Saturday, 28 September 2013

ஹண்டி எஸ். பேரின்பநாயகம் பகுதி -1

சுவட்டுச் சரம் -2
நம் அறிவுப் பயணத்தின் திசை காட்டிகள் 2
ஹண்டி எஸ். பேரின்பநாயகம்
பகுதி -1

இலங்கைக்குப் பூரண சுதந்திரம் வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் அதிபர் ஹண்டி
-    கல்வியாளர் பொ. கனகசபாபதி (நூல் : எம்மை வாழ வைத்தவர்கள்)

v புவிசார் வாழ்வில் சமைந்து போன மானிட இருப்பின் சொந்தக்காரர்தானே நாம். இந்த வாழ்வில் மீட்டுப்பார்க்கும் பல சுவையான சந்திப்புகள் தரும் ஆற்றுப்படுத்தலை வர்ணிக்க வார்த்தைகள்தான் ஏது!
கனெக்ஸ் என பலராலும் உரிமையுடன் அழைக்கப்படும் மகாஜனாக் கல்லூரி முன்னாள் அதிபர் . பொ. கனசபாபதி அவர்களின் சமூகப் பிரக்ஞையும், தான் காணும் சமூகத்தின தேவையை அறிவுபூர்வமாக அலசிப் பக்குவமாக வழிகாட்டும் பாங்கும், தன்னிடம் கிடக்கும் விஞ்ஞான அறிவை கல்லூரிச் சுவர்களைத் தாண்டியவாறு சொல்லிக்கொடுக்க முனையும் பேரவாவாலும் என்னைப் பெரிதும் கவர்ந்தவர். இதனால்தானோ என்னவோ எத்தனையோ அதிபர்களைக் காணுற்ற சமூகத்தில் ஓய்வுபெற்ற் பின்னரும் 'அதிபர்' என உரிமையுடன் சுட்டப்படுகிறார். புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர் புலம்பெயர் புதிய சூழலில் நம்மவர்கள் தமது வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள தகுநல் ஆலோசகராகவும், ஆசானாகவும் இருக்கிறார். கல்லூரியை விட்டு வெளியே வந்தபின்னர் சமூகத்தின அறிவுத் தேடலுக்கான பதிவுகளாக இவரது ஆக்கங்களை நோக்கலாம்.
v இலங்கைத் தமிழர்களின் அறிவுத் தேடல் வரலாற்றில் முக்கியமான பங்கை வகித்தவர்கள் ‘ஆசான்களாக’ மதிக்கப்படும் ஆசிரியர்களும் அவர்களை செல்நேர்த்தியாக நகர்த்திய அதிபர்களும்தான். இவர்களின் வழிகாட்டுதலால்தான் பெரும்பாலான நிலம் மற்றும் கடல் தொழில்சார் குடும்பப் பின்னணியிலிருந்து கல்வி அறிவுபெற்ற சமூகம் வெளிவந்திருக்கிறது. நம்முன்னோர் இட்டுத்தந்த அந்த அறிவுத் தேடல் சாலையில்தான் இன்று நாம் பயணத்தைத் தொடர்கிறோம். இதனால் ‘எம்மை வாழ வைத்தவர்கள்’ என நினைவு மீட்கப்படும் பெரும் வாய்ப்பை வரலாறு தந்திருக்கிறது.
v தம்மை உருவாக்கியவர்கள் தொடர்பான நன்றி பாராட்டுதலை எங்களில் பலர் தொடர்ந்த வண்ணமே காலம் கடந்து செல்கிறது. இன்று புவி எங்கணும் விரவியவர்களாகவுள்ள ஈழத்தமிழர்களது வாழ்வு சில தடையங்களைப் பதிந்தவாறே பயணிக்கிறது. இதில் நன்றி பாராட்டும் நிகழ்வுகளாகத் தொடரும் பழைய மாணவர் சங்கங்களின் தாம் கற்ற நிறுவனங்களுடனான ஆக்கபூர்வமான உதவிகள் வழங்கும் செயலும் ஒன்றாகும். நாட்டை விட்டகன்று 30 ஆண்டுகள் கடந்தும் நீண்டு செல்லும் புலம்பெயர்ந்த வாழ்விலும் தம்மோடு வளரும் அடுத்த தலைமுறையினருக்கு தமது அடையாளமாக தாம் கற்ற ‘பாடசாலை’களை நினைவுறுத்திச் செல்லும் ‘பழைய மாணவர் ஒன்றியங்களின்’ மதிப்பார்ந்த செயல்களைக் காணலாம்.

அவர் கொக்குவில் இந்துக்கல்லூரியில் அதிபராக சேவையாற்றியது வெறும் பத்து ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை. அவர் அப் பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்று ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் கழிந்து விட்டன. அவர் நம்;மை விட்டுப் பிரிந்து அமரராகியும் முப்பது ஆண்டுகளாகியுள்ளன. ஆனால் அவரது நூற்றாண்டினை நினைவு கூர்ந்து ஒரு மலரையும் அப்பாடசாலையின் பழையமாணவர் வெளியிட்டுள்ளார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? ஒருவரின் சேவைக்காலத்தின் அளவு அல்ல முக்கியம். அவரது சேவையின் தரம் தான் முக்கியம் என்பது புலனாகிறது. அவர் அக்காலத்தில் ஆற்றிய பணி மாணவர்களின் உள்ளத்தில் இத்தனை தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாலா அல்லது  இத்தனை விசுவாசம் காட்டுதல் அப்பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான தனித்துவமா? இரண்டுமே என எண்ண வைக்கிறது!
