சுவட்டுச் சரம் -1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்
நினைவுத்துளிகள் (12)
- குணன்
"புலப்பெயர் வாழ்க்கை புதிரென மாறிப்போனால்...........!", என்ற எண்ணம் எழுவது ஒன்றும் வரலாற்றில் அறியாத ஒன்றல்ல.
ஐரோப்பாவில் வாழ்ந்த அறுபதாண்டுகள் கடந்த யூத இனமக்களின் அழிப்பும், அதன் விளைவாக உலகம் முழுமையாக கண்ட மாற்றங்களும் என இன்றும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கவனம் பெற்றிருப்பதை எப்படித்தான் மறக்கடிக்க முடியும்!
இந்துக்களின் (சைவர்களுக்கு இதில் சம்பந்தமில்லை) சமய அடையாளச் சின்னமாக கூறப்படும் "சுவாஸ்திகா", கொடுங்கோலன் அடொல்வ் கிட்லர் தனது ஆட்சிச் சின்னமாக தெரிவு செய்திருந்ததும் ஒன்றுதானே! ஆரம்பத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த ஒரு கோடி பத்து இலட்சம் யூத மக்களை அழிப்பதற்கு, அடையாளங்கண்டு கொள்ள ஏதுவாக, தனது ஏவலாளர்களைக் கொண்டு, அவர்கள் வாழும் இல்லங்கள், வர்த்தக நிலையங்கள் யாவையும் அடையாளப்படுத்த, நுழைவாயில் கதவுகளில் பொறிக்கப்பட்டு, பின்னர் அவற்றை தீயிட்டு கொளுத்தியும், அங்கிருந்தவர்களை காரணமின்றி கைதுசெய்தும், பல்வேறு வதை முகாங்களுக்கு கொண்டு சென்று ஆண், பெண் என்ற பேதமின்றி, சிறையிலிட்டு, வதைத்து சாகடித்ததும், தங்க வெள்ளியினால் கட்டிய பற்களை களைந்து குவித்ததும், அவர்களின் தலை முடிகளை தலையணைகளுக்கு பயன்படுத்தி தனது இராணுவ வீரர்களுக்கு வழங்கியும், கொன்று குவிக்கப்பட்டவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு, கிடைத்த சாம்பலை, ஆஸ்திரியா (கிட்லர் பிறந்த நாடு) வயல்களில் உரமாக பாவிக்கப்பட்டதும், நாசிப்படைகளின் செயல்களாகி கறைபடிந்த வரலாறாகிவிட்டது!
இவ்வாறு நடந்தேறிய வரலாற்றுக்கு மூலகாரணம் யாதென ஆராயும்பொழுது, இவ்வாறான செயல்களை நிறைவேற்ற கிட்லரும் அவனது கூட்டமும் 20-1-1942ல், பேர்லின் வான்சி என்ற இடத்தில் "வான்சி" மாளிகையில் கூடி எடுத்த தீர்மானத்தின்படி இரண்டாவது உலக யுத்தம் ஏற்படக் காரணியாகி 60 இலட்சம் மக்கள் உயிர் பறிக்கப்பட வழிகாட்டியதெனலாம்! உரோமர்களிடம், இஸ்ரேல் வீழ்ந்து, தங்கள் தாயகத்தை இழந்த மக்கள், ஐரோப்பிய நாடுகளில் புகலிடந்தேடி வந்து, தங்கள் உழைப்பால் உயர்வடைந்தார்கள்! இதன் விளைவே, பின்னர், இவர்களின் முடிவுக்கும் காரணமாகியது! ஆயினும், அன்று "அழிவுக்கான தீர்மானம்" எடுத்த அந்த வான்சி மாளிகை, இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருப்பதும் கூட வரலாறு தான்!
