Wednesday, 18 September 2013

தொண்டைக் குழிக்குள் மாட்டிக்கொண்ட 'இடி'அப்பம்

குஞ்சரம் 18

தொண்டைக் குழிக்குள் மாட்டிக்கொண்ட 'இடி'அப்பம்

முப்பது வருடங்கள் கடந்ததாக நீட்சியுறும் புலம்பெயர்வு வாழ்வில், தாயகத்துடனான தொப்புள் கொடி இணைப்பு இன்னும் இறுக்கமாகவே தொடர்வதால்தான் கோடை விடுமுறைக் காலத்தில் அதிகமான புலம்பெயர் தமிழர்களால் கொழும்பு விமான நிலையம் நிரம்பி வழிகிறது.
இவ்வுணர்வு இங்கும் அங்குமாக நிகழும் தொலைத் தொடர்பு பரிவர்த்தனைகளால் இறுக்கமாகி பிணைந்தே இருக்கிறது. அங்கிருந்து இங்கு திரும்புவோரது பயணப் பொதிகளில் கறித்தூளில் இருந்து கருவாடு வரையிலான நாளாந்த வீட்டுக்குத் தேவைக்கான உணவுப் பண்டங்களால் நிறைந்திருக்கின்றன. 
இவற்றை இங்குள்ளவர்கள் தொட்டுப் பாவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத 'அங்குவிட்டு வந்துள்ளவர்களின் நினைவு சுமந்த தொடுகையை' உணர்ந்து பூரிக்கிறார்கள். இது புகலிட வீட்டில் அவர்களுடனேயே வாழ்வதான நினைவு நீட்சியாகப் பயணிக்க வைக்கிறது. இங்குள்ள சிலரது வீட்டுத் தலையணைகள்கூட அவர்களது அக்காக்களினதோ, அம்மாக்களினதோ கைகளால் நிரப்பப்பட்ட பஞ்சுகளை கொண்டதாகவே இருக்கின்றன. இப்போது இவ்வுணர்வு அடுத்த தலைமுறையாலும் தழுவலாகிவிட்டது.
தாம் தவழ்ந்த மடியையும், மண்ணையும் பார்க்கப் போகும் பயணமாகவே அதிகமான புலம்பெயர்ந்த முதற் தலைமுறையினரது கோடை விடுமுறைக்காலம் அமைந்துவிடுகிறது. இப்பயண வெளியில் போக முடியாதவர்களது நினைவு சுமந்த 'அன்பான' பொதிகளையும் சுமந்தவாறுதான் அங்கும் இங்குமாக செல்வோரது பயணங்களும் அமைகின்றன. உற்றமும், சுற்றமும், நட்பும் கொடுத்துவிடும் பொதிகளுடனான பயணம் இவர்களுக்கு பரவலான சுற்றுலாக்களாகவே அமைந்துவிடுகிறது….
ஆனாலும் சில பயணங்கள் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறென பதம்பார்த்தே விடுகின்றன !