ஹண்டி மாஸ்ரர் அவர்கள் 1899ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ந் திகதி பிறந்தார். தந்தையார் மானிப்பாயினைச் சேர்ந்த ஆசிரியர் சரவணமுத்து அவர்கள். பிறப்பாலே கிறி;ஸ்த்தவராகிய ஹண்டி அவர்கள் தனது உயர் கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்றார். அங்கே பட்டதாரி வகுப்புகள் நடைபெற்றன. இலண்டன் சர்வகலாசாலைப் பட்டதாரியாக ஹண்டி அவர்கள் 1929ஆம் ஆண்டில் தேறினார். யாழ்ப்பாணக் கல்லூரியிலேயே தனது ஆசிரியப் பணியினை ஆரம்பித்தார். ஆங்கிலம் மற்றும் இலத்தீன் மொழிகளைப் பயிற்றுவித்தார். ண்டி அவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவராக இருந்த சமயம் அங்கே அதிபராக விளங்கியவர் சங்கைக்குரிய பிக்னெல் பாதிரியார். அவர் ஒரு பெரும் கனவான். கருத்துச் சுதந்திரம் என்பதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டியவர். ஹண்டி  அவர்கள் மேல் அதீத நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்டவர். ஆகவே, அவரது வழிகாட்டலில் ஹண்டி மிக உயர்ந்த சிந்தனாவாதியாக வளர்ந்ததில் ஆச்சரியமில்லை. எனவே, ஹண்டி அவர்கள் ஆசிரியப் பணியில் அமர்ந்ததும் மாணவர்களுக்குக் கல்வி போதித்ததுடன் சிறந்த உதாரண புருடராயும் மிளிர்ந்தார். அவருக்கென ஒரு மாணவர் வட்டம் உருவானது. அதன் விளைவாகத் தோன்றியது தான் மாணவர் காங்கிரஸ் (Student Congress).
இளைஞர் காங்கிரசும்  அரசியல் செயற்பாடுகளும்:
ஓறேற்றர் சுப்பிரமணயம்? A.E. தம்பர், P. நாகலிங்கம் போன்றோர் யாழ்ப்பாணக் கல்லூரியில் மாணவர்களாகச் சேர்ந்து கல்வி கற்றனர். ஹண்டி அவர்கள் அப்போது அங்கே ஆசிரியராக இருந்தார். ஹண்டியினது ‘மாணவர் காங்கிரஸ் அவர்கள் யாபேரையும் கவர்ந்தது. இவர்கள் அதில் சங்கமமாயினர். விரைவில் மாணவர் காங்கிரஸ் பாடசாலை மட்டத்துடன் நின்றுவிடாமல் பாரிய இளம் சமூகத்தினையும் அரவணைத்தiமாயல் இளைஞர் காங்கிரசாகப் (Youth Congress) பரிணமித்தது. அதன் வேகமான வளிரச்சியின் விளைவால்  இளைஞர் காங்கிரஸ் ஒர் பேரியக்கமாகச் செயற்படத் தொடங்கியது. இளைஞர் காங்கிரஸ் நான்கு பிரதான குறிக்கோள்களுடன் செயற்பட்டது.
1.     அந்நிய ஆட்சியிலிருந்து  விடுபட்டு இலங்கை பூரண சுதந்திரம் பெற்ற நாடாக விளங்க வேண்டும்
2.     தமிழ்ச் சமூகத்தின் புற்று நோயாகப் பீடித்திருக்கும் சாதிபேதம் முற்றாகவே ஒழிக்கப் பட வேண்டும.
3.     ஏழை மக்களது வாழ்க்கைத் தரம் கௌரவமான நிலைக்கு உயர்த்தப் பட வேண்டும்
4.     பாடசாலைகளில் மாணவர்களுக்கு அவரவர் தாய் மொழியிலேயே கற்பித்தல் நடைபெற வேண்டும்.
எனது பெருமதிப்பிற்குரிய அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம் மிக அழகாக « The story of the Congress is almost the story of Handy Master’s life » என்கிறார். ஹண்டி பற்றி அவர் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன். « அந்தக் காலத்திலே நினைக்கக் கூட முடியாத  தேசிய உடையினை, அதுவும் கதரினாலான உடையினையே ஹண்டி அவர்கள் கொழும்பில் இருக்கும் பொழுது கூட உடுக்கத் தவறியதில்லை. ஹரிஜன சமூகத்து இளைஞன் ஒருவனையே தனது உதவியாளராக வைத்திருந்தார். சங்கைக்;குரிய பிக்னெல் பாதிரியார் அவர்கள் ஹரிஜன சமூத்து மாணவர்களைப் பாடசாலையில் சேர்த்தபொழுது அதனை எதிர்த்து ஏனைய ஆசிரியர்கள் பகிகரித்த போது ஹண்டி மாஸ்ரர் மாத்திரமே பிக்னெல் அவர்களுடன் இருந்தார். » என ஒறேற்ரர் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
கல்யாணசுந்தர முதலியார், சத்தியமூர்த்தி P. de S. குலரத்தினா, S.W.R.D பண்டாரநாயகா, Dr N.M. பெரேரா, பிலிப் குணவார்தனா போன்ற இந்திய இலங்கை பிரபலங்களை அழைத்து தங்களது கொள்கைப் பிரசாரக் கூட்டங்களை இளைஞர் காங்கிரஸ்  நடத்தியதுடன் தொடர்ந்து 15 வருடங்கள் வருடாந்தக் கூட்டங்களையும் பெரும் மாநாடாக நடத்தியுள்ளது. ஒவ்வொரு வருடாந்தக் கூட்டத்திலும் இலங்கைக்குப் பூரண சுதந்திரம் வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  வருடாந்தக் கூட்டங்களில் சம பந்திபோசனம் முதன்மை பெற்றது.
