சுவட்டுச்சரம்1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள்
(19)
பெர்லின் ஈழத் தமிழ் அகதி(அதிதி !) வாழ்வின் தொடக்கம்
-குணன்
(நினைவுத்துளிகள் 18 வரை
தோரணத்தில் அலங்கரித்திருப்பதை அவதானிக்கலாம்.)
பேர்லின்தான் புலப்பெயர்வு
மூலம் ஈழத்தமிழரின் ஐரோப்பியப் பெயர்வுக்கு வழி வகுத்ததென்ற வரலாற்று செய்தியை அறிவிக்கும்
நகரமாகும்! 1980க்கு முன்னர் வேறு சில நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்துக்கு, தமது தனி
முயற்சியினால் புலம் பெயர்ந்து சென்றவர்;களில்லாமல் இல்லை. ஆயினும் ஈழத்தமிழன் 'அரசியல்
அகதியாக' இருப்பதைச் சான்றாக்கி அவனுக்கு 'முகவரி' தந்திருப்பதென்பது, அது இன்றைய இணைந்த
(கிழக்கு- மேற்கு) ஜேர்மனியின் புதிய தலைநகர் பெர்லின் என்பது குறிக்கத்தக்கது.
இன்றைய ஜேர்மனிக்கும்,
அன்றைய தமிழரின் ஐரோப்பிய புலப்பெயர்வுக்கும் பேர்லின் ஒர் மையமாக விளங்குகிறது! இரண்டாம்
உலகப்போரில் ஒட்டுமொத்த ஜேர்மனியின் அழிவைவிட பேர்லின் பெற்றது அதிகமென்பர்! சாம்பல் மேட்டிலிருந்து கிளம்பிய
பீனிக்ஸ் பறவை போல இன்று உலகின் வலிமை மிக்க இந்நாட்டு அரசின் தலைமையில் ஓர் பெண்மணியை அலங்கரித்து ஐரோப்பாவின் பொருளாதாரத்தில்
முதன்மை நாடாக ஜேர்மனியின் இருக்கையை வெளிப்படுத்தும் மாநகரம் பெர்லின் என்றால் மிகையல்ல!
000 0000 00000
தலைமுறை
தாண்டும் புலம்பெயர் தமிழர்கள்
ஐரோப்பிய புலப்பெயர்வின்
மூன்று தசாப்தங்கள் நிறைவு கண்ட ஈழத்தமிழன் புதியதோர் தலைமுறை ஒன்றையும் படைத்துள்ளான்.
‘இந்தப் புதிய தலைமுறையின் நல்வாழ்விற்கு தகுந்த வழிகாட்டிகளாக நாம் இருந்திருக்கிறோமா?’
எம்மவரில் எத்தனை பேர்கள் இதையிட்டு எம்மை நாமே சுயவிமர்சனம் செய்துள்ளோம்? அதைப் பற்றி
சிந்ததித்துக்கூட பார்க்க மறுக்கிறோமோ! இன்றும் போற்றுதலுக்கேற்காத பிற்போக்கு எண்ணங்களாலும்
மூட நம்பிக்கைகளாலும் வழி நடத்தப்படுவதால் புதிய தலைமுறையினருக்கும் நம் முதற் தலைமுறையினருக்கும்
இடையில பாரிய இடைவெளி ஏற்படுவதும் மறுப்பதற்கில்லையே!
இன்று பழைய- புதிய தலைமுறையினர்
பெற்றோர் உறவினர் அயலவர் நண்பர் ஒரு சிலரின் எதிர்கால வாழ்க்கைத்துணை என என்றெல்லாம்
சந்திக்கும் போது பொய்- பொறாமை- வேற்றுமை அல்லவா முன்னுக்கு தோற்றம் அளிக்கிறது!