இன்று, பல்வேறு நாடுகளில் பலகோடி பல்லின பாவப்பட்ட மக்கள், உலகப் பந்தில், உயிர்களை மட்டும் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தஙகளுக்கு உட்பட்டவர்களாக, சொந்த நாடுகளிலும், பக்கத்து நாடுகளிலிலும், தூர நாடுகளிலும் இடம்பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் உள்ளார்கள்! இது ஓர் உண்மையாகக் காணமுடிகிற மனித அவலம் ஆகும்!
ஐரொப்பிய நாடுகளாகிய பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்றவற்றில் புலப்பெயர்வுக்கு முன்பிருந்தே நூற்றாண்டு காலமாக, காலனித்துவ காலம் முதல் வந்த சுதேசிகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகளில் இருந்து வந்து பெருந்தொகையில் வாழ்கிறார்கள். சுவற்சிலாந்து, ஒல்லாந்து, பெல்ஜியம் மற்றும் நோர்வே, சுவிடன், டென்மார்க் போன்ற இதர ஐரோப்பிய நாடுகளிலும் இன்று குடியேறி வாழ்கிறார்கள். ஆயினும் முதன் முதல் ஐரொப்பிய கண்டத்திற்கு பிதா பத்தலோமிய சிகன் பால்க் என்ற ஜெர்மனிய தமிழறிஞரால், மலையப்பன் என்ற தமிழர், டென்மார்க் மொழி கற்று அழைத்து வரப்பட்டு, டென்மார்க் மன்னர் சபையில் தமிழிலும், டேனிஸ் மொழியிலும் உரையாற்றினார் எனவும் அப்போது, தமிழ் நாட்டின் தரங்கம்பாடி துறைமுகப்பகுதி டென்மார்க் மன்னரின் ஆளுமைக்குட்பட்டாக இருந்தது!
பிதா சீகன் பால்க் பாதிரியார்(Ziegenbalg), மலையப்பன் மூலம் விரைந்து தமிழ்மொழியைக் கற்று, தமிழ் நூல்களில் அதிக ஆர்வங்கொண்டவராய் தமிழ்மொழி மீது தாழாத பற்றுடையவராய் நூல்கள், ஓலைச் சுவடிகள், நீதி நூல்கள், வைத்திய நூல்கள் என (இன்று மறைந்து விட்ட)பலவற்றை, தனது தாய் நாடாகிய ஜேர்மனிக்கு எடுத்து வந்தார். இந்நூல்கள் இன்றும் (முன்னைய கிழக்கு ஜெர்மனின் கல(Kalle) பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் பேணப்பட்டுள்ளன. இன்றைய புலப்பெயர்வின் இளைய தலைமுறையினருள் தமிழார்வமிக்க, ஜேர்மனிய மொழியறிந்தவர்கள் இது பற்றிய தேடல்களில் ஆர்வங்காட்டுவது அவசியமாகும்!
டேனிஸ் மன்னரின் வேண்டுகொளை ஏற்றுக்கொண்ட, ஜேர்மானிய பாதிரியார் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற பின்னர், தமிழ்மொழியின் இலக்கண, இலக்கிய வளங்கள் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்ட பின்னர், தமிழரின் நீண்ட வரலாற்றுச் சிறப்பை உணர்ந்தார்!
14ம் பிடரிக் மன்னர் (1671-1730), டென்மார்க்-நோர்வே மன்னராக விளங்கியவர் தமிழ்மொழிக்கு உரிய பல வரலாற்றுச் சான்றுகள், மேலை நாட்டுத் தமிழ் அறிஞர்கள், அவர்கள் ஆற்றிய அரும் பெருந்தொண்டுகள் பற்றிய செய்திகளை, குறிப்பாக இன்று, புலம் பெயர்ந்தும், இங்கு பிறந்தும், கல்வி கற்றும் வாழ்கின்ற புதிய தலைமுறைத் தமிழர்கள், இங்கிலாந்து, டென்மார்க்- நோர்வே, சுவிடன், பிரான்ஸ், சுவிஸ், ஒல்லாந்து, ஜேர்மனி, இத்தாலி மற்றும் போர்த்துக்கல், சோவியத் ரஸ்யா செக் குடியரசு போன்ற இன்ன பிற நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் மொழி இலக்கண, இலக்கியம், பண்பாடு போன்றவற்றிற்கு ஆற்றிய சேவைகள் பற்றி மீள்பார்வை செய்தலையும், ஆவணப் பதிவிடலையும் தலையான பணியாகக் கொள்ள முன்வரவேண்டும். வருவார்களா?