மிகப் பிரமாண்டமாக ஓலைக் கொட்டில்கள் போடப்பட்டு அங்கே நடத்தப்பட்ட இக் கூட்டங்கள் சாதிப் பக்தர்களாலும், வேதாகம சமாஜத்தினராலும் பல வகைகளில் எதிர்க்கப்பட்டன. கொட்டில்கள் தீக்கிரையபாக்கப்பட்ட சம்பவங்களும்,  கூட்டத்துக்கு வந்தோர் குடிப்பதற்கு நீர் எடுக்கும் கிணறுகளிலே பாம்புகளைக் கொன்று போடப்பட்டதும், கல்லெறிந்து ஆட்களை விரட்டியது போன்ற  கேவலமான பல சம்பவங்கள் இளைஞர் காங்கிரசை வேரோடு அழிப்பதற்கான முயற்சிகளாகும்.
இளைஞர் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் யாவற்றிலும் மிகவும் பிரதானமான ஆண்டாக 1931ம் ஆண்டு  நிலவுகிறது. அவ்வாண்டினிலே சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. டொனமூர் ஆணைக்குழு வளங்கிய சலுகைகள் பூரண சுதந்திர வேட்கையைத் தணிப்தாயிருக்கவில்லை. ஆகவே  சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என  இளைஞர் காங்கிரஸ் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. தேர்தலுக்கு நிற்க முற்பட்டோரை ஹண்டி அவர்கள் தலைமையிலான இளைஞர்கள் நேரடியாகவே சென்று  தேர்தலுக்கு மனுச் செய்ய வேண்டாமென இறைஞ்சினர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் எனலாம்.  மன்னார் தவிர யாழ்ப்பாணத்தின் ஏனைய நான்கு தொகுதிகளுக்கு எவருமே நியமனப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இது இளைஞர் காங்கிரஸ் நிகழ்த்திய சாதனை என சிங்களத் தலைவர்கள் கூட கூறியதுடன் அதில் தம்மையும் இணைத்துக் கொண்டதன் விளைவாக  அகில இலங்கை இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பே உருவாகுவதற்கும் வழிவகுத்தது. தேர்தல் பகிஷ்காரம் சாதுரியமானதா என நீண்டகாலம் சர்ச்சை நடந்த போதும், டொனமூர் ஆணைக்குழு கொண்டு வரவிருந்த சீர்திருத்தங்கள் மக்களது அபிலாசைகளை ஈடுசெய்யமாட்டாது என இளைஞர் காங்கிரசின் இந்தச் செயற்பாடு உணர்த்தியது என்பதை மறுக்கமுடியாது.
ஹண்டி அவர்களின் அழைப்பின் பேரில் மகாத்மா காந்தி அவர்கள் 1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  யாழ்ப்பாணம் வந்தார். நவம்பர் 26ந் தேதி இளைஞர் காங்கிரசில் அவர் ஆற்றிய உரையின் போது, « You have taken upon yourselves and very rightly the credit of bringing me to this fair island » எனக் கூறியதிலிருந்து மாகாத்மாவின் இலங்கை வருகைக்கு மூல காரணர் ஹண்டி என்பது புலனாகிறது. « Gandhiji’s visit to Jaffna was the most succesful in Ceylon and this was to a great extent due to Mr. Perinpanayagam » என காந்திஜியின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிய  மாஹாதேவ் தேசாய்  அவர்கள் எழுதியமை இதனை ஊர்ஜிதம் செய்கிறது.

வெ. இளங்குமரன் அவர்கள் எழுதிய ‘வரலாறு சொல்லும் பாடம்’ எனும் புத்தகத்தில், « 1927ல் இலங்கை வந்த காந்திஜி ‘ எந்தவொரு சிங்களவரது வாயிலும் இருந்து சுதந்திரம் என்ற பேச்சைக் கடந்த 15 நாட்கள் நான் கேட்டதில்லை. இங்கு வந்த பிறகு தமிழர்களின் வாயிலிருந்து தான் சுதந்திரம் என்ற வார்த்தையைக் கேட்கிறேன் என்றார் » எனக் குறிப்பிட்டுள்ளார். தனிச் சிங்களச் சட்டம் வந்ததிற்குக் கூட  ஹண்டியும் அவரது இளைஞர் காங்கிரசும் தான் காரணமாக அமைந்தது எனச் சிங்களப் பேராசிரியர் ஒருவர் திரு A.E. தம்பர் அவர்களுக்கு ஒரு சமயம்  கூறினாராம். அது வேடிக்கையாகக் கூறப் பட்டதோ அல்லது வினயமாகக் கூறப்பட்டதோ தெரியவில்லை. அவரது கருத்துப் படி தாய்மொழிக் கல்வி என்ற இளைஞர் காங்கிரஸ் ஒலித்தமையே சிங்களப் பேரின வாதிகளுக்குத் தனிச் சிங்களம் என்ற எண்ணத்தினைக் கொடுத்திருக்கலாம். « A univesity professor and an M.P once told me that ha dit not been for the evil agitation carried it by Nesiah, myself and our friends inthe ACUT, English would have continued as the medium of education and administration and that it would not have occurred to our Sinhalese brotheren to demand Sinhala only ! » Handy S. Perinpanayagam Memories – A.E. Thamber

யாழ்ப்பாணக் கல்லூரியில் ஹண்டி:
‘ஹண்டி மாஸ்ரர்’, பொதுவாகவே அவரை அப்படித்தான் அவருடன் பழகியவர்கள் அழைப்பார்கள், அத்தனை சிறப்பானது அவரது ஆசிரியப் பணி. ஆசிரியப் பணியினை அவர் நேசித்தார். மாணவர்கள் அவரை பூசித்தனர். 1933ல் சட்டம் பயில வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆசிரியப் பணியினை விட்டு விலகி சட்டம் படிக்கச் சென்றார் ஆனால் ஒரு வருடத்தில் அதனை விட்டுவிட்டு மீண்டும் ஆசிரியப் பணிக்கே வந்து விட்டார். யாழ்ப்பாணக் கல்லூரியில் ஹண்டி அவர்களின் மாணவராக இருந்த கார்த்திக்கேசு ஜெகநாதன் அவர்கள், ஹண்டி அவர்கள் மிகச் சிறந்த ஆசிரியராகவும் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியர்களில் அவரையும் ஒருவராகக் கொள்ள முடியும் எனவும் எழுதியுள்ளார். « மாணவர்கள் அவரை  ஒரு தத்துவஞானியாக, வழிகாட்டியாக, நண்பராகக் கருதினர்.  ஆங்கிலத்தில் மிக்க புலமையுடைய ஹண்டி அவர்கள் சேக்ஸ்பியரில் ஒரு வல்லுனராகக் கருதப்பட்டவர். ஹண்டி அவர்களுக்கு ஒரு தனித்துவம், அவர்கள் ஒரு போதும் வகுப்புகளுக்கு நேரத்திற்கு வந்ததுமில்லை. வகுப்புகளை விட்டு மணியடித்தபோது வெளியேறியதும் இல்லை » என்கிறார் திரு. ஜெகநாதன்
மகாத்மா காந்தியினது போதனையினைப் பின்பற்றிய காரணத்தினால் எப்பொழுதும்  கைத்தறியினால் நெய்யப்பட்ட தேசிய உடையினிலேயே  உலவிவரும் ஹண்டி அவர்கள் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய அகில இந்திய காங்கிரசினதும் அதன், « வெள்ளையனே வெளியேறு » என்ற கோஷத்திலும் அதீத பற்றுடையவராக விளங்கினார். யாழ்ப்பாணக் கல்லூரி அமெரிக்கன் மிஷனறிகளால் நடத்தப்பட்டு வந்தது. எனவே, ஹண்டி அவர்களின் பிரிட்டிஷ் ஏஹாதிபத்தியத்துக்கு எதிரான போக்கு அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஹண்டி ஒரு சிறந்த ஆசிரியர் என்பதில் அவர்களுக்கு இரு வேறு கருத்துக்கள் இருந்ததில்லை. ஆனால் அவரது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் தீவிரவாதம் அவர்களுக்குப் புளியைக் கரைத்தது என்பது தான் உண்மை. இதற்குச் சிகரம் வைத்தது போன்று அமைந்தது 1937ல் ஜெவஹர்லால் நேருவினது முதல் முறையான இலங்கை வரவு. நேரு அவர்கள் கூட்டங்களில் இளைஞர்களைத் திசை திருப்பும் வண்ணம் புரட்சிகரமாகவும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராவும் ஆவேசமிக்க உரை நிகழ்த்துவார் என்பதனை அரசாங்கம் அறிந்ததே. எனவே, முன் எச்சரிக்கையாக அரசாங்க அதிபருக்கும், கல்வி அதிபதிக்கும் அத்தகைய கூட்டங்கள் நடைபெறாது  தடுக்கும் முயற்சியை மேற்கொள்ளுமாறு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. பாடசாலைகளுக்கும் மறைமுகமான எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஹண்டி அவர்கள் இந்த சுற்று நிருபங்கள் எதனையும் சட்டை செய்யவில்லை. வட்டுக்கோட்டைச் சந்தியிலேயே மேளவாத்தியம், இன்னிசை முழங்க ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு மகத்தான வரவேற்பு கொடுத்ததுடன் நீண்ட ஒரு பவனிiயும் ஏற்பாடு செய்தார். அது வெகு விமரிசையாக நடைபெற்றது. ஹண்டி அவர்களுக்கு மன நிறைவான நிகழ்ச்சி, மக்களுக்கு  ஆரவாரமான கொண்டாட்டம். ஆனால் அரசுக்கு?
அரசு ஆணைக்கு எதிராக இயங்கிய ஹண்டியை சும்மா விடலாமா?  அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கு மாறு கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டளை பிறந்தது. கல்லுரியின் அதிபராக விளங்கியவர் சங்கைக்குரிய பிக்னெல் பாதிரியர் அவர்கள். துரதிருஷ்டவசமாக அச்சந்தர்ப்த்தில் அப்பெருமகனார் விடுப்பில் அமெரிக்கா சென்றிருந்தார். தற்காலிக அதிபர் செய்வதறியாமல் திகைத்தார். இருதலைக்கொள்ளி எறும்பானார். நடவடிக்கை எடுக்காமல் இருந்து அரசின் குரோதத்தைச் சம்பாரிப்பதா அல்லது மிகச் சிறந்த ஆசிரியர் ஹண்டியை இழப்பதா என்ற மனப் போராட்டம்.  அரசின் வெறுப்பினை எதிர் கொள்ள அவர் விரும்பவில்லை. எனவே ஹண்டி அவர்களைப் பணிநீக்கம் செய்தார். அரசினைத் திருப்திப்படுத்தினார். ஆனால் அடாத செயல் இது என கிராமம் ஆர்த்தெழுந்தது. விடுப்பில் அமெரிக்கா சென்றிருந்த அதிபர் பிக்னெல்  ஒரு சில வாரங்களில் ஊர் திரும்பியமை பிரச்சினை பூதாகாரமாகாமல் போனதற்குக் காரணமாகியது. இந்த நியாயமற்ற செயல் கண்டு குமுறிய பிக்னெல் பாதிரியார் ஹண்டி அவர்களை அழைத்து வந்து மீண்டும் கல்லூரியில் ஆசிரியப் பணியில் தொடர வைத்தார். அரசாங்கமோ, கல்வி அதிபதியோ பார்த்துப் பரிதவிக்க முடிந்ததேயன்றி பழிவாங்கலை ஈடேற்ற முடியவில்லை. ஹண்டி அவர்களினது முயற்சிகள் அத்தனைக்கும் உறுதுணையாக நின்ற பிக்னெல் பாதிரியார் அவர்கள் அடுத்த இரண்டு வருடங்களில் அமரராகிவிட்டார்.  