மாற்று இனத்து ஆணையோ பெண்ணையோ
மணம் முடிக்க அனுமதிக்கும் தாய் தந்தையர் புதியதோர் உலகில் புதிய தலைமுறையாகிய பிள்ளைகளை
தமது சாதி சமய வியாதிகளை சுட்டிக்காட்டி சொந்த இனத்துக்குள் வாழும் இளைய தலைமுறையினரின்
மீது நஞ்சை பாய்ச்சி வேற்றுமை பாராட்டுவது எதிர்காலத்தில் எதிர்விளைவுகளுக்கு வழிகோலுவதாகும்!
மனித நீதிக்கு எதிராக உயர்வு-
தாழ்வு காட்டும் போக்கை மறுதலித்து தமக்குப் பிடித்தவரை காதலித்து மணம் செய்து வாழ்ந்து
காட்டும் ஒரு சில புதிய தலைமுறைத் தமிழர்கள் எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்
வாழ்வின் சமுதாயச் சிற்பிகள் என்று போற்றுதலுக்குரியவர்கள்! இவர்களினால் மட்டுமே எதிர்கால
புதிய தலைமுறைத் தமிழர்கள் நிறைந்த புலம்பெயர் தமிழினச் சமுதாயம் மலர வழி காணமுடியும்!
இன்று தத்தம் இளம் பெண்
ஆண் பிள்ளைகளின் திருமணப் பங்காளிகளைத் தேடும் பல பெற்றோரின் நிலைமையை திரிசங்கு நிலைக்குச்
சமமானதென்றே கூறமுடியும்! தாய் நாட்டுக்கு வெளியே வாழும் தமது பிள்ளைகளகளுக்கு அவர்கள்
பிறந்து வளர்ந்து கல்வி கற்றறிந்த மொழியறிந்த ஒருவருடன் மட்டுமே வாழ்வைத் தொடங்க வேண்டியதென்பது
நன்கு அறிந்ததொன்று. எனவேதான் எந்தெந்த நாட்டில் பிறந்து வாழ்கிறார்களோ அங்கு வாழும்
தம் இனத்தில் மணவாழ்க்கைப் பங்காளர்களை தமது பிள்ளைகளுக்கு தேர்ந்தெடுப்பதும் அதில்
குடும்ப ஏற்றத்தாழ்வு சமயவேற்றுமை முற்றாக தவிர்த்தல் என்பதும் புரிதல் வேண்டும். மாறாக
இதைத் தவிர்க்கும் தூர நோக்கற்ற போக்கினால் புலம்பெயர் தமிழரின் குடும்ப இருப்பு- எதிர்காலம்-
தொடரும் தலைமுறை யாவுமே கேள்விக் குறியாகலாம்! திருமண வயதை எட்டிய பிள்ளைகளை கொண்டுள்ள
பெற்றோர்கள் பலர் செய்வதறியாமலும் பிள்ளைகளின் எண்ணங்களைப் புரியமுடியாமலும் அவர்களின்
விருப்பங்களை நிறைவேற்ற இயலாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்படியாதொரு திக்குத்
தெரியாத நிலையிலும் ‘சாதிய- பிரதேச- பொருளாதார’ ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒன்றுமறியா
தமது வாரிசுகளின் இளம் உள்ளங்களில் அறியாமையை ஊன்றுவததையும் கவலையுடன் நோக்க வைக்கிறது.
வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின்
இன்றியமையாத அதிபெறுமதி வாய்ந்த உரிமை என்று உணர்ந்து கொண்டு அதனை உண்மையாக தன்னையும்
தான் சார்ந்துள்ள சமுதாயத்தின் ஓர் அங்கமாகக் கருதி வாழ்தல் தான் 'வாழ்க்கை' என்பதன்
பொருளாகக் கொள்ளமுடியும். ஆனால், அவ்விதம் எண்ணம் கொண்டு எம்மில் எத்தனை பேர் வாழ்கிறோம்?
வாழ்வென்பது தனியுடமை கொண்டதென்றும் அது தனக்கு மட்டுமே சொந்தம், அல்லது சொந்தமாகவேண்டும்
என்ற (மிக மோசமான) எண்ணம் கொண்டு வாழ முனைந்து அல்லல்பட்டு அழிவுற்றுப்போவோர் தொகை
மிக மிக அதிகம் என்பது பொய்யன்று!
