Wednesday 2 September 2009

கதைச் சரம் - 13 சோதிடரின் மொழியாடல் திறன்


கதைச் சரம் - 13
செவி வழிக் கதை - 11

சோதிடரின் மொழியாடல் திறன்

முன்னொரு காலத்தில் வாழ்ந்த அந்த இளைய இராசாவுக்கு சோதிடத்தால் ஒரு பிரச்சினை வந்தது. இளம் வயதில் பட்டமேற்றிருந்த இந்த இராசா அதிகமான துடிப்புடன் பணிகளை ஆற்றியதால் மக்களிடததில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தான். மட்டமளிப்பின் போது அரசவை தலைமை சோதிடர் அதிகம் பேசாதவராக இருந்தது அவரின் கீழ் பணியாற்றிய சோதிடக் குழுமத்திற்கும் சங்கடமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் பட்டமளிப்பு நாளுக்கு முன்னர் நிகழ்ந்த உரையாடல்தான் காரணம்.

மக்களிடம் நன்னமதிப்பைப் பெற்றிருந்த வயதான இராசாவின் மறைவினால் தலைமைப்பொறுப்பு இந்த இளவரசனுக்குக் கிட்டியது. அந்த இராசாவுக்கு முதலில் பிறந்த அறுவரும் பெண்கள், இவன்தான் கடைக்குட்டியாக அந்த அரண்மனையில் வந்த ஆண் வாரிசு. சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவனாகி வளர்ந்து வந்த இளவரசருக்கு தந்தையின் திடீர் இழப்பால், ஆட்சி பீடமேறவேண்டி வந்தது. இதற்காக மூத்த மந்திரிகளும், நிர்வாக அதிகாரிகளும் செய்த ஆலோசனையில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றத்தில்தான் பிரச்சனையே தோன்றியிருந்தது.

"இளவரசே! தங்களது சோதிடத்தில் ஒரு கண்டம் இருக்கிறது. நீங்கள் அவசரப்படக்கூடாது!..... இப்போது, நீங்கள் அரசபீடமேறினால், உங்கள் முன்னிலையில் தங்களது குடும்ப அங்கத்தவர்கள் பலியாக நேரிடும்." இதுதான் தலைமை சோதிடர் அக்கறையாகச் சொன்ன கணிப்பு.

இதைக்கேட்டு வெகுண்டெழுந்த இளையவரான இளவரசர் "சோதிடமும் மண்ணாங்கட்டியும்!........ நான் இப்ப பதவியேற்காதுவிட்டால் நாட்டை யார்தான் காப்பது?" என்றவாறு நடக்கவேண்டியவற்றை ஆணையிட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

பதவியை ஏற்றிருந்தபோதிலும் இராசாவுக்கு சோதிடரின் வார்த்தகளிலான சங்கடம் தொடரத்தான் செய்தது. எனவே 'வேறு சோதிடர்களை வரவழைத்து இன்னுமொரு முறை பார்த்தால் என்ன?' எனவாக ஓடிய தன் சிந்தனையை தலைமை மந்திரியிடம் தெரிவிக்க இதற்கான ஏற்பாடுகளை மந்திரிசபை செய்தது.

இதன்படி அயலூரில் பிரபல்யமாக இருந்த இன்னுமொரு சோதிடர் வரவழைக்கப்பட்டு பழைய குறிப்புகளைக் கொடுக்காமல், புதியதாகக் கணித்துப் பலன் சொல்லும்படி கேட்கப்பட்டது. அவரும் மூன்று நாள் அவகாசமெடுத்து தனது கணிப்புகளுடன் வந்தார். அன்று மந்திரி சபை இதற்காக விசேட கூட்டமொன்றை நடாத்தியது.