00000000000000000000000000
செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழி மிகப் பெரிய வரலாற்றுப் பொக்கிசமுடையது. இதன் வழித் தோன்றல்களான பிறப்பைப் பெற்று, 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' எனவான உலக மானிடப் பண்பில் ஊறிய எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நிறையவே பல பணிகளுண்டு. கடல்கோளால் காணாமல் போன சுவடிகளும் எழுத்துக்களும் ஏராளம். ஒரு மொழியின் இலக்கியங்கள் தொலைந்து போகிறது என்றால் அது அந்த பண்பாடு தொலைந்து போனதாகவே அர்த்தம். இதனை நன்கு உணர்ந்திருந்ததால்தான் அன்றைய பெரியோர்கள், அச்சு எந்திரம் என்ற கலாச்சார மீட்டுருவாக்க எந்திரத்தை நன்கு பயன்படுத்தி நமக்கு நமது பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய நடைமுறைகள் ஆகியவற்றை பதிப்புகள் மூலம் மீட்டுத் தந்துள்ளனர். இன்று ஐரோப்பா எங்கும் தடம்பதித்துள்ள தமிழ்த் தலைமுறையினரின் சந்ததிகள் தமது தொன்மம் தொடர்பான நினைவு மீட்டலும் நீட்சியுமான அரும்பணிகளில் ஈடுபடும் காலம் தொலைவில் இல்லை. இந்தவகையில் முன்னைய காலத்தில் தமிழின் மீட்சியில் பெரும்பங்காற்றிய சிலவற்றை இங்கு குறிப்பாகப் பதிவிடுகிறேன்.
தமிழும் ஐரோப்பாவும்
ஆசிய, இந்திய மொழிகளில், அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்மொழி பற்றியும் அதன் இலக்கண, இலக்கிய வளத்தையும் கண்ட ஐரோப்பிய மத பிரசாரகர்கள் பலர், தமிழ்மொழியைக் கற்று, இயேசு மத பிரசாரம் செய்ய முனைந்த வேளை, தமிழின் வளத்தையும், இதன் இனிமை, இலக்கண, இலக்கியச் சிறப்புக்கள் என்பனவற்றை இயல்பாகவே தமக்குத் தெரிந்த பிற மொழியறிவு ஆற்றல்களுடன் ஒப்பிட்டும், அலசியும் நன்றாகக் கற்றுக்கொண்டார்கள்!
காலனித்துவ ஆட்சியாளர்களாக விளங்கிய போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், மற்றும் மத பிரசாரகர்களாக வந்த ஜெர்மனிய, பிரான்ஸ், இத்தாலிய நாட்டவர்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, தமிழாய்வு மேற்கொண்ட அறிஞர்களும், தமிழ்-தமிழர் பற்றித் தெரிந்து கொள்ள, திறவுகோலாக விளங்கிய, கலங்கரை விளக்காகிய தமிழரின் இலக்கண நூல் தொல்காப்பியமும், அறிவுச் சுரங்கமாகிய "திருக்குறளும்" ஆகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், எழுத்துச் சாதனங்கள் பெரிதும் இல்லாத காலத்தில், பனை ஓலைச் சுவடிகளில், எழுத்தாணி கொண்டு, இஙஙனம் எழுதிய பெரும் புலவர்களின் சாதனை பற்றி யார் தான் வியப்படையமாட்டார்!