பேராசை கொண்டவர்க்கு
வாழ்வும் இல்லை!
தனி மனித உரிமை இல்லாமல்,ஒரு
சமுதாயம் உரிமைகளைப் பேணமுடியாதெனலாம். அதேபோல நல்ல குடும்பங்களின் கூட்டு ஒரு சமுதாயமாக
நிலை பெறமுடியும்! இன்று வெளி நாடுகளில் புலம் பெயர் வாழ்வை கொண்டிருப்பவர்கள் தாம்
வேறோர் நாட்டில் வாழும் பிறிதோர் நாட்டின்
மக்கள் என்பதையும் மொழி மற்றும் பண்பாடு போன்றவற்றில் வேறுபட்டிருப்பவர்கள் என்பதையும்
மறந்துவிடமுடியாது- கூடாது! இது குடியுரிமை பெற்றிருப்பினும் இல்லாவிடினும் அனைவருக்கும்
ஏற்புடையது!
தமிழர் குறிப்பாக பெண்கள்
தங்கத்தின் மீது தாங்கொணா ஆசைகொண்டவாகள் என்பதொன்றும் மிகையானதன்று! அதுவும் இன்றைய
புலப்பெயர்வில் காணக்கூடிய ஒன்று திருமணத்தில் சுபவேளையில் கழுத்தில் கணவன் கட்டிய
மங்கலத்தாலியை நிறை போதாதென்று இருபது- முப்பது- நாற்பது பவுண்கள் என்ற நிறையில் மாட்டி
கழுத்தில் ஏற்றியதால் கழுத்து நொந்து நோய்வாய்ப்பட்டு கழற்றி வைத்து பின்னர் திருடர்
கைகளில் அகப்பட்ட கதைகள் நிறைய உண்டு!
நமது பெண்கள்
தங்கம் அணிவது ஏன்?
சில வருடங்களுக்கு முன்னர்
எனது நண்பர்கள் தமது துணைவிமாருடன் புகைவண்டி பிரயாணத்தில் இணைந்து கொண்டோம். அங்கு
வெறுமையாக காணப்பட்ட இருக்கையில் நடுத்தர வயது ஜேர்மனியர் எனது பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டார்.
தமிழர் எங்கு கூடினாலும் யாரையும் கவனிக்காது உரத்து குரல் எழுப்பி உரையாடுவதை இன்றும்
மறைக்க முடியாது. என்றாலும் எனக்கு சிறிது சங்கோஜமாகவே தோன்றியது! அந்த ஜேர்மனியர்
எமக்கு டொச் தெரியாமையைப் புரிந்துகொண்டவர்போல « ஆங்கிலம் தெரியுமா? » என்று கேட்டார். « எங்கிருந்து வருகிறோம்?
எங்கு செல்கிறோம்? » என்று தொடர்ந்த அவரது
கேள்விகளுக்கு நான் விடை கூறக் கடமைப்பட்டேன். என்னைப் புரிந்தவராகி சரளமாக என்னுடன்
கதைக்கத் தொடங்கினார். நாம் அகதிகளாக தஞ்சமடைந்தவர்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
« நானும் பெர்லின் தான் செல்கிறேன்; » என்று கூறியவர் சிறிது
நேரத்தில் « உங்கள் பெண்கள்(துணைவி)
ஏன் அதிக நகை அணிகிறார்கள்? » என்ற கேள்வியை கேட்டுத் திகைக்கவைத்தார். நான் எனது மனைவியுடன்
அன்று பயணமாகவில்லை. « நண்பர்களிடம் கேட்கிறேன்! » என்று பதில் கூறிச் சமாளித்தேன்.
ஆனால் அவர் விடுவதாக இல்லை
மீண்டும் என்னிடம் « தங்கள் புருசன்மார் வசதியானவர்கள்
(பணக்காரர்) என்பதைக் காட்டுவதற்காகவா அவர்கள் இப்படியாக நகை அணிகிறார்கள்? » என்று கேட்க அக் கேள்வி
என்னையும் கௌவியது. எவராலும் தகுந்த பதில் கூறமுடியவில்லை! அனைவரும் ஒருவரை ஒருவர்
பார்த்து பரிதாபகரமாகச் சிரித்தோம்.