கல்லூரிச் சூழல் ஹண்டி அவர்களின்  போக்குக்கு முன்னிருந்தது போல பாதிரியாரினது மறைவுக்குப் பின்னர் சாதகமாக அமையவில்லை. ஓரளவுவ்கு விரக்தி மேலிட்டமையால் சட்டக்கல்வி கற்பது பற்றி ஹண்டி அவர்கள் மீள ஆலோசனை செய்தார். சட்டம் கற்று வழக்குரைஞர் ஆகவேண்டும் என்ற ஆசை மேலோங்கியதன் காரணமாக 1943ஆம் ஆண்டு தனது ஆசிரியப் பணியினைத் துறந்தார். யாழ்ப்பாணக் கல்லூரிக்கு ஒரு மாணவராக, ஆசியராக ஹண்டி அவர்களுக்கு ஏறக்குறைய 30 ஆண்டுகள் தொடர்பு இருந்தது. அவர் தனது தொடர்பினை 1943ல் துண்டித்துக் கொண்டார். ஹண்டி அவர்களை யாழ்ப்பாணக் கல்லூரியினை விட்டு விலக வேண்டாமெனப் பலர் வற்புறுத்தினார்கள். அதில் பிரதானமனவர் உடுவில் பெண்கள் உயர்நிலைப் பாடசாலை அதிபராக இருந்த செல்வி L.G. Brookwalter அவர்கள். ஆனால் ஹண்டியினால் சங்கைக்குரிய பிக்னெல் பாதிரியார் இல்லாத ஒரு சூழலிலே மனநிறைவுடன் தன்னால் பணியாற்ற முடியாது என்பது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியமையால் பதவி விலகலைத் தவிர வேறுவழியில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தார். எனவே விலகினார். சட்டம் பயின்றார். வழக்கறிஞர் எனும் புதுக்கோலமெடுத்தார்.
« ஹண்டி அவர்கள் யாழ்ப்பாணக் கலலூரியின் அதி அற்புதமான ஒரு தயாரிப்பு. ஆனால் அதே சமயம் அப்பாடசாலையின் பிரபலமான புரட்சியாளராகவும் மிளிர்ந்துள்ளார். ஒரு கிறிஸ்தவராகப் பிறந்து மிகவும் தலைசிறந்த ஒரு கிறிஸ்தவக் கல்லூரியினால் ஊட்டி வளர்க்கப்பட்டு பழமைக்க எதிராகப் புரட்சிக்கொடி உயர்த்தி சுயாதீனச் சிந்தனை உடையவராக ஈற்றில் ஒரு பெயர்பெற்ற இந்துக் கல்லூரியின் அதிபராக வந்த ஒருவர் ஹண்டி பேரின்பநாயகம் » எனப் பிரபல பத்திரிகையாளர் சிவநாகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அரசியல்வாதியாக ஹண்டி:
இடது சாரி இயக்கம் யாழ்ப்பாணத்தினைப் பொறுத்த மட்டிலே என்றுமே மக்களின்  அபரிமிதமான ஆதரவு பெற்ற இயக்கமாக என்றுமே இருந்ததில்லை. தேசத்தின் ஒருமைப்பாடு, அங்கு வாழ்கின்ற மக்களின் ஐக்கியம் மற்றும் பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம் என்பதையே போதித்து வந்த இடதுசாரி இயக்கம், அதன் மூலம் தான் தமிழ் மக்களினது அபிலாசைகளை ஈட்டமுடியும் என்ற நம்பிக்கையையே கொண்டிருந்தது. ஆனால் தமிழ்த் தேசியவாதம் இதற்கு நேர்மாறான போக்கினைக் கடைப் பிடித்தது. மக்களின் அறிவு பூர்வமான சிந்தனையை  மொழி உணர்ச்சி ஆட்கொண்டமையால் இடதுசாரிக் கொள்கைகள் மக்கள் மனதினைப் பெரும்பாலும் கவர முடியாது போயிற்று. இடதுசாரி இயக்கத்தில் கொள்கைப் பற்றாளர்களும் சிறந்த அறிவுஜீவிகளுமான தோழர்கள் கார்த்திக்கேசன், அ.வைத்திலிங்கம், V. பொன்னம்பலம், P. நாகலிங்கம், M.C சுப்பிரமணியம், P. கந்தையா, V. காராளசிங்கம் போன்றோர் நடத்திய அரசியல் கூட்டங்கள் மக்களைப் பெரும் தொகையினில் ஈர்த்தன என்பது உண்மையே. ஆனால்  பாராளுமன்றத் தேர்தல் என்று வந்தபோது அவை வாக்குகளாக மாறவில்லை. அவர்களது உரைகளில் தேங்கிய நியாயத்தினை மக்கள் உணர்ந்தார்கள் எனினும் தேர்தல் என வந்தபோது மக்கள் கண்முன்னே நின்றது தமிழ் உணர்வு மாத்திரமே. யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரித் தலைவர்கள் என்றுமே வெற்றி பெற முடிந்ததில்லை. பருத்தித்துறைத் தொகுதியிலே தோழர் P. கந்தையா அவர்கள் பொதுவுடமைக் கட்சியின் சார்பாகத் தேர்தலில் நின்று 1952ல் வெற்;றி பெற்றது உண்மையாயினும் அது அவரது கொள்கை இரீதியான வெற்றி என்பதிலும் பார்க்க அனுதாப அலையினால் ஏற்பட்ட வெற்றி என்றே நான் கருதுகிறேன்.  இலங்கையின் சரித்திரத்திலேயே அற்புதமான, ஆற்றல் மிக்க தலைவர்களாகவும், பேச்சாளர்களாகவும், ஒப்பற்ற அறிவுஜீவிகளுமான கலாநிதிகள் N.M. பெரேரா, கொல்வின் .ஆர்.டி. சில்வா, மற்றும்  பீற்றர் கெனமன், S.A விக்கிரமசிங்கா, எட்மண்ட் சமரக்கொடி, லெஸ்லி குணவார்த்தனா போன்ற இடதுசாரித் தலைவர்கள் யாழ்ப்பாணம் வந்து கொள்கைப் பிரசாரக் கூடட்டங்கள் நடத்திய போது கேட்போர் கூடங்கள் நிறையும், கரகோசம் வானை எட்டும். ஆனால் கூட்டம் முடிந்ததும் அங்கே கேட்டது அத்தனையுமே காற்றில் கரைந்துவிடும். வீடு வரை கூடச் செல்ல மாட்டாது.