000 000

தன்னோடு பதினைந்து வருடங்களாக தனது வீட்டுடன் இணைந்த அறை நண்பனாக இருக்கும் வேலானந்தனது அன்புப் பொதியையும் சுமந்தவாறு இந்தக் கோடைக்கு இலங்கைக்குப் போனார் எனது நண்பர். இந்த வேலானந்தனை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நல்ல மனதுள்ள கடினமான உழைப்பாளி. இவர் கோபித்ததை யாருமே பார்த்ததில்லை. இங்கு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு இடியப்பம் தேவையென்றால் எங்களால் முதலில் அழைக்கப்படுபவர் இந்த வேலானந்தன்தான். அவரது கை அப்படிச் சுத்தமானது. வீட்டுச் சமையலாகவே இருக்கும். 750 இடியப்பம் என்றாலும் மனுசன் ஆள் பிடிச்சு வேலை செய்யாது. இயந்திரத்தாலும் பிழியாது, எல்லாமே தனது கைகளால்தான் செய்வார். இதனுடன் கொடுக்கும் கறிவகைகளுக்கு மலினமான பதார்த்தங்கள் சேர்க்கமாட்டார். இவரது நேர்மையான உழைப்பால் எப்போதுமே இடியப்பத்திற்கான ஓடர்கள் இவருக்கு இருக்கும். குழல் பிட்டுக்கும் இவரிடம் நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். திடீரெனக் கேட்போருக்கு இவரிடம் இலகுவில் சம்மதம் கிடைக்காது.
எனது நண்பனின் நண்பனாக அறிமுகமானாலும் தனது கைப்பட தயாரித்த உணவுகளால் எம்முடன் நெருங்கி விட்டிருந்தார். எனது நண்பன் தனியான வீட்டுக்காரனாக இருப்பதால் வேலானந்தனது சமையலுக்கான தனியான சமையல் கட்டு வீட்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. முப்பத்தெட்டு வயதாகியும் இன்னமும் திருமணமாகாத ஒண்டிக் கட்டை. ஈழத்தில் நடந்து முடிந்த அழிவுகளில் தயாரும் இறந்துவிட்டார். தந்தையார் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இப்போது அவருக்கு உயிருக்குமேலான உறவு இலங்கையிலுள்ள அவரது அக்காதான். அக்காவைப் பற்றியும், அத்தானைப் பற்றியும், அக்காவின் நான்கு பிள்ளைகள் பற்றியுமே அடிக்கடி பேசுவார். உழைப்பின் பெரும் பகுதியை அவர்களின் தேவைக்கே அனுப்பிவிடுவார்.
மிக நீண்டகால இடைவெளியின் பின் அமைந்திருந்தது நண்பனது குடும்பத்தின் இலங்கைப் பயணம். அவன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவன், அவனது துணைவியார் சாவகச்சேரியைச் சேர்ந்தவர். பிறகென்ன ஒருமாத இடைவெளி இவர்களுக்கே போதாது. நண்பர் வேலானந்தன் தெல்லிப்பழையின் கடைக் கோடியிலமைந்த அம்பனைக் கிராமம். புகலிடம் திரும்பும் கடைசி வாரத்தில்தான் அவனால் தனது நண்பனது அக்காவின் வீட்டுக்குப் போக நேரமொதுக்க முடிந்தது. அதுவும் தனியாளாகத்தான்.
ஓட்டோவில் பேரம் பேசி அம்பனைக் கிராமத்திலுள்ள அக்காவின் வீட்டுக்குச் செல்ல காலை பத்து மணி ஆகிவிட்டது. தனது வாழ் நாளில் இப்போதுதான் அம்பனைக் கிராமத்தைக் காணுற்றவனாகி அதன் பசுமையில் கொஞ்சம் கிறங்கிப் போனான். வீட்டைச்சுற்றியிருந்த வர்ணம் பூசிய மதிலே பிரகாசமாக இருந்தது. பலமான அகண்ட இரும்பு வாசல் படலையே பிரமாண்டமாக இருந்தது. உள்ளே நுழைகையில் அழகான பளிங்குத் தரையுடன் வீடு மினுங்கியது. மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கர வண்டிகளுமாக முன்புறத்திலேயே சிறிய பூஞ்சோலையுமாக ரம்மியமான வரவேற்பைத் தந்தன. முகமன்கூறி அறிமுகமானதும் அக்காவினது முகம் பிரகாசமடைந்து தடல்புடலான வரவேற்பைப் பெற்றது.