ஜேர்மனியரும் ஏதோ தெரிந்தவர்போல
சிரித்தார்!
அகதி வாழ்வின்
தகுதி!
அன்று அகதி தேசத்துக்கு
வழிதேடி ஒருவழியாக நுழைந்து அன்றைய மேற்கு பெர்லினுக்குள் 24 மணித்தியால கண்டயாய காலம்
முடிவடைய முன் கடக்காவிடில் கிழக்கின் மக்கள்
படை கழுத்தில் பிடித்து தள்ளிவிடுவது ஒன்றும்
செய்தியல்ல!
அன்று அவ்வாறு பெட்டி படுக்கை உளுத்தம்மா பொரி விளாங்காய்
மிளகாய்த்தூள் லுங்கி- சாரம் டாலர் இத்தியாதி பொருள்களுடன் வந்து ஒருவாறு பெர்லின்
மண்ணில் கால் பதித்து விட்டால் (பின்பு எங்கு
செல்வது என்ன செய்வது) என்பதற்கு முன்னர் பயண
முகவர் அறிவுறுத்தல் படி கறுத்த தலைகள் தெரிந்து அவரிடம் விபரம் அறிந்து சொந்த ஊரவர் யாரையும் கண்டு
பிடித்து அங்கு சென்று விவரம் அறிந்து கொள்ளலாம் என்றவாறு அகதி வாழ்வின் முதல் கட்டம்
தொடங்கும்! பொதியுடன் இவருபவர்களுக்கு உபசாரம் பிரமாதம்! முதலில் « ஏன் தம்பி இங்கை இவ்வளவு செலவழித்து வந்தாயப்பா! » என்ற பீடிகையுடன் அறிமுகம்
தொடங்கி « சரி சரி! வந்தாச்சு! உடுப்பை
மாற்றி கால்கையை அலம்பிக்கொண்டு பாண் ஜாம்
டீ சாப்பிடும் ! »
« யோகன் கடைக்கு போவான்….
அவனோடை போய் ஒரு நூறு டொலரை டி எம் .(ஜேர்மன் காசு ) மாற்றி கைசெலவுக்கு வைத்திரும்
! » என்று பெரியண்ணா என்ற
குமரன் கூறியதும் சரி என்று தலையசைத்த நினைவு
என்றும் அகலாதே!
லுண்டாவில்
-எல்லாம் நல்ல மலிவு !
அன்று நண்பர்கள்
அறிமுகமானவர்கள் ஊரவர் யாருடனாவது சேராவிட்டால்
எதுவுமே நடைபெறாது வெறுமையாக இருக்கும்!
இவர்கள்தான் சனி ஞாயிறு தினங்களில் « பாவித்த பழைய சாமான்கள்
- உடுப்பு முதல் அத்தனையும் மலிவாக வாங்கலாம். கஸ்செட் - றேடியோ பிளேயர் கிளாஸ் சமையல் சட்டி - முட்டி கோப்பை கரண்டி கோப்பி மிசின்
எனக் குசினிக்கு அவசியம் தேவையானதைப் பெறும் இடம்தான் லுண்டா! » எனக்கூறி எமை அழைத்துச்
சென்று கைப் பாசையிலும் சைகைகளாலும் பேரம் பேசி வழித்துணையானவர்கள்.
முதன் முதலில் ‘அல்டி சூப்பர்
மார்க்கட்’ கடைதான் தமிழரின் -அகதி
வாழ்வில் அன்றும் ஏன் இன்றும்கூட நுகர்வுக்கான ஓர் முக்கிய பங்கை வகித்தது!