ஹண்டி அவர்கள் இடது சாரிக் கொள்கையில் ஊறித் திளைத்தவர். இடதுசாரித் தோழர்கள் பலரை N.M, கொல்வின் என  முதற்பெயர் சொல்லி அழைத்துப் பேசும் அளவுக்கு நெருக்கமானவர். ஹண்டி அவர்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற ஆண்டு 1960. ஆனால் அவருக்கு அப்பொழுது சேவைக்காலம் பத்து ஆண்டுகள்  முடிவு பெறவில்லை. எனவே அவர் அரசு ஓய்வூதிய விதிப் பிரகாரம் ஓய்வூதியம் பெறுவதற்கு அருகதை அற்றவர். ஆகவே அவருக்கு ஒரு நிதி அளிப்பு செய்வதற்காக ஆசிரியர் சங்கம் முயற்சியை மேற்கொண்டது. அப்போதைய ஸ்ரீமாவோ அரசில் நிதி அமைச்சராக இருந்தவர் கலாநிதி N.M. பெரேரா அவர்கள். அவர் இதை அறிந்ததும் உடனடியாகவே பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினைப் பெற்று விதியை மாற்றி அமைத்து ஹண்டி அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்வு வழி வகுத்தார். அத்தனை நெருக்மான தொடர்பு அவருக்கு ஹண்டியுடன் இருந்தது. ஹண்டி அவர்களுக்க அரசியலில் ஈடுபடும் அவா இருந்தது. ஆனால் கட்சி அரசியலில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பாதவர். கடைசி வரை தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.
ஹண்டி அவர்களின் அரசியல் ஆர்வம் இரண்டு முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தது. ஆனால் இரண்டு முறைகளும் அவர் படுதோல்வி கண்டார். வைப்புத் தொகை பணத்தினையே இழக்க நேர்ந்தது.  இடதுசாரிக் கட்சிகள் அத்தேர்தல்களில் தமது ஆதரவாளர்களையோ, அல்லது கட்சிப் பிரதி நிதிகளையோ வேட்பாளர்களாக நியமித்தமையால் ஹண்டியினுக்கு இடதுசாரிக் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ளோரின் வாக்குகள் கூடக்கிட்டவில்லை. அதோடு மாத்திரமல்லாமல் மிக்க வாக்குசாதுரியம் மிக்க இடதுசாரித் தலைவர்களின் பிரசார ஆவேசப் பேச்சுக்களும் கிடைக்கவில்லை.
இவை எல்லாவற்றினுக்கும் மேலாக ஹண்டி அவர்கள் தேர்தலில் நிற்பதற்கு தேர்வு செய்த ஆண்டுகள் முக்கியமானவை எனலாம். 1947ஆம் ஆண்டினிலே நடைபெற்ற தேர்தலில் ஹண்டி அவர்கள் முதல் முதலாக வட்டுக்கோட்டைத் தொகுதியுpல்; போட்டியிட்டார். ஜி;.ஜி பொன்னம்பலம் அவர்கள் டொனமூர் ஆணைக்குழு முன் தோன்றி ஐம்பதுக்கு ஐம்பது என வாதிட்டு தோல்வியுடன் திரும்பி, அதை வைத்தே தமிழ்மக்களின் உள்ளங்களை ஆக்கிரமித்து தமிழர்களின் ஏகபோக தலைவன் என்று அரியாசனம் ஏறிய காலம். தமிழ்க் காங்கிரஸ்சின் பொற்காலம். வட்டுக்கோட்டைத் தொகுதியில் தமிழ் காங்கிரஸ் சார்பாக திரு. K. கனகரத்தினம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஹண்டி உட்பட ஐவர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். திரு வைத்திலிங்கம் மாத்திரம் பொதுவுடமைக் கட்சி சார்பாகப் போட்டியிட்டார். ஏனையவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். கொழும்பு ‘ஆனந்தபவன்’ உணவக உரிமையாளர் உருத்திரா இலங்கை சமசமாஜக் கட்சியின் ஆதரவாளராகப் போட்டியிட்டார். ஆகவே இடது சாரி ஆதரவாளர்கள் ஹண்டியின் பக்கம் இல்லை.
எங்கு பார்த்தாலும் ஜி.ஜியும். கே.கேயும் என்றதே பேச்சு. கனகரத்தினம் அவர்கள் அமோக வெற்றி பெற்றார்கள். எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் வைப்புப் பணத்தினையே இழந்தனர். அதன் பின்னர் நடந்தது சரித்திரம். கொள்கையைக் காற்றில் பறக்கவிட்ட தமிழ்க் காங்கிரஸ் ஒரு மந்திரிப் பதவிக்காகவும் இரு பாராளுமன்றச் செயலர் பதவிக்காகவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமித்தது. திரு கனகரத்தினத்திற்கும் ஒரு எலும்பு கிடைத்தது. அது கல்வி அமைச்சின் பராளுமன்றச் செயலர் பதவி. கட்சியினது கொள்கைப் பற்றுடையவர்கள் திரு செல்வநாயகம் தலைமையில் கட்சியை விட்டு வெளியே வந்தனர். தமிழரசுக்கட்சியும் பிறந்தது.