1. பிதா.கென்றிக் கென்றிக்ஜஸ்(1520-1598)
போர்த்துக்கேய மதபிரசாரகர் பிதா.கென்றிக் கென்றிக்ஜஸ், 16ம் நூற்றாண்டில் தமிழகம் வந்து, தமிழ் மொழியை நன்கு கற்றுத்தேறி, இயேசு மத பிரசாரத்தை(சுதேசிகளாகிய தமிழர்களிடம்) புரிய முடிந்ததெனலாம்! மன்னார், புன்னைக்காயல், கன்னியாகுமரி ஆகிய தென் தமிழ் நாட்டில் (முதல் ஐரோப்பியத் தமிழறிஞராகத் திகழ்ந்தார்) தொண்டாற்றியதுடன், “தமிழ் அச்சுக் கலையின் தந்தை" பிதா.கென்றிக் கென்றிக்ஜஸ் எனும் பெருமைக்குரியவர் என்பது அனைவராலும் நினைவில் நிறுத்தப்படவேண்டியதொன்றாகும். மேலும், இப்பெருந்தகையால், ஆசிய- மற்றும், இந்திய மொழிகளுள், முதன் முதலாக, “தம்பிரான் வணக்கம்" என்ற தமிழ்-போர்த்துக்கேய மொழிகளில் அச்சில் DCCTRINA CHRISTAM ON LinguaMalavar Tamul (கி.பி.1540-1550) பிரசுரமாகியதெனலாம்.
இவர், தமிழர் அல்லாத, மேலைநாட்டவர், தமிழ் மொழியை இலகுவாக கற்க உதவுமுகமாக, “முதலாவது ஐரோப்பிய தமிழ் இலக்கணம்“ (The First European Tamil Grammer) என்ற இலக்கண வினா விடை, போர்த்துக்கேய-தமிழ் அகராதி, மற்றும் பல சமய பிரசாரச் செய்திகளையும் வெளியிட்டதன் மூலம் உலகம் தமிழ் மொழியை அறிய வைத்தார்!
பரிசுத்த பிரான்ஸிஸ் சேவியர் அடிகளாரின் வேண்டுகோளுக்கு அமைய, 1548 முதல், தமிழ் மொழியில் புலமை பெற்றார்! இயேசு மத செய்திகளை தமிழ் மொழியில் பதியும் பணி இவரிடம் தரப்பட்டிருந்தது! இப்பெருமகனார் தமிழ்த் தாயின் தவப் புதல்வராக கிடைத்தவரென்றால், மிகையன்று!
1560 அல்லது அதற்கண்மித்த காலத்தில், மன்னார் அல்லது புன்னைக்காயல் எனும் இடத்தில், ”தமிழ் பல்கலைக் கழகம்” ஒன்று அமைக்க முயற்சி மேற்கொண்டபோதும் அது நிறைவேற முன்னரே 22-02-1600 அன்று, புன்னைக்காயலில் மறைந்தார்! தமிழ்த் தாயின் தவப் புதல்வரின் உடல், தூத்துக்குடி, தமிழ் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது. இக்கல்லறை என்றும் நினைவுக்குரியதாக, உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டியதாகும்! அன்னைத் தமிழ் மொழியை முதன் முதல் அச்சில் ஏற்றி, அகிலமெங்கும் உலா வரக்கண்ட தமிழ்த் தாயின் தவப் புதல்வர், கென்றிக் கென்றிக்ஸ் அடிகளார்!
இவரின் சேவை, தமிழ்மொழி பற்றிய புலமை பற்றி அறிந்த பலர், தமிழகம் சென்று, அன்னாரின் அடிச்சுவட்டில், தமிழ் மொழியிலும், அதன் இலக்கண, இலக்கியம், மருத்துவம், சமயம் என ஆய்வுசெய்தும்,மொழி பெயர்த்தும், ஐரொப்பாவில் தமிழ் அறியச்செய்தனர்!