கீரை பெட்டி பக்கெட் அரிசி என அடையாளம் கண்டு வாங்கி வந்த நண்பன் சந்திரன் என்றும் எமக்கு ஒரு "கொலம்பஸ்" என்றால் தவறில்லை! கோழி பண்டி (எலும்பு!) கோழி - நெஞ்சு
கால் காய் துடை என்று வகை யாக்கள் இ குளிரூட்டிப்
பெட்டிகளில் அதுவும் மலிவாக வாங்குவது தவறாது !
இவற்றைப் பொரிப்பதில் சிக்கல் எண்ணெய்
எதுவென்று இன்னும் யாராலும் கண்டு பிடிக்கப்படாதகாலம்
அன்று! ராஜன் தான் ஒருமுறை பாத்திரப் படம்
போட்ட போத்தல் மஞ்சள் நிறமாக இருக்க கண்டு தேங்காய்
எண்ணெய் என்று (மொழி விளங்கமையால்) வாங்கிச் சட்டியில் ஊற்றியதும் நுரை ததும்பத் தீபற்றியதும்இ அதிர்ஷ்டவசமாக
காயமின்றி எல்லோரும் தப்பியதும்
"நல்ல தோர் படிப்பினை!" ஆகியது.
அது பாத்திரம் கழுவும் மருந்து
எனப் பின்னர்தான் அறிந்து சிரித்தோம்.
பெர்லினுக்கு வரமுன்னர் நாமாகவே தேடிப் பொருட்களை எடுக்கும் சூப்பர் மார்க்கட்டுகளையோ குளிரூட்யில் பதனப்படுத்திய பெட்டி உணவு வகைகளையோ பையிலிட்டப்பட்ட அரிசியை அப்படியே சுடுநீரில் அவித்தெடுக்கும் சோறாக்கலையோ நாம் கண்டதோ அறிந்ததோ கிடையாது. எங்களில் பலருக்கு சமையலே தெரிந்திருக்கவில்லை. ஆனால் இங்கு வந்தபின்புதான் சாப்பாடுடான உணவு விடுதி கிடைத்தவர்களின் சோற்றுக்கான தவிப்பும், சமையல் அறிந்திருக்க வேண்டியதன் அவசியமும் தெரிந்தது. தாம் தங்கும் விடுதிகளில் கூடிச் சேர்ந்து வீட்டு வேலையைப் வேலைப் பங்குபிரித்து பகிர்ந்துண்ணும் (summery) முறையை இங்குதான் பலர் அறிந்து அனுபவித்தார்கள்.
பெர்லினுக்கு வரமுன்னர் நாமாகவே தேடிப் பொருட்களை எடுக்கும் சூப்பர் மார்க்கட்டுகளையோ குளிரூட்யில் பதனப்படுத்திய பெட்டி உணவு வகைகளையோ பையிலிட்டப்பட்ட அரிசியை அப்படியே சுடுநீரில் அவித்தெடுக்கும் சோறாக்கலையோ நாம் கண்டதோ அறிந்ததோ கிடையாது. எங்களில் பலருக்கு சமையலே தெரிந்திருக்கவில்லை. ஆனால் இங்கு வந்தபின்புதான் சாப்பாடுடான உணவு விடுதி கிடைத்தவர்களின் சோற்றுக்கான தவிப்பும், சமையல் அறிந்திருக்க வேண்டியதன் அவசியமும் தெரிந்தது. தாம் தங்கும் விடுதிகளில் கூடிச் சேர்ந்து வீட்டு வேலையைப் வேலைப் பங்குபிரித்து பகிர்ந்துண்ணும் (summery) முறையை இங்குதான் பலர் அறிந்து அனுபவித்தார்கள்.
இன்று எம்மவர் எம்மூர்
உணவு வகைகள் காய்கறி கடல் உணவு இறைச்சி (அதுவும்) குடல் சிரசு துடை முதுகு இன்ன பிறவகைகள்
நிலத்தில் விளைவது வகை தொகை கணக்கில் ஊர் (கைக்குத்து) பூநகரி மொட்டைகருப்பன்
பசுமதி என மூடைகளாக மீன் பக்கெட் 4 வாங்கினால் -1 இலவசம் அதுபோல உடைவகைகள் ஒன்றுக்கு
ஒன்று எங்கும் மலிவு விற்பனை -இலவசம் இத்தனையும் நம்(அகதி ?) அதிதி வாழ்வின்
ஒரு பகுதி அல்லவா ?
