குஞ்சரம் 17
இலங்கையிலும்.....
பெருக்கெடுக்கும் தெருச் சிலைகள்
தெருவுக்கு
வந்த சாந்தமான சிவ'பெரு'மான்!!
வேலையும் வீடாகவும் சுழலும்
வாழ்வோட்டத்தில், சடங்கு சம்பிரதாய நிர்ப்பந்தமில்லாது அவ்வப்போது நிகழும் நட்புறவாடல்
சந்திப்புத் தருணங்கள் தரும் சுகம் அருமையானது. இப்படியானதொன்றாக சென்ற வெள்ளி மாலையில்
லாசப்பலில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. பிறகென்ன, ‘தோசை சாப்பிடுவோம்’ என்ற விருப்பில்
இங்கு முதன்முதலாக உருவான மரக்கறிக்கடையான 'கிருஷ்ண பவனுக்கு' சென்றோம்.
எங்களுக்கு ‘பேப்பர் றோஸ்ட்’
என்ற பென்னாம்பெரிய மெல்லிய தோசை என்றால் நினைக்கவே வாயூறும். இந்தத் தோசையை வீட்டில்
சமைக்கவே முடியாது. அவனுக்கு வெங்காய தோசைறென்றால் ஒரு பிடிபிடிப்பான். இது எல்லாம்
நாம் இளைஞர்களாக இருந்த காலத்திலிருந்த உறைந்துபோன மென் ஆசைகள். நண்பன் இப்பத்தான்
விடுமுறைக்கு இலங்கை சென்று திரும்பியிருந்தான். என்கூடவே இளய நண்பனாக பிரஞ்சுப் பல்கலையில்
கற்கும் இளைஞனும், புகலிடத்தில் ஓவியத்தால் தடம் பதிக்கும் இன்னொரு இளைஞனும் வந்திருந்தனர்.
உணவுக்கு உரிய பட்டியலைக்
கொடுத்துவிட்டு இயல்பாகவே கதையாடலைத் தொடங்கினோம். தனது இலங்கைப் பிரயாணங்களில் காணப்பட்ட
காட்சிகளில் 'தெருச் சிலைகள்' பெரிய பாதிப்பைத் தந்திருந்ததை உரையாடல் வெளிப்படுத்தியது.
இளைய நண்பனுக்கு இத்தகைய விபரங்களை அறிய பெரும் விருப்பம். சில சமயங்களில் சரளமான தமிழ்
உரையாடல் அவனுக்குப் புரியாமல் போய்விடுவதுண்டு. இன்று அவன்கூடவே இருந்த ஓவிய நண்பனால்
இந்தச் சிக்கல் இல்லாதிருந்தது. இவர் பிரஞ்சு மொழியில் புரியப்படாதவற்றை அவனுக்கு விபரித்தார்.
« வன்னியிலே
பென்னாம்பெரிய புத்தர் சிலை வரப்போகுதாமே! இதுதான் உலகிலேயே ஆகப் பெரியதாம். »
« அந்த சிலையிலுள்ள
புத்தரின் முகம் சாந்தமாக வசீகருக்குமாம்!! »
« இதைச் செய்ய
மில்லியன் கணக்காக வாரி இறைக்கப்படுகிறதாம் ! »
« அப்பிடியா? » என்றதோடு யாருமே வாயைத்
திறக்கவில்லை.
இத்தருணத்தில் எங்களது
இன்னொரு நண்பரும் அங்கு இணைந்து கொண்டார். வந்த நண்பர் செவியில் இந்த உரையாடல் தெளிவாக
விழுந்திருந்தது போலும்.
« திருக்கோணேஸ்வரத்தில்
பெரிய சிவபெருமான் சிலை வைத்தாயிற்றே! அந்தமாதிரி….. ! சாந்த-
வசீகரமாகத் தொலைவிலேயே காட்சியளிக்கிறாராமே!! » என்றார் வாயை உறிஞ்சியவாறு
பெருமிதத்தோடு.
ஏதுமே பேசாது தோசையில்
குறியாயிருந்த எனக்குள் பொறி தட்டியது. « சாந்தமான
முகமாக சிவனது தோற்றமா? » ஆச்சரியத்துடன்
எனது சொற்கள் வெளிப்பட்டிருக்க வேண்டும்.
« ஓமோம்!!
அப்படியொரு சாந்தமான முகம் பொன்னிறத்தில் பிரகாசிக்குதாம்!! வேணுமென்றால் போனவரிட்ட
கேட்டுப்பாரும்! » நண்பர்
புளங்காகிதத்துடன்.