வரவேற்பறையில் பிரமாண்டமான இரண்டு சோபாக்கள், பெரியதொரு அகண்ட சுவரில் பொருத்தப்பட்ட தொலைக் காட்சித்திரை, இதனோடு இணைக்கப்பட்ட 5.1 ஒலிபெருக்கி இணைப்புகள், அழகான மின்விளக்குகள், இதனோடு இணைந்ததாக தனியாக சாப்பாட்டு அறை பெரிய மேசை கதிரைகளுடன் இருந்தது. ஒவ்வொருவருக்கும் தனி அறைகளென பெரிய வீடு. சுற்றவர மரச்சோலையான சுற்றாடல். எனது நண்பன் அசந்தே போய்விட்டான்.
அவனால் கற்பனையில்கூடக் இப்படியானதொரு காட்சியை கண்டிருக்கவில்லை. தனது உணர்வுகள் வெளிப்படாதவாறிருக்க சிரமப்பட்டுத் தவித்தான். அக்காவிடம் தான் கொண்டுவந்த பொதியைக் கொடுத்துவிட்டு, தேநீர் அருந்தித் திரும்புவதுதான் அவனது திட்டமாக இருந்தது.
அக்கா விடவே இல்லை, தம்பிகூடவே இருந்து வந்திருப்பதால் சாப்பிட்டுவிட்டே செல்ல வேண்டுமென பணித்துவிட்டார். சோபாவிலிருந்தபடி சரளமாக உரையாடத் தொடங்கிவிட்டனர் அக்கா குடும்பத்தினர்.
அத்தானுக்கு இன்னமும் பெரியதாக வேலையொன்றும் கிடைக்கவில்லை என்றும், அக்காவின் பிள்ளைகள் ஆங்கில வழியில் கற்பதால் யாழ்ப்பாணத்திற்கு ரீயூசனுக்குப் போய்வர மோட்டார் சைக்கிள்கள் இருப்பதால் வசதியாக இருக்கிறதெனவும் அக்காவும் அத்தானும் பெருமையுடன் சொல்லிக் கொண்டனர். தங்களது இந்த வாழ்வுக்கு தம்பி வேலானந்தன்தான் உதவுவதாக நன்றியும் தெரிவித்தனர்.
நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. யாருமே சமையலறைப் பக்கம் போனதாகவே தெரியவில்லை. நண்பனுக்கு 'மதியச் சாப்பாட்டுக்கா இரவுச் சாப்பாட்டுக்கா சொல்லியிருக்கிறார்கள்?' என்ற சந்தேகம் மேலெழ தர்மசங்கடமாக மனது பிசையத் தொடங்கியது. 'கொஞ்சம் பொறுப்போம்!' என மனதை அடக்கிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் 'பூம்’ என்ற ஒலி வாசலில் கேட்டது வித்தியாசமாக இருந்தது. அவனோடு பேசிக்கொண்டிருந்த அக்கா, உட்பக்கமாகத் திரும்பி "இங்க பாருங்கோ..... வாசலில கூப்பிடுறாங்கள். அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வையுங்கோ" என்றார்.
சிறிது நேரத்தில், « வாங்க தம்பி, சாப்பிடுவோம்! » என அன்பாக அழைத்தார் அக்கா. நண்பனுக்கு இன்று காண்பது, நடப்பதுவெல்லாம் புதுமையாகவே இருந்தது.
சாப்பாட்டு மேசையின் நடுவில் அழகிய பூக்களுடனான சாடி, சுற்றி வர பத்து வகையான கறிகளுடன் வெள்ளிப் பாத்திரங்கள், கூடவே தனியாக இடியப்பம் வைக்கப்பட்ட தட்டு, பழங்களடங்கிய சிறிய அழகான சீன மூங்கில் கூடை என வாயில் எச்சில் ஊற மேசைக்குச் சென்றான் நண்பன்.