இதில், "மன்னா! தங்களது சோதிடப்படி ஒரு குறை இருக்கிறது. இதன்படி தங்கள் முன்னிலையில் தங்களது குடும்ப அங்கத்தவர்களது மரணங்கள் நிகழப்போகின்றன!" என அமைதியாகக் கவலையுடன் தெரிவித்தார் அந்தப் புதுச் சோதிடர். அரசவை திகைத்துப் போனது. மன்னன் ஆத்திரத்தால் வெகுண்டெழுந்தான். "யாரங்கே! இந்தச் சோதிடரை அடையுங்கள் சிறையில்..." ஆணை பிறந்தது.

மந்திரிமார் செய்வதறியாது தடுமாறினர். எல்லாவற்றுக்கும் காரணமான அரண்மனைத் தலைமைச் சோதிடரும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் கீழ் வேலை செய்தவர்களையும் சிறையில் அடைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிலர் தலைமறைவாகினர். சிலர் பிடிபட்டனர்.

கொஞ்சக் காலம் செல்ல இராசாவின் அம்மாவாகிய மகாராணியும் நோய்வாய்பட்டவராகி காலமானார். ஆனால் அந்த ஊரில் மக்கள் சோதிடம் பற்றி குசுகுசுப்பதே இலலை. 'ஏன் வீண் வம்பு?' என தத்தமது சோலிகளைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.

இப்படியாகக் கழிந்து கொண்டிருந்த வேளையில், வெளியூரைச் சேர்ந்த ஒருவன் அவ்வூருக்கு வந்திருந்தான். நிமிர்ந்த நடையும், குறுந்தாடியும், தோழில் தொங்கும் பையில் சுவடிகளுமாக இருந்த அவனைப் பார்க்கும் போது நன்றாகக் கல்வியறிவு பெற்ற ஞானியாகத் திகழந்ததால் பலரும் அவனையணுகி குசலம் விசாரித்தனர். ஆனால் அவனோ ஏதுமே பேசாது சிரிதவாறு இருந்ததால் விடையம் அரண்மனைக்குச் சென்றது. தலைமை மந்திரி விசாரித்து வருமாறு தனது செயலாளரை அனுப்பினார்.

"ஐயா! வணக்கம்!! நான் அரண்மனை பதிவாளர். தாங்கள் யார்? இந்த ஊருக்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தங்கப்போகிறீர்கள்? " என்றார் மரியாதையுடன் செயலாளர்.

"நான் ஒரு சோதிடன். உங்கள் இராசாவுக்குச் சோதிடம் கணித்துச் சொல்ல வந்திருக்கிறேன்." என்றார் ஒரு புன்முறுவலோடு. தலைமைப் பதிவாளர் உட்பட அனைவரும் திகைத்துப் போயினர்.
"ஐயா!, நீங்கள் வழிதவறி இந்த நாட்டுக்கு வந்துள்ளீர்களோ தெரியவில்லை. இங்கிருந்தால் சிறைக்குச் செல்ல வேண்டிவரலாம்..." என்றார் தலைமை அதிகாரி அக்கறையுடன்.

"ஞான் அனைத்தும் அறிந்தவன்!" என்றார் சிரித்தவாறு வழிப்போக்கனாக வந்திருந்தவர்.

'அட இப்பேர்ப்பட்ட பைத்தியக்காரனை இப்பத்தான் முதன்முதலாகப் பார்க்கிறன். வலிய வந்து சிறைக்குப் போக இருக்கிறானே!' என ஓடிய சிந்தனையால் தலைமை அதிகாரி தனக்குள் சிரித்துக்கொண்டவராக, "ஐயா, இந்த நாட்டு அரசபையில் சோதிடத்திற்கு இடமில்லை. இருந்தாலும் தங்களது கோரிக்கையை இராசாவின் கவனத்துக்குக் கொண்டுபோய் முடிவுடன் வருகிறேன்" என்று சொல்லி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.