பெர்லின்
கிறீஸ்தவ லிஸ்டர்பெல்ட் தேவாலயத்தில் நடாத்தப்பட்ட செங்கதிர்
போற்றிடும் தைப்பொங்கல் விழா!
அன்று, 1980களில் பெர்லின்
வாழ் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முதன் முதல் தைத்திருநாள் - தைப்பொங்கல் பண்டிகை,
லிஸ்டர்பெல்ட் தேவாலயத்தில், மத நல்லிணக்க விழாவைப்போன்று சைவ- கிறீஸ்தவ தமிழர், ஜேர்மனியர்களின்
முன்னிலையில், உழவர் திருநாளாகவும் -செங்கதிர் போற்றும் பொங்கல் விழாவாகவும், ஜேர்மனியரின்
நன்றி கூறும் (உழவர் திருநாளாகவும்) பேர்லின் ஈழத்தமிழர் நலன்புரிக்கழகத்தின் சார்பில்
முதல் முறையாக 1983ல், சிறப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ், நாடகம், உரை, இசை, அரங்க நிகழ்ச்சியுடன்,
ஈற்றில் பொங்கல், சிற்றுண்டி, பானம் வழங்க நடாத்தப்படது! அன்று தலைவராக விருந்த வெ.செ.குணரத்தினம்,
கே.கணேசன், யோ.சிறீஸ்கந்தராசா, ஆ. தங்கராசா, யோ.சிறீஸ்கந்தராசா, ஆகியோர் உரையாற்றினர்.
தமிழரின் பண்பாடு, கலை சார்ந்த நிகழ்ச்சிகளை கண்டுகளித்த அனைவரும் மகிழ்வு பொங்கப்
பாராட்டியதும், வந்து பங்குபற்றிய அனைவருக்கும் சிற்றுண்டி, பொங்கல் வழங்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது. அன்று, நிறைகுடம் வைத்தல், குத்து விளக்கு, ஏற்றல், போன்றவை தமிழர்
தம் பண்பாட்டுக் குறியீடுகள் என்பது இந்நிகழ்வின் மூலம் புலம்பெயர் சூழலில் விளக்கப்பட்டது!
இறுதியில், திருவாளர்கள், நகுலன், பாலா, அன்ரன் மற்றும் சிலர் நடித்த நகைச்சுவை காட்சி
மேடையில் கலகலப்பாக இடம்பெற்றது!
(துளி சொட்டும் )
பிற்குறிப்பு :
1. லுண்டா
மாக்கெற் (flohmarkte)
நாம் வந்த காலத்திலிருந்து இன்று வரை எம்மவர்களால்
அழைக்கப்படும் பாவித்த பொருட்களை மறுவிற்பனைப்படுத்தும் சந்தையை ‘லுண்டா’ என்றே அழைக்கிறோம்.
இதனை ஃபுளோமார்க்ற்(flohmarkte) என்றுதான் இங்கு அழைப்பார்கள்.
70
களின் கடைசியில் தொடங்கிய இலண்டன் கனவுப் பயணமாகவே இருந்த ஈழத் தமிழர்களின் புலப் பெயர்வு
இருகட்டங்களாகத் தொடர்ந்தது. முதலாவது நேரடியாகவே இலண்டனுக்கான விமானப் பயணங்களாக அமைந்தது.
அக்காலகட்டங்களில் இலங்கைக் கடவுச்சீட்டாளர்களுக்கு கொமன்வெல்த் நாடுகளுக்கான நுழைவு
விசா இலகுவாக வழங்கப்பட்டது.