அனைவரும் சுற்றியிருக்க அக்கா பரிமாறினார். நண்பனுக்கோ ஆச்சரியம். « அக்கா, நீங்கள் எல்லோருமே என்னோடு கதைத்துக் கொண்டுதானே இருந்தனீங்கள் அப்ப எப்படி இவ்வளவு கறிகளுடன் சமைத்தீர்கள்? » அடக்கிய கேள்வி வெளியேறி விட்டது.
« என்ன தம்பி வெளிநாட்டிலிருந்து வந்துபோட்டு இப்படிக் கேள்வி கேட்கிறீங்க! » என்று ஒருவாறு நண்பனைத் திரும்பிப் பார்த்துவிட்டு தொடர்ந்தார்,
« ஓடரைக் கொடுத்துவிட்டால் டங்கென்று பத்துக் கறி வகையுடன் அவன் கொண்டு வந்து கொடுத்துப்போட்டுப் போறான். தம்பி இப்ப இங்கு யாரும் சமைப்பினமே...! வசதியில்லாதவைதான் அப்படிச் செய்வினம்! » என்றார் ஏளனமான உடல்மொழியுடன்.
எல்லோருடைய தட்டுகளிலும் இடியப்பத்தை வைத்துவிட்டு கறிகளையும் வைத்தார். தேவையானவர்களுக்கு சொதியையும் ஊற்றியவாறு பேச்சைத் தொடர்ந்தார்.
« சோறு சமைக்கிறதாக இருந்தால் குக்கரில போட்டு எடுத்திடலாம் தம்பி. இப்ப யாராயினும் இடியப்பத்தைப் பிழிஞ்சு எடுக்கிற வேலையைச் செய்யினமா ?...... மினக்கெட்ட வேலை அது ! இப்ப இங்கு வசதி குறைஞ்ச ஆக்கள்தான் இதுகளைச் செய்துகொண்டு அடுப்புகளுக்குள்ள முடங்கிக் கிடக்கினம்… ! » என அக்கா சொல்லவும் அவனது நினைவு குளிர் காலத்திலும் வேர்க்க விறுவிறுக்க வேலானந்தன் இடியப்பம் பிழியும் காட்சிக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது.
நண்பனது வாய்க்குள் சிக்குண்ட இடியப்பக் கவளம் விக்கல் எடுத்துப் புரக்கேறியது. தொடர்ந்து எழுந்த இருமலுடன், கண்ணும் கலங்கியது. இதன் பின் அவனால் உண்ணவே முடியவில்லை. தண்ணீர் கூடப் பருக முடியாதவாறு இருமல் தொடர்ந்தது.
கலங்கியவாறு திக்கித் திணறிய அவனது வாயிலிருந்து « அக்கா!, அத்தான்! என்னை மன்னியுங்கோ.... என்னால் முடியல்லை... » என்றவாறு வயிற்றையும் தொண்டையையும் சைகையால் காட்டி எழுந்தான்.
இருமியவாறே கை கழுவி, முகத்தையும் கழுவிக் கொண்டு « நான் உடனே வீட்டுக்குத் திரும்பவேண்டும். » உதிர்ந்த வார்த்தைகளுடன் எப்படி வெளியேறினான் என அவனுக்கே தெரியவில்லை.


பிற்குறிப்பு :

1. . அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ
காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ
குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ

பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
(புலம்பெயர்வுப் பாடல் ’90 களில் வெளிவந்தது.)

2. . தற்போது வெளிவந்த 'மாறுதடம்' (2013) திரைப்படத்திலும் ஒருகாட்சி….
« தம்பி ஊரில எல்லோரும் சுகமா இருக்கினமா ? »

« ஓமோம் அவை மட்டுமல்ல மாமா- மாமி, சித்தப்பா, குஞ்சியையா, அன்ரி,  அன்ரியுடைய ஒன்றுவிட்ட தம்பி எல்லோரும் குடும்பத்தோடு நல்ல சுகமாக இருக்கினம் !  ! » எனவாக பெரு மூச்சுவிட்டவாறு பதிலுரைக்கிறார் வயது முதிந்தும் திருமணமாகாதிருக்கும் 38 வயதுக்காரர்.

- முகிலன்
பிரான்சு 18.09.2013

No comments:

Post a Comment