புதிய சோதிடர் நாட்டுக்குள் வந்துள்ள செய்தி காட்டுத் தீயாகப் பரவ மக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடினர். அரண்மனை அமைதியாக இருந்தது. தலைமை மந்திரிக்கும் பிறருக்கும் இத்தகவலை எப்படி இராசாவுக்குச் சொல்வதென்றே தெரியவில்லை. நேரம் திக் திக் எனவாகக் கழிந்துகொண்டிருந்தது. 'சரி, வருவது வரட்டும்!' என்ற முடிவோடு தலைமை மந்திரி இராசாவிடம் சொல்லவதென தன்னைத் தயார் செய்தவாறு எழுந்து சென்றார். மற்றைய அனைவரும் மறைந்திருந்தவாறு நடப்பதை உற்று அவதானித்தனர்.

"இராசாவே! வணக்கம்!! நம்ம நாட்டிற்கு சோதிடம் சொல்வதற்காக ஒரு புதியவர் வந்துள்ளார்!" தலைமை மந்திரி.

இராசாவின் முகத்தில் ஆச்சரிய உணர்வு வந்து மறைந்தது. "புதிய சோதிடனா? நம்ம நாட்டுக்கா?..." இராசாவின் வார்த்தைகளில் வியப்பும் இருந்தது, வந்துள்ள சோதிடனின் தற்துணிச்சல் தொடர்பான ஆர்வமும் இருந்தது. ஒரு கணம் யோசித்தவராக பேசாதிருந்தார்.

இதனை உணர்ந்த மந்திரி "அவரிடம் நம்ம நாட்டு சட்டதிட்டங்களைக் கூறியிருக்கிறேன். நன்றாகப் படித்த மேதையாக அவரது பேச்சு இருக்கிறது...." என்றார்.

நீண்ட காலமாகச் சோதிடம் பார்க்காதிருந்த இடைவெளியும் சோதிடனின் துணிவும் இராவிடம் மனமாற்றத்தைக் கொண்டுவந்தது. "சரி! இவரையும் ஒரு முறை பார்த்துவிடுவோம். நாள் குறித்து அழைத்து வாருங்கள். அவருக்குத் தேவைப்பட்டதைச் செய்யுங்கள். ஆனால் தவறாகச் சொன்னால் கண்டிப்பாகச் சிறைதான் என்பதையும் கூறிவிடுங்கள்" என்றார் இராசா.

இராசா ஏற்றுக்கொண்டதானது அரண்மனையில் நிலவிய இறுக்கத்தைக் குறைத்தது. எல்லாமே வேகமாக நடந்தன. குறிக்கப்பட்ட நாளில் அரண்மனை சோதிடக்கூறலுக்காகக் கூடியது. பெரும்பாலான மக்கள் குழுமியிருந்தனர். 'புதிய சோதிடர் என்னதான் சொல்லப்போகிறார்? என்னதான் நடக்கப்போகுதோ?' என்பதாகவே பெரும்பாலானோரின் கருத்து இருந்தது.

புதிய சோதிடர் கம்பீரமாக எழுந்து நடந்து வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இக்காட்சியால் அனைவரும் மெங்மறந்தவர்களாகி, தத்தமது காதுகளைத் தீட்டியவாறிருந்தனர்.
"மன்னா! நீ மிகப் பெரிய அதிஷ்டக்காரன்! மிக மிக நீண்ட ஆயுள் கொண்ட யோகக்காரன்!! மிக மிக அதிக காலம் அரசபையில் இருந்து உன் நாட்டு மக்களுக்கு நல்லாட்சியையும் உன் குடும்பத்தார் அனைவருக்குமான நல்வாழ்வுக்கும் ஆதாரமாக இருக்கப் போகிறவன். இதனால்தான் உனக்கு இளவயதில் பதவிகிட்டியுள்ளது. நான் இதுவரையில் பார்த்த சாதகக் குறிப்புகளில் மிக மிக அதிகமாக ஆயுள் உள்ள சாதகம் உன்னுடையதுதான்!" என்ற முதற்கருத்தே இராசாவையும், சபையையும் வசீகரித்தது. இதனால் எழுந்த கரவொலி வானைப் பிளந்தது.

