. எனப் புகழ ஆரம்பித்துவிட்டார்.
அங்கிருந்து திரும்பிய மந்திரி சும்மா இருக்கவில்லை. ராஜசபையில் வந்து பதிய ஆடை பற்றி ஓகோவெனப் புகழத் தொடங்கிவிட்டார். 'இவ்வாடை அறிவாளிகளுக்கு மட்டும்தான் தெரியும்.' என்ற தகவலைச்சொல்லி, ராஜா இதுவரை காணாத புதிய ஆடையைப் பெறப்போகின்றார் என்பதையிட்டு தான் பெருமிதம் கொள்வதாக மார்தட்டினார்.
ராஜாவுக்கும், ராணிக்கும் இருப்புக் கொள்ளவில்லை. ஒருநாள், ராணியிடம் சொல்விட்டு ராஜா விருந்தினர் மாளிகைக்கு ரகசியமாகச் சென்றார். வழமைபோல் ஆடை தயாரிப்பு வேலைகளில் நாடோடிகள் மும்முரமாக இருந்தனர்.
சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்த ராஜாவுக்கு எதுவுமே தெரியவில்லை. ஐயோ பாவம்! தன் அறியாமையை எண்ணி ராஜா வருந்தினார். மந்திரிக்கு தன்னைவிட அறிவு அதிகமுள்ளதை ராஜாவால் ஒத்துக்கொள்ள முடியாதே! ஒருவாறு தன்னிலமையைப் புரிந்த ராஜா ஆடையைப் பார்த்ததாகக் கூறி நாடோடிகளைப் பாராட்டினார். அற்புதமான ஆடையென்று ராஜாவே வர்ணித்ததால் நாடோடிகள் பெரிதும் மகிழ்ந்தனர்.
அரண்மனை திரும்பியதும், ராணி உட்பட அனைருக்குமே புதிய ஆடைபற்றி ஓகோவென்று ராஜா புகழ்ந்து தள்ளினார். தகவல் காட்டுத் தீ போல் சுற்றியுள்ள ஊரெல்லாம் பரவியது.
அரண்மனையைச் சுற்றி கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. மீண்டும் ராஜ பணிகள் மேற்கொள்ள தடைகள் ஏற்பட்டன. மக்களின் ஆவலை ஈடு செய்ய ராஜாவும், ராணியும் புதிய ஆடைகளை அணிந்தவாறு நகர்வலம் வருவார்களென அறிவிப்பு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட தினம்;, வீதியின் இருமருங்கிலும் ஒரே கூட்டம். ராஜாவும் ராணியும் புதிய ஆடைகளுடன் சிறப்பாக யானை மீதேறி நகர்வலம் வந்தனர். மக்கள் வாயடைத்து விக்கித்துப் போயினர். நகரினை வலம்வந்துகொண்டிருந்த ராஜாவும், ராணியும் பெருமிதத்தால் குதூகலித்தனர்.
ஊரின் புறத்தே ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. தெரு வழியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு உற்சாகம் பொங்கியது. ராஜா, ராணியைப் பார்க்க விரைந்து முன்வரிசைக்கு வந்தனர்.
ராஜாவையும் ராணியையும் பார்த்த ஒரு சிறுவன், "அங்கே பாராடா.... ராஜாவும் ராணியும் எங்களைப் போலவே அம்மணமாக வருகிறார்கள்!!" என்றான் சத்தமாக.
ராஜாவுக்கும், ராணிக்கும் ஏதோ பொறிதட்டியது.
- அநாமிகன்
0000 0000



நன்றி : மௌனம் (மே, யூன், யூலை 1993 - காலாண்டு இதழ்1 - பிரான்சு)
 (நன்றி : படங்கள் கூகிள் இணைய வழங்கி)

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்- பல்வேறு சஞ்சிகைகள் புலம்பெயர்ந்த முதற் தலைமுறைத் தமிழர்களால் புவி எங்கிலும் வெளியாகிக் கொண்டிருந்தன. இவற்றிலிருந்து வேறுபட்டதாய் வெளிவந்த ஓர் இதழ்தான் « மௌனம் ». இது நான் பிரான்சு வந்திருந்த காலத்தில் எனது நீண்டகாலத் தோழனும் நண்பனுமாகிய கிபி அரவிந்தனுடன் இணைந்து வெளிவந்தது.. தனக்கான தனி முத்திரையுடன் வெளிவந்த  ‘மௌனம்’ முதலாம் இதழில் என்னால் எழுதப்பட்ட செவிவழிக் கதை இது.
யாழின் தீவுக் கூட்டத்தில் அமைந்த சிறு கிராமமான கரம்பன் சண்முகநாத மகா வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு படித்தபோது சக வகுப்பு நண்பன் சிவானந்தன்; சொன்ன செவி வழிக்கதை இது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் இக்கதை ஐரோப்பிய சிறார் கதையாளர் அனர்சன் என்னும் அண்டர்சன் கதையாக டென்மார்க்கில் இது இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இக்கதை மருவியவாறு இந்தியப் பாணியில் செவி வழியாக அந்தக் காலத்திலேயே பரவியதை நினைத்து ஆச்சரியமாகவிருந்தது.
ஆசிரியர்கள்- நண்பர்கள் எமது பெற்றோர்- பெயரர்- உற்றார்- உறவினர் எனப்பலவாக நாம் அறிந்திருக்கும் செவிவழிக் கதைகளை தொடராகப் பதிவேற்றும் அவாவில் இதில் இணைக்கிறேன்.



-          முகிலன்
-          பாரீஸ் 03.09.2013

2 comments:

  1. அருமையான கதை
    சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும்
    பகிர்ந்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது உற்சாகமூட்டும் பின்னூட்டலுக்கு மிகுந்த நன்றிகள!

      Delete