எனது முகம் தானாகவே திரும்பி
விபரண நண்பர் முகத்தைப் பார்த்தது.
« ஓமோம்! மச்சான்....
தூரத்திலேயே பொன்னிறத்தில பளிச்செனத் தெரிகிறது. »
« அப்ப அவருடைய
கழுத்திலே படமெடுக்கிற பாம்பு இருக்கவில்லையா? » என்றவாறு நான் அவரைப் பார்க்க விக்கித்து வாயடைத்துப்போனார். தொடர்ந்து
« கழுத்திலே படமெடுக்கிற பாம்பை வைத்துக் கொண்டு முகத்தை எப்படி வைத்தாலென்ன… ? » என முடித்தபோது குபீரெனக் கிளம்பியது சிரிப்பொலி!
« கழுத்திலே படமெடுக்கிற பாம்பை வைத்துக் கொண்டு முகத்தை எப்படி வைத்தாலென்ன… ? » என முடித்தபோது குபீரெனக் கிளம்பியது சிரிப்பொலி!
கொஞ்சம் பொறுத்து நான்
« இப்ப இந்த
கடைவாசலிலே சாந்தமான முகத்துடன் கழுத்தில படமெடுத்த பாம்போடு ஒரு ஆள் வந்தால் என்ன
நடக்கும்?...... அவனுடைய முகத்தைப் பார்க்க இந்தக் கடைக்காரன் கூட இங்கிருக்க மாட்டான். » என்றேன். இந்தக் கற்பனைக்
காட்சியிலேயே அனைவரும் மனம்விட்டுச் சிரித்தனர்!!
(பிரமாண்டமான புத்தர் சிலை லெசான் - சீனா)
000 000
« ‘வடக்கு - கிழக்கு இலங்கையில்
குறிப்பாக தமிழ்பேசும் பகுதிகளில் தெருச் சிலைகள் முன்பெல்லாம் இருந்ததில்லை. யாழ்ப்பாணத்தில்
இருக்கும் வள்ளுவர் சிலையும், ஆறுமுக நாவலர் சிலையும், ஓளவையார் சிலையும், உரும்பிராயில்
சிவகுமாரன் சிலையும் ஓரளவு பிரபல்யமாக இருந்திருக்கின்றன. துரையப்பா அரங்கு முன்றலில்
தந்தை செல்வா சிலையும் இருந்திருக்கிறது. கடவுள்களது சிலைகள் தெருக்களில் இருந்ததே
கிடையாது. பிள்ளையார் சிலை மட்டும் இதற்கு விதிவிலக்கு, ஆனாலும் இவைகூட ஒருபோதும் இந்தியா
மாதிரியாக இருந்ததே இல்லை. சிலையை அடையாளமிட்டு பாதை சொல்லும் வழக்கும் எமக்கு இருந்ததில்லை.
தென்னிலங்கை இதற்கு விதிவிலக்கு,
எங்கும் புத்தர் சிலைகளைக் காணலாம். இதன் நீட்சியாக இப்போது வட இலங்கையையும் வியாபிக்கத
தொடங்கியாயிற்று.
இப்போது மருதனார்மடத்திலே
அனுமான் நிற்கிறார். திருக்கோணேஸ்வரத்தில் சிவன் இருக்கிறார். இன்னும் இன்னும்....
அங்கு இராமனுக்கு கோயில்
– இங்கு சீதைக்குக் கோயில்… அப்ப மனிதருக்கு என்னதான் செய்யப்போகிறார்கள் ?
21ம் நூற்றாண்டின் தொலைத்
தொடர்பின் விரிவான புத்தாயிர விஞ்ஞான யுகத்தில் மனிதன் எங்கேயோ பயணமாகிக் கொண்டிருக்கிறான்....
அடப் போங்கடா.....!!‘ » நினைவுகளுடன் மௌனமாகினேன்.
1. நன்றி - படங்கள் கூகிள் இணைய வழங்கி
2. லெசான் நகர பிரமாண்டமான புத்தர் சிலையின் முகத் தோற்றம்.
3. இச்சிலை 71 மீட்டர் உயரமும் 28 மீட்டர் அகலமும் உடையது. 1996 ஆண்டு முதல் யுனேஸ்கோவால் முக்கிய வரலாற்றுத் தடமாகப் பதிவுபெற்றிருக்கிறது.
4. பம்மல் கே சம்பந்தம் திரைபடக் காட்சி (கழுத்தில் பாம்புடன் கமல்)
- முகிலன்
பாரீஸ்
14.09.2013
Tweet
No comments:
Post a Comment