இராசா கிறங்கிப்போனவரானார். எழுந்து சென்று சோதிடரின் கையைக் குலுக்கி நன்றி தெரிவித்தார். "சோதிடரே! இப்படியாக எம்மைக் கவர்ந்த தங்களுக்கு ஏதாவது பரிசு தர விருப்பமாக இருக்கிறது. விரும்பியதைக் கேளுங்கள்!!" என்றார்.

"யான் கேட்பதைத் தங்களால் தர முடியுமா?" சோதிடர் இழுத்தார்.
"தயங்காமல் கேளுங்கள்" இராசாவிடம் உறுதி இருந்தது.
"மன்னா! தங்களால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சோதிடர்களை விடுவிக்க முடியுமானால் நான் மிகுந்த நன்றியுடையவானாவேன்." என்றார் பவ்வியமாக சோதிடர்.

ஆச்சரியத்தால் திகைத்தது சபை. சோதிடரின் பெருந்தன்மை இராசாவைக் கவர்ந்தது. தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கழற்றி புதிய சோதிடருக்கு அணிவித்து "தங்களது கோரிக்கையை இப்போதே ஏற்றுக் கொள்கிறேன்!" என்றார் சிரித்தவாறு.

"நன்றி! நன்றி" என்றார் பணிவாக சோதிடர். சபை மீண்டும் கரவொலி எழுப்பி மகிழ்வை ஏற்றுக் கொண்டது.

சிறை மீண்ட சோதிடர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சந்தோசமோ சந்தோசம். இதற்குக் காரணமாகவிருந்த அந்தப் புதிய சோதிடருக்கு பாராட்டு நிகழ்வொன்று செய்வதென தீர்மானமாயிற்று.

சிறப்பு நிகழ்வு மகிழ்வாக நடந்து கொண்டிருந்தது. அனைத்துச் சோதிடர்களும் புதிய சோதிடரின் அறிவாற்றலையும் மனிதாபிமானத்தையும் பாராட்டி 'சோதிடக் கலையின் நிபுணன்' எனவாகப் பட்ம் சூட்டினர். அமைதியாகப் புன்முறுவலுடன் கேட்டவாறிருந்தார் புதியவர். கடைசியாக புதிய சோதிடரின் ஏற்புரைக்கான வேளை வந்தது. குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்குமளவில் சபை அமைதியாக இருந்தது. புதியவர் கம்பீரமாகப் பேசத்தொடங்கினார்.

"மதிப்புக்குரியவர்களே! தங்களது பாராட்டுகளுக்கு நன்றிகள். ஆனால் என்னை கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்து விட்டீர்களென்றே தோன்றுகிறது. நானும் உங்களைப் போன்றவன்தான்! உங்களில் ஒருவன்தான்!!...." என்றவாறு சபையைப் பார்க்கிறார். சபை ஆச்சரியத்தால் மெய்மறந்திருந்தது.

"நான் என்னை மிகப்படுத்த விரும்பவில்லை. நன்றாக யோசித்து அலசிப்பாருங்கள்.... இராசாவின் சாதகம் தொடர்பாக நான் என்னதான் புதிதாகச் சொல்லி விட்டேன்?... நீங்கள் சிந்தித்துச் சொன்னதைத்தான் நானும் சொல்லியுள்ளேன்!!.... உற்று அவதானியுங்கள்... நான் சொன்ன சொல்லாடல்தான் கொஞ்சம் வேறுபட்டுள்ளது புரியும்" சபை ஈடாடிப் போனது. கொஞ்ச நேரம் சலசலப்புக்குள்ளானது சபை.
முன்னைய தலைமைச் சோதிடர் எழுந்துவந்து,
"ஆம்! ஐயா!! தங்களது சொல்லாடலின் மகிமையை இபபோதுதான் நாங்கள் உணர்கிறோம். எங்களது அறிவுக் கண்ணைத்திறந்து விட்டுள்ளீர்கள்!!" எனவாகச் சொல்லி புதிய சோதிடரை ஆரத்தழுவினார்.


-முகிலன்
எனது தந்தையாரிடம் சிறுவயதில் கேட்ட கதை
பாரிஸ் செப்டெம்பர் 2009

No comments:

Post a Comment