பின்னர், ஒருசமயம் திரு. கனகரத்தினம் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றினில் இத்தேர்தல் பற்றிக் குறிப்பிட்டு, தெரிவு செய்வதற்கு எல்லாத் தகுதிகளயும் உடையவரராக ஹண்டி இருந்தாலும் தமது பிரசாரம் தன்னை சட்டசபை (State council) உறுப்பினராக்கி விட்டது எனக் கூறியது அவரது மதிப்பில் ஹண்டி அவர்கள் எத்தனை உயரத்தில் இருந்தார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  
அடுத்து வந்த இரண்டு தேர்தல்களில் ஹண்டி அவர்கள் போட்டியிடவில்லை. அக்காலத்தில்  அவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் அதிபராகக் கடமை ஆற்றிக் கொண்டிருந்தார். 1960ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 1960ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் பொதுத்தேர்தல். 1956ஆம் ஆண்டிலே தொகுதி எல்லைகள் மீள் அமைப்புச் செய்தமையால் வட்டுக்கோட்டைத் தொகுதி  வட்டுக்கோட்டை, உடுவில் என இரண்டாயது. ஹண்டி இம்முறை உடுவில் தொகுதியில் போட்டியிட்டார். பண்டாரநாயகாவின் சிங்களம் மாத்திரம சட்ட மூலப் பிரகடனம், தொடர்ந்து வந்த  வகுப்புக் கலவரம் 1958ல் நடந்த இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் பினனர் வந்த தேர்தல். மக்கள் தமது அரசு எதிர்ப்பினைத் தெட்டத் தெளிவாகக் காட்டுதற்கான சந்தர்ப்பம். ஹண்டி தேர்தலுக்கு நிற்பதற்கு இது உகந்த நேரமா? மேலும் இடதுசாரி வாக்குகளை சீன கொம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமசமாஜக் கட்சி என பிய்துப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள். அவர்களிடமும் ஒற்றுமை இன்மை. தமிழரசுக் கட்சியின் வேட்பாரளராகப் போட்டியிட்ட V. தருமலிங்கம் அவர்களின் வெற்றியை மிக இலகுவாக்கியது.
இத்தேர்தலில்; எனது பெரு மதிப்பிற்குரிய அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்கள் ஹண்டிக்காக தீவிரமாக உழைத்தார். அவர் ஹண்டியினுடைய மிக நெருங்கிய நண்பர். அவர் அதிபராகக் கடமை ஆற்றிய ஸ்கந்தவரோதயா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு வி. பொன்னம்பலம் அவர்களும் உடுவில் தொகுதியில் பொதுவுடமைக் கட்சி சார்பில் போட்டியிட்டார். பாடசாலையின் முகாமையர் திரு. வி. தருமலிங்கம் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் ஒறேற்றர் அவர்கள் அந்த இருவரையும் விட்டு ஹண்டி அவர்களுக்கே ஆதரவாக பிரசாரம் செய்தார். நட்பு வலிது என்பது மாத்திரமல்லாமல்  கொள்கை இரீதியாகவும் அவர்களுக்கிடையே அதிகம் ஒருமைப்பாடு இருந்து வந்துள்ளது. போட்டியிட்ட இம்  மூவருக்குமிடையே அதிக கொள்கை வேறுபாட்டிற்கும் இடமில்லை எனலாம். திரு தர்மலிங்கம் கூட இலங்கா சமசமாஜக் கட்சியில் இருந்தே தமிழரசுக் கட்சிக்குத் தாவியவர்.
என்னையும் ஹண்டி அவர்களுக்கு உதவுமாறு ஒறேற்ரர் கேட்டுக் கொண்டார். நான்  மாணவப் பருவத்திலே  தமிழரசுக் கட்சியின் தீவிரமான ஆதரவாளன். வாலிப முன்னணி உறுப்பினன். ஆனால் சென்னையில் கல்வி கற்ற காலத்தில் படிப்படியாக எனது சிந்தனைகள் இடதுசாரி இயக்கம் சார்பாகச் சென்றது. ஆகவே அதிபர் அவர்கள் என்னை அண்மித்து ஹண்டிக்கு உதவுமாறு கேட்டபொழுது சம்மதித்தேன்.
தேர்தலின் முடிவு என்னவாய் இருந்திருக்கும் என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் என்னைப் பொறுத்த மட்டிலே அந்த ஒரு மாதகாலம் என் வாழ்நாளிலே என்னால் மறக்க முடியாதகாலமாக அமைந்தது. இரண்டு மாபெரும் மனிதர்களுடன் நான் பழகி அனுபவித்த அற்புதமான காலம்.
கால்களில் தோல் செருப்பு. கையினில் கரிய நிறமான கைத்தடி, வெள்ளை வெளேரென்ற கதர் வேட்டியும் கைமுட்டிய கதர் நாசனலுமாக, மேவி இழுத்த நரைநிறத் தலையும் வயது முதிர்ச்சியைக் காட்டும் முகத்தில் கருத்த பிறேமுடன் கூடிய கண்ணாடியும் அணிந்த ஹண்டியுடன் வீடு வீடாக  வாக்குச் சோகரிகச் சென்ற போது அவர் இடையியையே தமது பழைய வாழ்க்கை பற்றிக் கூறியவை இன்றும் என்மனதில் பசுமையாக நிற்கின்றன.