இரண்டாவது
பயணம் கொஞ்சம் கடினமான படிநிலைகளுடன் தொடரப்பட்டது. இந்தியா வந்து பாகிஸ்தான் வந்தடைந்து
அங்கிருந்து கப்பல் வழியாகவும், விமானம் வழியாகவும், ஈரான் - இத்தாலி வழியாகத் தரை வழியாகவும் அமைந்தன
இத்தகைய பாதை. 70 களில் ஈரான் ஈராக் சவுதி போன்ற அரேபிய நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக
சென்றிருந்தவர்களூடாக ஐரோப்பா செல்லும் மார்க்கம் சிலருக்குத் தெரிந்திருந்தது. இவர்கள்தான்
ஆரம்ப வழிசொல்லிகளாக இருந்திருக்கிறார்கள். இந்த வகையில் உருது அறிந்தவர்களாகவும் காணப்பட்டனர். ஜேர்மனி வருகையின்போது ‘ஃபுளோமார்க்ற்’ இனை ‘லுண்டா’ எனும் பெயருடன் அறிமுகப்படுத்தி
அழைத்த வரலாறாக இதனைக் கொள்ளலாம்.
80களில்தான்
வீமானத்தின் மூலம் மொஸ்கோ வழியாக எயிரோபுளட் (aeroflot) மூலம் கிழக்கு பெர்லின் வழியான
நம்மவர்களின் பெருமளவான நுழைவு அமைந்தது. இதுவும் இலண்டனை நோக்கியதாகவே பெரும்பாலும்
அமைந்தது. ஆனால் இப்பயணங்கள் பரவிய ஐரோப்பிய புகலிட வாழ்வுக்கு வித்திட்டன.
காண்க: http://www.tip-berlin.de/kultur-und-freizeit/die-besten-flohmarkte-berlin (trogelmarkt)
2. அந்தக்
காலத்தில் என் நினைவுகள் சார்ந்த புகைப்படங்கள்
பழைய போட்டோ 1980களில், பெர்லின் வந்தவர்கள் படம்
எடுத்து ஊருக்கு போஸ்(தமது மதிப்பை உயர்த்தி) காட்டிய காலம் அது !
இந்த இரு படங்களில் இருப்பவர்களில், முத்துலிங்கம், சத்தியம், குணன், மணியம், சிவபாதம், தவிர்த்து ஏனையவர்கள் இன்று, பாரிஸ், லண்டன், கனடா சென்றுவிட்டனர். கீழே உள்ள படத்தில் நிலத்தில் படுத்திருப்பவர் கண்ணன் என்ற ஒரு போராளி EPRLFல் இருந்தவர். இவர் கடல் வழி நாடு திரும்புகையில் கடலில் மடிந்தவர்.
3. ‘குருமலங்க’ (krumme lanke)
விடுதி
‘குருமலங்க’ (krumme lanke) விடுதியில் நாம் தங்கியிருந்த காலத்தில், குடும்பங்களாக இருந்தவர்கள்
எனதுகுடும்பம், கணேசமூர்த்தி குடும்பம், கணேசன் குடும்பம், ஞானேசுவரன் குடும்பம் ஏனையவர்கள்
தனியர்களாகவே இருந்தனர். இவர்களில், குகன், பாஸ்கரன், அல்விஸ், அன்ரன், சுரேஸ்
பாலா செல்வராசா நகுலன், முகுந்தன் எனப் பலரைக் குறிப்பிட வேண்டும். தங்கராசா
வாத்தியாரின் துணைவியாரும் சதாவின் துணைவியாரும் பின்னர்தான் வந்து இணைந்து கொண்டனர்.
இங்கிருந்தவாறே பெர்லின் ஈழத்தமிழர் நலம்புரிச் சங்கப் பணிகளை சமூக சேவையாகச்
செய்தோம். ‘யதார்த்தம்’ இதழும் வெளிவந்தது.
அன்ரன் திடகாத்திரமான வாலிபன். ஆனால்
துர்ப்பாக்கியமாக அவனது அகால மரணமான செய்தி அந்தக் காலத்தில் பெர்லினை உலுக்கியது.
இவனது விருப்பமாக « கடல் மேல் பிறக்க வைத்தான்… கண்ணீரில் மிதக்க வைத்தான்.. » என்ற பாடலைக் காவிய
அவனது கணீரென்ற குரல் எமது செவியை வருடியடைந்த நினைவு ஒருபோதும் நீங்காது.