2. வீரமாமுனிவர் என அழைக்கப்படும் பெசுகிப் பாதிரியார்
- தமிழ் வசன நடையின் தந்தை - பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) -
மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
பாரதி பாடியவாறு, "மறைவாக நமக்குள்ளே பழங்கதை பேசி பயனுமில்லை
திறமான புலமையெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தால்
வெளிநாட்டார்,அதை வணக்கம் செய்வார்!"
என்பதை நிரூபிப்பதைப்போல, 1710ல், இத்தாலி நாட்டிலிருந்து தமிழகம் வந்து மதப்பிரசாரகராக விளங்கிய பிதா கொன்ஸ்ரான்டின்ஸ் ஜோசப் பெச்சி முனிவர், மற்றெவரைக்காட்டிலும்,தமிழ்மொழி மீது மட்டுமன்றி, தமிழ் வசன நடையில் புதுமை படைத்து, சிறந்த ஆக்கங்களையும், இலக்கண நூல்கள்கள் சதுரகராதி (நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு), தேம்பாவணி பாடல்கள் வாயிலாக, தமிழ் நாட்டு சூழலில் இயேசு சரிதத்தை -(கம்பரின் இராமாயண காவியத்தைப்போல) பல காண்டங்களாக இனிய பாடல்கள் முலம் யாத்திருப்பதும், தமிழரைப் போல, தென் இந்திய உடை உடுத்தி, மக்கள் பண்பாடு பேணி வாழ்ந்தார்!
இவர் எழுதிய நகைச்சுவை சார்ந்த, "பரமார்த்த குரு", தமிழில் வந்த நகைச்சுவை இலக்கியமாகும்! இவர் இலத்தீன் மொழியில், திருக்குறளை (காமத்துப்பால் நீங்கலாக)மொழி பெயர்த்ததன் மூலம், ஐரோப்பியர் அறிஞர்கள் பலரையும் தமிழ் மொழி பக்கம் பார்வையை திரும்பச்செய்தார்! இவரின் இலத்தீன் மொழி பெயர்ப்பை மூலமாகக் கொண்டே, ஏனைய ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் 'திருக்குறள்' நீதிநெறி நூலென அறிமுகமானதெனலாம். தமிழ் மக்கள், அவர் மொழி, பண்பாடு, நாகரிகம் எனவும், தெரிந்து கொள்ள முடிந்தது! இவர், சிலகாலம் மன்னரின் அதிகாரியாகவும் விளங்கிய இவர் 1742-ல், மணப்பாறை எனுமிடத்தில் மறைந்தார்!
திருக்குறளை போப் ஐயர்(ஆங்கிலம்), கார்ல் கிரவுல் (ஜேர்மன, இலத்தீன்) எம்.ஆரியல்(பிரஞ்சு)ஆகிய மொழிகளில் மாற்றம் செய்து, தத்தம் நாட்டறிஞர்களின் மத்தியில், திருக்குறளையும், தமிழ் மொழியையும் பரப்பினர்!
00000000000000000000000000
(நினைவுத் துளிகள் சொட்டும் .....) Tweet
நல்ல பதிவு
ReplyDeletenalla karuththu ulla padhivu..
ReplyDeleteநல்ல பதிவு. பல தகவல்களைக் கொண்டுள்ளது. எழுத்தை சற்று பெரிதாக்கினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.
ReplyDeleteநன்றி கலையரசன்
ReplyDeleteதங்களது கருத்து கவனத்தில் எடுக்கப்படுகிறது. இனிவரும் பதிவுகள் பெரிய எழுத்திலேயே இடுகையிடப்படும்.
தங்களது வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி
- முகிலன்
வருகையாளர்களுக்கும் பின்னூட்டர்களுக்கும் நன்றிகள்!
ReplyDelete- முகிலன்