« ஸ்ரீ பேரின்பநாயகம் ஒரு தப்புக் காரியம் செய்தார். அதாவது இலங்கைச் சட்டசபைத் தேர்தலுக்கு நின்றார். சட்டசபைத் தேர்தலுக்கு நின்றது தவறான காரியமில்லை. “காந்தீய வாதி” என்று சொல்லிக் கொண்டு நின்றது தான் தவறு. சிங்களவர்களின் கொடுமையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவோம் என்றும், தமிழருக்கு 100க்கு 50 பிரதிநிதித்துவம் கேட்போம் என்றும் இல்லையேல் தனித் தமிழரசு ஸ்தாபிப்போம் என்றும் சொல்லிக் கொண்டு பிறர் நின்றார்கள். சண்டமாருதப் பிரசாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்ரீ பேரின்பநாயகம் காந்தீயத்தின் பெயரால் நின்றார். நிற்கலாம், ஆனால் ஜெயிக்க முடியுமா? சூறாவளியின் முன்னால் இளந்  தென்றல் நிற்குமா? எனவே தோற்றுப் போனார்கள் » என அமரர் கல்கி அவர்கள் ‘இலங்கைப் பயணம்’ என்ற கட்டுரைத் தொடரில் எழுதியுள்ளார்கள்.
இத்தேர்தலின் பின்னர் ஹண்டி அவர்கள் பாராளுமன்ற அரசியல் பற்றிச் சிந்திக்கவில்லையாயினும் ஐக்கிய இலங்கை, சிங்களம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சம அந்தஸ்து, தாய்மொழிமூலம் கல்வி போன்றவை பற்றி தனது அபிப்பிராயங்களைக் காலத்துக்குக் காலம் தெரிவித்து வந்தார்.
ஹேக்டர் அபயவார்த்தனா இலங்காசமசமாஜக் கட்சியின் மூத்த உறுப்பினர். அதன் தூண்களில் ஒருவர். ‘Nation’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். 1971ஆம் ஆண்டினிலே பாராளுமன்றம் சட்ட நிர்ணய சபையாக  உருமாறி ஸ்ரீலங்காவிற்கு புதிய ஒரு யாப்பினை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. தமிழ் பேசும் இனத்தவரின் தன்மானத்தினைக் காலின் கீழ்போட்டு மிதிக்க வேண்டாம் என சிங்கள தலைவர்களுக்கு உணர்வு பூர்வமான வேண்டுகோள் ஒன்றினை ஹண்டி அவர்கள் விபரமாக எழுதி அபயவார்த்தனாவிற்கு அனுப்பியிருந்தாராம். யார் கவனித்தார்கள் ? சமசமாயக் கட்சியும் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டதுதான் காரணம்.
திரு S.W.R.D பண்டாரநாயகா தனது ஆட்சிக் காலத்திலே ஹண்டி அவர்களை மூதவை உறுப்பினராக்குதற்கு முயற்சி எடுத்தபோது அதனை அவர் நிராகரித்துவிட்டாராம்  வேறு யாராவதாயினும் கிடைத்த சந்தர்ப்பத்தினை கெட்டியாகப் பிடித்திருப்பார்கள் ஆனால் ஹண்டி அவர்கள் இந்தப் பதவி தனது அறிவுக்கும் திறனுக்கும் கொடுக்கப்படும் கௌரவம் இல்லை அரசியல் பலிக்கடா ஆக்கும் முயற்சியே எனக் கூறி நிராகரித்து விட்டாராம்.
« நிறைந்த வாசகர். எந்த விஷயமானாலும் மிகவும் புத்திசாதுரியமானதும் பிரயோசனமானதுமான பங்களிப்பினைச் செய்வதற்கு அவர் தவறுவதில்லை. அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த நாம் எமது அறிவார்ந்த தகமைக்கு அவருக்கே கடமைப் பட்டுள்ளோம் அவர் மிகவும் அற்புதமான இராப்போசனப் பேச்சாளர். அபாரமான ஞாபகசக்தி உள்ளமையால் அவரது உரைகள், நகைச்சுவை, மேற்கோள்கள் எனப் பலவும் கலந்த கதம்பமாகக் காணப்படும் » என்கிறார் அவரது ஆப்த நண்பரான ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்கள். இத்தகைய ஆற்றல் மிக்கவர் தேர்தல் தோல்விகளின் பின்னர் பெரும் அரங்குகளில் பேசுவதைத் தவிர்த்தார் என்றே எண்ணத் தோன்றகிறது.
மகாஜனாவின்  உயர்தர மாணவர் மன்றத்திற்கு நான் பொறுப்பாளராக இருந்த சமயம் வருடாந்த இராப்போசன விருந்தில் பிரதம விருந்தனராக வருமாறு பலமுறை அவரைக் கேட்டேன் மறுத்து விட்டார். ஆனால் மன்றத்தின் சாதாரண கூட்டங்களில் வந்து உரை நிகழ்த்துவதற்குத் தயங்கியதேயில்லை. « தம்பி அத்தகைய விழாக்களிலே பேசுவது எனக்கு மகிழச்சியைத் தருவதில்லை. இப்படியான கூட்டங்களிலே பேசுகையில் கலந்தரையாடுவது போன்று ஒரு நல்ல சூழல் ஏற்படுகிறது. எது பேசுகிறது எப்படிப் பேசுகிறது என்ற எண்ணமே இல்லாமல் பேசமுடிகிறது » என்றார். அவரது மேடைப் பேச்சினால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் அவரை அப்படிச் சிந்திக்க வைத்திருக்கலாம்.
(மிகுதி அடுத்த தொடரில்)

தொடர்ச்சிக்கு நுழைக : .

ஹண்டி எஸ். பேரின்பநாயகம் பகுதி -2




No comments:

Post a Comment