இவர்களுடன் இருந்த பாலாவும் சிறு வயதில் இறந்து போய்விட்டான்.
ஆரம்ப காலங்களில் எமது விடுதிக்கு
முன் இருந்த ‘குருமலங்க’ வாவி மறக்க முடியாததொரு பொழுதுபோக்கிடம். சுற்றவர மரங்கள்
புடைசூழ்ந்ததாக இந்த வாவி அமைதியாக இருக்கும். கோடையில் நிறையவே சுற்றுலாப்
பயணிகள் வருகைபுரிவர். வாவியில் நீராடுவதும் கரையில் வெயில் காய்வதுமாக மகிழ்வு
பரப்புவார்கள். கடும் குளிர்காலத்தில் இந்த வாவி சூழ் பகுதி பனிவனமாகி உறைந்து
வாவி இருந்த இடம் வெண்தரைபோல் பளீரிடும். அந்தவேளையில், இந்தப் பனிக்கட்டி வயலில்
நடந்து சறுக்கி விளையாடுபவர்களில் எமது கால்களும் அடங்கியிருந்தன. வெப்ப
வயற்தரையில் பதனப்பட்டவையான எமது கால்கள் புதிய உறுதியான சப்பாத்துகளுள் புகுந்து
வெண் உறைபனி வாவியின் மேல் நடந்த உணர்வை எம் மூளையில் பரவவிட்ட அந்த முதல்
தருணத்தை நாம் எப்போதும் மறக்கவே முடியாது. கீழே அதல பாதாளத்தில் தண்ணீர் மேலே
உறுதியாக மிதக்கும் பனிக்கட்டித் தரை ! இதில் ஓடிச் சறுக்கி காலில் தகடுபூட்டி வழுக்கி
விரையும் மகிழ் மனிதர்களுடன் நாமும் பயணித்த முதல் நினைவுகளை நாம் என்றென்றும்
மறக்க முடியாது.
4. 1980களில் ஐரோப்பிய எமது வருகையில்
நான் காணுற்ற ஐரோப்பியர்கள் சுறுசுறுப்பாக இருந்தார்கள். பயப்படாதவர்களாக
காணப்பட்டார்கள். எங்கும் வேகத்துடன் அசைந்து கொண்டிருந்தார்கள். கால் பாதத்தில்
பூட்டிய சக்கரத்துடன் வீதிகளில் விரைந்தவர்களை அதிசயத்துடன் முதன்முதலாகப் பார்த்தோம். குளிரைக்
அனுபவித்து அரண்டு போயிருந்த எமக்கு குளிரிலும் உடற்பயிற்சிக்காக ஓடியவர்களையும் பனியில்
விளையாடுபவர்களையும் காணுற்ற முதற் தருணம் அது. இவை எல்லாமாக எதிர்த்து -எதிர்கொண்டு -இசைந்து வாழும்
மக்களாகவே ஐரோப்பியரை மனத்திரையில் பதித்தது.
5. படங்கள்
நன்றி : கூகிள் இணைய வழங்கி –
குணம் அண்ணா
தொடர்பான இணைப்பு : சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு
தொடர்பான பதிவுகள்
சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (17) இழந்ததும் பெற்றதும்......
சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (16)
சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (15)
சுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (14)
சுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (13)
சுவட்டுச் சரம் -1 நினைவுத்துளிகள் (12)
சுவட்டுச் சரம் 1 நினைவுத்துளிகள் (11)
சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (10)
சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (9)
சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (8)
சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (7)
சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (6)
சுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (5)
சுவடுச் சரம் 1 நினைவுத் துளிகள் (4)
சுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (3)
சுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (2)
சுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (1)
6.
இணைத்தவர் : முகிலன்
நான் பெரிதும் மதிக்கும் குணன் அவர்களால் எழுதப்படும் தொடர் பதிவு இது. 'பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்' நினைவுத்துளிகள் (19)
No comments:
Post a Comment